எடைக்கு எடை
Posted March 27, 2010
on:- In: (Auto)Biography | Bangalore | Books | Characters | Coimbatore | Customer Care | Customer Service | Customers | Hyderabad | Memories | Price | Reading | Uncategorized | Value
- 16 Comments
புத்தகப் பிரியர்கள் பலருக்கு, புதுப் புத்தகம் எதுவானாலும் பிரித்து, அதனால் முகத்தைப் போர்த்தி, அந்த மணத்தை உள்வாங்குகிற சுகமான அனுபவம் பிடித்திருக்கும்.
நானும் அந்த வகைதான். ஆனால் எனக்கென்னவோ பழைய புத்தகக் கடைகளை ஒரு மாற்று அதிகம் பிடிக்கும்.
என்னுடைய தனிப்பட்ட தொகுப்பில் குறைந்தபட்சம் 60% புத்தகங்கள் பழைய புத்தகக் கடைகளில் அள்ளியவையாகதான் இருக்கும். காரணம் பணத்தை மிச்சப்படுத்துவது அல்ல. புத்தக விஷயத்தில் நான் காசுக் கணக்குப் பார்ப்பது இல்லை.
மாறாக, பழைய புத்தகக் கடைகளில் கிடைக்கும் பொக்கிஷங்களும், அவை கிடைப்பதில் இருக்கும் எதிர்பாராத தன்மையும் அலாதியானவை. லாண்ட்மார்க்கில், க்ராஸ்வேர்டில், ஒடிஸியில் இதைப் பார்க்கமுடியாது.
இத்தனைக்கும், நான் தூசு ஒவ்வாமை(Dust Allergy)யால் அவதிப்படுகிறவன். தினமும் காலையில் ஷூ அணிவதற்குமுன்னால் அதைத் துணியால் லேசாகத் தட்டினால்கூட எனக்கு ஏழெட்டு தும்மல்கள் வரும். இதனாலேயே என் மனைவி வீட்டைச் சுத்தப்படுத்துகிற, பரணில் இருந்து எதையாவது எடுத்துத் தருகிற வேலைகளுக்குமட்டும் என்னை அழைக்கமாட்டார் (ஹையா, ஜாலி ஜாலி!)
ஆனால், பழைய புத்தகக் கடைகளுக்குள் நுழையும்போதுமட்டும், எப்படியோ இந்தத் தூசு ஒவ்வாமையெல்லாம் காணாமல் போய்விடுகிறது. புத்தகம் வாங்குகிறேனோ, இல்லையோ, மணிக்கணக்காக அவற்றைப் புரட்டுவது, எந்தப் புத்தகம் எப்போது என்னமாதிரியான பதிப்பு வந்திருக்கிறது, அச்சு எப்படி, தாள் எப்படி, புகைப்படங்கள் எப்படி, அட்டை வடிவமைப்பு எப்படி, விலை என்ன, முன்னுரை யார், பின்னட்டையில் எழுதியவர் புகைப்படம் உண்டா, ஆசிரியரை முன்னிறுத்துகிறார்களா, அல்லது பதிப்பகத்தையா, அல்லது புத்தகத் தலைப்பையா, இது யாருக்கான புத்தகம், அவர்களுடைய எதிர்பார்ப்பை இது நிறைவு செய்திருக்குமா, அல்லது தோற்றுப்போயிருக்குமா, இதைப் பழைய புத்தகக் கடையில் வீசியது யார், அப்போது அவர்கள் மனோநிலை என்ன, இந்தக் கடைக்காரர் இதை என்ன விலைக்கு வாங்கியிருப்பார், நமக்கு (அதாவது எனக்கு) என்ன விலைக்கு விற்பார், அவருக்கு இதன் மதிப்பு தெரிந்திருக்குமா (இங்கே மதிப்பு என்பது Value மற்றும் Price), இதே புத்தகத்தை நான் புதிதாக வாங்கினால் என்ன விலை இருக்கும், அந்தப் புது editionல் நான் கூடுதலாகப் பெறுவது என்ன? இழப்பது என்ன? இதுமாதிரி நுணுக்கமான தயாரிப்புகளெல்லாம் இப்போது ஏன் வருவதில்லை … இப்படி ஒவ்வொரு புத்தகத்தைப்பற்றியும் விதவிதமாக யோசித்துக்கொண்டிருந்தால் நேரம் ஓடுவதே தெரியாது.
இதனால், என்னுடைய கண் பார்வை எல்லைக்குள் ஏதாவது பழைய புத்தகக் கடைகள் தென்பட்டுவிட்டால், என்னுடன் இருக்கும் நண்பர்கள் நமுட்டுச் சிரிப்புச் சிரிப்பார்கள். Bar வாசலில் ஒரு மொடாக்குடியனை teetotaler சிநேகிதர்கள் கலாய்ப்பதுபோல, ‘சரி சரி, நடக்கட்டும்’ என்பார்கள்.
என் மனைவிக்குமட்டும் இந்த விளையாட்டே ஆகாது, ‘பழைய புத்தகக் கடைக்கெல்லாம் நீ தனியாப் போய்க்கோ, அப்புறம் எத்தனை மணி நேரம் ஆனாலும் பரவாயில்லை, என்னோட வரும்போது இந்த வேலை வாணாம்’ என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். (பாவம், அவரை எந்தக் காலத்தில் என்ன பாடு படுத்தினேனோ!)
இந்தப் பழைய புத்தகப் பரவசம் எனக்குக் கல்லூரி நாளிலேயே வந்துவிட்டது. எங்கள் கல்லூரியிலிருந்து சுமார் இரண்டரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ’சாயிபாபா காலனி’ என்ற பகுதியில் ராஜா என்பவர் ஒரு பழைய புத்தகக் கடை வைத்திருந்தார். அங்கே நான் ரெகுலர் கஸ்டமர்.
நான் கல்லூரியில் படிக்க ஆரம்பித்த நேரத்தில், ராஜா கடை இரண்டு டேபிள்கள் அளவுக்குச் சிறியதாக இருந்தது. அடுத்த சில மாதங்களுக்குள் மளமளவென்று விரிவுபடுத்தி உள்ளே ஒரு கடையை வாடகைக்கு எடுத்து ஜமாய்த்துவிட்டார். நான் நான்காவது வருடம் வந்தபோது அதே சாயிபாபா காலனியில் இன்னொரு ‘ப்ராஞ்ச்’கூட தொடங்கிவிட்டார்.
ராஜாவிடம் ஒரு நல்ல பழக்கம், அவருக்குப் புத்தக ரசிகர்களின் மனோநிலை புரியும். அவர்கள் விரும்பும் புத்தகங்களுக்கு வேண்டுமென்றே அதிகம் விலை வைத்து ஏமாற்றமாட்டார். கையில் காசு இல்லாமல் சும்மா புத்தகங்களைத் தடவிப் பார்த்துவிட்டுப் போகிறேன் என்று வருகிறவனிடமும் முகம் சுளிக்கமாட்டார். அவருக்குப் புத்தகம் விற்பது வெறும் தொழிலாக அன்றி, ஒரு பரவசமான அனுபவமாக இருந்தது – கிட்டத்தட்ட ஒரு ‘antics shop’, ம்ஹூம், தப்பு, ‘antique shop’ நடத்துகிறவரைப்போல.
கோவையில் இருந்த காலகட்டத்தில் என் பெற்றோர் எனக்கு அனுப்பிய பாக்கெட் மணியில் பெரும்பகுதி ராஜாவின் கடையில்தான் (அப்போது புதுப் புத்தகங்களை முழு விலை கொடுத்து வாங்கும் வசதி இல்லை, மனமும் இல்லை) சென்று சேர்ந்தது. பலவிதமான (குப்பை, நல்ல) புத்தகங்களைத் தேடிப் படிக்கும் பழக்கமும் வந்தது.
இப்போதும், நான் கோவை சென்றால் ராஜா கடைக்குச் செல்லாமல் வருவதில்லை. என் மகளின் புத்தக அலமாரியிலும் ராஜா அன்போடு தேர்ந்தெடுத்துக் கொடுத்த நூல்கள் உள்ளன. நான் எழுதிய புத்தகம் ஒன்றைக்கூட அவருக்கு நன்றியுடன் சமர்ப்பித்திருக்கிறேன்.
1998க்குப்பிறகு நான் தமிழகத்தில் வாழும் சந்தர்ப்பம் ஏற்படவில்லை. அவ்வப்போது அந்தப் பக்கம் எட்டிப் பார்க்கும் touristடாகமட்டுமே இருக்கிறேன். ஆகவே, தமிழ்ப் பழைய புத்தகக் கடைகளின்மீது எனக்கிருந்த நேசத்தை ஆங்கிலத்தின்மீது திருப்பிக்கொள்ளவேண்டிய கட்டாயம்.
அந்தவிதத்தில் ஹைதராபாத், பெங்களூரு இரண்டுமே என்னை ஏமாற்றவில்லை. கதை, கட்டுரை, வரலாறு, அறிவியல் எனப் பலவிதமான ஆங்கிலப் புத்தகங்களை இந்த இரு நகரங்களின் பழைய புத்தகக் கடைகளில் பீறாய்ந்திருக்கிறேன்.
ஒருமுறை, அலுவல் நிமித்தமாக டோக்கியோ சென்றிருந்தேன். திரும்பிய இடமெல்லாம் ஜப்பானிய மொழிமட்டுமே தென்பட்ட அந்த நகரத்தில்கூட, எனக்கு ஒரு பழைய புத்தகக் கடை சிக்கிவிட்டது. அங்கே சில மணி நேரம் செலவிட்டு ஓர் அட்டகாசமான வண்ணப் புத்தகத்தை (ஆங்கிலம்தான்) பேரம் பேசாமல் வாங்கிவந்தேன். ‘ஃபாரின் போய்ப் பழைய புத்தகம் வாங்கிட்டு வந்த ஒரே ஆள் நீதான்’ என்று என் நண்பர்கள் இப்போதும் கேலி செய்வார்கள்.
பெங்களூருவில் எனக்கு மிகவும் பிடித்த பழைய புத்தகக் கடை ‘Blossom’. எம்ஜி ரோட்டுக்கு இணையாக ஓடும் Church Street சாலையில் உள்ள ப்ளாசமைப் பல நண்பர்களுக்குச் சிபாரிசு செய்திருக்கிறேன். சமீபத்தில்கூட ’அகம் புறம் அந்தப்புரம்’ புகழ் முகில் படை, பரிவாரங்களோடு புறப்பட்டு வந்து நிறைய அபூர்வமான புத்தகங்களை அள்ளிச் சென்றார். (‘Blossom’ கடையின் இணைய தளம்: http://www.blossombookhouse.com/)
பழைய புத்தகக் கடை அனுபவங்களைப்பற்றி இப்போது இத்தனை விரிவாக எழுதக் காரணம் உண்டு. இன்றைக்கு பெங்களூரு ஜெயநகர் பகுதியில் ஓர் ATMமைத் தேடிக்கொண்டிருந்த நேரம், வித்தியாசமான ஒரு போர்ட் கண்ணில் பட்டது, ‘Old Books For Sale: Pay By Weight.’
குழப்பத்தோடு படிகளில் ஏறினேன். பழைய புத்தகக் கடைதான். ஆனால் மற்ற கடைகளைப்போலின்றி இங்கே புத்தகங்களை வித்தியாசமாக ரகம் பிரித்திருந்தார்கள், ‘Per Kg 50 Rupees’, ‘Per Kg 70 Rupees’, ‘Per Kg 100 Rupees’ என்று ஆங்காங்கே அறிவிப்புப் பலகைகள்.
அதாவது, உங்களுக்குப் பிடித்த புத்தகம் எதையும் தேர்ந்தெடுக்கலாம். எடை போடலாம். அதற்கு ஏற்ப விலை. ’கிலோ 50 ரூபாய்’ பிரிவில் நீங்கள் ஒரே ஒரு மெல்லிய புத்தகம் எடுத்து அது 100 கிராம்மட்டும் எடை வந்தால், அதன் விலை ஐந்து ரூபாய். அதே புத்தகம் ‘கிலோ 250 ரூபாய்’ பிரிவில் இருந்தால், அதன் விலை 25 ரூபாய்.
’Of course, Its just a different pricing strategey’ என்றுதான் முதலில் அலட்சியமாக நினைத்தேன். அப்புறம் கொஞ்சம் லேசாக மேய்ந்தபோது, நிஜமாகவே பல புத்தகங்களை மிகக் குறைவான விலைக்கு வாங்குவது சாத்தியம் என்று புரிந்தது. புத்தகங்களுக்கு எடை பார்த்து விலை நிர்ணயிக்கிற விளையாட்டு செம ஜாலியாகவும் தோன்றியது. இரண்டு மணி நேரம் செலவழித்துப் பொறுக்கியெடுத்து ஒரு மூணு கிலோ அள்ளிவந்தேன்.
ஆர்வமுள்ளவர்கள் + பெங்களூருவில் உள்ளவர்கள் ஜெயநகர் 4th Block புதிய பேருந்து நிலையம், பழைய புட்டண்ணா தியேட்டர் இரண்டிற்கும் எதிரே உள்ள இந்தக் கடைக்கு ஒரு நடை சென்றுவரலாம். புத்தக Collection ஆரம்பிக்க விரும்புகிறவர்களுக்கு இது நல்ல சாய்ஸ் – நாவல்கள், பிஸினஸ் புத்தகங்கள், சுய முன்னேற்றக் கையேடுகள், ஆரோக்கியம், சமையலில் ஆரம்பித்து சிறு குழந்தைகளுக்கான Board Booksவரை சகலமும் கிடைக்கிறது. வகை, எடைக்கு ஏற்ப விலை.
முக்கியமான விஷயம், யாராக இருந்தாலும் இன்னும் ரெண்டு நாள் கழித்துச் செல்லுங்கள், நாளைக்கு நான் மீண்டும் ஒரு வேட்டைக்குப் போவதாக இருக்கிறேன் 😉
***
என். சொக்கன் …
27 03 2010
16 Responses to "எடைக்கு எடை"

yaa…really it is a good tip too the interested persons 🙂 I ll try to get it man 🙂 Thanks 🙂


செம பதிவு சொக்கன்.
எனக்கும் பெல்ஸ் ரோட் பழைய புத்தகக்கடை, அண்ணா சாலை என்.சி.பி.எச், அண்ணா நகர் பாலாஜி லெண்டிங் லைப்ரரி எல்லாம் ஞாபகம் வருது. 🙂
இங்க குவைத்ல ஒரு பழைய புத்தகக்கடை இருக்கு. q8books ந்னு பேர். http://www.q8books.com அவங்களோட தளம். ஜேக்கப் அப்படிங்கற goan நடத்தறார் கடைய.சும்மா ஹாபி மாதிரி. கடை வாடகை மட்டும் வந்தா போதும்ங்கற நோக்கத்தோட. இங்க தான் ஆரம்பத்துல நிறைய புத்தகங்கள் வாங்கிட்டு இருந்தேன். படிச்சிட்டு 3 நாள்ல குடுத்துட்டா 75% பணத்த திரும்ப தந்துடுவார். மெல்ல என் வாசிப்புக்கு நூல்கள் கிடைக்காம போச்சு அங்க. இப்ப அதிகம் போறதில்ல… உங்க பதிவ படிச்சதும் ஒரு நடை போயிட்டு வரணும்னு தோணுது. நன்றி. 🙂


சூப்பர் பதிவு. கிட்டத்தட்ட இதே போன்ற பதிவைப் போட வேண்டுமென்று ரொம்ப நாளாக நினைத்துக்கொண்டிருந்தேன் 😉
நானும் உங்களைப் போல பழைய புத்தக கடை மேய்கிற ஜென்மம். இங்கே புது இடத்திற்கு மாறிய பிறகு, வீட்டருகே நான்கு பழைய புத்தக கடைகள் (கிட்டத்தட்ட charity கடைகள்). அற்புதமான பழைய புத்தகங்கள், பழைய காமிக்ஸ், பல வண்ண மாங்கா காமிக்ஸ் என கொத்து கொத்தாக கிடைக்கின்றன. நான்கு ஒரு பவுண்ட் என்ற throw away விலையில் பல கிளாஸிக்குகள், ஐரோப்பா மொழிபெயர்ப்புகள் தேத்திக்கொண்டிருக்கிறேன்.
`ஊருக்குப் போனதும் நூலகம் திறக்கப்போகிறீர்களா` என கேட்காத நண்பர்கள் இல்லை. ஆனால், எனக்கென்னவோ
படிக்கிறேனோ இல்லையோ, பார்த்தால் விடக்கூடாது என்ற வெறி ரேஞ்சுக்கு பழைய புத்தக கடை எப்போதுமே ஈர்த்துக்கொண்டிருக்கிறது.
பங்களூர் M.G road – Planet Worldக்கு கீழே சந்தில் பெரிய பழைய புத்தக கடை இன்னும் இருக்கா?


What kind of antics are you up to? I thought you were ancient enough to be called an antique! 🙂


நல்லது. உங்களைப் பார்க்கும்போது ஒரு தராசுடன் வருகிறேன்.


சொக்கன்,
ஹைதராபாதில் இத்தகைய கடைகள் ஏதும் உள்ளதா? நான் அறிந்து Kadambi புத்தகக் கடை இத்தகைய ஒன்று. வேறேதும் நீங்கள் அறிவீர்களா?
நன்றி
ஹரி


சென்னையில் உள்ள பழைய புத்தகக் கடையில் உருப்படியான தமிழ் புத்தகங்கள் கிடைப்பது அரிதுதான். 2003 – 2005 வாக்கில் மூர் மார்க்கெட், திருவல்லிக்கேணி, அண்ணாசாலை என்று பழைய புத்தகக் கடைகளைத் தேடி அலைந்திருக்கிறேன். அதன்பிறகு அதுபோல பயணம் வாய்த்ததில்லை.
சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு பதிப்பகங்களுக்கே நேரில் சென்று புத்தகங்கள் வாங்க ஆரம்பித்தேன். புத்தகங்களைத் தேடுவதைக் காட்டிலும் கடினமான வேலை அது. ஒரு முறை ‘ஆண்டான் செகாவ்’ எழுதிய சிறுகதைகளின் தொகுப்பைத் தேடி அம்பத்தூரிலுள்ள NCBH சென்றிருந்தேன். 8 புத்தகங்களை 40 ரூபாய்க்கு வாங்கினேன். ஆரம்ப நிலை ரஷிய அகராதியும் அதில் அடக்கம். இதர புத்தகங்களும் தரமானவையே.
நான் வாங்கியது பழைய புத்தகங்களை அல்ல. விற்காமல் தேங்கியிருந்த புத்தகங்களை. எழுத்தாளரின் நிலைமையை நினைத்து கலக்கமாக இருந்தது.


[…] This post was mentioned on Twitter by nchokkan. nchokkan said: ஒரு ஃபீலிங்க்ஸ் பதிவு –> https://nchokkan.wordpress.com/2010/03/27/oldbks/ <– அர்த்தராத்திரியில்தான் இப்படியெல்லாம் எழுதமுடியும்போல […]


//இத்தனைக்கும், நான் தூசு ஒவ்வாமை(Dust Allergy)யால் அவதிப்படுகிறவன். தினமும் காலையில் ஷூ அணிவதற்குமுன்னால் அதைத் துணியால் லேசாகத் தட்டினால்கூட எனக்கு ஏழெட்டு தும்மல்கள் வரும். இதனாலேயே என் மனைவி வீட்டைச் சுத்தப்படுத்துகிற, பரணில் இருந்து எதையாவது எடுத்துத் தருகிற வேலைகளுக்குமட்டும் என்னை அழைக்கமாட்டார் (ஹையா, ஜாலி ஜாலி!)
ஆனால், பழைய புத்தகக் கடைகளுக்குள் நுழையும்போதுமட்டும், எப்படியோ இந்தத் தூசு ஒவ்வாமையெல்லாம் காணாமல் போய்விடுகிறது
//
காரியக்கார தூசு ஒவ்வாமை போலிருக்கு.
By the way,கடையில ஏதாவது மிச்ச மீதி விட்டு வெச்சுருக்கீங்களா?


நல்ல பதிவு நன்றி பத்ரி


Nice! I am searching a tamil bookshop in Koramangla. Therinja Sollunga


// எந்தப் புத்தகம் எப்போது என்னமாதிரியான பதிப்பு வந்திருக்கிறது, அச்சு எப்படி, தாள் எப்படி, புகைப்படங்கள் எப்படி, அட்டை வடிவமைப்பு எப்படி, விலை என்ன, முன்னுரை யார், பின்னட்டையில் எழுதியவர் புகைப்படம் உண்டா, ஆசிரியரை முன்னிறுத்துகிறார்களா, அல்லது பதிப்பகத்தையா, அல்லது புத்தகத் தலைப்பையா,//
நீங்கள் நம்மைவிடப் பல மடங்கு மோசமய்யா 🙂
__
லேண்ட்மார்க் மாதிரி கடைகளுக்கெல்லாம் போனால், நானென்னமோ புத்தகப் பிரிவைத் தவிர்த்து, எழுதுபொருள் பிரிவுக்கு சென்று மணிக்கணக்கில் சிக்கிக்கொள்கிறேன். ம்…

1 | ஆயில்யன்
March 27, 2010 at 11:49 pm
வாசிப்பு அனுபவம் பற்றி சிலாகிப்பதை விட புத்தகங்களை வாங்கிய அனுபவங்களை சொல்வது நினைத்திருப்பது என்பது ரொம்ப ஜாலியான விசயமே – அட இது 1998ல் புத்தக கண்காட்சியில வாங்கினது அப்ப கூட நித்தி புக்ஸ்ஷாப்புக்கு வந்தாருய்யா – மாதிரியாக 😉 பழைய புத்தகங்கள் எனக்கு தெரிந்து ராணி காமிக்ஸ்களை 25 பைசா கொடுத்து வாங்கிபடித்துவிட்டு திரும்பி கொடுத்த அனுபவம் மட்டுமே! இது போன்ற பழைய புத்தக கடைகளின் மீது ஏனோ ஒரு பயம் – ஏமாற்றிவிடுவார்களோ என்று காசு போனாலும் பரவாயில்ல ஏமாந்துடகூடாதுடா கைப்புள்ளன்னு புதியதாக வாங்கியே அனுபவம் !
நாளைக்கு புத்தக வேட்டையா? மீட் போடற லொக்கேஷன் தேடிக்கிட்டிருந்தாங்களே டுவிட்ல பார்த்து எல்லாரும் அங்க குவிஞ்சிடப்போறாங்க :))))