மனம் போன போக்கில்

தாண்டிச் சென்ற பஸ்

Posted on: October 1, 2009

அலுவல் நிமித்தம் மும்பை வந்திருக்கிறேன். இன்னும் இரண்டு, மூன்று நாள் இங்கேதான் ஜாகை.

பெங்களூரிலிருந்து விமானத்தில் மும்பை வருவதற்கு ஒன்றரை மணி நேரம்தான் ஆகிறது. ஆனால் எங்கள் வீட்டிலிருந்து பெங்களூர் விமான நிலையம் சென்று சேர்வதற்குச் சுத்தமாக இரண்டே கால் மணி நேரம்.

நேற்று மாலை, நானும் என் அலுவலக நண்பரும் விமான நிலையம் செல்கிற பேருந்துக்காகக் காத்திருந்தோம். சுவாரஸ்யமான அரட்டையில் நேரம் ஓடியதே தெரியவில்லை.

ஐந்தே முக்கால் மணிவாக்கில், எதேச்சையாக அவர் கடிகாரத்தைப் பார்த்தார், ‘யோவ், ரொம்ப லேட் ஆயிடுச்சுய்யா, பஸ் எங்கே?’

எங்கள் ஏரியாவிலிருந்து விமான நிலையத்துக்குச் செல்ல மணிக்கு ஒரு பஸ் உண்டு. ஆனால் நேற்றைக்கு அந்த பஸ் வரவில்லை, என்ன காரணமோ தெரியவில்லை.

பேருந்து நிறுத்தத்தில் இருந்த டைம் கீப்பரைத் (நேரக் காப்பாளர் என்றால் கோபித்துக்கொள்வீர்களா?) தேடிப் பிடித்தோம், ‘ஏர்போர்ட் பஸ் என்னாச்சு?’

‘தெரியலையே’ என்று ஒரு பொறுப்பான பதிலைச் சொன்னார் அவர், ‘எங்கனா டிராஃபிக்ல மாட்டிகிட்டிருக்கும்’

‘எப்ப வரும்?’

‘எனக்கென்ன தெரியும்?’

அத்துடன் அவர் கடமை முடிந்தது. நாங்கள் பழையபடி சாலையோரத்துக்குத் திரும்பினோம், ‘இப்ப என்ன பண்றது? காத்திருக்கறதா, வேண்டாமா?’

எங்களுடைய குழப்பத்தைப் பார்த்த ஒருவர் அன்போடு ஆலோசனை சொன்னார், ‘பேசாம இந்த வண்டியைப் பிடிச்சு ஹெப்பால் போயிடுங்க, அங்கிருந்து ஏர்போர்ட்க்கு அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு பஸ் இருக்கு’

நல்ல யோசனைதான். ஆனால், ஒரே பேருந்தில் விமான நிலைய வாசல்வரை சென்று சேர்கிற சொகுசு, சோம்பேறித்தனம் பழகிவிட்டதே. வழியில் இறங்கி பஸ் மாறுவது என்றால் உடம்பு வலிக்கிறதே!

இத்தனைக்கும், என் கையில் இருந்தது ஒரே ஒரு பெட்டி, நண்பருக்கோ ஒரு தோள் பைமட்டும்தான். இதை வைத்துக்கொண்டு பஸ் மாறுவதற்கு அத்தனை தயக்கம்.

இன்னொரு ஐந்து நிமிடம் காத்திருந்து பார்த்தோம், விமான நிலைய பஸ் வரவே இல்லை.

’இனிமேலும் காத்திருந்தா ஃப்ளைட் மிஸ் ஆயிடும்’ என்றார் நண்பர், ‘வாய்யா, ஹெப்பால் போயிடலாம்’

ஹெப்பால் செல்கிற அடுத்த பஸ்ஸைப் பிடித்து ஏறி உட்கார்ந்தோம். அதன்பிறகும், பின்னால் திரும்பித் திரும்பி ஏர்போர்ட் பஸ் வருகிறதா என்று பார்த்ததில் கழுத்து சுளுக்கிக்கொண்டது.

அந்த பஸ், ஐந்து நிமிடம் கழித்துதான் கிளம்பியது. மிக மெதுவாக ஊர்ந்து செல்வதுபோல் தோன்றியது, ‘ஏர்போர்ட் பஸ்ன்னா சூப்பர் ஃபாஸ்ட்ல போகும்’ என்றேன் ஏக்கமாக.

‘பெங்களூர்ல எந்த பஸ்ஸும் சூப்பர் ஃபாஸ்ட்ல போகமுடியாது’ என்றார் நண்பர், ‘மனுஷ புத்தி அப்படிதான், நாம ஏறாத பஸ் வேகமாப் போகுதுன்னு தோணும், நாம ஒரு க்யூவில நிக்கும்போது, பக்கத்து வரிசை மளமளன்னு நகர்றமாதிரி இருக்கும், எல்லாம் மனப் பிராந்தி’

‘இருந்தாலும், ஏர்போர்ட்க்கு ஒரே பஸ்ல போறது சவுகர்யம்தான், இப்ப ஹெப்பால்ல இறங்கி அடுத்த வண்டி தேடறதுக்கு எவ்வளவு நேரம் ஆகுமோ, யாருக்குத் தெரியும்?’

‘ஒண்ணும் கவலைப்படாதே, எவ்ரிதிங் வில் பீ ஆல்ரைட்’ நண்பர் இருக்கையில் நன்றாகச் சாய்ந்து உட்கார்ந்து கண்ணை மூடிக்கொண்டார். நான் செல்ஃபோனைப் பிரித்து எம்பி3 தேட ஆரம்பித்தேன்.

வண்டி இரண்டு கிலோ மீட்டர் சென்றிருக்கும், சலசல என்று மழை பெய்ய ஆரம்பித்தது.

’அச்சச்சோ, இந்த மழையில நாம எப்படி பஸ் மாறமுடியும்?’

‘யோவ், ஹெப்பாலுக்கு இன்னும் 30 கிலோமீட்டர் இருக்கு, அதுக்குள்ள மழை நின்னுடும், படுத்தாம வேலையைப் பாருய்யா’

சிறிது நேரம் கழித்து, எங்கள் பஸ் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றது. அப்போது எங்களைக் கடந்து சென்ற பஸ் விமான நிலையத்துக்கானது.

‘ச்சே, ஜஸ்ட் மிஸ், நாம கொஞ்சம் வெயிட் பண்ணியிருக்கலாம்’ என்றேன் நான்.

‘வெயிட் பண்ணியிருந்தா, மழையில நல்லா நனைஞ்சிருப்போம்’, நண்பர் அலட்டிக்கொள்ளாமல் சொன்னார், ’ஒரு முடிவெடுத்துட்டா, அது சரியோ, தப்போ, உறுதியா இருக்கணும், தாண்டிப் போனதைப்பத்தி யோசிச்சுக் கவலைப்படக்கூடாது, அப்புறம் எதிலயுமே நிம்மதி இருக்காது!’

அவர் சொல்வது உண்மைதான். இருந்தாலும், தாண்டிச் சென்றுவிட்ட அந்த பஸ்ஸில் இருப்பவர்கள் எங்களுக்கு முன்பாகவே விமான நிலையம் போய்ச் சேர்ந்துவிடுவார்கள். தவிர, அவர்களுக்கு ஹெப்பாலில் இறங்கி மழையில் நனைந்தபடி வண்டி மாறுகிற அவஸ்தை இருக்காது.

என்னுடைய புலம்பல் வேகத்தை இன்னும் அதிகரிப்பதுபோல், எங்கள் வண்டி மிக மெதுவாக ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது. இத்தனை மழையிலும் பெங்களூர் ஸ்பெஷல் டிராஃபிக் சூடு பிடித்துவிட்டது.

கடைசியாக, நாங்கள் ஹெப்பால் வந்து சேர்ந்தபோது எங்கள் விமானம் புறப்பட ஒன்றே கால் மணி நேரம்தான் இருந்தது. அவசரமாக இறங்கி அடுத்த பஸ்ஸைத் தேடினோம்.

நல்ல வேளை. மழை நின்றிருந்தது, லேசான தூறல்மட்டும், எதிர் முனைப் பேருந்து நிறுத்தத்தை நோக்கி விறுவிறுவென்று நடக்கையில் லேசாக வியர்த்தது.

இத்தனைக்கும் என் நண்பர் அலட்டிக்கொள்ளவே இல்லை. அவர்பாட்டுக்குக் கல்யாண ஊர்வலத்தில் மாப்பிள்ளை, பெண்மீது பூப் போடுகிறவர்போல டங்கு டங்கென்று எனக்குப் பின்னால் நடந்துவந்தார்.

இரண்டு நிமிடம் கழித்து, அவர் என்னைக் கைதட்டிக் கூப்பிடுவது கேட்டது, ‘இந்த நேரத்தில என்னய்யா பேச்சு’ என்று யோசித்தபடி திரும்பினால், ஒரு கார் பக்கத்தில் நின்றிருந்தார், ‘இந்த வண்டி காலியாதான் போவுதாம், இதில போயிடலாம் வா’

’எவ்ளோ?’

’பஸ் டிக்கெட்க்கு எவ்ளோ கொடுப்பீங்களோ அதைமட்டும் கொடுங்க சார், போதும்’ என்றார் டிரைவர்.

ஐயா, நீர் வாழ்க, நும் கொற்றம் வாழ்க, உங்க புள்ளகுட்டியெல்லாம் நல்லா இருக்கட்டும், காரை வேகமா விரட்டுங்க, விமானம் ஓடிப்போயிடும்.

எக்ஸ்ட்ரா வருமானம் தருகிற திருப்தியில் டிரைவர் ஜிவ்வென்று கியர் மாறினார். நாங்கள் ஹெப்பால்வரை வந்த பஸ்ஸுக்குப் பாடம் சொல்லித்தருவதுபோல் அதிவேகம், பிரமாதமான சாலை, பதினெட்டு நிமிடத்தில் இருபத்தைந்து கிலோமீட்டரைக் கடந்துவிட்டார்.

அவருக்கு நன்றி சொல்லி, காசு கொடுத்துவிட்டு நிதானமாக உள்ளே நடந்தோம், ஒன்றும் அவசரம் இல்லை, இன்னும் விமானத்துக்கு நிறைய நேரம் இருக்கிறது!

நண்பர் சிரித்தார், ‘நான்தான் சொன்னேன்ல?’

’ஆமா, இன்னிக்கு உனக்கு அதிர்ஷ்டம், இப்படி ஒரு கார் அனாமத்தாக் கிடைச்சது, இல்லைன்னா?’

‘அப்பவும் பெரிசா எதுவும் நடந்திருக்காது, இந்த ஃப்ளைட் இல்லாட்டி இன்னொண்ணு, அவ்ளோதானே?’

‘இருந்தாலும் …’

‘இதில இருந்தாலும்-ன்னெல்லாம் யோசிக்கக்கூடாது, பஸ்ல உட்கார்ந்து புலம்பறதால உன்னால வேகமாப் பயணம் செய்யமுடியுமா?’

‘ம்ஹூம்’

‘அப்புறம் புலம்பி என்ன பிரயோஜனம்? அமைதியா சாஞ்சு உட்கார்ந்துகிட்டு நடக்கிறதைக் கவனிச்சுக்கோ, முடிஞ்சா உன் நிலைமையைப் பார்த்து நீயே கொஞ்சம் சிரிச்சுக்கோ, அம்புட்டுதான் மேட்டர்!’

விமானம் சரியான நேரத்துக்குக் கிளம்பி, மிகத் தாமதமாகத் தரையிறங்கியது. ராத்திரி பத்தே முக்கால் மணிவாக்கில் மும்பை வந்து சேர்ந்தோம்.

இங்கே நாங்கள் தங்கியிருக்கும் விடுதிக்கு நேர் எதிரே ஒரு நெடுஞ்சாலை. (LBS சாலை-யாம், அந்த LBSக்கு விளக்கம் யாருக்கும் தெரியவில்லை, கடைசியாக இணையத்தில் தேடிக் கண்டுபிடித்தேன் – லால் பகதூர் சாஸ்திரி) எனவே, ராத்திரிமுழுக்க வண்டிகளின் பேரோசை.

சத்தம்கூடப் பரவாயில்லை. அந்த வெளிச்சம்தான் மகாக் கொடுமை. என்னதான் ஜன்னல்களை இழுத்து மூடினாலும், ஓரத்தில் இருக்கும் கொஞ்சூண்டு இடைவெளியின்வழியே அறைக்குள் இடது வலதாக, வலது இடதாக ஓடும் மஞ்சள் ஹெட்லைட் ஒளி, அவை நிலைக் கண்ணாடியில் பட்டு எதிரொளிப்பதால் எல்லாத் திசைகளிலும் எல்லா நேரத்திலும் வெளிச்சம் நிலையற்று ஓடிக்கொண்டே இருப்பதுபோல், ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டு இரண்டாக உடைவதுபோல் தோன்றியது. ஒரு கலைடாஸ்கோப்புக்குள் படுத்துத் தூங்குவதுமாதிரி உணர்ந்தோம்.

அதிகாலையில் ஏழெட்டு அலாரம்கள் ஒலிக்கத் திருப்பள்ளியெழுச்சி. கண்றாவி காபி (நான் மும்பையை வெறுக்கக் காரணம் இதுவே), ஜில் தண்ணீர்க் குளியல், கெமிக்கல் வாடையோடு ஆட்டோவில் பயணம் செய்து நாங்கள் வகுப்பு நடத்தவேண்டிய அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தோம்.

அந்தக் கட்டடத்துக்கு வெளியே ஒரு பிளாட்ஃபாரக்கடை. டைம்ஸ் ஆஃப் இந்தியாமுதல் தினத்தந்திவரை எல்லாச் செய்தித்தாள்களும் அழகாக அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. ஆனால் விற்பனைக்கு ஆள்தான் இல்லை.

பக்கத்தில் நின்றுகொண்டிருந்த ஒருவரைக் கேட்டேன், ‘இது உங்க கடையா’

’இல்லை, நான் பஸ்ஸுக்குக் காத்திருக்கேன்!’

‘இந்தக் கடைக்காரர் எப்ப வருவார்ன்னு தெரியுமா? எனக்கு நியூஸ் பேப்பர் வேணுமே’

‘எது வேணுமோ எடுத்துக்கோங்க, அப்படியே காசை டப்பாவில போட்டுட்டுப் போய்கிட்டே இருங்க, அவ்ளோதான்’

நான் அவரை விநோதமாகப் பார்த்தேன். நிசமாத்தான் சொல்லுறியளா, இல்லை என்னைவெச்சு காமெடி கீமெடியா?

இதற்குள், அவருடைய பஸ் வந்துவிட்டது, ஏறிக்கொண்டு போயே போய்விட்டார்.

இப்போது, நானும் என் நண்பரும் நிறைய செய்தித்தாள்களும்மட்டும் தனியே, ‘என்ன செய்யறது?’

‘அவர் சொன்னமாதிரி, காசைப் போட்டுட்டுப் பேப்பரை எடுத்துகிட்டு வா, வேற என்ன செய்யமுடியும்?’

ஐந்து ரூபாய் போட்டுவிட்டு டைம்ஸ் ஆஃப் இந்தியா எடுத்துக்கொண்டேன், அதன் விலை ரூ 4.50. பாக்கிக் காசு ஐம்பது பைசா டப்பாவிலிருந்து எடுத்துக்கொள்வதற்கு பயம். யாராவது நான் காசு எடுப்பதைப் பார்த்துத் திருடன் என்று முடிவு கட்டிவிட்டால்?

போனால் போகட்டும், அம்பது காசுதானே? மக்கள் நேர்மையை நம்பி ஆளில்லாத கடை போட்டவருக்கு எங்களுடைய இத்தனூண்டு பரிசாக இருக்கட்டும்.

பேப்பரைப் பிரித்துப் படித்துக்கொண்டே உள்ளே நடந்தோம். முதல் பக்கத்தில் கொட்டை எழுத்தில் விசனப்பட்டிருந்தார்கள், ‘இந்த மாதம் ஏழு நாள் சாராயக்கடைகள் லீவ்’ (காந்தி ஜெயந்தி, உள்ளூர்த் தேர்தல் காரணமாக).

இதுதாண்டா மும்பை!

***

என். சொக்கன் …

01 10 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

27 Responses to "தாண்டிச் சென்ற பஸ்"

🙂 nandri hein.. 🙂

பயணக்கட்டுரையில் பஞ்ச் தேடக்கூடாதோ?

//நாம ஒரு க்யூவில நிக்கும்போது, பக்கத்து வரிசை மளமளன்னு நகர்றமாதிரி இருக்கும்//

பதார்த்தமா… சாரி யதார்த்தமா இருந்தது.

Now learnt a new way to go to airport quickly via hebbal transit 🙂

//பேருந்து நிறுத்தத்தை நோக்கி விறுவிறுவென்று நடக்கையில் //
நானும் உங்கள போல்தான் கால ரக்கைய கட்டி பறப்பேன்

//பஸ்ல உட்கார்ந்து புலம்பறதால உன்னால வேகமாப் பயணம் செய்யமுடியுமா//
seems ur friend emits lots of gyans :-))…nice to have friends who thinks contrastly to us which will make us to rethink our ideas.

Good writting and gives me blissfull satisfaction on completion

எப்படிங்க அன்றாடம் நடக்கும் சம்பவத்தை கதை மாதிரி அழகா narrate பண்றிங்க..

இத பத்தி எங்களுக்கெல்லாம் ஒரு வொர்க்‌ஷாப் எடுங்க.seriously

அன்புடன்,
சுவாசிகா
http://swachika.wordpress.com

//’ஒரு முடிவெடுத்துட்டா, அது சரியோ, தப்போ, உறுதியா இருக்கணும், தாண்டிப் போனதைப்பத்தி யோசிச்சுக் கவலைப்படக்கூடாது, அப்புறம் எதிலயுமே நிம்மதி இருக்காது!’//

நல்லதொரு அனுபவப் பகிர்வு. நேர மேலாண்மை, தியானம், வாழ்கையின் நிலையாமை… என்று என்னதான் தியரிட்டிக்கலாக படிக்கும் போது பின்பற்றுவதற்கு எளிது போல் தோன்றினாலும் இக்கட்டான நேரங்களில் அதீத பரபரப்பு ஏற்படுவதை தவிர்க்க முடிவதில்லை.

//ஒரு கலைடாஸ்கோப்புக்குள் படுத்துத் தூங்குவதுமாதிரி உணர்ந்தோம்.// 🙂

சென்னையில் ஒரு நண்பரின் அறைக்கு சென்று தங்க நேர்ந்தது. ராத்திரி புழுக்கம் தாங்காமல் மொட்டை மாடியில் படுக்கலாம் என்று எண்ணி என் கூட வந்தவர் பாயை சுருட்டிக் கொண்டு எழ தாழ்வான கூரை கொண்ட அந்த அறையின் சீலிங் பேனில் பாய் சொருகி பெரிய சப்தத்துடன் பேனின் இறக்கைகள் தாறுமாறாய் வளைந்து பேன் நின்று போனது. எல்லோரும் பதறியடித்துக் கொண்டு எழுந்தோம். ஆனால் அந்த அறையின் சொந்தக்காரர் அரைக்கண்ணை மட்டும் லேசாக திறந்து, “பேன் உடைஞ்சிடுச்சா? சரி காலையில் பார்த்துக்கலாம்.” என்று சொல்லி விட்டு திரும்பிப் படுத்து தூங்க ஆரம்பித்தார்.

அப்படி ஒரு பதட்டமின்மையை கற்றுக் கொள்ள இன்று வரை ஆசைப்பட்டும் முடியவில்லை.

படபடப்பு இல்லாமல் கூலாக எல்லாத்தையும் அனுகவேண்டும் என்று சுற்றி உள்ளவர்களுக்கெல்லாம் அட்வைஸ் செய்வேன், அதற்காக ப்ளான் ஏ,பி,சி,டி,இ ந்னு நிறைய யோசிச்சும் வெப்பேன், ஆனா நம்ம யோசிக்காதது நடந்தா அந்த பதைபதைப்பு வந்து ஒட்டிக்கும், எந்த ப்ளானும் மூளைக்கு வராது.

எல்லோருக்கும் எதாவது ஒரு விசயத்துல அந்த பதைபதைப்பு இருக்கும்னுதான் நினைக்கிறேன்.

பயத்தை வெளிய காட்டாம இருக்கறதுதான் வீரம்னு சொல்லுவாங்கில்ல?

//‘அப்புறம் புலம்பி என்ன பிரயோஜனம்? அமைதியா சாஞ்சு உட்கார்ந்துகிட்டு நடக்கிறதைக் கவனிச்சுக்கோ, முடிஞ்சா உன் நிலைமையைப் பார்த்து நீயே கொஞ்சம் சிரிச்சுக்கோ, அம்புட்டுதான் மேட்டர்!’//

இந்த மாதிரி தான் சார் இருக்குனும்.. ஆனா முடியல…ட்ரை பண்றேன்…உங்க நண்பர் சூப்பர் ..

பாலகுமார்

>>‘அப்புறம் புலம்பி என்ன பிரயோஜனம்? அமைதியா சாஞ்சு உட்கார்ந்துகிட்டு நடக்கிறதைக் கவனிச்சுக்கோ, முடிஞ்சா உன் நிலைமையைப் பார்த்து நீயே கொஞ்சம் சிரிச்சுக்கோ, அம்புட்டுதான் மேட்டர்!’ <<<

சில சமயம் ரொம்ப கைமீறி போனபோதுதான் வெறுத்துப்போய் .. என்ன ஆகட்டும் பாத்துக்கலாம்னு வரும்.. இயல்பா வர்றது ரொம்ப கஷ்டம் 🙂

தெரிந்தோ தெரியாமலோ லால் பாதூர் சாஸ்திரியை கட்டுரையில் சம்பந்தப் படுத்தி இருக்கிறீர்கள். இன்று அவர் பிறந்த நாள்.

உங்களோடு பஸ் ஸ்டாப்பில் காத்திருந்து, உங்களோடு ஹெப்பால் போய், மழை பெய்ததும் குடையைத் தேடி…… மும்பை வரை வந்து விட்டேன். ரிடர்ன் ப்ளைட்டுக்கு யாரு காசு குடுக்கிறது?

நீங்கள் சொன்ன இந்த ஏர் போர்ட் போகிற நேர முரண்பாட்டின் காரணமாக நான் சென்னை போக நேர்கிற போதெல்லாம் (ஓசூரில் இருந்து) காரிலேயே போய் விடுவேன்.

http://kgjawarlal.wordpress.com

ஒரு பயண அனுபவத்தை இவ்வளவு விறுவிறுப்பாக சுஜாதாவுக்கு அப்புறம் நீங்கதான் சொல்லியிருக்கீங்க. அருமையான பதிவு.

ரேகா ராகவன்.

சரியான தத்துவ package.
என்ன படித்து என்ன பண்ண.
எற்கனவே பலரும் சொன்னது போல‌
இக்கட்டான நேரங்களில் அதீத பரபரப்பு ஏற்படுவதை தவிர்க்க முடிவதில்லை, இன்று வரை.

bye the bye…
finishingla, இதுதாண்டா மும்பை!
என்பதைவிட இதுதாண்டா டைம்ஸ் ஆஃப் இந்தியா
என்பது தானே நியாயம்.

What your friend said is correct. We have to take the things as it is..Thanks!!

//’ஒரு முடிவெடுத்துட்டா, அது சரியோ, தப்போ, உறுதியா இருக்கணும், தாண்டிப் போனதைப்பத்தி யோசிச்சுக் கவலைப்படக்கூடாது, அப்புறம் எதிலயுமே நிம்மதி இருக்காது!’//

Great…..

The other line always moves faster-nnu ’Murphy’s Law’ ஒண்ணு படிச்சிருக்கேன். அது மனப்பிராந்தி இல்லை. முழுக்க உண்மை.

//சத்தம்கூடப் பரவாயில்லை. அந்த வெளிச்சம்தான் மகாக் கொடுமை. என்னதான் ஜன்னல்களை இழுத்து மூடினாலும், ஓரத்தில் இருக்கும் கொஞ்சூண்டு இடைவெளியின்வழியே அறைக்குள் இடது வலதாக, வலது இடதாக ஓடும் மஞ்சள் ஹெட்லைட் ஒளி, அவை நிலைக் கண்ணாடியில் பட்டு எதிரொளிப்பதால் எல்லாத் திசைகளிலும் எல்லா நேரத்திலும் வெளிச்சம் நிலையற்று ஓடிக்கொண்டே இருப்பதுபோல், ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டு இரண்டாக உடைவதுபோல் தோன்றியது. ஒரு கலைடாஸ்கோப்புக்குள் படுத்துத் தூங்குவதுமாதிரி உணர்ந்தோம்.//

அருமையான வர்ணனை.

LBS சாலை MG சாலை போன்றவற்றிக்கெல்லாம் விளக்கம் தேவையா பாஸ்

////’ஒரு முடிவெடுத்துட்டா, அது சரியோ, தப்போ, உறுதியா இருக்கணும், தாண்டிப் போனதைப்பத்தி யோசிச்சுக் கவலைப்படக்கூடாது, அப்புறம் எதிலயுமே நிம்மதி இருக்காது!’//
//

எ.து.க.து
எ.எ.இ

Dear Chokkan,

can you please post a simple post to explain how to Tweet ? and how to use twitter.?

Can anyone tweet anonymously ?

How to tweet in tamil using mobile ?

thanks
Santhosh

நல்ல பதிவு.

இந்த கட்டுரையை படிக்கும் பொழுது சம்பவத்தை அப்படியே நேரில் பார்ப்பது போல உணர்ந்தேன் மிகவும் திரில்லாரக இருந்தது, வாழ்துதுக்கள்.

super

nice and very feel

Bee’morgan, Eswar, ravisuga, சுவாசிகா, suresh kannan, சத்யராஜ்குமார், டைனோ, Balakumar, யாத்ரீகன், Jawahar, REKHA RAGHAVAN, soundr, Subbaraman, Kesava Pillai, சித்ரன், புருனோ, புருனோ, Santhosh, Balakumaran, Saminathan, saravanan,

நன்றி 🙂

//பயணக்கட்டுரையில் பஞ்ச் தேடக்கூடாதோ?//

தேடலாம். ஆனா எப்பவும் கிடைக்காது 😉

//new way to go to airport quickly via hebbal transit//

ம்ஹூம், அவஸ்தைங்க, கிட்டத்தட்ட முக்கால் கிலோ மீட்டர் நடக்கவைக்கறாங்க, கையில ஒரு பெட்டி இருந்தா ஓகே, அதுக்குமேலன்னா நொந்துடுவீங்க – NOT RECOMMENDED at all 🙂

//seems ur friend emits lots of gyans//

வாயாடி-ன்னு கௌரவமா சொல்றீங்க, ஓகே ஓகே 😉

//இத பத்தி எங்களுக்கெல்லாம் ஒரு வொர்க்‌ஷாப் எடுங்க.seriously//

ட்விட்டர்ல சொன்னதுபோல, இது ஒண்ணும் கஷ்டமே இல்லை – இன்னொருத்தர் எழுதி நாம இந்த மேட்டரைப் படிக்க விரும்பினா, அது எப்படி இருக்கணும்ன்னு நினைப்போமோ அப்படி எழுதவேண்டியதுதான் – பழகப் பழக தானா வரும், ரொம்ப சுலபமான ஃபார்முலா இது, வொர்க்‌ஷாப்ல்லாம் வாணாம் 🙂

//இக்கட்டான நேரங்களில் அதீத பரபரப்பு ஏற்படுவதை தவிர்க்க முடிவதில்லை//

ஆமாம் 🙂

//காலையில் பார்த்துக்கலாம்.” என்று சொல்லி விட்டு திரும்பிப் படுத்து தூங்க ஆரம்பித்தார். அப்படி ஒரு பதட்டமின்மையை கற்றுக் கொள்ள இன்று வரை ஆசைப்பட்டும் முடியவில்லை//

இதையெல்லாம் கற்றுக்கொள்ளமுடியுமா என்ன? 😕 அது பிறவிலயே வர்றதுன்னு எனக்குத் தோணுது.

//எல்லோருக்கும் எதாவது ஒரு விசயத்துல அந்த பதைபதைப்பு இருக்கும்னுதான் நினைக்கிறேன்//

ஆமா. ஆனா எல்லாத்துக்கும் பதறினா நம்ம உடம்புக்குதானே ஆபத்து 🙂

//உங்களோடு மும்பை வரை வந்து விட்டேன். ரிடர்ன் ப்ளைட்டுக்கு யாரு காசு குடுக்கிறது?//

அவ்ளோதானே? இன்னொரு பதிவு எழுதிட்டாப் போச்சு, சார், சார், எங்க ஓடறீங்க?

//நான் சென்னை போக நேர்கிற போதெல்லாம் (ஓசூரில் இருந்து) காரிலேயே போய் விடுவேன்//

நாங்களும் இப்ப சென்னை, ஹைதராபாத்க்கு ரயில் அல்லது கார்தான் prefer செய்யறோம். பெங்களூர் ஏர்போர்ட் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப தொலைவாகிவிட்டது!

//இதுதாண்டா மும்பை!
என்பதைவிட இதுதாண்டா டைம்ஸ் ஆஃப் இந்தியா
என்பது தானே நியாயம்//

அட, ஆமாம்ல? 🙂

//LBS சாலை MG சாலை போன்றவற்றிக்கெல்லாம் விளக்கம் தேவையா பாஸ்//

இனிமே கேட்கமாட்டேன் பாஸ். விளக்கம் தெரிஞ்சுக்காமலே அந்தப் பெயர்களைப் பயன்படுத்தறதைவிட, முதல்வாட்டி கேட்டுத் தெரிஞ்சுக்கறதில தப்பில்லையே 🙂

//எ.து.க.து
எ.எ.இ//

அப்டீன்னா?

//can you please post a simple post to explain how to Tweet? how to use twitter.? Can anyone tweet anonymously ?//

இந்தக் கேள்விகளுக்கு பதில் எழுதுகிறேன். ஆனால் இங்கே இல்லை, வேறோரு பொருத்தமான இடத்தில், அங்கே எழுதிவிட்டு இங்கே இணைப்புத் தருகிறேன், ஓகேயா? 🙂

//How to tweet in tamil using mobile ?//

எனக்குத் தெரிந்து மொபைல் ஃபோன் கொண்டு தமிழில் ட்வீட் செய்யமுடியாது, இப்போது ஐஃபோனில்மட்டும் அந்த வசதி வந்திருப்பதாக அறிகிறேன்!

//’ஒரு முடிவெடுத்துட்டா, அது சரியோ, தப்போ, உறுதியா இருக்கணும், தாண்டிப் போனதைப்பத்தி யோசிச்சுக் கவலைப்படக்கூடாது, அப்புறம் எதிலயுமே நிம்மதி இருக்காது!’//

நண்பர் விஜய் ரசிகரோ? (“ஒரு தடவ முடிவெடுத்துட்டா அப்பறம் என் பேச்ச நானே கேக்க மாட்டேன்”)

இந்தியாவில் கடையில் உட்காராமல் கடைபோட்ட அந்த கடைக்காரருக்கு ஒரு “ஜெய் ஹோ”! நீங்கள் ஐந்து ரூபாய் போட்டு 4.50க்கு பேப்பர் எடுத்து 50 பைசா ப்ரிமியம் கொடுத்ததை நினைக்கும் போது – அது போல எத்தனை அம்பது பைசாவோ என்று யோசித்து – ஒரு வேளை வியாபர தந்திரமோ என்கிற கேள்வி வருகிறது.

கூடவே, பம்பாய்காரர்கள் எந்த பேப்பரையும் ப்ரிமியத்துக்கு விற்கும் சாமர்த்தியசாலிகள் என்று தோன்றுகிறது. (உ-ம். ரிலையன்ஸ் பவர்)

R Sathyamurthy,

நன்றி 🙂

//4.50க்கு பேப்பர் எடுத்து 50 பைசா ப்ரிமியம் கொடுத்ததை நினைக்கும் போது – அது போல எத்தனை அம்பது பைசாவோ என்று யோசித்து – ஒரு வேளை வியாபர தந்திரமோ என்கிற கேள்வி வருகிறது//

ஆஹா, இது புது கோணமா இருக்கே. ஒரு கதை கேட்டிருப்பீங்களே – ஒரு பையன்கிட்டே ’ஒர்ரூவா வேணுமா, அம்பது காசு வேணுமா’ன்னு கேட்டா ‘அம்பது காசுதான் வேணும்’ன்னு அப்பாவியா சொல்வானாம், அவனை வெச்சு மத்தவங்க வேடிக்கை காட்ட, இப்படி அம்பது அம்பது பைசாவாவே நிறைய்ய்ய்ய சேர்த்துட்டானாம் – அந்தமாதிரியா இது?

//பம்பாய்காரர்கள் எந்த பேப்பரையும் ப்ரிமியத்துக்கு விற்கும் சாமர்த்தியசாலிகள் என்று தோன்றுகிறது. (உ-ம். ரிலையன்ஸ் பவர்)//

குசும்புய்யா உமக்கு :)))))))))))))

“என்னதான் ஜன்னல்களை இழுத்து மூடினாலும், ஓரத்தில் இருக்கும் கொஞ்சூண்டு இடைவெளியின்வழியே அறைக்குள் இடது வலதாக, வலது இடதாக ஓடும் மஞ்சள் ஹெட்லைட் ஒளி, அவை நிலைக் கண்ணாடியில் பட்டு எதிரொளிப்பதால் எல்லாத் திசைகளிலும் எல்லா நேரத்திலும் வெளிச்சம் நிலையற்று ஓடிக்கொண்டே இருப்பதுபோல், ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டு இரண்டாக உடைவதுபோல் தோன்றியது. ஒரு கலைடாஸ்கோப்புக்குள் படுத்துத் தூங்குவதுமாதிரி உணர்ந்தோம்.”

superbly u brought the atmosphere வாழ்த்துக்கள்…

srini,

நன்றி 🙂

//superbly u brought the atmosphere//

இந்தப் பதிவில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள் இவைதான். உங்களுக்கும் அதுவே பிடித்திருப்பது மகிழ்ச்சி!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 621,011 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்

Tamilish

For தமிழ் Peopleதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

October 2009
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
%d bloggers like this: