மனம் போன போக்கில்

Archive for September 2009

நேற்று நங்கையைக் கூட்டிக்கொண்டு ஒரு கடைக்குச் சென்றிருந்தேன். வழியில் தென்பட்ட எல்லாப் பொருள்களைப்பற்றியும் நிமிடத்துக்கு ஏழெட்டு கேள்விகள் என்கிற விகிதத்தில் கேட்டபடி நடந்துவந்தாள், பதில்களை எதிர்பார்க்கக்கூட இல்லை.

கடையில் நாங்கள் வாங்கிய பொருள்களின் மொத்த விலை 56 ரூபாய் ஆனது. நான் அறுபது ரூபாய் கொடுத்தேன்.

‘ஒர் ரூவா சில்லறை கொடுங்க சார்’

பர்ஸுக்குள் தேடினேன். ஒற்றை நாணயம் எதுவும் அகப்படவில்லை, ‘இல்லைங்களே’

‘சரி, அப்ப நாலு ரூபாய்க்கு ஏதாச்சும் வாங்கிக்கோங்க’

‘ஓகே, ஏதாவது சாக்லெட் கொடுங்களேன்’

‘ம்ஹூம்’ என்று மறுத்துவிட்டார் அவர், ‘எங்க கடையில சாக்லெட் விக்கறதில்லை’

எனக்கு ஆச்சர்யம். இந்தப் பாரதப் புனித பூமியில் சாக்லெட் விற்காத கடைகளும் உண்டா?

என்னுடைய குழப்பத்தைப் பார்த்த அவர் சிரித்தபடி சொன்னார், ‘உங்களைமாதிரிதான் சார், சில்லறை இல்லாத எல்லோரும் தேவையே இல்லாம சாக்லெட் வாங்கிட்டுப் போறாங்க, அவங்களா விரும்பி வாங்கினாக்கூடப் பரவாயில்லை, Impromptu buying, அதனால ஒரு பிரயோஜனமும் இல்லை, அதைத் தின்னு பல் கெடும், உடம்பு குண்டாகும், எதுக்கு? நம்ம கடைக்கு வர்றவங்க ஏதாச்சும் பயனுள்ள பொருள்களைதான் வாங்கணும்-ங்கறது என் பாலிஸி’, நங்கையின் கன்னத்தைத் தட்டினார், ‘என்னம்மா? பென்சில் வாங்கிக்கறியா? எரேஸர், ஷார்ப்னர் எதுனா தரட்டுமா?’

’மூணுமே கொடுங்க’

அவர் சிரித்தபடி இரண்டு கறுப்புப் பென்சில்களைமட்டும் எடுத்துக் கொடுத்தார், ‘நாலு ரூபாய் ஆச்சு சார், நன்றி!’

இப்போது நடந்ததை ப்ளாகில் எழுதினால் யாரும் நம்பமாட்டார்கள், நான் சும்மா ‘Feel Good’ கற்பனைக் கதை எழுதுகிறேன் என்றுதான் சொல்வார்கள் என நினைத்துக்கொண்டே படிகளில் இறங்கிவந்தேன். நங்கை பென்சிலை இறுகப் பற்றிக்கொண்டு புதிய கேள்விகள் கேட்க ஆரம்பித்தாள்.

அவளைக் கொஞ்சம் திசை மாற்றுவதற்காக, ’ஏதாவது விளையாடலாமா?’ என்றேன்.

‘ஓ, எங்க ஸ்கூல்ல இன்னிக்கு ஒரு சைன்ஸ் கேம் சொல்லிக்கொடுத்தாங்களே’

‘என்னது?’

‘Solid Vs Liquid’

‘அப்டீன்னா?’

‘நான் ஒரு பொருள் பேர் சொல்வேன், அது Solid-ஆ, அல்லது Liquid-ஆ-ன்னு நீ சொல்லணும்’

‘ஓகே’, வழியெல்லாம் பதில் தேவைப்படாத கேள்விகளைக் கேட்டுக்கொண்டு நடப்பதற்கு இந்த அற்ப விளையாட்டு எவ்வளவோ பரவாயில்லை.

நங்கை தன் கையில் இருந்த பழத்தைக் காண்பித்துத் தொடங்கினாள், ‘வாழைப்பழம்?’

‘Solid’

’ஜூஸ்?’

‘Liquid’

எங்களை ஒரு சைக்கிள் கடந்துபோனது, அதைச் சுட்டிக் காட்டி, ’சைக்கிள்?’

‘Solid’

கடைசியாக, சாலைப் பள்ளத்தைக் காண்பித்து, ‘Hole?’

இதற்கு என்ன பதில் சொல்வது? உள்ளே ஏதுமற்ற பள்ளம் Solid-ஆ, Liquid-ஆ? பேய் முழி முழித்தபடி வீடு வந்து சேர்ந்தேன்.

***

என். சொக்கன் …

29 09 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

சென்ற ஞாயிற்றுக்கிழமை ஆஹா எஃப்.எம்.மில் ஒலிபரப்பான கிழக்கு பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் எனது ‘அம்பானி: ஒரு வெற்றிக் கதை’ புத்தகத்தைப்பற்றிய உரையாடல் இடம்பெற்றது. அதைப்பற்றி ஏற்கெனவே எழுதியிருந்தேன்.

ஆனால் கடைசி நேரத்தில் loka.fm இணைய தளம் செம சொதப்பல், ஆகவே, சென்னைக்கு வெளியில் யாரும் இதைக் கேட்டிருக்க வாய்ப்பில்லை!

’நல்லவேளை’ என்று சந்தோஷப்படாதீர்கள், அவ்ளோ சீக்கிரம் விட்றுவோமா? 😉

ஆர்வம் உள்ளவர்கள், பத்ரி சேஷாத்ரி இணைய தளத்திலிருந்து இதை டவுன்லோட் செய்துகொள்ளலாம், அதற்கான இணைப்பு இங்கே:

http://thoughtsintamil.blogspot.com/2009/09/9.html

***

என். சொக்கன் …

24 09 2009

சென்ற வாரம், சென்னையிலிருந்து ஒரு தோழி / குடும்ப நண்பர் வந்திருந்தார்.

அவர் கிளம்பும்போது, ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு, வளையல், பொட்டு, தேங்காய், இன்னும் என்னென்னவோ தாம்பூலமாக வைத்துக் கொடுத்தார் என் மனைவி. அவர் அவசரமாக அதைக் கைப்பையில் கொட்டிக்கொண்டு விமான நிலையத்துக்குப் புறப்பட்டுவிட்டார்.

சில மணி நேரம் கழித்து, அவர் சென்னை சென்று இறங்கியபிறகு நாங்கள் அவரைத் தொலைபேசியில் அழைத்தோம், ‘என்னங்க, சவுகர்யமாப் போய்ச் சேர்ந்தீங்களா?’

‘ஓ’ என்றவர் கொஞ்சம் தயங்கினார், ‘உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணுமே’

‘என்னது?’

‘சொன்னா சிரிக்கக்கூடாது’

‘இதில சிரிக்கறதுக்கு என்ன இருக்கு? தயங்காம சொல்லுங்க!’

’பெங்களூர் ஏர்போர்ட்ல செக்யூரிட்டி செக்கிங்போது என்னைத் தனியா நிறுத்திவெச்சுட்டாங்க’

‘ஏன்? என்னாச்சு?’

‘நீங்க தேங்காய் கொடுத்தீங்க இல்ல?’

‘ஆமா, அதுக்கென்ன?’

‘அந்தத் தேங்காயை ஃப்ளைட்ல அனுமதிக்கமாட்டாங்களாம், அரசாங்க விதிமுறைப்படி, விமானத்தில எந்த Liquid பொருளும் கொண்டுபோகக்கூடாதாமே!’

’என்னங்க காமெடி பண்றீங்களா, தேங்காய் எப்படி Liquid ஆகும்? அது நல்ல கனமான Solidதானே? அதை அப்படியே அந்த ஆஃபீஸர் தலையில அடிச்சு நிரூபிக்கவேண்டியதுதானே?’

‘தேங்காய் Solidதான், ஆனா அதுக்குள்ள Liquidஆ இளநீர் இருக்கில்ல? அதனால அதை ஃப்ளைட்ல அலவ் பண்ணமாட்டோம்ன்னு சொல்லிட்டாங்க’

‘அடக் கடவுளே, தாம்பூலம் கொடுக்கறதில இப்படி ஒரு பிரச்னை இருக்கா?’

‘ஆமாங்க, அவங்க அப்படிச் சொன்னதும் நானும் ரொம்ப ஷாக் ஆகிட்டேன், அடுத்து என்ன செய்யறதுன்னே புரியல’

’இதில என்னங்க பெரிய ஷாக்? சாதாரண எட்டு ரூபா தேங்காய்தானே, அங்கயே ஒரு குப்பைத் தொட்டியில தூக்கிப் போட்டுட்டுப் போயிருக்கலாம்ல?’

’அதெப்படி? தாம்பூலமாக் கொடுத்ததை யாராச்சும் வீசி எறிவாங்களா? தப்பில்ல?’

‘அப்புறம் என்ன செஞ்சீங்க?’

’அவங்களுக்குத் தேங்காய் நோ ப்ராப்ளம், இளநீர்தான் பிரச்னை’

‘அதனால?’

’அங்கயே தேங்காயை ரெண்டா உடைச்சு, இளநீரைக் காலி செஞ்சுட்டோம், அப்புறம் ரெண்டு மூடியையும் ஹேண்ட் பேக்ல போட்டுகிட்டு ஜாலியா ஃப்ளைட் ஏறிட்டேன்’

’தேங்காய் உடைக்கறதுதான் உடைச்சீங்க, அப்படியே இளநியை ரெண்டு சுத்து சுத்தி, ஃப்ளைட் எந்தப் பிரச்னையும் இல்லாம சென்னை போய்ச் சேரணும்ன்னு வேண்டிகிட்டு ஏர்போர்ட் பகவானுக்கு நேவித்யம் செஞ்சிருக்கலாமே!’

***

என். சொக்கன் …

20 09 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

நாளை (20 செப்டம்பர் 2009, ஞாயிறு) மதியம் 12 மணிக்கு, ஆஹா FM வானொலி(91.9)யின் ‘கிழக்கு பாட்காஸ்ட்’ நிகழ்ச்சியில் எனது “அம்பானி: ஒரு வெற்றிக் கதை” புத்தகம்பற்றிய அறிமுகம் / கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது.

அம்பானி : ஒரு வெற்றிக் கதை

சுவாரஸ்யமான இந்த அரட்டையின் வழியே, திருபாய் அம்பானியின் ஆரம்ப கால வாழ்க்கை தொடங்கி, அவரது மகன்களுக்கு இடையிலான வாரிசுச் சண்டைவரை பல விஷயங்களைத் தொட்டுச்சென்றிருக்கிறோம். நிகழ்ச்சியின் இடையே, புத்தகத்திலிருந்து சில முக்கியமான பகுதிகளை ஒலி வடிவத்திலும் கேட்கலாம்.

ஆஹா FM சென்னையில்மட்டும்தான் ஒலிபரப்பாகிறது. இணையத்தில் கேட்க விரும்புகிறவர்கள் http://www.loka.fm என்ற தளத்தில் பதிவு செய்துகொண்டு, அரை மணி நேரத் தாமதத்தில் (அதாவது, இந்திய நேரம் 12 மணி நிகழ்ச்சி 12:30க்கு வரும்) இந்த நிகழ்ச்சியைக் கேட்கலாம்.

நண்பர்கள் நிகழ்ச்சியைக் கேட்டுக் கருத்துச் சொல்லவும், மற்றவர்களுக்குத் தகவல் சொல்லவும். நன்றிகள் 🙂

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க:

***

என். சொக்கன் …

19 09 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

’தலையெழுத்து’ என்பது இதுதானா?

(பெங்களூர் – ஜெயநகரில் ஒரு பேருந்து நிறுத்தம்: 14 09 2009)

14092009061

***

என். சொக்கன் …

16 09 2009

எனது ‘ஜெய் ஹோ!: ஏ. ஆர். ரஹ்மான்’ புத்தகத்தின் விமர்சனம்: ’சுவாசிகா’ தளத்திலிருந்து:

வெற்றி கதைகள் மற்றும் வரலாற்றுக் கதைகள் எழுதுவதற்கு ISAS(Information Search and Analysis Skills) மிகவும் அவசியம் என்று என்னுடைய கருத்து. அதாவது

  • ஒரு தலைப்பை பற்றிய விவரங்களை பல விதமான sourceகளில் இருந்து திட்டமிட்டு தேடுதல்
  • தேடிய தகவல்களை ஆராய்தல்
  • ஆராய்ந்த தகவல்களை வகைபடுத்துதல்
  • முக்கியமான/அவசியமான தகவல்களை முன்படுத்தி மற்றவைகளை விலக்குதல் அல்லது அவைகளை வேறு பொதுவான இடத்தில் தொகுத்தல்

முழுவதும் படிக்க: http://swachika.wordpress.com/2009/09/11/ஏ-ஆர்-ரஹ்மான்-என்-சொக்கன்/

புத்தகம்பற்றிய கூடுதல் விவரங்கள், ஆன்லைனில் வாங்க: http://nhm.in/shop/978-81-8493-187-7.html

எனது மற்ற புத்தகங்கள்: http://nhm.in/shop/N.-Chokkan.html

***

என். சொக்கன் …

16 09 2009

மனதில் உறுதி வேண்டும்

வாக்கினிலே இனிமை வேண்டும்

நினைவு ந‌ல்ல‌து வேண்டும்

நெருங்கின‌ பொருள் கைப்பட‌வேண்டும்

க‌ன‌வு மெய்ப்ப‌ட‌ வேண்டும்

கைவ‌ச‌ம் ஆவ‌து விரைவில் வேண்டும்

த‌ன‌மும் இன்ப‌மும் வேண்டும்

த‌ர‌ணியிலே பெருமை வேண்டும்!

க‌ண் திற‌ந்திட‌ வேண்டும்

காரியத்தில் உறுதி வேண்டும்

பெண் விடுதலை வேண்டும்

பெரிய கடவுள் காக்கவேண்டும்!

மண் ப‌ய‌னுற‌ வேண்டும்,

வான‌க‌ம் இங்கு தென்ப‌ட‌ வேண்டும்,

உண்மை நின்றிட வேண்டும்

ஓம், ஓம், ஓம், ஓம்!

ஒருவழியாக, கேக் பிரச்னை தீர்ந்தது. அடுத்து, பலூன் ஊதும் வைபவம்.

பர்த்டே பார்ட்டி என்றாலே, மேலும் கீழும் இடமும் வலமும் முன்னும் பின்னும் பல வண்ண பலூன்கள் ஆடிக்கொண்டிருக்கவேண்டும் என்பது நவீன மரபு. சில இடங்களில் வாசல் வரவேற்பு வளையத்தையே பலூன் சரங்களாக அமைத்து அசத்துவார்கள். கூரை, ஜன்னல்கள், மாடிப்படியின் கைப்பிடி விளிம்புகள், மேஜை, நாற்காலிகளின் கால்களில்கூட பலூன்கள் இரண்டு, மூன்றாகச் சேர்த்துப் பூ வடிவத்தில் கட்டிவிடப்பட்டிருக்கும்.

இந்தப் பலூன்களெல்லாம், அந்தந்த விழாக்களுக்கு வருகிற குழந்தைகளுக்குதான். அவர்கள் தங்களுடைய பெற்றோரிடம் கேட்க, அவர்கள் சட்டென்று எம்பிப் பறித்துக் கொடுத்துவிடுவார்கள், ஒவ்வொரு குழந்தையும் எந்த வண்ண பலூனை வீட்டுக்குக் கொண்டு செல்வது என்று போட்டி போடும், ‘அந்தக் குழந்தையோட பலூன்மட்டும் பெரிசா இருக்கே’ ரக அழுகைகள் தனிக்கதை.

நானும் இப்படிப் பலமுறை நஙகைக்குப் பலூன் பறித்துக் கொடுத்திருக்கிறேன். அந்த பலூன்களையெல்லாம் யார் மெனக்கெட்டு ஊதிவைத்திருப்பார்கள் என்பதுபற்றித் துளிகூட யோசித்தது கிடையாது. இன்றைக்கு நானே அந்த வேலையைச் செய்ய நேர்ந்தபோதுதான் அதில் இருக்கும் சிரமங்கள் புரிந்தன.

முதலாவதாக, ஒரு பலூனின் விலை என்ன என்பது யாருக்கும் தெரியாத ரகசியம். சில கடைகளில் ஐம்பது பைசா, வேறு சில இடங்களில் ஒரு ரூபாய், ஒன்னரை, இரண்டு, ஐந்து, பத்து ரூபாய் என்று எகிறுகிறது.

இன்னொரு வேடிக்கை, பலூன்களைப் பாக்கெட்டில் போட்டு விற்கும்போது, ’முப்பத்தைந்து பலூன் நாற்பத்தைந்து ரூபாய்’ என்பதுபோல் விநோதமாக ஒரு கணக்கு சொல்கிறார்கள், அது ஏன் முப்பத்தைந்து? இருபத்தைந்து அல்லது ஐம்பது என்று போட்டால் ரவுண்டாகக் கணக்குப்போட வசதியாக இருக்குமில்லையா? இதுவும் பெரிய மர்மமாக இருக்கிறது.

இதனால், நாம் எவ்வளவுதான் யோசித்து வாங்கினாலும் ஒரு பலூனின் நியாயமான விலை என்ன என்பது யாருக்கும் புரியப்போவதில்லை. அதேபோல், அதை ஊதினால் எலுமிச்சை சைஸ் வருமா, அல்லது பலாப்பழ சைஸா என்பதும் கோககோலா ஃபார்முலாவுக்கு இணையான பரம ரகசியம்.

பலூனை ஊதுவதற்கு ஒரு வழிமுறை இருக்கிறது – நாதஸ்வரம்போல் வாய்க்கு நேராக வைத்து ஊதினால் கொஞ்சம்தான் பலன் கிடைக்கும், அதையே புல்லாங்குழல்போல் குறுக்காக வைத்து ஊதும்போது, குறைந்த ‘தம்’மில் அதிக ஊதல் சாத்தியமாகிறது. இது உங்களுக்குப் புரிவதற்குள் குறைந்தபட்சம் பத்து பலூன்களையாவது குட்டியூண்டு சைஸில் ஊதி முடித்து அலுத்திருப்பீர்கள்.

அடுத்து, புல்லாங்குழல் பாணியில் பலூனைப் பிடித்து ஊதும்போது, அதன் முனையைக் கவனமாகப் பற்றிக்கொள்ளவேண்டும், உங்கள் நகம் நீளமானதாக இருந்துவிட்டால் நீங்களே உங்கள் பலூனை நாசப்படுத்திவிடுகிற வாய்ப்பு உண்டு.

ஆகவே, குரங்கு தன் குட்டியைப் பல் படாமல் வாயில் கவ்விச் செல்வதுபோல, இரண்டு விரல்களின் நுனியால் பலூன் நுனியைப் பற்றி இழுத்துக்கொண்டு இன்னொருபக்கம் பலமாக ஊதவேண்டும், சரேலென்று உங்கள் மூச்சுக்காற்று அடுத்த பக்கத்தில் இருக்கும் பலூனைப் பெரிதாக்கத் தொடங்கும். கொஞ்சம் கொஞ்சமாக இது பலூன்முழுக்கச் சீராகப் பரவும், ஒருமாதிரியாகப் பலூனின் வடிவம் தெரிய ஆரம்பிக்கும்.

இப்போது, அடுத்த பிரச்னை – ஒரு பலூனை எவ்வளவு பெரிதாக ஊதலாம்? இந்த சைஸ் போதுமா? அல்லது இன்னும் ஊதவேண்டுமா? ஒருவேளை வெடித்துவிடுமா? பலூன் வெடித்தால் என்ன ஆகும்? கையில் காயம் படுமா? அல்லது, கன்னத்திலா? வாயிலா? நாம் வெளிவிட்ட மூச்சுக்காற்று (கார்பன் டை ஆக்ஸைட்?) அதே வேகத்தில் நம் வாய்க்குள் திரும்பிச் சென்று நுரையீரலில் ஏதாவது களேபரம் செய்துவிடுமா?

இந்த பயத்தில் பலூனை ரொம்பச் சின்னதாக ஊதிவிட்டால், மனைவியிடம் பாட்டுவாங்கவேண்டியிருக்கும், ‘ஹூம், இவ்வளவுதானா உன் தம்மு? என்னவோ பெரிசா அலட்டினியே!’ என்றெல்லாம் சொல்லாமல் சொல்வதில் அவர்கள் சமர்த்தர்கள்.

ஆகவே, பலூனும் வெடித்துவிடக்கூடாது, அதேசமயம் அது ரொம்பச் சின்னதாகவும் இருந்துவிடக்கூடாது, அப்படி ஒரு பர்ஃபெக்ட் இடைநிலையைக் கண்டுபிடித்து, அத்துடன் உங்கள் ஊதுதலை நிறுத்திக்கொள்வது உத்தமம்.

அடுத்து, பலூனைக் கட்டி முடிச்சுப் போடவேண்டிய நேரம். இதற்கு ஒரு நூல் கண்டு பக்கத்திலேயே தயாராக இருப்பது நல்லது.

சின்ன நூல்கண்டா நம்மைச் சிறைப்படுத்துவது என்று இந்த விஷயத்தில் அலட்சியமாக இருந்துவிடாதீர்கள், நிஜமாகவே அந்த நூல்கண்டைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளாமல் இஷ்டப்படி செயல்பட்டால், அப்படியும் இப்படியும் சுற்றி வந்து நமக்கே தெரியாமல் நம்மைக் கட்டிப்போட்டுவிடும், சில சமயங்களில் விரல் நுனியை அறுத்து ரத்த காயம் பண்ணிவிடும், ஜாக்கிரதை!

அடுத்து, ஏதோ ஒரு நூல்கண்டை வாங்கிவைக்காதீர்கள், மெலிதான நூல்கள் பலூன் கட்ட உகந்தவை அல்ல, சுற்றிச் சுற்றி தாவு தீர்ந்துவிடும், அல்லது அபத்திரமாக அறுந்து காற்றுப்போகும், கொஞ்சம் தடிமனான ட்வைன் நூலைப் பயன்படுத்தினால் மண்டை காய்வதை ஓரளவு குறைக்கலாம்.

சில பலூன்களைக் கட்டுவதற்கு நூல் தேவைப்படாது, பலூனையே நன்றாக முனையில் இழுத்துப் பிடித்து முடிச்சுப் போட்டுவிடலாம். ஆனால் அப்போதும் ஒரு பாதுகாப்பு(?)க்கு நூலைக் கட்டிவைப்பது நல்லது என்கிறார்கள் அனுபவஸ்தர்கள்(?).

ஒருமுறை ‘பிஸ்ஸா ஹட்’டில் சாப்பிடச் சென்றிருந்தபோது, அங்கே ஒரு பலூன் கொடுத்தார்கள். அதில் முடிச்சு இல்லை, பலூனைப் பெரிதாக ஊதி, அதன் முனையை ஒரு சின்ன பிளாஸ்டிக் சாதனத்தில் க்ளிப் போட்டதுபோல் பொருத்தியிருந்தார்கள், அதுவும் சமர்த்தாக நின்றுகொண்டது.

அந்த பிளாஸ்டிக் கருவியின் பெயர் எனக்குத் தெரியவில்லை. ஆகவே, எச்சில் வழுக்கலைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு பலூனாக நூல் கொண்டு கட்டவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டேன்.

பொதுவாக, பலூன்கள் அனைத்தும் ஒரே வடிவத்தில்தான் இருக்கும் – கொஞ்சம் டயட் கன்ட்ரோல் இல்லாத கொழுக் மொழுக் ‘8’போல. ஆங்கிலத்தில் இந்த வடிவத்தையே ‘பலூன் ஷேப்’ என்றுதான் குறிப்பிடுகிறார்கள்.

அதேசமயம், இந்தப் பெரும்பான்மை விதிமுறையை ஏற்க மறுக்கும் கலக பலூன்களும் உண்டு. இவை நீள்வட்டம், வட்டம் (கோளம்) போன்ற வடிவங்களிலோ, குரங்கு, வாத்து, நாய், மீன் போன்ற உருவங்களிலோ கிடைக்கின்றன.

இவைதவிர, இன்னும் ‘விவகார’மான சில பலூன் உருவங்களும் இருக்கின்றன. ஆனால் அதையெல்லாம் யாரும் பர்த்டே பார்ட்டிகளுக்குப் பயன்படுத்துவதில்லை என்பதறிக.

பிறந்தநாள் விழா நடக்கும் இடத்தின் அளவைப் பொறுத்து இருபது முதல் ஐம்பது, நூறு, இருநூறு பலூன்கள்கூடத் தேவைப்படலாம். அவற்றையெல்லாம் ஊதி முடித்துக் கொத்துகளாக்கி ஆங்காங்கே கட்டிவைப்பதுடன், உங்கள் கடமை முடிந்துவிடுகிறது. அதன்பிறகு, அந்த பலூன்களுக்கும் நமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்கிற பகவத்கீதை மனோநிலையுடன் இருக்கப் பழகிக்கொள்வது நல்லது.

ஏனெனில், உங்கள் பார்ட்டிக்கு வருகிற குழந்தைகளில் எத்தனை பலூன் பிரியர்கள் இருக்கிறார்களோ, அதே அளவுக்குப் பலூன்களை உடைப்பதில் விருப்பம் கொண்டவர்களும் இருப்பார்கள்.

சில குழந்தைகள் பலூன்களை அழுத்தி உடைப்பார்கள், சிலர் அடுத்தவர்களைத் தாக்கி உடைப்பார்கள், இன்னும் சிலர் மிதித்து நசுக்கி நாசம் பண்ணுவார்கள்.

குழந்தைகள் செய்வது போதாது என்று, பெரியவர்கள் வேறு. சரியாகக் கேக் வெட்டுகிற நேரத்தில் குண்டூசியால் பலூன்களைக் குத்தி உடைப்பார்கள், இந்தப் புண்ணிய காரியத்துக்குச் சிகரெட் லைட்டர் பயன்படுத்தும் கொடூரர்களும் உண்டு.

இதையெல்லாம் பார்க்கிறபோது, நம் மனம் பதறும். ‘பாவிகளா, ரெண்டு மணி நேரம் உட்கார்ந்து ஊதினேனே, இப்படிப் பாழக்கறீங்களே’ என்று உள்ளுக்குள் புலம்பி டென்ஷனாகவேண்டாம், அந்த பலூனுக்குள் இருப்பது, நாம் வீணாக்கிய காற்று, இனிமே அது நமக்குத் தேவையில்லை என்கிற எண்ணத்தை வளர்த்துக்கொண்டுவிட்டால், எந்த பலூன் உடைப்பும் உங்கள் மனத்தை உடைத்துவிடாது, பிளட் பிரஷர் ஏறாமல் பிறந்த நாள் கேக்கையும் விருந்தையும் ருசிக்கலாம்!

***

என். சொக்கன் …

05 09 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

இந்த வார இறுதியில், எங்கள் இரண்டாவது மகளுக்குப் (அவள் பெயர் மங்கை) பிறந்த நாள் வருகிறது. அதற்காகக் கேக் வாங்கப் போயிருந்தோம்.

தம்பிகள், தங்கைகளுக்கு விவரம் தெரியும்வரை, அவர்களுடைய பிறந்த நாள் கேக் வடிவம், சுவை சகலத்தையும் அவரவர் அக்காக்களோ, அண்ணன்களோதான் தீர்மானிப்பார்கள் என்பது உலக மரபு. இதில் அம்மா, அப்பாவுக்கு எந்தப் பங்கும் இருக்கமுடியாது, வீட்டு நலன், அமைதி கருதி அவர்களும் விட்டுக்கொடுத்துவிடுகிறார்கள்.

இதன்படி, மங்கையின் பிறந்த நாள் கேக் எப்படி இருக்கவேண்டும் என்று நங்கைதான் முடிவு செய்தாள், ‘பிங்க் கலர், மிக்கி மவுஸ் ஷேப், உள்ளே சாக்லெட் கூடாது, வெனிலாதான் எனக்குப் பிடிக்கும்’

பேக்கரிக்காரர் செல்லமாக அவள் கன்னத்தில் தட்டினார், ‘நல்லாப் பேசறியே, வெரி குட்’

‘பாராட்டெல்லாம் இருக்கட்டும், அவ சொன்னமாதிரி கேக் செஞ்சுடுவீங்களா?’

அவர் என்னைச் சங்கடமாகப் பார்த்தார், ‘பிங்க் கலர், வெனிலா ஃப்ளேவர்ல்லாம் பிரச்னையில்லை, மிக்கி மவுஸ்ன்னா என்ன?’

அடப் பரிதாபமே, இந்த உலகத்தில் மிக்கி மவுஸ் தெரியாத ஒரு ஜீவனா? வால்ட் டிஸ்னிக்குத் தெரிந்தால் ரொம்ப வருத்தப்படுவார்.

நான் அவருக்கு விளக்க முயன்றேன், ‘இந்த டிவி கார்ட்டூன்ல வருமே, எலிமாதிரி’

’எலியா?’ அவர் முகம் சுருங்கியது, ‘யாராச்சும் எலி ஷேப்ல கேக் செய்வாங்களா? ரொம்ப அசிங்கமா இருக்குமே’

‘இல்லைங்க, மிக்கி மவுஸ் பார்க்க அழகாவே இருக்கும், குழந்தைகளுக்கு ஸ்பெஷல் செல்லம்’

அவர் இன்னும் என்னை நம்பவில்லை, மீண்டும் நங்கையின் கன்னத்தில் தட்டி, ‘நான் உனக்கு நிலா ஷேப்ல கேக் செஞ்சு தர்றேன், ஓகேயா?’ என்றார்.

‘நிலால்லாம் வேணாம், மிக்கி மவுஸ்தான் வேணும்’, அவள் பிடிவாதமாகக் கையைக் கட்டிக்கொண்டாள்.

நங்கையின் கைகள் கட்டப்படும்போது, அனிச்சையாகக் கண்கள் சுருங்கி அழுகைக்குத் தயாராகும், மூக்கு துடிக்கும், வாய் தலைகீழ்ப் பிறையாகக் கவிழ்ந்துகொள்ளும், மீண்டும் அதை நிமிர்த்திச் சிரிக்கவைப்பதற்குச் சில மணி நேரமாவது பிடிக்கும்.

ஆகவே, நான் அவசரமாக மீட்பு நடவடிக்கைகளில் இறங்கினேன், ‘அவ சொன்னாக் கேட்கமாட்டாங்க, நீங்க மிக்கி மவுஸே செஞ்சுடுங்க’

அவர் பரிதாபமாக விழித்தார், ‘எனக்கு அந்த மிக்கி மவுஸ் எப்படி இருக்கும்ன்னு தெரியாதுங்களே’ என்றவர் மேஜை டிராயரைத் திறந்து துளாவி ஒரு லாமினேட் செய்த அட்டையை நீட்டினார், ‘நாங்க வழக்கமா இந்த ஷேப்லதான் கேக் செய்யறது’

அந்த அட்டையில் பெரிதாக ஒன்றும் இல்லை – வட்டம், சதுரம், செவ்வகம், முக்கோணம், பிறை நிலா, நட்சத்திரம், இதயம், அரை வட்டம், அவ்வளவுதான்.

அழுகைக்குத் தயாராகிக்கொண்டிருந்த நங்கையிடம் நான் அந்த அட்டையை நீட்டினேன், ‘அங்கிள்கிட்டே இந்த கேக்ல்லாம் இருக்கு, உனக்கு எது வேணும்ன்னு சொல்லேன்’

அவள் அட்டையைப் பார்க்காமலே ‘மிக்கி மவுஸ்’ என்றாள்.

‘அது இங்கே இல்லையே’

‘அப்ப வா, வேற கடைக்குப் போகலாம்’, இந்தக் காலக் குழந்தைகள் அநியாயத்துக்குத் தெளிவாக இருக்கிறார்கள்.

நங்கையின் அவசர முடிவைக் கண்டு அந்தக் கடைக்காரர் பயந்துவிட்டார், அவசரமாக, ‘மிக்கி மவுஸ் செஞ்சிடலாம்ங்க’ என்றார், ‘ஆனா, எலி ஷேப்ன்னா ரொம்பச் சின்னதா இருக்குமே, பரவாயில்லையா?’

‘இது அந்தமாதிரி எலி இல்லைங்க, கொஞ்சம் பெரிசா, ட்ரெஸ், தொப்பியெல்லாம் மாட்டிகிட்டு வரும், கார்ட்டூன்ல பார்த்ததில்லியா?’

‘நமக்கேதுங்க நேரம்?’ என்று உதட்டைப் பிதுக்கினார் அவர், ‘பொழுது விடிஞ்சு பொழுது சாய்ஞ்சா இங்கே கடையிலதான் பொழப்பு, எப்பவாச்சும் சினிமா, கிரிக்கெட் பார்ப்பேன், அவ்ளோதான்’

டிஸ்னி கதாபாத்திரங்களின் கமர்ஷியல் பிடியில் பூமியே மயங்கிச் சுழன்றுகொண்டிருக்கும்போது, மிக்கி மவுஸ் தெரியாத ஒருவர் இங்கிருக்கிறார். அவருக்கு எப்படி இதை விளக்கிச் சொல்வது? ஒருவேளை நான் சரியாக விளக்கினாலும், அவர் அதைப் புரிந்துகொள்வார் என்பது என்ன நிச்சயம்? இவர்பாட்டுக்கு அரைகுறையாகத் தெரிந்துகொண்டு மிக்கி மவுஸ் பிடிக்க, அது குரங்காகிவிட்டால் என்ன செய்வது?

அவர் என்னுடைய தயக்கத்தைப் புரிந்துகொண்டார், ஒரு டிஷ்யூ பேப்பரை என்னிடம் நீட்டி, ‘அந்த ஷேப் எப்படி இருக்கும்ன்னு அப்படியே வரைஞ்சு காட்டிடுங்க சார்’ என்றார்.

இது அதைவிட மோசம், நான் பேனா பிடித்து எழுதினாலே பூலோகம் தாங்காது, வரைய ஆரம்பித்தால் அவ்வளவுதான்.

இதற்குள் நங்கை பொறுமையிழந்துகொண்டிருந்தாள், ‘சீக்கிரம் வாப்பா, போலாம்’ என்றாள்.

‘கொஞ்சம் பொறும்மா’ என்றபடி டிஷ்யூ பேப்பர்மேல் பாவனையாகப் பேனாவை ஓட்டினேன், மிக்கி மவுஸ் எப்படி இருக்கும்? யோசித்துப் பார்த்தபோது மசங்கலாக ஏதோ தெரிந்தது, அதை அப்படியே வரைந்திருந்தால் நிச்சயமாக பொன்னியின் செல்வன் ஆழ்வார்க்கடியான்தான் தோன்றியிருப்பார்.

ஆக, முழு உருவமெல்லாம் என்னால் நிச்சயமாக வரையமுடியாது, வெறும் முகத்தைமட்டுமாவது முயற்சி செய்யலாம் என்று தோன்றியது.

File:Mickey Mouse.svg

மிக்கி மவுஸின் ஸ்பெஷாலிட்டி, அதன் இரு பெரிய காதுகள்தான். நடுவில் ஒரு பிரம்மாண்டமான வட்டம் வரைந்து, அதன் இரண்டு பக்கங்களிலும் நடுத்தர சைஸ் வட்டங்களை ஒட்டவைத்தால், ஒருமாதிரி மிக்கி மவுஸ் முகம் தோன்றியது.

அப்புறம்?

கண் வரையவேண்டும், மிக்கியின் கண்கள் நீள்வட்ட வடிவமானவை, ஆனால் வட்டத்தை அமுக்கிப் பிதுக்கியதுபோல் நிற்கவேண்டும், கண்களுக்குள் இருக்கும் கருவிழிகளும் அதே நீள்வட்டம், அதே பிதுக்கல்.

மூக்கு? அதுவும் நீள்வட்டம்தான். ஆனால் படுக்கைவசத்தில் இருக்கவேண்டும்.

கடைசியாக, புன்னகைக்கும் வாய், அது லேசாகத் திறந்திருந்தால் நல்லது, ஆனால் வழக்கமாக எலிகளுக்கு இருக்கும் முன்நீட்டிய பற்கள் மிக்கிக்குக் கூடாது, அவை அதன் அழகைக் கெடுத்துவிடும் என்பதால் வால்ட் டிஸ்னி மறைத்துவிட்டார்.

இதெல்லாம், நானாகக் கற்பனை செய்து ஒருமாதிரி குத்துமதிப்பாக வரைந்தேன், அதை நங்கையிடம் காட்டினேன், ‘இது சரியா இருக்கா?’

அவள் என்னை விநோதமாகப் பார்த்தாள், ‘என்ன வரைஞ்சிருக்கே?’

’மிக்கி மவுஸ்’

’அச்சச்சோ’ என்றாள் அவள், ‘இது மிக்கிமாதிரியே இல்லை, போப்பா, உனக்கு ஒண்ணுமே தெரியலை’

‘சரி, நீயே வரைஞ்சுடு’ என்று காகிதம், பேனாவை அவளிடம் கொடுத்தேன்.

’ஓகே’ என்றவள் சட்டென்று அங்கேயே மடங்கி உட்கார்ந்தாள், சுற்றுப்புறத்தைப்பற்றிக் கவலைப்படாமல் வரைய ஆரம்பித்துவிட்டாள்.

இரண்டு நிமிடங்களில் அவள் வரைந்து கொடுத்த மிக்கி மவுஸ், கிட்டத்தட்ட நான் வரைந்ததைப்போலவேதான் இருந்தது. ஆனால் அதை வெளிப்படையாகச் சொன்னால் மறுபடியும் ஒரு திட்டு விழும், எதற்கு வம்பு என்று வாயை மூடிக்கொண்டேன்.

கடைக்காரர் எங்களுடைய மிக்கி மவுஸ்களைத் திருப்பித் திருப்பிப் பார்த்தார், ‘இப்படியே செய்யணுமா சார்?’ என்றார்.

‘ஆமாங்க’

ஏதோ சொல்ல விரும்புவதுபோல் அவருடைய உதடுகள் துடித்தன, கட்டுப்படுத்திக்கொண்டு, ‘நான் எங்க பாஸ்கிட்ட பேசிட்டு உங்களுக்கு ஃபோன் செய்யட்டுமா சார்?’

’ஓகே’, அதே காகிதத்தின் பின்பக்கம் என்னுடைய மொபைல் நம்பரைக் குறித்துக் கொடுத்தேன்.

நங்கை உற்சாகமாகக் குதியாட்டம் போட்டபடி என் பின்னே நடந்துவந்தாள், அவளைப் பொறுத்தவரை மிக்கி மவுஸ் கேக் தயாராகிவிட்டது.

ஆனால், எனக்கு நிச்சயமாகத் தெரியும், அந்த ஆள் நாங்கள் வரைந்து கொடுத்த பொம்மைகளையும், ஃபோன் நம்பரையும் இந்நேரம் குப்பைத் தொட்டியில் போட்டிருப்பார், தனக்குச் செய்யத் தெரியாத ஒரு வடிவத்தில் வாடிக்கையாளர்கள் கேக் கேட்கிறார்கள் என்பதை முதலாளியிடம் சொல்லித் திட்டு வாங்க அவருக்கு என்ன பைத்தியமா?

நாளைக்குள் மிக்கி மவுஸ் ஷேப்பில் கேக் செய்யத் தெரிந்த ஒரு கடையைத் தேடிப் பிடிக்கவேண்டும், கடவுளே காப்பாத்து!

***

என். சொக்கன் …

02 09 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 620,745 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

September 2009
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930