அந்தப் பெண்மணி தங்க நிறச் சேலை உடுத்தியிருந்தார். ‘குமரேசன் டெக்ஸ்டைல்ஸ்’ என்று கொட்டை எழுத்தில் பொறித்த வெள்ளை நிறப் பையை அழுந்தப் பிடித்திருந்தார். அவருடைய முந்தானையைப் பிடித்துக்கொண்டு இரண்டு பெண் குழந்தைகள், ஒரு பையன்.
அவர்கள் ரயிலில் இருந்து இறங்கியபோது நான் கவனிக்கவில்லை. ரயில் புறப்பட்டுச் சென்றபின்னர், ‘அப்பா எங்கடா?’ என்று அந்தப் பெண்மணி சத்தமாக அலறியபோதுதான் திரும்பிப் பார்த்தேன்.
‘தெர்லம்மா’ என்றான் மகன், ‘ரயில்லர்ந்து எறங்காம அப்படியே போய்ட்டார்போல’
‘அய்யய்யோ’ என்று தலையில் கை வைத்துக்கொண்டு அப்படியே மடிந்து உட்கார்ந்தார் அந்தப் பெண். குழந்தைகள் புரியாமல் அவரைச் சுற்றிவந்தன.
சில நிமிடங்களுக்குப்பிறகு, அவர் சுதாரித்துக்கொண்டார். நாக்கை லேசாகக் கடித்துக்கொண்டபடி ’குமரேசன் டெக்ஸ்டைல்ஸ்’ பையைப் புரட்டிப் போட்டுத் தேடி அந்த மொபைல் ஃபோனைக் கையில் எடுத்தார்.
அதுவரை, அவரைப் பார்த்துக்கொண்டிருந்த எங்களுக்கும் கொஞ்சம் கவலையாகதான் இருந்தது. ஸ்டேஷன் மாறி இறங்கிவிட்ட குடும்பம், அதுவும் பார்ப்பதற்குப் பக்கா கிராமத்து மனிதர்களாகத் தெரிகிறார்கள், கன்னடம் தெரியுமோ, தெரியாதோ, இத்தனை பெரிய பெங்களூரில் எப்படி ஒருவரை ஒருவர் தேடிப் பிடித்துக்கொள்ளப்போகிறார்கள்?
ஆனால், இப்போது அந்தப் பெண்மணியின் கையில் மொபைல் ஃபோன் உள்ளது என்று தெரிந்ததும், பிரச்னையின் தீவிரம் சடாரென்று இறங்கிவிட்டாற்போல் தோன்றியது. நாங்களெல்லாம் நிம்மதிப் பெருமூச்சுடன் ஆசுவாசமடைந்தோம்.
மனைவிக்கு செல்ஃபோன் இருக்கிறது என்றால், அநேகமாக அவருடைய கணவரிடமும் ஒரு செல்ஃபோன் இருக்கவேண்டும், அழைத்து விவரத்தைச் சொல்லிவிட்டால் அவர் வந்து இவர்களை அழைத்துச் சென்றுவிடுவார். சுபம்.
ஆனால், நாங்கள் கொஞ்சமும் எதிர்பார்க்காத திருப்பமாக, அவருடைய செல்ஃபோன் அணைந்துபோயிருந்தது.
’என்னாச்சுடா?’ என்று மகனை விசாரித்தார் அவர், ‘எந்த பட்டனை அமுக்கினாலும் ஒண்ணும் வரமாட்டேங்குது’
அந்த மகனுக்குச் சுமார் பத்து வயது இருக்கலாம், செல்ஃபோனை மேலும் கீழும் புரட்டிப் பார்த்துவிட்டு அதன் ‘On / Off’ பொத்தானை நன்கு அழுத்தினான். ம்ஹூம், பலன் இல்லை.
’பேட்டரி போய்டிச்சும்மா’ என்றான், ‘சார்ஜர் வெச்சிருக்கியா?’
‘தோ இருக்கே’, மறுபடி குமரேசன் டெக்ஸ்டைல்ஸ் பை புரட்டிப்போடப்பட்டது. கடைசியில் நீண்ட வால் கொண்ட எலிக்குட்டியாக அந்த Nokia Charger வெளியே வந்தது.
சார்ஜர் சரி, மின்சாரம்?
இப்போதெல்லாம் பெரிய ரயில் நிலையங்களில் மொபைல் ஃபோன்களைச் சார்ஜ் செய்வதற்காகவே விசேஷ வசதிகளைச் செய்திருக்கிறார்கள். ஆனால் நாங்கள் உட்கார்ந்திருந்த எளிய ரயில் நிலையத்தில் (“Bangalore East”) அந்த வசதியெல்லாம் கிடையாது.
உயிரில்லாத செல்ஃபோன், சார்ஜர் சகிதம் அந்தக் குடும்பம் ஒட்டுமொத்த பிளாட்ஃபாரத்தையும் அலசியது. அவர்கள் பயன்படுத்தும்படியான மின்சார இணைப்புகள் எவையும் கிடைக்கவில்லை.
இப்போது அந்தப் பெண்மணி லேசாக விசும்பத் தொடங்கியிருந்தார், ‘இதிலதானேடா எல்லா நம்பரும் இருக்கு? பேட்டரி சார்ஜ் பண்ணாம பார்க்கமுடியாதா?’
‘முடியாதும்மா’ என்றான் மகன், ‘அப்பா நம்பர் எங்கயாச்சும் பேப்பர்ல எழுதி வெச்சிருக்கியா?’
‘இல்லியே, மூணாம் நம்பரை அழுத்தினா அவருக்குப் போவும், இந்த ஃபோன்ல அழுத்திப் பார்க்கலாமா?’ என்று STD கூண்டினுள் உட்கார்ந்திருந்த தொலைபேசியைக் காட்டினார் அவர்.
‘ம்மா, சும்மாயிரும்மா’ மகன் அவரை அதட்டினான், ‘நம்பர் இல்லாம யாருக்கும் ஃபோன் செய்யமுடியாது’
‘உங்கப்பன் நம்பர்தான் இதுக்குள்ள மாட்டிகிட்டிருக்கே’ என்று செல்ஃபோனை வீசி எறிவதுபோல் பாவனை செய்தார் அவர், ‘இப்ப என்ன செய்யறது?’
இதற்குள், சுற்றியிருந்த சிலர் அவர்களைக் கவனிக்க ஆரம்பித்திருந்தார்கள், ‘என்னாச்சும்மா?’ என்று அதட்டல் தொனியில் விசாரித்தார் ஒருவர்.
அதற்காகவே காத்திருந்ததுபோல் அந்தப் பெண்மணி தனது புலம்பலைத் தொடங்கிவிட்டார். தன்னுடைய கிராமத்தின் பெயர், அங்கே தாங்கள் செய்துவருகிற விவசாயம்பற்றிய விவரங்கள், பெங்களூர் வந்த காரணம், இங்கே மெயின் ஸ்டேஷன் வருவதற்குள் இவர்கள்மட்டும் தவறிப்போய் இறங்கிவிட்ட கதை, இப்போது கணவரின் செல்ஃபோனைத் தொடர்புகொள்ளமுடியாமல் தவிக்கும் நிலைமை என்று சகலத்தையும் கொட்டிவிட்டார்.
மாலை நேர ரயில் நிலையங்களில் அரட்டைப் பிரியர்கள் அதிகம். அவர்கள் இந்தக் கதையைக் கேட்டு ‘அடடா’ என்று உச்சுக்கொட்டினார்கள்.
‘ஏம்மா, நம்பர்ல்லாம் ஒரு பேப்பர்ல எழுதி வெச்சுக்கறதில்லையா?’ என்றார் ஒருவர்.
‘அதான் ஃபோன்ல இருக்குங்களே’
‘இப்படி ஃபோன் பேட்டரி டெட் ஆயிடுச்சுன்னா, சமாளிக்கவேண்டாமா?’ என்றார் அவர், ‘விவரம் தெரியாம இந்தமாதிரி பெரிய ஊருக்கெல்லாம் வரக்கூடாதும்மா’
’ஆமாங்க’ என்று பரிதாபமாகத் தலையை ஆட்டிய அந்தப் பெண், மீண்டும் அழத் தொடங்கினார், ‘இவங்கப்பன் இப்போ எங்கே இருக்காரோ, என்ன பண்றாரோ தெரியலையே’
’நீ ஒண்ணும் கவலைப்படாதேம்மா, இப்ப அடுத்த ரயில் வரும், நேரா ஏறிகிட்டு மெயின் ஸ்டேஷன் போயிடு, அங்கே உன் புருஷனைக் கண்டிப்பாக் கண்டுபிடிச்சுடலாம்’
அவர் இப்படிச் சொன்னதும், எனக்குச் சிரிப்புதான் வந்தது. இந்த நேரத்தில் பெங்களூர் பிரதான ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான ஜனக் கூட்டம் இருக்கும். அதற்கு நடுவே இந்தப் பெண் தன்னுடைய கணவரை எப்படிக் கண்டறியமுடியும்?
தவிர, இவர் அங்கே போகும்போது, அவர் கிளம்பி இங்கே வந்துவிட்டால்? பிரச்னை இன்னும் பெரிதாகிவிடுமே.
நிலைமையின் தீவிரம் இப்போது அந்தப் பெண்மணிக்குப் புரிந்துவிட்டது. மூளை உறைந்துபோனவராகப் பெரும் குரலெடுத்து அழ ஆரம்பித்துவிட்டார்.
இனிமேல் அவரால் எந்தப் புதிய யோசனையையும் சிந்திக்கமுடியாது. இது புரிந்ததும், கூட்டம் சுறுசுறுப்பானது, அவரவர் தங்களுக்குத் தோன்றிய உத்திகளைச் சொல்ல ஆரம்பித்தார்கள்.
’அந்த செல்ஃபோன், சார்ஜரை’ என்கிட்ட கொடுங்க’ என்றார் ஒருவர், ‘ஏ தம்பி, நீ என்கூட வாப்பா’ என்று அவனையும் இழுத்துக்கொண்டு தூரத்திலிருந்த ரயில் அதிகாரி அலுவலகத்தை நோக்கி நடந்தார்.
ஐந்து நிமிடத்தில் அவர்கள் திரும்பி வந்தார்கள். அந்த அலுவலகத்திலும் செல்ஃபோனை சார்ஜ் செய்கிற வசதி இல்லையாம்.
‘அது என்ன கம்பெனி செல்ஃபோன்ங்க?’, கூட்டத்தில் யாரோ விசாரித்தார்கள்.
‘நோக்கியா’
’என்னோட ஃபோனும் ஃநோகியாதான்’ என்றபடி அவர் தனது செல்பேசியை எடுத்தார், ‘அப்படியே பேட்டரியை மாத்திப் போட்டா வேலை செய்யும்ல?’
நான் குறுக்கிட்டேன், ‘நோகியாவிலேயே வெவ்வேற ஃபோனுக்கு வெவ்வேறவிதமான பேட்டரி உண்டுங்க, மாத்திப் போட்டு ரிஸ்க் எடுக்காதீங்க’
அவர் என் பேச்சை நம்பவில்லை, ‘எல்லா நோகியா பேட்டரியும் ஒண்ணுதான்’ என்றபடி இரண்டு ஃபோன்களையும் துகிலுரித்தார், பேட்டரிகளை மாற்றி இணைக்க முயன்றார்.
ம்ஹூம், பொருந்தவில்லை. அவர் எரிச்சலுடன் தன்னுடைய ஃபோனைப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டார்.
அங்கிருந்த வேறு சிலருடைய பேட்டரிகளையும் முயன்று பார்த்தோம். சரிப்படவில்லை.
அடுத்தபடியாக, ‘சிம் கார்டை மாத்திப் பார்த்தா என்ன?’ என்றார் ஒருவர்.
‘இந்தம்மா சிம் கார்ட்லதான் எல்லா நம்பரையும் ஸ்டோர் பண்ணியிருப்பாங்கன்னு என்ன நிச்சயம்?’ இன்னொருவர் மடக்கினார், ‘ஒருவேளை ஃபோன்ல போட்டிருந்தாங்கன்னா?’
‘இருக்கட்டும்ங்க, ஒரு முயற்சிதானே? செஞ்சு பார்த்தா தப்பில்லையே’
இந்த யோசனை எங்கள் எல்லோராலும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்தப் பெண்ணின் செல்ஃபோனில் இருந்து சிம் கார்டை உருவி, இன்னொரு ஃபோனிற்கு மாற்றினார்கள்.
ஆனால், இதைச் செய்தவர் ஏதோ ஞாபகத்தில் சிம் கார்டைத் திசை மாற்றிப் போட்டுவிட்டார். அது உள்ளே சிக்கிக்கொண்டுவிட்டது.
’அச்சச்சோ’ என்று பதறியவர் அதைப் பின்னோக்கி இழுத்தார், வரவில்லை.
’விஷயம் தெரியாம எதையும் செய்யக்கூடாது’ யாரோ நக்கலாகப் பேசினார்கள்.
‘ஏன், நீதான் வந்து செய்யறது?’ இவர் கோபமாகக் கத்தினார்.
‘சரி சரி, ஆகவேண்டிய வேலையைப் பாருங்கப்பா, இந்தம்மாவேற ஓலைப்பாய்ல தூறல் போட்டமாதிரி ஓயாம அழுதுகிட்டிருக்கு’
மாட்டிக்கொண்ட சிம் கார்டை இன்னொருவர் கட்டை விரல் கொண்டு அழுத்தி வெளியில் எடுக்க முயன்றார். அது இன்னும் வலுவாகச் சிக்கிக்கொண்டுவிட்டது. ‘ச்சே’ என்றபடி மீண்டும் அழுத்த, பட்டென்று இரண்டாக உடைந்து ஒரு துண்டுமட்டும் அவர் கையில் வந்துவிட்டது.
சிம் கார்ட் உடைந்த விஷயம் அந்தப் பெண்ணுக்கு இன்னும் தெரிந்திருக்கவில்லை. அவர் முகத்தை மூடிக்கொண்டு அழுதபடி இருந்தார்.
கூட்டத்தினர் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம், உடைந்து போன அந்த சிம் கார்டை இனி பயன்படுத்தமுடியுமா? எங்களில் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.
சிம் கார்ட் உடைந்த விவரம் தெரியாதபடி அந்தப் பெண்ணின் செல்ஃபோனைப் பொட்டலம் கட்டினார் ஒருவர். சார்ஜரையும் ஃபோனையும் அவர் கையிலேயே ஒப்படைத்துவிட்டு நடக்க ஆரம்பித்தார்.
அதன்பிறகு, கூட்டத்தில் யாரும் ஆலோசனை சொல்லவில்லை, புதிய விஷயங்களை முயன்று பார்க்கவில்லை, ‘பேப்பர்ல நம்பர் எழுதி வெச்சுக்காம இந்தமாதிரி கிளம்பி வரக்கூடாதும்மா’ என்கிற விமர்சனம்மட்டும் திரும்பத் திரும்ப அந்தப் பெண்ணின்மீது ஏற்றப்பட்டது.
இப்போது, அந்தப் பெண் தன் கணவரைத் தொடர்புகொள்ள எந்தவிதமான வழியும் இல்லை. அவராகத் திரும்பி வந்து இவரை அழைத்துச் சென்றால்தான் உண்டு.
பெங்களூர் வரும் பேஸஞ்சர் ரயில்கள், இப்படி ஏழெட்டு சிறிய ரயில் நிலையங்களில் நிற்கக்கூடும். அவற்றில் எதில் இந்தப் பெண் இறங்கியிருக்கக்கூடும் என்று அவருடைய கணவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவருடைய செல்பேசியும் அணைந்திருப்பதால் அவர் இவரை அழைக்கமுடியாது.
அவர் கொஞ்சம் புத்திசாலியாக இருந்தால், பிரதான ரயில் நிலையத்திலிருந்து கிளம்பும் அடுத்த பேஸஞ்சரைப் பிடித்து எதிர்த் திசையில் ஒவ்வொரு ரயில் நிலையமாக இறங்கி, ஏறவேண்டும், அப்போது இவர்களை அவர் கண்டுபிடிக்கச் சாத்தியங்கள் அதிகம்.
முற்றிலும் விதிவழியே தள்ளப்பட்டுவிட்ட அந்தப் பெண்ணின் கதறலை நாங்கள் இயலாமையுடன் பார்த்துக்கொண்டிருந்தோம். அவரைப் பார்த்துப் பரிதாபப்படுவது, அவருடைய கணவர் திரும்பி வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்வது இவைதவிர எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை.
இருட்டு மங்கும் நேரத்தில், என்னுடைய ரயில் மிகத் தாமதமாக வந்து சேர்ந்தது. அநேகமாக அங்கிருந்த எல்லோரும் அந்த ரயிலில் ஏறிக்கொண்டுவிட, பிளாட்ஃபாரத்தில் அந்தப் பெண்மணிமட்டும் தனியே, இன்னும் அழுதுகொண்டிருந்தார். அவரது குழந்தைகள் செய்வதறியாது அவரைச் சூழ்ந்து நின்றிருந்தார்கள்.
***
என். சொக்கன் …
13 05 2009
இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க
Like this:
Like Loading...
Related
1 | புருனோ
May 13, 2009 at 2:02 pm
//அவர் கொஞ்சம் புத்திசாலியாக இருந்தால், பிரதான ரயில் நிலையத்திலிருந்து கிளம்பும் அடுத்த பேஸஞ்சரைப் பிடித்து எதிர்த் திசையில் ஒவ்வொரு ரயில் நிலையமாக இறங்கி, ஏறவேண்டும், அப்போது இவர்களை அவர் கண்டுபிடிக்கச் சாத்தியங்கள் அதிகம்.//
அதை விட எளிதான வழி இருக்கிறது.
அவர் இறங்கிய தொடர்வண்டி நிலையத்தில் இருக்கும் நிலைய மேலாளரிடம் சென்று விபரத்தை கூறி, அதற்கு முன் இருக்கும் தொடர்வண்டி நிலையங்களுக்கு தொடர்பு கொண்டு அங்குள்ள ஒலிபெருக்கியில் அறிவிக்க கேட்டுக்கொள்ளலாம்
தொடர்வண்டி துறையில் இது போல் உதவிகளை செய்வார்கள்.