வாகனங்கள்
Posted March 26, 2009
on:- In: 2 Wheeler Journey | Characters | Fear | Hyderabad | Learning | Life | Memories | People | Romance | Safety | Travel | Uncategorized
- 16 Comments
நாங்கள் ஹைதராபாதில் தங்கி வேலை பார்த்துக்கொண்டிருந்த நேரம். அப்போது எங்களுடன் புதுச் சிநேகிதமாகியிருந்த ஒருவன், ஹரி (வழக்கம்போல், நிஜப் பெயரை மாற்றியிருக்கிறேன்).
ஹரிக்குச் சொந்த ஊர் கட்ப்பாடி. வேலூர் அருகில் உள்ள ‘காட்பாடி’ இல்லை. ஆங்கிலத்தில் அதே ஸ்பெல்லிங் (Katpadi), ஆனால் இது வேறு ஊர்.
கர்நாடகத்தில் எங்கோ ஒரு மூலையில் ஒளிந்திருக்கும் குக்கிராமமாகிய கட்ப்பாடியை ஹரிக்கு அதிகம் நினைவில்லை. காரணம், அவன் பிறந்து சில மாதங்களுக்குள் அவனுடைய குடும்பம் மொத்தமும் சென்னைக்கு நிரந்தரமாகக் குடிபெயர்ந்துவிட்டது.
திருநெல்வேலியில் பொறியியல் படித்த ஹரி, எங்களுடன் ஹைதராபாதில் வேலைக்குச் சேர்ந்தான். ஆரம்பத்தில் வெளியே வேறொரு கோஷ்டியுடன் தங்கியிருந்தவன், பிறகு எங்களோடு ஐக்கியமாகிவிட்டான்.
அப்போதும், எங்களுக்கு ஹரியின் காதல் கதை தெரியாது. பயல் வாயைத் திறக்கவில்லை. செம அழுத்தமான பேர்வழி.
ஹரி எங்கள் வீட்டில் தங்கத் தொடங்கிய அதே நேரத்தில், எங்களுடைய வேலை நிரந்தரமானது, மாதச் சம்பளம் அதிகரித்தது. கூடுதலாக ஒரு சின்னச் சலுகையும் அறிவித்தார்கள்.
’ஊழியர்காள், நீங்களெல்லாம் உடனடியாக வங்கிக் கடனில் இரு சக்கர வாகனம் வாங்கிக்கொள்ளலாம், நீங்கள் மூன்று வருடங்களுக்குத் தொடர்ந்து எங்களுடைய நிறுவனத்திலேயே வேலை பார்த்தால், அந்தக் கடன் தொகையில் 50% நாங்கள் கட்டிவிடுகிறோம். ஓகேயா?’
பச்சையாகச் சொல்வதென்றால், பாதி விலையில் பைக். கசக்குமா? சட்டென்று நாங்களெல்லாம் ஆளுக்கு ஒரு பைக் வாங்கிப் போட்டோம்.
பைக் டெலிவரி எடுத்த தினத்தன்றுதான், ஹரி தன்னுடைய காதல் கதையைச் சொன்னான்.
அவனுடைய காதலி பெயர் ரம்யா. சென்னையில் ஹரிக்குப் பக்கத்து வீடு. 16 வயதில் தொடங்கிய தெய்வீகக் காதல், அப்போதுதான் ஆறாவது பிறந்த நாளைக் கொண்டாடி முடித்திருந்தது.
ஹரியும் ரம்யாவும் காதலிக்கத் தொடங்கிய சில மாதங்களுக்குள், அவர்கள் சந்தித்த முதல் பெரிய பிரச்னை: ப்ளஸ் டூ பாடங்கள், ’பப்ளிக்’ பரீட்சைகள்.
பெரிய ‘படிப்பாளி’யாகிய ஹரி, காதலுக்காகத் தங்களுடைய எதிர்காலத்தைத் தியாகம் செய்ய விரும்பவில்லை. ‘இந்த ஒரே ஒரு வருஷம் பல்லைக் கடிச்சுகிட்டு ஓட்டினா போதும், அப்புறம் வாழ்நாள்முழுக்க(?) நிம்மதியா உட்கார்ந்திருக்கலாம்’ என்பதுபோல் வீராவேசமாக ஏதோ டயலாக் பேசியிருக்கிறான்.
பிறகென்ன? இரண்டு பேரும் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு இயற்பியலும், வேதியியலும் சிரத்தையாகப் படித்து மனப்பாடம் செய்தார்களாம். இவர்களுடைய ‘க்ரூப் ஸ்டடி’ மகிமையைப் பார்த்து இருவீட்டாரும் திருஷ்டி சுற்றி மகிழ்ந்திருக்கிறார்கள்.
அந்த ஆண்டுப் பொதுத் தேர்வில் ஹரி வாங்கிய மதிப்பெண்கள் 1087, ரம்யா அவனைவிட ஏழு மதிப்பெண் அதிகம்.
உடனடியாக, அவர்களுக்கு ஒரு புதிய கனவு: நாம் இருவரும் ஒரே கல்லூரியில் சேர்ந்து படிக்கவேண்டும்.
ம்ஹூம், ரம்யாவுக்குச் சென்னையிலேயே அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்துவிட்டது. ஒரு சில மார்க் Cut-Off வித்தியாசத்தில் அந்த வாய்ப்பைத் தவறவிட்டான் ஹரி.
அதைவிட மோசம், ஹரிக்குத் திருநெல்வேலியில்தான் எஞ்சினியரிங் சீட் கிடைத்தது. சென்னையிலிருந்து மிக அதிகபட்சத் தூரத்தில் உள்ள பொறியியல் கல்லூரி அது 😦
மறுபடியும் அவர்கள் எதிர்காலம் கருதித் தங்களைத் தாங்களே சமாதானம் செய்துகொண்டார்கள், கண்ணீரும் கம்பலையுமாகப் பிரிந்தார்கள்.
அப்போது செல்ஃபோனெல்லாம் வெகுஜனப் புழக்கத்தில் இல்லை. ஆகவே, அடுத்த நான்கு வருடங்கள், ஹரியும் ரம்யாவும் ஏகப்பட்ட கடிதங்களை எழுதிக் குவித்தார்கள். ’இன்னும் கொஞ்ச நாள், அதுக்கப்புறம் நாம ஒரே கம்பெனியில வேலை பார்க்கலாம்’ என்று கனவில் மிதந்தார்கள்.
அவர்களுடைய இந்தக் கனவும் நிறைவேறவில்லை. மறுபடியும் ரம்யாவுக்குச் சென்னையிலேயே வேலை கிடைத்தது. ஹரிக்கு ஹைதராபாத்.
சென்னை – திருநெல்வேலிகூடக் கொஞ்சம் பரவாயில்லை. சென்னை – ஹைதராபாத் ரயிலில் போய்த் திரும்புவதற்குள் முதுகெலும்பு முறிந்துவிடும்.
இன்னொரு பையனாக இருந்தால் ஹைதராபாத் வேலை வேண்டாம் என்று சொல்லிவிட்டு சென்னையில் வேலை தேடியிருப்பான். ஏனோ, ஹரி அப்படிச் செய்ய விரும்பவில்லை.
‘இந்த ஆறு வருஷத்தில, நாங்க நேர்ல ஏழெட்டு மணி நேரம் அந்நியோன்யமாப் பேசியிருந்தா அதுவே அதிகம்’ என்றான் ஹரி, ‘எங்களோட லவ் முழுக்க, லெட்டர்லயும் ஃபோன்லயும்தான்’
அது சரி, இந்தக் கதையையெல்லாம் இப்போது ஏன் இவன் எங்களிடம் சொல்கிறான்?
காரணம் இருக்கிறது. ரம்யாவுக்கு பைக் என்றால் ரொம்ப இஷ்டம். கடிதம், தொலைபேசி வழியே அவர்கள் காதலித்துக்கொண்ட தருணங்களிலெல்லாம் தனது இந்த விருப்பத்தை அவர் அவனிடம் திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கிறார்.
ரம்யாவைப் பொறுத்தவரை, ‘உல்லாசப் பயணம்’ என்பது, ஹரியுடன் பைக்கில் நீண்ட தூரம் போய்க்கொண்டே இருப்பதுதான்! இதைக் கேள்விப்பட்ட ஹரி, சீக்கிரத்தில் காசு சேர்த்து ஓர் ‘இரண்டாம் கை’ பைக்காவது வாங்கிவிடவேண்டும் என்று ரொம்பக் காலமாக நினைத்துக்கொண்டிருந்தான்.
ஆகவே, ஹைதராபாதில் பைக் வாங்கியதும் பையனுக்குக் காதலி ஞாபகம் வந்துவிட்டது. அவரை இங்கே வரவழைக்கவேண்டும், பைக்கில் ஒரு ரவுண்ட் கூட்டிச் செல்லவேண்டும் என்று துடிதுடித்தான்.
நியாயமான ஆசைதானே? நாங்களெல்லாம் ‘டபுள் ஓகே’ சொல்லி அவனுக்கு வாழ்த்துத் தெரிவித்தோம். மறுவிநாடி, ‘ட்ரீட் எப்போ?’ என்று ஆவலாகக் கேட்டோம்.
பதில் சொல்ல ஹரி அங்கே இல்லை. ரம்யாவுடன் ஃபோன் பேசுவதற்காக STD பூத்தைத் தேடிச் சென்றுவிட்டான்.
அடுத்த வாரம், ரம்யாவின் பயணத் திட்டம் தயாராகிவிட்டது. ‘ஹைதராபாதில் ஒரு ஃப்ரெண்டுக்குக் கல்யாணம்’ என்று வீட்டில் பொய் சொல்லிவிட்டு ஒரு வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் ரயில் பிடித்துப் புறப்பட்டு வந்தார் அவர்.
மறுநாள் காலை, அவரை வரவேற்பதற்கு நாங்கள் எல்லோரும் ரயில் நிலையத்துக்குச் சென்றிருந்தோம். இத்தனை பேரை அங்கே அவர் எதிர்பார்க்கவில்லை என்பது அவருடைய ஏமாற்ற முகபாவத்தில் தெரிந்தது.
நல்ல வேளையாக, ஹரியின் புது பைக்கைப் பார்த்ததும், அந்த வருத்தம் மறைந்துவிட்டது. முகமெல்லாம் பரவசத்துடன் பைக்கைத் தொட்டுத் தொட்டுப் பார்த்தார் அவர்.
ரம்யாவுக்கு சைக்கிள்மட்டுமே ஓட்டத் தெரியும். இதுவரை அவருடைய அப்பாவின் ஓட்டை ஸ்கூட்டர்தவிர வேறெந்த பைக்கிலும் அவர் பயணம் செய்தது கிடையாது.
அதனால்தானோ என்னவோ, அவருக்குப் பைக் பைத்தியம் பிடித்துவிட்டது. வீட்டில் ஏராளமான வெளிநாட்டு பைக் வகைகளின் புகைப்படங்களைக் கத்தரித்துச் சேமித்துவைத்திருப்பதாகச் சொன்னார்.
அவர் பேசிக்கொண்டே போக, ஹரி சங்கடமாக நெளிந்தான். நான் பக்கத்தில் இருந்தவன் இடுப்பில் கிள்ள, அவன் சட்டென்று பேச்சைத் திசை மாற்றினான், ‘சரி, நீங்க கிளம்புங்க, நாங்க பின்னாடியே வர்றோம்’
ரம்யாவின் பெட்டியை நாங்கள் எடுத்துக்கொள்ள, அவர் ஹரியின் பைக் பின் சீட்டிலிருந்து எங்களுக்கெல்லாம் ‘டாட்டா’ காட்டியபடி பயணம் செய்தார். அப்போது அவருடைய முகத்தில் தெரிந்த அந்தக் குழந்தைக் குதூகலத்தை என்னால் என்றைக்கும் மறக்கமுடியாது.
ஹரிக்குப் பிறகு புறப்பட்ட நாங்கள், அவனுக்கு முன்னாலேயே வீடு சென்று சேர்ந்துவிட்டோம், ‘இவன் எங்கடா போனான்?’
‘அவசரப்படாதே மச்சான்’ என்று கண்ணடித்தான் ஒருவன், ’ரொம்ப நாளைக்கப்புறம் மீட் பண்றாங்க, நிறைய சடன்ப்ரேக் போட்டு மெதுவா வண்டியை ஓட்டிகிட்டு வருவான் பையன்’
‘அசிங்கமாப் பேசாதேடா ஃபூல்’
நாங்கள் சத்தமாகக் கத்திக்கொண்டிருக்கும்போதே, படியில் ஹரியின் செருப்பொலி கேட்டது. திறந்திருந்த கதவை வேகமாகத் தள்ளியபடி உள்ளே வந்தவன், ‘எங்கடா ரம்யாவோட பெட்டி?’ என்றான் நேரடியாக.
எங்களுக்குக் குழப்பம், ‘என்னடா தனியே வந்திருக்கே? அவங்க எங்கே?’
’அவளை வினு வீட்ல தங்கவெச்சிருக்கேன்’ என்ற ஹரி, டிவி பெட்டிக்குக் கீழே இருந்த சூட்கேஸை எடுத்துக்கொண்டான், ‘இதை அவகிட்டே கொடுத்துட்டு வந்துடறேன்’ என்று படிகளில் இறங்கி மறைந்தான்.
வினு(தா) எங்களுடன் வேலை செய்யும் தோழி. தன்னுடைய இரு சிநேகிதிகளுடன் தனியே வீடு வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்தார்.
அவர் வீட்டில் ரம்யாவைத் தங்கவைப்பது நல்ல யோசனைதான். ஆனால் இந்தப் பயல் இதுவரை அதைப்பற்றி எங்களிடம் ஒரு வார்த்தை சொல்லவில்லை.
அன்றுமுழுக்க, ஹரி மிகுந்த பரபரப்புடன் சுற்றிக்கொண்டிருந்தான். எங்கள் வீட்டுக்கும் வினு வீட்டுக்கும் இடையே அவனுடைய பைக் ஏகப்பட்ட பயணங்கள் சென்று திரும்பியது.
இரவு, ஹரி, ரம்யா சார்பில் எங்கள் எல்லோருக்கும் ட்ரீட். வினுவும் அவருடைய சிநேகிதிகளும்கூட வந்திருந்தார்கள்.
அந்த விருந்தில் எங்களுக்கு ஒரு விஷயம் பளிச்சென்று புரிந்தது. ரம்யாவுக்கு வினு கோஷ்டியினரைக் கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை.
அவர்கள்மேல் எந்தத் தப்பும் இல்லை. இத்தனை நாளாகக் காதலனைப் பிரிந்திருந்த ரம்யா, இப்போது அவனுடன் கொஞ்சம் நிம்மதியாகப் பேசலாம், நேரம் செலவிடலாம் என்று நினைத்துக்கொண்டு வந்தால், இந்த உத்தம புத்திரன் அவரை வேறு எங்கேயோ அந்நிய வீட்டில் தங்கவைத்துவிட்டான்.
மறுநாள் காலை ஆறு மணிக்கு எங்கள் வீட்டு அழைப்பு மணி ஒலித்தது. கண்ணைத் தேய்த்துக்கொண்டு கதவைத் திறந்தால், ரம்யா.
‘ஹலோ குட்மார்னிங்’
நாங்கள் அரக்கப்பரக்க நாற்காலியை இழுத்துப் போட்டோம். ஹரியை எழுப்புவதற்கு ஓடினான் ஒருவன்.
‘அவன் இன்னும் எழுந்திருக்கலியா?’ ரம்யாவின் குரலில் ஏமாற்றம்.
‘இல்லை, ராத்திரி ரொம்ப நேரம் படிச்சுகிட்டிருந்தான்’ நான் அவசரமாகப் பொய் சொன்னேன். ‘டேய் ஹரி, படுபாவி, எங்கேடா போனே?’
குறட்டை விட்டுத் தூங்கிக்கொண்டிருந்த ஹரி ஒருவழியாக எழுந்து உட்கார்ந்தான். அவன் நிதானமாகப் பல் தேய்த்து, குளித்து முடித்து அவர்கள் கிளம்புவதற்கு எட்டு மணி தாண்டிவிட்டது.
படிகளில் இறங்குவதற்குமுன்னால் என்னிடம்மட்டும் தகவல் சொன்னான் ஹரி, ‘இங்கேதான், பக்கத்தில நல்ல பிக்னிக் ஸ்பாட் ஒண்ணு இருக்குன்னு சொன்னாங்க, வழியில ஏதோ ஃபேமஸ் கோவிலும் இருக்காம். பார்த்துட்டு சீக்கிரமா வந்துடறோம்’
’மெதுவா வாங்க, எதுவும் அவசரம் இல்லை’ என்று சொல்லி அவர்களை வழியனுப்பி வைத்தோம்.
அந்த ஞாயிற்றுக்கிழமை மிக நிதானமாக நகர்ந்தது. நாங்கள் எல்லோருமே ஹரி, ரம்யாவைப்பற்றிதான் விதவிதமாக யோசித்துக்கொண்டிருந்தோம் என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும்.
அன்றைக்கு ஹரியும் ரம்யாவும் சென்றிருந்த சுற்றுலாத் தலம், ஹைதராபாத் அருகில் உள்ள ஓர் அணைக்கட்டுப் பிரதேசம். அங்கே சென்று பச்சைப் புல்வெளியில் நாள் முழுக்கக் கடலை போட்டுவிட்டு, மதியச் சாப்பாட்டுப் பொட்டலத்தைக் காலி செய்துவிட்டு, பொழுது சாய்ந்ததும் திரும்பியிருக்கிறார்கள்.
காதலியை ரொம்ப நாள் கழித்துப் பார்க்கிற பரவசமோ என்னவோ, அவரிடம் பேசிக்கொண்டே வண்டி ஓட்டிய ஹரிக்குச் சாலையில் கவனம் பதியவில்லை.
அவர்கள் ஹைதராபாத் எல்லையை நெருங்கும் நேரம். புறநகர்ப் பகுதியில் அவசரமாகச் சாலையைக் கடக்க முயன்ற ஒரு பெரியவர்மேல் ஹரியின் வண்டி மோதிவிட்டது.
சாதாரணமாக ஹரி வேகமாக வண்டி ஓட்டமாட்டான். எப்போதும் மிதவேகம்தான்.
அன்றைக்குப் பின் சீட்டில் உட்கார்ந்திருந்த காதலியைக் குஷிப்படுத்துவதற்காக அவன் பைக்கை அதிவேகமாக விரட்டினானா, அல்லது அவனால் மோதப்பட்ட தாத்தா ரொம்பப் பலவீனமானவரா, தெரியவில்லை. அடி வலுவாகப் பட்டுவிட்டது, ஏகப்பட்ட ரத்தம்.
ஹரிக்கு அதுதான் முதல் விபத்து. அதற்குமுன் ஒரு நாய்க்குட்டியைக்கூட அவன் காயப்படுத்தியதில்லை.
அதிர்ச்சியில் உறைந்து நின்றவனுக்கு, அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதுகூடப் புரியவில்லை. அவனை சமாதானப்படுத்தி உட்காரவைத்து எங்களுக்கு ஃபோன் செய்ததுகூட, ரம்யாதான்.
அவர் அரைகுறையாகச் சொன்ன இடம், வழி விவரங்கள் எங்களுக்குப் புரியவில்லை, அல்லது போதவில்லை. நாங்கள் கேட்கும் தொடர்ச்சியான கேள்விகளால் எரிச்சலடைந்த அவர், ‘கொஞ்சம் பொறுங்க, நான் மறுபடி ஃபோன் பண்றேன்’ என்று இணைப்பைத் துண்டித்துவிட்டார்.
இதற்குள், ஹரி சுய நினைவுக்கு வந்திருந்தான். விபத்துப் பகுதியைச் சூழ்ந்திருந்த பொதுமக்களில் யாரோ ஆம்புலன்ஸுக்கும் ஃபோன் செய்திருந்தார்கள்.
யார் செய்த புண்ணியமோ, அன்றைக்கு ஹரிக்கு அடி விழவில்லை. ஆம்புலன்ஸில் அந்தப் பெரியவருடன் ரம்யாவும் ஏறிக்கொள்ள, அவர்களைப் பின்தொடர்ந்து பைக்கில் போனான் ஹரி.
புறநகர்ப் பகுதி என்றாலும், பக்கத்திலேயே மருத்துவமனை இருந்தது. சினிமாவில் வருவதுபோல், ‘போலீஸ் கேஸ், கவர்ன்மென்ட் ஹாஸ்பிடலுக்குக் கொண்டு போ’ என்றெல்லாம் யாரும் விரட்டவில்லை.
பெரியவரை அட்மிட் செய்து, காவல்துறையினருக்குத் தகவல் சொல்லியானபிறகு, ரம்யா எங்களுக்கு ஃபோன் செய்தார். தொலைபேசியின் அருகேயே பதற்றத்துடன் காத்திருந்த எங்களுக்கு, கச்சிதமாக முகவரி சொல்லி, ‘உடனே புறப்பட்டு வாங்க’ என்றார்.
எங்கள் வீட்டிலிருந்து அந்த மருத்துவமனை பதினைந்து நிமிடப் பயண தூரம்தான். நாங்கள் ஆளுக்கொரு பைக்கில் அங்கே சென்று சேர்ந்தபோது, ஹரி குலுங்கிக் குலுங்கி அழுதுகொண்டிருந்தான்.
அந்தப் பெரியவர் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஆனால் போலீஸ் அவனிடம் கேட்ட கேள்விகள், தோரணையில் பையன் ரொம்பப் பயந்துவிட்டான்.
அவனுக்கு நாங்களோ, ரம்யாவோ சொன்ன ஆறுதல்கள் பலன் அளிக்கவில்லை. இனிமேல் அவனால் ஒருபோதும் இரு சக்கர வாகனம் ஓட்டமுடியாது என்று எனக்குத் தோன்றியது.
’புலம்பினது போதும்’ என்று அவனை அதட்டினார் ரம்யா, ‘கொஞ்சம் வெளிய வா, ஒரு வாய் சாப்டுட்டு வந்துடலாம்’
’ம்ஹூம், நான் வரலை’, ஹரி அங்கிருந்து நகர மறுத்துவிட்டான். தன்னால் அடிபட்ட பெரியவரிடம் பேசி, நேரடியாக ஒரு வார்த்தை மன்னிப்புக் கேட்டுக்கொண்டுதான் போவேன் என்று வறட்டுப் பிடிவாதம்.
இத்தனைக்கும், அந்தப் பெரியவரின் குடும்பத்தினர்கூட ஹரியிடம் கடுமையாக நடந்துகொள்ளவில்லை, ‘ஏதோ நடந்தது நடந்துபோச்சு, இனிமே பார்த்து வண்டி ஓட்டுங்க தம்பி’ என்றுதான் அறிவுரை சொன்னார்கள்.
ஆனால் ஹரிக்குக் குற்றவுணர்ச்சி தாங்கமுடியவில்லை. எந்நேரமும் பிரம்மை பிடித்தவன்போல் தரையைப் பார்த்துக்கொண்டு ஒரேமாதிரி உட்கார்ந்திருந்தான். சாப்பாடு இறங்கவில்லை, எப்போதாவது ஒரு வாய் காபிமட்டும் குடித்தான்.
அடுத்த இரண்டு நாள்கள், ஹரி அந்த மருத்துவமனையின் வரவேற்பு அறையைவிட்டு நகரவில்லை. கண்ணில் படுகிற டாக்டர்கள், நர்ஸ்களிடமெல்லாம் அந்தப் பெரியவரைப்பற்றி விசாரித்துக்கொண்டிருந்தான்.
‘ரம்யா, நீங்களாவது வினு வீட்டுக்குப் போய்த் தூங்கிட்டுக் காலையில வாங்களேன்’
‘வேணாம்’ என்றார் அவர், ‘ஐயாம் ஓகே’
கடைசியில் வேறு வழியில்லாமல் நாங்கள்மட்டும் தனியாக வீடு திரும்பவேண்டியிருந்தது. அன்று இரவு எங்களில் யாருக்கும் தூக்கம் வந்திருக்காது.
மறுநாள் அவர்களுக்குக் காலைச் சாப்பாடு பார்சல் வாங்கிக்கொண்டு நான் மருத்துவமனைக்குச் சென்றேன். வரவேற்பறையில் நேற்று பார்த்த அதேமாதிரி உட்கார்ந்திருந்தான் ஹரி.
அவன் என்னைத் தெரிந்ததுபோல் காட்டிக்கொள்ளவில்லை. ரம்யாமட்டும் சிவந்த விழிகளுடன் புன்னகைத்தார், ‘தேங்க்ஸ்’
ஹரி அசிரத்தையாக இட்லியை மென்றுகொண்டிருக்க, ரம்யா நன்றாகச் சாப்பிட்டார், ‘உங்ககிட்டே இன்னும் ஒரு சின்ன ஹெல்ப் வேணுமே’ என்றார்.
’என்னது?’
‘என்னோட பெட்டி வினு வீட்ல இருக்கு. அதைக் கொஞ்சம் வாங்கிட்டு வந்துடறீங்களா?’
‘எதுக்கு?’
’இன்னிக்கு நைட் ட்ரெயின்ல நான் சென்னை திரும்பணுமே’ என்றார் அவர், ‘அநேகமா அவங்க வீட்டுக்குப் போய்ட்டு வரதுக்கு நேரம் இருக்காதுன்னு நினைக்கறேன்’
ஹரி சட்டென்று நிமிர்ந்து பார்த்தான். சனி, ஞாயிறு, திங்கள் மூன்று நாள் ஓடியதே தெரியவில்லை.
அதைவிட, ஓர் அபூர்வமான சந்திப்பு வாய்ப்பைத் தன்னுடைய அசட்டைத்தனத்தால் பாழாக்கிவிட்டோம் என்பது அவனுக்கு இப்போது புரிந்திருக்கவேண்டும். ஆனால், இனிமேல் என்ன செய்யமுடியும்?
நான் வினுவை அலுவலகத்தில் சந்தித்து, ரம்யாவின் சூட்கேஸைக் கேட்டேன். அவர் என்னை ஒருமாதிரி பார்த்துவிட்டு, ‘நேத்து நைட் முழுக்க அவ வீட்டுக்கே வரலை, தெரியுமா?’ என்றார் குற்றம் சாட்டும் தொனியில்.
ஒரே ஒரு நாள் பழக்கத்தில், இவர்களால் எப்படி மற்றவர்களின் கலாசாரக் காவலர்களாக மாறிவிடமுடிகிறது? நடந்ததை முழுக்க விளக்கிக்கொண்டிருக்க நேரம் இல்லை, ‘அவசரமாக சூட்கேஸ் வேண்டும்’ என்றுமட்டும் திரும்பச் சொன்னேன்.
வினு அதற்குமேல் பிகு பண்ணவில்லை. என்னுடன் புறப்பட்டு வந்து வீட்டைத் திறந்து சூட்கேஸை எடுத்துக் கொடுத்தார். அவரை அலுவலகத்தில் இறக்கிவிட்டு மருத்துவமனைக்குச் சென்றேன்.
இதற்குள், ஹரியால் விபத்துக்குள்ளான பெரியவர் கண் விழித்திருந்தார். சாதாரண அதிர்ச்சிதான். ரத்த இழப்புதவிர வேறு பெரிய பிரச்னை எதுவும் இல்லை. சரியான நேரத்தில் சிகிச்சை கிடைத்ததால் உயிர் பிழைத்துவிட்டார்.
ஹரி அவரிடம் மன்னிப்புக் கேட்டானா, கையைப் பிடித்துக்கொண்டு கண்ணீர் மல்கினானா என்பதெல்லாம் எனக்குத் தெரியவில்லை. ஆனால் முன்பைவிட அவன் அதிக உற்சாகத்துடன் இருந்ததுமட்டும் எனக்குப் புரிந்தது.
ரம்யா எப்போதும்போல் தெம்பாக இருந்தார், ‘கடங்காரா, இனிமேலாவது ஒழுங்கா வண்டி ஓட்டு’ என்று அவன் கன்னத்தில் இடித்தார்.
‘ஹலோ, எனக்குக் கடன் கொடுத்தது நீ இல்லை, ஆந்திரா பேங்க்’
‘யார் கடன் கொடுத்தா என்ன? ஒருத்தர்கிட்டே கடன் வாங்கினவன் எல்லோருக்கும் கடன்காரன்தான்’
அவர்கள் பழையபடி உற்சாகமாகப் பேசிக்கொண்டிருப்பதைப் பார்க்க நிம்மதியாக இருந்தது. இதற்காக ஒரு நாள் அலுவலகத்துக்கு லீவ் போடலாம், தப்பில்லை!
மாலை, ரம்யா அங்கிருந்தே ரயில்வே நிலையத்துக்குப் புறப்பட்டார், ‘நாம ஆட்டோவிலே போயிடலாமா ரம்யா?’ என்றான் ஹரி.
‘இல்லை, பைக்லதான் போகணும்’ ரம்யா பிடிவாதமாகச் சொன்னார்.
ஹரி தடுமாறினான். அவனுக்கு மறுபடி ரம்யாவை வண்டியில் அழைத்துச் செல்ல விருப்பம் இல்லையோ, அல்லது பயமோ.
ஆனால் ரம்யா தன் முடிவை மாற்றிக்கொள்ளத் தயாராக இல்லை, ‘உன் பைக்லதான் போறோம்’ என்று ஏறி உட்கார்ந்துவிட்டார்.
ரம்யாவின் பெட்டியை முன்னால் வைத்து பேலன்ஸ் செய்தபடி கிக்கரை உதைத்தான் ஹரி. லேசான பதற்றத்துடன் அவர்களைக் கையசைத்து வழியனுப்பி வைத்தேன்.
அதன்பிறகு, இன்றுவரை நான் ரம்யாவை நேரில் பார்க்கவில்லை. அடுத்த வருடம் அவர் ஒரு ஸ்கூட்டி வாங்கியதாகவும், அவரே இரண்டு நாளில் ஓட்டக் கற்றுக்கொண்டுவிட்டதாகவும் ஹரி சொன்னான்.
ரம்யாவின் புது ஸ்கூட்டியைப் பார்க்க ஹரி சென்னை போகவில்லை. ஆறு மாதம் கழித்து அங்கேயே ஒரு வேலை பார்த்துக்கொண்டு கிளம்பிவிட்டான். அவனுடைய பைக்கும் சாக்குப் பைகளால் இறுகக் கட்டப்பட்டு அதே ரயிலில் அவனுடன் பயணம் செய்தது.
கிட்டத்தட்ட இதே நேரத்தில், எங்கள் பேட்ச்சில் எல்லோருக்கும் ஹைதராபாத் சலித்துவிட்டது. திருமண வாழ்க்கையில் ‘7 Year Itch’ என்று சொல்வார்களே, அதுபோல, சாஃப்ட்வேர் எழுதுவோர் மத்தியில் வழக்கமான இரண்டாம் வருட அரிப்பு. ஆளாளுக்கு வெவ்வேறு ஊர்களில் வேலை பார்த்துக்கொண்டு கிளம்பிவிட்டோம்.
ஹைதராபாதில் நாங்கள் ஏழு பேர் தங்கிய அந்த வீட்டுக்கு, ‘வான வில்’ என்று செல்லப் பெயர் சூட்டியிருந்தோம். ஹரியைத் தொடர்ந்து அதில் ஒவ்வொரு வண்ணமாக நீங்கத் தொடங்கியது.
ஹரியுடன் வாங்கிய அந்த வண்டி என்னோடு ரயிலில் பெங்களூர் வந்து சேர்ந்தது. இப்போதும் எங்கள் வீட்டு முன்னே தூசு படிந்து நின்றுகொண்டிருக்கிறது.
நான் எந்த வாகனத்தையும் ஓட்டுவதை நிறுத்திப் பல மாதங்கள் ஆகிறது. என்றாலும், அந்த பைக்கைமட்டும் விற்க மனமில்லாமல் ஒரு sentiment valueக்காக விட்டுவைத்திருக்கிறேன்.
இப்போது ஹரி, ரம்யா இருவரும் அமெரிக்காவில் இருப்பதாக அறிகிறேன். திருமணம் செய்துகொண்டுவிட்டார்களா என்பது தெரியவில்லை.
அது முக்கியமில்லை. நான் அறிந்துகொள்ள விரும்புவது வேறொரு விஷயம். ரம்யா விரும்பிய அந்த ’உல்லாச பைக் பயணம்’ எப்போதேனும் அவருக்குக் கிடைத்ததா? இனி கிடைக்குமா? அவர் இன்னும் பைக் படங்களைக் கத்தரித்துச் சேகரிக்கிறாரா? அல்லது, வேறு படங்களுக்கு மாறிவிட்டிருக்கிறாரா?
***
என். சொக்கன் …
26 03 2009
16 Responses to "வாகனங்கள்"

ஒரு சினிமா பாத்தா மாதிரி இருந்துச்சு .
ஹி ஹி ஹி


//இப்போது ஹரி, ரம்யா இருவரும் அமெரிக்காவில் இருப்பதாக அறிகிறேன். திருமணம் செய்துகொண்டுவிட்டார்களா என்பது தெரியவில்லை.//
நக்கலா !!


சொக்கன்,
பின்னி எடுத்து விட்டீர்கள்.
// ஒரே ஒரு நாள் பழக்கத்தில், இவர்களால் எப்படி மற்றவர்களின் கலாசாரக் காவலர்களாக மாறிவிடமுடிகிறது? //
நிகழ்வுகளுக்கு மத்தியில் இப்படிப்பட்ட எண்ணங்கள் நமக்கு வந்து போகும். அதை வெளிப்படுத்தி இருக்கும் விதம் மிகுந்த ரசனைக்குரியது. ஜெயமோகன் அவர்களின் தளத்தில் சமீபத்தில் வெளியான ‘அனல் காற்று’ குறுநாவலை படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதன் முதிர்ச்சியை இப்பதிவில் காண்கிறேன்.
நிறைய எழுதுங்கள்.
ஜெகதீசன்.


rompa viruvirupaana nadai, excellent naration , enga irukkanga Ramya and Hari 🙂


தங்களின் கவனத்திற்கு……
தொலைபேசித் துறையில் அம்பானி சகோதரர்கள் செய்த ஊழல், வெளிநாடு அழைப்புக்களை உள்ளுர் அழைப்புக்களாக மாற்றி பொய் எண் கொடுத்து பல நூறு கோடி ரூபாயை ஏப்பம் விட்டது, அரசியல் செல்வாக்கினால் அந்தத் திருட்டுத்தனத்திற்கு ஜூஜூபி அபராதம் கட்டி ஆட்டையைப் போட்டது எல்லாம் வெளிவந்த பிறகு திருபாய் அம்பானியல்ல, செத்த பின்னும் திருடும் “திருட்டுபாய் அம்பானி” என்பது சந்திக்கு வந்தது. அம்பானியின் ஆதாரப்பூர்வமான வம்பு-தும்புகளையெல்லாம் <strong color=red>கிழக்குப் பதிப்பகம் போட்டிருக்கும் அம்பானி பற்றிய பக்திப் பரவசமான வரலாற்று இலக்கியத்தில் இருக்காது </strong>என்பதை முன்னரே சொல்லிக் கொள்கிறோம். பின்னர் “இதெல்லாம் கிழக்கு பதிப்பகத்தில் இல்லையே” என்று அசடு போல அதிர்ச்சியடையக்கூடாது.


கலாசார காவல் எல்லாம் இருக்கட்டும் சார்! ரொம்ப ஆவல் தூண்டிவிட்டு வெறும் பைக் சவாரியும், ஆக்ஸிடெண்டும் சொல்லி முடிச்சிட்டீங்களே? விக்ரமன் படம் பார்த்தாப்ல இருக்கு!


Fantastic, veru enna solla !


எல்லோர் வாழ்க்கையிலும் நடப்பதுதான். புதுமையாக ஒன்றுமில்லை
.
ஊனமுற்றவர்களைப் ( மாற்றுத் திறன் உடையவர்கள்) பாருங்கள் இவை எல்லாம் ஒன்றுமே இல்லை என்பது புரிந்துவிடும்.
வாழ்க்கைப்பாட்டிற்கே தாளம் போடுவோருடனும் ஒப்பிட்டுக்
கொள்ளலாம்.
வறுமையையே எதிர்கொள்ளாதவர்களுக்குத்தான் இவை கதைகள்!
வ்ருந்தினால் வருந்துகின்றேன். ஆனால் இதுதான் உண்மை!i

1 | Sridhar Narayanan
March 26, 2009 at 10:38 am
//நான் அறிந்துகொள்ள விரும்புவது வேறொரு விஷயம். ரம்யா விரும்பிய அந்த ’உல்லாச பைக் பயணம்’ எப்போதேனும் அவருக்குக் கிடைத்ததா? இனி கிடைக்குமா? அவர் இன்னும் பைக் படங்களைக் கத்தரித்துச் சேகரிக்கிறாரா? அல்லது, வேறு படங்களுக்கு மாறிவிட்டிருக்கிறாரா?//
பெயரையும் மாற்றிவிட்டீர்கள். ஊரும் அதேதானா என்று தெரியவில்லை. அப்புறம் ‘நான் அறிந்து கொள்ள விரும்புவது’ என்று ப்ளாகில் எழுதினால் என்ன அர்த்தம்? 🙂
Orkut / Facebook -ல தேடிப் பாத்து நேரடியாவே கேட்டுடுங்க சார்.