மனம் போன போக்கில்

கொஞ்சம் குழப்பம், நிறைய கோழைத்தனம்

Posted on: August 31, 2009

சென்ற சனிக்கிழமை ஒரு முக்கியமான வேலையாக எம். ஜி. ரோடு பழைய புத்தகக் கடைகளுக்கு திக்விஜயம். மூன்று பைகளில் புத்தகங்களை நிறைத்துக்கொண்டு ஆட்டோவில் வீடு திரும்பினேன்.

வழக்கமாக நான் ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தவுடன் ஏதாவது ஒரு புத்தகத்தைப் பிரித்து வைத்துக்கொண்டுவிடுவேன். பெங்களூரில் சைக்கிள்முதல் லாரிவரை சகல வாகனங்களும் டிராஃபிக் நெரிசலில் நின்று நின்று ஊர்வதுதான் வழக்கம் என்பதால், ஒரு மணி நேரப் பயணத்தில் கொஞ்சம் கொஞ்சமாக 20 முதல் 30 பக்கங்கள்வரை படித்து முடித்துவிடலாம்.

அன்றைக்கு, ஆட்டோ ஒரு சிக்னலில் நின்றிருந்தபோது எதேச்சையாக மீட்டரைப் பார்த்தேன், ‘38 ரூபாய்’ என்று காட்டியது.

சில விநாடிகள் கழித்து, பச்சை விளக்கு விழுந்தது, ஆட்டோ புறப்பட்டது, சட்டென்று மீட்டரில் இருந்த தொகை முப்பத்தெட்டிலிருந்து நாற்பத்தெட்டுக்குத் தாவியது.

நான் திகைத்துப்போனேன். ஆட்டோ மீட்டரில் சூடு வைப்பார்கள், தெரியும், ஆனால் அதுகூட ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என்று படிப்படியாகதானே ஏறும்? இப்படி திடுதிப்பென்று பத்து ரூபாய் எகிறுவதாகக் கேள்விப்பட்டதில்லையே!

அடுத்த குழப்பம், இப்போது நான் என்ன செய்யவேண்டும்? என்னை ஏமாற்றப்பார்க்கிற இந்த ஆட்டோ டிரைவருடைய சட்டையைப் பிடிக்கவேண்டுமா? ‘அன்னியன்’போல அவர்மீது பாய்ந்து பிராண்டவேண்டுமா?

என்னுடைய கன்னடம், மிக எளிய வார்த்தைகள், வாக்கியங்களால் ஆனது, அதில் இரண்டு வார்த்தைகளுக்கு மூன்று இலக்கணப் பிழைகளாவது இருக்கும், ஆங்காங்கே ஆங்கிலம், ஹிந்தி, சில சமயம் தெலுங்கு வார்த்தைகளைக்கூடச் சேர்த்துக் கலப்படம் செய்ய நான் வெட்கப்படுவதில்லை.

இந்த ஓட்டைக் கன்னடத்தை வைத்துக்கொண்டு, யாரிடமும் சுமுகமாகப் பேசலாம், ஆனால் சண்டை போடமுடியாது.

வேண்டுமானால், ஆட்டோ டிரைவரிடம் தமிழில் கண்டபடி கத்தலாம், கெட்ட வார்த்தையில் திட்டலாம், அதெல்லாம் அந்த டிரைவருக்குச் சுத்தமாகப் புரியப்போவதில்லை, ஒருவேளை புரிந்தாலும், நிச்சயமாக அதை வெளிக்காட்டிக்கொள்ளமாட்டார்.

தவிர, நிஜமாகவே அந்த மீட்டர் முப்பத்தெட்டிலிருந்து நாற்பத்தெட்டுக்குத் தாவியது என்பதை நான் எப்படி நிரூபிப்பேன்? இப்போது மீட்டர் சரியாகதானே ஓடிக்கொண்டிருக்கிறது? சில நிமிடங்களுக்குமுன்னால் அப்படி ஓர் ஊழல் நடந்தது என்பதற்கு என்ன சாட்சி? இந்த டிரைவரோ, போலீஸோ, நீதிமன்றமோ என்னை எப்படி நம்பும்? இதற்காக ஒவ்வொருமுறை ஆட்டோ ஏறும்போதும் அதன் மீட்டரை வீடியோ படம் எடுத்துவைக்கவா முடியும்?

இத்தனை அவஸ்தைகளோடு ஒப்பிட்டால், பத்து ரூபாய் என்பது சாதாரணத் தொகை. பேசாமல் நான் என்னுடைய புத்தகத்தைப் படிக்கத் திரும்பிவிட்டேன்.

***

என். சொக்கன் …

31 08 2009

15 Responses to "கொஞ்சம் குழப்பம், நிறைய கோழைத்தனம்"

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. முடியல..
இன்னும் கொஞ்சம் போனா, போஸ்ட்டை விட அதுக்கு நீங்க குடுக்கும் லேபிள் லிஸ்ட் தான் பெரிசா இருக்கும்..:)

இத்தனை லேபிள் தேவையா?

Bee’morgan,

நன்றி 🙂

//இத்தனை லேபிள் தேவையா?//

தலீவா, நீங்க போஸ்ட் பண்ண ரெண்டாவது நிமிஷம் படிக்கறீங்க, ஆனா லேபிளெல்லாம் நாலு வருஷம் கழிச்சுப் படிக்கிறவங்களுக்கு, சில குறிப்பிட்ட தலைப்புகள்ல பதிவுகளை ஒழுங்குபடுத்த ரொம்பப் பிரயோஜனமா இருக்கும் 🙂

ஆகவே, கொஞ்சம் கஷ்டப்பட்டு அந்த லேபிள்ஸை மறந்துட்டு நேரடியா மேட்டருக்குத் தாவிடுங்களேன், ப்ளீஸ் 🙂

//
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. முடியல..

……………………
இத்தனை லேபிள் தேவையா?
//

🙂

Junior,
You actually forgot to include “cowardice” (கோழைத்தனம்) & Confusion (குழப்பம்) in the Lable 😉

anbudan
BALA

ஐயோ! ஆட்டோவா? (கொட்டை எழுத்தில் படியுங்க)

என்னுடைய ஆட்டோகிராஃப் : http://chithran.blogspot.com/2004/06/blog-post.html

சித்ரன்
http://chithran.com

ரைட்டு விடுங்க.. 🙂
மற்றவர்கள் நலன் கருதி பொருத்தருள்கிறோம்.. 😛

இந்த மாதிரி சின்னச் சின்ன அநியாயங்களை எதிர்த்து சண்டை போடாமல் டென்ஷன் ஆகாமல் நிதானமாக போராடி வெற்றி பெறுகிற கலை சிலருக்கு இருக்கிறது. குறைந்த பட்சம் அப்படி இரண்டு பேரை எனக்குத் தெரியும். அவர்களைப் பார்த்தால் எனக்கு பொறாமையாக இருக்கும்.

இங்கே சென்னையில் இதெல்லாம் சகஜமப்பா! அது சரி, பெங்களூரிலுமா இப்படி?!!! நான் பலமுறை பெங்களூர் வந்திருக்கிறேன். இங்கே சென்னையில் 30 ரூபாய் கேட்கும் தூரத்துக்கு அங்கே வெறும் 8 ரூபாய்தான் கேட்டார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கூட குடும்பத்தோடு வந்திருந்தேன். ஆட்டோ கட்டணம் பயமுறுத்தவில்லையே! சிலைகள் மாறி மாறித் திறந்து கர்நாடகாவும் தமிழகமும் உறவு கொண்டாடியதற்குப் பிறகுதான் என்னவோ நடந்திருக்கிறது!

சேரும் இடத்திற்கான வாடகை உத்தேசமாகத் தெரியுமானால், அதை விட அதிகமாக வந்திருந்தால் நேராக போலீஸ் ஸ்டேஷன் விடச் சொல்ல வேண்டியதுதானே?

இல்லை ஆட்டோ நம்பர் நோட் பண்ணி ஒரு கம்ப்ளெயிண்ட் தரலாமே.

anbudan_BALA, சித்ரன், Bee’morgan, சத்யராஜ்குமார், raviprakash, இலவசக்கொத்தனார்,

நன்றி 🙂

//You actually forgot to include “cowardice” (கோழைத்தனம்) & Confusion (குழப்பம்) in the Lable//

சீனியர், Cowardice was already there, added confusion – thanks for pointing the miztake 😉

//ஐயோ! ஆட்டோவா?//

மத்தவங்களுக்கு ‘ஆட்டோ’, உங்களுக்குமட்டும் ‘ஆ’ட்டோ-வா? பாவம் சார் நீங்க!

//இந்த மாதிரி சின்னச் சின்ன அநியாயங்களை எதிர்த்து சண்டை போடாமல் டென்ஷன் ஆகாமல் நிதானமாக போராடி வெற்றி பெறுகிற கலை சிலருக்கு இருக்கிறது. குறைந்த பட்சம் அப்படி இரண்டு பேரை எனக்குத் தெரியும்//

அவர்கள் பெயரைச் சொல்லாவிட்டாலும் ஒன்றிரண்டு உதாரணங்களைச் சொல்லுங்களேன், எல்லோருக்கும் பயன்படும்.

//பெங்களூரிலுமா இப்படி?!!!//

இங்கேயும் உண்டு – ஆனால் நூற்றுக்குப் பத்து பேர்தான் இப்படி, பாக்கி ஒன்பது பேர் ஒழுங்கான மீட்டரில் வருவார்கள்

//நான் பலமுறை பெங்களூர் வந்திருக்கிறேன்//

அடுத்தவாட்டி வரும்போது சொல்லுங்க, ஒரு மீட்டிங் போட்றுவோம் 🙂

//சேரும் இடத்திற்கான வாடகை உத்தேசமாகத் தெரியுமானால்//

நன்றாகத் தெரியும்!

//அதை விட அதிகமாக வந்திருந்தால் நேராக போலீஸ் ஸ்டேஷன் விடச் சொல்ல வேண்டியதுதானே? இல்லை ஆட்டோ நம்பர் நோட் பண்ணி ஒரு கம்ப்ளெயிண்ட் தரலாமே//

அதான் சொன்னேனே சார், மீட்டர் இப்போது ஒழுங்காக ஓடுகிறதே, அது தப்பு என்று எப்படி நிரூபிப்பது? அதான் குழப்பம்!

என்ன சார் சென்னை பக்கம் வந்ததே இல்லையா? சென்னையில் ஆட்டோ இப்போ மொபஸல் ஏரியாக்களைவிட மோசம். ஒரு ஆட்டோவும் மீட்டர் போடுவதில்லை. வெறும் பேரம்தான்.

//இத்தனை லேபிள் தேவையா?//

தலீவா, நீங்க போஸ்ட் பண்ண ரெண்டாவது நிமிஷம் படிக்கறீங்க, ஆனா லேபிளெல்லாம் நாலு வருஷம் கழிச்சுப் படிக்கிறவங்களுக்கு, சில குறிப்பிட்ட தலைப்புகள்ல பதிவுகளை ஒழுங்குபடுத்த ரொம்பப் பிரயோஜனமா இருக்கும்

உங்கள் தொலைநோக்கு பார்வை புல்லரிக்க வைக்கிறது 🙂

பை த பை, சத்தியமூர்த்தி சொல்வது போல as long as மீட்டர் போட்டவரை சந்த்தோஷம்..சென்னையில மீட்டர் வெறும் displayகாக மட்டுமே…

போலீசை பார்த்தால் மட்டுமே தலை வணங்கும் 🙂

passenger வந்தா தலை நிமிர்ந்து நிக்கும் 🙂

சுவாசிகா

http://swachika.wordpress.com

Nice one. I’ve seen these kind of readings in meters in many autos. Left digit will jump to next digit. We shall bring this notice to auto driver. I think many would have already complained to him if it is a usual routine. Based on the customer’s fire-fighting, he might agree/deny the fact.

R Sathyamurthy, சுவாசிகா, RaviSuga,

நன்றி 🙂

//என்ன சார் சென்னை பக்கம் வந்ததே இல்லையா?//

வந்திருக்கேன், பெங்களூர்ல மீட்டர் போட்டு ஏமாத்தறதுக்கு சென்னைமாதிரி நேரடி பேரம் பெட்டர் 🙂

//உங்கள் தொலைநோக்கு பார்வை புல்லரிக்க வைக்கிறது//

கிண்டலுக்குச் சொல்லலைங்க, நிஜமாவே நிறைய (applicable) tags சேர்க்கறது ரொம்ப நல்ல பழக்கம். நமக்கே ஒரு தலைப்பில எழுதின விஷயங்களைத் தொகுத்துப் பார்க்க ரொம்ப உதவியா இருக்கும் – இன்ஃபாக்ட், நம்ம மூளையே இப்படிதான் இயங்குதுன்னு சொல்றாங்க!

//Based on the customer’s fire-fighting, he might agree/deny the fact//

Thats my problem, I can’t argue in Kannada – I don’t know the right words / Grammar, All I know is ‘sweet’ kannada, which is useful in only formal communication

பெங்களூரில் இதே அனுபவம் எனக்கும் நடந்துருக்கு.
என் கணவர் (நீங்கள் செய்த மாதிரியே) “இப்போ என்ன செய்ய முடியும்? பரவால்ல விடு” ன்னார்.
நானும் ஆட்டோ டிரைவர் கிட்ட சண்டை ஏதும் போடலை. ஆனா அந்த இடத்துலேயே “நிறுத்துங்க” ன்னு சொல்லி மீட்டர் காட்டின காசு குடுத்துட்டு இறங்கிட்டேன். ஆட்டோ டிரைவர்க்கு என்ன புரிந்ததோ தெரியலை. பேசாம தலைய குனிஞ்சுட்டு கெளம்பிட்டார்.

உங்கள் பதிவுகளை சமீபமாக தான் படிக்கிறேன்.
You have a super sense of humour.
🙂

Priya Kathiravan,

நன்றி 🙂

//நானும் ஆட்டோ டிரைவர் கிட்ட சண்டை ஏதும் போடலை. ஆனா அந்த இடத்துலேயே “நிறுத்துங்க” ன்னு சொல்லி மீட்டர் காட்டின காசு குடுத்துட்டு இறங்கிட்டேன்//

நல்ல யோசனை. நானும் இதைதான் செஞ்சிருக்கணும் – இனிமே ஞாபகம் வெச்சுக்கறேன் 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,069 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

August 2009
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
%d bloggers like this: