தாமதம்
Posted January 11, 2010
on:- In: Bangalore | Characters | Customer Care | Customer Service | Customers | Expectation | Feedback | Importance | India | IT | Kids | Learning | Life | People | Perfection | Students | Teaching | Time | Time Management | Uncategorized | Value
- 16 Comments
சென்ற மாதத்தில் ஒருநாள், எங்களுடைய வெளிநாட்டு வாடிக்கையாளர் ஒருவர் இந்தியா வந்திருந்தார். பிஸி ஷெட்யூலுக்கு நடுவே அரை மணி நேரம் ஒதுக்கி எங்கள் அலுவலகத்திற்கு விஜயம் செய்தார்.
வழக்கம்போல், வாசல் கதவருகே அவருக்கு ’வருக வருக’ அறிவிப்பு வைத்தோம், பூங்கொத்து கொடுத்து வரவேற்றோம், உயர் ரக பிஸ்கோத்துகளும் குளிர்பானமும் பரிமாறி உபசரித்தோம், எங்களுடைய கார்ப்பரேட் பிரசண்டேஷனைக் காண்பித்துப் போரடித்தோம். கடைசியாக, அவர் கையில் ஒரு feedback form கொடுத்து, முந்தைய சில வருடங்களில் நாங்கள் அவருடைய நிறுவனத்துக்குச் செய்து கொடுத்த ப்ராஜெக்ட்களைப்பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்று கருத்துக் கேட்டோம்.
அந்தப் படிவத்தில் Professionalism, Response time, Communication Skills, Business Understanding என்று பல தலைப்புகளில் அவர் எங்களுடைய ‘சேவை’க்கு ஒன்று முதல் ஏழுவரை மார்க் போடலாம். ஒன்று என்றால் மிக மோசம், ஏழு என்றால் மிகப் பிரமாதம்.
வந்தவர் அந்த feedback formஐ விறுவிறுவென்று நிரப்பிவிட்டார். கடைசியாக ‘Any other comments’ என்கிற பகுதிக்கு வந்தவுடன்தான், கொஞ்சம் தயங்கினார். பிறகு அதிவேகமாக அதையும் எழுதி முடித்தார்.
அவர் கிளம்பிச் சென்றபிறகு, எங்களுக்கு எவ்வளவு மதிப்பெண் கொடுத்திருக்கிறார் என்று ஆவலுடன் கணக்குப் பார்த்தோம். சராசரியாக ஏழுக்கு 6.7 – கிட்டத்தட்ட 96% மார்க், ஆஹா!
ஆனால், இறுதியாக ‘Comments’ பகுதியில் அவர் எழுதியிருந்த விஷயத்தைப் பார்த்தவுடன், எங்களுடைய உற்சாக பலூனில் காற்று இறங்கிவிட்டது:
உங்கள் குழுவில் எல்லோரும், சொன்ன விஷயத்தைக் கச்சிதமாகப் புரிந்துகொண்டு வேகமாகச் செய்துமுடித்துவிடுகிறீர்கள். அதிகக் குறைகளோ, திருத்தங்களோ இல்லை, உங்களுடன் இணைந்து வேலை செய்வது ஓர் இனிய அனுபவம்.
ஆனால், ஒரே ஒரு பிரச்னை, ஆறு மணிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு என்றால், உங்களுடைய ஆள்கள் நிதானமாக ஆறே காலுக்கு மேல்தான் அழைக்கிறீர்கள். இந்தத் தாமதத்துக்கு அவர்கள் வருந்துவதோ, மன்னிப்புக் கேட்பதோ கிடையாது. இது தவறு என்றுகூட அவர்கள் உணர்ந்திருப்பதாகத் தோன்றவில்லை. ஏன்?
Of Course, இது ஒரு சின்ன விஷயம்தான். ஆனால் நீங்கள் இதைச் சரி செய்துகொண்டால் அநாவசியமாக நம் எல்லோருடைய நேரமும் வீணாகாமல் இருக்கும். இந்த விமர்சனத்தை நல்லவிதமாக எடுத்துக்கொள்வீர்கள் என நம்புகிறேன். நன்றி.
இதைப் படித்துமுடித்துவிட்டு, எங்கள் குழுவில் எல்லோரும் நமுட்டுப் புன்னகை செய்தோம். காரணம், அவர் சொல்வது உண்மைதான் என்பதும், அதற்கு நாங்கள் அனைவருமே காரணம் என்பதும் எங்களுக்கு நன்றாகப் புரிந்திருந்தது.
அந்தக் கூட்டத்தின் முடிவில், நாங்கள் சில தீர்மானங்களை எடுத்தோம், இனிமேல் எக்காரணம் கொண்டும் வாடிக்கையாளர்களுடனான தொலைபேசி / நேரடிக் கூட்டங்களுக்குத் தாமதமாகச் செல்லக்கூடாது, குறைந்தபட்சம் பத்து நிமிடம் முன்பாகவே ஆஜராகிவிடவேண்டும், வருங்காலத்தில் நம்மீது இப்படி ஒரு குறை சொல்லப்படுவதை அனுமதிக்கக்கூடாது.
தீர்மானமெல்லாம் சரி. ஆனால் இது எதார்த்தத்தில் சாத்தியமா? ‘இந்தியாவின் தேசிய மதம் தாமதம்’ என்று ஒரு ’ஜோக்’கவிதையில் படித்தேன், IST என்பதை Indian Standard Time அல்ல, Indian Stretchable Time என்று மாற்றிச் சொல்லுகிற அளவுக்கு, தாமதம் என்பது நமது பிறவி குணம், அத்தனை சுலபத்தில் அதை மாற்றிக்கொள்ளமுடியுமா? அல்லது, இந்த வெளிநாட்டுக்காரர்களுக்குதான் இது புரியுமா?
அது நிற்க. நேற்று காலை நடந்த இன்னொரு விஷயத்தைச் சொல்கிறேன்.
கடந்த சில வாரங்களாக, சனி, ஞாயிறுகளில் நங்கை ஒரு நடன வகுப்புக்குச் செல்கிறாள். இதற்காக, அப்போலோ மருத்துவமனைக்குப் பின்னால் உள்ள தனியார் பயிற்சிப் பள்ளி ஒன்றுக்கு அவளை அழைத்துச் செல்வதும், திரும்பக் கூட்டிவருவதும் என்னுடைய பொறுப்பு.
நேற்று காலை, ஒன்பது மணிக்கு வகுப்பு. ஏழரைக்கு எழுந்து தயாரானால்தான் சரியான நேரத்துக்குப் போய்ச் சேரமுடியும்.
சரியாக ஏழு முப்பத்தைந்துக்கு நங்கையை உசுப்பத் தொடங்கினேன், ‘சீக்கிரம் எழுந்திரும்மா, டான்ஸ் க்ளாஸுக்கு லேட்டாச்சு.’
அவள் செல்லமாகச் சிணுங்கினாள், ‘போப்பா, எனக்குத் தூக்கம் வருது.’
‘நீ இப்ப எழுந்திருக்கலைன்னா, உனக்குப் பதிலா நான் க்ளாஸுக்குப் போய் டான்ஸ் ஆடுவேன்.’
நான் நடனம் ஆடுகிற காட்சியைக் கற்பனை செய்துகொண்டாளோ என்னவோ, கெட்ட சொப்பனம் கண்டவள்போல் விசுக்கென்று எழுந்து உட்கார்ந்தாள் நங்கை.
அடுத்த அரை மணி நேரம் வழக்கம்போல் fast forwardல் ஓடியது. எட்டே காலுக்குக் குழந்தை சாப்பிட உட்கார்ந்துவிட்டாள்.
அப்போதும், எனக்குக் கொஞ்சம் சந்தேகம்தான், ‘15 நிமிஷத்தில ரெண்டு இட்லி சாப்பிட்றுவியா?’
நான் இப்படிச் சொன்னதும் என் மனைவிக்குக் கோபம் வந்துவிட்டது, ‘பாவம், வாரத்தில ஒரு நாள்தான் குழந்தைக்கு ரெஸ்டு, அன்னிக்கும் இப்படி விரட்டினா என்ன அர்த்தம்?’ என்றார்.
‘அதுக்காக? க்ளாஸ்ன்னா கரெக்ட் டைம்க்குப் போகவேண்டாமா?’
’பத்து நிமிஷம் லேட்டாப் போனா ஒண்ணும் ஆகாது!’
’தயவுசெஞ்சு குழந்தைமுன்னாடி அப்படிச் சொல்லாதே’ என்றேன் நான்,’எதையும் சரியான நேரத்தில செய்யணும்ன்னு நாமதான் அவளுக்குச் சொல்லித்தரணும், லேட்டானாத் தப்பில்லைன்னு நாமே கத்துக்கொடுத்துட்டா அப்புறம் அவளுக்கு எப்பவும் அதே பழக்கம்தான் வரும்.’
வழக்கமாகச் சாப்பாட்டுக்குத் தொட்டுக்கொள்வதற்குப் புதுப்புதுக் கதைகளை எதிர்பார்க்கிற நங்கை, இன்றைக்கு எங்களுடைய விவாதத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டே வேகமாகச் சாப்பிட்டுவிட்டாள், 8:29க்குப் படியிறங்கி ஆட்டோ பிடித்தோம், 8:55க்கு வகுப்புக்குள் நுழைந்தோம்.
அங்கே யாரும் வந்திருக்கவில்லை. ஓரமாக இரண்டு பாய்கள்மட்டும் விரித்துவைத்திருந்தார்கள், உட்கார்ந்தோம்.
ஒன்பது மணிக்குள் அந்தக் கட்டடத்தின்முன் வரிசையாகப் பல ஸ்கூட்டர்கள், பைக்குகள், கார்கள், ஆட்டோக்கள். நங்கை வயதிலும், அவளைவிடப் பெரியவர்களாகவும் ஏழெட்டுப் பெண்கள், பையன்கள் வந்து இறங்கினார்கள். பாயில் சம்மணம் போட்டு உட்கார்ந்தார்கள். எல்லோரும் நடன ஆசிரியருக்காகக் காத்திருந்தோம்.
மணி ஒன்பதே கால் ஆச்சு, ஒன்பதரை ஆச்சு, இதற்குள் கிட்டத்தட்ட பதினைந்து மாணவர்களுக்குமேல் வந்து காத்திருக்கிறார்கள், ஆனால் அந்த ஆசிரியரைக் காணோம்.
நான் மிகவும் எரிச்சலாக உணர்ந்தேன். முந்தைய இரண்டு வகுப்புகளிலும் இதே கதைதான் என்பது ஞாபகம் வந்தது. முன்பு எங்கள் அலுவலகத்துக்கு விஜயம் செய்த அந்தக் கஸ்டமரின் கஷ்டத்தை இப்போது தெளிவாகப் புரிந்துகொள்ளமுடிந்தது.
நங்கையால் எப்போதும் ரொம்ப நேரம் ஒரே இடத்தில் சும்மா உட்கார்ந்திருக்கமுடியாது, ’மிஸ் எப்பப்பா வருவாங்க?’ என்று கேட்டபடி நெளிந்தாள், கையைக் காலை நீட்டினாள், எழுந்து நின்று குதித்தாள்.
நான் மற்ற மாணவர்களை நோட்டமிட்டேன். எல்லோரும் இந்தத் தாமதத்தை ஏற்கெனவே எதிர்பார்த்திருந்ததுபோல் அமைதியாக விட்டத்தைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். ஒரு சமர்த்துப் பெண் நோட்டைத் திறந்து ஹோம்வொர்க் எழுதிக்கொண்டிருந்தது.
ஒன்பதே முக்காலுக்குமேல், அந்த நடன ஆசிரியை ஆடி அசைந்து வந்து சேர்ந்தார். இவ்வளவு நேரம் காத்திருந்த எங்களிடம் பேருக்கு ஒரு ‘ஸாரி’கூடக் கேட்கவில்லை. எல்லோருக்கும் ‘குட்மார்னிங்’ சொல்லிவிட்டு, எதுவுமே நடக்காததுபோல் வகுப்பை ஆரம்பித்துவிட்டார்.
நான் அவரிடம் விடை பெற்றுக்கொண்டு வெளியே வந்தேன். இன்னும் இரண்டு மணி நேரம் கழித்துத் திரும்ப வந்து நங்கையை அழைத்துச் செல்லவேண்டும்.
ஆட்டோவில் வீடு திரும்பும்போது, அவருடைய மாணவர்களை நினைத்து எனக்குக் கவலையாகவே இருந்தது. அவர் நடனம் ஒழுங்காகச் சொல்லித்தருகிறாரா, தெரியவில்லை. ஆனால் இப்படி வகுப்புகள் அவர் நினைத்த நேரத்துக்குதான் ஆரம்பிக்கும் என்கிற மனப்போக்கு, ’எதிலும் தாமதம் என்பது தப்பில்லை, அதுதான் எதார்த்தம்’ என்கிற புரிதல் குழந்தைகளிடம் வளர்வது நல்லதில்லையே. நாளைக்கே ‘என்னைமட்டும் சீக்கிரமா எழுப்பிக் கிளப்பறீங்க, அங்கே அந்த மிஸ் லேட்டாதானே வர்றாங்க?’ என்று நங்கை கேட்டால் நாங்கள் என்ன பதில் சொல்லமுடியும்?
இன்னும் இரண்டு வகுப்புகள் பார்க்கப்போகிறேன், அந்த நடனமணி தொடர்ந்து நேரத்தை மதிக்காதவராகவே நடந்துகொண்டால், விஷயத்தைச் சொல்லி விலகிவிட உத்தேசம், இந்த வயதில் குழந்தை நடனம் கற்றுக்கொள்வதைவிட, இதுமாதிரி விஷயங்களைப் பழகிக்கொள்ளாமல் இருப்பது நல்லது.
***
என். சொக்கன் …
11 01 2010
16 Responses to "தாமதம்"

//அந்த நடனமணி தொடர்ந்து நேரத்தை மதிக்காதவராகவே நடந்துகொண்டால், விஷயத்தைச் சொல்லி விலகிவிட உத்தேசம்,//
கண்டிப்பாக விஷயத்தினை சுட்டிக்காட்டிவிட்டு விலகுங்கள் எதிர்காலத்திலாவது திருத்திக்கொள்ள ஏதுவாக…! 🙂
//‘நீ இப்ப எழுந்திருக்கலைன்னா, உனக்குப் பதிலா நான் க்ளாஸுக்குப் போய் டான்ஸ் ஆடுவேன்.’///
என்ன்னாஆஆ டெரரிசம்! 🙂


//
ஆனால், ஒரே ஒரு பிரச்னை, ஆறு மணிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு என்றால், உங்களுடைய ஆள்கள் நிதானமாக ஆறே காலுக்கு மேல்தான் அழைக்கிறீர்கள்.
//
ஐயா, இந்த மாதிரி கமெண்ட்டை கண்டிப்பாக ஒவ்வொரு இந்தியனும் அவனுடைய வெளிநாட்டு வாடிக்கையாளரிடம் வாங்கி இருப்பான். அதில் நானும் ஒருவன் 🙂 சில முறை இந்த கமெண்ட்டை வாங்கிய பிறகு என்னை நான் திருத்தி கொள்ள முயல்கிறேன்.. ஆனால் அந்த திருத்தம் மனதார கொண்டு வர மிகவும் சிரமப்படுகிறேன்.. சிறு வயதிலிருந்து அந்த பழக்கம் வந்து இருக்க வேண்டும்… உங்கள் நங்கைக்கு அந்த பழக்கம் வர எனது வாழ்த்துக்கள்


மிக்க நன்றி!!!
உங்களின் இடுகையிலிருந்து என்னை கவர்ந்த நல்ல பல விஷயங்களை என் மகளுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறேன்..உ.தா சாக்லெட் கவர்..
இதோ இப்போது, நேரம் தவறாமை என்ற இன்னொரு விஷயமும் என் checklistல் சேர்த்தாச்சு 🙂
அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me


ஸப்பா.. இப்படி அடிக்கடி புல்லரிக்க வைச்ச என்ன அர்த்தம்? 😉
கொடுத்து வைத்தவள் நங்கை.. 🙂


//ஒரு சமர்த்துப் பெண் நோட்டைத் திறந்து ஹோம்வொர்க் எழுதிக்கொண்டிருந்தது//
பாராட்டுகிறேன் அந்த குழந்தையை, நேரத்தை வீணாக்காமலிருப்பதற்காக.
இந்தியர்களுக்கு தேவையான ஒரு பதிவு இது. ஒரு சமயம் எங்கள் அலுவலக டிரேய்னர், தாமதமா வருபவரிடம் காசு வசுலிக்க ஆரம்பிச்சுட்டார். மறுநாள் எல்லோரும் 2 நிமிடம் முன்னாடியே ஆஜர்.


>> இன்னும் இரண்டு வகுப்புகள் பார்க்கப்போகிறேன், அந்த நடனமணி தொடர்ந்து நேரத்தை மதிக்காதவராகவே நடந்துகொண்டால், விஷயத்தைச் சொல்லி விலகிவிட உத்தேசம், இந்த வயதில் குழந்தை நடனம் கற்றுக்கொள்வதைவிட, இதுமாதிரி விஷயங்களைப் பழகிக்கொள்ளாமல் இருப்பது நல்லது.
– இந்த பதிவிலேயே எனக்கு மிகவும் பிடித்த வாசகங்கள் இவை.
என் மனைவியின் ஓட்டுனர் பயிற்சியாளர் (driving instructor – சரி தானே?) ஒரு நாள் தவறாமல் 15 நிமிடங்கள் தாமதமாகவே வந்து கொண்டிருந்தார். ஒரு முறைக்கு பல முறை இதை சுட்டிக் காட்டிய பின்னரும் திருந்த வில்லை. இதில் அவர் தாமதமாக வருவதில் பெருமை வேறு. ”பொறுத்தது போதும் பொங்கியெழு மனோகரா” என்று பயிற்சியாளரை மாற்றி விட்டார் என் சகதர்மிணி.


நேரம் தவறாமை, சில எதிர்பார்க்கமுடியாத, கவனிக்காத இந்தியர்களிடம் உண்டு. கவனித்ததுண்டா? நம் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்லும் ஆட்டோக்காரர்களை பாருங்கள். அவர்கள், எனக்கு தெரிந்து ஒரு நாளும் லேட்டாக வந்ததில்லை (வண்டி பிரச்சினை தந்தாலும், இப்போதெல்லாம் அலைபேசி மூலம் அழைத்து சொல்லிவிடுகிறார்கள்).
இந்த ஆட்டோக்காரர்களிடமும் குழந்தையை லேட்டாக கொண்டு சேர்த்து அவர்கள் மற்ற குழந்தைகளின் வீடுகளுக்கு லேட்டாக போகவைப்பதை போல செய்வது நாம்தான் என்பது கவனிக்கவேண்டியது. அப்போது கூட எப்படியோ வண்டியை ட்ராபிக் நெரிசலிலும் புகுந்து வெளிவந்து பிள்ளைகளை நேரத்துக்கு பள்ளியில் சேர்த்துவிடுகிறார்கள். இது மிகவும் ஆச்சரியகரமான ஒன்று. (ரஜினியின் நான் ஆட்டோக்காரன் பாட்டில் இதை சொல்லாமல் விட்டுவிட்டார் வைரமுத்து).
பள்ளி நாட்களில் நான் தாமதமாக போனதே கிடையாது. ஆனால் சில மாணவர்கள் தாமதமாக வந்து ஸ்கேலால் கையில் அடி வாங்குவதை தினமும் கண்டிருக்கிறேன். இத்தனைக்கும் அப்போதெல்லாம் நடராஜா சர்வீஸ்தான். அதேபோல், கல்லூரி நாட்களிலும். அதற்கு காரணம் ராணி மேரிக் கல்லூரியில் இருந்து அதே பேருந்தில் வந்து ஏறிய சில மாணவிகள் என்ற சமாசாரத்தை என் சம்சாரத்திடம் போட்டு கொடுத்துவிடாதீர்கள். (நான் படித்தது மாலைநேரக் கல்லூரி).
என் அம்மா, இரண்டு பஸ் பிடித்து திருவல்லிக்கேணியில் இருந்து புழல் வரை சென்று பஞ்சாயத்து துவக்கப்பள்ளியில் வேலை பார்த்த இருபது வருடங்களில் மிக சில நாட்களே தாமதமாக சென்றிருக்கிறார் என்று அவர் ஓய்வு பிரிவுபசார பேச்சில் கேள்விப்பட்டிருக்கிறேன். அது உண்மையாகத்தான் இருக்கும். ஏன் என்றால், என் அம்மா “அம்மா” இல்லை.
🙂


எங்கிருந்து அல்லது எப்படி இந்த அலட்சியத்தை கற்றுக் கொண்டோம் என்று தெரியவில்லை? எடுத்துச் சொன்னாலும், பெரும்பாலும் இதை ஒரு பெரிய விசயமாகவே எடுத்து கொள்வதில்லை என்பதுதான் வேதனை!
தாமதம் – நமது தேசிய நோய்….
//‘நீ இப்ப எழுந்திருக்கலைன்னா, உனக்குப் பதிலா நான் க்ளாஸுக்குப் போய் டான்ஸ் ஆடுவேன்.’///
🙂


சொன்னால் சொன்ன நேரத்துக்கு போய் ஆஜராகும் கெட்ட பழக்கம் எனக்கும் இருக்கிறது. ஆனால் இதனாலேயே அதிக நேரம் காத்திருந்து தொலைக்க வேண்டியிருக்கிறது (மற்றவர் வருவதற்காக). இது கிட்டத்தட்ட ஆயிரம் தடவையாவது நடந்திருக்கும். அசாத்தியப் பொறுமையைக் கற்றுக் கொண்டதே இதனால்தான்.
இரண்டு மணி நேரம் லேட்டாக வந்துவிட்டு “ஸாரிங்க.. கொஞ்சம் லேட்டாச்சு. உங்களை ரொம்ப நேரமா வெயிட் பண்ண வெச்சுட்டேன்” என்று கூலாக சொல்லிவிட்டு (வருத்தப் படாமல்) அடுத்த காரியத்தை பார்க்கப் போகும் ஆசாமிகளும் இருக்கிறார்கள்.
என்ன பண்ணலாம்?


வெளிநாடு என்று சொல்லியிருக்கிறீர்கள். அமெரிக்கர்கள் பொதுவில் நேரத்தை கடைபிடிப்பவர்கள்தான். ஒரு கான்ப்ரன்ஸ் கால் என்றால் அதிகப்ட்சம் 5 நிமிடங்கள் பொறுப்பார்கள், இல்லையென்றால் அவர்கள் ஜோலியை பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள். அதைப்போலவே மற்றவர்கள் நேரத்திற்கு மதிப்பு கொடுத்து விரயத்தை தவிர்ப்பார்கள்.
நிற்க! இது பொதுவாக 50% கம்பெனிகளில்தான்.
டாக்டர் அப்பாயிண்ட்மெண்ட் என்று 10 மணிக்கு வரச்சொல்வார்கள், குறைந்தபட்சம் 30-45 நிமிட காத்திருப்புக்கு பின் ஒத்தை சாரியுடன் 3 நிமிசம் “செக்-அப்” செய்துவிட்டு போய்விடுவார்கள். ஊசி, டெம்பரேச்சர், வெயிட் எல்லாம் நர்ஸ்தான்.
DMV என்று ஜந்துகள் மட்டுமே வேலை பார்க்கும் ஒரு துறை! அங்கேயும் அப்படித்தான். ஒட்டு மொத்த வாழ்க்கை வரலாறையே எடுத்துப்போனாலும் போன மாச ஃபோன் பில் கொண்டுவான்னு திரும்ப அனுப்பும் புண்ணியவான்கள்!
இமிக்ரேஷன்னு 12 மணிக்கு பிங்கர் பிரிண்ட் அப்பாயிண்மெண்ட் கொடுத்துட்டு 1 மணிக்கு வந்து வெறுப்பும், புகை மணத்துடனும் கடமையைச்செய்யும் எக்ஸ்பெர்ட்!
எல்லா ஊர்லையும் த்ராபைகள் இருக்காங்க :)))


டைனோ –
டாக்டர் அப்பாயிண்ட்மெண்ட் கூட அன்றைக்கு வரும் ‘நோயாளிகளைப்’ பொறுத்துனு மனசை தேத்திக்கலாம். (ஆனா எப்பவுமே குறைந்தபட்சம் 30 நிமிட காத்திருப்பு உண்டு..!)
ஆனா DMV, இமிக்ரேஷன் இருக்கே….வேண்டாம் BP ஏறுது….!!


நம்மாட்களுக்கு அதிலும் வடநாட்டவருக்கு லேட்டாக வருகிறோம் என்ற கில்டி ஃபீலீங்கே இருக்காது. லேட்டாக வருவது இவர்களின் பிறப்புரிமை என்பது போல் நடந்து கொள்வார்கள். லேட்டா வந்தே நம்நாடு எவ்வள்வு முன்னேறிருக்கு என் பீற்றிக் கொள்ளவும் செய்வார்கள்

1 | TBCD
January 11, 2010 at 10:54 am
தாமதமாகத் தானே வருகின்றார்கள் என்று ஒரு நாள் தாமதமாக போனால், அன்று அவர்கள் விரைவாக வந்து, ஏன் தாமதமாக வருகின்றீர்கள் என்று கேட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை 🙂