மனம் போன போக்கில்

மூடு மந்திரம்

Posted on: May 22, 2009

ஏழாங்கிளாஸோ, எட்டாங்கிளாஸோ படிக்கும்போது எதேச்சையாகத் தொடங்கிய பழக்கம், இன்றுவரை தொடர்ந்துவருகிறது – குளிக்கும்போது கந்தர் சஷ்டி கவசம் சொல்வது.

இதற்கான காரணம், அந்தக் கந்தர் சஷ்டி கவசத்திலேயே இருக்கிறது – ’ஆசாரத்துடன் அங்கம் துலக்கி நேசமுடனொரு நினைவதுவாகிக் கந்தர் சஷ்டிக் கவசம் இதனை சிந்தை கலங்காது தியானிப்பவர்கள் …’ என்று தொடர்வதை நான் கொஞ்சம் லேசாக வளைத்து, ‘ஆசாரத்துடன் அங்கம் துலக்கியபடி’ என்று மாற்றிக்கொண்டுவிட்டேன்.

இன்னொரு காரணமும் உண்டு. குளித்து முடித்துவிட்டு உம்மாச்சி முன்னால் நின்று கந்தர் சஷ்டி கவசம் படிக்கவேண்டுமென்றால், அதற்குக் கொஞ்ச நேரம் செலவாகும். பள்ளி / கல்லூரி / அலுவலகம் போகிற பதற்றத்தில் அவசரமாகப் படிப்பேன், வேண்டுமென்றோ, அல்லது தெரியாமலோ சில வரிகளைத் தவறவிடுவேன், அதெல்லாம் சாமி குத்தமாகிவிடாதா?

அதற்குப் பதிலாக அந்தக் குளிக்கும் நேரம் வீணாகதானே போகிறது, அப்போது நிதானமாகக் கந்தர் சஷ்டி கவசத்தைச் சொல்லிக்கொண்டால் ஆச்சு, ‘பரவாயில்லை, பையன் நன்றாக Time Management செய்கிறான்’ என்று உம்மாச்சியும் என்னை அங்கீகரித்துவிடுவார்.

இதில் ஒரு பெரிய சவுகர்யம், கந்தர் சஷ்டி கவசம் மிக எளிமையானது, சிரமமில்லாமல் பாடக்கூடிய மெட்டு, பல்லை உடைக்காத, சுலபமாகப் புரிந்துகொள்ளமுடிகிற தமிழ் வார்த்தைகள். நடுவில் சில வரிகள் மறந்துவிட்டாலும், மெட்டின் உதவியுடன் அர்த்தத்தை நினைவில் வைத்துக்கொண்டு பாட்டைப் பிடித்துவிடலாம் – சுமாரான ஞாபக சக்தி கொண்டவர்களுக்குக்கூட, பத்து நாள் பயிற்சியிலேயே மொத்தமும் தலைகீழ்ப் பாடமாகிவிடும்.

இதனால், குளிக்கும்போது கந்தர் சஷ்டி கவசம் சொல்வதில் எனக்கு எந்தப் பிரச்னையும் தெரியவில்லை. சுமார் ஏழு முதல் எட்டு நிமிடங்களுக்குள் சொல்லி முடித்துவிடுகிற இந்தக் கவசம், என்னுடைய குளிக்கும் நேரத்துக்கும் கச்சிதமாகப் பொருந்திப்போனது.

பள்ளியில் படித்துக்கொண்டிருந்தவரை, தண்ணீர் பைப் சத்தத்துக்குமேல் உரக்கக் கத்திக் கவசம் சொல்வேன். ஆனால் கல்லூரி விடுதிக்குச் சென்றதும், மற்றவர்களுக்குக் கேட்டுவிடுமோ, அவர்கள் கேலி செய்வார்களோ என்கிற கூச்சம். குரலை நிறையத் தணித்து, எனக்குமட்டும் கேட்கும்படி கிசுகிசுப்பான ‘ஹஸ்கி’ வாய்ஸில் ‘துதிப்போர்க்கு வல்வினைபோம்’ என்று தொடங்கி மளமளவென்று முடித்துவிடத் தொடங்கினேன். இன்றுவரை, ஒரு நாள்கூட இந்தப் பழக்கத்தைத் தவறவிட்டது கிடையாது.

ஆனால், சமீப காலமாக, இதில் ஒரு பெரிய பிரச்னை.

நான் அதிகம் தொலைக்காட்சி பார்ப்பது கிடையாது. காலை நேரத்தில் சில செய்தித் துணுக்குகளோ, விருந்தினர் பேட்டியோ, யோகாசனமோ, சுய முன்னேற்றத் தத்துவங்களோ, பழைய பாட்டுகளோ அதுவாகக் காதில் விழுந்தால்தான் உண்டு.

அந்தப் பழைய பாட்டுகள், அங்கேதான் பிரச்னை.

கறுப்பு வெள்ளை காலத்தில் மெட்டுகளுக்குதான் முதல் மரியாதை. எளிய வாத்திய அமைப்புகளை வைத்துக்கொண்டு, கேட்கிறவர்கள் சுலபமாகத் திரும்பப் பாடும்படியான அற்புத கீதங்களை உருவாக்கினார்கள்.

இதனால், இந்தப் பாடல்களை ஒருமுறை கேட்டாலே போதும், வரிகள் நினைவில் இல்லாவிட்டாலும் அந்த மெட்டு மனத்துக்குள் உருள ஆரம்பித்துவிடும்.

என் தலைவலி என்னவென்றால், பல்வேறு தொலைக்காட்சிகளில் ‘தேன் கிண்ணம்’, ‘அமுத கானம்’, ‘தேனும் பாலும்’ போன்ற பெயர்களைக் கொண்ட இந்தப் பழைய பாட்டு நிகழ்ச்சிகள் எல்லாமே, காலை எட்டரை முதல் ஒன்பதரைக்குள்தான் ஒளிபரப்பாகின்றன. அதுதான் என்னுடைய ‘குளிக்கும் நேரம்’.

இதனால், குளியலறைக்குள் நுழைவதற்குச் சற்று முன்பாக, ஏதேனும் ஒரு பழைய பாட்டு என் காதில் விழுகிறது. அப்புறம் உள்ளே நுழைந்த மறு நிமிடம், கந்தர் சஷ்டி கவசத்துக்குத் தாவுவது என்றால், முடியுமா?

உதாரணமாக, இன்று காலை நான் குளிக்கக் கிளம்பியபோது, கலைஞர் டிவியில் எல். ஆர். ஈஸ்வரி ‘காதோடுதான் நான் பேசுவேன்’ என்று குழைந்துகொண்டிருந்தார். இதனால், கந்தர் சஷ்டி கவசமும் அதே மெட்டில்தான் எனக்குப் பாட வருகிறது, பழைய மெட்டுக்குப் பழகிய வரிகள் இதனால் மறந்துபோகிறது.

இப்படி ஒரு நாள், இரண்டு நாள் இல்லை, இதுவரை சற்றேறக்குறைய நூற்றைம்பது பழைய பாட்டு மெட்டுகளில் கந்தர் சஷ்டி கவசத்தைப் பாட முயன்று தோற்றுப்போயிருக்கிறேன். என்னதான் கஷ்டப்பட்டு முயற்சி செய்து இருக்கிற சொற்ப மூளையைப் பழைய மெட்டுக்கு இழுத்துப் பார்த்தாலும், பலன் இல்லை.

சினிமாப் பாட்டில் கந்தர் சஷ்டி கவசத்தைப் பாடுவது ஒன்றும் கொலைக் குற்றம் இல்லை. ஆனால், மெட்டு மாறுவதால் எனக்கு வரிகள் விட்டுப்போகிறது, கவனத்தைச் செலுத்தி ஒழுங்காகக் கவசம் சொல்லமுடியவில்லையே என்று குற்றவுணர்ச்சியாக இருக்கிறது.

இந்தப் பிரச்னைக்கு என்ன தீர்வு? குளிக்கச் செல்வதற்கு பத்து நிமிடம் முன்னதாக டிவியை அணைத்துவிடலாமா? என்னுடைய ‘ஊர் சுற்றும்’ மனத்தின் பிரச்னைக்காக, வீட்டில் உள்ள மற்றவர்களின் ரசனையை, பொழுதுபோக்கைக் கெடுப்பது நியாயமில்லையே?

தவிர, Distraction என்பது தொலைக்காட்சி வழியேதான் வரவேண்டுமா? பக்கத்து வீட்டில் ரேடியோ அலறினால்? ஒருவேளை நான் குளிக்கச் செல்வதற்குச் சில விநாடி முன்னால் என் செல்பேசி ‘இளமை எனும் பூங்காற்று’ பாட்டுக்கு முன் வருகிற மெல்லிசையில் அழைத்தால்? அல்லது என் மனைவியின் செல்பேசி ‘மனம் விரும்புதே உன்னை, உன்னை’ என்று ஹரிணி குரலில் கூவினால்? அந்த மெட்டுகளெல்லாம் கந்தர் சஷ்டி கவசத்தின்மேல் ஏறி உட்கார்ந்துகொண்டு துன்புறுத்துமே!

ஆக, நான் கண்ணையோ, காதையோ மூடிக்கொள்வதால் இந்தப் பிரச்னையைத் தீர்க்கமுடியாது. வேறு ஏதாவது ஒரு வழியை யோசிக்கவேண்டும், மெட்டு மாறினாலும் கந்தர் சஷ்டி கவசத்தின் வரிகளைத் தவறவிடாதபடி ஓர் உத்தியை அமல்படுத்தவேண்டும்.

பேசாமல், கந்தர் சஷ்டி கவசக் கையடக்கப் புத்தகம் ஒன்றைக் குளியலறையினுள் கொண்டுசென்றுவிட்டால் என்ன? அதைப் பார்த்துப் படித்தால் வரிகளை மறக்கவோ, தவறவிடவோ வாய்ப்பில்லையே!

செய்யலாம். ஆனால், குளித்துக்கொண்டே புத்தகத்தைப் புரட்டுவது எப்படி? ஒரே நாளில் மொத்தமும் நனைந்து நாசமாகிவிடாதா?

இது ஒரு பெரிய பிரச்னையா? புத்தகமாக அன்றி, ஒரே காகிதத்தில் வரும்படி கந்தர் சஷ்டி கவசத்தை அச்சிட்டு, குளியலறைச் சுவரில் ஒட்டவைத்துவிட்டால் ஆச்சு!

அதையும் செய்து பார்த்தேன். இரண்டே நாளில் நான் ஒட்டவைத்த காகிதம் நனைந்து உரிந்து கீழே விழுந்துவிட்டது.

சரி, தண்ணீர் இருக்கும் இடத்துக்குச் சற்றுத் தள்ளி மேலே பாதுகாப்பாக ஒட்டலாமா?

ஒட்டலாம். ஆனால், என்னால் இங்கே தண்ணீரை முகந்து ஊற்றியபடி, அல்லது ஷவரில் நனைந்தபடி தூரத்தில் உள்ள அந்த எறும்பு சைஸ் எழுத்துகளைப் படிக்கமுடியவில்லை. எக்கி எக்கிப் பார்த்துப் படித்தால் கழுத்து வலிக்கிறது, இங்கே குளிக்க வந்தோமா, அல்லது படிக்க வந்தோமா என்று சந்தேகமாக இருக்கிறது.

கடைசியாக ஒரு வழி செய்தேன். கந்தர் சஷ்டி கவசத்தை ஒரு நல்ல கெட்டித் தாளில் அச்சிட்டு, அதைக் கடையில் கொடுத்து எல்லாப் பக்கங்களிலும் கச்சிதமாக மூடி Laminate செய்துவிட்டேன் – கந்தர் கவசத்துக்கு, கச்சிதமான பிளாஸ்டிக் கவசம்!

அதன்பிறகு, எந்தப் பிரச்னையும் இல்லை. தினந்தோறும் குளிக்கப் போகும்போது கையில் டவலோடு இந்த லாமினேட் மூடு  மந்திரத்தையும் எடுத்துக்கொண்டு போகிறேன், அதை ஒரு க்ளிப்மூலம் ஷவருக்குக் கீழே மாட்டிவிடுகிறேன், அல்லது ஜன்னலுக்குக் கீழே பொருத்திக்கொள்கிறேன். ஜாலியாகக் குளித்தபடி, அன்றைக்கு என் நாக்கில் உருள்கிற ஏதோ ஒரு மெட்டில் கந்தர் சஷ்டி கவசத்தை ஒரு வரி மீதம் வைக்காமல், தப்பில்லாமல் பார்த்துப் படித்துவிடுகிறேன். பின்னர் தலை / உடல் துவட்டிக்கொள்ளும்போது லேசாக நனைந்திருக்கும் லாமினேட் கவசத்தையும் அப்படியே துடைத்துவிட்டால் ஆச்சு.

இணையம் வழியாகவும், DTH கூடை ஆண்டெனாக்களின் வழியாகவும் நம் வீடுகளுக்குள்ளேயே வந்து அருள்பாலிக்கிற கடவுள், என்னுடைய இந்த எளிய நவீனமயமாக்கலை ஆட்சேபிக்கமாட்டார் என்று நம்புகிறேன். சுபமஸ்து!

***

பின்குறிப்பு: இது என் நூறாவது பதிவு. இதுவரை சகித்துக்கொண்டு படித்தவர்களுக்கு நன்றி, இனிமேல் படிக்கப்போகிறவர்களுக்கும் 🙂

***

என். சொக்கன் …

22 05 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

18 Responses to "மூடு மந்திரம்"

Congratulations. நல்ல பதிவு. உங்களுக்கு எப்படி கந்த சஸ்டி கவசம் தினமும் படிக்கணுமோ, அதேபோல என்னக்கு உங்க பிளாக் படிச்சே ஆகணும். Keep it up !!

நீ குளிக்கவே வேணாம். ஏன்யா உன்னோட பாத்ரூம் மேட்டரை எல்லாம் எழுதி எளவெடுக்குற. நீ அக்குளைத் தேய்ச்சு குளிக்கிறியா, பல்தேய்க்கிறீயா, கழுவுறியாங்கிறதெல்லாம் உன் சைட்டைத் தேடி வர்றவனுக்குத் தேவையா?

இதுல நூறாவது பதிவுன்னு பீத்திக்கிற. உன்னோட நூறு பதிவையும் லேமினேட் பண்ணி, பெங்களூரு தெருவெல்லாம் ஒட்டு போ!

useless article.

rubbish…

totally ur site is like a garbage.

thanks

useless article.

Chappa matter..

//நூறாவது பதிவு.// Congrats! Wishes to write 1000’s! 😉

But choose topics carefully! Probably you are busy with your full time job!

Ananth, பத்திரி, அருளானந்தம், Murugan, Janu, Ramesh,

நன்றி!

//ஏன்யா உன்னோட பாத்ரூம் மேட்டரை எல்லாம் எழுதி எளவெடுக்குற//

//உன் சைட்டைத் தேடி வர்றவனுக்குத் தேவையா?//

//useless article. rubbish… totally ur site is like a garbage//

//useless article//

//Chappa matter//

//But choose topics carefully! Probably you are busy with your full time job!//

நண்பர்காள்,

எழுதுவதெல்லாம் இலக்கியமாக அமைய நான் என்ன வரம் வாங்கி வந்தவனா? 🙂

இந்தப் பதிவு ‘ஒன்றுமில்லாத’ ஒரு விஷயத்தைதான் பேசுகிறது என்பது எனக்கு நன்றாகத் தெரிகிறது, தெரிந்துதான் எழுதினேன் – ஒன்றுமில்லாத விஷயங்களையும் சுவாரஸ்யமாக எழுதமுடியுமா என்பதற்கு ஒரு பயிற்சியாகச் செய்தேன், சரியாக வரவில்லை என்றால் தோல்வியை நிச்சயம் ஏற்றுக்கொள்கிறேன். மன்னியுங்கள்.

ஆனால், இதைத்தான் எழுதவேண்டும் என்பதுபோன்ற கட்டுப்பாடுகள் அற்ற சுதந்தரம்தானே இணையத்தின் பலம், அதைப் பயன்படுத்திக்கொண்டு நானும் கொஞ்சம் குப்பை போடுகிறேனே, என்ன தப்பு?

ப்ளாக் என்பது எனக்கு ஒரு டைரிபோல, தனி மனிதத் தாக்குதல், ஆபாசம் இல்லாதவரையில் அதில் எதை வேண்டுமானாலும் எழுதிப் பழகலாம் என்பதுதான் எனக்கு நானே வகுத்துக்கொண்டிருக்கும் வரையறை. அது தவறென நினைக்கிறவர்கள் (அதாவது இதுபோன்ற ‘சப்பை’ மேட்டர்களைப் படிக்க விரும்பாதவர்கள்), ஒரே ஒரு க்ளிக்மூலம் இங்கிருந்து விலகிச் சென்றுவிடலாமே. இன்னொருமுறை நான் நிஜமாகவே ஏதாவது உருப்படியாக எழுதினால் திரும்பி வந்து படித்துக்கொள்ளலாமே!

தயவுசெய்து, ’நான் எழுதறது பிடிக்கலைன்னா நீங்க என் ப்ளாக் படிக்கவேண்டியதில்லை’ என்று நான் திமிராகச் சொல்வதாக எடுத்துக்கொண்டுவிடாதீர்கள், எழுதுகிற **எவருக்கும்** சிறந்த, நல்ல, சுமாரான, மோசமான, படுமோசமான படைப்புகள் கலந்துதான் வரும், அந்த விகிதம்தான் மாறுபடும், மற்றபடி இதில் யாரும் விதிவிலக்குகள் கிடையாது – அச்சச்சோ மோசமான படைப்புகள் வருகிறதே என்று அதைப்பற்றிக் கவலைப்படாமல் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்காவிட்டால், அந்த ஒன்றிரண்டு சிறந்த படைப்புகள்கூட வராமலே போய்விடும். அதைப் புரிந்துகொள்ளுங்கள் என்பதுதான் என் தாழ்மையான கோரிக்கை.

//இதுல நூறாவது பதிவுன்னு பீத்திக்கிற//

நான் எங்கே ஐயா ‘பீத்தி’கிட்டேன்? கடைசி வரியில் பின்குறிப்பாகக் குறிப்பிட்டேன். அந்தச் சாதாரண சந்தோஷப் பகிர்தல்கூடக் கூடாது என்றால் என்னதுக்கு எழுதவேண்டும்?

இணையத்தில் எழுதுவது கடைசியில் கசப்பைதான் கொண்டுவரும் என்கிற என் நம்பிக்கை, பழைய அனுபவம், இதனால் இன்னொருமுறை உறுதிப்படுகிறது, நன்றி!

Dear Chokkan,

Congratulations for the century. Neenga pattukku enna venunalum eluthunggal ‘manam pona pokkel’.

But i enjoyed Mr.Patri’s comment also.

// இதுவரை சகித்துக்கொண்டு படித்தவர்களுக்கு நன்றி,//
நன்றி மட்டும்தானா??? நான் பெருசா எதிர்பார்த்தேன்…:(

vetti payal

நன்றி சொக்கன். நாங்க உங்களை படிக்க வர்றது ‘not only for good content,but for your narration 2’. I am representing myself as an Silent listener. Keep the same spirit up and running !!

கங்காரு ரிலேஷன்ஸ்…. ச்சே… கங்க்ராடுலேஷன்ஸ்.

பாத்ரூம் போய் கந்த சஷ்டி கவசம் செய்வது “time management” ஆக இருப்பினும் சரியான கடவுள் தொழும் வழிமுறையல்ல என்பது என் கருத்து.

//ப்ளாக் என்பது எனக்கு ஒரு டைரிபோல, தனி மனிதத் தாக்குதல், ஆபாசம் இல்லாதவரையில் அதில் எதை வேண்டுமானாலும் எழுதிப் பழகலாம் என்பதுதான் எனக்கு நானே வகுத்துக்கொண்டிருக்கும் வரையறை//

இந்த கருத்தில் நான் உடன்படுகிறேன். ஆனால், ப்ளாக் என்பது பலரும் வெளியிடும் குமுதம் போல ஆகி விட்டதால் குமுதம்தனமான மறுமொழிகளும் தவிர்க்க முடியாதவை.

அவற்றை குமுதம் வெளியிடுவது போலவே, நீங்களும் டெலிட் செய்யாமல் வெளியிட்டு விட்டீர்கள்.

100ஐ தொட்டதற்கு பாராட்டுகள். உங்களை திட்டியவர் சிலர் உங்கள் நண்பர் என்ற சுதந்திரத்தில் “செல்லமாக” திட்டியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

(முடிந்தால் தேவாவின் ட்யூன் ஏதாவதன் மேல் க.ச.க. ஏற்றிப் பாருங்கள். உடன்படும். அவர் க.ச.க. மெட்டில் ஒரு தி.பா. போட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்).

u are what today,only because of ur self esteem.i request you to write a small book on self esteem

உருப்புடாதது_அணிமா, Kesava Pillai, Dr.Sintok, C.RAMACHANDRAN, Ananth, Chakra, R Sathyamurthy, venkat,

நன்றி!

//நன்றி மட்டும்தானா??? நான் பெருசா எதிர்பார்த்தேன்…:(//

வேற என்ன செய்யலாம்ன்னு சொல்லுங்க, ஜமாய்ச்சுடுவோம்!

//சரியான கடவுள் தொழும் வழிமுறையல்ல என்பது என் கருத்து//

உண்மைதான். அதை இப்படிப் பாருங்களேன்: பாத்ரூமில் கடவுளை வழிபடுவது தப்பு, பாத்ரூமி’லும்’ வழிபட்டால் தப்பில்லையே 😉

//நீங்களும் டெலிட் செய்யாமல் வெளியிட்டு விட்டீர்கள்//

எந்த மறுமொழியையும் டெலிட் செய்யக்கூடாது என்பதுதான் என் எண்ணம். இதுவரை அதைப் பின்பற்ற முடிந்திருக்கிறது – இனிமேலும், ஏதாவது விபரீதமாக வந்தால்மட்டுமே எடிட் செய்வேன், ரொம்ப மோசமானால்மட்டுமே டெலீட்டுவேன் 🙂

//i request you to write a small book on self esteem//

Sure Sir, Will try!

சரியான காமடி சார், குளிக்கும் போது சஷ்டி சேர்த்து கொண்டு bathroom போறிங்கன்னு…kudos to ur time management and innovative ideas. But I think you would have faced some embarrasing situations when your relatives visits ur house and notices you going to bathroom along with sashti kavasam 🙂

Can you share anything like that?

[…] விளக்கமாக எழுதினால் பத்திரி கோபித்துக்கொள்வார். ஆகவே, கொஞ்சம் […]

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 620,749 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்

Tamilish

For தமிழ் Peopleதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

May 2009
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
%d bloggers like this: