வாத்தியார்
Posted April 7, 2010
on:- In: Art | நவீன அபத்தங்கள் | Bangalore | Characters | Classroom | Kids | Learning | Life | People | Students | Teaching | Time | Uncategorized
- 9 Comments
பக்கத்து வீட்டில் ஒரு பையன். பெயர் அர்ஜுன் என்று வையுங்களேன்.
ஏப்ரல், மே கோடை விடுமுறையை முன்னிட்டு, அர்ஜுன் வீட்டுக்கு ஒரு வாத்தியார் தினமும் வருகிறாராம். காலை 8 டு 9 அவனுக்கு ஓவியம் வரையக் கற்றுத்தருகிறாராம்.
இதைக் கேள்விப்பட்டதிலிருந்து, நங்கை என்னை நச்சரிக்க ஆரம்பித்துவிட்டாள், ‘என்னையும் ட்ராயிங் க்ளாஸுக்கு அனுப்புப்பா, ப்ளீஸ்!’
’யம்மாடி, உன்னை க்ளாஸுக்கு அனுப்பறது பிரச்னையே இல்லை. ஆனா, லீவ் நாள்ல காலையில ஒன்பது, ஒன்பதரைவரைக்கும் நீ எழுந்திருக்கமாட்டியே, நீ எப்படி எட்டு மணி ட்ராயிங் க்ளாஸுக்குப் போகமுடியும்?’
‘நான் கரெக்டா செவன் தேர்ட்டிக்கு எழுந்துடுவேன்ப்பா.’
‘ஒருவேளை எழுந்திருக்கலைன்னா?’
‘நாலு பக்கெட் தண்ணியை என் தலையில ஊத்து!’
இத்தனை தீவிரமாக ஒரு பெண் இருக்கும்போது, அந்தக் கலை ஆர்வத்தைக் கெடுக்கக்கூடாது. இன்று காலை எட்டு மணிக்கு, அந்த ஓவிய வகுப்புபற்றி விசாரிப்பதற்காகப் பக்கத்து வீட்டுக்குச் சென்றிருந்தேன்.
அந்த வீட்டு வாசலில் ஒருவர் டிஷர்ட், ஜீன்ஸ் சகிதம் பிளாஸ்டிக் நாற்காலியில் உட்கார்ந்து ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ படித்துக்கொண்டிருந்தார். அவரை நெருங்கி, ‘சார், இங்க ட்ராயிங் மாஸ்டர்?’ என்றேன் சந்தேகமாக.
‘நான்தான். என்ன வேணும்?’
ஓவியம் வரைகிறவர்கள் ஜிப்பாவும் ஜோல்னாப்பையுமாக அலைந்தது அந்தக் காலம். இலக்கியவாதிகள்போலவே இவர்களும் மாறிவிட்டார்கள்போல.
இந்த ஓவிய ஆசிரியருக்கு மிஞ்சிப்போனால் இருபத்தைந்து வயது இருக்கலாம். கை விரல்கள் வெண்டைக்காய்போல நீள நீளமாக இருந்தன. ஒரு தேர்ந்த நடனமணியின் லாவகத்தோடு அவற்றை அசைத்து அசைத்து அவர் பேசுகையில் காற்றில் ஓவியம் வரைகிறாரோ என்று சந்தேகமாக இருந்தது.
கொஞ்ச நேரம் அவரிடம் வகுப்புபற்றி விசாரித்துவிட்டு, ‘உங்க க்ளாஸ் தினமும் எட்டு மணிக்குன்னு சொன்னாங்களே’ என்று இழுத்தேன்.
‘ஆமா. அதுக்கென்ன?
‘இப்ப மணி எட்டரை ஆயிடுச்சே. க்ளாஸ் ஆரம்பிக்கலியா?’
‘அர்ஜுன் இப்பதான் தூங்கி எழுந்து டாய்லெட்டுக்குப் போயிருக்கான். அவன் ஹார்லிக்ஸ் குடிச்சு முடிச்சுட்டு வரட்டும்ன்னு காத்திருக்கேன்’ அப்பாவியாகச் சொன்னார் அவர். அதற்குமேல் பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்பதுபோல் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் கவிழ்ந்துகொண்டார்.
வீடு திரும்பும்போது பாக்யராஜின் ’க்ளாஸிக்’குகளில் ஒன்றான ‘ஏக் காவ்மேய்ன் ஏக் கிஸான் ரஹ்தா தா’ காமெடிதான் ஞாபகம் வந்தது!
***
என். சொக்கன் …
07 04 2010
9 Responses to "வாத்தியார்"

கூடவே ’மொழி’ படத்துல எதுத்த வீட்டு குண்டு பையனுக்கு பிரகாஷ்ராஜ் ம்யூசிக் சொல்லித்தர்ரதையும் நினைச்சுக்குங்க.
அதுசரி நீங்க ஓவியரை வர்ணிச்ச விதம்!!!! பரதம் தெரியுமான்னு லேசா கேட்டுப்பாருங்க.


அப்ப நங்கை கிளாஸ் எப்ப ஸ்டார்ட் ஆகுது? 🙂
கண்டிப்பா 7.30க்கு எழுப்பவேண்டியது இனி ரெண்டு மாசத்துக்கு உங்க கடமை ! :)))


இந்த முறை, நீங்கள் எழுதியதைவிட எழுதாமல், ஜஸ்ட் நினைவூட்டிய “ரகு தாத்தா” ரொம்ப சிரிப்பு வரவழைத்தது! க்ளாசிக் காமெடி அது! பஞ்ச தந்திரம் படம் போல இ.போ.நா.வா.வும் க்ளாசிக் காமெடிகளில் சேர்க்கப்பட வேண்டிய படம்.
அதில் ஓட்டைக்காரில் துபாய்க்கு பெண்ணை கடத்தும் காமெடி வயிறு வலிக்க சிரிப்பு வரவழைக்கும்.
“துபாய்க்கு எப்படி போகணும்?”
“இப்பிடியே நேரா போய் வலதுப்பக்கம் திரும்பு, அங்க ஒரு ஆலமரம் இருக்கும், அதுக்குப் பக்கத்துல துபாய்” (என்பது போல வசனம்).


சொக்கன் (தங்களின் முழுப்பெயர் இதுவேயோ?),
உங்கள் அனைத்து பதிவுகளும் மிகவும் அருமை (சிலவற்றைத் தவிர :)). ‘தினம் ஒரு கவிதை’ வருவது நின்ற ஏக்கத்தை இப்போது உங்களின் இந்த தளத்தில் உள்ள பதிவுகளைப் படித்து போக்கிக்கொண்டு புத்துணர்ச்சி பெறுகிறேன். சத்யராஜ்குமார், சித்ரன், தற்போது நீங்கள் – எல்லோறும் என்னை மிகவும் கவர்க்கிறீர்கள் உங்களின் எழுத்து நடையில், மற்றும் முடிந்தவரை ஆங்கிலம் கலக்காமல் எழுதுவதில்.
தனிப்பட்டமுறையில், நங்கை, மங்கை என தமிழ்ப்பெயர்களை உங்களின் குழந்தைகளுக்கு சூட்டியமையில், நிமிர்ந்து நிற்கிறீர்கள் (எனக்கு ஆசை இருந்தும் அது கிட்டவில்லை. மனைவியின் வடக்கத்திய பெயர்களின் மோகத்தை எதிர்த்து, என் (இருமாத) குழந்தைக்கு வருண் என்ற பெயர் வரை தான் என்னால் வர முடிந்தது).
நங்கை-யின் பொருள் என்ன? யோசித்துப்பார்த்த போது, இதுவரை மங்கை என்பதையே நங்கையின் பொருளாய்ப் புரிந்து வைத்துள்ளேன்.
நிறைய எழுதுங்கள், நிறைவாய் எழுதுங்கள்! 🙂
– சுப.இராமநாதன், சியாட்டில்


[…] வாத்தியார் […]


[…] வாத்தியார் September 21st, 2010 […]

1 | Palay King
April 7, 2010 at 2:28 pm
நவீன அபத்தங்கள்
Good One…