மனம் போன போக்கில்

ட்டூ மினிட்ஸ்

Posted on: August 10, 2009

ஒரு மாதம் முன்பாக, அவர் என்னைத் தேடி வந்திருந்தார்.

அவர் பெயர் ஸ்ரீமதி. ஆறு மாதங்களுக்குமுன்புவரை எங்களுடன் வேலை பார்த்துக்கொண்டிருந்தவர். சில தனிப்பட்ட காரணங்களால் பணியிலிருந்து விலகிவிட்டார்.

இப்போது, அவருக்கு இன்னோர் இடத்தில் நல்ல வேலை கிடைத்திருக்கிறது. இங்கே அவர் வாங்கிக்கொண்டிருந்ததைப்போல் இருமடங்குக்குமேல் சம்பளம், வெளிநாட்டுப் பயண வாய்ப்புகள், இன்னபிற சவுகர்யங்கள்.

ஆனால், நான்கு சுற்று நேர்முகத்தேர்வுகளுக்குப்பிறகும், அந்த நிறுவனம் ஸ்ரீமதியின் வேலை நியமனத்தை இன்னும் உறுதி செய்யவில்லை. அதற்குமுன்னால், அவருடைய முந்தைய பணியிடத்தில் உள்ள சிலரின் Reference (இதற்கு என்ன தமிழ் வார்த்தை?) கேட்டிருக்கிறார்கள்.

‘ரெஃபரன்ஸ்க்காக நான் உங்க பேர், நம்பரை அவங்களுக்குக் கொடுக்கலாமா சார்?’

‘ஓ, தாராளமா’

அவருடைய ‘தேங்க் யூ’வில் உண்மையான நன்றி தெரிந்தது. அதன்பிறகு சிறிது நேரம் வேறு ஏதோ பொதுவான விஷயங்களைப் பேசிவிட்டு அவர் விடை பெற்றுச் சென்றார்.

இரண்டு நாள் கழித்து, நான் ஒரு சூப்பர் மார்க்கெட் க்யூவில் நின்றுகொண்டிருந்தபோது என் செல்பேசி ஒலித்தது, ‘ஹலோ, நாங்க ____ கம்பெனியிலிருந்து பேசறோம், உங்களோட வொர்க் பண்ண மிஸ். ஸ்ரீமதி எங்க கம்பெனியில வேலைக்கு விண்ணப்பம் செஞ்சிருக்காங்க, அவங்களைப்பத்திக் கொஞ்சம் உங்ககிட்ட பேசமுடியுமா?’

நான் பதில் சொல்வதற்குள், எனக்குமுன்னே வரிசையில் நின்றிருந்தவர்கள் இருவரும் பணம் செலுத்திவிட்டுப் போய்விட்டார்கள். அடுத்து, என் முறை.

இந்த நேரத்தில் நான் செல்பேசியில் விலாவரியாகப் பேசிக்கொண்டிருந்தால், கவுன்டரில் இருக்கிற கன்னிகை மனத்துக்குள் திட்டுவாள், பின்னால் காத்திருப்பவர்கள் வெளிப்படையாகவே திட்டுவார்கள், எல்லோருடைய நேரமும் வீணாகும், தேவையா?

ஆகவே, மறுமுனையில் இருந்தவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன், ‘ஒரு ட்டூ மினிட்ஸ் கழிச்சுக் கூப்பிடமுடியுமா?’

’நோ ப்ராப்ளம்’ என்றபடி அவர் இணைப்பைத் துண்டித்தார்.

நான் நிம்மதியாகப் பணத்தைச் செலுத்திவிட்டு வெளியே வந்தேன், மறுசுழற்சி பிளாஸ்டிக் பையினுள் தேடி, பார்லே குழுமத்திலிருந்து சமீபத்தில் அறிமுகமாகியிருக்கும் டக்கரான ‘LMN‘ எலுமிச்சை பானத்தைத் திறந்து குடித்தேன், செல்ஃபோனில் இளையராஜாவின் லேட்டஸ்ட் கன்னடப் பாடல் ‘ரங்கு ரங்கு’வை ஒலிக்கவிட்டபடி சாலையைக் கடந்து நடந்தேன்.

இதற்குள், நிச்சயமாகப் பத்து நிமிடமாவது கடந்திருக்கும். ஆனால் ‘ட்டூ மினிட்ஸ்’ல் திரும்ப அழைப்பதாகச் சொன்ன அவர்கள் என்னைக் கூப்பிடவில்லை.

அப்போதுமட்டுமில்லை, அன்று முழுக்க, அடுத்த ஒரு வாரத்துக்கு அந்த நிறுவனத்திலிருந்து யாரும் என்னை அழைக்கவில்லை. தேவைப்பட்டால் கூப்பிடுவார்கள் என்று நானும் சும்மா இருந்துவிட்டேன்.

நேற்று காலை, ஸ்ரீமதி என்னைத் தொலைபேசியில் அழைத்தார், ‘சார், நான் சொன்னேனே, அந்தக் கம்பெனியிலிருந்து உங்களுக்கு யாராவது ஃபோன் பண்ணாங்களா?’

‘ஆமாம் ஸ்ரீமதி, ஒரு ஃபோன் வந்தது’

‘நீங்க என்ன சொன்னீங்க?’

‘நான் அப்போ கொஞ்சம் பிஸியா இருந்தேன், அதனால ட்டூ மினிட்ஸ் கழிச்சுக் கால் பண்ணச் சொன்னேன், ஆனா அவங்க அதுக்கப்புறம் என்னைக் கூப்பிடவே இல்லை’

மறுமுனையில் நிசப்தம். சில விநாடிகளுக்குப்பிறகு, ‘கூப்பிடவே இல்லையா?’ என்று அதிர்ச்சியாகக் கேட்டார் அவர்.

‘இல்லைங்க ஸ்ரீமதி’ நான் என் குற்றவுணர்ச்சியைக் குறைத்துக்கொள்வதற்காகத் தொடர்ந்து பேசினேன், ‘அவங்க மறுபடி கூப்பிட்டிருந்தா நான் உங்களைப்பத்தி நல்லவிதமா சொல்லியிருப்பேன், பட் ஏனோ அவங்க கால் பண்ணவே இல்லை’

ஸ்ரீமதி என்னை நம்பினாரா, இல்லையா, தெரியவில்லை, ‘சரி சார், நான் கொஞ்சம் விசாரிச்சுட்டு, அப்புறமாக் கூப்பிடறேன்’ என்று ஃபோனை வைத்துவிட்டார்.

இரண்டு மணி நேரம் கழித்து, மீண்டும் அவரிடமிருந்து அழைப்பு வந்தது, ‘சார், அவங்க என்னை ரிஜெக்ட் பண்ணிட்டாங்க’

‘எ-என்னாச்சு ஸ்ரீமதி’

‘ஆமா சார், நீங்க பிஸியா இருக்கீங்கன்னதும் அவங்க உங்க கம்பெனியிலயே இன்னொருத்தரைக் கூப்பிட்டுப் பேசியிருக்காங்க, அவர் என்னைப்பத்தி ரொம்ப நெகட்டிவ்வா சொல்லியிருக்கார்போல, அதனால எனக்குக் கொடுக்கறதா இருந்த அந்த Offer-ஐ இன்னொருத்தருக்குக் கொடுத்துட்டாங்களாம்’

எனக்குத் தூக்கிவாரிப்போட்டது, இப்படியெல்லாமா செய்வார்கள்?

இப்போது, அவர் அடக்கமாட்டாமல் அழ ஆரம்பித்திருந்தார், ‘உங்க கம்பெனியில ஒன்னரை வருஷம் சின்ஸியரா வேலை பார்த்தேன் சார், என்னைப்பத்தி நல்லவிதமா எதுவும் சொல்லவேணாம், உதவி செய்யவேணாம், இப்படி எனக்குக் கிடைச்ச நல்ல சான்ஸையும் அழிக்காம இருக்கலாம்ல? இப்ப நான் என்ன செய்வேன் சார்?’

அவர் திட்டுவது என்னையா? அல்லது, அவரைப்பற்றித் தவறாகக் கருத்துச் சொன்ன அந்த இன்னொருவரையா? எனக்குச் சரியாகப் புரியவில்லை.

ஆனால், அழுகிறவர்களுக்கு உடனடியாகச் சமாதானம் சொல்வதைவிட, அவர்களை அழ விடுவதுதான் உத்தமமான விஷயம். ஆகவே, செல்பேசியின் சத்த அளவைக் கொஞ்சம் குறைத்துவிட்டு, அடுத்த சில நிமிடங்கள் அவருடைய அழுகையை, புலம்பலைப் பொறுமையாகக் கேட்டு ‘உம்’ கொட்டிக்கொண்டிருந்தேன்.

அவருக்கு என்னால் என்ன ஆறுதல் சொல்லமுடியும்? அவர் வேலைக்குச் சேர்வதாக இருந்த நிறுவனம், மிக மிகப் பெரியது. அங்கே அவருக்கு ஒரு நல்ல எதிர்காலம் கிடைத்திருக்கவேண்டும். ஆனால், எங்கள் நிறுவனத்தில் வேலை செய்கிற இன்னொருவரால், அந்த அபூர்வமான வாய்ப்பு பறிபோயிருக்கிறது.

அதுமட்டுமில்லை, இனி அவர் எங்கே விண்ணப்பம் செய்தாலும், நிச்சயமாக முந்தைய நிறுவனத்திலிருந்து Reference கேட்பார்கள். எதை நம்பி, யாருடைய பெயரைக் கொடுப்பார் அவர்?

அப்போதுதான் எனக்கு இன்னொரு திகிலான கற்பனை தோன்றியது. ஒருவேளை, நான்தான் ஸ்ரீமதியைப்பற்றி எதிர்மறையான விமர்சனம் சொல்லி அவருடைய வேலைவாய்ப்பைக் கெடுத்துவிட்டதாக அவர் நினைக்கிறாரோ? நிஜமாகவே நான் அவர்களிடம் எதுவும் பேசவில்லை என்பதை எப்படி அவருக்கு நிரூபிப்பேன்?

இப்படி நினைக்க ஆரம்பித்ததும், என்னுடைய குற்றவுணர்ச்சி அதிகமாகிவிட்டது. சாதாரண சூப்பர் மார்க்கெட் க்யூ, அது ரொம்ப முக்கியமா? இரண்டு நிமிடம் அவரைப்பற்றி நல்லவிதமாகப் பேசிவிட்டு, அதன்பிறகு பில் போட்டிருந்தால் நான் என்ன குறைந்துபோயிருப்பேனா? ‘எல்லாம் ட்டூ மினிட்ஸ் கழிச்சுப் பேசிக்கலாம்’ என்று நான் அலட்சியம் காட்டியதால்தானே அவர்கள் இன்னொருவரை அழைத்தார்கள்? அதனால்தானே இந்தப் பெண்ணின் வேலைவாய்ப்பு கெட்டுப்போச்சு?

யார் கண்டது? ஒருவேளை நான் அந்த அழைப்பைத் துண்டிக்காமல் தொடர்ந்து பேசியிருந்தால், இப்போது ஸ்ரீமதி தொலைபேசியில் அழுகிற அவசியம் ஏற்பட்டிருக்காதோ என்னவோ.

ஸ்ரீமதி சிறிது நேரம் அழுதார், நிறைய நேரம் புலம்பினார், அதன்பிறகு அவரே ஏதோ ஒருவிதத்தில் சமாதானம் அடைந்தார், ‘சரி சார், உங்க உதவிக்கு நன்றி’ என்று வஞ்சப் புகழ்ச்சி அணியில் சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தார்.

இனிமேல், ஸ்ரீமதி இழந்த அந்த வேலையைத் திரும்ப வாங்கித்தருவதற்கு என்னால் எதுவும் செய்யமுடியாது. ஆனால் அடுத்தமுறை ‘ட்டூ மினிட்ஸ்’ என்று என் சவுகர்யத்துக்காக ஒரு விஷயத்தைத் தள்ளிப்போடுவதற்குமுன்னால், கொஞ்சமாவது யோசிப்பேன்.

***

என். சொக்கன் …

10 08 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

30 Responses to "ட்டூ மினிட்ஸ்"

”ஒரு டூ மினிட்ஸ் கழித்து” அல்லது “நான் பிற்கு சொல்கிறேன்” என்பது அடுத்த முனையில் இருக்கும் சிலரால் “எனக்கு அவரை பற்றி கூற positveஆக ஒன்றும் இல்லை” என்று எடுத்துக்கொள்ளப்படுவது வாழ்க்கையின் நடைமுறைச்சிக்கல்களில் ஒன்று

ஒரு டூ மினிட்ஸ் கழிச்சு வந்து பதிவைப் படிச்சுக்கறேன்!!

ரொம்ப கஷ்டமா இருக்கு நினைச்சாலே….

Enna sir, pannarathu.. Antha company karangalathan kuthama sollanum..

Un kuthama .. Yen kuthama.. Yara nanum kutham solla ?

Nice post. so every ringing phone should be answered.
(Thanks – Phone Booth)

//Reference (இதற்கு என்ன தமிழ் வார்த்தை?)//

a letter from a previous employer testifying to someone’s ability or reliability.

ஹி! ஹி! ஹி!!! எனக்கும் தெரியாது

எஸ்கேப்.

ஹூம் .யோசிக்க வைக்கும் நிகழ்வு.

தன்னை பற்றி மோசமாக சொல்லக் கூடியவரை சிபாரிசு செய்பவராக அந்தப் பெண் குறிப்பிட்டிருக்கக் கூடாது.

கூப்பிட்டவர்களும், உங்களிடம் பேச சில நிமிடங்கள் இருக்குமா எனக்கேட்க்கும் courtesy இருந்திருக்க வேண்டும்.. கூப்பிட்ட போதெல்லாம் பேச வேண்டும் என நினைப்பது என்ன பெரிய நிறுவனத்தில் வேலை செய்யும் ஆட்கள் ..

ஆனாலும் நன்றே செய், அதை என்றே செய், அதையும் இப்பொழுதே செய்-நு சொல்லுவாங்க .. அது சரிதான் ..

Kill the guilt please. Tell Srimathi that however big/reputed the company is they don’t deserve her service at all. Probably she is well off NOT working there! The company lacks basic human values.

உடனடியாக என் நண்பன் ஒருவனுக்கு இதை படிக்க கொடுக்க வேண்டும். ரெகோ கேட்கும் சம்பிரதாயத்தில் உடன்பாடு உண்டா உங்களுக்கு?

புருனோ, இலவசக்கொத்தனார், சித்தார்த், Karthi, Balakumaran, ஜோ, சத்யராஜ்குமார், யாத்திரீகன், Dinesh, Prakash,

நன்றி 🙂

//”ஒரு டூ மினிட்ஸ் கழித்து” அல்லது “நான் பிற்கு சொல்கிறேன்” என்பது அடுத்த முனையில் இருக்கும் சிலரால் “எனக்கு அவரை பற்றி கூற positveஆக ஒன்றும் இல்லை” என்று எடுத்துக்கொள்ளப்படுவது//

அடடா, இப்படி ஒரு கோணம் இருக்கா? :-S

//ஒரு டூ மினிட்ஸ் கழிச்சு வந்து பதிவைப் படிச்சுக்கறேன்!!//

திருப்பதிக்கே அல்வா? மாகிக்கே டூ மினிட்ஸ்? 😉

//தன்னை பற்றி மோசமாக சொல்லக் கூடியவரை சிபாரிசு செய்பவராக அந்தப் பெண் குறிப்பிட்டிருக்கக் கூடாது//

நானும் அப்படிதான் நினைத்தேன். ஆனால் புரூனோ சொல்வதைப் பார்த்தால் இன்னொரு கோணமும் தெரிகிறதே 🙂 நானே பிரச்னைக்குக் காரணகர்த்தாவாக இருந்திருக்கலாம்போல.

//கூப்பிட்டவர்களும், உங்களிடம் பேச சில நிமிடங்கள் இருக்குமா எனக்கேட்க்கும் courtesy இருந்திருக்க வேண்டும்//

ஆமாம், அதனால்தான் மேலே Courtesy என்ற tag சேர்த்தேன்.

இன்னொரு கோணத்தில் யோசித்தால், அவர்கள் அடுத்த நபரின் நெகட்டிவ் விமர்சனங்களைக் கேட்டபிறகு, என்னிடம் பேசுவது அநாவசியம் எனக் கருதியிருக்கலாம்.

ஓர் எதிர்மறை விமர்சனம் வந்துவிட்டபிறகு, நான் என்ன சொல்லி என்ன ஆகியிருக்கப்போகிறது என்றும் தத்துவார்த்தமாக யோசிக்கலாம் 🙂

//Tell Srimathi that however big/reputed the company is they don’t deserve her service at all//

This is true, But I don’t have the heart to tell her!

//ரெகோ கேட்கும் சம்பிரதாயத்தில் உடன்பாடு உண்டா உங்களுக்கு?//

ரெகோ?

ஒரு செலிப்ரட்டி ரெஃபரன்ஸ்க்காக நம்பர் கொடுத்திருக்க கூடாது, கொடுத்துவிட்டீர்கள்.
பேசமுடியா நேரத்தில் புது நம்பரில் இருந்துவரும் அழைப்பிற்கு பதிலளித்திருக்க கூடாது, பதிலளித்துவிட்டீர்கள்.
2 அல்ல 20 மினிட்ஸில் திரும்ப அழைத்திருக்க வேண்டும். அதைச்செய்யவில்லை.

ஆனால் ஒரு பதிவு வாசிக்க கொடுத்து, எங்கள் ட்டு மினிட்ஸை ட்ரூ மினிட்ஸாக்கியதற்கு நன்றி.

Recommendation இன் சுருக்கம் தான் எங்கள் கல்லூரி வழக்காடலில் ரெகோ ( reco) அதுவும் reference உம் ஒன்று தான்

Bad Luck.neenga again call panni unga situationa solrikalam.

//ரெகோ கேட்கும் சம்பிரதாயத்தில் உடன்பாடு உண்டா உங்களுக்கு?//

Recommendation தருவதை சுருக்கமாக Reco என்றும் சொல்வதுண்டு. அதைத்தான் பிரகாஷ் குறிப்பிடுகிறார்.

இதில் குற்ற உணர்ச்சிக்கு இடம் தேவையில்லை என்றுதான் நினைக்கிறேன்.

பொதுவாக தொலைபேசியில் மட்டுமல்லாமல் தொடர்ந்து ஈமெயிலில்தான் ரெஃப்ரண்ஸ் செக் செய்வார்கள். ஆனால் இதை சம்பந்தபட்டவருக்கு தெரிவிக்க மாட்டார்கள். உங்கள் கொலீக் எப்படி அந்த தகவல் எல்லாம் பெற்றார் என்று புதிராக இருக்கிறது. அது ஒரு புறம் இருக்க…

ரெஃப்ரண்ஸ் பரிசோதனை நடத்துகிறவர்கள் அதே கம்பெனியின் ஆட்க்ளாக இருக்க மாட்டார்கள். இதற்கென்று தனியாக கம்பெனிகள் இருக்கினறன. அவர்களுக்கும் ஒரு நாளைக்கு இத்தனை முடிக்க வேண்டும் என்று குறிக்கோள் இருக்கும். இரண்டு நிமிடங்கள் கழித்து கூப்பிடுவதற்குள் டார்கெட்டை முடிக்கும் அவசரத்தில் நோ ரெஸ்பான்ஸ் போட்டுவிட்டு அடுத்த வாடிக்கையாளரை தேடி போயிருக்க வாய்ப்புண்டு.

எனக்கு ஒன்றுதான் புரியவில்லை. விசுவாசமாக உழைத்ததற்கு நல்ல ரெஃப்ர்ண்ஸ் கொடுக்கலாம் என்று நீங்களாக நினைக்க வேண்டுமே தவிர, உங்கள் கொலீக் அதை ‘கட்டாயமாக’ செய்யவேண்டும் என்று எதிர்பார்பது முறையல்ல.

உங்களிடம் புலம்புவதைக் காட்டிலும் அவருக்கு ‘தெரிந்த’ அந்த இன்னொருவரைக் கூப்பிட்டு கேட்டிருக்கலாம் அவர். 🙂

Thank you Chokkan.
Thanks for sharing.
God Bless.

நீங்கள் நல்லபடியாகச் சொல்லியிருந்தாலும் அவர்கள் இன்னொருத்தரைக் கேட்டிருப்பார்கள். குறைந்த பட்சம் ஐந்து பேர்களைக் கேட்பார்கள்.(பிராபபிலிட்டி தியரி படி மூன்று பேரைக் கேட்டாலே போதும். ஆனா அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லே என்கிற சூத்திரத்தை கடை பிடிக்கிறார்கள்)

நோ ரெக்ரேட்ஸ்.

யாருக்கு நடக்கும் தீமையும் பிறரால் வருவதல்ல, நன்மையும் பிறரால் வருவதல்ல. நம்மிடமிருந்து போனதுதான் நமக்கு வரும் என்கிறார் என் அபிமான சுவாமி விவேகானந்தா.

http://kgjawarlal.wordpress.com

அருமையான பாடம் நன்பா…reference na முன்னொழிவது nu வச்சிக்கலாமா?

வாழ்க்கையில் சிலசமயம் சரியான நேரத்தில் சரியான விஷயங்கள் நடக்கின்றன. தப்பான நேரங்களில் தப்பான விஷயங்கள் நடக்கின்றன. சிலசமயம் சரியான நேரத்தில் தப்பான விஷயங்கள் நடக்கும்போதுதான் வம்பே. எனக்கும் இந்த மாதிரி ரெஃபரன்ஸ் அழைப்புகள் நிறைய வந்துள்ளன. நட்புக் கருதியோ உண்மையான காரணங்களாலோ ’அவரு நல்லவரு வல்லவரு’ என்று சொல்லும்படி நேரிட்டிருக்கிறது. இதை ஒரு ஃபார்மாலிட்டியாகவே நான் கருதுகிறேன். யாரிடம் விசாரிக்கிறார்களோ அவரிடம் அந்த candidate தன்னைப் பற்றி நல்ல விதமாய் பேசுமாறு ஏற்கெனவே சொல்லிவைத்திருப்பார்கள் என்று நிறுவனத்திலிருந்து அழைப்பவர்களுக்குத் தெரியாதா என்ன? உங்கள் வருத்தம் புரிகிறது. ஆனால் உலகத்தில் நடக்கும் எல்லாவற்றிற்கும் நாம் முன்கூட்டியே அனுமானித்து பொறுப்பேற்றுக் கொள்ளவும் முடியாது. என்ன சொல்கிறீர்கள்?

// தேவைப்பட்டால் கூப்பிடுவார்கள் என்று நானும் சும்மா இருந்துவிட்டேன்.//

May be you didn’t have anything positive to say either. If you did, you would not have been so indifferent to the call.

She came and requested your permission to put you as a referee in her resume. By agreeing to it, you had accepted a responsibility. Wish you hadn’t been so lackadaisical.

உங்க மேல தவறு இருப்பதாக‌ எனக்கு தெரியவில்லை. இதைப் போல பலர் என்னை ரெஃபரன்ஸாக போட்டுள்ளார்கள். அதிலும் என் ப்ராஜக்டில் பணி புரியும் சிலர் கூட இப்படி போட்டுள்ளார்கள். அதனால் அழைப்பு வரும் போது என் க்யூபிகளிலிருந்து பேச முடியாது. அதனால் இரண்டு நிமிடம் கழித்து அழைக்க சொல்வேன். அவர்களும் அதைப் போலவே இரண்டு நிமிடம் கழித்து அழைப்பார்கள். சில‌ ச‌ம‌ய‌ம் ஐந்து ப‌த்து நிமிட‌ங்க‌ள் ஆக‌லாம்.

மேலும் ரெஃப‌ர‌ன்ஸ் கொடுக்கும் போது அவ‌ர்க‌ளுட‌ன் ந‌ம‌க்கு ந‌ல்ல‌ ப‌ழ‌க்க‌ம் இருக்க‌ வேண்டும். பெரும்பாலும் பெரிய‌ நிறுவ‌ன‌ங்க‌ள் நாம் ரெஃப‌ரென்ஸ் கொடுத்த‌ அனைவ‌ரையும் அழைப்பார்க‌ள். அப்ப‌டி இருக்கும் போது உங்க‌ ந‌ண்ப‌ர் த‌ன்னைப் ப‌ற்றி த‌வ‌றாக‌ சொல்ல‌க்கூடிய‌ வாய்ப்பிருக்கும் ஒருவ‌ரின் எண்ணைக் கொடுத்திருக்க‌ கூடாது.

reference க்கு தமிழ் அர்த்தம் பலுக்கல் / ஆதாரம் என்று விக்கி சொல்கிறது. பலுக்கல் கேள்விபட்ட மாதிரி தெரியவில்லை. யாராவது தமிழ் ஆசிரியர் இதை படித்தால் அகராதியில் இந்த வார்த்தைக்குப் பலுக்கல் இருக்கா என்று பார்த்து சொல்லலாமே! :-):-):-):-)
சொக்கன்! நீங்கள் எந்த அரசாங்க நிறுவனத்தில் வேலை செய்கிறீர்கள். ஸ்ரீமதி மூச்சுக்கு முந்நூறு தடவை உங்களை சார் போட்டு அழைத்திருக்கிறாரே, அதான் கேட்டேன். மென்பொருள் நிறுவனங்களிலெல்லாம் ‘சார்’ காலாவதியாகி ரொம்ப வருஷம் ஆயிடுச்சு சார். :-):-):-):-)
நகைச்சுவை நீங்கலாக, சுவாரஸ்யமானதொரு கட்டுரை. ஸ்ரீமதிக்கு என்ன ஆயிற்று என்பது நல்ல விறு விறு! பார்த்துங்கோங்க சார், யாராவது சிறுகதையா போட்டுட போறாங்க!!!
நன்றி,
தி.சு.பா.

பீர், Prakash, Mahesh, Sridhar Narayanan, Srinivasan, Jawahar, ravisuga, சித்ரன், Prem V, Balaji Manoharan, தி.சு.பா.,

நன்றி 🙂

//செலிப்ரட்டி//

ஐயா, இதென்ன நக்கல்? 🙂

//2 அல்ல 20 மினிட்ஸில் திரும்ப அழைத்திருக்க வேண்டும்//
//neenga again call panni unga situationa solrikalam//
//She came and requested your permission to put you as a referee in her resume. By agreeing to it, you had accepted a responsibility. Wish you hadn’t been so lackadaisical//

செய்திருக்கலாம். அப்போது இது இத்தனை சீரியஸாகும் என்று தெரியவில்லையே – வழக்கமான ஃபோன் கால் என்று நினைத்துவிட்டேன் – இந்தப் பதிவின் நோக்கமே, அதுபோன்ற அலட்சியங்களை இனி (நான்) தவிர்க்கவேண்டும் என்பதற்காகதான்!

//Recommendation இன் சுருக்கம் தான் எங்கள் கல்லூரி வழக்காடலில் ரெகோ ( reco) அதுவும் reference உம் ஒன்று தான்//

இல்லை நண்பரே. நான் சொல்லும் ரெஃபரன்ஸ், ஒருவர் யாருடைய சிபாரிசும் இன்றி, தன்னுடைய முயற்சியில் ஓர் இடத்தில் வேலைக்குச் சேர்கிறார், அங்கே சேருமுன் அவர்கள் அவருடைய நடத்தை / திறமையை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக என்னிடம் பேசுகிறார்கள் – இங்கே நான் அவரைச் சிபாரிசு செய்யவில்லை, என் கருத்துகளைச் சொல்கிறேன், அதை அவர்கள் ஏற்கலாம், மறுக்கலாம், இதுவும் நீங்கள் சொல்லும் ‘ரெகோ’வும் ஒன்றல்ல என்பது என் கருத்து

Of course, “Employee Reference” என்று ஒரு சமாசாரம் இருக்கிறது, அதுவும் இந்த ‘ரெகோ’வும் ஒன்றுதான் 🙂

//உங்கள் கொலீக் எப்படி அந்த தகவல் எல்லாம் பெற்றார் என்று புதிராக இருக்கிறது//

ஸ்ரீமதி வேலைக்குச் சேர்வதாக இருந்த நிறுவனத்தின் மேனேஜர் இவரைக் கூப்பிட்டு, ‘என்ன ஆச்சு? ஏன் இன்னும் ஜாயின் பண்ணலை?’ என்று விசாரித்திருக்கிறார், ’அப்பாயிண்ட்மென்ட் லெட்டரே வரலை’ என்று இவர் பதில் சொன்னதும், இதையெல்லாம் அவரே HR இடம் விசாரித்துச் சொல்லியிருக்கிறார்

//விசுவாசமாக உழைத்ததற்கு நல்ல ரெஃப்ர்ண்ஸ் கொடுக்கலாம் என்று நீங்களாக நினைக்க வேண்டுமே தவிர, உங்கள் கொலீக் அதை ‘கட்டாயமாக’ செய்யவேண்டும் என்று எதிர்பார்பது முறையல்ல//

உண்மைதான். அதேசமயம் நியாயமான காரணங்கள் இல்லாதவரை தவறான ரெஃபரன்ஸ் தருவதும் முறையல்ல என்று அவர் நினைப்பதில் ஒரு நியாயம் இருக்கிறது என்று நினைக்கிறேன் (யம்மாடி, எம்மாம்பெரிய குழப்ப வாக்கியம்!)

//உங்களிடம் புலம்புவதைக் காட்டிலும் அவருக்கு ‘தெரிந்த’ அந்த இன்னொருவரைக் கூப்பிட்டு கேட்டிருக்கலாம் அவர்//

🙂 அவருக்கு நான்தான் ஏமாளியாகத் தெரிந்தேனோ என்னவோ 😉

//ஆனால் உலகத்தில் நடக்கும் எல்லாவற்றிற்கும் நாம் முன்கூட்டியே அனுமானித்து பொறுப்பேற்றுக் கொள்ளவும் முடியாது//

உண்மை. ஆனால் அனைத்திலும் நமக்கு ஒரு பாடம் இருக்கிறது, அதைப் புரிந்துகொள்ளமுடிந்தால் போதும் 🙂

//உங்க‌ ந‌ண்ப‌ர் த‌ன்னைப் ப‌ற்றி த‌வ‌றாக‌ சொல்ல‌க்கூடிய‌ வாய்ப்பிருக்கும் ஒருவ‌ரின் எண்ணைக் கொடுத்திருக்க‌ கூடாது//

அவர் தவறாகச் சொல்வார் என்று ஸ்ரீமதி எதிர்பார்த்திருக்கமாட்டார் என்று நினைக்கிரேன்

//நீங்கள் எந்த அரசாங்க நிறுவனத்தில் வேலை செய்கிறீர்கள். ஸ்ரீமதி மூச்சுக்கு முந்நூறு தடவை உங்களை சார் போட்டு அழைத்திருக்கிறாரே, அதான் கேட்டேன். மென்பொருள் நிறுவனங்களிலெல்லாம் ‘சார்’ காலாவதியாகி ரொம்ப வருஷம் ஆயிடுச்சு சார்//

:))) என்ன செய்வது, இங்கேயும் சிலருக்கு ‘சார்’ பழக்கம் போவதில்லை 🙂

ரெபரன்ஸ் ( அறிமுகம் ) செய்வதில் உள்ள கஷ்ட நஷ்டங்கள் இங்கு நன்கு அலசப்படுகின்றன!

தெரியாத நம்பர் கால் வந்தால், வேலையாக இருந்தால், டிச்கனக்ட் செய்துவிட்டு, நேரம் இருக்கும் போது போன் காலை எடுக்க வேண்டும்….

( எமர்ஜென்சி என்று குடும்பத்தில் யாரவது கூப்பிட்டால்? வெயிட் .. மீண்டும் கூப்பிடுவார்கள்.. எச்.ஆர அப்படி இல்லை! )

நீங்கள் உங்கள் பில்லை தள்ளிப்போட்டு கால் எடுத்திருக்கலாம் என்பது என் எண்ணம். ஆயினும், நீங்கள் அவர்களிடம் கவுண்டரில் இருக்கிறேன் என்று சொல்லியிருந்தால் அவர்கள் கண்டிப்பாக திரும்ப அழைத்திருப்பார்கள். சொல்லாததால் அவர்கள் ஒருவேளை நீங்கள் ஸ்ரீமதியைதான் அழைத்து கேட்டுக்கொண்டு பின் பேசுவீர்கள் என்று நினைத்திருக்கலாம்.

எப்படியோ சரியான “தசாவதாரம்” கதையாக இருக்கிறது. கேயாஸ் தியரிபடி எங்களுக்கு ஒரு போஸ்ட் படிக்கக் கிடைத்தது, ஸ்ரீமதிக்கு இன்னும் நல்ல வேலை கிட்டலாம் அல்லது வாழ்வில் வேறு ஒரு திருப்பம் வரலாம்.

நீங்கள் அதுபற்றி யோசித்து (வேறு வேலை இல்லையென்றால்) அவருக்கு வேலை கிடைத்திருந்தால் / கிடைக்காவிட்டால் என்று 12பி எழுதலாம்!

🙂

when ever i agree to provide reference, i have asked my ex.colleagues to send a detailed mail and an SMS with their joining date, designation, relieving date, approx salary drawn, designation at the time of resignation in my company as well as the post applied in the next company. some times they even send the board line numbers of the next company, so that i do not miss out on giving reference. Any way, it is a lesson, you would be more careful in the future.

//இந்தப் பதிவின் நோக்கமே, அதுபோன்ற அலட்சியங்களை இனி (நான்) தவிர்க்கவேண்டும் என்பதற்காகதான்!//

நீங்கள் மட்டுமல்ல, நாங்கள் அனைவருமே தவிர்க்க வேண்டும்

vijayashankar, R Sathyamurthy, Rajan, புருனோ,

நன்றி 🙂

//தெரியாத நம்பர் கால் வந்தால், வேலையாக இருந்தால், டிச்கனக்ட் செய்துவிட்டு//
//நீங்கள் உங்கள் பில்லை தள்ளிப்போட்டு கால் எடுத்திருக்கலாம்//

இரண்டுமே சரிதான். அப்போதைக்குச் செய்த Impulse decision சில சமயங்களில் தவறாகிவிடுகிறது

//ஸ்ரீமதிக்கு இன்னும் நல்ல வேலை கிட்டலாம் அல்லது வாழ்வில் வேறு ஒரு திருப்பம் வரலாம். நீங்கள் அதுபற்றி யோசித்து 12பி எழுதலாம்!//

ஏற்கெனவே நான் ரொம்ப நீளமா எழுதறேன்னு எல்லாரும் கம்ப்ளெய்ண்ட்டு, இதில நீங்க வேற 🙂

Two minutes….

அண்ணே, இந்த இரண்டு நிமிடம் கழித்து கால் பண்றீங்களான்னு சொன்னால் அந்த் கால் திரும்ப வராதுன்னு நான் ஏற்கனவே புரிஞ்சிக்கிட்ட ஒன்னு.

அதனால், ரொம்ப அவசரமான காலாக இருந்தால், எவ்வளவு பிஸியா இருந்தாலும் அதற்கு பதில் சொல்லிடுவேன்.. அப்படியே சொல்ல முடியாமல் போனால், அவங்க நம்பரை வாங்கி வைத்துக்கொண்டு இரண்டு நிமிடம் கழித்து நானே கால் பண்ணிடுவேன்..

வேற வழி இல்ல.. 😦

மை ஃபிரண்ட்,

நன்றி 🙂

//அவங்க நம்பரை வாங்கி வைத்துக்கொண்டு இரண்டு நிமிடம் கழித்து நானே கால் பண்ணிடுவேன்..வேற வழி இல்ல.. //

ம்ம், நானும் அதைச் செஞ்சிருக்கணும் 🙂 தவற விட்டுட்டு இப்போ புலம்பி என்ன பிரயோஜனம்? ஹும்ம்ம்ம்ம்ம்ம்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,480 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்

Tamilish

For தமிழ் Peopleதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

August 2009
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
%d bloggers like this: