Archive for July 10th, 2010
ஒரு புத்தகம், ஒரு போட்டி!
Posted by: என். சொக்கன் on: July 10, 2010
- In: Announcements | போட்டி | Books | Poster | Uncategorized | ViLambaram
- 43 Comments
’மணிமேகலை’யைத் தொடர்ந்து அந்த வரிசையில் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் எனது புதிய புத்தகம், ‘முத்தொள்ளாயிரம்’. சில ஆண்டுகளுக்குமுன்பு நண்பர் கணேஷ் சந்திராவின் தமிழோவியம் இணைய இதழில் வெளியான தொடரின் நூல்வடிவம் இது.
இந்த இரண்டு புத்தகங்களுக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம், முத்தொள்ளாயிரம் நாவல் அல்ல – சேர, சோழ, பாண்டிய மன்னர்களைக் குறித்த பாடல்களின் தொகுப்பு. இந்த அரசர்களின் வீரம், காதல், ஆட்சிச் சிறப்பு என்று எல்லாம் சேர்ந்த ரசனையான கலவையாக இந்தப் பாடல்கள் இருக்கின்றன.
’முத்தொள்ளாயிரம்’ என்று பெயர் சூட்டப்பட்டிருந்தாலும், நம் கைவசம் கிடைத்திருப்பவை நூற்றுச் சொச்சப் பாடல்கள்தான். அனைத்தும் வெண்பாக்கள்.
’மணிமேகலை’யோடு ஒப்பிடும்போது, முத்தொள்ளாயிரத்தில் தொடர்ச்சியான கதை இல்லை என்பதால், ஒவ்வொரு பாடலையும் தனித்தனிக் கட்டுரைகளாகவே எழுதவேண்டியிருந்தது. இன்றைய வாசகர்களுக்குப் புரியக்கூடிய சுவாரஸ்யமான உதாரணங்கள், விளக்கங்களோடு, அதேசமயம் பாடலின் கருத்தும் நீர்த்துப்போய்விடாதபடி தர முயற்சி செய்திருக்கிறேன், ஒவ்வொரு பாடலுக்கும் கீழே முக்கியமான வார்த்தைகளுக்கான அருஞ்சொற்பொருளும் உண்டு. 272 பக்கங்கள், விலை ரூ 150/-
இந்தப் புத்தகத்தை வாங்க விரும்புகிறவர்கள் கிழக்கு பதிப்பகத்தைத் தொடர்புகொள்ளலாம் (தொலைபேசி எண்கள்: (044-42868126 / 0-9500045640 – இணையத்தில் வாங்குவதற்கான URL இணைப்பு: https://www.nhm.in/shop/978-81-8493-455-7.html).
விளம்பரம் ஆச்சு. இப்போது, ஒரு சின்னப் போட்டி.
சேரன், சோழன், பாண்டியன் – இந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் உங்களுக்குச் சட்டென்று ஞாபகம் வரும் விஷயம் என்ன? கீழே பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.
உதாரணமாக, எனக்குச் சேரன் என்றதும் ’சேரன் எக்ஸ்ப்ரஸ்’ ரயில் ஞாபகம் வருகிறது, ‘சோழன்’ என்றவுடன் என் மனைவி ‘சோழா பூரி’யை நினைவுகூர்ந்தார், நான் ‘ராஜராஜசோழன் நான்’ என்று ஹம் செய்ய ஆரம்பித்தேன், பாண்டியன்’ என்றபோது என் சின்ன வயது சிநேகிதன் ஒருவன் ஞாபகத்தில் வந்தான், ஓர் அலுவலக நண்பர் ‘பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா’ என்று பாடிக்காட்டினார், உங்களுக்கு என்ன தோணுது? சீக்கிரம் சொல்லுங்க!
பரிசு இல்லையா?
நிச்சயமாக உண்டு. சேரனுக்கு ஒன்று, சோழனுக்கு ஒன்று, பாண்டியனுக்கு ஒன்று எனச் சுவாரஸ்யமான 3 பதில்களுக்கு ‘முத்தொள்ளாயிரம்’ புத்தகம் பரிசு. என்சாய் 🙂
***
என். சொக்கன் …
10 07 2010