ட்டூட்டி ஃப்ரூட்டி
Posted March 15, 2010
on:- In: (Auto)Biography | Bangalore | Characters | Coimbatore | Confidence | Crisis Management | Fear | Food | Importance | Learning | Life | Memories | Money | Price | Uncategorized
- 22 Comments
சென்னையிலிருந்து வந்த நண்பர் ஒருவரைப் பார்க்க நேற்றைக்கு எம்.ஜி.ரோட் போயிருந்தேன்.
மகாத்மா காந்தியின் பெயர் கொண்ட பெங்களூரு எம்ஜிரோட்டைக் கடந்த பல மாதங்களாக அவரைப்போலவே அரை நிர்வாணமாக்கியிருக்கிறார்கள். வலதுபக்கம் உள்ள கோவண சைஸ் சாலையில்மட்டும் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து நகர, மீதமிருக்கும் பகுதியை மெட்ரோ ரயில் ப்ராஜெக்ட் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது.
நண்பர் அவருடைய ஹோட்டல் வாசலில் காத்திருந்தார். என்னைப் பார்த்தவுடன், ‘என்னங்க உங்க ஊர் ட்ராஃபிக் ரொம்ப மோசம்!’ என்றார்.
‘தெரியும்’ என்றேன், ‘பெங்களூருக்கு வர்றவங்க எல்லோரும் முதல்ல சொல்ற வாக்கியம் இதுதான்!’
‘அப்ப, அடுத்த வாக்கியம்?’
’அதை இங்கே சொன்னா சென்சார் ஆயிடும், நாம ஒரு காஃபி சாப்பிடுவோமா?’
’வெய்யில் நேரத்தில காஃபி எதுக்கு? வாட் அபவுட் ஐஸ்க்ரீம்?’ பக்கத்துக் கடையைச் சுட்டிக்காட்டினார். நுழைந்தோம்.
சீருடை அணிந்த பேரர் வழவழா மெனு கார்டைக் கொண்டுவந்தார். அதில் சற்றேறக்குறைய நூற்றைம்பது ஐஸ்க்ரீம் ரகங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. அநேகமாக அனைத்தும் ஒரே விலை. (ஆனால், பெங்களூரில் யார் விலையைப்பற்றிக் கவலைப்படுகிறார்கள்?)
நண்பர் மெனு கார்டில் கண்ணை மூடிக்கொண்டு ஒரு பெயரைத் தொட்டார், ‘எனக்கு ட்டூட்டி ஃப்ரூட்டி’ என்றார், ‘உங்களுக்கும் அதே சொல்லட்டுமா?’
’ஐயோ வேண்டாம்’ அவசரமாக மறுத்தேன், ‘எனக்கு ட்டூட்டி ஃப்ரூட்டின்னாலே அலர்ஜி.’
‘மெடிக்கல்?’
‘ம்ஹூம், மென்டல்.’
‘தெரிந்தவிஷயம்தானே?’ என்பதுபோல் அவர் என்னை ‘ஒருமாதிரி’யாகப் பார்த்தார், ‘ஐஸ்க்ரீம்ல என்ன சார் மென்டல் ப்ராப்ளம்?’ என்றார் மிகுந்த சலிப்போடு.
’அது பெரிய கதை, இப்போ வேணாம். அப்புறமா ப்ளாக்ல எழுதறேன்’ என்று சொல்லிவிட்டு ஒரு சாதாரண வெனில்லா ஐஸ்க்ரீமுக்கு ஆர்டர் செய்தேன்.
As Promised, அந்தக் கதை இங்கே.
*****
எல்லாக் கல்லூரி விடுதிகளையும்போலவே, எங்கள் ஹாஸ்டலிலும் ஒவ்வோர் அறைக்கும் பூட்டு உண்டு, சாவி உண்டு. ஆனால் அவற்றுக்கு மரியாதைதான் கிடையாது.
பெரும்பாலான பூட்டுகளைச் சத்தமாக அதட்டினாலே திறந்துவிடும். இல்லாவிட்டால் நம் பாக்கெட்டில் இருக்கும் ஏதாவது ஒரு சாவியை நுழைத்துக் குத்துமதிப்பாகத் திருப்பினால் வாயைப் பிளந்துகொள்ளும்.
இந்தத் திருட்டுத்தனங்களுக்கெல்லாம் இடம் கொடுக்காத ’பலே’ பூட்டுகளும் உண்டு. ஆனால் அந்த அறைகளைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய பூட்டுக்கு ஏழெட்டுப் போலிச் சாவிகள் தயாரித்து, அவற்றை முக்கிய, அமுக்கிய நண்பர்களிடமெல்லாம் பகிர்ந்துகொடுத்திருப்பார்கள். இதனால், அந்தப் பூட்டுகளின் கற்பும் கேள்விக்குறியே.
சில அறைகளில், ஒரே வாசலுக்கு இரட்டைப் பூட்டு போட்டிருப்பார்கள். இதனால், இரண்டு அறை நண்பர்களும் தங்களுடைய ஒற்றைச் சாவியை வைத்து எப்போது வேண்டுமானாலும் அறையைத் திறக்கலாம், பூட்டலாம்!
ஒரே பிரச்னை, பெரும்பாலான நேரங்களில் இந்தப் பூட்டுகளில் ஒன்று நோஞ்சானாக இருந்துவிடும். ’A chain is as strong as its weakest link’ தியரிப்படி, அந்த அறைகளைப் பூட்டி ஒரு பயனும் கிடையாது.
ஒருவேளை, இந்த விதிமுறைகள் அனைத்தையும் மீறி செம ஸ்ட்ராங்காக, போலிச் சாவிக் கள்ளக் காதலன்கள் இல்லாத ஒரு பூட்டை எவனாவது தன்னுடைய அறைக்குப் போட்டான் என்று வையுங்கள், அவன் காலி. சுற்றியிருக்கிற எல்லோரும் ’ரூமை அப்படிப் பத்திரமாப் பூட்டிவைக்கிற அளவு என்னடா பெரிய ரகசியம்’ என்று அவனைக் கிண்டல் செய்தே நோகடித்துவிடுவார்கள்.
கடைசியாக, அதிமுக்கியமான விஷயம், எங்கள் விடுதி அறைகளின் கதவுகள் அனைத்தும் மிகப் பலவீனமானவை என்பதால், உசத்தியான பூட்டுப் போட்டுப் பெரிய பிரயோஜனம் ஒன்றும் இல்லை.
இதனால், பெரும்பாலான பையன்கள் தங்களுடைய அறைக் கதவில் சும்மா சாஸ்திரத்துக்கு ஒரு பூட்டை மாட்டிவைத்திருப்பார்கள். மற்றபடி எல்லா அறைகளும் எந்நேரமும் திறந்துதான் கிடக்கும்.
அப்படியானால், பாதுகாப்பு?
என்ன பெரிய பாதுகாப்பு? காலேஜ் பையன் ரூமில் திருடுவதற்கு என்ன பெரிதாக இருந்துவிடப்போகிறது?
அது சரி. கொஞ்சம் ப்ரைவஸி வேண்டாமா?
அப்போதெல்லாம் நாங்கள் ‘ப்ரைவஸி’ என்கிற வார்த்தையைக் கேள்விப்பட்டதுகூடக் கிடையாது. அதன் அர்த்தத்தை மதித்ததும் கிடையாது.
ரொம்ப யோசித்தால், ப்ரைவஸி சம்பந்தப்பட்ட ஒரே ஒரு சமாசாரம்மட்டும் ஞாபகம் வருகிறது. கல்லூரியில் (அல்லது அதற்குமுன்பு பள்ளியிலேயே) காதல்வயப்பட்ட பையன்கள் தங்களுடைய சூட்கேஸ்களை எப்போதும் பூட்டியே வைத்திருப்பார்கள். அதற்குள் இருக்கும் கடிதங்கள் அல்லது புகைப்படங்களைத் தேட்டை போட ஒரு கோஷ்டி சுற்றிக்கொண்டிருக்கும். அது தனிக்கதை. இங்கே வேண்டாம்.
மறுபடி எங்கள் விடுதிக்கு வருகிறேன். திறந்து கிடக்கும் ரூம்கள், பூட்டாத பூட்டுகளைக் கொஞ்சம் மனக்கண்ணில் விரித்துவைத்துக்கொள்ளுங்கள்.
இந்த விஷயத்தை இவ்வளவு விளக்கமாக ஏன் சொல்கிறேன் என்றால், இப்படிப் பாதுகாப்பு விஷயத்தில் சரித்திரப் பிரசித்தி பெற்ற அந்த விடுதியில்தான், என்னுடைய குறிப்பு நோட் ஒன்று காணாமல் போய்விட்டது.
உடனடியாக, நான் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை விசாரித்தேன். ‘எங்களுக்கு எதுவும் தெரியாது’ என்று கையை விரித்துவிட்டார்கள்.
என்னுடைய குறிப்பு நோட்டைத் திட்டம் போட்டுத் திருடுகிற அளவுக்கு நான் ஒன்றும் அணு விஞ்ஞானி கிடையாது. ஏதோ வகுப்பில் ப்ரொஃபஸர் சொன்னதைக் கிறுக்கிவைத்திருப்பேன். அவ்வளவுதான். அதைத் தேடிக் கண்டுபிடித்துப் பயனப்டுத்துகிற அளவு அதில் எதுவும் விசேஷம் இருந்திருக்காது.
ஆனால் ஏனோ, அப்போது அந்தக் குறிப்பு நோட்டு எனக்கு மிகவும் அவசியப்பட்டிருக்கிறது. ஹாஸ்டல்முழுவதும் ஒவ்வொரு ரூமாக அலைந்து திரிந்து அதைத் தேடியிருக்கிறேன். கிடைக்கவில்லை.
கடைசியாக, இனிமேல் அந்த நோட் கிடைக்காது என்று நான் நொந்துபோயிருந்த நேரத்தில், ஒரு நண்பர் என்னைத் தேடி வந்தார். அவர் பெயர் கிருஷ்ணன் என்று வைத்துக்கொள்வோமே.
இந்த நண்பர் என்னுடைய ஹாஸ்டலிலேயே இல்லை, சற்றுத் தள்ளியிருக்கும் இன்னொரு விடுதிக் கட்டடத்தில் தங்கியிருந்தார். ஆனால் எப்படியோ, தொலைந்துபோன என் நோட்டு அவர் கையில் கிடைத்திருக்கிறது.
எப்போதும், கிடைக்காது என்று நினைத்த பொருள் கிடைத்துவிட்டால் நாம் எக்ஸ்ட்ராவாக உணர்ச்சிவயப்படுவோம். அன்றைக்கு நான் அவர் காலில் விழாத குறை. குறைந்தது நூறு தடவையாவது அவருக்கு நன்றி சொல்லியிருப்பேன்.
என் குறிப்பு நோட்டைக் கண்டுபிடித்துக்கொடுத்த கிருஷ்ணன், பதிலுக்கு என்னிடம் ஒரு ட்ரீட் எதிர்பார்த்தார். நோட் கிடைத்த குஷியில் நானும் ஓகே சொல்லிவிட்டேன்.
ஒரு சுபயோக சுபதினத்தில், நாங்கள் அந்த ’ட்ரீட்’டுக்குப் புறப்பட்டோம். எங்களோடு துணைக்கு என் அறை நண்பன் ஒருவனையும் கூட்டிக்கொண்டேன் (கொழுப்புதானேடா உனக்கு!).
ஹோட்டலில் இடம் பிடித்து உட்கார்ந்ததும், கிருஷ்ணன் என்னிடம் மெனு கார்டை நீட்டினார். நான் அதை விநோதமாகப் புரட்டிப்பார்த்தேன்.
‘என்னாச்சு?’
‘இட்லி, தோசையெல்லாம் காணமே!’
அவர் பெரிதாகச் சிரித்தார், ‘இந்த ஹோட்டல்ல அதெல்லாம் இருக்காது! ஒன்லி நார்த் இண்டியன் & சைனீஸ்!’
வட இந்திய, சீன உணவுவகைகளைமட்டுமே பரிமாறுகிற ஒரு ஹோட்டல் எதற்காகக் கோயம்பத்தூரில் இருக்கவேண்டும் என்று நான் ஆச்சர்யப்பட்டேன். அதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை (பந்தா குறைஞ்சுடக்கூடாதில்ல?)
அப்புறம், அவரே ஏதோ ஆர்டர் செய்தார். நானும் பாக்கெட்டில் இருந்த பணத்தைக் கணக்குப் பார்த்துக்கொண்டே சாப்பிட்டேன்.
நல்லவேளையாக, அந்த ஹோட்டலில் எந்தப் பண்டமும் யானை விலை, குதிரை விலை இல்லை. நான் கொண்டுபோயிருந்த பணத்தில் மூவரும் நன்கு திருப்தியாகவே சாப்பிடமுடிந்தது.
கடைசியாக, சாப்பிட்டு முடித்தபிறகு, ‘ஐஸ்க்ரீம்?’ என்றார் கிருஷ்ணன்.
இதுவரை போட்ட பட்ஜெட் கணக்குப்படி என் பையில் இன்னும் கொஞ்சம் பணம் பாக்கியிருந்தது. அந்தத் தைரியத்தில், ‘ஓகே’ என்றேன்.
மூன்று ஐஸ்க்ரீம் என்ன பெரிய விலை ஆகிவிடும்? முப்பது ரூபாய் வருமா? (பதினைந்து வருடங்களுக்குமுன்னால்) அவ்வளவுதானே? என்சாய்!
கிருஷ்ணன் எங்கள் மூவருக்கும் ‘ட்டூட்டி ஃப்ரூட்டி’ ஆர்டர் செய்தார். அழகான கண்ணாடிக் குவளையில் (கிண்ணம் அல்ல) நீளமான ஸ்பூனுடன் வந்து சேர்ந்தது. பலவண்ணங்களில் அடுக்கடுக்காக ஐஸ்க்ரீம், ஆங்காங்கே தூவிய உலர்பழங்கள், முந்திரி, பாதாம், இன்னபிற அதிகலோரி பொருள்கள்.
அத்தனை பெரிய குவளையைப் பார்த்தவுடனேயே, நான் சந்தேகப்பட்டிருக்கவேண்டும். ஆனால் உள்ளே இருந்த ஐஸ்க்ரீம் என்னை உருகச் செய்துவிட்டது. எல்லாவற்றையும் மறந்து ‘ட்டூட்டி ஃப்ரூட்டி’யை ரசிக்க ஆரம்பித்துவிட்டேன்.
கொஞ்ச நேரம் கழித்து, பில் வந்தது. அது என்னுடைய பாக்கெட்டில் இருந்த பணத்தைவிட நூறு ரூபாய் கூடுதலாக இருந்தது.
எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. அது எப்படி? ஸ்பூனுக்கு ஸ்பூன், பைசாவுக்குப் பைசா கணக்குப் போட்டுதானே சாப்பிட்டோம்? தப்பு நடக்க வாய்ப்பில்லையே.
அவசரமாகப் பில்லை மேய்ந்தால், கடைசி ஐட்டம், மூன்று ட்டூட்டி ஃப்ரூட்டி ஐஸ்க்ரீம்கள் – 150 ரூபாய்!
அடப்பாவிகளா, ஒற்றை ஐஸ்க்ரீம் ஐம்பது ரூபாயா? எல்லாத்துக்கும் மெனு கார்டைப் பார்த்தவன் இந்தக் கடைசி மேட்டர்ல ஏமாந்துட்டேனே!
Of course, ஐம்பது ரூபாய்க்கு அந்தக் குவளை நிறைய ஐஸ்க்ரீம் என்பது நியாயமான கணக்குதான். ஆனால் பாக்கெட்டில் பணம் இல்லையே, என்ன செய்வது? மாவாட்டச் சொல்லிவிடுவார்களோ? வடக்கத்தி உணவில் மாவு உண்டா, இல்லையா, தெரியவில்லையே!
நான் நெருப்பைத் தின்றவன்போல் விழித்துக்கொண்டிருப்பதைப்பார்த்துக் கிருஷ்ணன் விசாரித்தார், ‘என்னாச்சு?’
‘ஒரு சின்ன மிஸ்டேக்’ என்று வழிந்தேன். நிலைமையைச் சொன்னேன்.
அவர் விழுந்து விழுந்து சிரித்தார். ஆனால் அவரிடமும் நூறு ரூபாய் இல்லை, என் ரூம்மேட்டிடமும் இல்லை. இருவருடைய பர்ஸ்களையும் கவிழ்த்துத் தேடியதில் சுமார் அறுபது ரூபாய்மட்டும் சிக்கியது. இன்னும் நாற்பது குறைகிறதே!
‘சரி, நீங்க இங்கேயே உட்கார்ந்திருங்க, நான் வெளிய போய் ஏதாவது கிடைக்குதான்னு பார்த்துட்டு வர்றேன்’ என்று புறப்பட்டார் அவர்.
இந்த ராத்திரி நேரத்தில் என்ன செய்யப்போகிறார்? ஒருவேளை, அகப்படுகிறவர்களிடம் பிக்பாக்கெட் அடிப்பாரோ? அபத்தமாக யோசனைகள் தோன்றின.
என்னுடைய ரூம் மேட் என்னைவிட பயந்திருந்தான். போனவர் வருவாரோ, மாட்டாரோ என்கிற கவலை அவனுக்கு.
கடைசியில், சுமார் இருபது நிமிடங்கள் கழித்து கிருஷ்ணன் வந்துவிட்டார், ‘கிளம்பலாம்’ என்றார்.
‘என்னாச்சு?’
‘மேனேஜரைப் பார்த்துப் பேசினேன். நம்ம காலேஜ் ஐடி கார்டைக் காண்பிச்சேன், கொஞ்சம் பணம் குறையுது, நாளைக்குக் கொண்டுவந்து தந்துடறேன்னு சொன்னேன், ஓகே சொல்லிட்டார்.’
அப்பாடா. நிம்மதியாக வெளியே வந்தோம்.
அதிகபட்சம் பத்து நிமிடம் இருக்கும். ஆனால், பையில் போதுமான காசு இல்லை என்கிற ஒரே காரணத்தால் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் இழந்து, தவித்துப்போய் உட்கார்ந்திருந்த அந்த நேரத்தை என்றைக்கும் மறக்கமுடியாது.
கெட்டதிலும் ஒரு நல்லது, இந்தச் சம்பவத்துக்குப்பிறகு ஹோட்டல்களில்மட்டுமல்ல, வேறு எங்கேயும், போதுமான பணம் இருக்கிறதா என்று பர்ஸைத் திறந்துபார்க்காமல் நான் உள்ளே நுழைவது இல்லை. பாக்கெட்டில் நாலு க்ரெடிட் கார்ட் வைத்திருந்தாலும், காசுக்கு இருக்கிற மரியாதையே தனி.
கடைசியாக, அன்றைக்குச் செய்த தப்புக்கு ஓர் அடையாளத் தண்டனையாக இன்றுவரை நான் ’ட்டூட்டி ஃப்ரூட்டி’யையும் சாப்பிடுவதில்லை!
இந்தப் பதிவை இப்படிச் சோகமாகவும் சென்டிமென்டாகவும் முடிக்கவேண்டாம் – உங்களுடைய ஃபேவரிட் ஐஸ்க்ரீம் எது? ஏன்? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன், சிறந்த பதிலுக்கு ஒரு ட்டூட்டி ஃப்ரூட்டி ஐஸ்க்ரீம், … வேண்டாம், ஒரு புத்தகம் பரிசு 🙂
***
என். சொக்கன் …
15 03 2010
22 Responses to "ட்டூட்டி ஃப்ரூட்டி"

நல்ல பதிவு. நன்றி பத்ரி


ha ha.. arumaiyana kosuvarththi pathivu.. 🙂


கெட்டதிலும் ஒரு நல்லது, இந்தச் சம்பவத்துக்குப் பிறகு ஹோட்டல்களில் மட்டுமல்ல, வேறு எங்கேயும், போதுமான பணம் இருக்கிறதா என்று பர்ஸைத் திறந்து பார்க்காமல் நான் உள்ளே நுழைவது இல்லை.
Somehow got reminded of “Keladi Kanmani” Janagaraj Joke..


நல்ல பதிவு 🙂
பெங்களூரு புதுவரவுகளின் ரெண்டாவது வாக்கியம் என்ன? ரகசியமா சொல்லிடுங்களேன். நான் நினைச்சது தானான்னு சரி பாத்துக்கறேன் 🙂
எனக்கு ரொம்ப பிடிச்ச ஐஸ்க்ரீம் பாஸ்கின் அண்ட் ராபின்ஸ்ல விக்கற Pralines and Cream. அத ஒரு ஸ்கூப் எடுத்து மேல கேரமெல் டாப்பிங்கோட கொஞ்சம் நட்ஸை தூவி சாப்பிடனும். பிரலைன்ஸ் அண்ட் க்ரீம் ஐஸ்க்ரீம்ல நம்ம அச்சுவெல்லம் மாதிரியான ஐட்டம் இருக்கும். அந்த அச்சுவெல்லமும் இந்த நட்ஸும் சேந்து ஒரு மாதிரி நாக்குல சண்ட நடத்தும். அருமையான ஐஸ்க்ரீம் இது.
http://www.baskinrobbins.com/IceCream/classicflavors.aspx


//அந்தப் பூட்டுகளின் கற்பும் கேள்விக்குறியே.//
🙂
ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. நானும் இன்னொரு நண்பரும் பாண்டி பஜார் சரவணபவனுக்கு அண்டர்க்ரவுண்டில் இருக்கிற குஜராத்தி (அல்லது பஞ்சாபியா?) ரெண்டாரண்டிற்குப் போனபோது நண்பர் உணவு ஆர்டர் பண்ணி 10 நிமிடம் கழித்து பேரரைக் கூப்பிட்டு காசு இல்லேன்னா மாவாட்டச் சொல்வீங்களா? இல்ல வேற என்ன ஏற்பாடு என்று கேட்டு அதிரவைத்தார். பேரர் எங்களை சந்தேகமாய்ப் பார்த்து அப்படி எதுவும் நடப்பதில்லை என்றும் ஒரே ஒரு தடவை ஒரு பெரியவர் சாப்பிட்டுவிட்டு அப்புறம் பாக்கெட்டில் பர்ஸ் இல்லாததை உணர்ந்து பின் ட்ரைவரிடம் கொடுத்து அனுப்பினாரார் என்றும் சொன்னார். (பிறகு சாப்பிட்டுவிட்டுக் காசு கொடுத்தபோது அவர் முகத்தில் லேசாய் நிம்மதிப் பெருமூச்சை உணரமுடிந்தது)


Cone ICe – in Rose color is what I tasted with much joy in school days, after that donno I did not like any other icecream types.
ஐஸ் கட்டிய சரக் சரக் ன்னு தெய்ச்சு கலர் தண்ணி விட்டு தரும் mater தான் பிடிக்கும்.


ஏற்கனவே சின்ன ரோடு, இதுல மெட்ரோ பிராஜக்ட் ஆ?
என் கல்லூரிக்கு அருகே இருக்கும் கடைகளில் ஐ.டிகார்டு சரண்டர் செய்தாதான் விடுவார்கள்! ஐடி கார்டு மாணவர்களுக்குத் தேவையே இல்லையென்பதோ, ஆளுக்கொரு புது காப்பி தினமும் பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம் என்பதோ தெரிய கடைக்காரருக்கு ரொம்ப வருஷமாச்சு!!!
அருண் ஐஸ்கிரீம் கசாட்டா முள்ளம்பன்றி மாதிரி வெளிய ஃபுல்லா முந்திரி நிரப்பி உலக உருண்டை சைஸுல ஃபாமிலி பாக்குனு வரும்பாருங்க..சாப்பிடவே வேண்டாம்..அடிக்கற வெய்யிலில் பார்த்தாலே போதும்..
அதுசரி, உங்களைத் தொடர்ந்து பத்ரின்னு விளிக்கிறாரே கோயிந்த்!! 🙂


அருமையான நகைச்சுவையுள்ள பதிவு.
//நம்ம காலேஜ் ஐடி கார்டைக் காண்பிச்சேன்// காலெஜில் படிக்கும்போது, நம்ம காண்பிக்காத ஐடி கார்டா? 🙂 குறிப்பாக கேஜியில் செகண்ட் ஷோ பார்த்து டெக் ஹாஸ்டலுக்கு நடந்து வரும்போது, போலிசிடமிருந்து காப்பாற்றும் ஐடி தான் காட் பாதர் 🙂
//பிடித்த ஐஸ்கிரிம்//
பட்டர் ஸ்காட்ச். மனைவிக்கு பிடித்த ஒரே காரணத்தால் மட்டும் அல்ல 🙂 எனக்கும் இப்போது பிடித்துவிட்டது. இப்போதெல்லாம் மெனு கார்டை பார்க்காலமெலே “2 பட்டர் ஸ்காட்ச் கொடுங்க”


எனக்கு ஐஸ் க்ரீம் பிடித்ததெல்லாம் பழைய கதை. டயபடீஸ்காரன் ஐஸ்க்ரீம் சாப்பிடணும்னா சொத்தையே எழுதிவைக்கணும்! (விலை ஒரு காரணம், ஏறி விடும் சர்க்கரையால் உயில் எழுத வேண்டிவரும் என்பது மறு காரணம்).


//சாப்பிடவே வேண்டாம்..அடிக்கற வெய்யிலில் பார்த்தாலே போதும்.//
கிரிதரன்… :))))


//அருண் ஐஸ்கிரீம் கசாட்டா முள்ளம்பன்றி மாதிரி வெளிய ஃபுல்லா முந்திரி நிரப்பி உலக உருண்டை சைஸுல ஃபாமிலி பாக்குனு வரும்பாருங்க..சாப்பிடவே வேண்டாம்..அடிக்கற வெய்யிலில் பார்த்தாலே போதும்..//
ஆமா.. ஆமா.. ஆமா.. 🙂
நான் 5 ம் வகுப்பு படிச்சிட்டிருந்தப்ப தொடங்கி, வீட்ல அம்மா, அப்பாவுக்கு டயபடீஸ் வர்ற வரைக்கும் வருஷம் தவறாம சம்மருக்கு வீட்ல ஆஜர் ஆகிட்டிருந்த ஐஸ்க்ரீம் இது. அதுக்கப்புறம் எந்த ஐஸ்க்ரீமும் இந்த அளவுக்கு ஈர்க்கல.. எப்படா வாங்கிட்டு வருவாங்கன்னு வெயிட் பண்ணி, வட்டமா உக்காந்து அம்மா ஸ்லைஸ் போட்டு வைக்க வைக்க அவசர அவசரமா சாப்டது காரணமா இருக்கலாம். 🙂


/ ஏழெட்டுப் போலிச் சாவிகள்…/
/ அந்தப் பூட்டுகளின் கற்பும் … /
/ போலிச் சாவிக் கள்ளக் காதலன்கள் இல்லாத /
/ ‘ப்ரைவஸி’ என்கிற வார்த்தையைக் கேள்விப்பட்டதுகூடக் கிடையாது. /
என்னமோ தெரியலை… ‘நித்யா லீலைகள்’ செய்திக்கு அப்புறம் சாதாரணமா படிக்கிற பதிவுலகூட ‘இப்படி’ வில்லங்கமாதான் கண்ணுலபடுது!
/பிடித்த ஐஸ்கிரிம்/
திருச்சியில படிக்கிற காலத்தில ‘மைக்கேல்ஸ்’ல சாப்பிற எந்த ஐஸ்கிரிமும் பிடிக்கும். அப்புறம் 50 காசுக்கு அவ்வளவு டேஷ்டா வேற எங்க கிடைக்கும்.
/ ஒரு புத்தகம் பரிசு /
வீட்டு முகவரியை எந்த மின்னஞ்சலுக்கு அனுப்ப ….;).
விகடன் பிரசுரம் புக்கெல்லாம் அனுப்ப கூடாது. நீங்க எழுதின புக்குதான் அனுப்பனும். சரியா?


//என்னுடைய ரூம் மேட் என்னைவிட பயந்திருந்தான். போனவர் வருவாரோ, மாட்டாரோ என்கிற கவலை அவனுக்கு.//
அநியாயமாய் நடுவில் மாட்டிக் கொண்ட உங்கள் நண்பரின் வியூ பாயிண்ட்டில் இதே சம்பவத்தை வாசிக்க ஆசை ஏற்பட்டது.
// அன்றைக்குச் செய்த தப்புக்கு ஓர் அடையாளத் தண்டனையாக இன்றுவரை நான் ’ட்டூட்டி ஃப்ரூட்டி’யையும் சாப்பிடுவதில்லை!//
இதெல்லாம் பெரிய தண்டனைங்க.


Cool-ana padhivu 🙂


oue information was useful


good … write in english too


ஐஸ்க்ரீம் போலச் சுவையான பதிவு!
சுஜாதாவின் ஸ்டைல் கொஞ்சம் தெரிகிறது! வாழ்த்துக்கள்!
உங்கள் பதிவுகள் ஜவர்லால் அவர்களுடைய பதிவுகளைப் போல இருக்கின்றன என்று நினைப்பதுண்டு! பார்த்தால் அவரே இங்கு பின்னூட்டமிட்டிருக்கிறார்!

1 | அதிஷா
March 15, 2010 at 11:17 am
என்னுடைய பேவரைட் சேமியா ஐஸ்கிரீம்தான். நான் கடைசியாக சாப்பிட்டபோது விலை ரூபாய் 1. அதன் மீது தூவித்தரப்படும் உப்பு இனிப்புடன் கலந்து கிடைக்கும் வித்தியாசமான சுவை + சொர சொர தேங்காய் துருவலுடன் கலந்த சேமியா , எவ்வளவுநேரம் கடித்தாலும் தீராத இன்பம். இதற்கே ஒன்றரை கிட்னியை தரலாம்.