மனம் போன போக்கில்

Archive for June 2010

இன்று காலை, ஒரு கஷ்டமரைச் சந்திக்க அவர்களுடைய அலுவலகத்துக்குச் செல்லவேண்டியிருந்தது.

பன்னிரண்டு மணிக்குதான் சந்திப்பு. ஆனாலும், சர்வதேசப் புகழ் வாய்ந்த பெங்களூருவின் போக்குவரத்து நெரிசல்களைக் கருதி, பத்தரைக்கே புறப்பட்டுவிட்டேன்.

தோளில் லாப்டாப் மூட்டையைத் தூக்கிச் சுமந்துகொண்டு படிகளில் இறங்கும்போது, அனிச்சையாகக் கைகள் கழுத்துக்குச் சென்றன. அங்கிருந்த ID Card தாலியைக் கழற்றிப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டேன்.

பத்து வருடங்களுக்குமுன்னால் பெங்களூர் வந்த புதிதில் பழகிக்கொண்ட விஷயம் இது. அலுவலகத்தைவிட்டு வெளியே வரும்போது ஐடி கார்ட் பாக்கெட்டுக்குப் போய்விடவேண்டும். இல்லாவிட்டால், அதைப் பார்த்தவுடன் ஆட்டோக்காரர்கள் ரேட்டை ஏற்றிவிடுவார்கள், பஸ் கண்டக்டர்கள் பாக்கிச் சில்லறை தர மற(று)ப்பார்கள், கடைக்காரர்கள் பேரங்களுக்கு மசியமாட்டார்கள், எல்லாவிதத்திலும் பணவிரயம் சர்வ நிச்சயம்.

பெங்களூருவில் காலை எட்டு மணி முதல் இரவு பன்னிரண்டு வரை கொழுத்த Peak Hourதான். அதிலும், எங்கள் அலுவலகத்தின் முன்னால் இருக்கிற சாலை (BTM Layout 100 Feet Ring Road) இன்னும் மோசம். ரோட்டில் கால் வைக்க இடம் இருக்காது. மீறி வைத்தால் கால் இருக்காது.

இன்னொரு கொடுமை, அநேகமாக எல்லா நேரங்களிலும், எல்லா ஆட்டோக்களும் ‘ஹவுஸ் ஃபுல்’லாகவே ஓடிக்கொண்டிருக்கும். கிரிக்கெட்டில் ‘நோ பால்’ சமிக்ஞை காட்டும் அம்பயரைப்போல் முன்னே கை நீட்டியபடி எங்கேயாவது ஒரு காலி ஆட்டோ அகப்பட்டுவிடாதா என்று தேடித் தேடித் தாவு தீரும்.

ஆனால், இன்றைக்கு என் அதிர்ஷ்டம். எங்கள் அலுவலகத்துக்குச் சற்று முன்பாகவே ஓர் ஆட்டோ காலியாகக் காத்திருந்தது. அதனுள் தலையை நீட்டி, ‘ரிச்மண்ட் சர்க்கிள்?’ என்றேன்.

‘ஆட்டோ வராது சார்.’

‘ஏன்ப்பா?’

‘சேஞ்ச்க்காக வெய்ட் பண்ணிகிட்டிருக்கேன் சார்’ என்றார் ஆட்டோ டிரைவர்.

‘நாம எல்லாரும் அதைத்தானே செஞ்சுகிட்டிருக்கோம், நீங்கமட்டும் என்ன புதுசா?’

காக்கிச்சட்டை, சந்தனப் பொட்டு ஆட்டோ டிரைவர் புரியாமல் முறைத்தார், ‘அதில்ல சார், இதுக்குமுன்னாடி இந்த வண்டியில வந்தவர்கிட்ட சில்லறை இல்லை, வாங்கிட்டு வர்றேன்னு உள்ளே போயிருக்கார், அவருக்காகதான் பத்து நிமிஷமா வெய்ட் பண்றேன். இன்னும் வரக்காணோம். நீங்க வேற ஆட்டோ பாருங்க.’

‘ஓகே’ என்று தலையை வெளியே இழுத்துக்கொண்டேன். சாலையை நிறைத்தபடி ஓடும் வாகனங்களில் எனக்கான காலி ஆட்டோவைத் தேடி ‘நோ பால்’ காட்ட ஆரம்பித்தேன்.

அடுத்த பத்து நிமிடங்கள், விதவிதமான வண்டிகளின் ஹாரன் சத்தங்கள் என் செவிப்பறைகளில் ட்ரம்ஸ் வாசித்தன. மூக்கில் பொத்திக்கொண்ட கைக்குட்டையையும் மீறிப் புகை இருமல். ஆனால், காலி ஆட்டோமட்டும் தென்படவே இல்லை. இங்கிருந்து ரிச்மண்ட் சர்க்கிளுக்கு நேரடி பஸ் உண்டா என்று யோசிக்க ஆரம்பித்திருந்தேன்.

’சார்…’

சத்தம் கேட்டுத் திரும்பினால், அதே சந்தனப் பொட்டு ஆட்டோக்காரர். இவ்வளவு நேரமாக இங்கேயேதான் காத்திருக்கிறாரா? ஏன்?

அவர் என் குழப்பத்தைப் புரிந்துகொண்டதுபோல் சிநேகமாகச் சிரித்தார், ‘வாங்க சார், போலாம்!’ என்றார்.

’சேஞ்ச் வந்துடுச்சா?’

’இல்ல சார்’ என்றார் அவர் சோகமாக, ‘நாதாரிப்பய, ஏமாத்திட்டு எங்கயோ உள்ற ஓடிட்டான். அவனுக்காக எவ்ளோ நேரம்தான் வெய்ட் பண்றது?’

’அச்சச்சோ, அவர் உங்களுக்கு எவ்ளோ தரணும்?’

‘நாப்பது ரூவா’ என்றபடி அவர் வண்டியைக் கிளப்பினார், ‘நீங்க உக்காருங்க சார், போலாம்!’

எனக்கு அந்த ஆட்டோவில் உட்காரத் தயக்கமாக இருந்தது. பின்னே திரும்பிப் பார்த்தேன். பளபள கட்டடம். சாஃப்ட்வேர் உருவாக்க மையமாகவோ, கால்சென்டராகவோதான் இருக்கவேண்டும். இப்படி ஓர் அதிநவீன வளாகத்தில் வேலை பார்த்துக்கொண்டு ஆட்டோ டிரைவரிடம் 40 ரூபாய் ஏமாற்றுகிற அல்பப்பயல் யாராக இருக்கும்?

நான் அந்த சந்தனப் பொட்டுக்காரரைச் சங்கடமாகப் பார்த்தேன், ‘வேணும்ன்னா ஒருவாட்டி உள்ள போய் விசாரிச்சுட்டு வாங்களேன்’ என்றேன்.

‘இல்ல சார், இவங்கல்லாம் என்னை உள்றயே விடமாட்டாங்க’ என்றார் அவர், ‘செக்யூரிட்டியே கழுத்தைப் பிடிச்சு வெளிய தள்ளிடுவான். என்ன காரணம் சொன்னாலும் நம்பமாட்டானுங்க.’

அரை மனத்தோடு அவரது ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தேன். ஏதோ, என்னால் முடிந்தது, ரிச்மண்ட் சர்க்கிள் சென்று சேர்ந்தபிறகு, மீட்டருக்குமேலே அவர் எவ்வளவு கேட்டாலும் கொடுத்துவிடலாம் என்று நினைத்துக்கொண்டேன்.

சொன்னால் நம்பமாட்டீர்கள், அவர் மீட்டருக்குமேல் ஒரு பைசா கேட்கவில்லை. ஐம்பது காசு மீதிச் சில்லறையைக்கூடத் தேடி எடுத்துத் தந்துவிட்டுப் புன்னகையோடு வண்டியை ஓட்டிச் சென்றார்.

***

என். சொக்கன் …

18 06 2010

இந்த அறிவிப்பை ஸ்கான் செய்து அனுப்பிவைத்த நண்பர் உமா மகேஸ்வரனுக்கு நன்றி. (படத்தை க்ளிக் செய்தால் பெரிதாக்கிப் படிக்கலாம்)

கிழக்கு பதிப்பகம் ஐம்பெரும் காப்பியங்களில் முக்கியமான / முழுமையான மூன்றை (சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி) இந்தக் கால வாசகர்களுக்கு ஏற்ற நாவல் வடிவத்திலும் படக்கதை வடிவத்திலும் வெளியிடுகிறது.

சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, மணிமேகலை மூன்றுமே கதை வளம், காவியச் சுவை, கவித்துவ எழில் கொண்ட படைப்புகள். இந்த அற்புதமான இலக்கியங்களுக்கு நல்ல தமிழ் உரைகளும் இருக்கின்றன.

ஆனால் துரதிருஷ்டவசமாக இன்றைய வாசகர்கள் வாசித்து, பொருள் புரிந்து காப்பியத்தை ரசிக்கச் செய்யக்கூடிய விதத்தில் அவை இல்லை. பண்டித மொழி அல்லது பாடப்புத்தக மொழியில் எழுதப்பட்டிருக்கும் உரை நூல்களைத் தற்கால வாசகர்கள் அநேகமாகத் தொடுவதே இல்லை.

உரை நூல்களின் தன்மையால் இப்பேரிலக்கியங்கள் சமகால, எதிர்கால வாசகர்களுக்குக் கிட்டாமலேயே போய்விடக்கூடாது என்று கிழக்கு பதிப்பகம் தீவிரமாகக் கருதியதன் விளைவுதான் நாவல் வடிவில் காப்பியங்கள் என்னும் புதிய திட்டம்.

காப்பியங்களின் மூல ஆசிரியர்கள் எழுதியிருப்பதற்குமேல் இம்மியும் இந்நாவல் வடிவில் இருக்காது. அதே சமயம் தற்காலத் தமிழ் உரைநடையின் சகல சாத்தியங்களையும் பயன்படுத்தி, வாசிப்பை எளிமையான, ரசமான, விறுவிறுப்பான அனுபவமாக மாற்றும் முயற்சி இது.

தற்கால நாவல் ஒன்றை வாசிப்பது போலவே நீங்கள் இக்காப்பியங்களை வாசிக்க இயலும். ரசிக்க இயலும். கதையின் தன்மையை, போக்கை, கட்டுக்கோப்பை உள்வாங்கிக்கொள்ள இயலும். இதனை முற்றிலும் ரசித்து வியந்தபிறகு நிச்சயமாக மூல நூலை வாசிக்கும் வேட்கை உங்களை ஆட்கொள்ளும் என்று உறுதியாக நம்புகிறோம்.

நமது புராதனமான இலக்கியங்களைக் கட்டிக்காப்பது மட்டுமல்ல; காலம் தோறும் தோன்றும் புதிய வாசகர்களுக்கு அவற்றைக் கடத்திச் செல்லவேண்டியதும் நமது கடமை என்று கிழக்கு நம்புகிறது. அதற்கான முதல் படியாக இம்முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்கள்.

இந்த வரிசையில் ‘மணிமேகலை’யின் நாவல் வடிவத்தை நான் எழுதியுள்ளேன். அது இன்றைக்கு வெளியாகிறது.

mmgwrapper

’மணிமேகலை’யைப் பொறுத்தவரை, அடிப்படையிலேயே அது ஒரு விறுவிறுப்பான சரித்திர நாவலைப்போல்தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. கதாநாயகி துறவறம் பூண்டவள் என்பதால் டூயட்டுக்குமட்டும் வாய்ப்பில்லை, மற்றபடி ஒருதலைக் காதல், சூழ்ச்சி, சண்டை, கொலை, பழிவாங்கல், மனம் திருந்துதல், ஃப்ளாஷ்பேக் எல்லாமே உண்டு. சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சி என்றாலும், இதைத் தனியாகவும் படிக்கமுடியும்படியே அமைத்திருக்கிறார் சீத்தலைச் சாத்தனார். அதே சுவாரஸ்யத்தை நாவலிலும் கொண்டுவர முயன்றிருக்கிறேன். எப்படி வந்திருக்கிறது என வாசித்துச் சொல்லவும்.

இந்தப் புத்தகத்தை வாங்க விரும்புகிறவர்கள் கிழக்கு பதிப்பகத்தைத் தொடர்புகொள்ளலாம் (தொலைபேசி எண்கள்: (044-42868126 / 0-9500045640 – இணையத்தில் வாங்குவதற்கான URL இணைப்பு: http://nhm.in/shop/978-81-8493-447-2.html). சென்னையில் உள்ளவர்கள் கிழக்கு பதிப்பகத்தின் தி. நகர் புத்தகக் கடையிலோ, நாளை ஐந்து இடங்களில் நடைபெறும் சிறப்புப் புத்தகக் கண்காட்சிகளிலோ இந்தப் புத்தகத்தை வாங்கலாம். மற்ற ஊர்களில் இன்னும் ஒன்றிரண்டு நாள்களுக்குள் கிடைக்கத் தொடங்கிவிடும் என்று தெரிகிறது.

***

என். சொக்கன் …

02 06 2010

(இசைராஜாவின் பிறந்தநாள்)

(நண்பர் முகில் பதிவில் இருந்து –> http://www.writermugil.com/?p=1131)

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.

சிறுநீரக செயல் இழப்பினால் சிகிச்சை பெற்று வரும் நண்பர் முத்துராமன் குறித்து ஏற்கெனவே எழுதியிருந்தேன். பலரும் தங்கள் தளங்களில் உதவிகேட்டு விவரங்களை வெளியிட்டிருந்தீர்கள். அவரது அறுவை சிகிச்சைக்காக பலரும் உதவி அனுப்பிக் கொண்டிருக்கிறீர்கள். அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

தற்போது, முத்துராமனுக்குச் செய்யப்படவிருந்த அறுவை சிகிச்சை சில மருத்துவ காரணங்களால் உடனடியாகச் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. அவரது தாயார் சிறுநீரகம் தர முன் வந்தாலும் கடைசிகட்ட பரிசோதனைகளின் முடிவில் அவருடைய சிறுநீரகத்தை முத்துராமனுக்குப் பொருத்தினால் அடுத்த சில வருடங்களில் மீண்டும் இதே பிரச்னைகள் வரலாம் என்பது கவுன்சிலிங் செய்த மருத்துவர்கள் கருத்து. மேலும் சிறுநீரகத்தைத் தானமாகத் தர முன் வந்த அவரது தாயாருக்கும் பிற்காலத்தில் சிறுநீரக செயல் இழப்போ அல்லது வேறு ஏதேனும் பிரச்னைகளோ வரலாம் என்றும் மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

ஆகவே, மூளை இறப்பு மூலம் கிடைக்கும் உறுப்பு தானம் (Cadaver) பெறுபவர்கள் பட்டியலில் முத்துராமன் பதிந்து வைத்திருக்கிறார். தற்போது டயாலிஸிஸ் சிகிச்சை தொடர்கிறது. பி பாஸிடிவ் ரத்த வகை என்பதால் விரைவில் கிடைத்துவிடும் என்று மருத்துவர்கள் நம்பிக்கை அளித்திருக்கிறார்கள்.

முத்துராமனது சிகிச்சை குறித்த விவரங்களை அவ்வப்போது அப்டேட் செய்கிறேன்.

நன்றி.


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,480 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

June 2010
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930