மனம் போன போக்கில்

சுழல்

Posted on: April 1, 2010

நேற்று அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியவுடன் குற்றப் பத்திரிகை வாசிக்கப்பட்டது, ‘உன் பொண்ணரசிங்க இன்னிக்கு என்ன பண்ணாங்க தெரியுமா?’

’என்னது?’

’ரெண்டு பேருமாச் சேர்ந்து வாஷிங் மெஷின் ட்யூபைப் பிடுங்கி விட்டுட்டாளுங்க!’

‘அதனால?’ சுவாரஸ்யமே இல்லாமல் கேட்டேன். அடுத்த வாக்கியத்தில் எனக்கு வெடிகுண்டு காத்திருப்பது அப்போது தெரியவில்லை.

‘பெட்ரூம்முழுக்கத் தண்ணி!’

பதறிப்போனேன், ‘கட்டில் என்ன ஆச்சு?’

கட்டில்மீது எனக்கு என்ன அக்கறை?

ச்சீய், தப்பா நினைக்காதீர்கள். என் அக்கறை கட்டிலுக்குள் இருக்கும் புத்தகங்களைப்பற்றி.

அந்தக் காலத்துக் கட்டில்களுக்கு நான்கு கால் இருக்கும், ஒரு வால் இருக்கும், … ஸாரி, ஒரு ஃப்ளோவில் வந்துவிட்டது, அந்த வால் வாக்கியத்தை அழித்துவிடுங்கள்.

அதாவது, அந்தக் காலத்துக் கட்டில்களுக்கு நான்கு கால் இருக்கும், அவற்றுக்கு நடுவே நிறைய இடைவெளி இருக்கும், குப்பை கொட்டவும், பொருள்களை ஒளித்துவைக்கவும், சின்ன வயதுச் சில்மிஷங்களுக்கும் அது உகந்த இடமாகும்.

ஆனால், இப்போதெல்லாம் கட்டில்களுக்கு யாரும் கால் வைப்பதில்லை. ஒரு நீளமான மரப் பெட்டி அல்லது பீரோவைக் கவிழ்த்துப்போட்டுக் கட்டில் என்று சொல்லிவிடுகிறார்கள். அதன்மேல் கதவு வைத்து உள்ளே ஏகப்பட்ட சமாசாரங்களைப் பாதுகாத்துவைக்கலாம் என்பதால், நகரங்களில் இந்தப் பெட்டிக் கட்டில்களுக்குச் செம மவுசு.

ஆரம்பத்தில் நாங்களும் traditional (அதாவது நாலு கால்) கட்டில்தான் வைத்திருந்தோம். அது உடைந்தபிறகு இந்த நவீன கட்டிலை வாங்கினோம்.

இந்தக் கட்டிலில் 100% Storage Area உண்டு. அதாவது, கட்டிலின் மேல் பகுதியில் மூன்று கதவுகள் வைத்து உள்ளே என்னுடைய பழைய, அடிக்கடி refer செய்யப்போவதில்லை எனும்படியான புத்தகங்களைப் பதுக்கிவைக்கலாம். மிஞ்சிய இடத்தில் என் மனைவி சில பாத்திரங்களைக்கூடப் போட்டு மூடிவிட்டார். பெரும்பசிக்காரன்போல அத்தனையையும் விழுங்கிவிட்டு அப்பாவியாக நின்றது கட்டில்.

எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். புதுக் கட்டிலுக்காகச் செலவழித்த தொகைகூட ஒரு பெரிய விஷயமாகத் தோன்றவில்லை. வீட்டில் ஏகப்பட்ட ஷெல்ஃப்கள் காலியாகிவிட்டதே. அவற்றில் புதுக் குப்பைகளைப் போட்டு நிரப்பலாமே. ஜாலி!

ஆனால், இதில் ஒரே ஒரு பிரச்னை. இந்தப் புதிய கட்டிலுக்குக் கீழே காலி இடம் கிடையாது. பெட்டிபோல முழுவதுமாக மூடப்பட்டிருக்கும். அடியில் பெருக்கித் துடைக்கமுடியாது.

அடுத்த பிரச்னை, கட்டில்மீது தண்ணீர் படக்கூடாது. அவர்கள் பயன்படுத்துகிற மரம் தண்ணீரின் ஈரப்பதத்தைத் தாங்காதுபோல.

ஆரம்பத்தில் இந்தக் கட்டுப்பாடுகள் எங்களுக்கு ஒரு பெரிய விஷயமாகத் தோன்றவில்லை. சில வாரங்கள் கழித்து வீட்டில் சில சின்னச் சின்னப் பொருள்கள் (சீப்பு, விசிடி, டிவிடி, அரை அடிஸ்கேல், சப்பட்டை விக்ஸ் டப்பா முதலியவை) காணாமல்போனபோதுதான் ரொம்ப அவஸ்தைப்பட்டோம்.

காரணம், எங்களுடைய புத்திரி சிகாமணிகள் இந்தப் பொருள்களைக் கட்டிலுக்குக் கீழே இருக்கும் சொற்ப இடைவெளியில் நுழைத்து விளையாட ஆரம்பித்திருந்தார்கள். அதற்குள் போனது திரும்ப வராது என்கிற தத்துவம் அவர்களுக்குப் புரியவில்லை.

போகட்டும், குழந்தைகள் விளையாடுவதற்காக ஒரு சீப்பு, ரெண்டு விக்ஸ் டப்பா கூடுதலாக வாங்கினால் குறைந்தா போய்விடுவோம்? சகித்துக்கொண்டோம்.

இப்போது, அதே குழந்தைகள் செய்த கலாட்டாவில் சலவை இயந்திரம் பொங்கிவிட்டது, தண்ணீர் அறைமுழுக்க நிறைந்துவிட்டது.

கட்டில்தவிர மீதமிருந்த இடத்தை என் மனைவி துடைத்து எடுத்துவிட்டார். பெட்டிக் கட்டிலுக்குக் கீழே தேங்கியிருக்கிற தண்ணீரை எப்படித் துடைப்பது?

அந்தத் தண்ணீர் தானாக ஆவியாகிவிடும் என்று முதலில் நினைத்தாராம். ஆனால் உள்ளே இருக்கும் புத்தகங்களெல்லாம் பாழாகிவிடுமோ என்று அவருக்குப் பயம்.

எனக்கும் அதே பயம்தான். கட்டில் எக்கேடோ கெடட்டும், ஊர் ஊராகத் தேடிச் சேர்த்த புத்தகங்கள் போனால், மறுபடி எங்கிருந்து வாங்குவது?

இவ்வளவு அவஸ்தை ஏன்? கட்டிலை நகர்த்திவிட்டுத் துடைக்கவேண்டியதுதானே?

அதுவும் முடியாது. அறையின் பெரும்பகுதியை நிரப்பியிருந்தது அந்தக் கனமான கட்டில். போதாக்குறைக்கு உள்ளே சில ஆயிரம் புத்தகங்கள்வேறு. அத்தனையும் சேர்ந்து கட்டிலை நகர்த்தமுடியாத சூழ்நிலை.

ஆனால், இப்போது வேறு வழியில்லை. கட்டிலை, உள்ளே இருக்கும் புத்தகங்களைக் காப்பாற்றவேண்டுமானால் நகர்த்திதான் தீரவேண்டும். நானும் என் மனைவியும் ஆஞ்சனேயனை வேண்டிக்கொண்டு இழுக்க ஆரம்பித்தோம்.

நெடுநேரம் இழுத்தபிறகும், கட்டில் துளிகூட அசையவில்லை. எங்கள் கையிலிருந்த பலகைதான் உடைந்துவிடும்போல் கொஞ்சம் வளைந்து பயமுறுத்தியது.

அபூர்வமாக என்னுடைய மரமண்டையிலும் சில நல்ல ஐடியாக்கள் தோன்றும். நேற்றைக்குத் தோன்றியது. கட்டில் முனையைப் பிடித்துக் குறுக்கே சுற்றினால் என்ன?

இப்போது, கட்டில் நகர்ந்தது. அதிக சிரமம் இல்லாமலே அதனைக் குறுக்கே சுழற்றி நகர்த்தமுடிந்தது. ஒவ்வொரு நகர்த்தலுக்கும் முக்கோண வடிவில் கொஞ்சம் கொஞ்சமாக நிலம் வெளியே தெரிய, அதைத் துடைத்துச் சுத்தப்படுத்தினோம்.

கடந்த பல மாதங்களாக எங்கள் மகள்கள் போட்ட குப்பைகளெல்லாம் அடுத்த சில நிமிடங்களில் வெளியே வந்தன. திட்டிக்கொண்டே எடுத்து வீசினோம்.

நடுவில் ஒரு காகிதம், என்னுடைய கையெழுத்தில் கிடைத்தது, சொதசொதவென்று நன்றாக நனைந்து நைந்திருந்தது. பிரிக்கப் பார்த்தால் கிழிந்தது, ‘தூக்கிக் குப்பையில போடு’ என்றேன்.

‘ஏதாச்சும் முக்கியமான பேப்பரா இருந்தா?’

‘நேத்துவரைக்கும் அப்படி ஒரு பேப்பர் இருக்கிறதே எனக்குத் தெரியலை, அப்படீன்னா அது முக்கியமில்லைன்னுதான் அர்த்தம், தூக்கி வீசிடலாம்!’

மறுபடியும் இழுக்கத் திரும்பினோம். கொஞ்சம் கொஞ்சமாக அறையின் இன்னொரு மூலைக்கு நகர்ந்தது கட்டில்.

முக்கோணம் முக்கோணமாக ஈர நிலத்தைப் பிடித்துத் துடைக்க முழுசாக முக்கால் மணி நேரம் ஆனது. இதற்குள், கட்டில் சில அடிகள் நகர்ந்து, 180 டிகிரி சுழன்றிருந்தது.

இப்போது இதை மறுபடி சுழற்றவேண்டும். பழைய மூலைக்குத் தள்ளவேண்டும். இன்னொரு முக்கால் மணி நேர வேலை. தேவுடா!

‘பேசாம, கட்டிலை இப்படியே விட்டுட்டா என்ன?’

‘ஐயோ, தப்பு தப்பு!’

‘ஏன்?’

’லூஸாப்பா நீ? யாராச்சும் வடக்கே தலைவெச்சுப் படுப்பாங்களா? மூளைக்குள்ள இருக்கிறதையெல்லாம் காந்தம் பிடிச்சு இழுத்துடும்!’

நான் திருதிருவென்று விழித்தேன். வடக்குப்பக்கம் பிரம்மாண்டமான ஒரு காந்தம் இருக்கிறதா? எங்கே? எதற்கு?

ஆனால், இந்த பக்தி, நம்பிக்கை விஷயத்தில் வாதாடுவது நேர விரயம். பழையபடி கட்டிலைச் சுழற்ற ஆரம்பித்தேன்.

முன்அனுபவம் காரணமாக, இந்தமுறை கட்டில் வேகமாகச் சுழன்றது. இருபது நிமிடத்தில் பழைய இடத்துக்குச் சென்றுவிட்டது.

கெட்டதிலும் ஒரு நல்லது, இந்தத் தண்ணீர்த் தேங்கல் சம்பவம்மட்டும் நடந்திருக்காவிட்டால், இன்னும் இரண்டு வருடத்துக்காவது இந்தக் கட்டிலின் கீழே இருக்கும் பகுதியைச் சுத்தப்படுத்தியிருக்கமாட்டோம். அப்படி நினைத்துச் சந்தோஷப்படவேண்டியதுதான்.

இத்தனை அவஸ்தையிலும் ஒரே ஒரு நிம்மதி. கட்டிலுக்குள் இருந்த ஒரு புத்தகத்தையும் ஈரம் எட்டவில்லை. Stylespaவுக்கு நன்றி!

***

என். சொக்கன் …

01 04 2010

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இதனை மேலும் பலர் வாசிப்பதற்கு உதவுங்க – இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

9 Responses to "சுழல்"

nicely written. மற்றதை விட புத்தகங்கள் பாழாகிவிடுமோ என்கிற அதிக பயத்தை நானும் உணர்ந்திருக்கிறேன்.

//நேத்துவரைக்கும் அப்படி ஒரு பேப்பர் இருக்கிறதே எனக்குத் தெரியலை, அப்படீன்னா அது முக்கியமில்லைன்னுதான் அர்த்தம், தூக்கி வீசிடலாம்!//

சில சமயம் அப்புறமாய்த் தேவைப்படும் என்று நாம் பத்திரமாய் எடுத்து வைத்த பொருள்கள் எல்லாம் வருடக் கணக்கில் கவனிக்கப்படாமல் அல்லது தேவைப்படாமல் அப்படியே கிடக்கும். இது மாதிரி நம் வீட்டுக்குள் சிதறிக்கிடக்கிற தேவைப்படாத பொக்கிஷங்களை தூக்கிக் கடாசிவிட்டால் பாதி வீடு காலியாகிவிடும்.

ஆனால் சிலவற்றை தேவைப்படாவிட்டாலும் தூக்கி எறிய மனசு வராது. எமோஷனல் அட்டாச்மெண்ட்!

எப்படியோ பெரிய சுழல்-ல மாட்டிக்கிட்டீங்க.

Its happening every sunday in my home. Ippo sunday thaan full working day(Bahrain il laye irunthirukkalam).

nalla pathivu
vaazhthukkal

உங்களுக்கு நடந்த நிகழ்வுகளை நாங்களுமே அனுபவித்தது போன்ற உணர்வை ஏற்படுத்தும் உங்கள் வர்ணிப்பும், எழுத்து நடையும் சுவாரசியம். நான் தொடர்ந்து தங்கள் பதிவுகளை வாசிக்கிறேன். பின்னூட்டம் இடத்தான் நேரமும் சூழ்நிலையும் வாய்ப்பதில்லை.

நல்ல பதிவு நன்றி பத்ரி

//எங்களுடைய புத்திரி சிகாமணிகள் இந்தப் பொருள்களைக் கட்டிலுக்குக் கீழே இருக்கும் சொற்ப இடைவெளியில் நுழைத்து விளையாட ஆரம்பித்திருந்தார்கள். அதற்குள் போனது திரும்ப வராது என்கிற தத்துவம் அவர்களுக்குப் புரியவில்லை//

இதுதான் விஷயமா.. அடிக்கடி விக்ஸ் டப்பா தொலையற விஷயம் இப்பதான் விளங்குது. (ஒரு நாள் நைட்டு விக்ஸ் டப்பா இல்லாம எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா சார்.. மூக்கு ஒழுவறத நிப்பாட்ட முடியாம, கவுந்தடிச்சி படுத்துகிட்டு தலைய கட்டிலின் விளிம்புல வச்சிக்கிட்டு மழைக்கு ஓழுவுற வீட்டில வெச்சிருப்பாங்களே அது போல ஒரு பாத்திரம் வச்சிக்கிட்டு ம்.. அப்பப்பா)

ஏன் லேபிள்ல, விளம்பரம்ன்னு போடல? 🙂
நாங்க டிடைல் கேப்போம்!!!!!!

பதிவு நச்ச்!

sureshkannan, சித்ரன், Kesava Pillai, thamilannan, ரவிபிரகாஷ், goinchami, Surendran, balakumaran,

நன்றி 🙂

//தொடர்ந்து தங்கள் பதிவுகளை வாசிக்கிறேன். பின்னூட்டம் இடத்தான் நேரமும் சூழ்நிலையும் வாய்ப்பதில்லை//

பரவாயில்லை சார். வாசிப்பதுதான் முக்கியம், பின்னூட்டமெல்லாம் இரண்டாம்பட்சம்தானே!

//ஏன் லேபிள்ல, விளம்பரம்ன்னு போடல?//

ஸ்டைல்ஸ்பா செக் இன்னும் வரலியே, வரட்டும், போட்டுடறேன் 😉

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 621,011 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

April 2010
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
%d bloggers like this: