தானியங்கிக் குப்பை(த் தொட்டி)
Posted March 23, 2009
on:- In: Bangalore | Creativity | Fun | Humor | Imagination | Lazy | Life | Uncategorized
- 13 Comments
வார இறுதிகளில் ஏதேனும் ‘ஷாப்பிங் மால்’களுக்குச் செல்கிறபோதெல்லாம், நான் எதையேனும் வாங்குகிறேனோ இல்லையோ, புதிதாக என்னென்ன பொருள்கள் விற்பனைக்கு வந்திருக்கின்றன என்பதைக் கூர்ந்து கவனிப்பது வழக்கம்.
காரணம், இன்றைய பெருநகர வாழ்க்கையைப் புரிந்துகொள்வதற்கு ’ஷாப்பிங் மால்’கள்தான் ஒரே வழி. நகரவாழ் மக்களின் ஆசைகள், விருப்பங்கள், கோபங்கள், பொறாமைகள், சோம்பேறித்தனங்கள், இயலாமைகள், ஏக்கங்கள் என சகலத்தையும் வெளிப்படுத்தக்கூடிய, பூர்த்தி செய்யக்கூடிய பொருள்கள் இங்கே அரங்கேறுகின்றன.
இந்தப் பொருள்களில் நூற்றுக்குத் தொண்ணூற்றெட்டு நமக்குத் தேவைப்படாது. ஆனால் இதையும் காசு கொடுத்து வாங்குகிறவர்கள் இருக்கிறார்கள் எனும்போது, அதற்கான காரணங்களை யோசித்துக் கற்பனை செய்வது மிகச் சுவாரஸ்யமான ஒரு விஷயம்.
உதாரணமாக, நேற்று நான் கவனித்த ஒரு புதுத் தயாரிப்பைப்பற்றிச் சொல்கிறேன்.
அது ஒரு குப்பைத் தொட்டி. வழவழவென்று உலோக உடம்பு, சுமார் முக்கால் அடி உயரம். ஆனால் விலைமட்டும், 1599 ரூபாய்.
ஆரம்பத்தில் நான் 15 ரூபாய் 99 காசு என்றுதான் நினைத்தேன். நெருங்கிப் பார்த்தபோதுதான் ஆயிரத்து ஐநூற்றுத் தொண்ணூற்றொன்பது ரூபாய் என்று புரிந்தது.
இவ்வளவு காசு கொடுத்துக் குப்பைத் தொட்டி வாங்குவதா? எதற்கு? அப்படி இதில் என்ன விசேஷம்? குப்பையை உடனே நசுக்கிப் பொடியாக்கி நவீன உரமாக மாற்றி நம் தோட்டத்துக்கு அனுப்பிவிடுமா? அல்லது, நாம் இருக்கும் இடத்துக்கே நடந்து வந்து குப்பையை வாங்கிக்கொள்ளுமா? அல்லது, விண்வெளி ஆராய்ச்சிக் கலங்களில் சிறுநீரைக் குடிநீராக்குகிறார்களாமே, அதுபோல, நம் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரித்துக் கொடுக்குமா? அல்லது, குப்பைத் தொட்டியில் FM ரேடியோ, USB துளை வைத்து MP3 பாடல் கேட்கலாமா? அல்லது, …
நல்லவேளையாக, அங்கிருந்த விற்பனைப் பிரதிநிதி என் அவசரக் கற்பனைகளைக் கலைத்தார், ‘மே ஐ ஹெல்ப் யூ சார்?’
’ஷ்யூர்’ என்றேன் நான், ‘இந்த குப்பைத் தொட்டியில என்ன விசேஷம்?’
அவர் பெருமிதத்துடன் டை முடிச்சைச் சரி செய்தார். தொண்டையை ஒருமுறை செருமிக்கொண்டு அந்தக் குப்பைத் தொட்டியின் மகிமைகள், வீர, தீரப் பராக்கிரமங்களைப்பற்றி எனக்கு விளக்கத் தொடங்கினார்.
ஆக்ஸ்ஃபோர்ட்(?) ஆங்கிலத்தில் நீட்டி முழக்கி அவர் பேசியதன் சுருக்கம்: இந்தக் குப்பைத் தொட்டியின் உச்சியில் ஒரு சென்சர் இருக்கிறது. நீங்கள் குப்பையைப் போடுவதற்காகக் கை நீட்டியதும் அதை உணர்ந்து, இதன் மூடி தானாகத் திறந்துகொள்ளும். நீங்கள் கையை நகர்த்தியதும், பழையபடி மூடிக்கொள்ளும். விலை ‘ஜஸ்ட் 1599 ரூபாய்’.
அவர் சொன்னதை இந்த விநாடிவரை என்னால் நம்பமுடியவில்லை. குப்பைத் தொட்டியைத் தானியங்கியாகத் திறக்க ஒரு சென்சர் வைக்கவேண்டும் என்று யோசித்த புண்ணியவான் எவன்? இந்தியனா? அல்லது வெளிநாட்டுக்காரனா?
குனிந்து குப்பையைப் போடச் சோம்பேறித்தனப்படுகிறவர்களுக்காகதான், ‘பெடல்’ வகைக் குப்பைத் தொட்டிகள் வந்தன. நின்ற நிலையில் காலால் பெடலை அமுக்கி இந்தக் குப்பைத் தொட்டிகளைத் திறக்கலாம், குப்பை போடலாம், நாம் காலை எடுத்ததும் குப்பைத் தொட்டி மூடிக்கொண்டுவிடும்.
இப்போது அதுவும் வேண்டாம் என்று சென்சர் வைத்த குப்பைத் தொட்டிகள் வந்திருக்கின்றன. குப்பைத் தொட்டிவரை நடந்து செல்கிறவர்களுக்குக் குனிந்து குப்பையைப் போடவோ, பெடலை அமுக்கவோ சோம்பேறித்தனமா? அபத்தமாக இல்லை?
ஆரம்பத்தில் கோபமூட்டிய இந்த விஷயம், அடுத்த சில நிமிடங்களுக்குள் பெரிய நகைச்சுவையாகத் தோன்ற ஆரம்பித்துவிட்டது. தானியங்கிக் குப்பைத் தொட்டியைத் தொடர்ந்து இன்னும் இதுபோல் என்னென்ன பொருள்கள் விற்பனைக்கு வரக்கூடும் என்று யோசிக்க ஆரம்பித்தேன். ஜாலியாகப் பொழுது போனது.
அதற்காகவேனும், அந்த ஆயிரத்தறுநூறு ரூபாய்க் குப்பைத் தொட்டிக்கு ஒரு நன்றி சொல்லவேண்டும்!
***
என். சொக்கன் …
23 03 2009
13 Responses to "தானியங்கிக் குப்பை(த் தொட்டி)"

சும்மா சட்டு-புட்டுனு ரெண்டு குப்பை தொட்டி வாங்கி போடுங்க தலைவா… அது எப்படி வேலை செய்யுதுன்னு நாங்களும் உங்க மூலமா தெரிஞ்சுப்போம்ல.


//தானியங்கிக் குப்பைத் தொட்டியைத் தொடர்ந்து இன்னும் இதுபோல் என்னென்ன பொருள்கள் விற்பனைக்கு வரக்கூடும் என்று யோசிக்க ஆரம்பித்தேன். ஜாலியாகப் பொழுது போனது.
//
அப்படி என்ன யோசிச்சீங்கன்னு போட்டிருந்தா, நாங்களும் ஜாலியா பொழுதை ஓட்டியிருப்போம்.
:-)))


நண்பரே,
இதுபோன்ற பலப்பல கண்டுபிடிப்புகள் நம்மையும் , நம் குழ்ந்தைகளையும் சூழ்ந்து வியுகம் வைத்து வருகின்றன.
ஒவொன்றையும் பார்க்கும்போது துடிக்கிறது மீசை.
அடக்கு அடக்கு என்கிறது எதுவோ.
எழுதி பதிந்ததற்கு வந்தனமு.
நன்றி.
அன்புடன்,
ஸ்ரீனிவாசன்.


ஒத்தரும் புதுக் கண்டுப்பிடிப்பு ஐடியா சொல்லாததால: (கீழ்கண்டத, ஜெயா, விஜய், ராஜ்ல ராத்திரி 12 மணிக்கு மேல வரும் விளம்பர நிகழ்ச்சி குரல்ல அனுபவியுங்க)
”என்ன எழுதணும்னு மனசுல நெனச்சுக்கிட்டு மானிட்டர்ல இருக்கற ஒரு ஐகன தொட்டா போதும், இன்ஸ்டண்ட்ல ”மொக்கை ப்ளாக்” ரெடி.
போனஸா தானே தமிழிஸ், தமிழ்மணம், தமிழ்பானை, தமிழ்சட்டி எல்லாத்துக்கும் சப்மிட்டும் பண்ணிடும்.
அது மட்டுமில்ல, இன்னிக்கு ராத்திரி 2 மணிக்குள்ள் ஆர்டர் செய்யறவங்களுக்கு மட்டும், இலவச இணைப்பா,
அதுவே பல மெயிலாவதாரம் எடுத்து (கள்ள) ஓட்டும் போடற ப்ரோக்ராம் ஃப்ரி”


நேத்துதான் total ல் இதே மாதிரி ஒரு ஐயிட்டம் பார்த்தேன்.. விலை வெறும் 3000 தான்.. நீங்க சொன்னதை விட அட்வான்ஸ்டு மாடல் னு நினைக்கிறேன்.. 🙂


irukkalam.. 😉 india shining. 🙂

1 | ராசா
March 23, 2009 at 5:10 pm
குனிந்து குப்பையைப் போடச் சோம்பேறித்தனப்படுகிறவர்களுக்காகதான், ‘பெடல்’ வகைக் குப்பைத் தொட்டிகள் வந்தன// அப்படியா? குப்பை தொட்டி மூடியை கையால தொட்டு திறக்கவேண்டாம்ங்கிறதுக்காக வந்ததுன்னு நினைச்சிட்டிருந்தேன் 🙂