மனம் போன போக்கில்

Archive for September 5th, 2009

ஒருவழியாக, கேக் பிரச்னை தீர்ந்தது. அடுத்து, பலூன் ஊதும் வைபவம்.

பர்த்டே பார்ட்டி என்றாலே, மேலும் கீழும் இடமும் வலமும் முன்னும் பின்னும் பல வண்ண பலூன்கள் ஆடிக்கொண்டிருக்கவேண்டும் என்பது நவீன மரபு. சில இடங்களில் வாசல் வரவேற்பு வளையத்தையே பலூன் சரங்களாக அமைத்து அசத்துவார்கள். கூரை, ஜன்னல்கள், மாடிப்படியின் கைப்பிடி விளிம்புகள், மேஜை, நாற்காலிகளின் கால்களில்கூட பலூன்கள் இரண்டு, மூன்றாகச் சேர்த்துப் பூ வடிவத்தில் கட்டிவிடப்பட்டிருக்கும்.

இந்தப் பலூன்களெல்லாம், அந்தந்த விழாக்களுக்கு வருகிற குழந்தைகளுக்குதான். அவர்கள் தங்களுடைய பெற்றோரிடம் கேட்க, அவர்கள் சட்டென்று எம்பிப் பறித்துக் கொடுத்துவிடுவார்கள், ஒவ்வொரு குழந்தையும் எந்த வண்ண பலூனை வீட்டுக்குக் கொண்டு செல்வது என்று போட்டி போடும், ‘அந்தக் குழந்தையோட பலூன்மட்டும் பெரிசா இருக்கே’ ரக அழுகைகள் தனிக்கதை.

நானும் இப்படிப் பலமுறை நஙகைக்குப் பலூன் பறித்துக் கொடுத்திருக்கிறேன். அந்த பலூன்களையெல்லாம் யார் மெனக்கெட்டு ஊதிவைத்திருப்பார்கள் என்பதுபற்றித் துளிகூட யோசித்தது கிடையாது. இன்றைக்கு நானே அந்த வேலையைச் செய்ய நேர்ந்தபோதுதான் அதில் இருக்கும் சிரமங்கள் புரிந்தன.

முதலாவதாக, ஒரு பலூனின் விலை என்ன என்பது யாருக்கும் தெரியாத ரகசியம். சில கடைகளில் ஐம்பது பைசா, வேறு சில இடங்களில் ஒரு ரூபாய், ஒன்னரை, இரண்டு, ஐந்து, பத்து ரூபாய் என்று எகிறுகிறது.

இன்னொரு வேடிக்கை, பலூன்களைப் பாக்கெட்டில் போட்டு விற்கும்போது, ’முப்பத்தைந்து பலூன் நாற்பத்தைந்து ரூபாய்’ என்பதுபோல் விநோதமாக ஒரு கணக்கு சொல்கிறார்கள், அது ஏன் முப்பத்தைந்து? இருபத்தைந்து அல்லது ஐம்பது என்று போட்டால் ரவுண்டாகக் கணக்குப்போட வசதியாக இருக்குமில்லையா? இதுவும் பெரிய மர்மமாக இருக்கிறது.

இதனால், நாம் எவ்வளவுதான் யோசித்து வாங்கினாலும் ஒரு பலூனின் நியாயமான விலை என்ன என்பது யாருக்கும் புரியப்போவதில்லை. அதேபோல், அதை ஊதினால் எலுமிச்சை சைஸ் வருமா, அல்லது பலாப்பழ சைஸா என்பதும் கோககோலா ஃபார்முலாவுக்கு இணையான பரம ரகசியம்.

பலூனை ஊதுவதற்கு ஒரு வழிமுறை இருக்கிறது – நாதஸ்வரம்போல் வாய்க்கு நேராக வைத்து ஊதினால் கொஞ்சம்தான் பலன் கிடைக்கும், அதையே புல்லாங்குழல்போல் குறுக்காக வைத்து ஊதும்போது, குறைந்த ‘தம்’மில் அதிக ஊதல் சாத்தியமாகிறது. இது உங்களுக்குப் புரிவதற்குள் குறைந்தபட்சம் பத்து பலூன்களையாவது குட்டியூண்டு சைஸில் ஊதி முடித்து அலுத்திருப்பீர்கள்.

அடுத்து, புல்லாங்குழல் பாணியில் பலூனைப் பிடித்து ஊதும்போது, அதன் முனையைக் கவனமாகப் பற்றிக்கொள்ளவேண்டும், உங்கள் நகம் நீளமானதாக இருந்துவிட்டால் நீங்களே உங்கள் பலூனை நாசப்படுத்திவிடுகிற வாய்ப்பு உண்டு.

ஆகவே, குரங்கு தன் குட்டியைப் பல் படாமல் வாயில் கவ்விச் செல்வதுபோல, இரண்டு விரல்களின் நுனியால் பலூன் நுனியைப் பற்றி இழுத்துக்கொண்டு இன்னொருபக்கம் பலமாக ஊதவேண்டும், சரேலென்று உங்கள் மூச்சுக்காற்று அடுத்த பக்கத்தில் இருக்கும் பலூனைப் பெரிதாக்கத் தொடங்கும். கொஞ்சம் கொஞ்சமாக இது பலூன்முழுக்கச் சீராகப் பரவும், ஒருமாதிரியாகப் பலூனின் வடிவம் தெரிய ஆரம்பிக்கும்.

இப்போது, அடுத்த பிரச்னை – ஒரு பலூனை எவ்வளவு பெரிதாக ஊதலாம்? இந்த சைஸ் போதுமா? அல்லது இன்னும் ஊதவேண்டுமா? ஒருவேளை வெடித்துவிடுமா? பலூன் வெடித்தால் என்ன ஆகும்? கையில் காயம் படுமா? அல்லது, கன்னத்திலா? வாயிலா? நாம் வெளிவிட்ட மூச்சுக்காற்று (கார்பன் டை ஆக்ஸைட்?) அதே வேகத்தில் நம் வாய்க்குள் திரும்பிச் சென்று நுரையீரலில் ஏதாவது களேபரம் செய்துவிடுமா?

இந்த பயத்தில் பலூனை ரொம்பச் சின்னதாக ஊதிவிட்டால், மனைவியிடம் பாட்டுவாங்கவேண்டியிருக்கும், ‘ஹூம், இவ்வளவுதானா உன் தம்மு? என்னவோ பெரிசா அலட்டினியே!’ என்றெல்லாம் சொல்லாமல் சொல்வதில் அவர்கள் சமர்த்தர்கள்.

ஆகவே, பலூனும் வெடித்துவிடக்கூடாது, அதேசமயம் அது ரொம்பச் சின்னதாகவும் இருந்துவிடக்கூடாது, அப்படி ஒரு பர்ஃபெக்ட் இடைநிலையைக் கண்டுபிடித்து, அத்துடன் உங்கள் ஊதுதலை நிறுத்திக்கொள்வது உத்தமம்.

அடுத்து, பலூனைக் கட்டி முடிச்சுப் போடவேண்டிய நேரம். இதற்கு ஒரு நூல் கண்டு பக்கத்திலேயே தயாராக இருப்பது நல்லது.

சின்ன நூல்கண்டா நம்மைச் சிறைப்படுத்துவது என்று இந்த விஷயத்தில் அலட்சியமாக இருந்துவிடாதீர்கள், நிஜமாகவே அந்த நூல்கண்டைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளாமல் இஷ்டப்படி செயல்பட்டால், அப்படியும் இப்படியும் சுற்றி வந்து நமக்கே தெரியாமல் நம்மைக் கட்டிப்போட்டுவிடும், சில சமயங்களில் விரல் நுனியை அறுத்து ரத்த காயம் பண்ணிவிடும், ஜாக்கிரதை!

அடுத்து, ஏதோ ஒரு நூல்கண்டை வாங்கிவைக்காதீர்கள், மெலிதான நூல்கள் பலூன் கட்ட உகந்தவை அல்ல, சுற்றிச் சுற்றி தாவு தீர்ந்துவிடும், அல்லது அபத்திரமாக அறுந்து காற்றுப்போகும், கொஞ்சம் தடிமனான ட்வைன் நூலைப் பயன்படுத்தினால் மண்டை காய்வதை ஓரளவு குறைக்கலாம்.

சில பலூன்களைக் கட்டுவதற்கு நூல் தேவைப்படாது, பலூனையே நன்றாக முனையில் இழுத்துப் பிடித்து முடிச்சுப் போட்டுவிடலாம். ஆனால் அப்போதும் ஒரு பாதுகாப்பு(?)க்கு நூலைக் கட்டிவைப்பது நல்லது என்கிறார்கள் அனுபவஸ்தர்கள்(?).

ஒருமுறை ‘பிஸ்ஸா ஹட்’டில் சாப்பிடச் சென்றிருந்தபோது, அங்கே ஒரு பலூன் கொடுத்தார்கள். அதில் முடிச்சு இல்லை, பலூனைப் பெரிதாக ஊதி, அதன் முனையை ஒரு சின்ன பிளாஸ்டிக் சாதனத்தில் க்ளிப் போட்டதுபோல் பொருத்தியிருந்தார்கள், அதுவும் சமர்த்தாக நின்றுகொண்டது.

அந்த பிளாஸ்டிக் கருவியின் பெயர் எனக்குத் தெரியவில்லை. ஆகவே, எச்சில் வழுக்கலைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு பலூனாக நூல் கொண்டு கட்டவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டேன்.

பொதுவாக, பலூன்கள் அனைத்தும் ஒரே வடிவத்தில்தான் இருக்கும் – கொஞ்சம் டயட் கன்ட்ரோல் இல்லாத கொழுக் மொழுக் ‘8’போல. ஆங்கிலத்தில் இந்த வடிவத்தையே ‘பலூன் ஷேப்’ என்றுதான் குறிப்பிடுகிறார்கள்.

அதேசமயம், இந்தப் பெரும்பான்மை விதிமுறையை ஏற்க மறுக்கும் கலக பலூன்களும் உண்டு. இவை நீள்வட்டம், வட்டம் (கோளம்) போன்ற வடிவங்களிலோ, குரங்கு, வாத்து, நாய், மீன் போன்ற உருவங்களிலோ கிடைக்கின்றன.

இவைதவிர, இன்னும் ‘விவகார’மான சில பலூன் உருவங்களும் இருக்கின்றன. ஆனால் அதையெல்லாம் யாரும் பர்த்டே பார்ட்டிகளுக்குப் பயன்படுத்துவதில்லை என்பதறிக.

பிறந்தநாள் விழா நடக்கும் இடத்தின் அளவைப் பொறுத்து இருபது முதல் ஐம்பது, நூறு, இருநூறு பலூன்கள்கூடத் தேவைப்படலாம். அவற்றையெல்லாம் ஊதி முடித்துக் கொத்துகளாக்கி ஆங்காங்கே கட்டிவைப்பதுடன், உங்கள் கடமை முடிந்துவிடுகிறது. அதன்பிறகு, அந்த பலூன்களுக்கும் நமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்கிற பகவத்கீதை மனோநிலையுடன் இருக்கப் பழகிக்கொள்வது நல்லது.

ஏனெனில், உங்கள் பார்ட்டிக்கு வருகிற குழந்தைகளில் எத்தனை பலூன் பிரியர்கள் இருக்கிறார்களோ, அதே அளவுக்குப் பலூன்களை உடைப்பதில் விருப்பம் கொண்டவர்களும் இருப்பார்கள்.

சில குழந்தைகள் பலூன்களை அழுத்தி உடைப்பார்கள், சிலர் அடுத்தவர்களைத் தாக்கி உடைப்பார்கள், இன்னும் சிலர் மிதித்து நசுக்கி நாசம் பண்ணுவார்கள்.

குழந்தைகள் செய்வது போதாது என்று, பெரியவர்கள் வேறு. சரியாகக் கேக் வெட்டுகிற நேரத்தில் குண்டூசியால் பலூன்களைக் குத்தி உடைப்பார்கள், இந்தப் புண்ணிய காரியத்துக்குச் சிகரெட் லைட்டர் பயன்படுத்தும் கொடூரர்களும் உண்டு.

இதையெல்லாம் பார்க்கிறபோது, நம் மனம் பதறும். ‘பாவிகளா, ரெண்டு மணி நேரம் உட்கார்ந்து ஊதினேனே, இப்படிப் பாழக்கறீங்களே’ என்று உள்ளுக்குள் புலம்பி டென்ஷனாகவேண்டாம், அந்த பலூனுக்குள் இருப்பது, நாம் வீணாக்கிய காற்று, இனிமே அது நமக்குத் தேவையில்லை என்கிற எண்ணத்தை வளர்த்துக்கொண்டுவிட்டால், எந்த பலூன் உடைப்பும் உங்கள் மனத்தை உடைத்துவிடாது, பிளட் பிரஷர் ஏறாமல் பிறந்த நாள் கேக்கையும் விருந்தையும் ருசிக்கலாம்!

***

என். சொக்கன் …

05 09 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 621,011 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

September 2009
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930