அர்த்த(மில்லாத) ஜாமம்
Posted October 28, 2009
on:- In: நவீன அபத்தங்கள் | Bangalore | Characters | Crisis Management | Fear | Lazy | Learning | Life | Pulambal | Sleep | Uncategorized | Wishes
- 12 Comments
நேற்று இரவு (அல்லது அதிஅதிகாலை) இரண்டு பதினெட்டுக்கு எனக்கு ஓர் எஸ்.எம்.எஸ். குறுஞ்செய்தி வந்தது:
நண்பர்களே, ஒரு மகிழ்ச்சியான செய்தி. நம்ம சத்யமூர்த்திக்கு மகன் பிறந்திருக்கிறான். தாய், சேய் நலம். இப்படிக்கு, மனோஜ்குமார்
சத்யமூர்த்தி, மனோஜ்குமார் இருவரும் நல்ல நண்பர்கள், எங்கள் அலுவலகத்தில் வேலை செய்யும் சக ஊழியர்கள்.
மனோஜ்குமாரின் எஸ்.எம்.எஸ். வந்தபோது நான் செம தூக்கத்தில் இருந்தேன். ஆனாலும் அந்த ‘டொய்ங் டொய்ங்’ சத்தத்தில் விழிப்பு வந்துவிட்டது. மப்பு கலையாமலே தலைமாட்டில் இருக்கும் செல்ஃபோனை இயக்கிச் செய்தியைப் படித்தேன், சந்தோஷம்.
அதோடு, நான் மறுபடி தூங்கப் போயிருக்கவேண்டும். ஆனால் ஏனோ, சத்யமூர்த்திக்கு வாழ்த்து அனுப்பவேண்டும் என்று தோன்றியது.
பகல் நேரமாக இருந்தால், உடனே தொலைபேசியில் அழைத்திருப்பேன். அர்த்தஜாமம், இப்போதைக்கு எஸ்.எம்.எஸ். வாழ்த்து போதும், நாளைக் காலை பேசிக்கொள்ளலாம்.
ஆனால், இந்த நடுராத்திரியில் பிரசவமான மனைவியை, குழந்தையைக் கவனித்துக்கொண்டிருக்கும் சத்யமூர்த்திக்கு, என்னுடைய வாழ்த்துச் செய்தியைப் படிக்கவா நேரம் இருக்கப்போகிறது?
நான் இதை யோசிக்கவில்லை, மளமளவென்று எஸ்.எம்.எஸ். எழுத ஆரம்பித்துவிட்டேன்.
அதிகமில்லை. ‘வாழ்த்துகள்! மனைவி, புது மகனை நல்லாக் கவனிச்சுக்கோ’ என்று இரண்டே வாக்கியங்கள்தான். அதைத் தட்டி முடிப்பதற்குள் கண் சொக்கி மறுபடி தூக்கம் வந்துவிட்டது.
அப்போதாவது, நான் தூங்கப் போயிருக்கலாம். செய்யவில்லை. கண்கள் செருக என் செல்ஃபோனில் உள்ள Contacts மத்தியில் சத்யாவின் நம்பரைத் தேடி எஸ்.எம்.எஸ். அனுப்பினேன். அப்படியே ஃபோனைக் கையில் வைத்துக்கொண்டு தூங்கிவிட்டேன்.
இன்று காலை, பல் தேய்த்துக் காப்பி குடிப்பதற்குமுன்னால், ‘நம்ம சத்யாவுக்குப் பையன் பொறந்திருக்காம்’ என்றேன் என் மனைவியிடம்.
‘அடடே, வெரிகுட், எப்ப?’
‘நேத்து நைட் ரெண்டரைக்கு SMS வந்தது’
உடனடியாக என் மனைவியின் அடுத்த கேள்வி, ‘நார்மல் டெலிவரியா, சிசேரியனா’
அதென்னவோ, இந்தக் கேள்வியைமட்டும் ஆண்களுக்கு விசாரிக்கத் தோன்றுவதே இல்லை. பெண்களுக்கு இது ஒன்றுதான் அதிமுக்கியமாகத் தோன்றுகிறது. ‘தெரியாதே’ என்று உதட்டைப் பிதுக்கினால், ‘அற்பனே’ என்பதுபோல் பார்க்கிறார்கள்.
அதனால், இப்போதெல்லாம் என் மனைவி இந்தக் கேள்வியைக் கேட்டால், அப்போதைக்கு என்ன பதில் தோன்றுகிறதோ அதைச் சொல்லிவிடுவேன், சராசரியாக சிசேரியனும், நார்மல் டெலிவரியும் இரண்டுக்கு ஒன்று என்கிற விகிதத்தில் வருமாறு என் பதில்களை ஒழுங்குபடுத்திக்கொண்டால் அவை நம்பகமாகக் கருதப்படுவது நிச்சயம்.
போகட்டும், மறுபடி சத்யமூர்த்தி மேட்டருக்கு வருகிறேன். நடுராத்திரியில் வந்த எஸ்.எம்.எஸ்., அதற்குப் பதிலாக நான் அனுப்பிய வாழ்த்துச் செய்தியைப்பற்றியெல்லாம் என் மனைவியிடம் சொல்லிக்கொண்டிருந்தேனா, இத்தனையையும் கேட்டபிறகு அவர் ஒரு நியாயமான கேள்வியை எழுப்பினார், ‘ரெண்டரை மணிக்கு அரைத் தூக்கத்தில எஸ்.எம்.எஸ்.ஸா? அதை ஒழுங்கா சத்யமூர்த்திக்குதான் அனுப்பினியா, இல்லை தூக்கக் கலக்கத்தில வேற யாருக்கோ வாழ்த்துச் சொல்லிட்டியா?’
அவர் இப்படிக் கேட்டதும் எனக்குப் பகீரென்றது. அந்த நேரத்து அரைகுறைச் சுயநினைவில் நான் யாருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினேனோ, தெரியவில்லையே.
சட்டென்று செல்ஃபோனை எடுத்து ‘Sent Items’ தேடினேன். உச்சியில் முதல் எஸ்.எம்.எஸ்., அத்தனை தூக்கத்திலும் ஒரு சின்ன எழுத்துப் பிழைகூட இல்லாத உன்னத எஸ்.எம்.எஸ்., ஆனால், மிகச் சரியாக (ம்ஹூம், மிகத் தவறாக) அது சதீஷ்குமார் என்ற இன்னொரு நண்பருக்கு அனுப்பப்பட்டிருந்தது.
செல்ஃபோன் ‘Contacts’ பட்டியலில் சத்யமூர்த்தியும் சதீஷ்குமாரும் அடுத்தடுத்து வருகிறார்கள். உறக்கக் கலக்கத்தில் கை விரல் தவறி சத்யமூர்த்திக்கு அனுப்பவேண்டியதை சதீஷ்குமாருக்கு அனுப்பிவிட்டேன்.
ஒரே பிரச்னை, சதீஷ்குமாருக்கு இரண்டு மாதம் முன்னால்தான் திருமணமாகியிருக்கிறது. அவனுடைய புது மனைவி இந்த எஸ்.எம்.எஸ்.ஸைப் படித்தால் என்ன ஆகும்?
Of Course, தொலைக்காட்சி மெகாசீரியல்களில் வருவதுபோல் ரொம்ப Exaggerated கவலைதான். ஆனாலும், ரொம்ப சென்சிடிவான சமாசாரம் என்பதால், இதுவிஷயமாக அந்த சதீஷ்குமாருக்கு ஃபோன் செய்து மன்னிப்புக் கேட்கக்கூடக் கொஞ்சம் தயக்கமாக, அல்லது பயமாக இருக்கிறது.
பேசாமல், இந்தப் பதிவின் URLஐ அவருக்கு அனுப்பிவைத்துவிடட்டுமா?
***
என். சொக்கன் …
28 10 2009
12 Responses to "அர்த்த(மில்லாத) ஜாமம்"

உங்களை நல்லா புரிஞ்சு வச்சிருக்காங்க உங்க மனைவி 🙂
அப்புறம் என்னாச்சு? இரண்டு பேருக்கும் மறுபடியும் எஸ்எம்எஸ் பண்ணி இருப்பிங்கன்னு நினைக்கிறேன். க்ளைமாக்ஸ் வழக்கம்போல் எங்கள் எண்ணம் போலவா?


//‘வாழ்த்துகள்! மனைவி, புது மகனை நல்லாக் கவனிச்சுக்கோ’ //
‘புது மனைவி, மகனை நல்லாக் கவனிச்சுக்கோ’ என்று பிறழாத வகையில் சதீஷ்குமார் தப்பித்தார். 🙂


என்னை கேட்டா முதல்ல சதீஷ்குமாருக்கு வாழ்த்து சொல்லிவிட்டு பிறகு சத்யமூர்த்திகிட்ட மன்னிப்பு கேட்டுங்க – மாத்தி யோசி 💡
ஜோக்ஸ் அபார்ட், சீரியஸா சொல்லனும்னா சதீஷ்குமார்க்கிட்ட கேஷுவலா போன் பண்ணி நைஸா சமயம் பார்த்து பேச்சோடு பேச்சா சாரி கேட்டு டக்குன்னு டாபிக் மாற்றி டாப் கியர் போட்டு ஒரு தூக்கு தூக்கிடுங்க..என்னது என்ன டாபிக்கா..உங்களுக்கு தெரியாததா 😀
அப்புறம் மறக்காம சத்யமூர்த்தி உங்க வாழ்த்துகளையும் சேர்த்து எங்கள் வாழ்த்தையும் சொல்லிடுங்க 🙂
ஆஹா..திரும்ப கன்பூயுஸன், நீங்க எப்பவுமே கதாப்பாத்திரங்களின் பெயர மாற்றிதானே போடுவீங்க..இவங்க இரண்டு பேரோட உண்மையான பெயர் என்ன? 😯
பார்த்துங்க திரும்ப குழ(ப்)ம்பிட போறீங்க 😕
அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me


\\பேசாமல், இந்தப் பதிவின் URLஐ அவருக்கு அனுப்பிவைத்துவிடட்டுமா?\\
சரி தான் தல…ஆனா இதை புனைவுன்னு நினைச்சுட்டா!??


Ungalukku Mattum Eppadi Sir Ippadi Ellam Nadakuthu,Munnadi Bill Podum Pothu Ref.Call Vanthu oru sambavam nadanthuchu..ippa ippadiya. Freeya Vidunga. 🙂 Not a big Problem.


நல்லவேளை. என் நம்பர் இல்லாததால் எனக்கு அனுப்பாமல் விட்டீர்கள். இப்பதான் 20வது கல்யாணநாள் கொண்டாடிய புது மாப்பிள்ளை நான்.

1 | Sridhar Narayanan
October 28, 2009 at 9:11 pm
//பேசாமல், இந்தப் பதிவின் URLஐ அவருக்கு அனுப்பிவைத்துவிடட்டுமா?//
சரியான சதீஷ்குமாருக்கு அனுப்பி வையுங்கள். திருமணமாகாத சதீஷுக்கு SMS அனுப்பி அவரின் Girlfriend அதைப் படிச்சு, அதுக்கு நீங்க ஒரு ட்விட்டர் விளக்கம் எழுதி…ஷ்ஷ்ப்பாபா இப்பவே கண்ணைக் கட்டுதே :p