கேக்
Posted September 2, 2009
on:- In: (Auto)Biography | Bangalore | Brand | Characters | Creativity | Customer Care | Customer Service | Customers | Fans | Food | Imagination | Kids | Life | Memories | Pulambal | Teaching | Uncategorized
- 18 Comments
இந்த வார இறுதியில், எங்கள் இரண்டாவது மகளுக்குப் (அவள் பெயர் மங்கை) பிறந்த நாள் வருகிறது. அதற்காகக் கேக் வாங்கப் போயிருந்தோம்.
தம்பிகள், தங்கைகளுக்கு விவரம் தெரியும்வரை, அவர்களுடைய பிறந்த நாள் கேக் வடிவம், சுவை சகலத்தையும் அவரவர் அக்காக்களோ, அண்ணன்களோதான் தீர்மானிப்பார்கள் என்பது உலக மரபு. இதில் அம்மா, அப்பாவுக்கு எந்தப் பங்கும் இருக்கமுடியாது, வீட்டு நலன், அமைதி கருதி அவர்களும் விட்டுக்கொடுத்துவிடுகிறார்கள்.
இதன்படி, மங்கையின் பிறந்த நாள் கேக் எப்படி இருக்கவேண்டும் என்று நங்கைதான் முடிவு செய்தாள், ‘பிங்க் கலர், மிக்கி மவுஸ் ஷேப், உள்ளே சாக்லெட் கூடாது, வெனிலாதான் எனக்குப் பிடிக்கும்’
பேக்கரிக்காரர் செல்லமாக அவள் கன்னத்தில் தட்டினார், ‘நல்லாப் பேசறியே, வெரி குட்’
‘பாராட்டெல்லாம் இருக்கட்டும், அவ சொன்னமாதிரி கேக் செஞ்சுடுவீங்களா?’
அவர் என்னைச் சங்கடமாகப் பார்த்தார், ‘பிங்க் கலர், வெனிலா ஃப்ளேவர்ல்லாம் பிரச்னையில்லை, மிக்கி மவுஸ்ன்னா என்ன?’
அடப் பரிதாபமே, இந்த உலகத்தில் மிக்கி மவுஸ் தெரியாத ஒரு ஜீவனா? வால்ட் டிஸ்னிக்குத் தெரிந்தால் ரொம்ப வருத்தப்படுவார்.
நான் அவருக்கு விளக்க முயன்றேன், ‘இந்த டிவி கார்ட்டூன்ல வருமே, எலிமாதிரி’
’எலியா?’ அவர் முகம் சுருங்கியது, ‘யாராச்சும் எலி ஷேப்ல கேக் செய்வாங்களா? ரொம்ப அசிங்கமா இருக்குமே’
‘இல்லைங்க, மிக்கி மவுஸ் பார்க்க அழகாவே இருக்கும், குழந்தைகளுக்கு ஸ்பெஷல் செல்லம்’
அவர் இன்னும் என்னை நம்பவில்லை, மீண்டும் நங்கையின் கன்னத்தில் தட்டி, ‘நான் உனக்கு நிலா ஷேப்ல கேக் செஞ்சு தர்றேன், ஓகேயா?’ என்றார்.
‘நிலால்லாம் வேணாம், மிக்கி மவுஸ்தான் வேணும்’, அவள் பிடிவாதமாகக் கையைக் கட்டிக்கொண்டாள்.
நங்கையின் கைகள் கட்டப்படும்போது, அனிச்சையாகக் கண்கள் சுருங்கி அழுகைக்குத் தயாராகும், மூக்கு துடிக்கும், வாய் தலைகீழ்ப் பிறையாகக் கவிழ்ந்துகொள்ளும், மீண்டும் அதை நிமிர்த்திச் சிரிக்கவைப்பதற்குச் சில மணி நேரமாவது பிடிக்கும்.
ஆகவே, நான் அவசரமாக மீட்பு நடவடிக்கைகளில் இறங்கினேன், ‘அவ சொன்னாக் கேட்கமாட்டாங்க, நீங்க மிக்கி மவுஸே செஞ்சுடுங்க’
அவர் பரிதாபமாக விழித்தார், ‘எனக்கு அந்த மிக்கி மவுஸ் எப்படி இருக்கும்ன்னு தெரியாதுங்களே’ என்றவர் மேஜை டிராயரைத் திறந்து துளாவி ஒரு லாமினேட் செய்த அட்டையை நீட்டினார், ‘நாங்க வழக்கமா இந்த ஷேப்லதான் கேக் செய்யறது’
அந்த அட்டையில் பெரிதாக ஒன்றும் இல்லை – வட்டம், சதுரம், செவ்வகம், முக்கோணம், பிறை நிலா, நட்சத்திரம், இதயம், அரை வட்டம், அவ்வளவுதான்.
அழுகைக்குத் தயாராகிக்கொண்டிருந்த நங்கையிடம் நான் அந்த அட்டையை நீட்டினேன், ‘அங்கிள்கிட்டே இந்த கேக்ல்லாம் இருக்கு, உனக்கு எது வேணும்ன்னு சொல்லேன்’
அவள் அட்டையைப் பார்க்காமலே ‘மிக்கி மவுஸ்’ என்றாள்.
‘அது இங்கே இல்லையே’
‘அப்ப வா, வேற கடைக்குப் போகலாம்’, இந்தக் காலக் குழந்தைகள் அநியாயத்துக்குத் தெளிவாக இருக்கிறார்கள்.
நங்கையின் அவசர முடிவைக் கண்டு அந்தக் கடைக்காரர் பயந்துவிட்டார், அவசரமாக, ‘மிக்கி மவுஸ் செஞ்சிடலாம்ங்க’ என்றார், ‘ஆனா, எலி ஷேப்ன்னா ரொம்பச் சின்னதா இருக்குமே, பரவாயில்லையா?’
‘இது அந்தமாதிரி எலி இல்லைங்க, கொஞ்சம் பெரிசா, ட்ரெஸ், தொப்பியெல்லாம் மாட்டிகிட்டு வரும், கார்ட்டூன்ல பார்த்ததில்லியா?’
‘நமக்கேதுங்க நேரம்?’ என்று உதட்டைப் பிதுக்கினார் அவர், ‘பொழுது விடிஞ்சு பொழுது சாய்ஞ்சா இங்கே கடையிலதான் பொழப்பு, எப்பவாச்சும் சினிமா, கிரிக்கெட் பார்ப்பேன், அவ்ளோதான்’
டிஸ்னி கதாபாத்திரங்களின் கமர்ஷியல் பிடியில் பூமியே மயங்கிச் சுழன்றுகொண்டிருக்கும்போது, மிக்கி மவுஸ் தெரியாத ஒருவர் இங்கிருக்கிறார். அவருக்கு எப்படி இதை விளக்கிச் சொல்வது? ஒருவேளை நான் சரியாக விளக்கினாலும், அவர் அதைப் புரிந்துகொள்வார் என்பது என்ன நிச்சயம்? இவர்பாட்டுக்கு அரைகுறையாகத் தெரிந்துகொண்டு மிக்கி மவுஸ் பிடிக்க, அது குரங்காகிவிட்டால் என்ன செய்வது?
அவர் என்னுடைய தயக்கத்தைப் புரிந்துகொண்டார், ஒரு டிஷ்யூ பேப்பரை என்னிடம் நீட்டி, ‘அந்த ஷேப் எப்படி இருக்கும்ன்னு அப்படியே வரைஞ்சு காட்டிடுங்க சார்’ என்றார்.
இது அதைவிட மோசம், நான் பேனா பிடித்து எழுதினாலே பூலோகம் தாங்காது, வரைய ஆரம்பித்தால் அவ்வளவுதான்.
இதற்குள் நங்கை பொறுமையிழந்துகொண்டிருந்தாள், ‘சீக்கிரம் வாப்பா, போலாம்’ என்றாள்.
‘கொஞ்சம் பொறும்மா’ என்றபடி டிஷ்யூ பேப்பர்மேல் பாவனையாகப் பேனாவை ஓட்டினேன், மிக்கி மவுஸ் எப்படி இருக்கும்? யோசித்துப் பார்த்தபோது மசங்கலாக ஏதோ தெரிந்தது, அதை அப்படியே வரைந்திருந்தால் நிச்சயமாக பொன்னியின் செல்வன் ஆழ்வார்க்கடியான்தான் தோன்றியிருப்பார்.
ஆக, முழு உருவமெல்லாம் என்னால் நிச்சயமாக வரையமுடியாது, வெறும் முகத்தைமட்டுமாவது முயற்சி செய்யலாம் என்று தோன்றியது.
மிக்கி மவுஸின் ஸ்பெஷாலிட்டி, அதன் இரு பெரிய காதுகள்தான். நடுவில் ஒரு பிரம்மாண்டமான வட்டம் வரைந்து, அதன் இரண்டு பக்கங்களிலும் நடுத்தர சைஸ் வட்டங்களை ஒட்டவைத்தால், ஒருமாதிரி மிக்கி மவுஸ் முகம் தோன்றியது.
அப்புறம்?
கண் வரையவேண்டும், மிக்கியின் கண்கள் நீள்வட்ட வடிவமானவை, ஆனால் வட்டத்தை அமுக்கிப் பிதுக்கியதுபோல் நிற்கவேண்டும், கண்களுக்குள் இருக்கும் கருவிழிகளும் அதே நீள்வட்டம், அதே பிதுக்கல்.
மூக்கு? அதுவும் நீள்வட்டம்தான். ஆனால் படுக்கைவசத்தில் இருக்கவேண்டும்.
கடைசியாக, புன்னகைக்கும் வாய், அது லேசாகத் திறந்திருந்தால் நல்லது, ஆனால் வழக்கமாக எலிகளுக்கு இருக்கும் முன்நீட்டிய பற்கள் மிக்கிக்குக் கூடாது, அவை அதன் அழகைக் கெடுத்துவிடும் என்பதால் வால்ட் டிஸ்னி மறைத்துவிட்டார்.
இதெல்லாம், நானாகக் கற்பனை செய்து ஒருமாதிரி குத்துமதிப்பாக வரைந்தேன், அதை நங்கையிடம் காட்டினேன், ‘இது சரியா இருக்கா?’
அவள் என்னை விநோதமாகப் பார்த்தாள், ‘என்ன வரைஞ்சிருக்கே?’
’மிக்கி மவுஸ்’
’அச்சச்சோ’ என்றாள் அவள், ‘இது மிக்கிமாதிரியே இல்லை, போப்பா, உனக்கு ஒண்ணுமே தெரியலை’
‘சரி, நீயே வரைஞ்சுடு’ என்று காகிதம், பேனாவை அவளிடம் கொடுத்தேன்.
’ஓகே’ என்றவள் சட்டென்று அங்கேயே மடங்கி உட்கார்ந்தாள், சுற்றுப்புறத்தைப்பற்றிக் கவலைப்படாமல் வரைய ஆரம்பித்துவிட்டாள்.
இரண்டு நிமிடங்களில் அவள் வரைந்து கொடுத்த மிக்கி மவுஸ், கிட்டத்தட்ட நான் வரைந்ததைப்போலவேதான் இருந்தது. ஆனால் அதை வெளிப்படையாகச் சொன்னால் மறுபடியும் ஒரு திட்டு விழும், எதற்கு வம்பு என்று வாயை மூடிக்கொண்டேன்.
கடைக்காரர் எங்களுடைய மிக்கி மவுஸ்களைத் திருப்பித் திருப்பிப் பார்த்தார், ‘இப்படியே செய்யணுமா சார்?’ என்றார்.
‘ஆமாங்க’
ஏதோ சொல்ல விரும்புவதுபோல் அவருடைய உதடுகள் துடித்தன, கட்டுப்படுத்திக்கொண்டு, ‘நான் எங்க பாஸ்கிட்ட பேசிட்டு உங்களுக்கு ஃபோன் செய்யட்டுமா சார்?’
’ஓகே’, அதே காகிதத்தின் பின்பக்கம் என்னுடைய மொபைல் நம்பரைக் குறித்துக் கொடுத்தேன்.
நங்கை உற்சாகமாகக் குதியாட்டம் போட்டபடி என் பின்னே நடந்துவந்தாள், அவளைப் பொறுத்தவரை மிக்கி மவுஸ் கேக் தயாராகிவிட்டது.
ஆனால், எனக்கு நிச்சயமாகத் தெரியும், அந்த ஆள் நாங்கள் வரைந்து கொடுத்த பொம்மைகளையும், ஃபோன் நம்பரையும் இந்நேரம் குப்பைத் தொட்டியில் போட்டிருப்பார், தனக்குச் செய்யத் தெரியாத ஒரு வடிவத்தில் வாடிக்கையாளர்கள் கேக் கேட்கிறார்கள் என்பதை முதலாளியிடம் சொல்லித் திட்டு வாங்க அவருக்கு என்ன பைத்தியமா?
நாளைக்குள் மிக்கி மவுஸ் ஷேப்பில் கேக் செய்யத் தெரிந்த ஒரு கடையைத் தேடிப் பிடிக்கவேண்டும், கடவுளே காப்பாத்து!
***
என். சொக்கன் …
02 09 2009
இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க
18 Responses to "கேக்"

Sir,
Try it in nilgirs shop. they will give you for sure.a


/இரண்டு நிமிடங்களில் அவள் வரைந்து கொடுத்த மிக்கி மவுஸ், கிட்டத்தட்ட நான் வரைந்ததைப்போலவேதான் இருந்தது. ஆனால் அதை வெளிப்படையாகச் சொன்னால் மறுபடியும் ஒரு திட்டு விழும், எதற்கு வம்பு என்று வாயை மூடிக்கொண்டேன்//
நல்ல புரிஞ்சு வைச்சிருக்கீங்க ! நீங்க எபபடி உங்க பொண்ணுக்கிட்டேர்ந்து எஸ்ஸானீங்களோ அதே டெக்னிக்தான் கடைக்காரரும் உங்ககிட்டேர்ந்து எஸ்ஸான கதை :)))


பெங்களூரில் பர்த்டே கேக் online லில் வாங்கலாம் சார். நான் ஏற்கெனெவே வாங்கியிருக்கிறேன். கரெக்டா டெலிவரி செய்துவிட்டார்கள். நங்கை ஆசைப்படும் Micky Mouse Shape ம் கிடைக்கிறது. காசுதான் கொஞ்சம் அதிகம். இந்த லிங்கில் சென்று பார்க்கவும்.
http://www.bangalorecakeshop.com/index.asp


Wishing Mangai Happy Birthday! Asusual, narration of the incident is awesome. You can try in Sweet chariot. They are good professionals in cakes and have more brances in Blore.


இங்கு உங்கள் போட்டோவை கொடுத்தால் அதுபோலவும் செய்து தருவார்கள்:) பாப்பாவுக்காக டிக்கெட் எடுத்து இங்கு வந்துடுங்க கேக் நான் ஸ்பான்சர் செஞ்சுடுறேன்:) நீங்க திரும்ப எடுத்துக்கிட்டு போய்விடலாம்.


பேசாமல் பிரம்மாண்டமான வட்டத்தில் ஒரு கேக், நடுத்தர வட்டத்தில் இரண்டு கேக், நீள்வட்டத்தில் 5 கேக் என்று தேவையான கலரில் வாங்கி நங்கையை விட்டு ஒட்ட வைத்தால் மிக்கி கேக் ரெடி.
மங்கைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!


மங்கைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
இந்த காலத்து குழந்தைக்கிட்ட சமாளிகிர்த்து ரொம்ப கஷ்டம்
// ‘இப்படியே செய்யணுமா சார்?’//
பாவம் சார் அவரு… 🙂


//‘அப்ப வா, வேற கடைக்குப் போகலாம்’, இந்தக் காலக் குழந்தைகள் அநியாயத்துக்குத் தெளிவாக இருக்கிறார்கள்.//
//ஒரு டிஷ்யூ பேப்பரை என்னிடம் நீட்டி, ‘அந்த ஷேப் எப்படி இருக்கும்ன்னு அப்படியே வரைஞ்சு காட்டிடுங்க சார்’ என்றார்.
இது அதைவிட மோசம், நான் பேனா பிடித்து எழுதினாலே பூலோகம் தாங்காது, வரைய ஆரம்பித்தால் அவ்வளவுதான்.//
//நாளைக்குள் மிக்கி மவுஸ் ஷேப்பில் கேக் செய்யத் தெரிந்த ஒரு கடையைத் தேடிப் பிடிக்கவேண்டும், கடவுளே காப்பாத்து!//
உங்கள் எழுத்தில் உள்ள மெல்லிய நகைச்சுவை உணர்வுக்கு நன்றி.
ஒரு கேக் செய்து விட்டு அதன்மீது மிக்கி மவுஸ் பொம்மை வைத்துவிட்டால் அதுதான் மிக்கி மவுஸ்கேக்.(ரூம் போட்டு எல்லாம் யோசிக்கில்ல சார் ).
பதிவுக்கு நன்றி.


//அவள் வரைந்து கொடுத்த மிக்கி மவுஸ், கிட்டத்தட்ட நான் வரைந்ததைப்போலவேதான் இருந்தது. //
நங்கை பதிவெல்லாம் படிக்கமாட்டாங்கிறதுனால இப்படி அல்பத்தனமா அவ படத்துக்கு ஈக்குவலா உங்க படமும் இருந்தத்துன்னு சொல்றதை கண்டிக்கிறேன். 🙂


Dear Mr.Chokkan,
Happy Birthday Nangai.


மங்கைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
ஒரு நல்ல சிறுகதைக்கான சாயலைக் கொண்டிருக்கிறது இந்தப் பதிவு. முடிவை கொஞ்சம் ’மாத்தி யோசி’ ச்சிருந்தால் சிறுகதையாகியிருக்கும்.
அசோகமித்திரனின் “ரிக்ஷா” போல.


Monday to Sunday (opposite to Forum) super market-la mickey mouse cake kidaikkum
naan vangi irukken


Dear Chokkan,
Mangai ikku piranthanaal valthukkal. B’lore il micky mouse theriyatha backery ya?


இவ்வளவு சிரமப்பட்டு அவருக்கு மிக்கி மவுஸ் வரைந்து கொடுப்பதற்க்கு பதில் வேரு கடைக்கு சென்றிருக்கலாமே ?

1 | Eswar
September 2, 2009 at 11:38 am
//தலைகீழ்ப் பிறையாகக் கவிழ்ந்துகொள்ளும், மீண்டும் அதை நிமிர்த்திச் சிரிக்கவைப்பதற்கு//
சூப்பர்.