மனம் போன போக்கில்

விலை

Posted on: March 31, 2009

நேற்று வழக்கமான மாலை நடை நேரம். காதில் ஓர் ஆடியோ புத்தகத்தை மாட்டிக்கொண்டு தினசரிப் பாதையில் போய்க்கொண்டிருந்தபோது யாரோ என்னைக் கை தட்டிக் கூப்பிட்டார்கள்.

பெங்களூரில் பொதுவாக யாரும் யாரையும் கை தட்டி அழைக்கிற பழக்கம் இல்லை. ஆகவே கொஞ்சம் ஆச்சர்யத்துடன்தான் திரும்பிப் பார்த்தேன்.

இன்னொரு ஆச்சர்யமான விஷயம், நாராசமான போக்குவரத்து ஒலியைத் தடுப்பதற்காகவே காதுகளில் சத்தமாக எம்பி3 திரை போட்டுக்கொள்வது என்னுடைய வழக்கம். அதையும் மீறி இவர் என்னுடைய கவனத்தைக் கவர்ந்துவிட்டார் என்றால், அவரது கை தட்டல் எத்தனை பலமாக இருந்திருக்கும் என்பதை ஊகித்துக்கொள்ளுங்கள்.

நாம் திரும்பிப் பார்த்ததும் அவர் வாயெல்லாம் பல், ‘என்ன சார், சௌக்யமா?’ என்றார் மிகுந்த அக்கறையுடன்.

நானும் ear-phoneகளைக் கழற்றிவிட்டு அவரை நலம் விசாரித்தேன், ‘என்னங்க? எதுனா புது புஸ்தகம் வந்திருக்கா?’

அவர் வழக்கம்போல், ‘தெரியலை சார்’ என்றார், ‘நீங்களே உள்ள வந்து பாருங்களேன்’

அந்தக் கடை மிகச் சிறியது. அலுவலகத்தில் நான் அமர்ந்திருக்கும் மேஜைகூட இதைவிடச் சற்றே பெரியதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

அந்தச் சிறிய இடத்துக்குள் எப்படியோ நுணுக்கி நுணுக்கி ஏகப்பட்ட செய்தித் தாள்கள், புத்தகக் கட்டுகளை அடுக்கிவைத்திருந்தார் அவர். ஆங்காங்கே பழைய சாக்குப் பைகள், காலி பாட்டில்கள், சப்பையாக நசுங்கிய அட்டைப் பெட்டி(?)கள், ஓரமாக எடை போடும் இயந்திரம் ஒன்று.

இதுமாதிரி கடைகளை நீங்களும் நிறையப் பார்த்திருப்பீர்கள். பழைய பேப்பர், புத்தகங்களை எடைக்கு எடுத்துக்கொண்டு கிலோவுக்கு ஐந்து ரூபாயோ, பத்து ரூபாயோ கொடுப்பார்கள். சாக்குப் பை, தராசுடன் வீடு வீடாக வருகிற ‘மொபைல்’ வியாபாரமும் இதில் உண்டு.

இப்படி நாம் எடைக்குப் போடும் ‘பழையது’கள் அதன்பிறகு என்ன ஆகிறது என்று எனக்கு இதுவரை தெரியாது. மறுசுழற்சி செய்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். உறுதியாகச் சொல்வதற்கில்லை.

அது சரி. இந்தப் பழைய பேப்பர் கடைக்காரர் எனக்கு எப்படிச் சிநேகிதமானார்? அது ஒரு சுவாரஸ்யமான கதை!

நாங்கள் வழக்கமாக காபிப்பொடி வாங்குகிற இடத்துக்குப் பக்கத்தில்தான் இவருடைய கடை. அந்தச் சிறிய பொந்துக்குள் காகிதக் கட்டுகளுக்குமேல் எப்படியோ காலை மடக்கி அமர்ந்திருப்பார். சில சமயங்களில் அவருடைய மனைவி, மகனும் உள்ளே இருப்பார்கள். எல்லோரும் ஒரே நேரத்தில் எப்படி உள்ளே போனார்கள், எப்படி வெளியே வருவார்கள் என்று யோசிப்பதற்கே அதிசயமாக இருக்கும்.

அப்போதும், அவர் எனக்கு ஒரு வேடிக்கைக் காட்சியாகதான் தோன்றினாரேதவிர, அவர் கடைக்குள் சென்று பார்க்கவேண்டும் என்று நினைத்தது கிடையாது. பழைய பேப்பர் கடைக்குள் எனக்கு என்ன வேலை?

பின்னர் ஒருநாள், எதேச்சையாக அவர் கடையைக் கவனித்தபோது பேப்பர் கட்டுகளுக்கு நடுவே பிதுங்கிக்கொண்டிருந்த ஒரு காமிக்ஸ் புத்தகம் என் கண்ணில் பட்டது. சட்டென்று கடைக்குள் பாய்ந்துவிட்டேன்.

நான் ஒரு காமிக்ஸ் பைத்தியம். Archies, Dilbert, Garfield மூன்றும் உயிர். அடுத்த நிலையில் Peanuts, Calvin & Hobbs மற்றும் MAD.

ஏனோ, Super-man, He-man, Hulk ரக ஆக்‌ஷன் காமிக்குகள் எனக்குப் பிடிக்காது. மற்றபடி லேசாக நகைச்சுவை தூவின பொம்மைக் கதைகள் எதுவானாலும் விரும்பிப் படிப்பேன்.

அன்றைக்கு நான் அங்கே பார்த்த காமிக்ஸ் புத்தகம் எது என்று இப்போது நினைவில்லை. ஆனால் அந்தப் பழைய பேப்பர் கடையில் நான் அதனைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்பதுமட்டும் உண்மை.

அடுத்த நிமிடம், அதைவிடப் பெரிய ஆச்சர்யம் ஒன்று காத்திருந்தது.

நான் எடுத்த காமிக்ஸ் புத்தகத்தை அந்தக் கடைக்காரரிடம் காண்பித்து, ‘இது என்ன விலை?’ என்று கேட்டேன்.

அவர் என்னை விநோதமாகப் பார்த்துவிட்டு, ‘நீங்களே ஏதாவது கொடுங்க சார்’ என்றார்.

வழக்கமாக இதுபோல் சொல்கிறவர்கள்மீது எனக்கு நம்பிக்கை இல்லை. நான் எவ்வளவு கொடுத்தாலும் ‘போதாது’ என்பதுபோல் முறைப்பார்கள். அதற்குப் பதிலாக அவர்களே ஒரு விலை சொல்லிவிட்டால் நல்லது என்பது என் கட்சி.

ஆகவே, நான் தொடர்ந்து வற்புறுத்தினேன், ‘பரவாயில்லை, சொல்லுங்க’

அவர் நெற்றியைச் சுருக்கிக்கொண்டு ரொம்ப யோசித்தார். பிறகு அவருக்கே நம்பிக்கையில்லாததுபோல் கைகளைக் கட்டிக்கொண்டு, ‘ரெண்டு ரூபா?’ என்றார்.

முதலில் என் காதில் ஏதோ கோளாறு என்றுதான் நினைத்தேன். பின்னே? பெங்களூரில் இரண்டு ரூபாய்க்கு என்ன கிடைக்கும்?

சாதாரணமாக ஒரு காமிக் புத்தகம் அதன் அளவைப் பொறுத்து பத்து ரூபாயிலிருந்து இருநூறு, முன்னூறு ரூபாய்வரை செல்லும். பழைய புத்தகக் கடையில் வாங்கினால் அதன் விலை ஐம்பது சதவிகிதம்வரை குறையலாம்.

ஆகவே, அவர் சொன்ன ‘இரண்டு ரூபாய்’ விலையை என்னால் நம்பவும் முடியவில்லை. ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை.

ஆனால் அவர், என்னுடைய திகைப்பைத் தவறாகப் புரிந்துகொண்டுவிட்டார், ’இந்தப் புத்தகத்துக்கு இரண்டு ரூபாய் ஜாஸ்தி’ என்று நான் நினைப்பதாக அவர் எண்ணிவிட்டார். கொஞ்சம் அதட்டினால், ‘எட்டணா கொடுங்க சார் போதும்’ என்று சொல்லியிருப்பார்போல.

ஒருவழியாக நான் சுதாரித்துக்கொண்டு அவருக்கு இரண்டு ரூபாய் கொடுத்தேன். முடிந்தவரை குரலைச் சாதாரணமாக வைத்துக்கொண்டு, ‘வேற எதுனா காமிக்ஸ் இருக்கா?’ என்றேன்.

’எனக்குத் தெரியாது சார், நீங்களே பார்த்துக்கோங்க’ என்று அவர் கடையிலிருந்து வெளியே வந்துவிட்டார்.

நானும் மிக ஆவலுடன் கடைக்குள் புகுந்து தேடினேன். இரண்டு ரூபாய்க்கு காமிக்ஸ் புத்தகம் என்றால் சும்மாவா?

அந்தக் கடைமுழுக்க வுமன்ஸ் எராவும் இந்தியா டுடேயும்தான் நிறைந்து கிடந்தது. ஆங்காங்கே குமுதம், கல்கி, மங்கையர் மலர், ஒன்றிரண்டு கன்னட இதழ்கள், விமானத்தில் பயணிகளுக்குப் படிக்கத் தரும் Inflight Magazines, தாஜ் குழுமத் தங்குமிடங்களில் விருந்தினர்களுக்குத் தரப்படும் கலாசார இதழெல்லாம்கூடக் கிடைத்தது.

ஆனால், எதுவும் புதிது இல்லை. அரதப் பழசு. அவற்றுக்கு நடுவே என்னுடைய தூசு அலர்ஜியைப் போறுத்துக்கொண்டு ஏதேனும் உருப்படியாகத் தென்படுகிறதா என்று வலை வீசவேண்டியிருந்தது.

கிட்டத்தட்ட பதினைந்து நிமிடத் தேடலுக்குப்பிறகு எனக்கு மூன்று காமிக்ஸ் புத்தகங்கள், ஒரு நாவல், இரண்டு குழந்தைக் கதைகள் கிடைத்தன. எல்லாவற்றுக்கும் சேர்த்து அவர் பத்து ரூபாய்மட்டும் வாங்கிக்கொண்டார்.

எனக்கு அவரை ஏமாற்றுகிறோமோ என்று ஒரு குற்ற உணர்ச்சி. கவலையுடன் என் மனைவியிடம் வந்து விஷயத்தைச் சொன்னேன்.

இதுமாதிரி சமாசாரங்களில் அவர் ரொம்பக் கில்லாடி. என் கையிலிருந்த புத்தகங்களை அலட்சியமாகப் பார்த்துவிட்டு, ‘இதெல்லாம் சேர்த்தாலும் கால் கிலோ தேறாது’ என்றார்.

‘பழைய புத்தகம் கிலோ அஞ்சு ரூபான்னு வெச்சாலும்கூட, அவருக்கு இது ஒண்ணே கால் ரூபாய்க்குக் கிடைச்சிருக்கும், நீ 12 ரூபாய் கொடுத்திருக்கே, அதுவே ஜாஸ்தி’

என் மனைவியின் லாஜிக் சுத்தமானதுதான். அந்தக் கடைக்காரரைப் பொறுத்தவரை இவை புத்தகங்களே அல்ல, வீசி எறியப்பட்ட காகிதக் குப்பைகள். அவ்வளவுதான். அதற்கு இந்த விலையே அதிகம்.

ஆனால் எனக்கு அவற்றின் நிஜமான மதிப்பு தெரியுமல்லவா? கல்லூரியில் ‘Value Engineering’ பாடமெல்லாம் படித்து மறந்திருக்கிறேனே!

இந்த ஏழு புத்தகங்களை நான் வேறொரு ‘நிஜமான’ பழைய புத்தகக் கடையில் வாங்கியிருந்தால் குறைந்தபட்சம் நூற்றைம்பது ரூபாய் செலவழிக்க வேண்டியிருந்திருக்கும். அந்தக் கணக்கில் யோசித்தால், நான் செய்தது மிகப் பெரிய தவறு என்று எனக்கே புரிந்தது.

ஆனால், சரி, தவறு பார்த்தா வாழ்க்கையில் எல்லாம் நடக்கிறது? அதன்பிறகு அந்தப் பக்கம் போகும்போதெல்லாம் அவர் என்னைப் பார்த்துப் பல் இளிப்பதும், நான் அவருடைய கடையை ரெய்ட் செய்து சில புத்தகங்களை அடிமாட்டு விலைக்கு அள்ளிவருவதும் தொடர்ந்தது.

ஒவ்வொருமுறையும் நான் தேர்ந்தெடுக்கும் புத்தகங்களுக்கு அவர் நம்பமுடியாத விலைதான் நிர்ணயித்தார். அதிகபட்சம் ஒரு புத்தகத்துக்கு ஒன்றரையிலிருந்து இரண்டரை ரூபாய். அதற்குமேல் மறந்தும் கேட்கமாட்டார்.

இதனால், ஒவ்வொருமுறையும் நான் அவருக்கு அதிகபட்சம் ஐந்து அல்லது பத்து ரூபாய்தான் தரவேண்டியிருக்கும். அதை வாங்கிக்கொள்கிறபோது அவர் முகத்தில் மலர்கிற சிரிப்பைப் பார்க்கவேண்டும் – பத்து ரூபாய்க்கு ஒரு மனிதன் இவ்வளவு சந்தோஷப்படமுடியுமா என்கிற ரகசியம் எனக்கு இதுவரை புரியவில்லை.

அதேசமயம், அவருடைய அறியாமையை நான் எனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறேன் என்கிற உறுத்தலும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருந்தது. அதனால்தானோ என்னவோ, கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய கடைப் பக்கம் போவதைக் குறைத்துக்கொண்டுவிட்டேன்.

இத்தனைக்கும், தினசரி அதே பாதையில்தான் நடந்து செல்கிறேன். நேற்று அவர் என்னைக் கவனித்துக் கை தட்டி அழைக்கும்வரை, அவரையோ அவரது கடையையோ எனக்குச் சுத்தமாக நினைவில்லாமல் போய்விட்டது.

சில நண்பர்களை ரொம்ப நாள் கழித்துச் சந்திக்கும்போதும், அந்த இடைவெளி தெரியாது. சென்றமுறை விட்ட அதே இடத்திலிருந்து பேச்சைத் தொடரமுடியும்.

அதுபோல, நேற்றைக்கும் நான் பழைய உற்சாகத்துடன் அவருடைய காகிதக் கட்டுகளுக்குள் புகுந்து புறப்பட்டேன். சில நாவல்கள், நான்கு காமிக்ஸ் புத்தகங்கள் கிடைத்தன.

இந்தமுறை, நான் அவரிடம் விலை கேட்கவில்லை. வழக்கமாக அவர் ஒரு புத்தகத்துக்கு எவ்வளவு தொகை நிர்ணயிப்பார் என்பது எனக்குத் தெரியும். குத்துமதிப்பாக அதைப்போல் இரண்டு மடங்கு கணக்கிட்டு நானே கொடுத்துவிட்டேன். ஏதோ, Inflation காலத்தில் அவருக்கு என்னால் முடிந்த உதவி, என் குற்றவுணர்ச்சிக்கும் கொஞ்சம் மருந்து.

அவர் எப்போதும்போல் முகம் மலர்ந்து சிரித்தார். ‘அடிக்கடி வந்து போங்க சார்’ என்றார்.

கண்டிப்பாக வருவேன். தினமும் இந்த வழியாகதானே நடக்கப்போகிறேன்?

***

என். சொக்கன் …

31 03 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

10 Responses to "விலை"

கால்வின் & ஹோப்ஸ் எனக்கு பிடித்தமான கார்ட்டூன்.

//
நாராசமான போக்குவரத்து ஒலியைத் தடுப்பதற்காகவே காதுகளில் சத்தமாக எம்பி3 திரை போட்டுக்கொள்வது என்னுடைய வழக்கம்.
//
இதனால் செவிகள் நாளடைவில் பழுதடைந்து போகும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

Joe,

நன்றி 🙂

//இதனால் செவிகள் நாளடைவில் பழுதடைந்து போகும் என்கிறார்கள் மருத்துவர்கள்//

இருக்கலாம் 😦

anyway, ஒரு சப்பைக்கட்டு: ஒரு நாளைக்கு அதிகபட்சம் 1 அல்லது ஒன்றரை மணி நேரம்மட்டும்தான் நான் Ear Phones பயன்படுத்துகிறேன். நடக்கும் நேரத்தை வீணாக்க மனம் இல்லை 🙂

நன்றி சொக்கரே,
நானும் இதேபோன்ற குற்றவுனர்ச்சியிலே பல பொழுதுகளை கழித்திருக்கிறேன்.
வேறு ரூபத்திலே இந்த குற்றவுனர்ச்சியிலேருந்து வெளியேறி இருக்கிறேன்.
அல்பமாக மிக மலிவாக பல அறிய விஷயங்கள் இப்படி நம்மை
சுற்றி எப்போதும் விரவி கிடக்கிறது.
கொள்வாரில்லை.
ஒரு துல்லியமான உள்ளத்து ஒரு கூற்றை நயமாக எழுதி பதிந்ததற்கு வந்தனமு.
நன்றி.
அன்புடன்,
ஸ்ரீனிவாசன்.

நானும் ear-phoneகளைக் கழற்றிவிட்டு அவரை நலம் விசாரித்தேன், ‘என்னங்க? எதுனா புது புஸ்தகம் வந்திருக்கா?’

Next time onwards you need enquire, ” Pudussa ‘Palaya’ Pusthagam vandirukka ?”

நான் இந்த வாரம் சென்னை திருவல்லிக்கேணியில், கிழக்கு பதிப்பகம் கண்காட்சியில் சொக்கன், ஆதவன் போன்றவர்களின், புதிய புத்தகங்களை தள்ளுபடிக்கு வாங்கினேன்.

என் அனுபவம், பள்ளி பருவத்தில், பழைய புத்தக வியாபாரியிடம், எழுதாத பக்கங்கள் கொண்ட ஒரு குயர், இரண்டு குயர் நோட்டு புத்தகங்களை 15 பைசா, 20 பைசாவிற்கு வாங்கியதுதான்.

மற்றபடி, கடைக்கு போடப்படும் நல்ல புத்தகங்கள் பல, பழைய புத்தக வியாபாரம் செய்யும் பாரதி சாலை (திருவல்லிக்கேணி பைக்ராப்ட்ஸ் ரோடு) வியாபாரிகளிடம் வந்து தேவையானவர்கள் கைக்கு சரியான விலைக்கு சென்று விடுகிறது. நேற்று என் மகன் ரூ 100 கொடுத்து, ராபர்ட் ஃப்ராஸ்ட் கவிதைகள் அடங்கிய பழைய பதிப்புப் புத்தகம் வாங்கினான். (read my son’s story “Lament of the Mahogony Door on the 22nd Floor” at my Blog page சத்தியமூர்த்தி டாட் காம்)

Srinivasan, Ram, SnapJudge, R Sathyamurthy,

நன்றி!

//Next time onwards you need enquire, ” Pudussa ‘Palaya’ Pusthagam vandirukka ?”//

உண்மைதான். ஆனால் எனக்கு என் கைக்கு வரும் எல்லாப் புத்தகமும் புதுசுதானே? அந்த அர்த்தத்தில் கேட்டேன் 🙂

//பள்ளி பருவத்தில், பழைய புத்தக வியாபாரியிடம், எழுதாத பக்கங்கள் கொண்ட ஒரு குயர், இரண்டு குயர் நோட்டு புத்தகங்களை 15 பைசா, 20 பைசாவிற்கு வாங்கிய//

நாங்கள் பிட் நோட்டீஸ்களைச் சேகரித்து பின் செய்து ஒருபக்கம்மட்டும் பயன்படுத்துவோம் – மளிகைக் கடைகளில் மிக மலிவாக நியூஸ்பிரின்ட் காகிதங்கள் வாங்கியதும் உண்டு 🙂

//read my son’s story “Lament of the Mahogony Door on the 22nd Floor” at my Blog page சத்தியமூர்த்தி டாட் காம்//

கண்டிப்பாக வாசிக்கிறேன். நன்றி!

யாருக்குமே கிடைக்காத ஏதோ அரிய புஸ்தகம் உங்களுக்குக் கிடைச்சிருச்சோன்னு பயந்தே போயிட்டேன். நல்லவேளை அப்படி நடக்கலை. 😉

Luz corner platfoam kadaiku poierukkirengala? 75% of the book price kodukka vendi irrukkum. I am also always mad about MAD.

முகில், Kesava Pillai,

நன்றி!

//Luz corner platfoam kadaiku poierukkirengala? 75% of the book price kodukka vendi irrukkum//

அநியாயம். சேலம் போன்ற சில தமிழகப் ‘பெரிய’ ஊர்களிலும் இந்தக் கொடுமை உண்டு – பழைய புத்தகத்துக்கு 50%தான் அதிகபட்ச விலை என்கிற உலகப் பொதுவான விதிமுறையை இவர்கள் அடாவடியாக மீறுகிறார்கள்.

லஜ் கார்னர் சென்றதில்லை. அடுத்தமுறை சென்னை வரும்போது நண்பர்கள் துணையோடு ஒரு விசிட் விட்டுப் பார்க்கிறேன்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 621,011 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

March 2009
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
%d bloggers like this: