மனம் போன போக்கில்

வோட் போட்டாச்சு

Posted on: April 23, 2009

தினமும் அந்தப் பள்ளியின் வழியேதான் நடந்துபோகிறேன். ஆனால் ஒருநாளும் அதனுள் எட்டிப் பார்க்கவேண்டும் என்றுகூடத் தோன்றியது கிடையாது.

அது ஒரு சின்னஞ்சிறிய அரசுப் பள்ளி. ஆத்தூரில் (சேலம் மாவட்டம்) நான் படித்த தொடக்கப் பள்ளியைவிடச் சற்றே பெரியது. கன்னடம் மற்றும் ஆங்கில வழியில் பாடங்கள் சொல்லித்தருவதாக அதன் பெயர்ப்பலகை அறிவிக்கிறது.

ஆனால், நானோ, என்னுடைய உறவினர்கள், கூட வேலை செய்கிறவர்கள் யாருமோ இந்தப் பள்ளியில் எங்கள் பிள்ளைகளைச் சேர்ப்பதுபற்றிக் கனவிலும் நினைக்கமாட்டோம். குழந்தைகளை எங்கே படிக்கவைக்கிறோம் என்பது, கல்வி சம்பந்தப்படாத ஓர் அந்தஸ்து விஷயமாகிவிட்ட காலமில்லையா இது?

நேற்றுவரை அந்தப் பள்ளியைச் சீண்டிப் பார்க்காத நாங்கள்கூட, இன்றைக்கு அதனுள் நுழையவேண்டியிருந்தது. தேர்தல்.

பள்ளிக்குச் சில மீட்டர்கள் முன்பாகவே வெள்ளைக் கோடு கிழித்துப் பாதுகாப்புப் போட்டிருந்தார்கள். அதற்கு வெளியே, தலா ஒரு மர மேஜை, மூன்று பிளாஸ்டிக் நாற்காலிகள் சகிதம் கட்சிகளின் தாற்காலிக அலுவலகங்கள்.

அநேகமாக எல்லாக் கட்சித் தொண்டர்களும் டிஷர்ட் அணிந்து தொப்பி போட்டிருந்தார்கள். கழுத்தில் தொங்கும் அடையாள வில்லை, கையில் செல்ஃபோன், மர மேஜைக்குக் கீழே பிளாஸ்டிக் டப்பாக்களில் ’அடையாறு ஆனந்த பவன்’ டிபன்.

அதெப்படி ஒரு கட்சி பாக்கியில்லாமல் எல்லோரும் அதே கடையில் டிபன் வாங்கியிருப்பார்கள்? ஒருவேளை இலவசமாக விநியோகித்திருப்பார்களோ? இந்தத் தேர்தலையே ‘அடையாறு ஆனந்த பவன்’தான் ஸ்பான்ஸர் செய்கிறது எனும்படியாக ஒரு பிரம்மை.

இதுகூட நல்ல யோசனைதான். பாராளுமன்றத் தேர்தலுக்குப் பல கோடி ரூபாய் செலவாகிறதாகச் சொல்கிறார்கள். ஒவ்வொரு பூத்துக்கு வெளியிலும் விளம்பர பேனர்கள் கட்டலாம், உள்ளே மூலைக்கு மூலை ஃப்ளெக்ஸ் வைத்து ‘குடிக்கத் தவறாதீர்கள் கோககோலா’ என்று அறிவிக்கலாம், வாக்குப் பதிவு இயந்திரத்தில் மிச்சமுள்ள காலிப் பொத்தான்களில் ஏர்டெல், வோடஃபோன் லோகோக்களை ஸ்டிக்கர் ஒட்டி அதற்கேற்பக் காசு வசூலிக்கலாம்,  தேர்தல் பணியில் உள்ள அரசு ஊழியர்களை விளம்பர வாசகங்கள் அடங்கிய டிஷர்ட்கள் அணியச் சொல்லலாம். இப்படி ஸ்பான்ஸர்களிடம் காசு வசூலித்துத் தேர்தல் நடத்த இந்திய அரசியல் சட்டத்தில் இடம் உண்டா?

இல்லாவிட்டால் என்ன போச்சு? லலித் மோடியைக் கூப்பிட்டு இதற்கு ஒரு பிஸினஸ் ப்ளான் தயாரிக்கச் சொன்னால் எல்லாம் கச்சிதமாகச் செய்து முடித்துவிடுவார்!

இதில் இன்னொரு வசதி, தேர்தல் முடிந்தபிறகு ஓட்டு எண்ணுவதற்கு லலித் மோடி அனுமதிக்கமாட்டார். வாக்குப் பதிவு தொடங்கியவுடன், விநாடிக்கு விநாடி எந்தத் தொகுதியில் யாருக்கு எவ்வளவு ஓட்டு எண்ணிக்கை என்று தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு நடத்த அனுமதித்து அதையும் காசு பண்ணிவிடுவார்.

அதுமட்டுமா? தேர்தலை ஸ்பான்ஸர் செய்கிற நிறுவனங்கள், ‘தயவுசெய்து ஓட்டுப் போடச் செல்லுங்கள்’ என்று அவர்கள் செலவில் பத்திரிகை, தொலைக்காட்சி, எஃபெம் வானொலிகளில் விளம்பரம் செய்வார்கள், இதன்மூலம் நம் ஊரில் வாக்கு சதவிகிதம் அதிகரிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

ஒரே பிரச்னை, இப்படி எல்லாவற்றுக்கும் ஸ்பான்ஸரர்களிடம் காசு வசூலித்து ருசி பழகிவிட்டால், அப்புறம் ஐந்து வருடத்துக்கு ஒரு தேர்தல் என்பது போதாது. வருடாவருடம் தேர்தல் நடத்தவேண்டியிருக்கும். அதுதான் பெரிய பேஜார்.

போகட்டும். அதெல்லாம் அடுத்த தேர்தலில் பார்த்துக்கொள்ளலாம். இப்போது, இன்றைக்கு நான் பார்த்த பள்ளியைப்பற்றிச் சொல்கிறேன்.

மூன்றே அறைகள், அவற்றில் ஒன்று தலைமை ஆசிரியை அலுவலகம். மற்ற இரண்டிலும் குட்டையான பெஞ்ச்கள் தெரிந்தன, மூலையில் ஒரே ஒரு மேஜை.

பள்ளியின் எதிரே ஏரி என்ற பெயரில் ஒரு பிரம்மாண்டச் சாக்கடை. அதனால் எங்கே பார்த்தாலும் கொசுக்கள், நாற்றம்.

வோட்டுப் போட வந்த மக்கள் இதையெல்லாம் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. இரண்டு வகுப்பறைகளுக்கு வெளியிலும் சுமாரான நீளத்தில் க்யூக்கள் நின்றிருந்தன.

பெரும்பாலும் (70%) ஆண்கள். கிட்டத்தட்ட எல்லா வயதுக்காரர்களையும் பார்க்கமுடிந்தது. முக்கால்வாசிப் பேர் அப்படியே தூங்கி எழுந்தாற்போல் கிளம்பி வந்திருந்தார்கள். மிகச் சிலர் திருவிழாவுக்குச் செல்வதுபோல் நன்றாக அலங்கரித்துக்கொண்டு முகம் முழுக்கச் சிரிப்புடன் தென்பட்டார்கள்.

சிலர் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வந்திருந்தார்கள். அவர்களின் பிள்ளைகள் தாற்காலிகக் கூட்டணி சேர்ந்து ஜாலியாகச் சிரித்து விளையாடிக்கொண்டிருந்தன.

’நூலகங்களுக்குச் செல்கிறபோது, உங்கள் குழந்தைகளைக் கூடவே அழைத்துச் செல்லுங்கள், அப்போதுதான் அவர்களுக்குப் படிக்கும் ஆர்வம் வரும்’ என்று சுஜாதா ஒருமுறை எழுதிய ஞாபகம். அதுபோல, வோட்டுப் போடச் செல்கையில் குழந்தைகளை அழைத்துவந்தால், அவர்கள் வளர்ந்து பெரிதானபிறகு ஜனநாயகத்தில் நம்பிக்கையோடு இருப்பார்களா?

அங்கே வந்திருந்த யாரும், வரிசையில் காத்திருந்து ஓட்டுப் போடுவதற்காக சலித்துக்கொள்ளவில்லை. அவர்கள் சலித்துக்கொள்கிற அளவுக்கு எந்த க்யூவும் நீளமாக இல்லை.

வரிசை மெதுவாக நகர்ந்துகொண்டிருக்க, நான் சுவரொட்டிக் குறிப்புகளைப் படிக்க முயன்றேன். முடியவில்லை, அத்தனையும் கன்னடம், மருந்துக்குக்கூட ஆங்கிலமோ, ஹிந்தியோ இல்லை.

பெருமூச்சுடன் இடதுபக்கம் திரும்பியபோது, அங்கே ஓர் ஆங்கிலக் குறிப்பு தெரிந்தது, ‘வாக்குச் சீட்டை நன்றாக மடித்துப் பெட்டியில் போடுங்கள்’

வாக்குச் சீட்டா? இயந்திரம் என்ன ஆச்சு? இதுகுறித்து யாரை விசாரிப்பது என்று தெரியவில்லை.

இதற்குள் எனக்குமுன்னே இருந்தவர்கள் அனைவரும் உள்ளே சென்றிருந்தார்கள். வகுப்பறை வாசலில் இருந்த காவலர் என்னைக் கொஞ்சம் காத்திருக்கச் சொன்னார், ‘என்ன சார்? வோட்டர் ஐடி கார்ட் இல்லையா?’

‘இன்னும் வரலைங்க’ என்றேன், ‘இப்போ பாஸ்போர்ட் வெச்சிருக்கேன், போதும்ல?’

‘நோ ப்ராப்ளம்’ என்றவர் என்னை உள்ளே அனுமதித்தார்.

வெளியே ‘வாக்குச் சீட்டு’ என்று அறிவித்திருந்தாலும், உள்ளே இருந்தது இயந்திரம்தான்.

வோட்டுப் போட்டுவிட்டு வந்தபிறகு, அங்கிருந்த அதிகாரியிடம், ‘வெளியே இருக்கிற அறிவிப்பு ரொம்ப misleadingஆ இருக்கு, அதை எடுத்துடுங்க’ என்றேன்.

‘பார்க்கலாம்’ என்றார் அவர், ‘நெக்ஸ்ட்’

அவ்வளவுதான். என்னுடைய ஜனநாயகக் கடமை முடிந்தது. சுற்றிலும் பராக்குப் பார்த்துக்கொண்டு வெளியே வந்தேன்.

இதுவரை நான் நின்றிருந்த க்யூவில் இப்போது என்னுடைய மேலதிகாரி நின்றிருந்தார். அவருக்குப் பின்னால் எங்களுடைய டாக்டர், இன்னும் நான்கு பேர் தள்ளி, எங்கள் அடுக்ககத்தின் இரவுக் காவலர்.

ஆஹா, இதுவல்லவோ ஜனநாயகம்!

***

என். சொக்கன் …

23 04 2009

13 Responses to "வோட் போட்டாச்சு"

Dear Chokkan,

Good that you and your known people voted.

the Bangalore voting % seems to be (initial estimates) 38-to-42%.

With this low turn out none of the Bangaloreans (who did not vote) have any right to complain about anything in Bangalore or Karnataka or India.

Even if some are complaining that “my name is not in rolls” etc the mistake is theirs. Govt has been advertising about EPIC card distribution and addition of names in electoral roll for past 6 months. If they did not go and get their name registered and verify roll (http://ceokarnataka.kar.nic.in/) it is purely their lethargy and lackesaidal attitude..

If only around 40% turnout has happened – then what about the remaining people whose name is there in rolls ? why they did not turn up ?

The main reason for this kind of attitude in karnataka is due to lack of good leader with mass following in any party across the complete state. None of current leaders in Congress or BJP or JDS have all karnataka presence/command. Due to this people are apathetic to these politicians as they do not do anything for the state – unlike Tamilnadu where they demand and get it done by center or like Andhra where – whether it is Naidu or YSR both are capable of doing things for state independent of central high command largesse.

Hope the results on 16th lead to a stable govt in center.

Mohan

Mohan,

நன்றி!

//the Bangalore voting % seems to be (initial estimates) 38-to-42%//

50 சதவிகிதம் என்று சொல்கிறார்கள். அதுகூட ரொம்பக் குறைவுதான். வெட்கக்கேடான விஷயம் 😦

Dear Chokkan, ungal elthukkal methu enaku romba piriyam karanam ennod thanambikai romba nalla irukum athai melum valupaduthinathu unga eluthukkal… esp ambani book and few writings of yours in AV

If you have time please have a look at my posts 🙂

Thanks
Suresh

சுரேஷ்,

உங்கள் கருத்துகளுக்கு நன்றி 🙂

உங்கள் பதிவுகளைப் பார்த்துவிட்டு எழுதுகிறேன்.

ஐபிஎல் ஒப்பீடு அபாரம் 🙂 😀

//அதுபோல, வோட்டுப் போடச் செல்கையில் குழந்தைகளை அழைத்துவந்தால், அவர்கள் வளர்ந்து பெரிதானபிறகு ஜனநாயகத்தில் நம்பிக்கையோடு இருப்பார்களா?

ஹாஹா!! நல்ல யோசனை!

Single transferable vote வந்தால் நம் நாட்டில் வொட்டு வீணாவதை தடுக்க முடியும். ஒவ்வொருவருக்கும் தங்கள் ஓட்டு மதிக்கப்படும் எனத் தெரிந்தால் தான் ஓட்டுப் பதிவோரின் எண்ணிக்கையும் அதிகமாக வாய்ப்புள்ளது.

நீங்கள் கூறும் சாத்தியக்கூறுகள் நன்றாகவே உள்ளன

அரசு பேரூந்துகளில் விளம்பரம் செய்ய அனுமதி வந்து விட்டது

அரசு தொடர்வண்டிகளில் விளம்பரம் வந்தாகிவிட்டது

அரசு தபால் வண்டிகளில் விளம்பரம் வருகிறது (LICக்கு – PLI சவலைக்குழந்தையா ??)

ஏன் தேர்தலிலும் விளம்பரங்கள் வரக்கூடாது

இப்பொழுது கூட (வேட்பாளர்களின்) தேர்தல் செலவை தனியார் நிறுவனங்கள் மறைமுகமாக பொறுப்பேற்கிறார்கள். அது போல் நேரடியாக பொறுப்பேற்கலாமே !!!

வேட்பாளரின் வாகனத்தை (எரிபொருள், ஓட்டுனர்) ஒரு நிறுவனம் அளித்து விட்டு வாகனத்தில் அவர்களின் விளம்பரத்தை போடலாமே

நாளை ஏதோ ஒரு ?? சட்டவிரோத பலனை எதிர்பார்த்து வேட்பாளருக்கு (தேர்தல் செலவிற்) பணம் அளிப்பதை விட இது ஆயிரம் மடங்கு மேல் !!

தேமேன்னு இருக்கும் லலித் மோடிய இழுத்ததால் சொல்லுகிறேன், எப்படி நீங்க ஸ்ட்ராடஜி ப்ரேக் விடாமல் இருக்கலாம்?

அது இருந்தால்தானே கள்ள ஓட்டு பற்றி யோசிக்க முடியும்?

ஆனாலும் இந்த உபாயம் அபாரம். அடுத்த தேர்தலை ஸ்பான்ஸர் செய்ய (ரா.ரா.வுக்கும் முந்தைய) “சத்யம்” ரெடி

Dear Chokkan,

Very good blog. I,ve voted only once in my 50 years.I’ll be out of state or country and didn’t try the postal vote.

SnapJudge, ரா.கிரிதரன், புருனோ, R Sathyamurthy, Kesava Pillai,

நன்றி 🙂

//நாளை ஏதோ ஒரு ?? சட்டவிரோத பலனை எதிர்பார்த்து வேட்பாளருக்கு (தேர்தல் செலவிற்) பணம் அளிப்பதை விட இது ஆயிரம் மடங்கு மேல் !!//

லட்சம் மடங்கு உண்மை 🙂

//எப்படி நீங்க ஸ்ட்ராடஜி ப்ரேக் விடாமல் இருக்கலாம்? அது இருந்தால்தானே கள்ள ஓட்டு பற்றி யோசிக்க முடியும்?//

தேர்தல் நாள்க்கு நடுவிலயா? நாடு உருப்பட்றும்யா!

//didn’t try the postal vote//

Is it available for everyone? Or only government employees?

Swing Vote என்ற படம் பார்த்தீர்களா?

கால்கரி சிவா,

நன்றி!

ம்ஹூம், அந்தப் படம் பார்த்தது இல்லை 😦

[…] the heat of this all, I read this post of N Chokkan, a Tamil writer, on his voting experience.  In his post he was wondering why the big […]

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 621,011 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

April 2009
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
%d bloggers like this: