மனம் போன போக்கில்

மௌண மொளிகள்

Posted on: April 14, 2009

அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் (அல்லது, சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்!)

இன்றைக்கு ஒரு புதுப் படப் பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தேன். மென்மையான மெட்டு, நல்ல வரிகள், இடையில் கல் மாட்டியதுபோல, ‘மௌண மொளி’ என்றார் பாடகர். அதற்குமேல் அந்தப் பாட்டைக் கேட்கப் பிடிக்கவில்லை.

இத்தனைக்கும் அந்தப் பாட்டை எழுதிய கவிஞர் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர், கவிதைகளிலும் திரைப் பாடல்களிலும் மிக நன்றாக எழுதக்கூடியவர். ஆனால் ‘மௌன மொழி’ என்று பாடகரைத் திருத்தி, மீண்டும் அந்த வரியைப் பதிவு செய்யச் சொல்ல அவருக்குத் தோன்றவில்லை, அல்லது அதிகாரம் இல்லை, அல்லது அலட்சியம்.

’இதையெல்லாம் ஒரு பாடலாசிரியர் செய்துகொண்டிருக்கமுடியுமா?’ என்று கேட்காதீர்கள். எழுத்தின்மீது அக்கறை கொண்டவர்கள், தங்கள் படைப்பின்மீது மரியாதை கொண்டவர்கள் செய்வார்கள், செய்யதான் வேண்டும்.

வைரமுத்து தன்னுடைய ‘இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்’ புத்தகத்தில் ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகிறார்.

அவர் எழுதிய ‘ஈரமான ரோஜாவே’ பாடல் பதிவாகிக்கொண்டிருக்கிறது. பாடுபவர் கே. ஜே. யேசுதாஸ்.

வைரமுத்துவுடன் ஒப்பிடுகையில் யேசுதாஸ் ரொம்ப சீனியர். எத்தனையோ தமிழ்ப் பாட்டுகளை ஊதித் தள்ளியிருக்கிறார். ஆனால் அப்போது அவருக்கு(ம்) ல, ள, ழ வித்தியாசம் கொஞ்சம் தகராறுதான்.

’ஈரமான ரோஜாவே’ பாட்டில் ஒரு வரி, ‘தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து’ என்று வரும். அந்த வரியை யேசுதாஸ் ‘தண்ணீரில் மூள்காது’ என்று பாடினாராம்.

உடனே, வைரமுத்து திருத்தியிருக்கிறார், ‘மூள்காது இல்லை, மூழ்காது’

யேசுதாஸ் பக்கா Professional. கவிஞர் சொன்னபடி திருத்திப் பாடினார்.

ஆனால் இப்போதும் ‘மூழ்காது’ வரவில்லை, ‘மூள்காது’வுக்கும் ‘மூழ்காது’வுக்கும் இடையே ஏதோ ஒரு சத்தம்தான் வருகிறது.

வைரமுத்து சும்மா இருந்திருக்கலாம், ‘சீனியர் பாடகர், தேன் போலக் குரல், அதில் பிழைகள் தெரியாது, போகட்டும்’ என்று விட்டிருக்கலாம். ஆனால் அவரோ, விடாமல் திருத்துகிறார், ‘மூழ்காது-ன்னு அழுத்திப் பாடுங்க’

யேசுதாஸ் ஒருமுறை, இரண்டுமுறை, மூன்றுமுறை திருத்திப் பாடிப் பார்த்தார். முடியவில்லை. கடைசியில் அவருக்குக் கோபம், ‘நான் சாகும்வரை திருத்துவீங்களா?’ என்று வைரமுத்துமேல் எரிந்து விழுந்தாராம்.

அதற்கு வைரமுத்து சொன்ன பதில், ‘தமிழ் சாகாதவரை திருத்துவேன்’

வைரமுத்துவின் பெரும்பாலான ‘சுயசரிதை’க் குறிப்புகள் மிகைப்படுத்தப்பட்டவை என்று சொல்கிறவர்கள் இருக்கிறார்கள். ஆனால் எனக்கென்னவோ இந்தச் சம்பவம் அச்சு அசல் அப்படியே நடந்திருக்காவிட்டாலும், ஓரளவு உண்மையாகதான் இருக்கும் என்று தோன்றுகிறது.

ஆனால், கடந்த சில ஆண்டுகளில், வைரமுத்துவேகூட தனது பாடல் வரிகள் சிதைக்கப்படுவதைக் கண்டுகொள்வதில்லை. மற்ற (இளைய தலைமுறை)ப் பாடலாசிரியர்கள் இன்னும் மோசம். எதையோ எழுதிக் கொடுத்துவிட்டோம், பாடுகிறவர்கள் அவர்கள் விருப்பம்போல் பாடிக் கொள்ளட்டும் என்று விட்டுவிடுகிறார்கள்போல.

இதை இன்னொரு கோணத்திலிருந்து யோசித்தால், இன்றைய சினிமாவில் பாடுகிறவர்கள், இசையமைப்பவர்கள் எல்லோரும் இளைஞர்கள். அவர்கள் தலைமுறைக்கு ‘நல்ல தமிழ்’ முழுமையாக அறிமுகமாகவில்லை.

இதனால், ஒருவேளை பாடகர் தப்பாகப் பாடினாலும்கூட இதுதான் சரி என்று கண்டுபிடித்துத் திருத்துவதற்கு யாரும் இல்லை. இதற்காகப் பாடலாசிரியர்கள் ஒவ்வொரு பாடல் பதிவுக்கும் வந்து போய்க்கொண்டிருக்கமுடியுமா?

எதார்த்தமான, ஆனால் படு அபத்தமான வாதம் இது.

திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் கேமெரா கோணம், வெளிச்சம், நடிகர்கள் அணியும் உடைகள், அரங்கப் பொருள்கள், மற்றவை எப்படி அமையவேண்டும் என்று எந்த அளவு மெனக்கெடுகிறார்கள். அதில் ஏதாவது ஒரு தவறு நிகழ்ந்துவிட்டால் கண்டுபிடித்து உடனடியாகத் திருத்துவதற்கு எத்தனையோ பேர் இருக்கிறார்கள்தானே?

காட்சிகளுக்கு இப்படி மெனக்கெடுகிறவர்கள், பாடல் வரிகள்மட்டும் எப்படிப் போனாலும் பரவாயில்லை என்று நினைப்பது என்ன நியாயம்? அவற்றில் நிகழ்கிற தவறுகளுக்குப் பாடலாசிரியர் பொறுப்பு என்று இசையமைப்பாளர் நினைக்கிறார், இவர்தான் பொறுப்பு என்று அவர் நினைக்கிறார், கடைசியில் கெட்டுப்போவது யாருடைய படைப்பு? தன் பெயரில் பிசிறில்லாத படைப்புகள்மட்டுமே வரவேண்டும் என்று நினைக்கும் பெருமிதம் எங்கே போயிற்று?

திரைப்படம் என்பது மிகப் பெரிய Team Work. அதில் எத்தனையோ பேர் சேர்ந்து உழைக்கிறார்கள். பாடல் பதிவு நடக்கிற ஏழெட்டு நாள்மட்டும் ஒரு தமிழாசிரியரையோ, அல்லது ஒழுங்காகத் தமிழ் வாசிக்க, எழுதத் தெரிந்த ஒருவரையோ நியமித்தால் என்ன? அப்படி என்ன அவர்கள் லட்சமும் கோடியுமா சம்பளமாகக் கேட்டுவிடப்போகிறார்கள்?

சென்ற வருடம், ‘மயிலு’ என்ற திரைப்படத்தின் பாடல் பதிவைக் கலைஞர் தொலைக்காட்சியில் காட்டினார்கள். கார்த்திக், திப்பு, இன்னும் சிலர் சேர்ந்து ஒரு கிராமியப் பாட்டைப் பாடிக்கொண்டிருந்தார்கள்.

அவர்கள் பாடுவதைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்த இசையமைப்பாளர் இளையராஜா, திடீரென்று ஒலிப்பதிவை நிறுத்திவிட்டார், ‘நீங்க பாடினதில ஒரு சின்னத் திருத்தம், பயிரு இல்லைப்பா, பயறு’ என்றார்.

‘பயிர்’ என்றால், வயலில் விளைவது – நெற்பயிர், கோதுமைப் பயிர். இப்படி.

ஆனால், ‘பயறு’ என்பது பருப்பு வகையைக் குறிக்கிறது – ‘தட்டைப் பயறு’ என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்.

அந்தப் பாட்டில் வருவது ‘பயறு’தான், ‘பயிரு’ அல்ல. இந்த நுணுக்கமான வித்தியாசம், கிராமத்தையே பார்த்திருக்காத இளம் பாடகர்களுக்குப் புரிந்திருக்கும் என எதிர்பார்ப்பது தவறுதான்!

ஒருவேளை ‘பயறு’வை அவர்கள் ‘பயிரு’ என்று மாற்றிப் பாடிவிட்டால்கூட, என்ன பெரிதாகக் குடி முழுகிவிடும்? இதையெல்லாம் யார் கவனிக்கப்போகிறார்கள்? ‘பெரியம்மா பெண்ணை ரசிக்கலாம்’ என்கிற வரியைக்கூட ஏற்றுக்கொண்டு ‘ஹிட்’டாக்கிய தமிழகம் இல்லையா இது?

ஆனால், கவிஞர்கூடப் பக்கத்தில் இல்லாத நேரத்தில், ஒலிப்பதிவை நிறுத்தி அந்த ஒற்றை வார்த்தையைத் திருத்தவேண்டும் என்று அந்த இசையமைப்பாளருக்குத் தோன்றியதே. ஏன்?

இந்த ஒரே காரணத்துக்காக, இளையராஜாமீது ஆயிரம் குறை சொல்கிறவர்கள் இருக்கிறார்கள். ‘அவர் நினைக்கிறது அப்படியே வரணும்ன்னு எதிர்பார்ப்பார். சர்வாதிகாரி’ என்றுதான் அவரைப்பற்றிய பிம்பம் பதிவாகியிருக்கிறது.

ஆனால், எல்லாம் ஒழுங்காக வரவேண்டும் என்று நினைப்பது சர்வாதிகாரம் இல்லை. கலைமீது இருக்கும் அக்கறை, தன்னுடைய படைப்பின்மீது இருக்கும் முனைப்பு. அது இல்லாமல் அலட்சியம் செய்தால் நமக்கு ‘மௌண மொளி’கள்தான் பரிசாகக் கிடைக்கும்.

முக்கியமான பின்குறிப்பு: ‘மௌண மொளி’ப் பாடலின் இசையமைப்பாளர், அதே இளையராஜாவின் சொந்த மகன்தான். அப்பாவிடம் இதைமட்டும் அவர் கற்றுக்கொள்ளவில்லைபோல!

***

என். சொக்கன் …

14 04 2009

21 Responses to "மௌண மொளிகள்"

//
இதை இன்னொரு கோணத்திலிருந்து யோசித்தால், இன்றைய சினிமாவில் பாடுகிறவர்கள், இசையமைப்பவர்கள் எல்லோரும் இளைஞர்கள். அவர்கள் தலைமுறைக்கு ‘நல்ல தமிழ்’ முழுமையாக அறிமுகமாகவில்லை.
//

சரியாக சொன்னீர்கள்.

சொல்லப் போனால் தமிழ்ப் பற்று உள்ள பல பேரும், தனது பிள்ளைகளை ஆங்கிலப் பள்ளிகளில் சேர்த்து, அவர்களுக்கு தமிழே தெரியாமல் வளர்க்கிறார்கள்.

உங்களுக்கும் எனது தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இதைப் போலவே நானும் ஒரு பதிவு இட்டிருக்கிறேன்.
http://joeanand.blogspot.com/2009/04/blog-post_9262.html

Tamil Puthaandu Vazthukkal.

What you’ve said is true. This kind of songs really irritate,better not to hear that like me.

சினிமாவுல தமிழ் மொழி “மொளி”யானது பற்றி வருத்தப்படுற நீங்க, சித்திரையில புத்தாண்டு வாழ்த்து சொல்றீங்க? தமிழ்ப் புத்தாண்டு தை மாதத்திற்கு மாறியதை ஏற்றுக் கொள்ள விருப்பம் இல்லையோ? நீங்க தமிழ் இனம் இல்லையோ?. இது என்ன அலட்சியமா, இல்லை அகங்காரமா?

Joe, Kesava Pillai, தமிழ்க்குடிமகன்,

நன்றி 🙂

//சித்திரையில புத்தாண்டு வாழ்த்து சொல்றீங்க? தமிழ்ப் புத்தாண்டு தை மாதத்திற்கு மாறியதை ஏற்றுக் கொள்ள விருப்பம் இல்லையோ? நீங்க தமிழ் இனம் இல்லையோ?. இது என்ன அலட்சியமா, இல்லை அகங்காரமா?//

நண்பரே, இந்தப் பிரச்னையே வேண்டாம் என்பதற்காகதான் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள், சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் என்று இரண்டையும் சேர்த்து எழுதினேன் – முதலில் தமிழ்ப் புத்தாண்டைச் சொன்னது தவறு என்றால், நீங்கள் வரிசை மாற்றிப் படித்துக்கொள்ளலாமே!

சித்திரை 1, தை 1 இரண்டுமே கொண்டாடப்படவேண்டிய நாள்கள் என்பது என்னுடைய பழக்கம். இவற்றில் எது தமிழ்ப் புத்தாண்டாக இருந்தாலும் எனக்குச் சந்தோஷமே. இரண்டையும் தமிழ்ப் புத்தாண்டாக நினைத்தால்கூடத் தப்பில்லை என்றுதான் நான் சொல்வேன் – இதுபற்றி அநாவசிய அரசியல், காழ்ப்புணர்ச்சி வேண்டாம் என்று நினைக்கிறேன்

நல்ல பதிவு! கலைக்கென இருக்கவேண்டிய அதிகாரம்தான் இது. கலையை கலையாய் செழிக்க வைக்க ஒரு வழி.

பிரான்சில் ஒரு குழுவை அமைத்து அன்னிய மொழியிலிருந்து பிரெஞ்சுக்கு வரும் புதிய வார்த்தைகளை கட்டுப்படுத்துகிறார்கள் (எ.கா week-end).

இவ்வளவு செய்யும்போதே அவர்களின் மொழி கலப்படமாவதைப் பற்றி கவலை வேறு.நம் மொழி படும் சிரமத்தை என்ன என்று சொல்வது?

//அதற்கு வைரமுத்து சொன்ன பதில், ‘தமிழ் சாகாதவரை திருத்துவேன்’//

நெத்தியடியான பதில்.

எவ்வளவு பெரிய பாடகராக இருந்தாலும் தவறு செய்தால் திருத்துவதற்கு ஒரு தமிழறிஞர் வேண்டும்.

இங்கே எல்லாமே இப்போது கமர்சியல் ஆகிவிட்டது. அதனால் மவுனமொளி எல்லாம் இப்போது சஹஜமாகிவிட்டது.

//சினிமாவுல தமிழ் மொழி “மொளி”யானது பற்றி வருத்தப்படுற நீங்க, சித்திரையில புத்தாண்டு வாழ்த்து சொல்றீங்க? தமிழ்ப் புத்தாண்டு தை மாதத்திற்கு மாறியதை ஏற்றுக் கொள்ள விருப்பம் இல்லையோ? நீங்க தமிழ் இனம் இல்லையோ?. இது என்ன அலட்சியமா, இல்லை அகங்காரமா?//

தமிழ் குடிமகன் அவர்களே! சொக்கன் உங்களுக்கு பதில் சொல்லிவிட்டார். அவரது எழுத்தில் இல்லாத அகங்காரம் உங்கள் மறுமொழியில் இருக்கிறது. அகங்காரமா என்று கேட்டதிலேயே அகங்காரம் தெரியவில்லை?

நான் சொல்லுகிறேன்; தமிழ் வருடப்பருப்பை நான் இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆட்சி மாறினால், அது மீண்டும் சித்திரைக்கே வந்தாலும் வந்து விடும்.

தவிர, தமிழ் வருடத்தின் முதல் நாளை வருடப் பிறப்பென்று கொண்ட்டாமல் வேறு எப்படி சொல்வது?

தமிழ் மட்டுமல்ல இன்ன பிற இந்திய வருடப்பிறப்புகளும் மார்ச்/ ஏப்ரலிலேயே வருகின்றன. மத்தியில் ஆட்சி செய்தவர்கள் ஒரு சட்டம் போட்டு அவற்றையும் மாற்றியிருக்கலாமே? ஏன் செய்யவில்லை?

ரசித்தேன் 🙂

உங்கள் பதிவுமனை முகவரியை என் இடுகையின் நட்பு வட்டாரத்தில் போட்டிருக்கிறேன்! 🙂

//சித்திரை 1, தை 1 இரண்டுமே கொண்டாடப்படவேண்டிய நாள்கள் என்பது என்னுடைய பழக்கம். இவற்றில் எது தமிழ்ப் புத்தாண்டாக இருந்தாலும் எனக்குச் சந்தோஷமே. இரண்டையும் தமிழ்ப் புத்தாண்டாக நினைத்தால்கூடத் தப்பில்லை என்றுதான் நான் சொல்வேன் – இதுபற்றி அநாவசிய அரசியல், காழ்ப்புணர்ச்சி வேண்டாம் என்று நினைக்கிறேன்//

சித்திரை முதல் நாள் – கொல்லம் ஆண்டின் புத்தாண்டு
தை முதல் நான் – திருவள்ளுவர் ஆண்டின் புத்தாண்டு

தமிழக அரசின் அதிகார பூர்வ நாட்காட்டி திருவள்ளுவர் ஆண்டு என்பதால் தை முதல் 1 தமிழ் புத்தாண்டு

அவ்வளவு தான் !!!

இது போல் சனவரி முதல் நாள் – கிரேகிரியன் நாட்காட்டியின் புத்தாண்டு. அதை ஆங்கில புத்தாண்டு என்று கூறுவது நாம் தான்

சித்திரை 1 – கொல்லம் புத்தாண்டு
தை 1 – திருவள்ளுவர் புத்தாண்டு
ஜனவரி 1 – கிரேகிரியன் புத்தாண்டு

இதில் கிரேகிரியன் புத்தாண்டை ஆங்கில புத்தாண்டு என்று அழைப்பது போல் எந்த புத்தாண்டை தமிழ் புத்தாண்டு என்று அழைக்க வேண்டும் ??

அரசு எந்த நாட்காட்டியை அதிகார பூர்வமாக ஏற்றுக்கொண்டிருக்கிறதோ, அதை கூறவேண்டியது தான்

தமிழக அரசு ஆணை கொல்லம் புத்தாண்டின் முதல் நாளை மாற்ற வில்லை

தமிழக அரசு ஆணை திருவள்ளுவர் புத்தாண்டின் முதல் நாளை மாற்ற வில்லை

சக ஆண்டு (இந்தியாவின் அதிகார பூர்வ நாள்காட்டியின்) முதல் நாள் – அதாவது இந்திய புத்தாண்டு என்று தெரியுமா

இந்திய அரசு கூட கொல்லம் ஆண்டை கடைபிடிக்க வில்லை

கொல்லம் ஆண்டை தவிர வேறு ஒரு ஆண்டுமுறையை (சக வருடம்) கடைபிடிக்கும் உரிமை இந்திய நடுவண் அரசிற்கு உள்ளது

கொல்லம் ஆண்டை தவிர வேறு ஒரு ஆண்டுமுறையை கடைபிடிக்கும் உரிமை ஆந்திர மாநில அரசிற்கு உள்ளது

கொல்லம் ஆண்டை தவிர வேறு ஒரு ஆண்டுமுறையை (திருவள்ளுவர் ஆண்டு) கடைபிடிக்கும் உரிமை தமிழக அரசிற்கு மட்டும் இல்லையா ??

சக ஆண்டு (இந்தியாவின் அதிகார பூர்வ நாள்காட்டியின்) முதல் நாள் – அதாவது இந்திய புத்தாண்டு என்று தெரியுமா

மார்ச் 22 (லீப் வருடங்களில் மார்ச் 21) !!! ஏப்ரல் 15 அல்ல !! (1956 முதல் இது தான் இந்திய புத்தாண்டு) இதை அறிமுகப்படுத்தப்பட்டது நேருவின் ஆட்சியில்.

இது தவிர ”இந்து புத்தாண்டு” என்று பாசகவினரால் அறிமுகப்படுத்தப்பட்டது. அது கூட ஏப்ரல் 14 கிடையாது.

http://www.rediff.com/news/mar/31cong.htm
Hindu new year’s day which is being observed on April 8 and 9.

http://www.rediff.com/news/apr/09flip.htm
The Hindu New Year’s Day fell on April 8 this year. The Bharatiya Janata Party celebrated appropriately.

பின் குறிப்பு

அலோபதி ஆங்கில மருத்துவம் – சித்தா தமிழ் மருத்துவம் ஆனது போல்

கிரேரியன் ஆண்டு ஆங்கில ஆண்டாக மாறியபோது தவறுதலாகவே கொல்லம் ஆண்டை தமிழ் புத்தாண்டாக பழக்க வழக்கத்தில் மாற்றிவிட்டார்கள்

தற்பொழுது திருவள்ளுவர் ஆண்டை தமிழ் ஆண்டாக கருத கூறுகிறார்கள். அவ்வளவு தான்

பாரதிய ஜனதா கூட ஏப்ரல் 14லை கொண்டாத போது, ஏதோ ஏப்ரல் 14ஐ தமிழ் புத்தாண்டு என்று கூறாவிட்டால் தெய்வ குற்றம் வந்து விடும் என்று சில “அறிஞர்கள்” ஊடகங்களில் பரப்புவது கண்டு சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை

இந்தியாவிற்கு தனி புத்தாண்டு இருக்கிறது
இந்து புத்தாண்டு என்று தனியாக இருக்கிறது
தெலுங்கு புத்தாண்டு என்று தனியாக இருக்கிறது

இவ்வளவும் இருக்கும் போது தமிழர்கள் திருவள்ளுவர் ஆண்டின் முதல் நாளை புத்தாண்டாக கொண்டாடினால் அது தவறு கொல்லம் ஆண்டு தான் முக்கியம் என்று கூறுகிறார்களே, ஏன் ????

சத்தியமாக புரியவில்லை.

//பெரியம்மா பெண்ணை ரசிக்கலாம்’//

எந்த பாட்டு எந்த படம் …..

//சினிமாவுல தமிழ் மொழி “மொளி”யானது பற்றி வருத்தப்படுற நீங்க, சித்திரையில புத்தாண்டு வாழ்த்து சொல்றீங்க?//

அது கொல்லம் புத்தாண்டு.

// தமிழ்ப் புத்தாண்டு தை மாதத்திற்கு மாறியதை ஏற்றுக் கொள்ள விருப்பம் இல்லையோ?//

கொல்லம் புத்தாண்டு மாறவில்லை சார். அது அப்படியேத்தான் இருக்கிறது. அதே போல் திருவள்ளுவர் புத்தாண்டும் மாறவில்லை. அதுவும் அப்படியே தான் இருக்கிறது

தமிழ அரசின் அதிகார பூர்வ புத்தாண்டு என்பது திருவள்ளுவர் ஆண்டின் முதல் நாளாக மாறியுள்ளது மட்டும் தான் நடந்துள்ளது

தமிழர்கள் ஜனவரி 14 நாளை கொண்டாடுவதற்கும், வட இந்தியர்கள் மார்ச் 22 கொண்டாடுவதற்கும் காரணம் இருக்கிறது !!

வடகிழக்கு பருவமழை, தென்மேற்கு பருவமழை என்றெல்லாம் புவியியல் பாடத்தில் இருக்கும், படித்தால் தெளிவு பெறலாம்

மிக அருமையானதொரு பதிவு.

நானும் எனது நண்பர்களும் இதைப்பற்றி பலமுறை புலம்பித் தள்ளியிருக்கிறோம். இப்போழுதுள்ள இளம் பாடகர்கள் மற்றும் இசையமைப்பாளர்களில் பெரும்பாலானவர்களுக்கு இந்த உச்சரிப்பு பிரச்சினை இருக்கிறது என்பது ஒரு துரதிஷ்டமே. திருத்தங்கள் செய்வதற்கு பெரும்பாலும் பாடலாசிரியருக்கோ, இசையமைப்பாளருக்கோ சரியான உச்சரிப்பு தெரிய வேண்டுமென்பது அவசியமாகிறது. ‘ஸ்டைல்’ அல்லது ‘ட்ரெண்ட்’ என்கிற போர்வையில் தப்பான உச்சரிப்புகள் legitimate ஆகிவிடுகின்றன.

‘மயிலு’ படத்தின் பாடல் பதிவில் நடந்த அந்த நிகழ்ச்சி மிகவும் நுட்பமான ஒரு விஷயம். சிறிய விஷயமென்றாலும் ஒரு கலைஞன், தன் கலை மீது கொண்டிருக்கும் மதிப்பும், அக்கறையும் அதில் தெரியும்.

//இந்த ஒரே காரணத்துக்காக, இளையராஜாமீது ஆயிரம் குறை சொல்கிறவர்கள் இருக்கிறார்கள்//

இது மிகச்சரி! அவரிடம் சுதந்திரம் இல்லையென்று தூற்றுவார்கள்.

இதுவே ஒரு இயக்குனரோ அல்லது நடிகரோ, ஒரு காட்சி தான் நினைத்தப்படி வருவதற்கு பல முறை நடிக்க வைத்தார் (அல்லது நடித்துக் கொடுத்தார்) என்பதை மட்டும் பெருமையாக சொல்லுவார்கள். அது மட்டும் ‘டெடிகேஷன்’ என்று பொருள் கொள்ளப்படும்.

//ஆனால், எல்லாம் ஒழுங்காக வரவேண்டும் என்று நினைப்பது சர்வாதிகாரம் இல்லை. கலைமீது இருக்கும் அக்கறை, தன்னுடைய படைப்பின்மீது இருக்கும் முனைப்பு. //..

சரியாகச் சொன்னீர்கள்! அந்த முனைப்பும் அக்கறையும் இன்று பலரிடம் இல்லை என்பது வருந்ததக்க விஷயம்.

ராம்ஜி சுப்ரமணியன்.

ரா.கிரிதரன், Sharepoint The Great, சத்தியமூர்த்தி, கானா பிரபா, R Sathyamurthy, புருனோ, Ramji Subramanian,

நன்றி 🙂

//உங்கள் பதிவுமனை முகவரியை என் இடுகையின் நட்பு வட்டாரத்தில் போட்டிருக்கிறேன்!//

நானும் என் நட்பு வட்டப் பட்டியலை update செய்யவேண்டும். ஆறு மாதமாகச் செய்துகொண்டிருக்கிறேன் 😦

//சித்திரை முதல் நாள் – கொல்லம் ஆண்டின் புத்தாண்டு
தை முதல் நான் – திருவள்ளுவர் ஆண்டின் புத்தாண்டு
தமிழக அரசின் அதிகார பூர்வ நாட்காட்டி திருவள்ளுவர் ஆண்டு என்பதால் தை முதல் 1 தமிழ் புத்தாண்டு
அவ்வளவு தான் !!!//

இது எனக்குப் புதிய செய்தி. விளக்கத்துக்கு நன்றி டாக்டர்!

//பெரியம்மா பெண்ணை ரசிக்கலாம்’ – எந்த பாட்டு எந்த படம் …..//

’கண்ணெதிரே தோன்றினாள்’ என்ற படத்தில், ‘ஈஷ்வரா’ என்று தொடங்கும் பாடல், உதித் நாராயணன் பாடியது

குட்டி சிஷ்யனுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கையில், கிடதக (kitathka) என்று வாசிக்கச் சொன்னேன். அப்போது, அவனுக்கு நான்கு வயதிருக்கும். கிடகத என்று வாசித்தான்.

அப்படி வாசிக்கக்கூடாது என்றதும், கொஞ்சம் முயற்சித்துவிட்டு சற்று கொஞ்சலான குரலில், “மாஸ்டர்.. அத இப்பிடியே வெச்சுண்டுடலாமே” என்றான். மழலையின் ஆனந்தத்தில் சில நொடிகள் மகிழ்ந்தே போனாலும், ஒரு சொல் மாறாதிருப்பதன் அவசியம் பற்றி அவனுக்குப் புரியுமாறு சொன்னேன்.

குழந்தைக்குத் தோன்றும் கல்மிஷமில்லாத சுலப மார்க்கங்களை நெறிப்படுத்தாத ஆசிரியர் சமூகமும், வளர்ந்த பின்னும் இதே போதுமே.. இதையே அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் என்ற மனோநிலையும் தகுதி திறங்களை இன்னும் கீழே இழுத்துச் சென்றபடி இருக்கிறது. தயாரிப்பாளரிலிருந்து தள்ளுவண்டிக்காரர் வரை க்வாலிட்டியில் காம்ப்ரமைஸ் செய்துகொள்வதைப்பற்றி எந்த கவைலையுமின்றி இருக்கிறார்கள்.

இன்று ஜூனியர் விகடனில் ’கறுஞ்சட்டை கருணாநிதி’ என்று எழுதியிருக்கிறார்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,069 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

April 2009
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
%d bloggers like this: