மில்ஸ், பூன் மற்றும் முஷரஃப்
Posted April 5, 2009
on:- In: (Auto)Biography | Books | Crisis Management | Differing Angles | Fiction | India | Pakistan | Reading | Reviews | Rise And Fall | Team Building | Translation | Uncategorized
- 9 Comments
சில வாரங்களுக்குமுன்னால், Stephenie Meyer என்பவர் எழுதிய ’Twilight’ நாவலை அவசியம் வாசிக்கும்படி ஒரு நண்பர் சிபாரிசு செய்தார். கூடவே, ‘இந்த எழுத்தாளர் ஹாரி பாட்டர் ஜே. கே. ரௌலிங்கிற்கு இணையாக எழுதுகிறார்’ என்று ஓர் ஒப்பீட்டையும் கொளுத்திப் போட்டார்.
நான் ஜே. கே. ரௌலிங்கின் தீவிர வாசகன். அவரைப்போல் இவர் எழுதுகிறார் என்று கேள்விப்பட்டதும், ‘ஹா, ரௌலிங்மாதிரி இன்னொருத்தரா, அப்படியெல்லாம் இருக்க வாய்ப்பே கிடையாது’ என்று ஒருபக்கம் அவநம்பிக்கைப்பட்டேன், ‘ஒருவேளை, அப்படி இருந்துவிட்டால்?’ என்று இன்னொருபக்கம் நம்பிக்கையும் தோன்றியது.
ஹாரி பாட்டர் வரிசை நாவல்களுக்கு ரௌலிங் மூடு விழா நடத்தியதில் இருந்து, என்னைப்போன்ற பாட்டர் பிரியர்களுக்கு அவஸ்தைதான். நடுவில் அவர் எழுதி வெளிவந்த ’இத்தனூண்டு’ சிறுகதைப் புத்தகம் எங்கள் யானைப் பசிக்குச் சோளப்பொறியாகக்கூட அமையவில்லை.
அந்த வெற்றிடத்தை, Twilight வரிசை நாவல்கள் நிரப்புமா? ஹாரி பாட்டர் தரத்துக்கு Creativeஆக இல்லாவிட்டாலும், அதில் நான்கில் ஒரு பங்கைத் தொட்டால்கூடப் போதும் என்கிற எதிர்பார்ப்புடன்தான் நான் இந்த நாவலை வாசிக்கத் தொடங்கினேன்.
முதல் அத்தியாயத்திலிருந்தே, Stephenie Meyer கதை சொல்லும் விதம் என்னை ஈர்த்துவிட்டது. மிகவும் நிதானமான, விளக்கமான சூழ்நிலை வர்ணனைகளுடன் கதாபாத்திரங்களை சாங்கோபாங்கமாக அறிமுகப்படுத்தி வாசகர்களை உள்ளிழுத்துக்கொண்டுவிட்டு, அதன்பிறகு சீரான வேகத்தில் கதையைக் கொஞ்சம் கொஞ்சமாக முன்னகர்த்திச் செல்கிற ’பழைய’ உத்தியை மிக அழகாகப் பயன்படுத்தியிருந்தார் அவர்.
அதேசமயம், சில அத்தியாயங்களுக்குப்பிறகு இந்த பாணிக் கதை சொல்லல் எனக்கு அலுத்துவிட்டது. குறிப்பாகக் கதையில் வரும் கதாநாயகி எதற்கெடுத்தாலும் யோசியோ யோசி என்று யோசித்துக்கொண்டிருப்பது வெறுப்பேற்றியது.
டீன் ஏஜ் பெண்கள் இப்படியா தலை முடி அலங்காரத்திலிருந்து ஒவ்வொன்றுக்கும் அடுத்தவர்கள் அதைப்பற்றி என்ன நினைப்பார்களோ என்று யோசித்துக் கவலைப்பட்டுக்கொண்டிருப்பார்கள்? ஒருவேளை அப்படியே இருந்தாலும்கூட, அந்தச் சிந்தனை ஓட்டங்களைப் பக்கம் பக்கமாக ‘அப்படியே’ பதிவு செய்வதன்மூலம் கதையின் சுவாரஸ்யம் கெட்டுப்போய்விடுகிறது. வெகுஜனக் கதையாகவும் இல்லாமல், இலக்கியப் படைப்பாகவும் இல்லாமல் நடுவே திகைத்துப்போய் நிற்கிறது நாவல்.
இதைப்பற்றியெல்லாம் ஆசிரியர் Stephenie Meyer கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. ஜே. கே. ரௌலிங்கின் ’எல்லோரும் விரும்பிப் படிக்கும்படி சுவாரஸ்யமாகக் கதை சொல்லும் திறமை’யில் ஒரு சதவிகிதத்தைக்கூட இவரால் எட்டிப்பிடிக்கமுடியாது என்று எனக்குப் புரிந்துவிட்டது.
இத்தனைக்கும், Twilight நாவலின் கதாநாயகன், அவனுடைய குடும்பத்தினர் எல்லோரும் ரத்தக் காட்டேரிகள் (Vampires). இவர்களும் வழக்கமான (நம்மைப்போன்ற) பொதுஜனங்களும் சேர்ந்து வாழ்வதை வைத்து எத்தனையோ சுவாரஸ்யமான பிரச்னைகள், காட்சிகளைப் பின்னலாம். ‘Muggle’ என்கிற ஒற்றை வார்த்தையை வைத்துக்கொண்டு ஜே. கே. ரௌலிங் எப்படியெல்லாம் விளையாடியிருக்கிறார்!
ஆனால், Stephenie Meyer என்ன செய்கிறார்? மில்ஸ் & பூன் கதையில் தெரியாத்தனமாக ஒரு ரத்தக் காட்டேரி நுழைந்துவிட்டதுபோல் முழுக்க முழுக்க ரொமான்ஸ் நாவலாகவே இதனை எழுதிச் செல்கிறார். இதனால் அவர் முன்வைக்கிற திடுக்கிடும் திருப்பங்கள்கூட, தேனில் நனைத்த மிளகாய் பஜ்ஜிபோல் அசட்டுத் தித்திப்பாக இருக்கின்றன.
Stephenie Meyerமேல் தப்பில்லை. அவர் Twilight வரிசை மொத்தத்தையும் ஒரு ரொமான்ஸ் நாவலாக நினைத்துதான் எழுதியிருக்கிறார் என்று தெரிகிறது. தனது முக்கிய வாசகர்களான டீன் ஏஜ் பெண்களைத்தவிர வேறு யாரையும் அவர் திருப்தி செய்ய நினைக்கவில்லை. அத்தனை இனிப்பு, அத்தனை ’பிங்க்’தனம் எனக்கு ஒத்துக்கொள்ளவில்லை.
எனக்கு இந்த நாவலைச் சிபாரிசு செய்த அந்த நண்பரைத் தேடிக்கொண்டிருக்கிறேன். அவர் அகப்பட்டால், ‘Twilight நல்ல நாவல்தான். ஆனால் ஜே. கே. ரௌலிங் பாணி வேறு, Stephenie Meyer பாணி வேறு. இருவரையும் இனிமேல் ஒப்பிடமாட்டேன்’ என்று ஆயிரத்தெட்டு முறை இம்போஸிஷன் எழுதச் சொல்லவேண்டும்.
Twilight நாவலைப் படித்து முடித்தபிறகு, அதைப்பற்றி இணையத்தில் வாசித்துக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு சுவாரஸ்யமான செய்தி கண்ணில் பட்டது.
இந்த நாவல்முழுவதும் ’பெல்லா’ என்கிற கதாநாயகியின் பார்வைக் கோணத்திலிருந்து சொல்லப்பட்டிருக்கிறது. அவளுக்கும் எட்வர்ட் எனும் ரத்தக் காட்டேரிக்கும் ஏற்படுகிற காதல்தான் கதையின் முக்கியமான முடிச்சு.
நாவல் வெளியாகி, நன்கு பிரபலமடைந்தபிறகு, இதே கதையை எட்வர்ட் கோணத்திலிருந்து மறுபடியும் எழுத முயற்சி செய்திருக்கிறார் Stephenie Meyer. சில பிரச்னைகளால் அந்த ‘இன்னொரு’ நாவல் பாதியில் நின்றுவிட்டது.
ஆனால், ஒரே கதையை, வெவ்வேறு கோணங்களில் இருந்து சொல்லமுடியும் என்கிற யோசனை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதன்மூலம் நமக்குப் பல புதிய தரிசனங்கள் கிடைக்கக்கூடும்.
திரைப்படங்களில் இந்த உத்தி நன்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் எழுத்தில்? வாசகர்களுக்கு ஒரே விஷயத்தை ’மறுபடி’ வாசிக்கிறோம் என்கிற எண்ணம் ஏற்பட்டு அலுப்பூட்டாமல், சுவாரஸ்யம் குறையாமல் இதனைச் செய்யமுடியுமா? பெரிய சவால்தான்.
Stephenie Meyer இதனை எந்த அளவு சிறப்பாகச் செய்தார் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் சமீபத்தில் நான் படித்த இன்னொரு புத்தகம், நாம் பல ஆண்டுகளாகத் திரும்பத் திரும்ப ஒரே திசையிலிருந்து பார்த்து வந்த ஒரு விஷயத்துக்குப் புதிய ஒரு கோணத்தைக் காண்பித்தது.
Twilightபோல, அது புனைகதை (Fiction) நூல் அல்ல. ஒரு தனி மனிதரின் வாழ்க்கையைச் சொல்லும் சுயசரிதைப் புத்தகம். ஆனாலும், ஒரு க்ரைம் நாவலுக்கு இணையான சுவாரஸ்யத்தை அதில் பார்க்கமுடிந்தது.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரஃபின் சுயசரிதையான ‘In The Line Of Fire’, தமிழில் ‘உடல் மண்ணுக்கு’ என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது. மொழிபெயர்ப்பு: நாகூர் ரூமி. (கிழக்கு பதிப்பகம் வெளியீடு – 511 பக்கங்கள் – விலை ரூ 250/-)
இந்தியாவில் உள்ள நமக்கு, பாகிஸ்தான் எப்போதும் ஓர் எதிரி தேசமாகமட்டுமே அறிமுகமாகியிருக்கிறது. எங்கேனும் இந்தியா – பாகிஸ்தான் மக்கள் ஒருவருக்கொருவர் நேசமாகப் பழகினார்கள், பரஸ்பரம் உதவிக்கொண்டார்கள் என்பதுபோன்ற செய்திகள், அனுபவக் கட்டுரைகளைப் பார்த்தால்கூட, அது நிச்சயமாக ஒரு விதிவிலக்காகதான் நமக்குத் தோன்றுகிறது.
இதனால், நம்மைப் பொறுத்தவரை பாகிஸ்தான் மக்கள் எல்லோரும் ரௌடிகள். நமது எல்லைப் பகுதிக் கம்பி வேலிகளில் ஒரு சின்ன இடைவெளி தென்பட்டால்கூட உடம்பைக் குறுக்கிக்கொண்டு உள்ளே நுழைந்து அட்டூழியம் செய்கிறவர்கள்.
அடுத்து, இந்தியாவின் ராணுவ பலத்தோடு ஒப்பிட்டால், பாகிஸ்தான் ஒரு சின்னத் தூசு. ஆனால் நாமாக யாரையும் தாக்கவேண்டாம் என்று இந்தியா கௌரவமாக ஒதுங்கியிருப்பதால், ‘டாய், நான் யார் தெரியுமா? பிச்சுடுவேண்டா’ என்று ’அடாவடி மைனர்’கள்போல் பாகிஸ்தான் ஆட்டம் போடுகிறது.
கடைசியாக, இந்தியா நினைத்தால் ஒட்டுமொத்த பாகிஸ்தானையும் அரை நொடியில்(?) அழித்துவிடலாம். போனால் போகிறது, நம்மிடமிருந்து பிரிந்து சென்ற சின்னப் பையன்கள்தானே என்று நாம் அவர்களை விட்டுவைத்திருக்கிறோம்.
இப்படி பாகிஸ்தான்பற்றி ஏகப்பட்ட ‘நம்பிக்கை’களை வளர்த்துக்கொண்டிருக்கிறோம் நாம். இவையெல்லாம் உண்மையா, பொய்யா, அல்லது இரண்டும் கலந்த கலவையா என்றுகூட யோசிக்கவிடாமல் நம் மீடியாக்கள் பார்த்துக்கொள்கின்றன.
இதுபோன்ற ஒரு சூழலில், பர்வேஸ் முஷரஃபின் இந்தச் சுயசரிதை ஒரு முற்றிலும் மாறுபட்ட கோணத்தை நமக்குக் காட்டுகிறது. கடந்த அறுபத்து சொச்ச ஆண்டுகளில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்த நல்லது, கெட்டதுகளை அங்குள்ள ஒருவரின் பார்வையில் வாசிக்கமுடிகிறது.
இதைக் கேட்பதற்கு உங்களுக்குச் சாதாரணமாக இருக்கலாம். ஆனால் புத்தகம் வாசிக்கத் தொடங்கிய சில நிமிடங்களுக்குள், இது மிகவும் கசப்பான மருந்து என்பது புரிந்துவிடும்.
காரணம், நாம் இதுவரை கேட்டுப் பழகிய, உண்மையான உண்மை என்று நம்பிக்கொண்டிருக்கிற விஷயங்கள் எல்லாவற்றிற்கும், இன்னொரு கோணம் இருக்கமுடியும் என்கிற விஷயமே நமக்குப் பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது. நமக்கு மிகவும் பிடித்த, நாம் மிகவும் மரியாதை செலுத்துகிற ஒரு பிரபலத்தைப்பற்றி யாராவது குறை சொன்னால் திடுதிப்பென்று ரத்தம் கொதிக்குமே. அதுபோன்ற ஓர் உணர்வுதான் இந்தப் புத்தகம் முழுக்க.
’உதாரணமாக, தனது ராணுவ வாழ்க்கையைச் சொல்லும் ஆரம்ப அத்தியாயங்கள் சிலவற்றில், பர்வேஸ் முஷரஃப் சர்வ சாதாரணமாக ‘எதிரி’ என்கிற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். அது இந்தியாவைதான் குறிப்பிடுகிறது என்று உணரும்போது சட்டென்று நம் உடல் விறைத்துக்கொள்கிறது. ’இந்தியாவைப்போய் எதிரி என்று குறிப்பிடுகிறாரே. இந்த ஆளுக்கு என்ன பைத்தியமா?’ என்று அபத்தமாக ஒரு கேள்வி தோன்றுகிறது.
இந்தியாவின் பார்வையில் பாகிஸ்தானிகள் எல்லோரும் ரௌடிகளாகத் தோன்றினால், அங்குள்ள மீடியாக்கள் நம்மையும் ரௌடிகளாகதானே சித்திரிக்கும்? நாம் ‘பாகிஸ்தான் ஊடுறுவல்’ என்று சர்வ சாதாரணமாகக் குறிப்பிடும் விஷயத்திற்கு, அவர்கள் கோணத்தில் வேறொரு நியாயம் இருக்குமில்லையா? அது உண்மையோ, பொய்யோ அதை நேரடியான வார்த்தைகளில் முஷரஃப் சொல்லும்போது, நெளியவேண்டியிருக்கிறது.
முஷரஃப் இத்துடன் நிறுத்துவதில்லை. இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர்கள் ஒவ்வொன்றிலும், அவர் தன் பக்கத்து விளக்கத்தைத் தருகிறார். இந்தச் சிறிய, பெரிய யுத்தங்கள் அனைத்திலும், பாகிஸ்தான் ராணுவம்தான் வெற்றி பெற்றதாக அவர் குறிப்பிடுகிறார்.
இதற்கு ஒரு சிறிய உதாரணமாக, கார்கில் யுத்தத்தை எடுத்துக்கொள்ளலாம். இதுபற்றி நமக்குத் தெரிந்த (அல்லது, நமக்குச் சொல்லப்பட்டிருக்கும்) தகவல்கள் என்ன?
பாகிஸ்தான் ராணுவம் நம் எல்லைக்குள் அத்துமீறி ஊடுறுவியது. கார்கில் எனும் குளிர் பிரதேசத்தில் நமது ராணுவ வீரர்கள் தைரியமாகப் போரிட்டு பாகிஸ்தானிகளைத் துரத்தியடித்தார்கள். தப்புச் செய்த பாகிஸ்தான் ராணுவத்துக்கு நல்ல சூடு கிடைத்தது. சரியா?
’ம்ஹூம், இல்லவே இல்லை’ என்கிறார் முஷரஃப். ’இந்திய ராணுவம்தான் எல்லையில் ஊடுறுவி எங்களைத் தாக்க முயன்றது. வேறு வழியில்லாமல் நாங்கள் பதிலுக்குத் தாக்கி அவர்களை விரட்டியடித்தோம், இந்தப் போரில் எங்களுக்குதான் மகா வெற்றி. அதை ஜீரணித்துக்கொள்ளமுடியாமல் இந்தியா சர்வதேச அரங்கில் என்னென்னவோ கதைகளைச் சொல்லி எங்கள்மேல் சேறு பூசியது. அரசியல் அழுத்தம் கொடுத்து எங்கள் ராணுவத்தைப் பின்வாங்கச் செய்துவிட்டு, அவர்களே போரில் ஜெயித்ததுபோல் ஒரு பொய்யை ஜோடித்துவிட்டது’
கார்கில் யுத்தத்தில்மட்டுமில்லை. பாகிஸ்தான் எனும் தேசம் உருவானதுமுதல், பல சந்தர்ப்பங்களில் இந்திய ராணுவம் அவர்களுடைய எல்லையில் விஷமம் செய்துவந்திருப்பதாகச் சொல்கிறார் முஷரஃப். ஒவ்வொருமுறையும் பாகிஸ்தான் ராணுவம் சரியான பதிலடி கொடுத்து ஊடுறுவல் முயற்சிகளை முறியடித்திருக்கிறதாம்.
பர்வேஸ் முஷரஃப் அரிச்சந்திரன் இல்லை. அவர் சொல்வதெல்லாம் 100% நிஜம் என்று யாரும் (முக்கியமாக இந்தியர்கள்) ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
அதேசமயம், கார்கில் யுத்தம் போன்ற முக்கியமான நிகழ்வுகளைப்பற்றிய நமது ஊடகப் பதிவுகள் முழுக்க நேர்மையானவைதானா என்கிற கேள்வியும் இதன்மூலம் எழுகிறது. முஷரஃப் சொல்வது பொய் என்று நிராகரிக்கும் உரிமை நமக்கு இருப்பதுபோல், அவர்களும் நமது கோணத்தை நிராகரிக்கலாம் இல்லையா? இந்தியா, பாகிஸ்தான் விஷயத்தில் மிகைப்படுத்துதல் இல்லாத உண்மையான உண்மை எங்கே இருக்கிறது?
இன்றைக்கு பர்வேஸ் முஷரஃபை ஒரு தோல்வியடைந்த ஆளுமையாகச் சொல்கிறவர்கள் உலகெங்கும் இருக்கிறார்கள். அதேசமயம், ’சரிவுப் பாதையில் சென்றுகொண்டிருந்த பாகிஸ்தானை அவர்தான் கியர் மாற்றி உருப்படியாக்கினார்’ எனும் பாராட்டுகளும் ஆங்காங்கே கேட்கின்றன. இந்த விஷயத்திலும், ’உண்மையான உண்மை’ நமக்குக் கிடைப்பது சிரமம்தான்!
ஆனால் ஒன்று, இந்தப் புத்தகம் காட்டும் முஷரஃப் மிகவும் மாறுபட்டவர். பின்னட்டைக் குறிப்பு சொல்வதுபோல், அவர் ஒரு மிகத் தேர்ந்த சித்திரிப்பாளராக இந்நூலில் அறிமுகமாகிறார்.
முக்கியமாக, புத்தகத்தின் முதல் பாகத்தைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். முஷரஃபின் இளமைப் பருவத்து நினைவுகள், ராணுவத்தில் சேர்ந்த கதை, அங்கே அவர் சந்தித்த ஆரம்ப கால அனுபவங்கள் போன்றவை மிக மிகச் சுவாரஸ்யமாக விவரிக்கப்பட்டிருக்கின்றன.
இந்தப் புத்தகத்தை நான் வாசிக்கத் தொடங்கிய நேரம். ’எனக்கு ஏதாவது கதை சொல்லுப்பா’ என்று கேட்டுக்கொண்டு வந்தாள் நங்கை.
எனக்குப் புத்தகத்தை மூடி வைக்கவும் மனம் இல்லை. அவளை ஏமாற்றவும் விரும்பவில்லை. ஆகவே, முஷரஃபின் சின்ன வயதுக் கதைகளைப் படித்து அவளுக்குச் சொல்ல ஆரம்பித்தேன்.
அடுத்த அரை மணி நேரத்துக்குள் முதல் ஐந்து அத்தியாயங்களை வாசித்து, அவளுக்குச் சுருக்கமாக விவரித்தாகிவிட்டது. அவளும் அம்புலி மாமாக் கதை கேட்கும் ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்தாள். முன் அட்டையைக் காண்பித்து, ‘இதுதான் முஷரஃப் மாமாவா?’ என்று சொந்தம் கொண்டாடத் தொடங்கிவிட்டாள்.
அதன்பிறகு, முஷரஃபின் ராணுவ வாழ்க்கை அனுபவங்கள் தொடங்கின. ’அதெல்லாம் கொஞ்ச நாள் கழிச்சுக் கேட்டுக்கலாம்’ என்று அவளை விரட்டிவிட்டேன்.
ஆரம்ப காலத்திலிருந்து ராணுவத்தில் தான் படிப்படியாக வளர்ந்த கதையை மிகச் சுவாரஸ்யமாகச் சொல்லிச் செல்கிறார் முஷரஃப். ஆரம்பத்தில் அடாவடி இளைஞராக எல்லோரையும் முறைத்துக்கொண்டு இருந்தவர், பிறகு ராணுவத்தின் நெளிவு சுளிவுகளைப் புரிந்துகொண்டு, பேச்சைக் குறைத்து, செயலைக் கூட்டி, அடிமட்டம்முதல் எல்லோருடனும் கலந்து பழகி, கோஷ்டி அரசியலைப் புரிந்துகொண்டு, அதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துவது எப்படி என்று கணக்குப் போட்டு, அடுத்தடுத்த வளர்ச்சிகள் என்ன என்று திட்டமிட்டு … தனக்கென்று அவர் ஒரு தொண்டர் படையை எப்படி அணு அணுவாகச் சேர்த்திருக்கிறார் என்று வாசிக்கும்போது பிரம்மிப்பாக இருக்கிறது.
பாகிஸ்தான் ராணுவத்தில் முஷரஃப் வளர்ந்த கதை, ‘Team Building’ எனும் கலைக்கான ஒரு நல்ல உதாரணம். வெவ்வேறு தருணங்களில் தன்னை முன்னிறுத்திக்கொள்வது எப்படி என்பதைமட்டும் மிகச் சரியாகச் செய்து, அதன்மூலம் அதிவேகமான ஒரு வளர்ச்சியைச் சந்தித்திருக்கிறார் அவர்.
ஐநூறு பக்கங்களுக்குமேல் விரியும் இந்தப் பெரிய புத்தகத்தின் மிக முக்கியமான பகுதி, மூன்றாவது பாகம் – நவாஸ் ஷெரீஃப் முஷரஃபை விமானத்துடன் கடத்தப் பார்த்த கதை. இந்த அறுபது பக்கங்களில் நாம் பார்க்கும் திருப்பங்கள், விறுவிறுப்பு எல்லாம் Best Seller க்ரைம் இலக்கியங்களில்கூடக் கிடைக்காது.
யோசித்துப் பாருங்கள். எந்தவிதமான தகவல் தொடர்பும் இல்லாமல் மேலே வானத்தில் தடுமாறிக்கொண்டிருக்கிறார் முஷரஃப். அவருடைய விமானத்தில் எரிபொருள் குறைந்துகொண்டிருக்கிறது. அவரை பாகிஸ்தானில் எங்கேயும் தரையிறங்க விடுவதில்லை என்று பிடிவாதம் பிடிக்கிறது பாகிஸ்தான் அரசாங்கம்.
இந்தச் சூழ்நிலையில், முஷரஃப் ஒரு வார்த்தைகூடப் பேசாமல், கட்டளையிடாமல் அவரது தொண்டர் படையினர் ஒரு ராணுவப் புரட்சியினைத் தொடங்கி நடத்துகிறார்கள். விமானத்தில் எரிபொருள் தீர்ந்து காலியாவதற்குச் சற்று முன்னே, அவரைப் பத்திரமாகக் கீழே கொண்டுவருகிறார்கள். தரையிறங்கியதும் அவர் நேராகச் சென்று ஆட்சியை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு எல்லாம் மிகக் கச்சிதமாக நடந்து முடிகிறது.
அப்படியானால், இந்தக் கடத்தல் நாடகத்துக்கு முன்னால் முஷரஃப் எத்தனை கவனத்துடன் திட்டமிட்டு உழைத்திருக்கவேண்டும் என்று யோசித்தால் மலைப்பாக இருக்கிறது. முஷரஃப் சொல்வதுபோல் இந்த எதிர்ப் புரட்சி ‘சட்டென்று’ நடந்த ஒரு விஷயமாக இருக்க வாய்ப்பே இல்லை. இப்படியெல்லாம் நடக்கும் என்று முன்கூட்டியே ஊகித்து, அப்படி நடந்துவிட்டால் என்ன செய்யவேண்டும் என்று தனது குழுவினருக்குக் கட்டளைகளைப் பிறப்பித்துத் தயார் நிலையில் வைத்திருந்தால்மட்டுமே இது சாத்தியம். Crisis Managementக்கு இதைவிடக் கச்சிதமான ஓர் உதாரணம் கிடைக்காது.
நிற்க. இதற்குமேல் தொடர்ந்து எழுதினால், பர்வேஸ் முஷரஃபை ஒரு ’மேனேஜ்மென்ட் குரு’வாகவே நான் அங்கீகரித்துவிடுவேன். ஆகவே, இந்தப் புத்தகத்தின் கடைசிப் பகுதியைப்பற்றிச் சுருக்கமாகச் சொல்லி முடித்துக்கொள்கிறேன்.
முஷரஃப் ஆட்சிக்கு வரும்வரை ஒரு விறுவிறுப்பான மசாலாப் படம்போல் விரியும் இந்தப் புத்தகம், அதன்பிறகு ‘முஷரஃப் முன்னேற்றக் கழக’த்தின் தேர்தல் அறிக்கைபோலத் தடம் மாறிவிடுகிறது. ஆட்சிக்கு வந்தபின் நான் அதைச் செய்தேன், இதைச் செய்தேன், இதையெல்லாம் வேறு யாரும் செய்திருக்கமுடியாது என்று திரும்பத் திரும்ப ஒரேமாதிரி சொல்லிக்கொண்டிருக்கிறார் முஷரஃப். கூடவே, தன்னுடைய அரசாங்கத்தின் செயல்கள் ஒவ்வொன்றையும் நியாயப்படுத்துவதற்கான முயற்சிகளும்.
எவ்வளவு எழுதி என்ன? முஷரஃபை உலக உத்தமராக யாரும், அவருடைய சொந்தத் தேசத்தினர்கூட ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தச் சுயசரிதை எழுதப்பட்டபோது பாகிஸ்தான் அதிபராக உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்திருந்த அவர், இப்போது இருந்த சுவடு தெரியாமல் போய்விட்டார்.
இதிலும் ஒரு மேனேஜ்மென்ட் தத்துவம் இருக்கிறதோ?
***
என். சொக்கன் …
05 04 2009
9 Responses to "மில்ஸ், பூன் மற்றும் முஷரஃப்"

அன்புள்ள சொக்கரே,
மிக நன்றாக இருந்தது.
நங்கைக்கு சொன்ன கதையாக இந்த மூஸாROUGH மாமா கதையை நீங்கள் வேறு ஒரு கோணத்திலே எழுத வேண்டும் என்று எங்கள் ஆசையை நீங்கள் பரிசீலிக்க வேண்டும்.
வேறு ஒரு கோணம் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள விசேஷ அறிவு வேண்டாம். அடிப்படை அறிவு போதுமே என்றும் தோன்றுகிறது .
இதேபோன்று நாதுராம் கோட்சே தன் தரப்பு நியாங்களை வக்கணையாக வார்த்தைகளிலே வடித்து எடுக்க முடியுமே என்று படுகிறது ?
குழ்ந்தையை ஓநாய் கவ்வி உண்பதை ஓநாயின் நோக்கிலே நியயப்படுதுவது அந்த விலங்கினங்களின் மூதாதையரின் வாழ்வியல் தர்மம்.
நமக்கெண்று ஒரு தர்மம் இருப்பதாக தெரிகிறது.
Serve Jana sukino Bhavandhu.
நகைச்சுவை ததும்ப, மூஸாROUGH மாமாவை management குருவாக நீங்கள் எழுதி இருப்பது படிக்க சுகமாக இருந்தது.
ஆர்வமாக எழுதி எங்களோடு பகிர்ந்து கொண்ட மனப்பாங்குக்கு வந்தனமு.
நன்றி.
அன்புடன்,
ஸ்ரீனிவாசன்.


[…] Current Projects மில்ஸ், பூன் மற்றும் முஷரஃப் […]


ஏதாவது எலக்ஷன் டிக்கட் கெடச்சுடுச்சா? மைனாரிட்டி ஓட்டு கீட்டு வேணுமா? நீங்க அந்த மாதிரி ஆளா தெரியலயே?
ச்சும்மா “சோ”க்குக்கு சொன்னேன்.
உங்கள் விவரணை என்னை முஷாரப் கதையை படிக்கத் தோன்றுகிறது.
Harry Potter புடிக்கும்னா, என் மகன் எழுதிய fan fiction ட்ரை பண்ணி பாருங்க. என் வலையில் இருக்கு. இங்க உரல் கொடுத்தா ஸ்பேம்னு சொல்லுவீங்க. என் வலைக்கு போய் Harry Potter என்று தேடுங்கள்.


ஃபாலோ அப் – படிச்சுட்டீங்களா? எப்படி இருக்கு?


ஆனால், ஒரே கதையை, வெவ்வேறு கோணங்களில் இருந்து சொல்லமுடியும் என்கிற யோசனை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதன்மூலம் நமக்குப் பல புதிய தரிசனங்கள் கிடைக்கக்கூடும்.
திரைப்படங்களில் இந்த உத்தி நன்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் எழுத்தில்? வாசகர்களுக்கு ஒரே விஷயத்தை ’மறுபடி’ வாசிக்கிறோம் என்கிற எண்ணம் ஏற்பட்டு அலுப்பூட்டாமல், சுவாரஸ்யம் குறையாமல் இதனைச் செய்யமுடியுமா?
– பாஸ், As the crow flies (Jeffrey Archer) படிச்சதில்லையா? அந்த நாவல் முழுதும் இந்த உத்தி (வெற்றிகரமாக) கடைப்பிடிக்கப்பட்டிருக்கும்.

1 | Sridhar Narayanan
April 5, 2009 at 10:31 pm
Twilight படிக்கவில்லை. ஆனால் ஹாரி பாட்டர் 7-ம் பாகத்திற்கு ஒரு போலி கதை உண்டு. படித்திருக்கிறீர்களா? மிகவும் சிறப்பாக எழுதப்பட்டிருந்தது. நிறைய ரொமான்ஸ் காட்சிகளுடன், ஹாரி பாட்டர், ஜின்னியை திருமணம் செய்து ஜேம்ஸ் பாட்டர் என்னும் மகனுடன் ஹெர்மாய்னி / ரான் வெஸ்லியின் திருமணத்தில் பஙுகு பெறுவதோடு நிறைவு பெறும். கிட்டத்தட்ட 370 பக்கங்களுக்கு நன்றாக ஹாரி பாட்டரின் அத்தனை நீட்சிகளையும் சித்த்ரித்து இருப்பார். எனக்கு என்னவோ அது ரௌலிங்கின் ஒரு டீஸர் வெர்ஷன் என்று சந்தேகமாகவே இருந்தது. சில ஹார்ட் கோர் ஹாரி பாட்டர் ரசிகர்கள் அந்த நாவலை எடுத்த உடனே நிராகரித்துவிட்டார்கள். 🙂
முஷாரஃப் சுயசரிதம் என்றல்ல, அப்துல் காதிர் கான் சுயசரிதை எழுதினாலும் இப்படித்தான் எழுத முடியும் என்பது வேறு விஷயம். 1971-ல் பங்களாதேஷ் உருவானபோது கிழக்கு பாகிஸ்தானின் லெப். ஜென். ஏ. ஏ. கே. நியாஜி சரணடைந்தது போன்ற வரலாறுகளை ’ஒரே’ பார்வையில்தானே பார்த்தாக வேண்டும். 🙂
பொதுவாக வரலாற்றை பதிகிறவர்கள் வெற்றி பெற்றவர்களுக்கு சார்பாக செயல்படக் கூடியவர்கள்தான். ஆனால் இன்றைய இணைய உலகத்தில் உண்மையை கண்டறிவதற்கும், மாற்றுப் பார்வையை அலசி ஆராயவ்தற்கும் சாத்தியங்கள் நிறையவே. அதையும் தாண்டி நாம் நமக்கான ‘அரசியல்’ பார்வையை (political perceptions) உருவாக்கிக் கொள்ளத்தான் செய்கின்றோம்.
இந்தியா தஜிகிஸ்தானில் ராணுவ தளம் அமைத்திருக்கிறது. இது ஒரு ஸ்ட்ராடிஜி நடவடிக்கை என்று பூசி மெழுகினாலும், பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளுக்கு எரிச்சலான விஷயம்தான். ஆனால் பாகிஸ்தான் ஆதரவுடன் நடத்தப்படும் மும்பை தாக்குதல் போன்றவை ‘below the belt’ வகையை சார்ந்தவையே. அதைத் தொடர்ந்து பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்புகளில் சம்பந்தபட்டவர்கள் இந்தியாவிலிருந்து வந்தனர் என்று அறிக்கை விடுவதெல்லாம் பங்காளி காய்ச்சல் வகையறாவே. முஷாரஃபின் இராணுவ நினைவுகளைத் தவிர மற்ற சிறுவயது அனுபவங்களை படிக்க சுவாரசியமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அவர் பிறந்த இடத்தை ஒரு ‘இந்தியப் பகுதியாக’ எப்படி பின்னாளில் பார்வையிட்டார் என்பது போன்ற விசயங்கள்.
நல்ல சுவாரசியமான தகவல்கள். பகிர்தலுக்கு நன்றி!