இந்த வருடம் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வரும் என்னுடைய புத்தகங்கள் மூன்று. அநேகமாக மூன்றுமே ‘Follow-up’ ரகத்தைச் சேர்ந்தவை என்பதால், சுருக்கமான(?) ஓர் அறிமுகம் இங்கே:
1. முகேஷ் அம்பானி
கிழக்கு பதிப்பகத்தின் முதல் புத்தகமாக வந்த ’அம்பானி: ஒரு வெற்றிக் கதை’தான் இன்றுவரை என்னுடைய பெஸ்ட் செல்லர். அதன்பிறகு distant secondஆக இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியும், கடந்த இரண்டு வருடங்களில் அப்துல் கலாம் (குழந்தைகளுக்காக எழுதியது) வாழ்க்கை வரலாறும் வரும் என்று நினைக்கிறேன்.
திருபாய் அம்பானியின் வாழ்க்கை வரலாறை எழுதிச் சில வருடங்கள் கழித்து, அவருடைய மகன்கள் இருவர் பிரிந்ததைப்பற்றி எழுத நேர்ந்தது. சிறிய புத்தகம்தான். ஆனால் செம ஜாலியாக அனுபவித்து எழுதினேன்.
காரணம், அப்பா கதையைவிட இந்த மகன்களின் கதை மிகச் சுவாரஸ்யமாக இருந்தது. சகோதரர்களுக்கு நடுவிலான தனிப்பட்ட & தொழில்முறை விரிசல்கள், அம்பானி மருமகள்கள் இருவரும் பெயர் (Nita – Tina) தொடங்கி சகலத்திலும் நேரெதிராக அமைந்துவிட்ட முரண், அதனால் அவர்களுடைய குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள், திருபாய் மறைந்தபிறகு, மகன்களை எப்படியாவது ஒட்டவைத்துவிடமுடியாதா என்று முயற்சி செய்து தோற்றுப்போன ராஜாமாதா கோகிலாபென், கடைசியில் குடும்பச் சண்டை மீடியாவுக்கு வந்து அலற ஆரம்பித்தபிறகு ஐசிஐசிஐ (அப்போதைய) தலைவர் காமத் உள்ளிட்ட பொது நண்பர்களின் சமாதான முயற்சிகள், ஒருவழியாக ரிலையன்ஸைப் பிரிப்பது என்று முடிவாகிவிட்டபிறகு, எனக்குதான் பெரிய அப்பம் வேண்டும் என்று சகோதரர்கள் இருவரும் தொடர்ந்து சண்டையிட்டுக்கொண்டது, கடைசியாக கோகிலாபென் தலையிட்டு எல்லோரையும் ஒரே வீட்டுக்குள் பூட்டிவைத்துப் பிரிவினை ஒப்பந்தத்தை முடிவுசெய்தது, அதில் தன்னுடைய இரு மகள்களுக்கும் நியாயமான ஒரு பங்கு கிடைக்கும்படி பார்த்துக்கொண்டது, அதன்பிறகு முகேஷ், அனில் தனித்தனியே இயங்கத் தொடங்கியது, அதில் வந்த பிரச்னைகள், கோர்ட் இழுபறிகள் என ஒரு பாலிவுட் மசாலாப் படத்தின் திரைக்கதைக்கு இணையான திருப்பங்கள் கொண்ட சமகாலச் சரித்திரம் அவர்களுடையது.
’அம்பானிகள் பிரிந்த கதை’ என்கிற அந்தச் சிறிய புத்தகத்தை எழுதி முடித்தபிறகு, முகேஷ், அனில் இருவரின் தனிப்பட்ட வாழ்க்கையைப்பற்றி நிறைய தேடிப் படிக்கும் ஆர்வம் வந்தது. திருபாயின் வெளிச்சத்துக்குப் பின்னாலும் இவர்கள் நிறைய சாதித்திருக்கிறார்கள் என்று தோன்றியது.
முக்கியமாக, முகேஷ். 1986ல் திருபாய் உடல்நலக்குறைவு காரணமாகக் கட்டாய ஓய்வுக்குள் தள்ளப்பட்டப்பிறகு, ரிலையன்ஸின் தினசரி நடவடிக்கைகள் எல்லாவற்றிலும் இவருடைய முத்திரை இருந்திருக்கிறது. இன்றைக்கும் ரிலையன்ஸ் பெருமையோடு சொல்லிக்காட்டுகிற பல தொழிற்சாலைகள், முகேஷின் நேரடி வழிகாட்டுதலில் உருவாக்கப்பட்டவைதான். திருபாயின் சாதனையாகச் சொல்லப்படும் Backward Integrationனை வெற்றிகரமாகச் செயல்படுத்திய பெருமையில் பாதிக்குமேல் முகேஷுக்குச் சேரவேண்டும்.
இத்தனைக்கும், முகேஷ் அதிகம் படிக்கவில்லை. இந்தியாவில் டிகிரி முடித்தார். ஆனால், அமெரிக்காவில் எம்பிஏவைப் பாதியில் நிறுத்திவிட்டு இந்தியா திரும்பவேண்டிய சூழ்நிலை. அதன்பிறகு அவருடைய தகுதிகள், திறமைகள் எல்லாமே இங்கே நேரடியாகக் கற்றுக்கொண்டதுதான்.
அனிலுடன் ஒப்பிடும்போது, முகேஷின் முகம் ரொம்ப சீரியஸானது. ரிலையன்ஸுக்கு வெளியே அவருக்கு வேறு ஆர்வங்கள் கிடையாது. அவருடைய முக்கியமான பொழுதுபோக்குகள் என்று பார்த்தால், காட்டுக்குள் சுற்றுப்பயணம் போவார் (இது திருபாய் ஏற்படுத்திவைத்த பழக்கம்), அப்புறம் பாலிவுட் சினிமாக்கள் – ராத்திரி எத்தனை மணிக்கு வீடு திரும்பினாலும், பிரைவேட் தியேட்டரில் ஒரு படம் பார்த்துவிட்டுதான் தூங்குவாராம்.
அதனால்தானோ என்னவோ, ‘முகேஷ் ரொம்ப ரொமான்டிக்’ என்று அவருடைய மனைவி வாக்குமூலம் தந்திருக்கிறார், அவர்களுடைய காதல்(?) கதை ரொம்பச் சுவாரஸ்யமானது 🙂
முகேஷ் – அனில் இருவரும் பிரிந்தபோது, ‘படிப்பறிவில்லாத அப்பா ஒரு கம்பெனியைக் கட்டிவைத்தார், அவருடைய படித்த மகன்கள் அதை நாசம் செய்கிறார்கள்’ என்று ஒரு எஸ்.எம்.எஸ். ஊர்முழுக்க அலறியது நினைவிருக்கலாம். ஆனால், இந்தச் சகோதரர்களுக்கு இடையிலான சண்டையினால் அம்பானி குடும்பத்தின் பெயர்தான் கெட்டுப்போனதேதவிர, ரிலையன்ஸ் நிறுவனம் நாசமாகிவிடவில்லை. சொல்லப்போனால், தனித்து இயங்கத் தொடங்கியபிறகு முன்பைவிட வேகமாகத் தன்னுடைய நிறுவனங்களை வளர்ச்சியடையச் செய்திருக்கிறார் முகேஷ் அம்பானி.
இப்படிக் கடந்த ஒரு வருட காலத்துக்கும்மேலாக, முகேஷ்பற்றி நிறையப் படித்துக்கொண்டிருந்தேன். ஆனால் எழுத உட்காரவில்லை.
காரணம், இந்த ப்ளாக் படிக்கிறவர்களுக்குத் ஏற்கெனவே தெரிந்த விஷயம்தான். யாராவது என் கழுத்தில் டெட்லைன் கத்தி வைத்தாலொழிய எனக்கு எழுத வராது. உட்கார்ந்து ஜாலியாக காமிக்ஸ் படித்துக்கொண்டிருப்பேனேதவிர, எழுதமாட்டேன்.
இந்தப் புத்தகக் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் தொடங்கியபோது, கிழக்கு பதிப்பகத்திலிருந்து கத்தி வந்தது, ‘முகேஷ் அம்பானி புக்கை இந்த ஜென்மத்தில முடிக்கிற ஐடியா இருக்கா? பதினைந்து நாள் டைம், அதுக்குள்ள எழுதாட்டி வீட்டுக்கு ஆட்டோ வரும்.’
அப்புறமென்ன. ட்விட்டர், ப்ளாக் எல்லாவற்றுக்கும் தாற்காலிகமாக விடுமுறை அறிவித்துவிட்டு ஒரே மூச்சில் உட்கார்ந்து எழுதிவிட்டேன். புத்தகம் எனக்கு மிக நிறைவாக வந்திருக்கிறது. நீங்களும் வாசித்துவிட்டுச் சொல்லுங்கள்.

நண்பர் ஒருவரிடம் இந்தப் புத்தகத்தைப்பற்றி கூகுள் டாக்-கில் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு நியாயமான கேள்வி கேட்டார், ‘திருபாய் இல்லாம முகேஷ் ஏது? எனக்கென்னவோ நீங்க பழைய திருபாய் அம்பானி புத்தகத்தை புதுப் பேர்ல மறுபடி எழுதியிருக்கீங்கன்னு தோணுது.’
நான் அவருக்குச் சொன்ன பதில், ‘இந்தப் புத்தகத்தில திருபாய் சுமார் 25 முதல் 30 சதவிகிதம்வரை நிச்சயமாக வருவார். ஆனால் இந்தத் தகவல்களெல்லாம் முகேஷின் வளர்ச்சிக்குப் பின்னணியாக அமைந்தது எப்படி என்றுமட்டும் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறேன். மற்றபடி இது திருபாயின் கதை அல்ல, முழுக்க முழுக்க முகேஷின் கதைதான்.’
கடைசியாக ஒரு கொசுறுத் தகவல், (எனக்குத் தெரிந்து) முகேஷ் அம்பானிபற்றி (எந்த மொழியிலும்) வெளியாகிற முதல் புத்தகம் இது.
2. பெப்ஸி
கல்லூரியில் எனக்கு ஒரு நண்பன் இருந்தான். அவனுடைய விசேஷத் திறமை, ஏழெட்டு பெப்ஸி பாட்டில்களை அடுத்தடுத்து இடைவெளி இல்லாமல் ஒரே மூச்சில் குடித்துமுடிப்பது.
அப்போதெல்லாம், அவனைப் பார்க்க எங்களுக்குப் பிரம்மிப்பாக இருக்கும். நாங்கள் ஒரு பெப்ஸியைக் காலி செய்வதற்கே மூச்சுவாங்கிக்கொண்டிருக்கையில், அந்தக் கார்பன் குமிழ்களையெல்லாம் சகித்துக்கொண்டு எப்படிதான் குடிக்கிறானோ என்று வாயைப் பிளப்போம்.
சில வருடங்கள் கழித்து, நான் ஹைதராபாதில் வேலை செய்துகொண்டிருந்த நேரம், எங்களுடைய அலுவலக நண்பர் ஒருவரின் மனைவி, ஒரு டயட்டீஷியன்.
உண்மையில் ‘டயட்டீஷியன்’ என்கிற வார்த்தையையே நாங்கள் அப்போதுதான் முதன்முறையாகக் கேள்விப்பட்டோம். நம்முடைய (தென் இந்திய) உணவுப் பழக்கங்களைப்பற்றியும், அதில் இருக்கிற ஆபத்துகள், அவற்றைத் தவிர்க்கும் முறைகள்பற்றியும் அவர் விளக்கமாகச் சொன்னார்.
அப்போதுதான், பெப்ஸிபற்றிப் பேச்சு வந்தது, ‘அது வெறும் சர்க்கரைத் தண்ணி, அதுக்குப்போய் இவ்ளோ காசு கொடுத்து வீணடிக்கறீங்களே’ என்று அலட்சியமாகச் சொன்னார் அவர்.
இந்த விஷயம் அப்போது எங்களுக்கு மிக ஆச்சர்யமாக இருந்தது, ‘உலகிலேயே மிகச் சுவை கொண்ட பெப்ஸி வெறும் சர்க்கரைத் தண்ணீர்தானா? இது அநியாயம்!’
ஆனால், கூகுளில் தேடிப் பார்த்தபோது அவர் சொல்வது உண்மைதான் என்று தெரிந்தது. இதுபோன்ற கார்பனேட்டட் குளிர் பானங்களைப் பருகுவது சும்மா வெட்டி பந்தா என்பதைப் பல இணைய தளங்களில் படம் போட்டுப் பாகம் விளக்கியிருந்தார்கள்.
அதன்பிறகு, கோக், பெப்ஸிமாதிரியான பானங்களைச் சுத்தமாக நிறுத்திவிட்டேன். எப்போதாவது விருந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறபோது அரை கப், ஒரு கப் குடித்தால் உண்டு, அதுவும் அபூர்வம்.
இரண்டு வருடங்களுக்குமுன்னால், கோக-கோலாவின் பிஸினஸ் கதையை எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. வெறும் சர்க்கரைத் தண்ணீருக்கு என்ன பெரிய சரித்திரம் இருந்துவிடப்போகிறது என்கிற அலட்சியத்துடன் தகவல் தேட ஆரம்பித்தால், மிகப் பெரிய புதையல் மாட்டியது. வெறும் சர்க்கரைத் தண்ணீருக்கு லேபிள் போட்டு விற்பது சாதாரண விஷயம் இல்லை என்று புரிந்தது.
2008ல் வெளியான ‘கோக்: ஜிவ்வென்று ஒரு ஜில் வரலாறு’ என்னுடைய மற்ற புத்தகங்களிலிருந்து மிகவும் மாறுபட்டிருக்கும். சாதாரணமாக பிஸினஸ் புத்தகங்களுக்கு நான் பயன்படுத்துகிற மொழியிலிருந்து கொஞ்சம் மாறி, லேசாக எள்ளல் கலந்த ஜாலி நடையில் அந்தப் புத்தகத்தை எழுதியிருந்தேன். நல்ல வரவேற்பு கிடைத்தது.
கோக் எழுதிவிட்டு, பெப்ஸியை விட்டால் எப்படி? உடனடியாக அதற்கும் வேலைகளைத் தொடங்கினேன். அந்தப் புத்தகம் சில காரணங்களால் தாமதமாகி, இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு வருகிறது.

இந்த இரண்டு புத்தக(கோக், பெப்ஸி)ங்களுக்கும் தேவையான பல தகவல்கள், நூல்களைத் திரட்டிக் கொடுத்து உதவிய நண்பர் கணேஷ் சந்திராவுக்கு நன்றி!
3. Television
இது என்னுடைய ‘டெலிவிஷன் எப்படி இயங்குகிறது’ என்ற (மாணவர்களுக்கான) தமிழ்ப் புத்தகத்தின் ஆங்கில வடிவம்தான். நேரடி மொழிபெயர்ப்பாக அன்றி, அதே வடிவமைப்பை வைத்துக்கொண்டு மீண்டும் எழுதியிருக்கிறேன்.

என்னுடைய பிற ஆங்கில, பிறமொழிப் புத்தகங்கள் பெரும்பாலும் மற்றவர்களால் மொழிமாற்றம் செய்யப்பட்டவை. ஆகவே, இந்தப் புத்தகத்தை என்னால் நேரடியாக ஆங்கிலத்தில் எழுதமுடியுமா என்று பரீட்சித்துப்பார்ப்பதற்கான ஒரு நெட் ப்ராக்டீஸாகப் பயன்படுத்திக்கொண்டேன். எப்படி வந்திருக்கிறது என்று நீங்கள்தான் சொல்லவேண்டும்!
இந்தப் புத்தகங்களை வாங்க:
இவைதவிர, இந்த வருடம் வெளியான எனது மற்ற சில புத்தகங்கள் (இவையும் சென்னை புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும்):
***
என். சொக்கன் …
28 12 2009
தொடர்புள்ள மற்ற பதிவுகள்: