சில்லறை
Posted June 18, 2010
on:- In: Auto Journey | Bangalore | Characters | Cheating | Cowardice | Customer Care | Customer Service | Customers | Financial | Honesty | Learning | Life | Money | People | Positive | Pulambal | Uncategorized
- 14 Comments
இன்று காலை, ஒரு கஷ்டமரைச் சந்திக்க அவர்களுடைய அலுவலகத்துக்குச் செல்லவேண்டியிருந்தது.
பன்னிரண்டு மணிக்குதான் சந்திப்பு. ஆனாலும், சர்வதேசப் புகழ் வாய்ந்த பெங்களூருவின் போக்குவரத்து நெரிசல்களைக் கருதி, பத்தரைக்கே புறப்பட்டுவிட்டேன்.
தோளில் லாப்டாப் மூட்டையைத் தூக்கிச் சுமந்துகொண்டு படிகளில் இறங்கும்போது, அனிச்சையாகக் கைகள் கழுத்துக்குச் சென்றன. அங்கிருந்த ID Card தாலியைக் கழற்றிப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டேன்.
பத்து வருடங்களுக்குமுன்னால் பெங்களூர் வந்த புதிதில் பழகிக்கொண்ட விஷயம் இது. அலுவலகத்தைவிட்டு வெளியே வரும்போது ஐடி கார்ட் பாக்கெட்டுக்குப் போய்விடவேண்டும். இல்லாவிட்டால், அதைப் பார்த்தவுடன் ஆட்டோக்காரர்கள் ரேட்டை ஏற்றிவிடுவார்கள், பஸ் கண்டக்டர்கள் பாக்கிச் சில்லறை தர மற(று)ப்பார்கள், கடைக்காரர்கள் பேரங்களுக்கு மசியமாட்டார்கள், எல்லாவிதத்திலும் பணவிரயம் சர்வ நிச்சயம்.
பெங்களூருவில் காலை எட்டு மணி முதல் இரவு பன்னிரண்டு வரை கொழுத்த Peak Hourதான். அதிலும், எங்கள் அலுவலகத்தின் முன்னால் இருக்கிற சாலை (BTM Layout 100 Feet Ring Road) இன்னும் மோசம். ரோட்டில் கால் வைக்க இடம் இருக்காது. மீறி வைத்தால் கால் இருக்காது.
இன்னொரு கொடுமை, அநேகமாக எல்லா நேரங்களிலும், எல்லா ஆட்டோக்களும் ‘ஹவுஸ் ஃபுல்’லாகவே ஓடிக்கொண்டிருக்கும். கிரிக்கெட்டில் ‘நோ பால்’ சமிக்ஞை காட்டும் அம்பயரைப்போல் முன்னே கை நீட்டியபடி எங்கேயாவது ஒரு காலி ஆட்டோ அகப்பட்டுவிடாதா என்று தேடித் தேடித் தாவு தீரும்.
ஆனால், இன்றைக்கு என் அதிர்ஷ்டம். எங்கள் அலுவலகத்துக்குச் சற்று முன்பாகவே ஓர் ஆட்டோ காலியாகக் காத்திருந்தது. அதனுள் தலையை நீட்டி, ‘ரிச்மண்ட் சர்க்கிள்?’ என்றேன்.
‘ஆட்டோ வராது சார்.’
‘ஏன்ப்பா?’
‘சேஞ்ச்க்காக வெய்ட் பண்ணிகிட்டிருக்கேன் சார்’ என்றார் ஆட்டோ டிரைவர்.
‘நாம எல்லாரும் அதைத்தானே செஞ்சுகிட்டிருக்கோம், நீங்கமட்டும் என்ன புதுசா?’
காக்கிச்சட்டை, சந்தனப் பொட்டு ஆட்டோ டிரைவர் புரியாமல் முறைத்தார், ‘அதில்ல சார், இதுக்குமுன்னாடி இந்த வண்டியில வந்தவர்கிட்ட சில்லறை இல்லை, வாங்கிட்டு வர்றேன்னு உள்ளே போயிருக்கார், அவருக்காகதான் பத்து நிமிஷமா வெய்ட் பண்றேன். இன்னும் வரக்காணோம். நீங்க வேற ஆட்டோ பாருங்க.’
‘ஓகே’ என்று தலையை வெளியே இழுத்துக்கொண்டேன். சாலையை நிறைத்தபடி ஓடும் வாகனங்களில் எனக்கான காலி ஆட்டோவைத் தேடி ‘நோ பால்’ காட்ட ஆரம்பித்தேன்.
அடுத்த பத்து நிமிடங்கள், விதவிதமான வண்டிகளின் ஹாரன் சத்தங்கள் என் செவிப்பறைகளில் ட்ரம்ஸ் வாசித்தன. மூக்கில் பொத்திக்கொண்ட கைக்குட்டையையும் மீறிப் புகை இருமல். ஆனால், காலி ஆட்டோமட்டும் தென்படவே இல்லை. இங்கிருந்து ரிச்மண்ட் சர்க்கிளுக்கு நேரடி பஸ் உண்டா என்று யோசிக்க ஆரம்பித்திருந்தேன்.
’சார்…’
சத்தம் கேட்டுத் திரும்பினால், அதே சந்தனப் பொட்டு ஆட்டோக்காரர். இவ்வளவு நேரமாக இங்கேயேதான் காத்திருக்கிறாரா? ஏன்?
அவர் என் குழப்பத்தைப் புரிந்துகொண்டதுபோல் சிநேகமாகச் சிரித்தார், ‘வாங்க சார், போலாம்!’ என்றார்.
’சேஞ்ச் வந்துடுச்சா?’
’இல்ல சார்’ என்றார் அவர் சோகமாக, ‘நாதாரிப்பய, ஏமாத்திட்டு எங்கயோ உள்ற ஓடிட்டான். அவனுக்காக எவ்ளோ நேரம்தான் வெய்ட் பண்றது?’
’அச்சச்சோ, அவர் உங்களுக்கு எவ்ளோ தரணும்?’
‘நாப்பது ரூவா’ என்றபடி அவர் வண்டியைக் கிளப்பினார், ‘நீங்க உக்காருங்க சார், போலாம்!’
எனக்கு அந்த ஆட்டோவில் உட்காரத் தயக்கமாக இருந்தது. பின்னே திரும்பிப் பார்த்தேன். பளபள கட்டடம். சாஃப்ட்வேர் உருவாக்க மையமாகவோ, கால்சென்டராகவோதான் இருக்கவேண்டும். இப்படி ஓர் அதிநவீன வளாகத்தில் வேலை பார்த்துக்கொண்டு ஆட்டோ டிரைவரிடம் 40 ரூபாய் ஏமாற்றுகிற அல்பப்பயல் யாராக இருக்கும்?
நான் அந்த சந்தனப் பொட்டுக்காரரைச் சங்கடமாகப் பார்த்தேன், ‘வேணும்ன்னா ஒருவாட்டி உள்ள போய் விசாரிச்சுட்டு வாங்களேன்’ என்றேன்.
‘இல்ல சார், இவங்கல்லாம் என்னை உள்றயே விடமாட்டாங்க’ என்றார் அவர், ‘செக்யூரிட்டியே கழுத்தைப் பிடிச்சு வெளிய தள்ளிடுவான். என்ன காரணம் சொன்னாலும் நம்பமாட்டானுங்க.’
அரை மனத்தோடு அவரது ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தேன். ஏதோ, என்னால் முடிந்தது, ரிச்மண்ட் சர்க்கிள் சென்று சேர்ந்தபிறகு, மீட்டருக்குமேலே அவர் எவ்வளவு கேட்டாலும் கொடுத்துவிடலாம் என்று நினைத்துக்கொண்டேன்.
சொன்னால் நம்பமாட்டீர்கள், அவர் மீட்டருக்குமேல் ஒரு பைசா கேட்கவில்லை. ஐம்பது காசு மீதிச் சில்லறையைக்கூடத் தேடி எடுத்துத் தந்துவிட்டுப் புன்னகையோடு வண்டியை ஓட்டிச் சென்றார்.
***
என். சொக்கன் …
18 06 2010
14 Responses to "சில்லறை"

ந.சி.


டைட்டிலில் யாரைத் திட்டினீர்கள் என்று இப்போது புரிந்தது.
நல்ல ஆட்டோக்களும் இருக்கின்றனதான். ஆனாலும் எனக்கு ஆட்டோ அலர்ஜி.
srk சொன்னதுபோல ந.சி தான்.


//சேஞ்ச்க்காக வெய்ட் பண்ணிகிட்டிருக்கேன் சார்’ என்றார் ஆட்டோ டிரைவர். ‘நாம எல்லாரும் அதைத்தானே செஞ்சுகிட்டிருக்கோம், நீங்கமட்டும் என்ன புதுசா?’
LOL:))))
இப்படிப்பட்ட ஆட்டோ டிரைவர்கள் மட்டுமே //40 ரூபாய் ஏமாற்றுகிற அல்பப்பயல் // ஏமாறுகின்றனரோ?


ஒரு சிறுகதை படித்த உணர்வு. அழகான நடை. I liked the “No Ball” analogy! 🙂


I had similar experience in bangalore on auto drivers’ honesty.
You can hardly see such auto drivers in Chennai !!.
-pondyanand


சொக்கன் , படிக்க ரொம்ப நல்லா இருந்தது,மோர் லைக் திஸ் அண்ட் பிக் , சில் வூ ப்லே.


அருமையான பதிவு. ச.பொ.ஆ.காரர் பிற்காலத்தில் ரஜினியாகி, தமிழக முதல்வராகவும், உங்கள் எதிர்காலத்துக்காக படம் பண்ணித்தரவும் வாய்ப்பு இருக்கிறது!


இதே பெங்களூரில், அதே ரிச்மண்ட் சர்க்கிளில் ஐந்து வருடங்களுக்கு முன்னால் நடந்த சம்பவம்: நான் ஆட்டோக்காரரிடம் பணத்தை கொடுத்துவிட்டு இறங்கி என் அலுவலகம் நோக்கி நடக்கத்தொடங்கும்போது வழக்கம்போல பேண்ட் பாக்கெட்டைத் தொட்டால், செல்போனக் காணோம்! ஆட்டோவின் சீட்டிலேயே வைத்துவிட்டு இறங்கிவிட்டோம் என்று உறைத்தது. திரும்பி சாலையைப் பார்த்தால் என் கண் முன்னே சுமார் 30 ஆட்டோக்கள். அப்புறமென்ன.. கோவிந்தாதான்!


ஒரு நல்ல நகைச்சுவையுடன் ஒரு நல்ல மனிதரை படம் பிடித்துக் காட்டி விட்டீர்கள். மும்பையில் இன்றும் 10-12 ரூபாய்க்கு ஆட்டோ வருது. ஆனால் சென்னையில்…


Anda auto driver number irundal idugayil idavum 😉

1 | வடகரைவேலன்
June 18, 2010 at 8:11 pm
உண்மைதான் சொக்கன். இந்த மாதிரி நல்ல ஆசாமிகள்தான் ஏமாற்றப் படுகிறார்கள்.