மனம் போன போக்கில்

திருட்டு

Posted on: July 27, 2010

எங்கள் வீட்டிலிருந்து சுமார் ஐந்து நிமிட நடை தூரத்தில் அந்தப் பூங்கா.

உண்மையில் அதைப் பூங்கா என்று சொல்வதுகூட உயர்வு நவிற்சிதான். வழுக்கைத்தலைமாதிரி வறண்ட காலி இடம். ஆங்காங்கே புல்வெளித் திட்டுகள். சுற்றிலும் கம்பிச் சுவர். மக்கள் உள்ளே வந்துபோக ஒரு சின்னக் கதவு. அவ்வளவுதான்.

உட்கார நாற்காலிகூட இல்லாத பூங்காவை யார் மதிப்பார்கள்? நாங்கள் யாரும் பிடிவாதமாக அந்தப் பக்கமே போகாமல் புறக்கணிக்க, பூங்கா வருத்தப்பட்டுத் தாடி வளர்க்க ஆரம்பித்துவிட்டது. கொஞ்ச நாளில் அந்த முக்கோண வடிவ நிலம்முழுவதும் புதர்ச்செடிகள். அவற்றின் இண்டு இடுக்குகளில் பாம்பு, பூரான், தேள், டிராகன், டைனோசரெல்லாம்கூட இருப்பதாகப் பேசிக்கொண்டார்கள்.

பயன்படாத பூங்கா. இருந்தால் என்ன, போனால் என்ன? நாங்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

ஆறு மாதத்துக்குமுன்னால் அந்தப் பூங்காவுக்குப் புனர்ஜென்மம். ஒரு பெரிய வண்டியில் பெங்களூர் மாநகராட்சி ஊழியர்கள் வந்து இறங்கி அந்த முக்கோண வடிவ நிலத்தை அறுவடை செய்தார்கள். வண்டிமுழுக்கப் புதர்ச்செடிகளோடு திரும்பிப் போனார்கள்.

இரண்டு நாள் கழித்து இன்னொரு கோஷ்டி வந்தது. மண்ணைத் தட்டிச் சமன்படுத்திவிட்டுப் போனது.

அப்புறம் சில வாரங்கள் நான் அந்தப் பக்கம் போகவில்லை. திடீரென்று ஒருநாள் போய்ப் பார்த்தால் கடற்கரைமாதிரி பால் வெள்ளை மணலைக் கொட்டி நிரப்பியிருந்தார்கள். ‘அட’ என்று கதவைத் திறக்கப் போனால் பூட்டிக் கிடந்தது.

அந்தப் பார்க் அதுவரை பூட்டிப் பார்த்ததே இல்லை. ஒருவேளை மணல் கொடௌனாக மாற்றிவிட்டார்களோ? குழப்பத்தோடு வீடு திரும்பினேன்.

மறுநாள், எங்கள் அபார்ட்மென்ட் வாட்ச்மேனிடம் பேச்சுவாக்கில் அதுபற்றி விசாரித்தபோது புதிர் அவிழ்ந்தது, ‘அந்தப் பார்க்கைக் கொழந்தைங்க வெளையாடறமாதிரி மாத்தறாங்க சார், ஊஞ்சல், சீஸா, சறுக்குமரமெல்லாம் வரப்போகுது!’

நல்ல விஷயம்தான். பெங்களூரின் பெரும்பாலான பகுதிகளைப்போலவே எங்கள் ஏரியாவிலும் ஆங்காங்கே பூங்காக்கள் சிதறிக் கிடந்தாலும் குழந்தைகள் விளையாடும்படி எதுவும் இல்லை. ரோட்டைக் கடந்து ஒன்றரைக் கிலோமீட்டர் நடந்தால்தான் உண்டு. அந்தக் குறை இனிமேல் தீர்ந்தது.

அதுவும் அத்தனை சுலபத்தில் தீர்ந்துவிடவில்லை. கிட்டத்தட்ட நான்கைந்து மாதங்கள் வேலைக்குப்பிறகு பிளாஸ்டிக்கா இரும்பா என்று தெரியாதபடி பளபளவென்று ஏகப்பட்ட விளையாட்டு சாதனங்கள் அங்கே பொருத்தப்பட்டன. வெளியிலிருந்து பார்ப்பதற்கு படுஜோராக இருந்தது.

ஒரே பிரச்னை, பூட்டிக்கிடந்த அந்தக் கதவுகள் திறக்கப்படவே இல்லை. அவ்வப்போது ஏதாவது சிறிய மராமத்து வேலை செய்வதற்காகத் திறப்பார்கள், மறுபடியும் பூட்டிவிட்டுப் போய்விடுவார்கள்.

மறுபடியும் எங்கள் வாட்ச்மேனையே விசாரித்தேன், ‘திறப்புவிழா நடக்கப்போவுது சார்’ என்றார், ‘எம்.எல்.ஏ. வர்றார், தெரியுமா?’

அந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை காலை திறப்புவிழா. என் மனைவியும் மகள்களும் போய் வந்தார்கள். மாண்புமிகு எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டிப் பூங்காவைத் திறந்துவைத்துவிட்டு ஊஞ்சலில் உட்கார்ந்து போஸ் கொடுத்தாராம். மைசூர்பாகு, லட்டு, பூந்தி விநியோகமாம். இனிமேல் பார்க் தினமும் காலை 2 மணி நேரம் மாலை 2 மணி நேரம் திறக்கப்படுமாம்.

அதன்பிறகு குழந்தைகளை விளையாட அழைத்துச் செல்கிற சாக்கில் அடிக்கடி அந்தப் பூங்காவுக்குச் சென்றுவந்தேன். உள்ளேயே வெள்ளை மணலுக்கு ஓரமாக மூன்று பெஞ்ச்களைப் பொதித்துவைத்திருந்தார்கள். குழந்தைகள் பாதுகாப்பாக(?) விளையாடுகிறார்களா என்று ஓரக்கண்ணால் கவனித்தபடி புத்தகம் படிக்க வசதியாக இருந்தது.

ஆனால், பூங்கா திறந்த ஒரே வாரத்துக்குள் அங்கே கூட்ட நெரிசல் தாங்கவில்லை. ஊஞ்சலில், சறுக்குமரத்தில் ஏறுவதற்குப் பிள்ளைகள் க்யூவில் நிற்கவேண்டிய நிலைமை. ’நீ முதல்ல’, ’நான் முதல்ல’ என்று அடிதடிகள், இழுபறிகள் ‘எவ்ளோ நேரம்டீ ஆடுவே? கீழ எறங்கு’ என்று ஏகப்பட்ட தள்ளுமுள்ளுகள்.

நான் இதையெல்லாம் குழப்பத்தோடு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, என்னருகே உட்கார்ந்திருந்தவர் பரிதாபமாக உச்சுக்கொட்டினார், ‘too bad’ என்றார், ‘இவ்ளோ பிரச்னையும் எதனால தெரியுமா?’

‘தெரியலையே!’

அவர் தூரத்திலிருந்த கொத்து வீடுகளைக் காட்டினார், ‘இந்தப் பிள்ளைங்கல்லாம் அங்கேருந்து வந்தவங்க, நோ டிஸிப்ளின்!’

‘அங்கேருந்துன்னா?’

அவர் என்னைப் புழுமாதிரிப் பார்த்தார் ‘எல்லாம் குடிசைவாசிங்க. What else you expect?’

என்னால் அவருடைய அருவருப்பைப் புரிந்துகொள்ளமுடியவில்லை. சின்ன வயதில் நானும் குடிசைப் பையன்களோடு விளையாடியவன்தான். அவர்களும் இங்கே வாழ்கிறவர்கள்தானே? அந்த வீட்டுப் பையன்கள், பெண்கள் இங்கே வந்து விளையாடினால் என்ன தப்பு?

என் வாதத்தை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை, ‘They lack discipline’ என்றார் பிடிவாதமாக, ‘பாருங்க, ஒழுங்கா க்யூவிலகூட நிக்காம எப்படி ஓடறாங்க, தள்ளறாங்க, பிடிச்சு இழுக்கறாங்க, அடிச்சுக்கறாங்க, இவங்களோட சேர்ந்தா நம்ம பிள்ளைங்கதான் கெட்டுப்போகும்.’

எனக்குச் சிரிப்புதான் வந்தது. க்யூவில் நிற்காமல் அடுத்தவர்களை முந்திப்போக நினைப்பது இந்தியாவின் தேசிய குணம். அந்தக் கெட்ட பழக்கத்தைக் குடிசைவாசிகள்மீதுமட்டும் சுமத்துவது என்ன நியாயம்?

இதெல்லாம் நான் எனக்குள் நினைத்துக்கொண்டவை. எதையும் அவரிடம் சொல்லவில்லை. (எனக்குப் பொதுவாக விவாதம் செய்வது பிடிக்காது. நேர விரயம். நான் ஒன்றும் பெரிய சிந்தனையாளர் இல்லை. பெரும்பாலான விஷயங்களில் என் புரிதல் அரைகுறையானது. குழந்தைத்தனமானது. இத்தனைக் குறைகளை வைத்துக்கொண்டு அநாவசியமாக என்ன பெரிய ஈகோ? ‘நீங்க சொல்றதுதான் சரி’ என்று உடனே ஒப்புக்கொண்டு தலையாட்டிவிடுவேன்.)

கதை அதோடு முடியவில்லை. அடுத்தடுத்த நாள்களில் குழந்தைகளோடு பூங்காவுக்குச் சென்றபோதெல்லாம் இதுபோன்ற அடிதடி, சண்டைகளைப் பார்த்தேன். மாடி வீடு, கூரை வீடு, குடிசை வீடு என்று வித்தியாசமில்லாமல் எல்லாக் குழந்தைகளுமே தாங்கள்தான் அதிக நேரம் விளையாடவேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பதாக எனக்குத் தோன்றியது. அது இயல்புதான் என்பதும் புரிந்தது.

ஆனால், இதுமாதிரி பிரச்னைகள் முளைக்கிற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதற்கான காரணம் ஓர் ஏழைக் குழந்தையின்மீதுதான் சுமத்தப்பட்டது. சொன்னால் நம்பமாட்டீர்கள், ஐந்தாறு வயதுச் சின்னப் பையன் ஒருவனைப்பார்த்து (ஆங்கிலக்) கெட்டவார்த்தையில் திட்டி, ‘இனிமே இதுமாதிரி ரௌடி(?)ங்க இருக்கிற இடத்துக்கு என் பிள்ளைங்களை அழைச்சுகிட்டு வரமாட்டேன்’ என்று முழங்கினார் ஒரு தாய்.

இந்தப் பிரச்னைக்கு நீண்ட காலத் தீர்வு என்ன என்று பலவிதமாக யோசித்துப்பார்த்தேன். பூங்காவைப் பெரிதாக்குவதுதவிர வேறு எந்த யோசனையும் தோன்றவில்லை.

போன வாரத்தில் ஒருநாள் அபூர்வமாக அலுவலகத்திலிருந்து சீக்கிரம் வீடு திரும்பிவிட்டேன். குழந்தைகளை அழைத்துக்கொண்டு பூங்காவுக்குப் போகலாம் என்று முடிவானது.

பூங்கா வாசலில் ஒரு காக்கிச் சட்டைக்காரர். கதவைத் திறந்து குழந்தைகளைமட்டும் உள்ளே அனுமதித்தார், ‘நீங்க வெளியதான் சார் இருக்கணும்’ என்றார்.

’ஏன்?’

‘செகரெட்டரி அப்படிதான் சார் சொல்லியிருக்கார், பெரியவங்க யாரையும் உள்ளே விடறதில்லை.’

எனக்குக் குழப்பம், ‘செகரெட்டரியா? அது யாரு?’

என் மனைவி விளக்கிச் சொன்னார், ‘இந்தப் பார்க் பராமரிப்புக்காக ஒரு சங்கம் அமைச்சிருக்காங்க, இந்த ஏரியாவில ஏழெட்டுப் பேர் அதில மெம்பர்ஸ், அவங்களுக்கு ஒர் தலைவர், செகரெட்டரில்லாம் இருக்காங்க.’

‘அட, இந்த வாட்ச்மேன்லாம் அவங்க ஏற்பாடுதானா?’

‘ஆமா.’

‘இதுக்கெல்லாம் பணம்?’

’எல்லாம் நம்ம காசுதான். ஒவ்வொரு குழந்தைக்கும் மாசம் இருநூறு ரூபா தரணும்ன்னு ஏற்பாடு.’

நான் அதிர்ச்சியோடு பூங்காவுக்குள் பார்த்தேன். எல்லாமே பூசி மெழுகிய மேல்தட்டு வாரிசுகள். குடிசைக் குழந்தைகள் ஒன்றுகூட இல்லை.

***

என். சொக்கன் …

27 07 2010

31 Responses to "திருட்டு"

அரசு பராமரிக்கும் பூங்காவில் மாத கட்டணமா என்ன கொடும இது.. பொம்மனள்ளி எம்.எல்.ஏ கிட்ட சொன்னாத்தான் சரிப்படும் போல..

இது கதையா நிஜமா !!!

என் பார்வையில் இந்தியாவின் எல்லா பிரச்சனைகளுக்கும் மூல காரணங்கள் இரண்டு தான் . 1) மக்கள் தொகை பெருக்கம் (2) கிராமங்கள் மற்றும் நகரங்களைத் தவிர்த்துவிட்டு அரசாங்கங்கள் மாநகரங்களை மட்டும் பாலூட்டி வளர்ப்பதுதான்.

when he said “They lack discipline’ I thought he is talking about NRIs but turned out to be kudisai kulandaigal. I totally agree that self discipline is not some thing Indian care about. Its universal prob in India. I am so hurt when they put a price tag for a park. Don’t know what to say! Why can’t we collect some donation from IT people in bangalore and create a park for kudisai kulandaigal. Should we tag it like this “This park is only for who can’t pay monthly membership”?

டிவி 9 ஆட்களிடமோ அல்லது KRV கிட்ட சொன்னா உடனே சரியாகிடும்

புளிய மரத்தின் கதை

வேதனைதான். மேல்தட்டினர் செல்ல நிறைய இடமும், அவர்களுக்கதற்கான வசதி வாய்ப்புகளும் இருப்பினும் சிறியோரை ஏய்த்துப் பிழைப்பதை அவர்கள் விடுவதேயில்லை.

//Why can’t we collect some donation from IT people in bangalore and create a park for kudisai kulandaigal. Should we tag it like this “This park is only for who can’t pay monthly membership”?//

இது சரியல்ல.. அரசாங்க செலவில் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் பூங்காவில் அனைவருக்கும் அனுமதி கொடுக்கப்படவேண்டும்.

ஏழைக்களுக்கு என்று தனியே ஒரு பூங்கா அதுவும் காசு கொடுக்கமுடியாதவர்களுக்கு என்று ஒரு அறிவிப்பு பலகையுடன் எப்படி மகேஷ் இது உங்களுக்கு தவறாக தெரியவில்லையா….

Aravind,
Oru kopathil solvathu thaan matrapadi yaaraiyum pirikanum engira ennam enakku illai especially with kids, they should be able to hang around anywhere. In fact its wrong path if we start seperating the parks for each class which is not good.

இது ரொம்ப கொடுமை.
எங்கள் flats எதிரிலும் ஒரு பூங்கா இருக்கிறது. இதுவரை நான் அதை கண்டுகொண்டதில்லை, இந்த பதிவை படித்தபின் அங்கு செல்லவேண்டும் போல் உள்ளது.

தலைப்பை படித்துவிட்டு நான் ஏதோ பார்க்கில் இருக்கும் சாமான்களைதான் அபேஸ் செய்துவிட்டார்களோ என்று ஆர்வமாக படித்தால்… 🙂
எங்கள் லேஅவுட்டில் இருக்கும் பார்க்கில் கூட மாலை நேரத்தில் இதே கூட்ட நெரிசல்தான். அதனால் குழந்தை சஹானாவுடன் நான் காலையில் செல்கிறேன், பார்க்கில் நாங்க மட்டும்தான் இப்போழுது 🙂

ஒரு நாவல் படிப்பது போல இருந்தது மிகவும் அருமை

தங்கள் குழந்தைகள் மற்ற குழந்தைகளால் கெட்டுப் போய் விடுவதாக எண்ணும் (மெத்தப் படித்த) பெற்றோர்களின் மனப்பான்மையை புரிந்து கொள்ள முடியவில்லை.

அருமையான பதிவு.

இங்கு எடியூர் லேக் பார்க்கில் கதையே வேறு, அனைத்தும் வாட்ச்மேன் ராஜ்ஜியம்தான். 9 வயது மேற்பட்ட பிள்ளைகலுக்கெல்லாம் ஊஞ்சல் அனுமதி இல்லை. நானெல்லாம் விளையாட ஆசைபடக்கூடாதா? எனக் கேட்கும் மகனுக்கு என்ன சொல்ல?

சரிதான், போற போக்கிலே மெரினா பீச்சுக்குக் கூட டிக்கெட் போடுவாங்க போலிருக்கே!

http://kgjawarlal.wordpress.com

அருமையான நடை. வாசித்து முடித்தபோது இதயம் கனத்தது.

Its really so sad to read. People are finding only easy solutions instead of helping the poor..appuram romba naaLaachchu…sowkiama sir..

நண்பர்கள் தின வாழ்த்துகள் தோழரே!

– ஜெகதீஸ்வரன்

வழக்கம் போல் நல்ல நடை. மிகவும் கனத்த பதிவு.

தலைப்பின் காரணம் புரியவில்லை, சொக்கன். விளக்கமுடியுமா?
Dreamer

அரசுப்பூங்காக்கள் பணக்காரர்கள், பணம் செலவு செய்ய முடிகிறவர்களைவிட பணவசதி இல்லாதவர்களுக்கே அதிகம் தேவை.

இது புரியாதவர்களை படித்தவர்களாக இருந்தாலும் அறிவிலிகளே.

அரசுப்பூங்காக்கள் பணக்காரர்கள், பணம் செலவு செய்ய முடிகிறவர்களைவிட பணவசதி இல்லாதவர்களுக்கே அதிகம் தேவை.

இது புரியாதவர்கள் படித்தவர்களாக இருந்தாலும் அறிவிலிகளே.

A gud (but sad 😦 ) post…

thalaippu thiruttu enbathirku bathil kollai enru vaithurukalam….

Thalaippu “Thiruttu” enbathirku bathil “Kollai” enru vaithurukalam

Thalaiva ethavathu elunthunga… summa summa vanthu porathu boreadikkuthulll:)

Thalaiva ethavathu elunthunga… summa summa vanthu porathu boreadikkuthulla:)

சுவையான நடையில், சுவைக்காத நிகழ்வு…

Excellent!!! Beautiful flow. Eppavume unga angle vithyasamaanathu. Malargalai rasipathai vida vergalai aaraayum ezhuthaalar neengal.

😦 😦

நீங்கள் வைத்த தலைப்பு மிக சரி

நீங்கள் எழுதும் தமிழ்தான் படிக்க எளிதாகவும், நன்றாகவும் இருக்கிறது. இப்பொழுதெல்லாம் மண்டை உடைவது போல் கோணல்மாணலாக எழுதிவிட்டு நவீனம் என்கிறார்கள். ஓவியங்களும் அப்படித்தான் இருக்கின்றன. சில மாக்கான்கள் இவற்றையும் ரசிக்கின்றார்கள். நான்தான் முட்டாளோ என்று கூட தோன்றுகிறது. 😦

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 621,011 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

July 2010
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
%d bloggers like this: