மனம் போன போக்கில்

கைதட்டல்கள்

Posted on: August 24, 2009

’கலைஞன்’ என்ற படத்தில், கமலஹாசன் ஒரு நடனக் கலைஞராக வருவார், ‘கலைஞன் கட்டுக் காவல் விட்டோடும் காற்றைப்போல, சிறிய வட்டத்துக்குள் நிற்காத ஊற்றைப்போல’ என்று ECG கிராஃப்போல ஏறி ஏறி இறங்குகிற ட்யூனுக்குள் வாலி ஒளித்துவைத்த வரிகளை SPB குரலில் பாடி ஆடிக்கொண்டிருக்கும்போது, திடீரென்று சின்ன வயது ஞாபகம் வந்துவிட, துள்ளலெல்லாம் மறந்து மேடையிலேயே அத்தனை ரசிகர்கள் முன்னிலையில் உணர்ச்சிவயப்பட்டு விசும்ப ஆரம்பித்துவிடுவார்.

அப்புறம் சில நிமிடங்கள் கழித்து சுதாரித்துக்கொள்ளும் கமல், நிலைமையைச் சமாளிப்பதற்காக ஒரு பிட்டைப் போடுவார், ‘ஒரு கலைஞனுக்குப் பாராட்டுகள், கைதட்டல்தான் முக்கியம், ஆகவே நிறையப் பாராட்டுங்கள்’ என்று அவர் ஏதோ உணர்ச்சிமயமாகப் பேசிவைக்க, ரசிகர்களாகிய துணை நடிகர்களும் வாங்கிய காசுக்கு வஞ்சகமில்லாமல் கண்டபடி கைதட்டி ஸ்பீக்கரைக் கிழிப்பார்கள்.

கலைஞர்களுக்குமட்டுமில்லை, உங்களுக்கும் எனக்கும்கூடப் பாராட்டுகள் முக்கியம்தான். ‘இன்னிக்கு நீங்க ரொம்ப ஃப்ரெஷ்ஷா இருக்கீங்க’ என்பதுபோன்ற சாதாரண வாசகங்கள் தொடங்கி, ஏதாவது ஒரு வேலையை உருப்படியாகச் செய்து சக ஊழியர் அல்லது மேலதிகாரியிடம் வாங்குகிற முதுகுதட்டல், ஷொட்டுகள்வரை அவ்வப்போது இந்த மானசீகக் கைதட்டல்கள் இல்லாவிட்டால், யாரும் ’காலை எழுந்தவுடன் ஆஃபீஸ்’ என்று உற்சாகமாகக் கிளம்பிவரமாட்டார்கள் என நினைக்கிறேன்.

இணையத்தில்மட்டுமென்ன? ஒரு பதிவு எழுதி ‘Publish’ பொத்தானை அமுக்கிய இரண்டாவது நிமிடத்திலிருந்து, யாராவது feedback அனுப்பமாட்டார்களா என்று மெயில்பாக்ஸைத் தேட ஆரம்பித்துவிடுகிறோம். மின்னஞ்சலிலோ, கூகுள் அரட்டையிலோ யாராவது கூப்பிட்டு இரண்டு வரி பாராட்டிவிட்டால் அன்று முழுக்க மிதந்துதான் நடக்கவேண்டியிருக்கிறது.

நாங்கள் Corporate Clients-க்கு Training எடுக்கும்போதெல்லாம், அதன் முடிவில் மாணவர்களுக்கு Feedback Forms கொடுப்போம் – முன்பு பேப்பரில் எழுதச் சொல்வோம், இப்போது அவர்கள் ஆன்லைனிலேயே நிரப்பவேண்டியதுதான், எப்படியாயினும், பூஜ்ஜியம் முதல் ஐந்துவரை நம்முடைய வகுப்புக்கு மக்கள் என்ன மரியாதை தருகிறார்கள் என்பது உடனுக்குடன் தெரிந்துவிடும்.

சென்னையில் ‘தி ஹிந்து’ அலுவலகத்துக்குச் சென்றிருந்தபோது, அங்குள்ள கேன்ட்டீனில் ஒரு வித்தியாசமான சமாசாரம் பார்த்தேன். சாப்பிட்டுவிட்டுக் கை கழுவும் இடத்தில் நிறைய சிவப்பு, பச்சை, மஞ்சள் நிறப் பந்துகளை ஒரு குடுவையில் நிரப்பிவைத்திருந்தார்கள்.

‘இது எதுக்கு?’ என்னை அழைத்துச்சென்ற நண்பரிடம் விசாரித்தேன்.

‘ஓ, அதுவா? கேன்ட்டீன் சாப்பாட்டுக்கு Feedback’

எனக்குப் புரியவில்லை, அவர் விளக்கினார், ‘ஒவ்வொரு நாளும் சாப்பிட்டுக் கைகழுவி முடிச்சப்புறம், நமக்கு அன்றைய சாப்பாடு பிடிச்சிருந்தா ஒரு பச்சைப் பந்தை எடுத்து இந்த ஜாடியில போடணும், பிடிக்கலைன்னா சிவப்புப் பந்து, நிச்சயமாத் தெரியலை, குழப்பமா இருக்குன்னா மஞ்சள் பந்து, இப்படி ஒவ்வொரு நாளும் ஜாடியில எத்தனை பந்து எந்தெந்த நிறத்திலே இருக்குன்னு எண்ணிப் பார்த்து Feedback Score கணக்கிடுவாங்க’

மேடைக் கச்சேரி செய்கிற கர்நாடக சங்கீதப் பாடகர்களுக்கு இந்தப் பிரச்னையே இல்லை, ஒவ்வொரு வரிக்கும் தொடையைத் தட்டித் தாளம் போட்டபடி ரசிகர்கள் ஆனந்தமாகத் தலையாட்டுவது அவர்களுக்கு மினி கைதட்டல்களாகவே கேட்கும்.

ஆனால், கல்யாணக் கச்சேரிப் பாடகர்களுக்கு இந்தப் பாக்கியம் வாய்ப்பதில்லை. அவர்கள் எப்பேர்ப்பட்ட திறமைசாலிகளாக இருந்தாலும் சரி, என்னதான் பிரமாதமாகப் பாடினாலும் சரி, பெரும்பாலான மக்கள் தங்களுடைய சலசல பேச்சில்தான் கவனமாக இருப்பது வழக்கம்.

ஒருமுறை திருப்பூரில் என் சிநேகிதன் தங்கை திருமணம், வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஒரு மிகப் பெரிய பாடகியின் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள். அவருடைய பெயரைச் சொன்னால் பிரச்னை வரும், நான் அந்தக் கச்சேரிக்காகவே கோயம்பத்தூரிலிருந்து திருப்பூர் ஓடினேன் என்பதைமட்டும் சொல்லிவிடுகிறேன்.

ஆனால், அங்கே போய்ச் சேர்ந்த எனக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அப்பேர்ப்பட்ட பாடகிக்கு ஒரு சரியான மேடைகூட அமைத்துத் தராமல் அந்தக் கல்யாண மண்டபத்தின் ஒரு மூலைக்கு ஒதுக்கிவிட்டிருந்தார்கள், நான்கைந்து ஸ்பீக்கர்களில் நிரம்பி வழியும் அவருடைய கணீர் குரலைத் தாண்டி எட்டுத் திசைகளிலும் அரட்டை இரைச்சல், எதிரே முதல் வரிசையில் உட்கார்ந்திருந்த சில சீனியர் சிட்டிசன்களைத்தவிர வேறு யாரும் அவருடைய பாட்டுத்திறமையைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.

இப்படி ரசிக்கவோ, பாராட்டவோ தெரியாத ஜனங்களுக்குமத்தியில் பாடுவது அந்தக் கலைஞர்களுக்கு எப்பேர்ப்பட்ட கொடுமையாக இருந்திருக்கவேண்டும்! ஆனால் அதை அந்தக் கல்யாண வீட்டில் யாரும் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை, ‘அதான் காசு வாங்கிட்டேல்ல? மூலையில உட்கார்ந்து பாடு’

Feedback தருவது, பாராட்டுவதுகூட ஒரு கலைதான். இதற்குத் தனிப்பட்ட திறமையைவிட, மனசுதான் வேண்டும். அது பலருக்கு அமைவதில்லை.

இதற்கு நேரெதிராக, மிகப் பெரிய மனதுக்காரர் ஒருவரை சென்ற வாரம் சந்தித்தேன். அவரைப்பற்றி எழுதுவதற்குதான் இம்மாம்பெரிய பீடிகை.

நான் டெல்லியிலிருந்து பெங்களூருக்குப் பயணம் செய்த விமானத்தில், அவர் எனக்குப் பக்கத்து இருக்கை, மோகன்போல மீசை, நல்ல உயரம், சியாமள வண்ணம்.

விமானம் புறப்பட்டுச் சில நிமிடங்கள் கழித்து, அவர் ஒரு பொத்தானை அழுத்தி ஏர் ஹோஸ்டஸை அழைத்தார், ‘எனக்குக் கழுத்து வலிக்குது, உங்ககிட்ட ஏதாவது பெயின் கில்லர் இருக்குமா?’

’ஷ்யூர் சார்’, அவர் ஒரு மஞ்சள் நிற மருந்தைக் கொண்டுவந்து கொடுத்தார், ‘ஐஸ் க்யூப்ஸ் கொண்டுவரட்டுமா சார்?’

‘வேணாங்க, இதுவே போதும்’ அவர் அந்த மருந்தைப் பரபரவென்று கழுத்தில் தடவிக்கொண்டார். அப்போதும் வலி குறையவில்லை என்பது அவருடைய முகபாவனையில் தெளிவாகத் தெரிந்தது.

இப்போது அந்த விமானப் பணிப்பெண் ஒரு சின்னத் தலையணை கொண்டுவந்து அவர் முதுகில் வைத்தார், ‘கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுங்க சார், எல்லாம் சரியாயிடும்’

‘தேங்க் யூ’, அவர் ட்யூபைத் திருப்பிக் கொடுத்துவிட்டு லேசாகச் சரிந்து ஓய்வெடுத்தார். இமைகளை மூடினாலும், கண்கள் இலக்கில்லாமல் அங்கும் இங்கும் அலைபாய்வது தெரிந்தது.

அடுத்த அரை மணி நேரத்தில், அந்தப் பணிப்பெண் அவருக்கு ஏகப்பட்ட சேவைகளைச் செய்துகொண்டிருந்தார், முதலில் ஐஸ் கட்டிகளும், அதில் நனைத்த பூந்துவாலைகளும் வந்தன, அது சரிப்படவில்லை என்றதும் வெந்நீர் ஒத்தடம் தருகிற உபகரணம் ஒன்றைக் கொண்டுவந்து கொடுத்தார், பழைய மஞ்சள் ட்யூபுக்குப் பதில் இன்னொரு சிவப்பு ட்யூப் மருந்து வந்தது, இதெல்லாம் அவருக்குப் பலன் அளிக்கிறதா என்பதுதான் தெரியவில்லை.

சிறிது நேரத்துக்குப்பிறகு, எல்லோருக்கும் உணவு பரிமாறப்பட்டது. என்னருகே உட்கார்ந்திருந்தவர் சாப்பிட மறுத்துவிட்டார்.

நீங்கள் நினைத்தது சரி, மீண்டும் அந்தப் பணிப்பெண் தோன்றினார், ‘சார், சாப்பிடாம இருந்தீங்கன்னா வலி அதிகமாத் தெரியும், தயவுசெஞ்சு எதாச்சும் சாப்பிடுங்க, நான் உங்களுக்கு பிஸ்கெட்ஸ், ஃப்ரூட்ஸ், ஜூஸ் ஏதாவது கொண்டுவரட்டுமா?’

கடைசியில் அவர் ஒரு வாழைப்பழமும் தேங்காய் குக்கீஸும் சாப்பிட்டார். அந்தத் தட்டுகளைத் திரும்பப் பெறுவதற்கான வண்டி வருவதற்குள், நன்றாகத் தூங்கிவிட்டார்.

முக்கால் மணி நேரம் கழித்து அவர் விழித்தபோது, விமானம் பெங்களூரை நெருங்கிக்கொண்டிருந்தது. தலையணை சரிய எழுந்து நின்றவர், தன்னுடைய ஃபேவரிட் பணிப்பெண்ணைத் தேட ஆரம்பித்தார்.

உடனடியாக, அந்தப் பெண் எங்கிருந்தோ ஓடி வந்தார், ‘இப்போ எப்படி ஃபீல் பண்றீங்க சார்?’

‘பெட்டர்’ என்றார் அவர், ‘ஃப்ளைட் லாண்ட் ஆகப்போகுதா?’, அவருடைய பதற்றத்தைப் பார்த்தால் விமானத்தைக் கடத்த நினைத்து மறந்துபோய் தூங்கிவிட்டவரைப்போல் தெரிந்தது.

’ஆமா சார், இன்னும் டென் மினிட்ஸ்’

’எனக்கு ஒரு Feedback Form வேணுமே’

‘இதோ கொண்டுவர்றேன் சார்’

இரண்டாவது நிமிடம் Feedback Form வந்து சேர்ந்தது. அவர் தனது பேனாவைப் பிதுக்கிக்கொண்டு விறுவிறுவென்று எழுத ஆரம்பித்தார்.

சிறிது நேரத்துக்குள், அந்தப் பக்கம்முழுக்க எழுதிமுடித்துவிட்டார், அடுத்த பக்கமும் தொடர்ந்தார். ஒருவேளை என்னைமாதிரி நீளநீளமாக வலைப்பதிவு எழுதிப் பழக்கமோ என்னவோ.

பத்து நிமிடத்தில், விமானம் ஒரு மிகப் பெரிய படிக்கட்டில் கொஞ்சம் கொஞ்சமாகத் தவழ்ந்து இறங்குவதுபோல் தரையை நோக்கிச் செல்ல ஆரம்பித்திருந்தது. அவர் எழுதி முடித்துவிட்டு, அந்தப் பணிப்பெண்ணைத் தேடினார், ரேடியோ நாடகம்போல் அவர் உடனே வந்து நின்றார், ‘எஸ் சார்?’’

‘உங்க பேர் என்ன?’

’ரீனா தாமஸ்’

’ஸ்பெல்லிங் சொல்லுங்க’

அவர் சொல்லச்சொல்ல கவனமாக அதனை Feedback Formல் நிரப்பினார், ‘இது கரெக்டா இருக்கா?’

‘யெஸ் சார்’

‘இங்கே கொஞ்சம் உட்காருங்க’ அந்தப் பக்கமிருந்த காலி இருக்கையைக் காட்டினார் அவர்.

ரீனா தாமஸுக்குத் தயக்கம், விருந்தினர்முன்னால் உட்காரக்கூடாது என்று அவருக்குச் சொல்லித்தரப்பட்டிருக்கிறதோ என்னவோ, ‘இருக்கட்டும் சார், பரவாயில்லை’ என்றார்.

இப்போது அவர் தான் எழுதிய Feedback வாசகங்களைக் கவனமாகப் படிக்க ஆரம்பித்தார். அக்கம்பக்கத்தில் இருக்கிறவர்கள் கவனிக்கிறார்களே என்பதைப்பற்றிக் கவலைப்படாமல் நன்கு சத்தமாகவே படித்தார், இந்த விமானம் ஏறியதுமுதல் சென்ற நிமிடம்வரை ரீனா தாமஸ் அவருக்குச் செய்த சேவைகளையெல்லாம் குறிப்பிட்டு, தாராளமான வார்த்தைகளில் பாராட்டியிருந்தார்.

அவர் படிக்கப் படிக்க, ரீனா தாமஸ் முகத்தில் பரவிய சிவப்பை வார்த்தைகளில் வர்ணிப்பது சிரமம். அவர் தினம் தினம் வானத்தில் பறந்து சென்றாலும், நிஜமான மிதப்பை அப்போதுதான் உணர்ந்திருப்பார் என்று நினைக்கிறேன்.

முழுக்கப் படித்து முடித்துவிட்டு, பசைக் காகிதத்தைக் கிழித்து ஒட்டினார் அவர், ‘தேங்க் யூ, மிஸ் ரீனா’ என்று அவர் கையில் கொடுத்தார், ‘இந்த Feedback எங்கே போகுமோ எனக்குத் தெரியாது, இதைப் படிக்கிறவங்க உங்ககிட்டே இதைச் சொல்வாங்களாங்கறதும் தெரியலை, அதனாலதான் முதல்ல உங்ககிட்டே படிச்சுக் காட்டிடணும்ன்னு நினைச்சேன், தேங்க்ஸ் ஃபார் எவ்ரிதிங்’

இப்போது விமானம் தரையிறங்க ஆரம்பித்திருந்தது. ஜன்னல் கண்ணாடிவழியே Horizontal கோடுகளைக் கிழித்துச் சென்றது மழை.

***

என். சொக்கன் …

24 08 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

46 Responses to "கைதட்டல்கள்"

Junior,

Great to read this, thanks for sharing.

பாராட்டு என்பது பெரிய டானிக் மாதிரி, அதே மாதிரி தான் நன்றி நவில்தலும், ஒருவர் தன் வண்டியில் லிப்ட் கொடுக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள், இறங்கும்போது, முகமலர்ச்சியுடன் தாராளமாக நாம் நன்றி கூறினால், அந்த நபர் மறுபடியும் இன்னொரு ஆசாமிக்கு லிப்ட் கொடுக்கத் தயங்கவே மாட்டார், இல்லையா ?

எ.அ.பாலா

Sir, Same Experience I got in Bangalore-JeevanBeemaNagar -Malabar Res – Hotel. When I praised the Hotel owner for making different interiors he himself started serving us and treating like friend. Next time,the other serving agents also felt like Owner’s pet and served as good 🙂
Praise is like a salt, if you add properly in proper place, it will add more to taste. but if missed, it will spoil whole cooking!

“Feedback தருவது, பாராட்டுவதுகூட ஒரு கலைதான். இதற்குத் தனிப்பட்ட திறமையைவிட, மனசுதான் வேண்டும். அது பலருக்கு அமைவதில்லை.” – 100% உண்மை.

பி.கு. பணிப்பெண் பெயர் படித்ததும் ஒரு இன்பமான ஆச்சர்யம். அதே பெயரில் எனக்கு ஒரு தோழி – அவர் இப்போது அமெரிக்காவில் மருத்துவர்.

anbudan_BALA, Karthi, Vijay,

நன்றி 🙂

//அதே மாதிரி தான் நன்றி நவில்தலும்//

ரொம்ப உண்மை, பலர் ரோட்டில் வழிவிடுகிறவர்களுக்கெல்லாம் (கடமைக்கு) நன்றி சொல்வார்கள், ஆனால் உண்மையாக நன்றி தெரிவிக்கவேண்டிய இடங்களில் சும்மா நிற்பார்கள் 🙂

ஒரு சினிமாவில் வருமே, ‘வெள்ளைக்காரன் நம்மகிட்டே விட்டுப் போன ரெண்டே ரெண்டு ஆங்கில வார்த்தை, ஸாரி & தேங்க் யூ, இப்ப நீ ஸாரி சொல்லிட்டே, நான் தேங்க் யூ சொல்லிடறேன்’ :)))))

//Praise is like a salt, if you add properly in proper place, it will add more to taste. but if missed, it will spoil whole cooking!//

பிரமாதமான ஒப்பீடு 🙂

//பணிப்பெண் பெயர் படித்ததும் ஒரு இன்பமான ஆச்சர்யம்//

டாக்டர், என் ப்ளாக்ல வர்ற பெரும்பாலான பெயர்கள் என்னோட கற்பனைதான், நிஜப் பெயர் எழுதி வம்பில மாட்டிக்கக்கூடாது பாருங்க 🙂

அருமை…. எழுதிய விதமும் கூட…….

கைதட்டல்கள் தரும் இன்பம் ஒருவிதம் என்றால் எந்தப் பலனும் எதிர்பாராமல் சிலர் செய்யும் சின்னச் சின்ன உதவிகள் தரும் இனிய அதிர்ச்சிகள் இன்னொரு விதம்.

என் அலுவலகத்தை மேற்கு சைதைக்கு மாற்றிவிட்டதால், இப்போதெல்லாம் தினமும் பஸ் பயணம் தான். தூரம் குறைச்சல் தான் ஆனாலும் பஸ் ஃப்ரீக்வென்சியும் குறைவு. சென்ற வாரம் ஒரு நாள் பிற்ககலில், மழை வரும் போலிருந்ததால் சீக்கிரமாகவே வீட்டிற்குக் கிளம்பினேன். எதிரே நான் செல்ல வேண்டிய பேருந்து சென்றது. சரி அடுத்த பஸ் வருவதற்குள் மழை வந்துவிட்டால், ஆட்டோ ஏறிவிடலாம் இல்லாவிட்டால், பஸ் என்று நினைத்து, முனைக் கடையில் ஒரு சிகரட்டை பற்ற வைத்த நேரம், அடுத்த பஸ், ஸ்டாபிங்கில் இருந்து புறப்பட்டது. இதையும் விட்டால், இன்னும் நேரமாகுமே என்ற பதட்டத்துடன் சிகரட்டை அணைத்து விட்டு, பஸ்ஸைப் பிடிக்க தப தபவென்று ஓடினேன்.

பத்திருபது வருடங்களுக்கு முன்பு, அசால்ட்டாகக் கடந்து பஸ்ஸில் தொற்றிக் கொண்டிருக்கக் கூடிய தூரம் அது. மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க, இனி முடியாது என்று நினைத்த நேரத்தில், சென்று கொண்டிருந்த பேருந்துக்கும், எனக்கும் இடையில் ஒரு ஹெல்மெட் அணிந்த மோட்டார்சைக்கிள் காரன், திரும்பி என்னைப் பார்த்து, வண்டியில் ஏறிக்கோ என்கிற பாவனையில் தலையை அசைத்தான். யோசிக்காமல் பில்லியனில் தொற்றிக்கொண்டேன்.

‘அடுத்த ஸ்டாப்பிங்கில் புடிச்சுரலாங்க’ என்று சொல்லிவிட்டு நெரிசலான பாதையில் வண்டியை விரட்டி, அடுத்த ஸ்டாப்பிங்கில் பஸ்ஸுக்கு பக்கத்தில் நிறுத்திவிட்டு திரும்பிப்பார்க்காமல் விரைந்தான். மழையில் மாட்டாமல் வீடு வந்து சேர்ந்தேன்.

என்ன, பைக்கில் இருந்து இறங்கிய போது, அவனுடைய தோளைத் தட்டி ‘தேங்யூ பாஸ்’ என்று சொன்னது, அவனுடைய ஹெல்மெட் காதுக்குள் விழுந்திருக்குமா என்பதுதான் தெரியவில்லை.

Prakash,

நன்றி 🙂

//‘அடுத்த ஸ்டாப்பிங்கில் புடிச்சுரலாங்க’ என்று சொல்லிவிட்டு நெரிசலான பாதையில் வண்டியை விரட்டி, அடுத்த ஸ்டாப்பிங்கில் பஸ்ஸுக்கு பக்கத்தில் நிறுத்திவிட்டு திரும்பிப்பார்க்காமல் விரைந்தான்//

அப்படியே சீட் நுனிக்குக் கொண்டுவந்துட்டீங்க – அட்டகாசமான சிறுகதைங்க இது 🙂

//இணையத்தில்மட்டுமென்ன? ஒரு பதிவு எழுதி ‘Publish’ பொத்தானை அமுக்கிய இரண்டாவது நிமிடத்திலிருந்து, யாராவது feedback அனுப்பமாட்டார்களா என்று மெயில்பாக்ஸைத் தேட ஆரம்பித்துவிடுகிறோம்//

You too…I’m doing the same thing for my first post…but not that much traffic 🙂

Nice post, I like it very much. Most of the things are happening in everyone’s life and I’m sure everyone would have had “Autograph” movie effect.
Praising is infectious too and it has to be a true expression unlike false adulation.
so, asusual this post is rocking.

அருமையான இடுகை..பெரிதாக இருந்த்தாலும் சலிக்கவில்லை..

தி ஹிந்து காண்டீன் feedback முறை interesting…

பாராட்டு ஒரு ஊக்க மருந்து.. சரியான அளவில் நாம் அதை உள்வாங்கினால் நன்மை…ஓவராக ஏத்தி கொண்டால் போதை 🙂

சூப்பர் கதை பிரகாஷ் 🙂

doc, கதையா???? 🙂

அப்பறம், ரீனா தாமஸ் ங்கறது சேரநாட்டிலே ரொம்ப காமன். நம்மூர் சுப்பிரமணியம் மாதிரி 🙂

சொக்கன் சார்… அருமையான பதிவு .ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.. இனிமேல் ஒற்றை வரியில் தேங்க்ஸ் மட்டும் சொல்லாமல் கண்டிப்பா கொஞ்சம் கூச்சத்தை விட்டுட்டு கரெக்டா feedback சொல்லி விடுகிறேன்.

நான் இப்படி நினைக்கிறேன். இதே ரீனா தாமஸ் வீட்லயும் இப்படி இருப்பாங்களா?

நல்ல பதிவு…நிஜம் தான் ஊக்கமும் பாரட்டும் தான் மனிதனை மேலும் மேலும் வளர உதவுகின்றது….

good post.

//Feedback தருவது, பாராட்டுவதுகூட ஒரு கலைதான். இதற்குத் தனிப்பட்ட திறமையைவிட, மனசுதான் வேண்டும். அது பலருக்கு அமைவதில்லை.// – உண்மை

சண்டேன்னா ரெண்டுங்கிற மாதிரி, உங்க அருமையான பகிர்விற்கு சற்றும் சளைக்காத ப்ரகாசரின் நெகிழ்ச்சியான பதில்.

2வருக்கும் அசலாக உதவியவர்களுக்கும் உங்கள் சார்பில் நன்றி.

கலக்கல் பதிவு தல….இங்க (வேலையில்) முக்கியமாக தேவைப்படும் விஷயத்தில் இதுவும் ஒன்று.

பெருசாக இருந்தாலும் நல்ல நடை. ஆமா அந்த பெரிய மனதுக்காரர் உண்மையிலேயே ஒரு படத்தை சொல்லிக் கொடுத்திருக்கிறார் 😉

அதுவும் அவரே படித்து கட்டியது தான் ஸ்பெசல்.;)

இவ்வளவு பெரிய பதிவு சலிக்கவே இல்லை. அருமையான Free Flow நடை. இரண்டுக்குமே காரணம் அந்த இன்சிடன்ட் தந்த தாக்கம்தான் என்று நினைக்கிறேன். பிரகாஷ் சொன்ன சம்பவமும் அருமை. படித்து முடித்த பின் ஜோரா ஒரு முறை கை தட்டினேன். உங்க காதில் கேட்டதா? 🙂

நல்ல ‘appreciation’ கெடைச்சா கால் வலி எல்லாம் சரி ஆகிடும்..உங்க கால் வலி எப்பட இருக்கு 🙂

உமக்கு ஏர்ஹோஸ்டஸ் மசாஜ் பண்ணி விட்டதை வெளியில் சொல்ல தைரியம் இல்லாமல் இப்படி பக்கத்து சீட்காரருக்கு தாரை வார்த்துக் கொடுப்பதை வன்முறையாகக் கண்ணடிக்கிறோம்!!

🙂 நல்ல பதிவு சொக்கன்.

உங்களிடம் பிடித்தது நீங்கள் பார்க்கும் பாஸிடிவ் பார்வைதான். இந்த மாதிரி சம்பவங்கள் படிக்கும்போது நல்ல புத்துணர்ச்சியைத் தருகின்றன.

நீண்ட இரவு நேர பஸ் பயணத்தை முடித்து இறங்கும்போது ஓட்டுநரிடம் சற்றே நின்று கைகொடுத்து ‘தேங்க்ஸ் ஸார். நல்லபடியா ஓட்டிட்டு வந்திட்டீங்க’ன்னு ஒருவாட்டியாவது சொல்லனும்னு நினைப்பேன். ஏனோ ஒரு தயக்கம்… 🙂

லோக்கல் பஸ்ஸில் ஒரு முறை போய்க்கொண்டிருக்கும்போது கூட்டத்தில் உட்கார இடம் கிடைத்து சௌகரியமாக போய்க் கொண்டிருக்கும்போது கைக்குழந்தையோடு ஏறிய பெண்ணுக்கு இடம் கொடுக்க நினைத்து, ஆரம்ப தயக்கத்தை வெற்றிகரமாக ஜெயித்து அவர்களுக்கு இடமும் கொடுத்தேன். சட்டென்று பின்புறத்திலிருந்து ஒரு பெரியவர் தோளைத் தட்டி ‘குட் கெஸ்ட்சர். ஐ லைக் இட்’ என்று சத்தமாக எல்லாரும் கேட்கச் சொன்னார். சந்தோஷத்தை விட வெட்கம்தான் அதிகம் வந்தது. அடுத்த ஸ்டாப்பில் இறங்கி நடந்தே வீட்டுக்குப் போய்விட்டேன். மனதின் ஓரத்தில் கொஞ்சமே கொஞ்சம் பெருமையாடு :))

//மோகன் மீசை// ரசித்தேன்.

good nalla pathivu

///அவருடைய பதற்றத்தைப் பார்த்தால் விமானத்தைக் கடத்த நினைத்து மறந்துபோய் தூங்கிவிட்டவரைப்போல் தெரிந்தது.//

//அவர் படிக்கப் படிக்க, ரீனா தாமஸ் முகத்தில் பரவிய சிவப்பை வார்த்தைகளில் வர்ணிப்பது சிரமம். அவர் தினம் தினம் வானத்தில் பறந்து சென்றாலும், நிஜமான மிதப்பை அப்போதுதான் உணர்ந்திருப்பார் என்று நினைக்கிறேன்.//

ரொம்ப நல்ல பதிவு அப்படின்னு மனசு விட்டுப் பாராட்டிக்கிறேன்.

ஆனா இந்த பாராட்டையெல்லாம் இடம் பொருள் ஏவல் பார்த்து கரெக்டா செய்யணும். உதாரணத்துக்கு எதிர் வீட்டு மாமி கொடுத்த எண்ணெய்க் கத்திரிக்காய் குழம்பை “சூப்பர்” என்று என் மனைவி எதிரிலேயே பாராட்டியதில் “நான் சமைக்கறது நல்லாருக்குன்னு ஒரு நாளாவது சொல்லிருக்கீங்களா? பக்கத்து வீட்ல சுடு தண்ணீர் போட்டுக் குடுத்தா கூட சூப்பர்ங்கறீங்க” என்று அப்புறமாய் ஷொட்டு விழுந்தது.

இந்த கமெண்ட் நல்லாருக்குன்னு பாராட்டினீங்கன்னா அடிக்கடி வந்து நிறைய கமெண்ட் போடுவேன். ஹிஹி!

Dear Mr.Chokkan,
It’s really good post.To praise the people for their good things is really appreciable.Then their work will become better.Your post once again tells me that,every experience is a lesson.

மிகவும் நல்ல பதிவு, நெகிழ வைக்கிறது.

வாழ்த்துக்கள்.

நல்ல பதிவு!

திருப்பூரில் இன்னும் பெரிய தனவந்தர்கள் வீட்டுத் திருமணங்களில், நீங்கள் சொல்லும் கொடுமை நடந்து கொண்டு தான் இருக்கிறது 😦

மிகவும் நல்ல பதிவு சொக்கன்.

வாழ்த்துக்கள்.

Siva

சூப்பர் பதிவு.

‘தேங்க்ஸ’ சொல்வது கூட ஒரு மந்திர சொல் . அதை பெற்றுக்கொள்ளும் கடைகாரரோ, ஆட்டோ ஓட்டுனரோ, லிப்ட் இயக்குனரோ, யாராஇருந்தாலும் முகம் மலர்ந்து போகிறார்கள்.

மகிழ்ச்சியான தருணங்கள.

உங்கள் பதிவுகள் சுவாரசியமானவை. நன்றி.

Nice to see your blog thala , hope u remember me 🙂

i ll follow your blog hereafter

please write abt our thala sujatha when u have time , or if you have already wriiten abt him pls give me the link

thanks

அந்த விமானப் பணிப்பெண்ணுக்கு அளித்த பாராட்டினை கேட்டு அவர் ஆனந்தக் கண்ணீர் விட்டாரோ (கண்டிப்பாக விட்டிருப்பார்) இல்லையோ படித்த எல்லோர் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர் வந்திருக்கும் (எனக்கு அதிகமாகவே வந்தது) என்பது சர்வ நிச்சயம். மிக நல்ல பதிவை படித்த திருப்தி.

ரேகா ராகவன்

பாராட்டுகளின் மகிமையை நீங்கள் எழுதியிருக்கும் விதம், பாராட்டுவதைத் தவிர்க்க முடியாத அளவு சுவாரஸ்யமாக இருக்கிறது. உங்கள் அனுபவங்களை நீங்கள் விவரிக்கிற விதம் எப்போதுமே சுவாரஸ்யமாக இருக்கும். இந்த முறை டபிள் சுவாரஸ்யம்!

http://kgjawarlal.wordpress.com

நல்லதோ கெட்டதோ நேரடியாக சொல்லிவிடுவது உத்தமம். சம்பந்தப்பட்டவர்களுக்கு மன வருத்தம் இருக்காது. குத்தி காட்டுகிறீர்கள் என்று சொல்ல தோன்றாது. அன்றோடு அது மறந்து விடும். ஒரு தெளிவு இருக்கும்.

நீங்கள் எடுக்கும் ட்ரெயினிங்கில் சந்தோசப்பட்டவர்கள், மேலும் நீங்கள் நல்ல முறையில் க்ளாஸ் எடுக்கணும் என்று சொல்ல – ஐந்திற்கு நான்கு கொடுக்கலாம். சிலர் எப்படியும் இது ஓர் டுபாகூர் பீட்பேக் என்று ஐந்தோ அல்லது ஒன்று கொடுக்கலாம், ரெகுலர் அப்பரைசல் மாதிரி.

என் மனைவியின் நண்பி ஒருவர், கொடுத்த “கொங்கனி ஒப்பிட்டு” உப்புமா கிச்சடி நன்றாக இருந்தது என்று நான் ஒரு முறை சொன்னதை கேட்டு, ஒவ்வொரு முறையும் அவர்கள் செய்யும் போது ஒரு டிப்பன் பாக்ஸ் வீட்டிற்கு வருகிறது! திரும்பவும், அன்றைய டிப்பன், எங்கள் வீட்டிலிருந்து போவது வேறு விஷயம். கடைசியாக சென்றது ஒரு பிஸ்கட் பாக்கட். பீட்பேக்மகிமை.

சில சமயம் உணர்த்துதல், வேறு விதமாக எடுத்துக்கொள்ளப்படக்கூடும்!

நான் அமேரிக்காவில் இருந்த சமயம் ஒரு முறை நண்பர் எனக்கு கொஞ்சம் நாணயம் அனுப்பு என்பதை நான் தவறாக பணம் கேட்கிறார் என்று எடுத்துக்கொண்டு, அமெரிக்க நோட்டுக்கள் சிலவற்றை அனுப்ப, அவர் எதிர்பார்த்தநூமிச்மேடிசம் கலெக்சன் இல்லாமல் போனது வருத்தம் கொடுத்தது!

உங்களுக்கு போட்டியா … வந்திருக்கிற மறுமொழிகளும் (ப்ரகாஷ்,ஸ்ரீதர்,இலவசம், சித்தன்,விஜய்சங்கர்….) அழகான, உணர்ச்சிகரமான பதிவுகள்!
அழகான சிறுகதைனுகூட வைச்சிக்கலாம்..!

நீங்கள் சொலவது மிக மிக உண்மை. ஊக்கம் வாழ்க்கையையே மாற்றி அமைக்கிறது. உன்களைப் பற்றியும் உங்கள் கைதட்டல்கள் பற்றியும் எழுதியிருக்கிறேன் வந்து பாருங்கள்!
அன்புடன்
கமலா

//12 | ila

நான் இப்படி நினைக்கிறேன். இதே ரீனா தாமஸ் வீட்லயும் இப்படி இருப்பாங்களா?//

எல்லாம் நம்ம கையில்தான் இருக்கிறது. வீட்டிலேயும் சரியான பாராட்டு கிடைத்தால் இது என்ன? இதை விட அதிகமாகவே செய்வாங்க.

எந்த மனிதனுக்கும் கைத்தட்டலும், முதுகுத் தட்டலும் அதிக உற்சாகம் கொடுக்கும். இன்னும், இன்னும் சாதிக்க வேண்டும் என்கிற ஆவலை ஏற்படுத்தும்.

இதை பலரும் புரிந்து கொள்வதில்லை. ”ஹவ் டு வின் ப்ரெண்ட்ஸ் அண்ட் இன்ப்ளுயன்ஸ் பீபுள்” சுய முன்னேற்ற புத்தகத்தில் இதற்காக ஒரு அத்தியாயாமே இருக்கிறது.

என்னை பொறுத்தவரையில், அலுவலகத்திலோ, வீட்டிலோ பாராட்டு உடனே கொடுத்து அவர்கள் மகிழ்ச்சி அதிகரிக்கும் வகையில் ஏதாவது செய்துவிடுவேன். (உங்களுக்கு இன்று அனுப்பிய மின்னஞ்சலும் அதற்கு நீங்கள் உடனே அளித்த பதில் பாராட்டும் அதில் ஒரு வகை).

நீங்கள் சொன்ன விஷயத்தில் மிகவும் முக்கியமானது அந்த சக பிரயாணி தன் பின்னோட்டத்தை அந்த பணிப்பெண்ணுக்கு படித்துக் காட்டியது. கண் காணாத அந்த நபரை வியக்கிறேன். அவர் என்ன வேலையில் இருந்தாலும் கண்டிப்பாக ஜெயித்துக் கொண்டிருப்பார், தன்னுடன் பணியாற்றுபவர்களின் நன்மதிப்பை பெற்றிருப்பார்.

(நீங்கள் ஏன் அவரை பார்த்து “சார் ஒரு போட்டோ எடுத்துக்கலாமா” என்று கேட்டிருக்கக் கூடாது? அதுதான் நோக்கியா எண்-97 வைத்திருக்கிறீர்களே? கூடவே அந்த பணிப்பெண்ணையும்தான் – ஹி ஹி)

சரி, இது எல்லாம் நடந்தது விமானத்தில் பொருளாதார பகுதியிலா, வணிகப்பகுதியிலா?

வணக்கம், எல்லோர்க்கும் எப்படியும் ஏதாவ்தோரு நல்ல விஷயத்தை மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானமாக செய்து வரும் மனமாஎந்த பாரட்டுதல்களுக்குரிய உங்களிடம் ஒரு வேண்டுகோள்! தயவு செய்து என் ப்ளாக் http://chinthani.blogspot.com/ கடந்த இரு பதிவுகளையும் அதை தொடர்ந்து அதில் குறிப்பிட்டுள்ள மற்ற ஆங்கில இணையப்பக்கங்களையும் படித்து உங்கள் மனதுக்கு சரியென்று படுவதை உங்கள் ப்ளாக்கை படிப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும்!! இது ஒரு மொத்த இனத்தின் வாழ்வாதார போராட்டத்துக்கு நம்மால் முடிந்த உதவி!

சொக்கன்…

ரொம்ப நல்ல பதிவு. நல்ல நடை. 🙂 பதிவோட முடிவ படிச்சப்ப சிலிர்த்துது. நேர்ல பாத்திருந்தாலும் இப்படி தான் உணர்ந்திருப்பேன்னு தோனிச்சு.

நான் ரீடரில பதிவுகள படிக்கறதால பின்னூட்டங்கள படிக்கறதில்ல. நீங்க பின்னூட்டம் போட சொல்லலன்னா இங்க வந்து பிரகாஷோட அருமையான பின்னூட்டத்த படிச்சிருக்க முடியாது. நன்றி.

யுவன் சந்திரசேகரின் “நூற்று சொச்சம் நண்பர்கள்” என்ற கதையில் ஒரு இடம் வரும். கிருஷ்ணன் ”ஒரு சிகரெட்” என்று நூறு ரூபாய் தாளினை பெட்டிக்கடையில் நீட்ட, கடைக்காரர் சில்லரை கொடுங்க சார் என்பார். இவரிடம் சில்லரை இல்லாமல் முழிக்க, வேறேதோ வாங்கிக்கொண்டிருந்த ஒருவர், அந்த சிகரெட்டுக்கு எடுத்துக்கோங்க என்று இரண்டு ரூபாய் நாணயத்தை கொடுத்து விட்டு கிருஷ்ணனை நோக்கி புன்னகைத்து விட்டு செல்வார். ப்ரகாஷின் பின்னூட்டம் இதை நினைவுப்படுத்தியது.

//அவர் படிக்கப் படிக்க, ரீனா தாமஸ் முகத்தில் பரவிய சிவப்பை வார்த்தைகளில் வர்ணிப்பது சிரமம். அவர் தினம் தினம் வானத்தில் பறந்து சென்றாலும், நிஜமான மிதப்பை அப்போதுதான் உணர்ந்திருப்பார் என்று நினைக்கிறேன்.//

🙂 🙂 அதிகம் ரசித்தேன் 🙂 🙂

அது சரி

உங்களுக்கு எப்படி கைதட்டனும் 🙂 🙂

டிவிட்டரிலும் சொல்லிவிடுகிறேன்

மரு.புருனோவும் நியோ தமிழனும் ட்வீட்டியிருந்தார்கள். அவர்களால் ஈர்க்கப்பட்டு பதிவினை வாசித்தேன். அவர்களுக்கும், எழுதிய சொக்கனுக்கும் நன்றிகள். கொஞ்சம் வழக்கமான சுய-முன்னேற்றக்கட்டுரை பாணியிலிருந்தாலும், பாயிண்ட் டேக்கன். ஹேட்ஸ் ஆஃப்.

ravisuga, ksawme, Vijay, Prakash, பாலகுமார், ila, நாணல், Balakumaran, SnapJudge, கோபிநாத், சத்யராஜ்குமார், Ananth, இலவசக்கொத்தனார், Sridhar Narayanan, chidambararajan, சித்ரன், Karthikeyan, ஜெகதீசன், வெயிலான், Siva, Jayalakshmi, karthick prabhu, REKHA RAGHAVAN, Jawahar, Vijayashankar, தென்றல், kalyanakamala, suthanthira Ilavasa Menporul, R Sathyamurthy, Thangamani Prabu, Siddharth, புருனோ, Venkiraja, முரளிகண்ணன்,

நன்றி 🙂

//ரீனா தாமஸ் ங்கறது சேரநாட்டிலே ரொம்ப காமன். நம்மூர் சுப்பிரமணியம் மாதிரி//

😉 நான் கேள்விப்பட்ட இன்னொரு பெயரைதான் இங்கே செருகினேன் 🙂

//நான் இப்படி நினைக்கிறேன். இதே ரீனா தாமஸ் வீட்லயும் இப்படி இருப்பாங்களா?//

அங்கே எப்படிக் ‘கைதட்டல்’ கிடைக்கிறதுங்கறதைப்பொறுத்த விஷயம் அது!

//நல்ல ‘appreciation’ கெடைச்சா கால் வலி எல்லாம் சரி ஆகிடும்..உங்க கால் வலி எப்பட இருக்கு//

நீங்க அக்கறையாக் கேட்டப்புறம் காணாமலே போச்சு 🙂

//உமக்கு ஏர்ஹோஸ்டஸ் மசாஜ் பண்ணி விட்டதை வெளியில் சொல்ல தைரியம் இல்லாமல்//

அடப்பாவி மனுஷா, நான் நல்லாயிருக்கிறது பிடிக்கலையா? ஹூஊஊஊஊஊஊம் (இந்தப் பெருமூச்சுக்கும் புது அர்த்தம் கண்டுபிடிக்காதீங்கய்யா 🙂

//கண்ணடிக்கிறோம்//

என்னது கண்ணடிக்கறீங்களா? வெளங்கிடும் போங்க!

//எதிர் வீட்டு மாமி கொடுத்த எண்ணெய்க் கத்திரிக்காய் குழம்பை “சூப்பர்” என்று என் மனைவி எதிரிலேயே பாராட்டி//

ஆஹா, கைதட்டறது முக்கியம்தான், அதுக்காக நமக்கு நாமே வெடிவெச்சுக்கணுமா? கொஞ்சம் கவனமாத் தட்டுங்கய்யா 😉

//இந்த கமெண்ட் நல்லாருக்குன்னு பாராட்டினீங்கன்னா அடிக்கடி வந்து நிறைய கமெண்ட் போடுவேன். ஹிஹி!//

இதோ, பாராட்டிட்டேன் – நிறைய கமெண்ட்டுங்க 😉

//hope u remember me//

உங்களை மறக்கமுடியுமா தல? சுஜாதா வாரம்-ன்னு பின்றீங்களே!

//please write abt our thala sujatha when u have time//

கண்டிப்பாக!

//உன்களைப் பற்றியும் உங்கள் கைதட்டல்கள் பற்றியும் எழுதியிருக்கிறேன் வந்து பாருங்கள்!//

படித்தேன், நன்றி 🙂

//அலுவலகத்திலோ, வீட்டிலோ பாராட்டு உடனே கொடுத்து அவர்கள் மகிழ்ச்சி அதிகரிக்கும் வகையில் ஏதாவது செய்துவிடுவேன்//

நானும் இப்படியே 🙂

//நீங்கள் ஏன் அவரை பார்த்து “சார் ஒரு போட்டோ எடுத்துக்கலாமா” என்று கேட்டிருக்கக் கூடாது?//

கேட்கலாம்தான். ஆனால் கேமெராவுக்காக மொபைலை On செய்யணுமே, அது சட்டப்படி தப்பு 🙂 (In india, using mobile phone in “Flight Mode” inside an aircraft is NOT legal)

//இது எல்லாம் நடந்தது விமானத்தில் பொருளாதார பகுதியிலா, வணிகப்பகுதியிலா?//

’Economy’ / மலிவு விலைப் பிரிவில்தான், நான் இதுவரை Business Class பயணம் செய்ததில்லை

//தயவு செய்து என் ப்ளாக் http://chinthani.blogspot.com/ கடந்த இரு பதிவுகளையும் அதை தொடர்ந்து அதில் குறிப்பிட்டுள்ள மற்ற ஆங்கில இணையப்பக்கங்களையும் படித்து உங்கள் மனதுக்கு சரியென்று படுவதை உங்கள் ப்ளாக்கை படிப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும்//

அவசியம் வாசிக்கிறேன். நன்றி.

//நீங்கள் ஏன் அவரை பார்த்து “சார் ஒரு போட்டோ எடுத்துக்கலாமா” என்று கேட்டிருக்கக் கூடாது?//

//கேட்கலாம்தான். ஆனால் கேமெராவுக்காக மொபைலை On செய்யணுமே, அது சட்டப்படி தப்பு 🙂 (In india, using mobile phone in “Flight Mode” inside an aircraft is NOT legal)//

நான் சொன்னது ப்ளைட் தரையிறங்கிய பின்னால். (ரீனா) நெனைப்புதான் பொழப்ப கெடுக்குது.

அட்டகாசமான பதிவு!

R Sathyamurthy, ஜோ,

நன்றி 🙂

நல்ல பதிவு

lathaRAVI,

நன்றி 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 525 other followers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 490,938 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்

Tamilish

For தமிழ் Peopleதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

August 2009
M T W T F S S
« Jul   Sep »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
%d bloggers like this: