மனம் போன போக்கில்

மூன்று புத்தகங்கள்

Posted on: December 28, 2009

இந்த வருடம் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வரும் என்னுடைய புத்தகங்கள் மூன்று. அநேகமாக மூன்றுமே ‘Follow-up’ ரகத்தைச் சேர்ந்தவை என்பதால், சுருக்கமான(?) ஓர் அறிமுகம் இங்கே:

1. முகேஷ் அம்பானி

கிழக்கு பதிப்பகத்தின் முதல் புத்தகமாக வந்த ’அம்பானி: ஒரு வெற்றிக் கதை’தான் இன்றுவரை என்னுடைய பெஸ்ட் செல்லர். அதன்பிறகு distant secondஆக இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியும், கடந்த இரண்டு வருடங்களில் அப்துல் கலாம் (குழந்தைகளுக்காக எழுதியது) வாழ்க்கை வரலாறும் வரும் என்று நினைக்கிறேன்.

திருபாய் அம்பானியின் வாழ்க்கை வரலாறை எழுதிச் சில வருடங்கள் கழித்து, அவருடைய மகன்கள் இருவர் பிரிந்ததைப்பற்றி எழுத நேர்ந்தது. சிறிய புத்தகம்தான். ஆனால் செம ஜாலியாக அனுபவித்து எழுதினேன்.

காரணம், அப்பா கதையைவிட இந்த மகன்களின் கதை மிகச் சுவாரஸ்யமாக இருந்தது. சகோதரர்களுக்கு நடுவிலான தனிப்பட்ட & தொழில்முறை விரிசல்கள், அம்பானி மருமகள்கள் இருவரும் பெயர் (Nita – Tina) தொடங்கி சகலத்திலும் நேரெதிராக அமைந்துவிட்ட முரண், அதனால் அவர்களுடைய குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள், திருபாய் மறைந்தபிறகு, மகன்களை எப்படியாவது ஒட்டவைத்துவிடமுடியாதா என்று முயற்சி செய்து தோற்றுப்போன ராஜாமாதா கோகிலாபென், கடைசியில் குடும்பச் சண்டை மீடியாவுக்கு வந்து அலற ஆரம்பித்தபிறகு ஐசிஐசிஐ (அப்போதைய) தலைவர் காமத் உள்ளிட்ட பொது நண்பர்களின் சமாதான முயற்சிகள், ஒருவழியாக ரிலையன்ஸைப் பிரிப்பது என்று முடிவாகிவிட்டபிறகு, எனக்குதான் பெரிய அப்பம் வேண்டும் என்று சகோதரர்கள் இருவரும் தொடர்ந்து சண்டையிட்டுக்கொண்டது, கடைசியாக கோகிலாபென் தலையிட்டு எல்லோரையும் ஒரே வீட்டுக்குள் பூட்டிவைத்துப் பிரிவினை ஒப்பந்தத்தை முடிவுசெய்தது, அதில் தன்னுடைய இரு மகள்களுக்கும் நியாயமான ஒரு பங்கு கிடைக்கும்படி பார்த்துக்கொண்டது, அதன்பிறகு முகேஷ், அனில் தனித்தனியே இயங்கத் தொடங்கியது, அதில் வந்த பிரச்னைகள், கோர்ட் இழுபறிகள் என ஒரு பாலிவுட் மசாலாப் படத்தின் திரைக்கதைக்கு இணையான திருப்பங்கள் கொண்ட சமகாலச் சரித்திரம் அவர்களுடையது.

அம்பானிகள் பிரிந்த கதை’ என்கிற அந்தச் சிறிய புத்தகத்தை எழுதி முடித்தபிறகு, முகேஷ், அனில் இருவரின் தனிப்பட்ட வாழ்க்கையைப்பற்றி நிறைய தேடிப் படிக்கும் ஆர்வம் வந்தது. திருபாயின் வெளிச்சத்துக்குப் பின்னாலும் இவர்கள் நிறைய சாதித்திருக்கிறார்கள் என்று தோன்றியது.

முக்கியமாக, முகேஷ். 1986ல் திருபாய் உடல்நலக்குறைவு காரணமாகக் கட்டாய ஓய்வுக்குள் தள்ளப்பட்டப்பிறகு, ரிலையன்ஸின் தினசரி நடவடிக்கைகள் எல்லாவற்றிலும் இவருடைய முத்திரை இருந்திருக்கிறது. இன்றைக்கும் ரிலையன்ஸ் பெருமையோடு சொல்லிக்காட்டுகிற பல தொழிற்சாலைகள், முகேஷின் நேரடி வழிகாட்டுதலில் உருவாக்கப்பட்டவைதான். திருபாயின் சாதனையாகச் சொல்லப்படும் Backward Integrationனை வெற்றிகரமாகச் செயல்படுத்திய பெருமையில் பாதிக்குமேல் முகேஷுக்குச் சேரவேண்டும்.

இத்தனைக்கும், முகேஷ் அதிகம் படிக்கவில்லை. இந்தியாவில் டிகிரி முடித்தார். ஆனால், அமெரிக்காவில் எம்பிஏவைப் பாதியில் நிறுத்திவிட்டு இந்தியா திரும்பவேண்டிய சூழ்நிலை. அதன்பிறகு அவருடைய தகுதிகள், திறமைகள் எல்லாமே இங்கே நேரடியாகக் கற்றுக்கொண்டதுதான்.

அனிலுடன் ஒப்பிடும்போது, முகேஷின் முகம் ரொம்ப சீரியஸானது. ரிலையன்ஸுக்கு வெளியே அவருக்கு வேறு ஆர்வங்கள் கிடையாது. அவருடைய முக்கியமான பொழுதுபோக்குகள் என்று பார்த்தால், காட்டுக்குள் சுற்றுப்பயணம் போவார் (இது திருபாய் ஏற்படுத்திவைத்த பழக்கம்), அப்புறம் பாலிவுட் சினிமாக்கள் – ராத்திரி எத்தனை மணிக்கு வீடு திரும்பினாலும், பிரைவேட் தியேட்டரில் ஒரு படம் பார்த்துவிட்டுதான் தூங்குவாராம்.

அதனால்தானோ என்னவோ, ‘முகேஷ் ரொம்ப ரொமான்டிக்’ என்று அவருடைய மனைவி வாக்குமூலம் தந்திருக்கிறார், அவர்களுடைய காதல்(?) கதை ரொம்பச் சுவாரஸ்யமானது 🙂

முகேஷ் – அனில் இருவரும் பிரிந்தபோது, ‘படிப்பறிவில்லாத அப்பா ஒரு கம்பெனியைக் கட்டிவைத்தார், அவருடைய படித்த மகன்கள் அதை நாசம் செய்கிறார்கள்’ என்று ஒரு எஸ்.எம்.எஸ். ஊர்முழுக்க அலறியது நினைவிருக்கலாம். ஆனால், இந்தச் சகோதரர்களுக்கு இடையிலான சண்டையினால் அம்பானி குடும்பத்தின் பெயர்தான் கெட்டுப்போனதேதவிர, ரிலையன்ஸ் நிறுவனம் நாசமாகிவிடவில்லை. சொல்லப்போனால், தனித்து இயங்கத் தொடங்கியபிறகு முன்பைவிட வேகமாகத் தன்னுடைய நிறுவனங்களை வளர்ச்சியடையச் செய்திருக்கிறார் முகேஷ் அம்பானி.

இப்படிக் கடந்த ஒரு வருட காலத்துக்கும்மேலாக, முகேஷ்பற்றி நிறையப் படித்துக்கொண்டிருந்தேன். ஆனால் எழுத உட்காரவில்லை.

காரணம், இந்த ப்ளாக் படிக்கிறவர்களுக்குத் ஏற்கெனவே தெரிந்த விஷயம்தான். யாராவது என் கழுத்தில் டெட்லைன் கத்தி வைத்தாலொழிய எனக்கு எழுத வராது. உட்கார்ந்து ஜாலியாக காமிக்ஸ் படித்துக்கொண்டிருப்பேனேதவிர, எழுதமாட்டேன்.

இந்தப் புத்தகக் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் தொடங்கியபோது, கிழக்கு பதிப்பகத்திலிருந்து கத்தி வந்தது, ‘முகேஷ் அம்பானி புக்கை இந்த ஜென்மத்தில முடிக்கிற ஐடியா இருக்கா? பதினைந்து நாள் டைம், அதுக்குள்ள எழுதாட்டி வீட்டுக்கு ஆட்டோ வரும்.’

அப்புறமென்ன. ட்விட்டர், ப்ளாக் எல்லாவற்றுக்கும் தாற்காலிகமாக விடுமுறை அறிவித்துவிட்டு ஒரே மூச்சில் உட்கார்ந்து எழுதிவிட்டேன். புத்தகம் எனக்கு மிக நிறைவாக வந்திருக்கிறது. நீங்களும் வாசித்துவிட்டுச் சொல்லுங்கள்.

முகேஷ் அம்பானி

நண்பர் ஒருவரிடம் இந்தப் புத்தகத்தைப்பற்றி கூகுள் டாக்-கில் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு நியாயமான கேள்வி கேட்டார், ‘திருபாய் இல்லாம முகேஷ் ஏது? எனக்கென்னவோ நீங்க பழைய திருபாய் அம்பானி புத்தகத்தை புதுப் பேர்ல மறுபடி எழுதியிருக்கீங்கன்னு தோணுது.’

நான் அவருக்குச் சொன்ன பதில், ‘இந்தப் புத்தகத்தில திருபாய் சுமார் 25 முதல் 30 சதவிகிதம்வரை நிச்சயமாக வருவார். ஆனால் இந்தத் தகவல்களெல்லாம் முகேஷின் வளர்ச்சிக்குப் பின்னணியாக அமைந்தது எப்படி என்றுமட்டும் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறேன். மற்றபடி இது திருபாயின் கதை அல்ல, முழுக்க முழுக்க முகேஷின் கதைதான்.’

கடைசியாக ஒரு கொசுறுத் தகவல், (எனக்குத் தெரிந்து) முகேஷ் அம்பானிபற்றி (எந்த மொழியிலும்) வெளியாகிற முதல் புத்தகம் இது.

2. பெப்ஸி

கல்லூரியில் எனக்கு ஒரு நண்பன் இருந்தான். அவனுடைய விசேஷத் திறமை, ஏழெட்டு பெப்ஸி பாட்டில்களை அடுத்தடுத்து இடைவெளி இல்லாமல் ஒரே மூச்சில் குடித்துமுடிப்பது.

அப்போதெல்லாம், அவனைப் பார்க்க எங்களுக்குப் பிரம்மிப்பாக இருக்கும். நாங்கள் ஒரு பெப்ஸியைக் காலி செய்வதற்கே மூச்சுவாங்கிக்கொண்டிருக்கையில், அந்தக் கார்பன் குமிழ்களையெல்லாம் சகித்துக்கொண்டு எப்படிதான் குடிக்கிறானோ என்று வாயைப் பிளப்போம்.

சில வருடங்கள் கழித்து, நான் ஹைதராபாதில் வேலை செய்துகொண்டிருந்த நேரம், எங்களுடைய அலுவலக நண்பர் ஒருவரின் மனைவி, ஒரு டயட்டீஷியன்.

உண்மையில் ‘டயட்டீஷியன்’ என்கிற வார்த்தையையே நாங்கள் அப்போதுதான் முதன்முறையாகக் கேள்விப்பட்டோம். நம்முடைய (தென் இந்திய) உணவுப் பழக்கங்களைப்பற்றியும், அதில் இருக்கிற ஆபத்துகள், அவற்றைத் தவிர்க்கும் முறைகள்பற்றியும் அவர் விளக்கமாகச் சொன்னார்.

அப்போதுதான், பெப்ஸிபற்றிப் பேச்சு வந்தது, ‘அது வெறும் சர்க்கரைத் தண்ணி, அதுக்குப்போய் இவ்ளோ காசு கொடுத்து வீணடிக்கறீங்களே’ என்று அலட்சியமாகச் சொன்னார் அவர்.

இந்த விஷயம் அப்போது எங்களுக்கு மிக ஆச்சர்யமாக இருந்தது, ‘உலகிலேயே மிகச் சுவை கொண்ட பெப்ஸி வெறும் சர்க்கரைத் தண்ணீர்தானா? இது அநியாயம்!’

ஆனால், கூகுளில் தேடிப் பார்த்தபோது அவர் சொல்வது உண்மைதான் என்று தெரிந்தது. இதுபோன்ற கார்பனேட்டட் குளிர் பானங்களைப் பருகுவது சும்மா வெட்டி பந்தா என்பதைப் பல இணைய தளங்களில் படம் போட்டுப் பாகம் விளக்கியிருந்தார்கள்.

அதன்பிறகு, கோக், பெப்ஸிமாதிரியான பானங்களைச் சுத்தமாக நிறுத்திவிட்டேன். எப்போதாவது விருந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறபோது அரை கப், ஒரு கப் குடித்தால் உண்டு, அதுவும் அபூர்வம்.

இரண்டு வருடங்களுக்குமுன்னால், கோக-கோலாவின் பிஸினஸ் கதையை எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. வெறும் சர்க்கரைத் தண்ணீருக்கு என்ன பெரிய சரித்திரம் இருந்துவிடப்போகிறது என்கிற அலட்சியத்துடன் தகவல் தேட ஆரம்பித்தால், மிகப் பெரிய புதையல் மாட்டியது. வெறும் சர்க்கரைத் தண்ணீருக்கு லேபிள் போட்டு விற்பது சாதாரண விஷயம் இல்லை என்று புரிந்தது.

2008ல் வெளியான ‘கோக்: ஜிவ்வென்று ஒரு ஜில் வரலாறு’ என்னுடைய மற்ற புத்தகங்களிலிருந்து மிகவும் மாறுபட்டிருக்கும். சாதாரணமாக பிஸினஸ் புத்தகங்களுக்கு நான் பயன்படுத்துகிற மொழியிலிருந்து கொஞ்சம் மாறி, லேசாக எள்ளல் கலந்த ஜாலி நடையில் அந்தப் புத்தகத்தை எழுதியிருந்தேன். நல்ல வரவேற்பு கிடைத்தது.

கோக் எழுதிவிட்டு, பெப்ஸியை விட்டால் எப்படி? உடனடியாக அதற்கும் வேலைகளைத் தொடங்கினேன். அந்தப் புத்தகம் சில காரணங்களால் தாமதமாகி, இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு வருகிறது.

பெப்ஸி

இந்த இரண்டு புத்தக(கோக், பெப்ஸி)ங்களுக்கும் தேவையான பல தகவல்கள், நூல்களைத் திரட்டிக் கொடுத்து உதவிய நண்பர் கணேஷ் சந்திராவுக்கு நன்றி!

3. Television

இது என்னுடைய ‘டெலிவிஷன் எப்படி இயங்குகிறது’ என்ற (மாணவர்களுக்கான) தமிழ்ப் புத்தகத்தின் ஆங்கில வடிவம்தான். நேரடி மொழிபெயர்ப்பாக அன்றி, அதே வடிவமைப்பை வைத்துக்கொண்டு மீண்டும் எழுதியிருக்கிறேன்.

Television

என்னுடைய பிற ஆங்கில, பிறமொழிப் புத்தகங்கள் பெரும்பாலும் மற்றவர்களால் மொழிமாற்றம் செய்யப்பட்டவை. ஆகவே, இந்தப் புத்தகத்தை என்னால் நேரடியாக ஆங்கிலத்தில் எழுதமுடியுமா என்று பரீட்சித்துப்பார்ப்பதற்கான ஒரு நெட் ப்ராக்டீஸாகப் பயன்படுத்திக்கொண்டேன். எப்படி வந்திருக்கிறது என்று நீங்கள்தான் சொல்லவேண்டும்!

இந்தப் புத்தகங்களை வாங்க:

இவைதவிர, இந்த வருடம் வெளியான எனது மற்ற சில புத்தகங்கள் (இவையும் சென்னை புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும்):

***

என். சொக்கன் …

28 12 2009

தொடர்புள்ள மற்ற பதிவுகள்:

15 Responses to "மூன்று புத்தகங்கள்"

திருபாய் இறந்த பிறகு சொத்து பிரிப்பு பிரச்சனைகள் எழுந்தபோது எல்லோருக்குமே – குடும்பம் அதேகதியா- இனி அவ்ளோதான் என்ற நினைப்பே ஏற்பட்டிருந்தது ஆனால் ரிலையன்ஸின் இருவரின் வெவ்வேறு விதமான தொழில் முனைப்புக்கள் அந்த எண்ணத்தினை நீர்த்துப்போய்விடச்செய்துவிட்டது! – வாழ்க்கை நிகழ்வுகள் கண்டிப்பாக படிக்க விறுவிறுப்பாக இருக்கக்கூடும் – வாழ்த்துக்கள் !

இந்த புத்தகங்கள் பெஸ்ட் செல்லராக வாழ்த்துக்கள் சொக்கன்.

1. NHM ஆன்லைன் ஆர்டர்ல பெங்களுர் முகவரிக்கு வருமா?
2. Shipping charges ஒவ்வொரு புத்தகத்துக்கும் தனியா?
3. (அல்ப்பமான கேள்வி) ஆன்லைன்ல ஆர்ட்ர் பண்ணுவதால் ஏதாவது டிஸ்கௌண்ட் இருக்கா? 🙂

முடிந்தால் தயவு செய்து கேட்டு சொல்லவும்.

எதற்காக டிஸ்கௌண்ட் பற்றி கேட்கிறேன் என்றால், இன்னும் நிறைய புத்தகங்கள் வாங்கலாமே என்பதற்காகதான். There are many good titles availalable which I want to buy.

ஆயில்யன், ravisuga,

நன்றி 🙂

//NHM ஆன்லைன் ஆர்டர்ல பெங்களுர் முகவரிக்கு வருமா?//

வரும்

//Shipping charges ஒவ்வொரு புத்தகத்துக்கும் தனியா?//

ஆமாம். ரூ 250/-க்குமேல் ஆர்டர் செய்தால் ஷிப்பிங் இலவசம் என்று நினைக்கிறேன்

//ஆன்லைன்ல ஆர்ட்ர் பண்ணுவதால் ஏதாவது டிஸ்கௌண்ட் இருக்கா? முடிந்தால் தயவு செய்து கேட்டு சொல்லவும்.//

எனக்குத் தெரிந்து இல்லை – பதிப்பாளரிடம் கேட்டுச் சொல்கிறேன்

ரவிசுகா கேட்ட மாதிரி எனக்கும் ஒரு சந்தேகம் இருக்கு கிப்ட் ஆர்டர் செஞ்சு அது கொடுத்திருக்கிற அட்ரஸ்க்கு போகுமா? எத்தினி நாள்ல ரிசீவ் செய்யுறவங்க எதேனும் பணம் கட்ட வேண்டி வருமா? (இந்த கொஸ்டீன் கொஞ்சம் மொக்கையா கூட இருக்கலாம் பட் எனக்கு கேக்கணும்ன்னு தோணுச்சு ? )

🙂

புத்தகங்களை அட்டைபெட்டியில் போட்டு அனுப்பினால் ( ப்ளிப்கார்ட் மாதிரி ) நலம்.

அந்த சென்னை புக் பேர் பத்து பர்சன்ட் டிஸ்கவுன்ட் ஆன்லயினில் கிடைத்தால் நலம். ( தமிழ் மற்றும் இன்ன பிற மொழிகளுக்கும் )

ட்விட்டரில் பப்ளிஷ் செய்யலாம்!

Congratulations and Best wishes.

ரவிசுகா:

1. NHM ஆன்லைன், இந்தியா முழுமைக்கும் (வெளிநாடுகளுக்கும்கூட) புத்தகங்களை அனுப்பும்.

2. இந்தியாவுக்குள்ளாக ரூ. 250-க்குப் புத்தகங்கள் வாங்கினால், பதிவு அஞ்சல் மூலம் தபால் செலவு ஏதும் இன்றி புத்தகங்களை அனுப்புகிறோம். (கூரியர் வழியாக வேண்டும் என்றால் அதற்கு செலவாகும்.)

3. நேரடியாக டிஸ்கவுண்ட் ஏதும் கிடையாது. ஆனால் 20 புத்தகங்கள் ஆயிரம் ரூபாய்க்கு என்று கிழக்கு புக் கிளப் என்ற வழியில் கொடுக்கிறோம். எந்த 20 புத்தகத்துக்கும் அல்ல; ஆனால் இந்த ஆஃபரில் குறிப்பிட்டுள்ள சுமார் 150-200 புத்தகங்களிலிருந்து ஏதேனும் 20 புத்தகங்களுக்கு. அவற்றை வாங்கினால் உங்களுக்கு குறைந்து 25% முதல் 50% வரை கூட டிஸ்கவுண்ட் கிடைக்கலாம். நீங்கள் தேர்வு செய்யும் புத்தகங்களைப் பொருத்தது அது.

4. மேலே சொன்ன ஸ்கீமை, 8 புத்தகங்கள் 500 ரூபாய்க்கு என்றும் extend செய்ய உள்ளோம். அது பொங்கல் தினத்தன்று அறிமுகமாகும்.

5. பரிசோதனை நிமித்தம் ரூ. 150-க்கு மேல் புத்தகம் வாங்கினாலே தபால் செலவு இலவசம் என்று சொல்லலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறோம். செய்தாலும் செய்வோம். இதனை ஆங்கிலப் புத்தாண்டு அறிமுகமாகச் செய்வதற்கும் ஒரு யோசனை உள்ளது.

6. தனியாக ஒற்றை புத்தகத்துக்கு என்று டிஸ்கவுண்ட் வருமா என்று சொல்லமுடியாது. ஆனால் சில மார்க்கெட்டிங் யோசனைகள் செய்துகொண்டிருக்கிறோம். திடீரென ஒரு குறிப்ப்ட்ட தினத்தன்று (12 மணி நேரம், 24 மணி நேரம்) எந்தப் புத்தகத்தை வாங்கினாலும் அதற்கு டிஸ்கவுண்ட் அல்லது ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம் என்றெல்லாம் செய்யலாமா என்று யோசனை உள்ளது. இதனைச் செயல்படுத்த எஞ்சினியரிங் வேலைகள் சிலவற்றைச் செய்யவேண்டும். செய்து முடித்ததும் சொல்கிறேன்.

7. ரிவார்ட் பாயிண்ட்ஸ் என்ற முறையை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளோம். அதுபற்றியும் விரைவில் தகவல் தெரிவிக்கிறேன்.

ஆயில்யன்:

நீங்கள் எந்த முகவரிக்குப் போகுமாறும் புத்தகங்களை NHM ஆன்லைனில் வாங்கலாம். புத்தகத்தை பரிசாகப் பெறுபவர் எந்தப் பணமும் கட்டவேண்டியதில்லை. நீங்கள் பணத்தைக் கட்டிவிட்டால் போதும்!

Thanks Seshadri for detailed explanation. Interesting to know about various future schemes. In online, If I buy various books of my own choice worth Rs. 1000-1500, I would be glad if I get some discount. Basically, discount for the bulk purchases (Books of their own choices).

அம்பானி, நாராயணமூர்த்தி என்று எழுதியே அம்பானி ஆகிவிட்டீர்களோ என்று நினைத்துக் கொண்டிருந்தேன்; ஆனால், இந்த (சென்ற?) வார குமுதத்தில் ஞானி தமிழ் புத்தகங்களின் விற்பனை பற்றி எழுதியிருந்ததை பார்த்தபின்தான் தமிழ் எழுத்தாளர்கள் அம்பானி ஆக நாளாகும் என்று தெரிந்தது.

இருந்தாலும், உங்களைப் போன்ற எழுத்தாளர்கள், எழுதி அம்பானி ஆகவிட்டாலும், கண்டிப்பாக அம்பானிகளை உருவாக்கிவிடுவீர்கள் என்பது என் அசைக்கமுடியாத நம்பிக்கை.

வழக்கம்போல நான் மு.அ. ஒலிபுத்தகத்தை கேட்க ஆவலாக இருக்கிறேன். (எப்போது வருகிறது?)

அடடா..பதிவை போட்டுடிங்களா..

நான் ரொம்ப லேட்டு போல 🙂

அம்பானியை வாங்குவேனோ இல்லையா(அட புத்தகத்தைதாங்க), பெப்ஸியை வாங்கிடுவேன்னு(அட திரும்ப புததகததைதாங்க) நினைக்கிறேன்..

என்ன ஒரே பிரச்சினை, வீடு renovationல இருக்கிறதால இப்போதைக்கு புதுசா புத்தகம் வாங்காதீங்கன்னு வீட்ல அன்பு(?) கட்டளை..

ஆனா பாடின வாயும், ஆடிய காலும் சும்மா இருக்குமா 😉 புத்தகத்தை வாங்கி வீட்ல எப்படியும் வாங்கிக் கட்டிக்க போறேன் 😦

அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me

ம்ம்ம்ம்…. மென்மேலும் முன்னேற இன்னுமும் உயரங்களைத் தொட வாழ்த்துக்கள்.

http://kgjawarlal.wordpress.com

முக்கனிகள் மா, பலா, வாழை போல உங்கள் மூன்று புத்தகங்களுமே படிக்கச் சுவைக்கும் என்று நம்புகிறேன். உங்கள் புத்தகங்களைப் படித்ததில்லை. எனினும், உங்கள் எழுத்துக்களை அதிகம் படித்திருக்கிறேன். குமுதத்தில் எழுதி வரும் வெற்றிக்கு ஒரு புத்தகம் கட்டுரைகளையும் தொடர்ந்து படித்து வருகிறேன். உங்கள் சீரான நடையில் மூன்று புத்தகங்களுமே சிறப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

வாழ்த்துக்கள்….. உங்க புது புக் இல்லாம ஒரு புத்தகக் கண்காட்சி நடந்திடுமா என்ன 🙂

ஆயில்யன், Vijayashankar, Priya Kathiravan, Badri, ravisuga, R Sathyamurthy, சுவாசிகா, Jawahar, ரவிபிரகாஷ், சேவியர்,

நன்றி 🙂

//தமிழ் எழுத்தாளர்கள் அம்பானி ஆக நாளாகும் என்று தெரிந்தது//

யாரும் எழுதியெல்லாம் அம்பானியாகமுடியாது – நாளானாலும் சரி 🙂

//மு.அ. ஒலிபுத்தகத்தை கேட்க ஆவலாக இருக்கிறேன். (எப்போது வருகிறது?)//

விரைவில் வரும், எதற்கும் http://www.nhm.in-ல் ஒரு கண் வைத்திருங்கள்!

//வீடு renovationல இருக்கிறதால இப்போதைக்கு புதுசா புத்தகம் வாங்காதீங்கன்னு வீட்ல அன்பு(?) கட்டளை..//

கவலைப்படாதீங்க, புது புக் வாங்கி முதல் பக்கத்தை லேசாக் கிழிச்சுடுங்க, பழைய புக்குன்னு சொல்லி ஏமாத்திடலாம் 😉

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 531 other followers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 597,363 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்

Tamilish

For தமிழ் Peopleதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

December 2009
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
%d bloggers like this: