மனம் போன போக்கில்

செப்டம்பர் 15 எப்ப வரும்?

Posted on: April 21, 2009

டான் பிரௌன் எனக்கு அறிமுகமான அந்த மாலை நேரம் இப்போதும் துல்லியமாக நினைவிருக்கிறது.

எங்களுடைய பழைய அலுவலகத்தின் மொட்டை மாடியில் கதவில்லாத ஒரு குட்டி ரூம். அதற்கும் மேலே ஒரு குட்டை மாடி இருக்கிறது என்கிற விஷயம் எனக்கு அதுவரை தெரியாது.

அன்றைக்கு எங்களுடைய விற்பனைப் பிரிவின் தலைவர் செம குஷியில் இருந்தார். எங்கே எந்த கஸ்டமர் மாட்டிச் சீரழிந்தானோ தெரியவில்லை. எங்களுக்கெல்லாம் ட்ரீட் தரப்போவதாகச் சத்தியம் செய்தார்.

‘ட்ரீட் எங்கே?’

‘இங்கேதான், நம்ம குட்டை மாடியில’

’குட்டை மாடியா? அது என்னது?’

அப்பாவியாகக் கேட்ட என்னைப் பார்த்து எல்லோரும் சிரித்தார்கள். அவர்களெல்லாம் ஏற்கெனவே குட்டை மாடியைத் தரிசித்து மோட்சமடைந்தவர்கள்போல. நான் ஒருவன்தான் தப்பிப் பிழைத்திருக்கிறேன்.

அன்றைக்கு, எனக்கும் குட்டை மாடி தரிசன பாக்கியம் கிடைத்தது. மொட்டை மாடிச் சுவரில் ஒரு சின்ன ஏணியை நிறுத்திவைத்து அதில் கவனமாக ஏறச் சொன்னார்கள்.

அந்த ஏணி என்னுடைய எடையைத் தாங்குமா என்கிற பயத்துடன் நடுங்கிக்கொண்டேதான் ஏறினேன். ஆறாவது படியைத் தாண்டியதும் ஏற்கெனவே மேலே ஏறியிருந்த நண்பர் கை கொடுத்துத் தூக்கிவிட்டார்.

சதுரங்கப் பலகையில் கறுப்பு, வெள்ளைக்குப் பதில் வெறும் சிவப்புக் கட்டங்களைப் பதித்தாற்போலிருந்தது அந்தக் குட்டை மாடி. எங்கு பார்த்தாலும் சிவப்பு டைல்ஸ் பதித்த வெற்றிடம்மட்டும்தான். சுற்றுச் சுவர்கூடக் கிடையாது.

இங்கேயா ட்ரீட்? நான் கொஞ்சம் அபத்திரமாகத் தடுமாறியபோது எல்லோரும் ஏறி முடித்திருந்தார்கள். நடுவே ஜமுக்காளமெல்லாம் விரித்துச் சாப்பாட்டுப் பண்டங்கள், தீர்த்தவாரியெல்லாம் தயாராகியிருந்தது.

நான் மது அருந்தியதில்லை. ஆனால் என் தோழர்கள் குடிக்கும்போது பக்கத்தில் உட்கார்ந்து அவித்த கடலை, காரமான சைட் டிஷ்களை உள்ளே தள்ளப் பிடிக்கும், அப்போது அவர்கள் உதிர்க்கிற தத்துவங்களை வடிகட்டிவிட்டு, ரகசியங்களை உள்ளே பாதுகாத்துவைக்கிற நுட்பம் நன்றாகப் பழகியிருந்தது.

அப்படி அன்றைக்கு எனக்குச் சிக்கிய ரகசியம், ‘டா வின்சி கோட்’!

ம்ஹூம், தப்பு. ‘டா வின்ச்சி’ என்பதுதான் சரியான உச்சரிப்பாம். பின்னர் ஆடியோ புத்தகத்தில் கேட்டுத் தெரிந்துகொண்டேன்.

அன்றைய ட்ரீட்டுக்கு வழி செய்த விற்பனைப் பிரிவுத் தலைவர், முந்தின நாள்தான் ‘டா வின்ச்சி கோட்’ (The Da Vinci Code – Dan Brown) புத்தகத்தைப் படித்து முடித்திருந்தார். அதன் மகிமைகளைப் புகழ்ந்து சொல்ல ஆரம்பித்தார்.

உண்மையில், அவர் கதையைச் சொல்லவே இல்லை. நாவலில் ஆங்காங்கே வந்து போகிற துணுக்குச் சம்பவங்கள், ஆச்சர்யம் அளிக்கும் சில தகவல்களைமட்டும் அள்ளி இறைத்தார்.

‘இதெல்லாம் நிஜமா?’ நான் வியப்புடன் கேட்டேன்.

‘பின்னே?’ அவருக்குக் கோபம் வந்துவிட்டது, ‘அத்தனையும் நிஜம். திருட்டுப் பயலுங்க, நமக்கு இதெல்லாம் தெரியாதபடி மறைச்சுவெச்சிருக்கானுங்க’

அவ்வளவுதான். எனக்கு ஆர்வம் தாங்கவில்லை. உடனடியாக ஏணியின் துணையின்றிக் கீழே குதித்து ஓடி ‘டா வின்ச்சி கோட்’ புத்தகத்தை வாங்கிப் படித்துவிடவேண்டும் என்று துடித்தேன்.

அன்றைய பார்ட்டி முடியப் பத்தரை, பதினொரு மணியாகிவிட்டது. அந்த ராத்திரியில் எந்தப் புத்தகக் கடையும் திறந்திருக்காது.

வேறு வழியில்லாமல், மறுநாள்வரை காத்திருந்து ‘டா வின்ச்சி’யைக் கைப்பற்றினேன். மிகுந்த ஆவலுடன் படிக்க ஆரம்பித்தேன்.

பொதுவாக, அதிகம் Hype செய்யப்படுகிற புத்தகங்கள் சராசரியாக அமைந்துவிட்டால் அந்த ஏமாற்றம் தாங்கமுடியாததாக இருக்கும். ஆனால் ‘டா வின்ச்சி கோட்’ அப்படி இல்லை. சாதாரணக் கொலைக் கதையில்கூட, புதிர்கள், வாசகனை உடன் இழுத்துப் போகும் உத்திகள் என்று அசத்தியிருந்தார் டான் பிரௌன்.

கதையில் சொல்லப்படும் பல விஷயங்கள் கற்பனையாகதான் இருக்கவேண்டும் என்று எனக்குத் தோன்றியது. ஆனால் அவற்றை நிஜம்போலத் தோன்றவைப்பதில் டான் பிரௌன் கில்லாடியாக இருந்தார். வாசகன் மனத்தில் தோன்றும் இந்தக் குழப்பமான திருப்தியுணர்வுதான் அவருடைய மிகப் பெரிய பலம் என்று தோன்றியது.

ஒரே ராத்திரி. டா வின்ச்சியைப் படித்து முடித்துவிட்டு மறுநாள் மீண்டும் புத்தகக் கடைக்கு ஓடினேன். டான் பிரௌனின் மற்ற மூன்று நாவல்களையும் வாங்கிக்கொண்டேன்.

ஒரு வாரத்துக்குள் டான் பிரௌனின் எல்லாப் புத்தகங்களையும் படித்து முடித்தாகிவிட்டது. Angels & Daemons அவருடைய மிகச் சிறந்த படைப்பாகத் தோன்றியது. அடுத்து Da Vinci Code, மற்ற இரண்டும் மிகச் சுமார், கொஞ்சம் கரிசனம் பார்க்காமல் சொல்வதென்றால், படு மோசம்!

ஆனால், அந்த மோசமான படைப்புகளைக்கூட, மளமளவென்று படித்துச் செல்லும்படியான ஒரு வேகம். அந்த அசாத்தியமான திறமையை டான் பிரௌன் பிரமாதமாகப் பயன்படுத்திக்கொண்டிருந்தார்.

அப்போது ‘டா வின்ச்சி கோட்’ நாவல் உலகமெங்கும் மிகப் பெரிய ஹிட். அதைத் தொடர்ந்து டான் பிரௌன் என்ன எழுதப்போகிறார் என்று எல்லோரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்த கோஷ்டியில் நானும் சேர்ந்துகொண்டேன்.

ஆனால் ஏனோ, டான் பிரௌன் தனது அடுத்த நாவலை எழுதவே இல்லை. இதோ வருகிறது, அதோ வருகிறது என்று கதை விட்டார்களேதவிர, அந்த நாவல் வரவில்லை.

என்ன ஆச்சு? இத்தனை விறுவிறுவென்று எழுதக்கூடிய ஒருவருக்கு, இப்படித் திடீரென்று ஒன்றும் எழுதாமல் உட்கார்ந்திருப்பது என்றால் போரடிக்காதா?

நடுவில் ‘டா வின்ச்சி கோட்’ திரைப்படமாக வெளிவந்தது. நானும் ஆவலாக டிவிடி வாங்கி வைத்தேன். ஆனால் இன்றுவரை பார்க்கவில்லை.

எனக்கு அப்படி ஒரு பழக்கம். ஹாரி பாட்டர் வரிசை நாவல்கள் எல்லாம் மூன்று முறை படித்திருக்கிறேன், படங்களும் வாங்கி வைத்திருக்கிறேன், ஆனால் அவற்றைப் பார்க்க விருப்பம் இல்லை, துளிகூட இல்லை, எனக்குப் புத்தகங்கள் போதும்.

இதைப் புரிந்துகொள்ளாமல், டான் பிரௌன் என்னைப் போட்டுப் படுத்துகிறார். அடுத்த நாவல் எழுதவே மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறார்.

ஒருவழியாக, ஆறு வருடம் கழித்து மனிதரின் மௌனம் கலைந்திருக்கிறது. தனது அடுத்த நாவல் செப்டம்பர் 15ம் தேதி வெளிவரும், அதன் பெயர் The Lost Symbol என்று அறிவித்திருக்கிறார் டான் பிரௌன்.

இதைப் படித்த விநாடிமுதல் என் இதயம் தறிகெட்டுத் துடித்துக்கொண்டிருக்கிறது. என்னதான் குப்பை த்ரில்லராக இருந்தாலும், அதைக் கீழே வைக்கவிடாமல் வாசிக்கவைக்கும் நுட்பம் அறிந்தவர், ‘The Lost Symbol’ என் எதிர்பார்ப்புக்குக் குறை வைக்காது என்றே நம்புகிறேன்.

அதுவும், அதே ‘டா வின்ச்சி கோட்’ ராபர்ட் லாங்டன் ஹீரோ, 12 மணி நேரத்தில் நடந்து முடியப்போகும் கதை, அதற்குள் ஐந்தாறு வருட ஆராய்ச்சி விஷயங்களைக் கதையோட்டம் கெடாமல் லாவகமாக நுழைக்கப்போகும் டான் பிரௌன் …

கொஞ்சம் பொறுங்கள், நினைத்தாலே வாயில் ஜொள் வழிகிறது, துடைத்துக்கொண்டு எழுதுகிறேன்.

கடவுளே! செப்டம்பர் 15க்கு இன்னும் ஐந்து மாதம் இருக்கிறதாமே, அதுவரை நான் என்ன செய்வேன்?

***

என். சொக்கன் …

21 04 2009

15 Responses to "செப்டம்பர் 15 எப்ப வரும்?"

ha ha.. 🙂
பொறுத்திருந்து பார்க்கலாம்.. குறைவைக்க மாட்டார் என்றே நம்புகிறேன்..
ஹாரி பாட்டரை திரையில் பார்த்தபோது ஏமாற்றமே மிச்சம்..
அதற்குபின், புத்தகவடிவில் வந்ததை திரையில் தேடும் அபத்தத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன்..
இது வரை கண்டதிலேயே, இது மாதிரி ஏமாற்றங்கள் இல்லாமல், இன்னும் சொல்லப்போனால், ஆச்சரியப்படவைத்தது் LOTR தான்.

இதெல்லாம் டூஊஊஊ மச்சு என்று சொல்லி, வாய்ப்புக்கு நன்றி கூறி அமர்கிறேன்.

Same blood 🙂

Really nice to read your blog. keep writing. real life happenings I can visualize when I read your writings.

anbudan, Balu K.

Davice Code – Tamil Translation published?…If yes could you give more details…Since I want to read that in Tamil…

//மற்ற இரண்டும் மிகச் சுமார், கொஞ்சம் கரிசனம் பார்க்காமல் சொல்வதென்றால், படு மோசம்!//

அதில் டிசெப்ஷன் பாய்ண்டாவது சுமார்
டிஜிட்டல் போர்ட்ரெஸ் மோசம் தான் 🙂 🙂

//. Angels & Daemons அவருடைய மிகச் சிறந்த படைப்பாகத் தோன்றியது. அடுத்து Da Vinci Code, //
வழிமொழிகிறேன்

ஏஞ்சல்ஸ் அண்ட் டெமன்ஸ் திரைப்படம் அடுத்த மாதம் வெளிவருவதாக சத்யமில் பார்த்தேன்

செப்டம்பர் 15 எப்ப வரும்னா செப்டம்பர் 14க்கு அப்புறமா வரும்!

டாவின்சி கோட் இன்னும் படிக்கவில்லை! படம் பார்க்க பலமுறை உட்கார்ந்து இன்னும் ஒரு முறைகூட முழுமையாக பார்க்கவில்லை (இத்தனைக்கும் டிவிடி தமிழ் டப்பிங்குடன் இருக்கிறது).

லலித் மோடி கோட் முடிந்ததும் மே மாதம் 2009ல் படித்துவிடுகிறேன். ஒரு நாள்தானே தேவை!

beemorgan, பினாத்தல் சுரேஷ், Kishore, Madalkaran (Balu K.), Tamil and English, புருனோ, டன்டனக்கா ப்ரௌன், R Sathyamurthy,

நன்றி!

//இது மாதிரி ஏமாற்றங்கள் இல்லாமல், இன்னும் சொல்லப்போனால், ஆச்சரியப்படவைத்தது் LOTR//

அட, இதுவரை இரண்டு பேர் அழுத்தமாகச் சிபாரிசு செய்துவிட்டீர்கள், பார்க்கலாமா என்று யோசிக்கிறேன் 🙂

//இதெல்லாம் டூஊஊஊ மச்சு என்று சொல்லி, வாய்ப்புக்கு நன்றி கூறி அமர்கிறேன்//

இது எதிர்க்கட்சிகள் சதி. இதற்கெல்லாம் எங்கள் டான் பிரௌன் முன்னேற்றக் கழகம் அடிபணியாது என்பதைச் சொல்லிக்கொண்டு …

//Tamil Translation published?//

எனக்குத் தெரிந்தவரையில் இல்லை 😦

//டிஜிட்டல் போர்ட்ரெஸ் மோசம் தான்//

ஆமென்!

//செப்டம்பர் 15 எப்ப வரும்னா செப்டம்பர் 14க்கு அப்புறமா வரும்!//

ஆஹா, என்னே ஒரு கண்டுபிடிப்பு, மெச்சினேன்!

//இத்தனைக்கும் டிவிடி தமிழ் டப்பிங்குடன் இருக்கிறது//

அடடே, தமிழ் டப்பிங்கா? … எனக்கு ஒரு பிரதி கூரியரில் அனுப்பமுடியுமா? 😉

Naan movie thaan paarthen, sub titles illammal oru mannum puriayalai.Leaveikku India varum pothu nithanama pakkanum.

புருனோ, Kesava Pillai,

நன்றி!

again gaandudan 🙂 – please treat this only as ramblings of a soul lost in the race of life(well winners will say,life is not a race),

Mr.Nagalingam Chokkanathan avargal, vittaal dan brown – anti-vatican novelsai kooda translation book veliyiduvaar.

vaanga q nikkum. hmm, yaaraalum,yaaravaim,vaanga vekka mudiyaadhu..

aanaalum sir, virpanai pirivu thalaivaroda equall-aa pesureengannaa, neenga evlo techie-yaa irukkanum?

hmmm…Mr.sokkanathanin valarppu oru mukkiya kaaranam

test

venkat,

நன்றி.

//vittaal dan brown – anti-vatican novelsai kooda translation book veliyiduvaar//

எல்லா புக்கும் ஏதாவது ஒன்றுக்கு எதிரானதுதான். அப்படிப் பார்த்தால் யாரும் எதையும் வெளியிடமுடியாது.

பை த வே, நான் எந்தப் புத்தகமும் வெளியிடுவதில்லை. பதிப்பகங்கள், பத்திரிகைகள் கேட்கிற விஷயங்களை எழுதித் தருவதுடன் சரி.

//virpanai pirivu thalaivaroda equall-aa pesureengannaa, neenga evlo techie-yaa irukkanum?//

விற்பனைப் பிரிவுத் தலைவர் என்றதும் நீங்க ஏதோ பெரிசா கற்பனை செஞ்சுக்கவேணாம். அப்ப எங்க கம்பெனியில வேலை பார்த்ததே மொத்தம் எட்டு பேர்தான். அதில ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துப் பேசாமயா ஓடமுடியும்?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 621,011 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

April 2009
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
%d bloggers like this: