டிஃபன் ரூம்
Posted April 21, 2010
on:- In: Bangalore | Brand | Courtesy | Customer Care | Customer Service | Customers | Expectation | Food | Time | Uncategorized | Value | Visit | Waiting
- 16 Comments
’பெங்களூர்ல பத்து வருஷமா இருக்கே, இன்னும் எம்.டி.ஆர். மசால் தோசை சாப்டதில்லையா? நீ வேஸ்ட்!’
இப்படிப் பல நண்பர்கள், உறவினர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் உடனடியாக நாக்கில் நீர் ஊறும். பரபரவென்று ஓடிப்போய் ஏழெட்டு எம்.டி.ஆர். மசால் தோசைகளைக் கபளீகரம் செய்யவேண்டும் என்று கைகள், கால்கள் தினவெடுக்கும், இல்லாத மீசைகூடத் துடிப்பதுபோல் டென்ஷனாவேன்.
ஆனால் ஏனோ, எனக்கும் எம்.டி.ஆர். ஹோட்டல் மசால் தோசைக்கும் ஜாதகம் ஒத்துப்போகவில்லை. நான் (அல்லது நாங்கள்) அங்கே போகும்போதெல்லாம் மதிய உணவு நேரமாகவோ, ராத்திரிச் சாப்பாட்டு நேரமாகவோ அமைந்துபோனது. ஆகவே, வெள்ளித் தம்ளரில் பழரசம் தொடங்கி, பிஸிபிஸிபேளேபாத்முதல் பக்கெட்டில் பாதாம் அல்வாவரை எல்லாவற்றையும் கொட்டிக்கொண்டு திரும்புவேன், ஆனால் மசால் தோசா பாக்கியம்மட்டும் இதுவரை வாய்க்கவில்லை.
இதனிடையே குமுதத்தில் எம்.டி.ஆர்.பற்றி ஒரு கட்டுரை வந்திருந்தது. அதைப் படித்த என் தந்தை ஃபோன் செய்து, ‘அங்கே மசால் தோசை ரொம்ப ஃபேமஸாமே, நீ சாப்டிருக்கியா?’ என்று செமத்தியாக வெறுப்பேற்றினார்.
இப்படிப் பல அம்சங்கள் சேர்ந்து, சென்ற வாரம் ஞாயிற்றுக்கிழமையன்று காலை எங்களைச் சீக்கிரமாக எழுந்து ஓடவைத்தது. சுமார் எட்டரை மணி சுபமுகூர்த்தத்தில் எம்.டி.ஆர். வாசல்படியை மிதித்தோம்.
உள்ளே கல்யாணப் பந்திபோல் கூட்டம். உட்கார்ந்து சாப்பிடுகிறவர்களைவிட, நின்றுகொண்டு காத்திருந்தவர்கள் அதிகமாக இருந்தார்கள்.
முன்னால் ஒருவர் பரீட்சை எழுதும் அட்டை, க்ளிப் சகிதம் அமர்ந்திருந்தார். அவரிடம் சென்று என்னுடைய பெயரைச் சொன்னேன். அனுமார் படத்தின் வால் நுனியில் பொட்டு வைப்பதுபோல் ஒரு நீண்ட பட்டியலின் கடைசிப் பகுதியில் எழுதிக்கொண்டார்.
‘சுமாரா எவ்ளோ நேரம் ஆகும் சார்?’
அவர் கைக்கடிகாரத்தைப் பார்த்தார், ‘போய்ட்டுப் பத்தே காலுக்கு வாங்க சார், சீட் ரெடியா இருக்கும்!’ என்றார்.
அடப்பாவிகளா, பசி வயிற்றைக் கிள்ளும் சமயத்தில் ஒன்றே முக்கால் மணி நேரம் வெய்ட்டிங் லிஸ்டா? இது என்ன அநியாயம்!
’ஐயா, இது லஞ்சுக்கு அட்வான்ஸ் புக்கிங்கா?’ வேண்டுமென்றே நக்கலாகக் கேட்டேன்.
’இல்லை சாமி, ப்ரேக்ஃபாஸ்ட்தான்’ என்றார் அவர், ‘இங்கே இத்தனை பேர் வெய்ட் பண்றாங்கல்ல? அவங்கல்லாம் சாப்டப்புறம்தான் நீங்க!’
என்னைவிட, என் மனைவிதான் செம கடுப்பாகிவிட்டார், ‘ஓசிச்சோத்துக்குதான் க்யூவில நிப்பாங்க, நாம காசு கொடுத்துதானே சாப்பிடறோம், இதுக்கு ஏன் காத்திருக்கணும்? மசால் தோசையும் வேணாம், மண்ணாங்கட்டியும் வேணாம், வேற ஹோட்டலுக்குப் போலாம் வா!’ என்றார்.
இப்படியாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை எம்.டி.ஆர். மசால் தோசை எங்கள் நாசிக்கெட்டியும் நாவுக்கெட்டாமல் போனது. சற்றுத் தொலைவிலிருந்த வேறோர் உணவகத்தில் கிடைத்ததைத் தின்று பசியாறினோம்.
இதுபற்றி ஒரு நண்பரிடம் புலம்பியபோது, ‘எம்.டி.ஆர்.ல சனி, ஞாயிறுமட்டும்தான் கூட்டம் இருக்கும்’ என்று அடித்துச் சொன்னார், ‘நீங்க வீக் டேஸ்ல போங்க, ஒரு பய இருக்கமாட்டான்!’
(தோசை) ஆசை யாரை விட்டது. இன்று காலை அலாரம் வைத்து எழுந்து, குளித்துத் தயாராகி ஏழரைக்கு ஆட்டோ ஏறினோம். எட்டு மணியளவில் எம்.டி.ஆர்.
ஞாயிற்றுக்கிழமையோடு ஒப்பிட்டால் இன்றைக்குக் கூட்டம் கொஞ்சம் குறைவு. ஆனாலும் ‘ஒரு பய இருக்கமாட்டான்’ ரேஞ்சுக்குக் கிடையாது. சுமார் ஐந்து நிமிடம் காத்திருந்தபிறகு போனால் போகிறதென்று எங்களைக் கூப்பிட்டு ஒரு மேஜை கொடுத்தார்கள்.
உற்சாகமாக உள்ளே போய் உட்கார்ந்தபிறகுதான் கவனித்தேன், எங்களைச் சுற்றியிருந்த ஏழெட்டு மேஜைகளில் இருந்த ஒருவர்கூடச் சாப்பிட்டுக்கொண்டிருக்கவில்லை. அத்தனை மேஜைகளும் துடைத்துவைத்தாற்போல் காலியாக இருந்தன, மக்கள் எல்லோரும் காலாட்டிக்கொண்டு காத்திருந்தார்கள். சில புத்திசாலிகள் (அல்லது அனுபவஸ்தர்கள்) ஹிண்டு, டைம்ஸ் ஆஃப் இந்தியா, டிஎன்ஏ, ஃபினான்ஷியல் எக்ஸ்ப்ரஸ் சகிதம் கிளம்பிவந்திருந்தார்கள்.
ஆக, வெளியே இருக்கிற வெய்ட்டிங் ரூமில் பெஞ்ச்மட்டும், இங்கே நாற்காலி, மேஜை போட்டிருக்கிறார்கள். மற்றபடி தேவுடுகாப்பதில்மட்டும் எந்த வித்தியாசமும் கிடையாது!
ஆனாலும், ’வேர்ல்ட் ஃபேமஸ்’ தோசைக்காகக் கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு பொறுத்திருந்தோம். அந்த அறையின் சுவர் அழுக்குகள் அனைத்தையும் வகைப்படுத்தி எண்ணி முடித்து, அங்கே மாட்டப்பட்டிருந்த கறுப்பு வெள்ளைப் பழுப்புப் புகைப்படங்களைக் கூர்ந்து கவனித்து முடித்து, சுவர் கப்-போர்டில் இருக்கும் பீங்கான் குவளைகள் வெறும் அலங்காரமா, அல்லது பயனில் உள்ளவையா என்று ஆராய்ந்து முடித்தபிறகு, சர்வர் வந்தார், ‘என்ன வேணும் சார்?’ என்றார் சுருக்கமாக.
‘என்ன இருக்கு?’
’இட்லி, தோசை, உப்புமா.’
‘வேற?’
’அவ்ளோதான்!’
நாங்கள் நம்பமுடியாமல் பார்த்தோம். மூன்றே பண்டங்கள்தானா? இதற்குதானா இத்தனை பேரும் மணிக்கணக்காகக் காலை ஆட்டிக்கொண்டு காத்திருந்தோம்?
சரி போகட்டும், நமக்கு வேண்டியது மசாலா தோசை. அதையே ஆர்டர் செய்தோம்.
மறுவிநாடி விருட்டென்று அந்த சர்வர் மறைந்துவிட்டார். அடுத்த பன்னிரண்டு நிமிடங்கள் நாங்கள் அந்த அறையின் சுவர்களை மறு ஆய்வு செய்துகொண்டிருந்தோம்.
அதன்பிறகு, அவர் ஒரு பெரிய தட்டில் ஏழெட்டு மசால் தோசைகள், சில இட்லிகள், ஒன்றிரண்டு உப்புமாக்களோடு வந்தார். அவற்றை வரிசையாக எல்லோர் முன்னாலும் விசிறி(பரிமாறி)விட்டுத் திரும்பக் காணாமல் போய்விட்டார்.
சத்தியமாகச் சொல்கிறேன், அந்த மசால் தோசையைப் பரிமாறிய தட்டு என் உள்ளங்கையைவிட இரண்டே சுற்றுகள்தான் பெரிதாக இருந்தது. காபி பரிமாறுகிற கப் & சாஸர் இருக்குமில்லையா, அதில் சாஸரைமட்டும் உருவி, மேலே மசால் தோசையை வைத்து ஒருமாதிரியாகப் பேலன்ஸ் செய்து கொண்டுவந்திருந்தார்கள்.
ஓரமாக, கண்ணுக்கே தெரியாத தக்கனூண்டு சைஸ் கிண்ணத்தில் நெய். ரொம்பப் பசியோடு சாப்பிட வருகிறவர்கள் அதையும் சேர்த்து விழுங்கிவிட வாய்ப்புகள் அதிகம்.
அப்புறம் அவர்கள் சட்னி, சாம்பார் வைக்கிற அழகு இருக்கிறதே, ‘சாப்பிட்டாச் சாப்பிடு, இல்லாட்டி போ, எங்களுக்கு ப்ராண்ட் வேல்யூ இருக்கு, அதனால எப்பவும் கூட்டம் நிக்கும்’ என்று அந்த சர்வர் சொல்லாமல் சொல்வதுபோல் இருந்தது.
சரி, Brandடைத் தின்பதற்காக இவ்வளவு தூரம் வந்தாகிவிட்டது. அப்புறம் கௌரவம் பார்த்தால் எப்படி? அவருடைய அலட்சியத்தைப் பொருட்படுத்தாமல் சாப்பிட ஆரம்பித்தோம்.
அதற்குள் அந்த சர்வர் அடுத்த டேபிளின்முன்னால் தோன்றி அருள் பாலித்தார், பின்னர் எங்களை நோக்கி வந்தார், ‘வேறென்ன வேணும் சார்?’
‘இருக்கறதே மூணு ஐட்டம், இதில பந்தாவாக் கேட்கிறதைப்பாரு’ என்று மனத்துக்குள் நினைத்துக்கொண்டபடி, ‘எதுனா ஸ்வீட் இருக்கா?’ என்றேன் சந்தேகமாக.
’ஓ’ மலையாள ராகம் இழுத்தார் அவர், ‘ஹனி ஹல்வா இருக்கே!’
இது என்ன புது மேட்டரா இருக்கே என்று கொண்டுவரச் சொன்னேன். சும்மா சொல்லக்கூடாது, அல்வா, நிஜமாகவே தேன்!
அப்புறம், வெள்ளித் தம்ளரில் சுடச்சுட காபி. அதுவும் அட்டகாசமாக இருந்தது.
கடைசியாக பில்லைக் கட்டிவிட்டு வெளியே வந்தபோது, இருபது பேருக்குமேல் காத்திருந்தார்கள். அவர்களைக் கெத்தாகப் பார்த்துவிட்டுப் படிகளில் இறங்கினோம்.
’அது சரி, அந்த மசால் தோசை எப்படி இருந்தது-ன்னு சொல்லவே இல்லையே’ங்கறீங்களா?
ஹிஹி!
***
என். சொக்கன் …
21 04 2010
16 Responses to "டிஃபன் ரூம்"

நானும் கேள்விப்பட்டேன், ஆனால் நம்ப சென்னையிலே ஒரு தடவை இந்த அவஸ்த்தைப் பட்டதால்… சற்று தள்ளிப்போட்டேன். இப்ப இந்த “ஹனி ஹல்வா”விற்காக try பண்ணலாம்னு பார்க்கிறேன் (தோசை போயி ஹல்வா வந்ததது டும்டும் டும்).
Yuva
Bangalore


Super post… enjoyed a lot …
Next Time, you can try Davangere Butter dose..
Regards
Ram


அது எத்தனை பிரபலமாக இருந்தாலும் சரி, வாடிக்கையாளர்களை சரி வர நடத்தாத அல்லது துச்சமாக மதிக்கும் எந்த நிறுவனத்தையும் மக்கள் புறக்கணிக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்பது என் அவா.


ஏப்ப்ப்ப்பப்ப்ப்,
சாரி, ஏப்பம் வந்துடுச்சு!!!


சுவாரசியமான கட்டுரை, நானே தோசை சாப்பிட போவது போல. சென்னை முருகன் இட்லி கடையிலும் இப்படி ஒரு க்யு இருக்கும் ஆனால் பரிமாறுவதில் அலட்சியம் இல்லை.


🙂


You too?
🙂


Good narration, can’t stop laughing from start to beginning of the post. I’ve control my laugh with more difficulty as I’m reading in office 🙂
//’அது சரி, அந்த மசால் தோசை எப்படி இருந்தது-ன்னு சொல்லவே இல்லையே’ங்கறீங்களா?
ஹிஹி!
//
Typical kumudam punch 🙂
//ரொம்பப் பசியோடு சாப்பிட வருகிறவர்கள் அதையும் சேர்த்து விழுங்கிவிட வாய்ப்புகள் அதிகம்//
You’ve gone to long distance (pl translate to tamil, don’t have editor in office ) 🙂
Ravi Suga


நல்ல பதிவு நன்றி பத்ரி


//ரொம்பப் பசியோடு சாப்பிட வருகிறவர்கள் அதையும் சேர்த்து விழுங்கிவிட வாய்ப்புகள் அதிகம்.// இந்த ஒரு வரிக்காக இது நல்ல பதிவு நன்றி பத்ரி


பெங்களூரில் எம் டி ஆரைவிட வித்யார்த்தி பவன் என்னும் கடையில் மசால் தோசை இன்னும் பிரபலம் என்று ஒரு வலைத்தளத்தில் கடந்த ஆண்டு படித்திருக்கிறேன்.


[…] The busiest day of the year was April 22nd with 385 views. The most popular post that day was டிஃபன் ரூம். […]

1 | ஆயில்யன்
April 21, 2010 at 5:43 pm
//‘ஓசிச்சோத்துக்குதான் க்யூவில நிப்பாங்க, நாம காசு கொடுத்துதானே சாப்பிடறோம், இதுக்கு ஏன் காத்திருக்கணும்? மசால் தோசையும் வேணாம், மண்ணாங்கட்டியும் வேணாம், வேற ஹோட்டலுக்குப் போலாம் வா!//
அதானே எத்தனையோ கடைகள் எத்தனையோ வெரைட்டி தோசை இருக்கும்போது ஏன் ? கடைசியில் ஹிஹிஹி வேறயா அப்ப தோசை பல்லிளித்துவிட்டதாஆஆஆ 🙂