மனம் போன போக்கில்

நேற்றைக்குப் பூங்காவில் ஒரு விநோதமான ஜோடியைப் பார்த்தேன்.

இருவரும் கை கோர்த்துக்கொண்டு ஒன்றாகதான் உள்ளே நுழைந்தார்கள். ஆனால் அடுத்த சில நிமிடங்களுக்குள் அவர்களுக்கிடையிலான வித்தியாசம் பளிச்சென்று தெரிந்தது.

அந்தப் பெண்ணுக்கு வயது இருபத்தைந்து அல்லது முப்பது இருக்கலாம். கிராமத்து முகம், சற்றே உயர்த்திக் கட்டிய கண்டாங்கிச் சேலை, கையில் வயர் கூடை, கழுத்தில் மாட்டித் தொங்குகிற செல்ஃபோன் ஒன்றுதான் அவளிடம் நவீனமாகத் தென்பட்டது.

அவளோடு வந்த பையனுக்கு மூன்று அல்லது நான்கு வயது இருக்கும். கொழுகொழு தேகம், கண்களில் அளவில்லாத குறும்பு.

பூங்காவுக்குள் நுழைந்தவுடன், அந்தச் சிறுவன் மண் மேடையை நோக்கி ஓடினான். அங்கிருந்த சறுக்குமரத்தில் ஏறிச் சரேலென்று கீழே இறங்கினான்.

இந்தப் பெண் அலட்டிக்கொள்ளாமல் மெல்ல நடந்து சென்று ஒரு சிமெண்ட் நாற்காலியில் அமர்ந்தது. கூடையிலிருந்து பிளாஸ்டிக் டப்பா, ஸ்பூனை எடுத்துக்கொண்டது.

அதன்பிறகு, அந்தப் பையன் ஊஞ்சல், சீ-ஸா, A, B, C வடிவக் கம்பிக் கூண்டுகள், சறுக்குமரம், குரங்குத் தொங்கல் கம்பிகள் என்று மாறி மாறி விளையாட, இந்தப் பெண் பின்னாலேயே ஒவ்வோர் இடமாக ஓடியது. Go, Come, Play, House, Good, Yes, No என்பதுபோன்ற ஏழெட்டு ஆங்கில வார்த்தைகளைத் தமிழோடு கலந்துகட்டிப் பேசியபடி அவனைத் தாஜா செய்து சாப்பாடு ஊட்டியது.

பையன் பரவாயில்லை, ரொம்பப் படுத்தாமல் சாப்பிட்டான். ஐந்தாறு நிமிடங்களுக்குள் டப்பா காலி.

அதோடு, அந்தப் பெண்ணின் கடமை முடிந்தது. மணல் மேடையின் ஒரு மூலையில் போய் உட்கார்ந்துகொண்டு எங்கேயோ வேடிக்கை பார்க்க ஆரம்பித்தது.

சிறிது நேரம் கழித்து, அந்தச் சிறுவன் அவளைக் கூப்பிட்டான் (ஆங்கிலத்தில்), ‘ஏய் சத்யா, இங்கே வா!’

அவ்வளவுதான். அந்தப் பெண் வெடித்துவிட்டாள், ‘சத்யாவாம், சத்யா, என்னை அப்டிக் கூப்டாதேடா!’

அந்தப் பையன் பாவம். அவனுக்குத் தமிழ் தெரியவில்லை. ‘சத்யா’வாகப்பட்டவளின் கோபத்துக்குக் காரணம் புரியாமல் அப்பாவித்தனமாக விழித்தான்.

அவள் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. தொடர்ந்து புலம்பிக்கொண்டே இருந்தாள். ‘உரிமையாக் கூப்பிடறதைப்பாரு, சத்யாவாம், நீயாடா பேர் வெச்சே? என் புருஷன்கூட என்னை இப்படிக் கூப்டது கிடையாது, தெரியுமா?’

அதுவரை ஏதோ புத்தகத்தில் மூழ்கியிருந்த எனக்கு, முதன்முறையாக இவர்கள் பேச்சில் சுவாரஸ்யம் தட்டியது. பேர்வைப்பதே கூப்பிடுவதற்காகதானே? தன்னை ஒருவன் பெயர் சொல்லி அழைத்தான் என்பதற்காக இந்தப் பெண் ஏன் கோபப்படுகிறாள்? இதற்கு வேறு ஏதோ காரணம் இருக்கவேண்டும் என்று தோன்றியது. புத்தகத்தை மூடிவைக்காமல் ஒட்டுக்கேட்க ஆரம்பித்தேன்.

அவள் இன்னும் அந்தப் பையனைப் பாமரத் தமிழில் திட்டிக்கொண்டிருந்தாள், ‘தடிமாடுமாதிரி முழிக்கிறதைப்பாரு, உன்னை என் தலையில கட்டிட்டு உங்காத்தாவும் அப்பனும் (இப்படியேதான் சொன்னார்) ஜாலியா சினிமா பார்க்கப் போய்ட்டாங்க, எனக்கென்ன தலையெழுத்தா, இந்த வேகாத வெய்யில்ல உன் பின்னாடி லோலோ-ன்னு அலையணும்ன்னு?’

‘நான் ஏதும் வேலை இல்லாம அஞ்சு நிமிஷம் நிம்மதியா ரெஸ்ட் எடுத்தா உங்காத்தாக்காரிக்குப் பொறுக்காது, இன்னும் கொஞ்சம் சிரமப்படட்டும்ன்னு உன்னை என் கையில ஒப்படைச்சுட்டுப் போய்ட்டா மவராசி, ஏன், உன்னையும் சினிமாவுக்குக் கூட்டிகிட்டுப் போனா அவ மவுசு கொறஞ்சிடுமோ?’

அடுத்த இருபது நிமிடங்கள் (நான் அந்தப் பூங்காவில் இருந்தவரை) இந்தத் திட்டல் படலம் தொடர்ந்தது. அவளுடைய திட்டல் வார்த்தைகளில் ஒன்றுகூட அந்தப் பையனுக்குப் புரிந்திருக்காது. என்றாலும், அவன் முகம் லேசாகச் சுருங்கிப்போனதுபோல் தெரிந்தது – என்னுடைய பிரமையாகக்கூட இருக்கலாம்.

***

என். சொக்கன் …

05 04 2010

11 Responses to "ஆயா"

எஜமானி அம்மா பேரில் பணியாளினிக்கு இப்படிதான் கோபம் வந்து ஏதோ ஒரு காரணத்தை வைத்து வெடித்து புலம்புவது வாரிசுகளின் மேல்தான். அலுப்பு எல்லோருக்கும்
பொதுவானது. ஆனால் பணம்தானே மேலாநதாக இருக்கிறது. உங்களுடயது பிரமையல்ல. பலவிதத்தில் ஒருவிதமிது.

ஏழைகளின் மேல் இப்படி கட்டற்ற உங்கள் எதிர்மறை விமர்சனங்களை அவிழ்த்து விடுவது உங்கள் மேட்டிமைத்திமிரினை பறைசாற்றுகிறது! ஏழை என்றால் சொன்ன வேலையை மட்டுமே செய்து எதிர்த்துப்பேசாமல் இன்முகத்துடன் அடிமையாய்தான் வாழவேண்டும் என்று உங்கள் மனதில் ஏற்கனவே கட்டிவைக்கப்பட்டுள்ள பாசிச பரதேசிபேயின் கோர முகம் அப்பட்டமாய் வெளியே தெரிகிறது! சம்பளமாய் பணத்தை கொடுத்துவிட்டு தன் சொந்த குழந்தையைக்கூட கவனித்துக்கொள்ள நாதியற்ற சுரண்டிப்பிழைக்கும் அமேரிக்க கைக்கூலிகளான முதலாளிவர்கத்தின் அசிங்க முகம் உங்கள் கண்களுக்கு படாதது ஒன்றும் எனக்கு ஆச்சரியம் ஏற்படுத்தவில்லை!

😉

அங்காடிதெரு பாத்து 5 நாள்தன் ஆச்சு! :)))

யோசிக்க வைத்த இடுகை.

அம்மா அப்பா ரெண்டு பெரும் வேலைக்குப் போறவங்களா இருந்தா வீட்ல பெரியவங்க யாராவது இருக்கணும்ங்கிறதை சூசகமா உணர்த்தற இடுகை.

நல்ல வேளை இந்தப் பையனுக்கு தமிழ் தெரியலை, அவளுக்கு ஆங்கிலம் தெரியலை.

எங்க வீட்டுப் பிள்ளைங்க தாத்தா பாட்டி கிட்ட வளர்ந்தவங்க. ஆனாலும் அம்மாவை விட்டுக் குடுக்கிறதில்லை. என் பாடுதான் திண்டாட்டம். ஏதாவது விவாதம்ன்னா எல்லாரும் ஒரு கட்சி. நான் தனிக் கட்சின்னு ஆயிடறேன்!

http://kgjawarlal.wordpress.com

Ippadi ethanai ‘varungala indiaakkal’ thindadukiratho….

நல்ல வேளை அந்த வீட்டு பணியாளர் அந்த குழந்தையை அடிக்காமல் அல்லது கிள்ளாமல் விட்டாரே

//பேர்வைப்பதே கூப்பிடுவதற்காகதானே//

உங்கள் குழந்தைகள் உங்கள் பெற்றோரை அப்படி பெயர் சொல்லி அழைப்பதை நீங்கள் ஏற்று கொள்வீரா

நல்ல பதிவு நன்றி பத்ரி

பரிதாபம்தான். ஆனால் இதற்கொரு மறுபக்கம் இருக்கிறது. இப்படி வளர்கிற குழந்தைகள் நாளை உலகத்தை தைரியமாக எதிர் கொள்ளும். அம்மா அப்பாவின் அரவணைப்பில் நெருக்கமாக வளர்கிற குழந்தைகளைப் போல யாரும் திட்டினால் உடனே முகம் சுருங்கி சோர்ந்து போய் உட்கார்ந்து கொள்ளாது.

chollukireen, dyno, Jawahar, kekanaan, அரவிந்தன், goinchami, SRK,

நன்றி 🙂

//அங்காடிதெரு பாத்து 5 நாள்தன் ஆச்சு!//

அப்பாடா, ஒரு நிமிஷம் பயந்துட்டேன் சாமி :)))))))

//நல்ல வேளை அந்த வீட்டு பணியாளர் அந்த குழந்தையை அடிக்காமல் அல்லது கிள்ளாமல் விட்டாரே//

ஒருவேளை அது வீட்டுக்குள் நடக்கலாம். பொதுவில் அதைச் செய்யத் தயங்குவார்கள் என்று நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன்.

//உங்கள் குழந்தைகள் உங்கள் பெற்றோரை அப்படி பெயர் சொல்லி அழைப்பதை நீங்கள் ஏற்று கொள்வீரா//

நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. ஒருவர் (அவர் என்னதான் சிறியவராக இருப்பினும்) தன் பெயர் சொன்னதற்காக இவ்வளவு கோபமா என்கிற பொருளில்தான் குறிப்பிட்டேன்.

//இப்படி வளர்கிற குழந்தைகள் நாளை உலகத்தை தைரியமாக எதிர் கொள்ளும். அம்மா அப்பாவின் அரவணைப்பில் நெருக்கமாக வளர்கிற குழந்தைகளைப் போல யாரும் திட்டினால் உடனே முகம் சுருங்கி சோர்ந்து போய் உட்கார்ந்து கொள்ளாது//

கெட்டதிலும் ஒரு நல்லது 🙂

//அவன் முகம் லேசாகச் சுருங்கிப்போனதுபோல் தெரிந்தது – என்னுடைய பிரமையாகக்கூட இருக்கலாம்//

இருக்கலாம்

This situation shud not have arisen at all ! I suspect that the parents have illegally employed the woman(without paying any PF,etc) and making her work in illegal working conditions even as per exisiting labor laws in India

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 525 other followers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 490,938 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்

Tamilish

For தமிழ் Peopleதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

April 2010
M T W T F S S
« Mar   May »
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
%d bloggers like this: