’கட்’டடிப்போர் கவனத்துக்கு
Posted March 23, 2009
on:- In: மொக்கை | Bangalore | Classroom | Creativity | Events | Fun | Honesty | Humor | Imagination | Integrity | IT | Kids | Learning | Life | Marketing | Play | Short Story | Students | Teaching | Technology | Uncategorized | Youth
- 9 Comments
(முன்குறிப்பு: இது கதை இல்லை, முழு உண்மையும் இல்லை, இதே அரக்கு வண்ணத்தில் இருக்கும் அந்தக் கடைசிப் பகுதிதவிர, மற்றதெல்லாம் இன்று மாலை நிஜமாகவே நடந்தது. சும்மா சுவாரஸ்யத்துக்காகக் கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்ட ஒரு கற்பனையைக் கலந்தேன் 🙂 )
’உங்களில் எத்தனை பேருக்குத் திருமணமாகிவிட்டது?’, மேடையில் இருந்தவர் கணீர் குரலில் கேட்டார்.
அந்த அரங்கில் இருந்த பாதிப் பேர் கை தூக்கினார்கள்.
’சரி, இதில் எத்தனை பேருக்குக் குழந்தைகள் உண்டு?’
சட்டென்று பாதிப் பேரின் கைகள் கீழே இறங்கின.
‘கடைசியாக, உங்களில் யாரெல்லாம் பள்ளியில் படிக்கும்போது க்ளாஸுக்குக் கட்டடித்துவிட்டு சினிமா போயிருக்கிறீர்கள்?’
இப்போது, கிட்டத்தட்ட எல்லோருமே கை தூக்கினார்கள். அரங்கம்முழுக்கக் குறும்பான நமுட்டுச் சிரிப்பு.
மேடைப் பேச்சாளர் சிரித்தார், ‘நாமெல்லாம் கட் அடித்துக் கெட்டுப்போனது போதாதா? நம் குழந்தைகள் ஒழுங்காகப் பள்ளிக்குச் சென்று உருப்படவேண்டும் என்று நமக்கு ஆசை இருக்கிறதுதானே?’
‘ஆமாம், ஆமாம்’ எல்லோருடைய தலைகளும் ஒரேமாதிரியாக அசைந்தன.
’உங்களுக்காகவே, நாங்கள் ஒரு சாஃப்ட்வேர் உருவாக்கியிருக்கிறோம்’ கம்பீரமாக அறிவித்தார் அவர், ‘இந்த சாஃப்ட்வேரை உங்களுடைய குழந்தையின் பள்ளியில் இணைத்துவிட்டால் போதும்., அதன்பிறகு அவர்களுடைய தினசரி அட்டெண்டென்ஸ், அவர்கள் சரியாக வீட்டுப் பாடம் செய்கிறார்களா இல்லையா, மாதாந்திரத் தேர்வில் அவர்கள் வாங்கும் மதிப்பெண்கள், மற்றபடி அவர்கள் சந்திக்கும் தண்டனைகள், ஒழுங்கு நடவடிக்கைகள் சகலமும் உடனடியாக உங்கள் கவனத்துக்கு வந்துவிடும்’
நாங்கள் ஆர்வமாக நிமிர்ந்து உட்கார்ந்தோம். அவர் உற்சாகத்துடன் தனது மென்பொருளை இன்னும் விவரிக்கத் தொடங்கினார்.
’இதற்காக நீங்கள் இன்டர்நெட்டுக்குச் செல்லவேண்டியதுகூட இல்லை. ஒவ்வொருமுறை உங்கள் மகன் அல்லது மகள் வகுப்புக்குக் கட் அடிக்கும்போதும், அரை மணி நேரத்தில் உங்களுக்கு எஸ். எம். எஸ். செய்தி வந்துவிடும், கூடவே ஓர் ஈமெயிலும் அனுப்பிவிடுவோம்’
‘தொடர்ந்து உங்கள் பிள்ளை மூன்று நாள்களுக்கு வகுப்புக்கு வராவிட்டால், எங்கள் மென்பொருளே உங்களுக்கு ஃபோன் செய்து அதனை அறிவிக்கும்’
‘ஒவ்வொரு பரீட்சையின்போதும், உங்கள் பிள்ளை எத்தனை சதவிகித மார்க் எடுக்கவேண்டும் என்பதை நீங்கள் எங்களுக்குச் சொல்லிவிட்டால் போதும். அதற்குக் கீழே அவர்களுடைய மதிப்பெண் இறங்கினால் உடனடியாக உங்களுக்கும் சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கும் எஸ். எம். எஸ். பறக்கும்’
‘இப்படி இன்னும் உங்கள் குழந்தையின் கல்விபற்றிய சகல தகவல்களையும் எஸ். எம். எஸ்., ஈமெயில் வழியே உங்களுக்குக் கொண்டுவர நாங்கள் காத்திருக்கிறோம். இதற்கான கட்டணம் மிகவும் குறைவு’
அவர் பேசி முடித்ததும், கைதட்டல் பலமாகவே இருந்தது. மக்கள் இந்த சாஃப்ட்வேரைக் காசு கொடுத்து வாங்கப்போகிறார்களோ, இல்லையோ, அதைப்பற்றிப் பரபரப்பாகப் பேசிக்கொள்ளத் தொடங்கியிருந்தார்கள்.
சலசலப்புப் பேச்சுச் சத்தத்துக்கு நடுவே, யாரோ கீபோர்டில் விறுவிறுவென்று தட்டும் ஒலி கேட்டது. திரும்பிப் பார்த்தால், பின் வரிசையில் ஓர் இளைஞன் லாப்டாப்பில் மும்முரமாக ஏதோ அடித்துக்கொண்டிருந்தான்.
எல்லோரும் கூட்டத்தைக் கவனித்துக்கொண்டிருக்கும்போது, இவன்மட்டும் அக்கறையில்லாமல் என்னவோ டைப் செய்துகொண்டிருக்கிறானே? அப்படி என்ன முக்கியமான விஷயமாக இருக்கும்? விசாரித்தேன்.
அவன் புன்னகையுடன் சொன்னான், ‘அந்த அங்கிள் ஒரு சாஃப்ட்வேர் சொன்னாரில்ல? அந்த ப்ரொக்ராமை முறியடிக்கறதுக்கு ஒரு Hack எழுதிகிட்டிருக்கேன். அல்மோஸ்ட் ஓவர், இன்னும் பத்து நிமிஷத்தில முடிஞ்சிடும்’
***
என். சொக்கன் …
23 03 2009
9 Responses to "’கட்’டடிப்போர் கவனத்துக்கு"

சொக்கரே,
இதைவிட யதார்த்தை இதனை சிறப்பாக வெளிப்படுத்த முடியாது.
மிகச்சரியான கவனிப்பை மிக அருமையாக தொகுத்து எழுதி இருக்கிறீர்கள்.
மடத்தனமான சாப்ட்வேர் களுக்கு பஞ்சமில்லை.
அந்த ஹாக்கரை வாழ்த்துகிறேன்.
ஜெய விஜயீ பாவ :
அன்புடன்,
ஸ்ரீனிவாசன்.


எது ரியல் எது ரீல் புரிஞ்சிடுச்சு !!


இன்னும் கொஞ்ச நாளில் RFIDயோ அல்லது அதன் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பமோ வரும்போது இதுபோன்ற சங்கதிகள் நிச்சயம் சாத்தியம். (கள்ளக்காதலையும், காதலனையும்கூட கண்டுபிடித்துவிடலாம்).
”டெக்னாலஜியில இதல்லாம் சகஜமப்பா”


அன்பு நண்பருக்கு,
எனக்கு தெரிந்து இந்த மாதிரி மென்பொருட்கள் தடை செய்யப் பட வேண்டிய ஒன்று. இது குழந்தைகளின் சுதந்திரத்தை வெகுவாக பாதிக்கக் கூடியது.
ஏற்கனவே பாடப் புத்தகங்களை சுமப்பது போதாதென்று இதுவேறா? அதற்கு பதில் வெளிநாடுகளில் உள்ளதுபோல் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழிகாட்டக் கூடிய ஆலோசகரை எல்லாப் பள்ளியும் நியமிக்கலாம். மாணவர்களுக்கு எந்தத் துறை விருப்பமோ அதைப் பற்றிய தெளிவை அவர்களுக்கு வழங்கலாம்.இது அவர்களுடைய ஆர்வத்தை தூண்டி மேலும் சிறக்க வழிவகுக்கும். தேவையிலாத பொறியியல் மோகம் இதன் மூலமாக குறையும்.
பிரச்சனை, மாணவர்கள் பள்ளிக்கு செல்கிறார்களா இல்லையா என்பதல்ல…விருப்பத்துடன் படிக்க செல்கிறார்களா என்பதுதான்.
விருப்பம் இருந்தால் எதற்கு “கட்” என்ற சமாச்சாரம் வரப்போகிறது.
தவறிருந்தால் மன்னிக்கவும்.
பிரியமுடன்,
கிருஷ்ணப் பிரபு.


நாங்களும் கட்டடிச்சிக்கோமுல்ல… நம்ம கதைய நம்ம பேரு மேல க்ளிக் ப்ண்ணி வந்து பாருங்க.


நாங்களும் கட்டடிச்சிருக்கோமுல்ல! நம்ம கதைய நம்ம பேருமேல க்ளிக் செய்து படிங்க! (அந்த பதிவ எழுத தூண்டுதல் இந்த பதிவுதான் சொக்கரே!)

1 | அரவிந்தன்
March 23, 2009 at 11:47 pm
பள்ளிகுழந்தைகள் பயணம் செய்யும் பேருந்து செல்லும் பாதை,தாமதம் ஆனால் அதற்கான காரணம் தற்சமயம் பேருந்து எங்கே பயணம் செய்கிறது என்று எல்லாவிவரங்களையும் சொல்லும் மென்பொருட்கள் தற்சமயம் பள்ளிகளில் பயன்படுத்தப்படுவதாக சொல்கிறார்கள்