மனம் போன போக்கில்

பேஜர் கதை (’பேஜார்’ அல்ல)

Posted on: February 3, 2010

முன்குறிப்பு:

’இதயம் பேத்துகிறது’ என்கிற அட்டகாசமான தலைப்பில் பிரமாதமாக எழுதிவரும் நண்பர் கே. ஜி. ஜவர்லாலை உங்களுக்கு அறிமுகம் உண்டோ? அவ்வப்போது ஆங்கில ஜோக்குகளைத் தமிழில் மொழிபெயர்த்து மொக்கை போட்டாலும், மேலாண்மை, தரக் கட்டுப்பாடு தொடர்பான பல சிக்கலான விஷயங்களைத் தமிழில் எளிமையாக நகைச்சுவை தூவி அறிமுகப்படுத்தும் பதிவுகளுக்காகவே அவரைத் தொடர்ந்து வாசிக்கிறேன். உதாரணத்துக்கு ஒரு சாம்பிள் – என் கணிப்பில் ஜவர்லாலில் Best பதிவு இதுதான் – http://kgjawarlal.wordpress.com/2010/01/12/உப்புமாவும்-சிக்குமாவு/

ஜவர்லாலைப்பற்றி இப்போது இங்கே சொல்லக் காரணம் உண்டு. சென்ற வருடம் அவர் எனக்கு ஓர் அன்புக் கட்டளை வைத்திருந்தார், என்னுடைய முதல் சிறுகதை எழுதிய அனுபவத்தைப்பற்றி ஒரு பதிவு போடச்சொல்லி. பல காரணங்களால் அதை உடனடியாகச் செய்யமுடியவில்லை. Better late than never. இப்போது எழுதிக் கடனைத் தீர்த்துவிடுகிறேன் 🙂

இனி, கதை. அல்லது, கதையின் கதை.

ஒரு சனிக்கிழமை காலை. அன்றைக்கு எங்கே ஊர் சுற்றலாம் என்று யோசித்தபடி நான்கைந்து விடுதி நண்பர்கள் படியில் இறங்கிவருகிறோம். கீழே சைக்கிள்களின்மேல் மூன்று பேர் எக்குத்தப்பாகக் காலை நீட்டி உட்கார்ந்திருக்கிறார்கள். எங்களைப் பார்த்ததும் கையசைத்து, ‘என்னய்யா, பிஸியா?’ என்கிறார்கள்.

‘அதெல்லாம் ஒண்ணுமில்ல, சும்மா டீ சாப்பிடலாம்ன்னு வெளிய புறப்டோம்.’

‘டீ என்னாத்துக்கு? சூப்பர் விருந்துச் சாப்பாட்டை ஒரு கட்டு கட்டலாம், எங்களோட கேசிடி-க்கு வர்றீங்களா?’

’கேசிடி’ என்பது குமரகுரு காலேஜ் ஆஃப் டெக்னாலஜி. கோயம்பத்தூரின் இன்னொரு மூலையில் இருந்த அந்தக் கல்லூரிக்கும் எங்கள் பேட்டைக்கும் துளி சம்பந்தம்கூடக் கிடையாது.

ஆகவே, நாங்கள் தயங்கினோம். அவ்வளவு தூரம் போய் விருந்துச் சாப்பாடு சாப்பிடும் அளவுக்கு நாங்கள் காய்ந்துபோயிருக்கவில்லை.

‘அதில்லம்மா, அங்க இன்னிக்கு ஒரு கல்ச்சுரல் ப்ரொக்ராம், நாங்க டான்ஸ் ஆடப்போறோம். நம்ம காலேஜ் சார்பா கை தட்டறதுக்கு நாலு பேர் வேணாமா?’

ஆஹா, கல்ச்சுரல். எங்கள் கண்களில் ஒளி ஏறியது.

காரணம், இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பல கல்லூரிகளைச் சேர்ந்த பெண்களை ஒரே இடத்தில் பார்க்கலாம். கூட்டம் செமையாக அம்மும் என்பதால், யார் என்ன சொல்வார்களோ என்பதைப்பற்றிக் கவலைப்படாமல் ஜாலியாக சைட் அடிக்கலாம்.

ஆகவே, நாங்கள் அந்த மூவர் அணியோடு சேர்ந்துகொண்டோம். இரண்டு டவுன் பஸ்கள் மாறி, அதன்பிறகு மண் சாலையொன்றில் நீண்ட நெடுந்தூரம் நடந்து கேசிடி சென்று சேர்ந்தோம்.

அங்கே பிரம்மாண்டமான பந்தல் ஒன்றை எழுப்பி நிறுத்தியிருந்தார்கள். வாசலில் வண்ணமயமான அலங்காரங்களுக்குக் கீழே டேபிள், சேர் போட்டு ஏழெட்டு பேர் உட்கார்ந்திருந்தார்கள். மேஜைமேல் கல்யாண வரவேற்பைப்போல கல்கண்டு, பல நிறங்களில் ஒற்றை ரோஜாக்கள். பன்னீர் தெளிப்புமட்டும்தான் பாக்கி.

‘வாங்க வாங்க’, முதல் மேஜையில் இருந்தவர் எங்களை உற்சாகமாக அழைத்தார், ‘நீங்க எந்தப் போட்டியில கலந்துக்கறீங்க?’

நாங்கள் சங்கடமாக நெளிந்தோம், ’இல்லங்க, நாங்க சும்மா வேடிக்கை பார்க்கதான் வந்தோம்’ என்று வெளிப்படையாகச் சொல்லவா முடியும்?

அந்த இளைஞருக்கு எங்கள் வயதுதான் இருக்கும். அளவற்ற உற்சாகத்துடன் எங்கள்முன்னால் பல வெள்ளைத் தாள்களை ஆட்டிக் காண்பித்தார், ‘இதோ பாருங்க, பாட்டுப் போட்டி, டான்ஸ் போட்டி, கதை எழுதறது, கவிதை எழுதறது, பட்டிமன்றம்ன்னு ஏகப்பட்ட போட்டிகள் இருக்கு, நீங்க எத்தனை போட்டியில வேணும்ன்னாலும் கலந்துக்கலாம், ஒவ்வொண்ணுக்கும் தனித்தனியா மும்மூணு ப்ரைஸ் உண்டு’ என்றார்.

அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே என்னுடன் வந்தவர்கள் நைஸாக நழுவிச் சென்றுவிட்டார்கள். நான்மட்டும் அவரிடம் தனியே மாட்டிக்கொண்டேன்.

வேறு வழியில்லாமல் அவர் கொடுத்த தாள்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். சிறுகதைப் போட்டிக்கு யாரும் பெயர் கொடுத்திருக்கவில்லை என்பது தெரிந்தது.

ஒவ்வொரு போட்டிக்கும் மொத்தம் மூன்று பரிசுகள். ஆனால் இங்கே ஒருத்தர் பெயர்கூட இல்லை. ஆகவே, நான் உள்ளே நுழைந்தால் பரிசு எனக்குதான். இல்லையா?

மகா அபத்தமான இந்த மொட்டை லாஜிக், அப்போது எனக்குப் பெரிய புத்திசாலித்தனமாகத் தெரிந்தது. சட்டென்று சிறுகதைப் போட்டிக்குக் கீழே என் பெயரை எழுதிவிட்டேன்.

அதன்பிறகு ‘கலர்’ வேடிக்கை பார்ப்பதில் நெடுநேரம் சென்றது. மேடையில் யார் பேசினார்கள், என்ன பேசினார்கள் எதுவும் கவனத்தில் இல்லை.

பன்னிரண்டரை மணிக்கு, சிறுகதைப் போட்டி அறிவிக்கப்பட்டது. நேராகப் போய் முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகள் அனைத்தையும் வாரி வந்துவிடலாம் என்று உற்சாகமாக ஓடினேன்.

ஆனால், அங்கே ஏற்கெனவே இருபது பேருக்குமேல் காத்திருந்தார்கள். எனக்குத் தூக்கிவாரிப்போட்டது.

அந்த ஆரம்ப அதிர்ச்சிக்குப்பிறகுதான் மண்டைக்குள் லேசாக ட்யூப்லைட் ஒளிர்ந்தது, ‘அட மக்குப் பயலே, உனக்கப்புறம் இதே போட்டிக்கு வேறு சில ஜந்துக்கள் பேர் கொடுக்கக்கூடும்ன்னு உனக்குத் தோணவே இல்லையா?’

ம்ஹூம், தோணலை. அங்கிருந்த எல்லோரையும் என் பரிசுகளைப் பிடுங்கிச் செல்ல வந்த மாபாதகர்களாகப் பார்த்து வெறுப்பை உமிழ்ந்தேன்.

அதே நேரம், மஞ்சள் சேலை உடுத்திய ஓர் இளம் பெண் அந்த அறைக்குள் நுழைந்தார். எங்களையெல்லாம் அவரவர் இருக்கையில் அமரும்படி கட்டளையிட்டார். பணிந்தோம்.

அந்தப் பெண் இந்தக் கல்லூரியில் மாணவியா அல்லது ஆசிரியையா என்று நான் யோசித்துக்கொண்டிருக்கையில் அவர் ஆளுக்கொரு காக்கிக் காகித உறையை வழங்கினார், ‘முதல்ல இந்தக் கவர்மேல உங்க பேர், காலேஜ் பேரை எழுதுங்க’ என்றார்.

நாங்கள் மும்முரமாக எழுதத் தொடங்க, அவர் போட்டி விதிகளை விவரித்தார், ‘இந்தக் கவருக்குள்ள ஒரு படமும் நாலு வெள்ளைத் தாள்களும் இருக்கு. அந்தப் படத்துக்கு ஏத்தமாதிரி நீங்க ஒரு சிறுகதை எழுதணும். அப்புறம் உங்க கதையையும் படத்தையும் அதே கவருக்குள்ள போட்டு என்கிட்டே கொடுத்துடணும்.’

‘மேடம், எக்ஸ்ட்ரா ஷீட் கொடுப்பீங்களா?’ எங்கிருந்தோ கேட்ட குரலை அவர் தீவிரமாக முறைத்தார், ‘நாலு பக்கத்துக்குள்ள எழுதணும். அதான் போட்டி. உங்களுக்கு 30 நிமிஷம் டைம்’ என்றபடி கடிகாரத்தைப் பார்த்தார், ‘ரெடி, ஸ்டார்ட்.’

நான் பரபரப்பாக அந்த உறையைப் பிரித்தேன். உள்ளே ஏதோ ஓர் ஆங்கில இதழில் இருந்து வெட்டப்பட்ட புகைப்படம் ஒன்று கைகளில் வழவழத்தது.

அந்தப் படத்தில் ஒரு பிரம்மாண்டமான வீடு. மத்தியில் சொகுசு சோஃபா. அதன் இரு மூலைகளில் ஓர் ஆணும் பெண்ணும் ஆளுக்கொரு திசையைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்களுடைய முகத்தில் கோபமா, சோகமா என்று தெரியவில்லை.

அப்போது நான் ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுஜாதா, பாலகுமாரன் என்று வெகுஜன ரசனைக் கலவையாக வாசித்துக்கொண்டிருந்த நேரம். கதையெல்லாம் எழுதிப் பார்த்தது கிடையாது. ஆனால் இந்த எழுத்தாளர்களுடைய பாணியைக் கண்டபடி மிக்ஸ் செய்து புரட்டினால் ஏதாவது ஒரு கதை வந்துவிடும் என்று உறுதியாகத் தோன்றியது.

உண்மையில், நான் நினைத்த அளவுக்கு அது கஷ்டமாக இல்லை. அந்த ஆண், பெண் முகத்தில் தெரிவது சோகம்தான் என்று நானாக ஊகித்துக்கொண்டபிறகு, அதற்கு ஒரு காரணத்தைக் கற்பனை செய்து கதையை விவரிக்கமுடிந்தது. கடைசியில் பிழியப் பிழிய அழவைக்கும்படி ஒரு கண்ணீர் முடிவைத் தூவி முற்றும் போட்டால் கதை ரெடி.

பயப்படாதீர்கள், அந்த டெம்ப்ளேட் கதை இப்போது என் கையில் இல்லை. அதை இங்கே பிரசுரித்து உங்களைக் கஷ்டப்படுத்தமாட்டேன்.

நான் இப்படித் தீவிரமாகக் கண்ணீர்க் காவியம் படைத்துக்கொண்டிருந்தபோதும், அவ்வப்போது என்னைச் சுற்றியிருந்தவர்களை நிமிர்ந்து பார்த்துக்கொண்டேன். அவர்களில் யாராவது பேப்பரில் வேகமாகப் பேனாவை உருட்டினால் எனக்குப் பயமாக இருந்தது (ஒருவேளை விறுவிறுப்பாக் கதை எழுதி ஜெயிச்சிடுவானோ?), சிலர் எழுதாமல் உட்கார்ந்திருந்தார்கள், அவர்களைப் பார்த்தும் பயந்தேன் (பயங்கரமா சிந்திக்கறானே. கனமா ஒரு தீம் பிடிச்சுட்டானோ?), இவர்கள் எல்லோரும் அவரவர் கதையை எழுதி முடிப்பதற்குள் தரப்பட்டிருக்கும் நான்கு காகிதங்கள் தீர்ந்துவிடவேண்டும் என்று அல்பமாகப் பிரார்த்தனை செய்துகொண்டேன்.

ஒருவழியாக, அரை மணி நேரம் முடிந்தது. என் கதையைக் கவரில் போட்டு மஞ்சள் பெண்ணிடம் கொடுத்துவிட்டு வெளியேறினேன்.

என் நண்பர்கள் சாப்பாட்டுக் க்யூவில் காத்திருந்தார்கள், ‘என்னடா, கதை எழுதிட்டியா?’

‘ஆச்சு?’

‘எப்படி வந்திருக்கு?’

நான் பதில் சொல்லவில்லை. கிட்டத்தட்ட 25 கதைகளில் மூன்றுக்குதான் பரிசு. வெற்றி விகிதம் சுமார் 12%ஆகவும், தோல்வி விகிதம் 88%ஆகவும் இருக்கும்போது ஏன் வாயைக் கொடுத்து மாட்டிக்கொள்ளவேண்டும்? (நாங்கல்லாம் லாஜிக்ல கெட்டியாக்கும் 😉

சும்மா சொல்லக்கூடாது. கேசிடி விருந்தோம்பல் பிரமாதம். வயிறு புடைக்கத் தின்றோம். எங்கேயாவது சுருண்டு படுத்துக் குட்டித் தூக்கம் போடலாமா என்று உடம்பு கெஞ்சியது. மெல்ல ஊர்ந்து பந்தலுக்கு வந்து சேர்ந்தோம்.

மதிய நிகழ்ச்சிகள் செம போர். ‘பாட்டுக்குப் பாட்டு’ என்ற பெயரில் ஆளாளுக்குக் கத்தி வெறுப்பேற்றினார்கள். மாலை பரிசளிப்பு விழாவுக்காகப் பல்லைக் கடித்துக்கொண்டு காத்திருந்தோம்.

பரிசளிப்பு? எனக்கா?

ம்ஹூம், இல்லை. எங்களை இங்கே அழைத்துவந்தார்களே, அந்த நண்பர்கள் குழு நடனப் போட்டியில் கலந்துகொண்டு பட்டையைக் கிளப்பியிருந்தார்கள். அவர்களுக்குதான் பரிசு கிடைக்கும் என்று நம்பிக்கையோடு காத்திருந்தோம்.

ஆனால், ஆன்ட்டி-க்ளைமாக்ஸ், அவர்களுக்குப் பரிசு கிடைக்கவில்லை. மாறாக, யாரும் எதிர்பாராதவிதமாகச் சிறுகதைப் போட்டியில் எனக்கு முதல் பரிசு கிடைத்தது.

சத்தியமாக என்னால் அந்த அறிவிப்பை நம்பமுடியவில்லை. ஏதோ அவசரத்தில் கிறுக்கி வீசிவிட்டு வந்தேன். அதற்குப்போய் முதல் பரிசு தருகிறார்கள் என்றால் மற்ற கதைகளெல்லாம் என்ன லட்சணத்தில் இருந்திருக்கும் என்று என்னால் ஊகிக்கமுடிந்தது.

ஆனால், அந்த வயசில், யாராவது நம்மைப் பாராட்டுகிறார்கள் என்றால் காரணம் தேடத் தோன்றாது. அது நியாயமான பாராட்டுதானா என்று அரை மாத்திரை நேரம்கூட யோசிக்கமாட்டோம், ‘ஹை ஜாலி’ என்றுதான் காலரை நிமிர்த்திவிட்டுக்கொள்ள நினைப்போம்.

நானும் அந்தக் கணத்தில் என்னை ஒரு பெரிய கதாசிரியனாகதான் நினைத்துக்கொண்டேன். அந்தக் கெத்தில் வரிசையாகக் கதைகள் எழுதி, பல்வேறு பத்திரிகைகளுக்கு அனுப்பி அவை அதிவேகமாகத் திரும்பி வர ஆரம்பித்தபிறகுதான் அந்தக் கர்வம் உடைந்தது.

போகட்டும், அன்றைக்கு எனக்குக் கிடைத்த முதல் பரிசு என்ன?

பெரிதாக ஒன்றுமில்லை. ஒரு நீண்ட அட்டைக் காகிதம். அதை எலக்ட்ரானிக்ஸ் கடை ஒன்றில் கொண்டுபோய்க் கொடுத்தால் ஒரு ‘பேஜர்’ கருவி தருவார்களாம்.

அடப்பாவிகளா, எனக்கு எதுக்குப் பேஜர்? அதுக்குப் பதிலா அஞ்சோ, பத்தோ கொடுத்தா டீ குடிக்க ஆவும்.

என்னுடைய கதறலை யாரும் கண்டுகொள்ளவில்லை. மேடையேற்றி, பேஜர் கூப்பனைக் கையில் கொடுத்து அனுப்பிவிட்டார்கள்.

ஆக, ஒரு நோக்கமும் இல்லாமல் கும்பலோடு தொற்றிக்கொண்டு கேசிடி போனவனுக்கு, ஒரு பேஜர் கூப்பன்மட்டும் மிஞ்சியது. பின்னர் பல மாதங்கள் கழித்து, போனால்போகிறது என்று அந்தப் பேஜார் கூப்பனை அவர்களே திரும்ப வாங்கிக்கொண்டு நூறோ, இருநூறோ பணம் கொடுத்தார்கள் என்று நினைவு.

ஆனால், இன்றுவரை எனக்குத் தீராத ஒரு சந்தேகம் – நிஜமாகவே நான் அன்றைக்கு எழுதிய அந்தக் குப்பைக் கதையை யாராவது படித்தார்களா? அல்லது குத்துமதிப்பாக ‘இங்கி-பிங்க்கி-பாங்க்கி’ போட்டுப் பார்த்துத் தேர்ந்தெடுத்துவிட்டார்களா?

***

என். சொக்கன் …

03 02 2010

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இதனை மேலும் பலர் வாசிப்பதற்கு உதவுங்க – இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

11 Responses to "பேஜர் கதை (’பேஜார்’ அல்ல)"

ஹாஹா.. கதையின் கதையா..? 🙂 சுவாரஸ்யம்..

//அடப்பாவிகளா, எனக்கு எதுக்குப் பேஜர்? அதுக்குப் பதிலா அஞ்சோ, பத்தோ கொடுத்தா டீ குடிக்க ஆவும்.//

முழு நேர எழுத்தாளர் இப்படி தான் சிந்திப்பாங்களோ?

எனக்கு எழுத தூண்டியது, சுஜாதா சிறுகதைக்கு “ஷ்… ஆ.. ” (கல்கி என நினைவு) நான் எழுதிய பாராட்டு கடிதம், திருப்பூர் விஜயஷங்கர் என்ற பெயரில் வெளி வந்தது. ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்த சமயம்… 1981 … நண்பன் எல்.ஐ.சி சதீஸ் எழுத சொல்லி, நான் ஒரு ஐந்து பைசா கார்டில் அனுப்ப… பிறகு கையெழுத்து பிரதி “தூறல்” என்ற பெயரில் நடத்தி ( எழுதியவர் ஸ்ப்ரிங் நிட்டிங் கே. ஸ்ரீ சரவணன் ) சில இதழ்களில் நின்றது. பிறகு “சங்கமம்” என்ற பெயரில் ஒரே ஒரு இதழ் 1985 இல் வந்தது.

அந்த சமயம் என் முழு கவனம் தமிழ்,ஆங்கில டிபேட் மட்டும் தான். பல பரிசுகள் காலேஜ் வரை பெற்றேன். ( குத்தி காட்டுதல்… அதில் பழகியது )

1987 இல் ஜி.சி.டி யில் நடந்த தமிழ் மன்ற போட்டியில் கதை ( தலைப்பு மட்டும் கொடுத்தார்கள் – மருதானிக்கனவுகள் ), மற்றும் கவிதை போட்டியில் – ஏதோ ஒருபரிசு.

அதோடு சரி… பிறகு 2006 முதல் எழுத்துப்பணி ப்ளாகில்.

அப்படியெல்லாம் சொல்லாதீங்க… நானும் காலேஜ்ல ஜெயிச்சத வச்சு தான் ரவுடின்னு சொல்லிகிட்டு இருக்கேன்.

நல்ல பதிவு. நன்றி ப்த்ரி.

முதலில் அடியேனின் வேண்டுகோளை ஏற்றமைக்கு நன்றி.

கதை எழுதின கதையே இத்தனை சுவாரஸ்யமாக இருந்தால், கதை எவ்வளவு சுவாரஸ்யமாக இருந்திருக்கும் என்பது சொல்லத் தேவையில்லாதது.

சந்தடி சாக்கில் என் காலை லைட்டாக வாரி இருக்கிறீர்கள். என்னை ஏணியில் ஏற்றி விட்டவர் எகிறி ஒரு குட்டுக் குட்டினால் குறைந்து போக மாட்டேன். மேலும் அது மோதிரக் கை வேறு!

அடுத்த ஆளை அழைத்திருக்கலாமே?

உங்கள் சார்பில், வளர்ந்து வரும் இன்னொரு ப்ளாக்கான எங்கள் ப்ளாக் காரர்களை அவர்களின் எழுத்துலகப் பிரவேசம் குறித்து எழுதித் தொடரச் சொல்வோமா?

http://kgjawarlal.wordpress.com

முதல் கதை பிறந்த கதை சுவாரஸ்யமாக உள்ளது. எவ்வளவு சதவிகிதம் கற்பனை கலந்திருக்கிறீர்கள்?

ஏதோ அவசரத்தில் கிறுக்கி வீசிவிட்டு வந்தேன். அதற்குப்போய் முதல் பரிசு \\

– சும்மா அவசரத்துல கிறுக்கி வீசிட்டு வந்த கதைக்கே முதல் பரிசுன்னா, நல்லா சிந்திச்சு உங்க ஸ்டைல்-ல எழுதியிருந்தீங்கன்னா ‘புக்கர்’ பரிசு இல்லாட்டி கூட ஒரு குக்கராவது குடுத்திருப்பாங்க. 😉

முதல் கதைக்கே பரிசா!…. ம்ம் பெரிய ஆள் தான் போங்கோ….

நீங்க போனது எப்பன்னு தெரியலே… இப்ப போய் அதே குமரகுரு கல்லூரி சுற்றுவட்டாரத்தை பாருங்க ….. முற்றிலும் அடையாளம் தெரியாது.

உங்கள் பதிவு மூலமா ஜவஹரின் பதிவை பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டது. மிக்க நன்றி. அவரது சிக்ஸ் சிக்மா உப்புமா உண்மையிலேயே பிரமாதம்.

Bee’morgan, Mani, Vijayashankar, பிரபுகுமார், goinchami, Jawahar, kggouthaman, Chakra, மஞ்சூர் ராசா, மஞ்சூர் ராசா,

நன்றி 🙂

//முழு நேர எழுத்தாளர் இப்படி தான் சிந்திப்பாங்களோ?//

நான் முழு நேர எழுத்தாளர் இல்லீங்கண்ணா 🙂

//ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்த சமயம்… 1981 … நண்பன் எல்.ஐ.சி சதீஸ் எழுத சொல்லி, நான் ஒரு ஐந்து பைசா கார்டில் அனுப்ப… பிறகு கையெழுத்து பிரதி “தூறல்” என்ற பெயரில்//

எனக்கும் கையெழுத்துப் பத்திரிகை அனுபவம் உண்டு. இன்னொரு சந்தர்ப்பத்தில் எழுதப் பார்க்கிறேன்!

//காலேஜ்ல ஜெயிச்சத வச்சு தான் ரவுடின்னு சொல்லிகிட்டு இருக்கேன்//

சரி சரி, நாம ரெண்டு பேருமே ரௌடிங்கதான், போதுமா? 😉

//அடுத்த ஆளை அழைத்திருக்கலாமே?//

அட, மறந்துட்டேனே, அதான் நீங்களே அழைத்துவிட்டீர்களே – அதையே என் விண்ணப்பமாகவும் வைத்துக்கொள்ளலாம்!

//எவ்வளவு சதவிகிதம் கற்பனை கலந்திருக்கிறீர்கள்?//

வழக்கம்போல, அது ட்ரேட் சீக்ரெட் 😉 சொல்வதற்கில்லை ;))))

//‘புக்கர்’ பரிசு இல்லாட்டி கூட ஒரு குக்கராவது குடுத்திருப்பாங்க//

ஆமாங்க, லிக்கர் கொடுக்காதவரை சந்தோஷம், ஹிஹிஹி 😉

//நீங்க போனது எப்பன்னு தெரியலே//

1997-98 இருக்கும்

//இப்ப போய் அதே குமரகுரு கல்லூரி சுற்றுவட்டாரத்தை பாருங்க ….. முற்றிலும் அடையாளம் தெரியாது.//

அப்படியா? ஒரு ட்ரிப் அடிக்கணும் 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,069 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

February 2010
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
%d bloggers like this: