’நடை’யர்கள்
Posted August 6, 2009
on:- In: Bangalore | Boredom | Characters | Kids | Life | Open Question | People | Rise And Fall | Template | Uncategorized
- 15 Comments
ஒரு வாரமாக, அலுவலகம் போகிற வழியில் தினந்தோறும் அந்தக் காட்சியைத் தவறாமல் பார்க்கிறேன் – அதிகப் போக்குவரத்து இல்லாத எங்கள் தெருவின் சிமென்ட் சாலையில் மூன்று பேர் நடை பழகுவதுபோல் முன்னே, பின்னே மாறி மாறி நடந்துகொண்டிருக்கிறார்கள்.
பெங்களூரின் ஒவ்வொரு தெருவிலும் எந்நேரமும் ஏதாவது ஒரு வீடு கட்டிக்கொண்டிருப்பார்கள். புது வீடாக இல்லாவிட்டாலும், இருக்கும் பழைய வீட்டை இடித்துக் கட்டுவார்கள், அல்லது ஒரு மாடி சேர்ப்பார்கள், இருப்பதைப் புதுப்பித்து அழகுபடுத்துவார்கள், இதை அதாகவும் அதை இதாகவும் மாற்றுவார்கள், இங்குள்ளவர்களுக்குக் காரணம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவ்வப்போது வீட்டை ஏதாவதுவிதமாக மாற்றாவிட்டால் உடம்பெல்லாம் நடுங்க ஆரம்பித்துவிடும் என்று நினைக்கிறேன் – சில இளைஞர்கள், இளைஞிகளின் ’செல்ஃபோன் மாற்றும் பித்து’போல.
இது ஒரு புதிய அடுக்ககம். இரண்டு மாடிகள் கட்டி முடித்து மூன்றாவதில் வேலை நடந்துகொண்டிருக்கிறது. அதற்குத் தேவையான செங்கல், மணல், இன்னபிற சமாசாரங்கள் கீழிருந்து மேலே போய்ச் சேரவேண்டும்.
இதற்குத் தோதாக அவர்கள் ஒரு தாற்காலிக ஏற்பாடு செய்திருந்தார்கள். மேலே ஒரு சின்னக் கிணறு ராட்டினம் அமைத்து, அதில் நீளமான தாம்புக் கயிறு தொங்கவிடப்பட்டிருந்தது, அதன் ஒரு முனையில் ’S’ வடிவ இரும்புக் கொக்கி ஒன்று, இன்னொரு முனையில் ஒரு நான்கடி மரக்கட்டையை நன்றாக இறுக்கிக் கட்டியிருந்தார்கள்.
இப்போது, கொக்கியில் ஒரு கனமான மூட்டையைத் தொங்கவிடுகிறார்கள், இன்னொரு முனையில் உள்ள மரக்கட்டையை மூன்று பேர் சேர்ந்து இழுத்தபடி தெருவோடு நடக்கிறார்கள், அந்தப் பக்கம் மூட்டை மேலே போய்ச் சேர்ந்துவிடுகிறது.
மூன்றாவது மாடியில் வேலை பார்க்கிறவர்கள், மூட்டையில் உள்ள பொருள்களை எடுத்துக்கொண்டு, கயிற்றை இழுத்து சிக்னல் கொடுக்கிறார்கள். உடனே, பின்னோக்கி நடந்தவர்கள் திரும்ப முன்னோக்கி வருகிறார்கள், காலி மூட்டை கீழே வந்து சேர்கிறது.
காலை தொடங்கி, மதியம், மாலைவரை இவர்கள் இப்படியே நடந்துகொண்டிருப்பார்கள், அவ்வப்போது ஒருவர் ஓய்வு எடுப்பார், அவருக்குப் பதில் இன்னொருவர் ஜோதியில் ஐக்கியமாவார், மற்றபடி நீதி கேட்கும் நெடும்பயணம் நிற்காமல் தொடர்கிறது.
அடிப்படையில் இது Pulley தத்துவம்தான் என்பதால், எத்தனை கனமான மூட்டையைத் தூக்குவதற்கும் அதிக உடல் உழைப்பு தேவைப்படாது என்று நினைக்கிறேன். ஒரே நேரத்தில் மூன்று பேர் சேர்ந்து இழுப்பதால், இன்னும் எளிதாக இருக்கவேண்டும்.
ஆனால், செக்கு மாட்டின் வட்டப்பாதையை நீட்டிவிட்டாற்போல் இப்படி மாற்றி மாற்றி நாள்முழுக்க முன்னாலும் பின்னாலும் நடந்துகொண்டிருந்தால் போரடிக்காது?
ஹிட்லரின் சித்திரவதைக் கேம்ப்களைப்பற்றிப் பல கதைகள் சொல்வார்கள். இவற்றில் எது நிஜம், எது கற்பனை என்று கண்டுபிடிப்பதுகூடச் சிரமம்.
அப்படி ஒரு கதை, கைதிகளுக்குத் தரப்படுகிற விநோதமான ‘வேலை’களைப்பற்றியது.
இந்தக் கைதிகள், ஒவ்வொரு நாளும் தரையில் ஒரு பெரிய பள்ளம் தோண்டவேண்டும். அதைத் தோண்டி முடித்ததும், உடனடியாகப் பக்கத்தில் குவித்திருக்கும் மண்ணைப் போட்டு அதை மூடிவிடவேண்டும்.
அதாவது, ஆறு மணி நேரம் கஷ்டப்பட்டுப் பள்ளம் தோண்டியது வீண். உள்ளே எதையும் போட்டுப் புதைக்காமல், அடுத்த ஒன்றிரண்டு மணி நேரத்தில் அவர்களே அதை முழுவதுமாக மூடிவிடுகிறார்கள். தரை பழையபடி சமதளமாகிவிடுகிறது.
மறுநாள் காலை, மறுபடியும் பள்ளம், மறுபடியும் மூடல், சமதளம், பள்ளம், மூடல், சமதளம், … இப்படியே தினசரி தொடர்ந்து செய்துகொண்டிருந்தால், ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்கிற அந்த Boredomமட்டுமே அவர்களைக் கொன்றுவிடுமாம்.
அந்தக் கைதிகளோடு ஒப்பிடும்போது, இந்த ’நடை’யர்களின் வேலை கொஞ்சம் பெட்டர். வெட்டியாக மண்ணைத் தோண்டி மூடாமல், கண்ணெதிரே ஒரு கட்டடம் உருவாவதையாவது அவர்கள் பார்க்கலாம்.
ஆனால், அந்தக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுவிட்டபிறகு, அதைப் பார்க்கும்போது இவர்களுக்கு ஏதேனும் பெருமையுணர்வு இருக்குமா? இதைக் கட்டியதில் என்னுடைய பங்களிப்பும் இருந்திருக்கிறது என்று தோன்றுமா? அல்லது ‘சும்மா முன்னே பின்னே நடந்தேன், அவ்ளோதானே’ என்று விரக்தியாக நினைத்துக்கொள்வார்களா?
எந்தக் காரணத்தால் இவர்கள் இப்படி ஒரு ’போர’டிக்கும் Templatized / Cookie Cutter வேலைக்கு ஒத்துக்கொள்கிறார்கள்? மற்ற வேலைகளைச் செய்ய இவர்களுக்கு வலு போதாதா? அனுபவம் போதாதா? திறமை போதாதா? ஆர்வம் இல்லையா? இவர்களுக்கும் மற்றவர்களுக்கும் சம்பளத்தில் என்ன வித்தியாசம்? இப்படி இவர்கள் ஆறு மாதம் முன்னும் பின்னும் நடந்தால் பிரமோஷன் கிடைத்து மற்ற கட்டட வேலைகளுக்கு நகரலாமா? அல்லது டைப் ரைட்டர் Platenபோல காலத்துக்கும் முன்னே, பின்னே நடந்துகொண்டிருக்கவேண்டியதுதானா?
இன்று காலை, இந்த மூவர் அணியின் நடை பயணத்தில் ஒரு சின்ன மாற்றம். புதிதாக ஒரு சின்னப் பையன் அவர்களோடு கூட்டணி சேர்ந்திருந்தான்.
அவன் கட்டையை இழுக்கவில்லை. அதற்குப் பதிலாக, அவர்கள் இழுக்கிற தாம்புக் கயிற்றைப் பிடித்துக்கொண்டு தொங்கி விளையாடினான்.
இப்போது, ‘நடை’யர்கள் பின்னோக்கி நடக்க நடக்க, கயிற்றில் தொங்கியவன் அதைப் பற்றிக்கொண்டு சரசரவென்று இன்னும் மேலே ஏறிச் சென்றான், தவறி விழுந்துவிடுவானோ என்று எனக்குப் பயமாக இருந்தது.
ஒருவேளை விழுந்தால், கீழே துளி மண் இல்லை, உறுதியான சிமென்ட் சாலை, எலும்பு உடையுமோ, மண்டை உடையுமோ, அல்லது இரண்டும் உடையுமோ, அந்தக் கடவுளுக்குதான் வெளிச்சம்.
ஆனால், அந்தப் பையனும் சரி, ‘நடை’யர்களும் சரி, அதைப்பற்றிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. அவர்களுக்கு இது ஒரு புதிய விளையாட்டாகத் தோன்றியிருக்கவேண்டும், ஏதோ பேசிச் சிரித்தபடி அவனைக் கிண்டலடித்துக்கொண்டு வழக்கம்போல் வேலையைக் கவனித்தார்கள்.
கயிறு முழு நீளத்துக்கு இழுக்கப்பட்டதும், மேலே மூட்டை காலி செய்யப்பட்டது, இதனால் கயிற்றில் இறுக்கம் குறைந்தது.
சட்டென்று அதைப் புரிந்துகொண்ட அந்தப் பையன், இருந்த உயரத்திலிருந்து அப்படியே பத்திரமாகக் கீழே குதித்தான். கையைத் தட்டிக்கொண்டு எழுந்து அடுத்த ஏற்றத்துக்குத் தயாரானான்.
முன்னே, பின்னே நடப்பதும், மேலே, கீழே ஏறிக் குதிப்பதும் கிட்டத்தட்ட ஒரேமாதிரிதான். ஆனால் ஏனோ எனக்கு அந்த ‘நடையர்’கள்மேல் தோன்றிய பரிதாபம், அந்தப் பையன்மீது வரவில்லை.
***
என். சொக்கன் …
06 08 2009
இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க
15 Responses to "’நடை’யர்கள்"

//சில இளைஞர்கள், இளைஞிகளின் ’செல்ஃபோன் மாற்றும் பித்து’போல.//
ஆரம்ப காலங்களில் 2000 முதல் 2004 வரை செல்லிடப்பேசிகள் ஒன்று தொலைந்து போகும். அல்லது குறைந்தது மூன்று வருடங்களாவது உழைத்தன
ஆனால் தற்பொழுது வரும் செல்லிடப்பேசிகள் ஒரு வருடம் கூட தாங்க வில்லையே


//அதாவது, ஆறு மணி நேரம் கஷ்டப்பட்டுப் பள்ளம் தோண்டியது வீண். உள்ளே எதையும் போட்டுப் புதைக்காமல், அடுத்த ஒன்றிரண்டு மணி நேரத்தில் அவர்களே அதை முழுவதுமாக மூடிவிடுகிறார்கள். தரை பழையபடி சமதளமாகிவிடுகிறது.//
இது குறித்து நம் நாட்டு நகைச்சுவை கூட உண்டு
ஒருவர் சாலை குழி தோண்டிக்கொண்டிருந்தாரா
அடுத்தவர் அதை மூடிக்கொண்டிருந்தார்
விசாரித்ததில் :- மரம் நடும் ஒப்பந்த வேலை மூன்று பேருக்கு அளிக்கப்பட்டுள்ளது
ஒருவர் குழி வெட்ட வேண்டும்
அடுத்தவர் மரம் நட வேண்டும்
மூன்றாவது நபர் குழியை மூட வேண்டும்
இரண்டாவது நபர் விடுமுறை – நாங்களிருவரும் வேலை செய்கிறோம்
என்று பதில் வந்ததாம்
—
உண்மையா பொய்யா தெரியவில்லை


//ஒரு சின்னக் கிணறு ராட்டினம் //
ராட்டினம் என்றாலே pulley-தானே. அப்புறம் என்ன கிணற்று ராட்டினம்? Well, they are using a pulley-னு சொல்ல வந்தீங்களோ?
சுஜாதாவின் நாடகம் ஒன்று நினைவிற்கு வருகிறது. கிருஷ்ணர் பொம்மை செய்யும் ஒரு கிழவரிடம் பொம்மை செய்யும் மெஷினை கொடுத்து விடுவார்கள். ஒரு பொத்தானை அமுக்கினால் மரம் உள்ளே போகும். இன்னொரு பொத்தானை அமுக்கினால் கிருஷ்ணர் பொம்மை வெளியே வரும். அப்படியே பொத்தானை அமுக்கி அமுக்கி அவரும் மெஷின் போல ஆகிவிடுகிறார்.
ஆனால் ஒன்று பார்த்தீர்களென்றால் இந்த மாதிரி Monotonous-ஆன வேலை செய்யும் பலரும் தங்கள் வாழ்க்கையை பலவகையில் சுவாரசியமாகவே ஆக்கி வைத்துக் கொள்கிறார்கள். அந்த ஒரு விஷயத்துக்காகவே அவர்களை பாராட்ட வேண்டும்.


அருமை!
ஆர.கே.நாராயன் மற்றும் பி.ஜி.வூதவுஸ் என் ஆதர்ஷ ஆங்கில எழுத்தாளர்கள். நுண்ணிய விசயங்களை அவ்வளவு அழகாக படம் பிடிப்பார்கள்.
ஒரு தனி ஹூமர் சென்ஸ் ஓடும்…
அந்த பாணி உங்களிடம்….


எளிமையான பாசாங்கில்லாத “நடை” Keep it up


உங்கள் கட்டுரையின் மையப் புள்ளி அந்த pulley தானோ …


/, செக்கு மாட்டின் வட்டப்பாதையை நீட்டிவிட்டாற்போல் இப்படி மாற்றி மாற்றி நாள்முழுக்க முன்னாலும் பின்னாலும் நடந்துகொண்டிருந்தால் போரடிக்காது?//
இதை போன்றே அருகில் ஒரு பர்னிச்சர் விற்பனையகம் உள்ளது வயதான பெண்மணி தினமும் காலையில் வந்து உக்கார்ந்து மாலை திரும்பி செல்வார் ! பல நாட்களுக்கு வியாபாரமே இருக்காது கடை ஸ்பான்சரும் கூட வந்து செல்வது பல நாட்களுக்கு ஒரு முறை யோசித்து பார்த்தாலே மனம் கிர்ர்ர்ர்ர்ர் ஆகிவிடுகிறது ! எத்தனை உறவுகளை விட்டு விலகி இந்த வேலைக்காக வந்திருப்பார் என நினைக்கும் போதெல்லாம் மனம் சற்று பாரம் சுமப்பது போன்று தோன்றும் 😦


ஒரு வேளை இவர்கள் “வாட் அன் ஐடியா சார்ஜி – வாக் அண்ட் டாக்” விளம்பரம் பார்த்தார்களோ?

1 | Ganesh Chandra
August 6, 2009 at 7:42 pm
ஏப்படி அய்யா உமக்கு மட்டும் இதெல்லாம் ஒரு விஷயமாக தோன்றுகிறது.
// மற்ற வேலைகளைச் செய்ய இவர்களுக்கு வலு போதாதா? அனுபவம் போதாதா? திறமை போதாதா?
‘நடையர்’களை ‘மடையர்’களா என்று கேட்கறீங்களா ?