மனம் போன போக்கில்

Archive for November 2009

வீரவநல்லூரைப்பற்றிய கவிதை கண்டிப்பாக எழுதவேண்டும்

 

முதல்வரியாக ‘அந்தக் காலத்தில் குளத்தில் நீர் இருந்தது’,

இரண்டு மூன்று வரிகளுக்குப் பின்

சண்முகா கொட்டகையையும் காந்திமதி டாக்கீஸையும்.

ஊரின் செழுமைக்கு

சந்தையில் மண்டிக்கிடந்த காய்கறிக் கூழ் கொஞ்சம்.

மழை வர்ணனையும்

தெருவில் திரிந்த பசுக்கள்பற்றிய குறிப்பும் அவசியம்.

ஊர்ச்சாத்திரை, திரைகட்டிப் படம்,

சின்ன வயதில் சைக்கிள் ஓட்டிய கதை,

கூனியூருக்குச் செல்லும் பாதை, சுமைதாங்கிக் கல்,

பள்ளிக்கூடம், பொது நூலகம் எனத் தேடிப் பிடித்து

வார்த்தைகளை வளைத்தால்

வீரவநல்லூரின், எந்தவொரு ஊரின்

பழைய பொதுப்பிம்பம் தயாராகும்.

ஒரு ஊரைக் கவிதையில் சேமிப்பது சுலபம்.

(ஹரன் பிரசன்னா எழுதிய ‘நிழல்கள்’ கவிதைத் தொகுப்பிலிருந்து – தடம் வெளியீடு, 4/31 D, மூன்றாவது மெயின் ரோடு, ராயலா நகர், ராமாபுரம், சென்னை – 89, தொலைபேசி: (0)9884279211, மின்னஞ்சல்: haranprasanna@gmail.com, வலைப்பதிவு: http://nizhalkal.blogspot.com/)

குழந்தைகளுக்காக எழுதப்பட்ட ஐன்ஸ்டீன்பற்றிய புத்தகம் ஒன்றில், இந்த நகைச்சுவைக் கவிதையைப் படித்தேன் (லிமரிக்-தானே இது?)

There was a young lady named Bright

Who travelled much faster than light,

She started one day

In the relative way

And returned on the previous night

இது கொஞ்சம் அதீத எளிமைப்படுத்தலாகத் தோன்றலாம். ஆனால் அஞ்சு வரியில் ரிலேட்டிவிட்டியை முழுசாக விளக்கிவிடமுடியுமா என்ன?

போகட்டும். இந்த லிமரிக்கைத் தமிழில் மொழிபெயர்க்கமுடியுமா? வடிவம் கெடாமல் செய்தால் சந்தோஷம், இல்லாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் கரடுமுரடாகப் பல்லை ஒடிக்காமல் குழந்தைகள்கூடச் சரியாகப் படித்துப் புரிந்துகொள்ளும்படி இருக்கவேண்டும்.

முயற்சி செய்கிறீர்களா? மூன்றுக்கு மேற்பட்ட entries வந்தால், ஒரு poll நடத்தி, ஜெயிக்கும் கவிதைக்குப் புத்தகப் பரிசு கொடுத்துவிடலாம்.

சில குறிப்புகள்:

***

என். சொக்கன் …

26 11 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இதனை மேலும் பலர் வாசிப்பதற்கு உதவுங்க – இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

இன்று காலை, தாய்லாந்திலிருந்து ஒரு வாடிக்கையாளர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார், ‘எங்களுக்கு ஒரு ப்ரொக்ராமர் / கன்சல்டன்ட் தேவைப்படுகிறார். அவருக்குக் கீழ்கண்ட டெக்னாலஜிகளில் குறைந்தபட்சம் எட்டு வருட அனுபவம் இருக்கவேண்டும்!

அவர்கள் கொடுத்திருந்த பட்டியலை மேலோட்டமாகப் புரட்டிப் பார்த்தேன். அநேகமாகச் சூரியனுக்குக் கீழே உள்ள சகல தொழில்நுட்பங்களையும் லிஸ்ட் போட்டிருந்தார்கள். இத்தனையிலும் எட்டு வருட அனுபவம் உள்ள ஒருவரைத் தேடவேண்டுமென்றால், மகாவிஷ்ணு மறுபடியும் அவதாரம் எடுத்துவந்தால்தான் உண்டு.

உடனடியாக, என் அலுவலக நண்பரைத் தொலைபேசியில் அழைத்தேன், ‘என்னய்யா இப்படிப் படுத்தறானுங்க, இவ்ளோ எக்ஸ்பீரியன்ஸோட ஒரு ப்ரொக்ராமரை எங்கே தேடறது?’

‘ஒண்ணும் கவலைப்படாதே மாம்ஸ், எல்லாம் நான் பார்த்துக்கறேன்’

‘நீமட்டும் என்ன செய்வே?’

’கொஞ்சம் வெயிட் பண்ணு, ஏழெட்டு ப்ரொஃபைல் அவனுக்கு அனுப்பிவைக்கறேன்’

‘எப்படிய்யா? இவன் கேட்கிற டெக்னாலஜீஸ்ல அவ்ளோ எக்ஸ்பீரியன்ஸ் உள்ள ஆளுங்க நம்மகிட்ட இல்லையே’

‘அதனால என்ன? இருக்கிற பசங்களோட ரெஸ்யூம்ஸை அனுப்புவோம்’

’அவன் என்ன கேனப்பயலா? இதுக்கு எப்படி ஒத்துக்குவான்? நான் கேட்ட எக்ஸ்பீரியன்ஸ் இல்லையே-ன்னு கத்தமாட்டானா?’

நண்பர் சிரித்தார், ‘நம்ம ஆளுங்க கல்யாணத்துக்குப் பொண்ணு பார்க்கும்போது கவனிச்சிருக்கியா? அழகா இருக்கணும், செவப்புத் தோல் வேணும், பெரிய காலேஜ்ல படிச்சிருக்கணும், வேலைக்குப் போகணும், இவ்ளோ சம்பாதிக்கணும்-ன்னு ஆயிரம் கண்டிஷன் போடுவாங்க, அப்புறம், நாலு பொண்ணு பார்த்து ரிஜெக்ட் ஆகிக் கும்பி காய்ஞ்சப்புறம், வத்தலோ, தொத்தலோ, கல்யாணம் ஆனாப் போதும்-ங்கற நிலைமைக்கு வந்துடுவாங்க’

’அதனால?’

’இந்தக் கஷ்டமருங்களும் அதுமாதிரிதான். எட்டு வருஷ எக்ஸ்பீரியன்ஸ்ன்னு ஆரம்பிப்பாங்க, பத்து பேரை இண்டர்வ்யூ செஞ்சு தலைவலியை அனுபவிச்சப்புறம், கொஞ்சம் கொஞ்சமா இறங்கிவருவாங்க, கடைசியில, ஜஸ்ட் இப்பதான் காலேஜ்லயிருந்து வெளியே வந்த ஃப்ரெஷ்ஷரைக்கூட ஏத்துக்கத் தயாராயிடுவாங்க’

யம்மாடி. நல்லவேளை நான் ப்ராஜெக்ட்களை மேய்க்கும் உத்தியோகத்தில் இல்லை. இவ்ளோ சைக்காலஜி பார்த்து வேலை செய்வது என் உடம்புக்கு ஆகாது!

***

என். சொக்கன் …

09 11 2009

’ஹலோ, மணி ஏழே கால், எல்லோரும் எழுந்திருங்க’

எங்கோ கிணற்றுக்குள்ளிருந்து ஒரு குரல் கேட்டது. அது என் தர்ம பத்தினியுடையது.

மனைவி சொல் மீறிய பாவம் எனக்கு வேண்டுமா? சட்டென்று போர்வையை உதறிவிட்டு பத்மாசன போஸில் எழுந்து உட்கார்ந்தேன். உள்ளங்கைகளைத் தேய்த்து உம்மாச்சி பார்த்தேன். பக்கவாட்டுச் சுவரில் பிள்ளையார் தரிசனம், கழுத்தை எண்பது டிகிரி திருப்பினால் ராமரும் சீதையும், லட்சுமணன், அனுமனோடு, ஒரு காலைக்கு இத்தனை பக்தி போதும், எழுந்துகொண்டேன்.

மிகத் துல்லியமாக அதே விநாடியில் (முதல், இரண்டாவது, மூன்றாவது ‘உலுக்கல்’களுக்குப்பிறகு நான் எழுந்திருக்க எத்தனை நிமிடங்கள் ஆகும் என்கிற கணக்கு என் மனைவிக்கு ரொம்ப நன்றாகத் தெரியும்) சமையலறையிலிருந்து குரல் வந்தது, ‘எழுந்தாச்சா?’

‘ஆச்சு’

’அப்படியே அந்த மகராணியையும் எழுப்பிவிடு’

இங்கே ‘மகாராணி’ என்பது நங்கை. ஒவ்வொரு நாளும் உச்சந்தலைக்குமேல் ஒன்று, பக்கவாட்டில் இரண்டு, காலில் ஒன்று என்று நான்கு தலையணைகளுக்கு மத்தியில் ஒய்யாரமாகப் படுத்துத் தூங்குவதால் அப்படி ஒரு பெயர்.

’யம்மாடி, எழுந்திரும்மா’, நான் நங்கையை உலுக்கினேன், ‘ஸ்கூலுக்கு லேட்டாச்சு’

‘சும்மாயிருப்பா, இன்னிக்கு ஸ்கூல் லீவு’ என்றாள் நங்கை, ‘என்னைத் தூங்க விடு’

’நீ தினமும் இதைத்தான் சொல்றே, ஒழுங்கா எழுந்திரு’

’நெஜம்மா இன்னிக்கு ஸ்கூல் கிடையாதுப்பா, மிஸ் சொன்னாங்க’

‘சரி, நான் ஃபோன் பண்ணி விசாரிக்கறேன்’ அவளுடைய போர்வையை உருவி மடிக்க ஆரம்பித்தேன், ‘நீ இப்ப எழுந்திருக்காட்டி, அம்மா தண்ணியோட ரெடியா இருக்கா, அப்புறம் தலையெல்லாம் நனைஞ்சு நாசமாயிடும்’

நங்கை மனமில்லாமல் எழுந்து உட்கார்ந்தாள். கண்களைத் தேய்த்துக்கொண்டு கூடத்துக்குச் சென்று சோஃபாவில் விழுந்தாள்.

‘மறுபடி தூங்காதே, பேஸ்ட், பிரஷ்ஷை எடு’, அதட்டல் நங்கைக்கா, அல்லது எனக்கா என்று புரியவில்லை. எதற்கும் இருக்கட்டும் என்று வாஷ் பேஸினில் தஞ்சமடைந்தேன்.

இதற்குமேல் விளக்கமாக எழுதினால் பத்திரி கோபித்துக்கொள்வார். ஆகவே, கொஞ்சம் ஃபாஸ்ட் ஃபார்வர்ட் செய்துவிடுகிறேன்.

நான் காப்பியுடன், நங்கை ஹார்லிக்ஸுடன் சோஃபாவுக்குத் திரும்பியபோது, டிவியில் ஒரு மருத்துவர் நிதானமாகப் பேசிக்கொண்டிருந்தார், ‘டென்ஷன் ஏன் வருது தெரியுமா? எல்லாம் நம்ம மனசுலதான் இருக்கு, நீங்க டென்ஷன் இல்லைன்னு நினைச்சா டென்ஷனே இல்லை, டென்ஷன் இருக்குன்னு நினைச்சா டென்ஷன் இருக்கு, அவ்ளோதான், சிம்பிள்’

’இதைச் சொல்றதுக்கு ஒரு டாக்டர் வேணுமா? முதல்ல அந்த டிவியை ஆஃப் பண்ணு’ என்றபடி கம்ப்யூட்டரைத் திறந்தேன், ‘நீ ஹார்லிக்ஸ் குடிச்சாச்சா?’

’சுடுதுப்பா, கொஞ்சம் பொறு’

’ஓரக்கண்ணால டிவி பார்க்காதே, கெட்ட பழக்கம்’, ரிமோட்டைத் தேடி எடுத்துத் தொலைக்காட்சியை அணைத்தேன், ‘சீக்கிரம் குடிச்சு முடி, ஸ்கூல் வேன் வந்துடும்’

இந்த ‘ஸ்கூல் வேன்’ என்கிற வார்த்தை, எப்பேர்ப்பட்ட குழந்தைக்கும் சோம்பேறித்தனத்தை வரவழைக்கவல்லது. வேன் வந்துவிடப்போகிறது என்று தெரிந்தால்தான், அரை தம்ளர் ஹார்லிக்ஸ் குடிப்பதுமாதிரியான வேலைகளைக்கூட அவர்கள் ஸ்லோ மோஷனில் செய்யத் தொடங்குவார்கள்.

வழக்கம்போல், என் மனைவி நங்கையைத் தடுத்தாட்கொண்டார், ‘இன்னும் எத்தனை நாளைக்குதான் உனக்கு ஹார்லிக்ஸ் ஊட்டவேண்டியிருக்குமோ தெரியலை’ என்கிற அர்ச்சனையுடன், ‘சீக்கிரம் குடிச்சு முடி’ என்று அவர் ஊற்ற, ஊற்ற, நங்கை அதிவேகமாக விழுங்கி முடித்தாள்.

கடைசிச் சொட்டு ஹார்லிக்ஸ் காலியான மறுவிநாடி, குளியல் படலம் தொடங்கியது, ‘தண்ணி ரொம்பச் சுடுதும்மா’ என்று நங்கை கோபிப்பதும், ‘இதெல்லாம் ஒரு சூடா?’ என்று அவள் அம்மாவின் பதிலடிகளும் பின்னணியாகக் கொண்டு நான் அலுவலக மெயில்களைப் படிக்க ஆரம்பித்தேன்.

நங்கை குளித்து முடித்ததும், சூடாகச் சாப்பாடு வந்து இறங்கியது. அவளுக்குக் கதை சொல்லிச் சாப்பிடச் செய்யவேண்டியது என்னுடைய பொறுப்பு.

இன்றைக்கு நங்கையின் தேர்வு, ராஜா ராணிக் கதை. நான் எங்கேயோ படித்த ஒரு கதையை லேசாக மாற்றி புருடா விட ஆரம்பித்தேன். அவளுடைய தட்டில் இருந்த தோசைத் துண்டங்களின் எண்ணிக்கைக்கு ஏற்பக் கதை நீண்டு, மெலிந்தது.

இந்தப் பக்கம் சாப்பாடு இறங்கிக்கொண்டிருக்க, பின்னால் தலைவாரல் படலம் ஆரம்பமானது, ‘ஸ்ஸ்ஸ், வலிக்குதும்மா’

‘அதுக்குதான் சொல்றேன், ஒழுங்கா பாய் கட் வெட்டிக்கோ-ன்னா கேட்கிறியா?’

’ம்ஹூம், முடியாது’ பெரிதாகத் தலையாட்டிய நங்கையின் வாயிலிருந்து தோசைத் துகள்களும் மிளகாய்ப் பொடியும் சிதறின, ‘பாய்ஸ்தான் முடி வெட்டிக்குவாங்க, நான் என்ன பாயா?’

’அப்படீன்னா கொஞ்ச நேரம் தலையை அசைக்காம ஒழுங்கா உட்கார்ந்திரு’

’சரி, நீ ஏன்ப்பா நிறுத்திட்டே? கதை சொல்லு’

நான் ட்விட்டரிலிருந்து விடுபட்டு மீண்டும் ராஜா ராணிக் கதைக்குத் திரும்பினேன், ‘அந்த ராஜாவுக்கு செம கோபமாம், வெளியே போ-ன்னு கத்தினாராம்’

‘ராஜாவுக்கு யார்மேல கோவம்?’

எனக்கே ஞாபகமில்லை. அப்போதைக்கு ஏதோ சொல்லிச் சமாளித்தேன். கதை வேறொரு ட்ராக்கில் தொடர்ந்தது.

ஒருவழியாக, எட்டரை நிமிடங்களில் தோசை தீர்ந்தது, கதை முடிந்தது, பின்னலும் ஒழுங்குபெற்றது, அடுத்து, ஸ்கூல் பேக் நிரப்பு படலம், ‘ஹோம் வொர்க் நோட் எங்கடி?’

’அங்கதாம்மா, டிவிக்குப் பக்கத்தில கிடக்கு’

’இப்படிச் சொல்ற நேரத்துக்கு எடுத்துகிட்டு வரலாம்ல? எல்லாம் நானே செய்யவேண்டியிருக்கு’

நங்கையின் பையில் ஒரு கைக்குட்டை, மூன்று ஹோம் வொர்க் நோட்டுகள், நொறுக்குத் தீனி டப்பா, மதியச் சாப்பாடு, தண்ணீர் பாட்டில் அனைத்தும் தஞ்சம் புகுந்தன, ‘இன்னிக்கும் கர்ச்சீப்பைத் தொலைச்சுட்டு வந்தேன்னா பிச்சுப்புடுவேன், செருப்பை மாட்டு’

’சாக்ஸ் காணோம்மா’

‘சாதாரண செருப்புதானே போடப்போறே? எதுக்குடி சாக்ஸ்?’

’எல்லோரும் சாக்ஸ் போட்டுகிட்டுதான் வரணும்ன்னு மிஸ் சொல்லியிருக்காங்க’

‘உங்க  மிஸ்க்குப் பொழப்பு என்ன’ என்றபடி நங்கையின் கால்கள் செருப்பினுள் திணிக்கப்பட்டன, ‘அப்பாவுக்கு டாட்டா சொல்லிட்டுக் கிளம்பு’

‘டாட்டா-ப்பா, ஈவினிங் பார்க்கலாம்’

நான் கையசைப்பதற்குள் கதவு மூடிக்கொண்டது. அப்போது மணி எட்டு இருபத்தைந்து.

சுமார் இருபது நிமிடங்கள் கழித்து, நங்கையும் அவள் அம்மாவும் சோர்வாகத் திரும்பிவந்தார்கள், ‘என்னாச்சு? ஸ்கூலுக்குப் போகலை?’

‘வேன் வரவே இல்லை’ என்றார் என் மனைவி, ‘நீ அந்த ட்ரைவருக்குக் கொஞ்சம் ஃபோன் பண்ணி விசாரி’

நான் அவருடைய நம்பரைத் தேடி எடுத்து அழைத்தேன். ‘ஹம் ஆப் கே ஹைன் கௌன்’ என்றது காலர் ட்யூன், அடுத்து வந்த வயலின் பின்னணி இசையில் லயிப்பதற்குள் யாரோ அரக்கத்தனமாகக் குறுக்கிட்டு ‘ஹலோ’ என்றார்கள், ‘சங்கர் ஹியர், நீங்க யாரு?’

‘நங்கையோட வீட்லேர்ந்து பேசறோம், இன்னும் வேன் வரலியே’

’இன்னிக்கு ஸ்கூல் லீவாச்சே சார்’

எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. குழந்தை ஆரம்பத்திலேயே இதைத்தானே சொன்னாள்? நான்தான் கேட்கவில்லை!

இப்போதும், என்னால் நம்பமுடியவில்லை. அவசரமாக நங்கையின் பள்ளி காலண்டரை எடுத்துப் பிரித்துப் பார்த்தேன், ‘நவம்பர் 5 – விடுமுறை – கனக ஜெயந்தி’ என்றது.

கனக ஜெயந்தி என்றால் என்ன பண்டிகை என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், ‘இன்னிக்கு லீவ்’ என்று நங்கை சொல்லியும் கேட்காமல், அவளை அலட்சியப்படுத்திவிட்டு முரட்டுத்தனமாக ஸ்கூலுக்குத் தயார் செய்தது பெரிய வேதனையாக இருக்கிறது.

மற்ற நாள்களிலாவது பரவாயில்லை, குழந்தை பள்ளிக்குப் போகவேண்டும், அதற்காகதான் அவளுடைய தூக்கத்தைக் கெடுக்கிறோம், சீக்கிரம் சாப்பிடச்சொல்லி வற்புறுத்துகிறோம், வேகவேகமாகத் தலை பின்னுகிறோம் என்று ஒரு (சுமாரான) காரணம் இருக்கிறது. இன்றைக்கு அப்படியில்லை. இது விடுமுறை நாள் என்று நங்கைக்குத் தெரிந்திருக்கிறது, அவள் அதைச் சொல்லியிருக்கிறாள், ஆனா ‘உனக்கென்ன தெரியும்’ என்று அலட்சியப்படுத்தப்பட்டிருக்கிறாள், இந்த அலட்சியப்படுத்தலின் வலியை உணர்கிற வயது அவளுக்கு இல்லைதான், ஆனால் செய்த தப்பு எங்களை உறுத்தாமல் விடுமா?

குழந்தைகள்மீது பாசத்தைக் கொட்டி வளர்ப்பது ஒரு கோணம். அதனாலேயே அவர்களுடைய ஆளுமையைக் கவனிக்கத் தவறுவது இன்னொருபக்கம், இந்த முரணை எப்படி Balance செய்வது என்று எனக்கு இன்னும் புரியவில்லை.

கொஞ்சம் கவனித்துப் பார்த்தால், நங்கையே அதையும் கற்றுக்கொடுத்துவிடுவாள் என்றுதான் நினைக்கிறேன்!

***

என். சொக்கன் …

05 11 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,055 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

November 2009
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30