போஸ்ட் பாக்ஸ்
Posted October 18, 2010
on:- In: Art | போட்டி | Bangalore | Cheating | Confidence | Creativity | Crisis Management | Expectation | Games | Imagination | Importance | Kids | Learning | Life | Memories | Peer Pressure | Perfection | Play | Positive | Rules | Uncategorized | Value
- 16 Comments
’போஸ்ட் பாக்ஸ்ன்னா என்னப்பா?’
தொலைபேசி தவிர்த்த வேறெந்தத் தகவல் தொடர்பு சாதனத்தையும் அறியாத ஆறரை வயதுப் பெண்ணுக்குத் தபால் பெட்டியை எப்படி விளக்கிச் சொல்வது. ராஜேந்திரகுமார் ஞாபகத்தோடு ‘ஙே’ என விழித்தேன்.
சற்று நேரம் கழித்து நங்கை மீண்டும் கேட்டாள். ‘உன்னைத்தான்ப்பா கேட்டேன், போஸ்ட் பாக்ஸ்ன்னா என்ன?’
’போஸ்ட் பாக்ஸ்ன்னா சிவப்பா உயரமா வட்டமா சிலிண்டர்மாதிரி இருக்கும், செவுத்தில மாட்டிவெச்சிருப்பாங்க, அதுக்குள்ள லெட்டரெல்லாம் போடுவாங்க.’
’செவுத்தில-ன்னா என்ன? லெட்டர்-ன்னா என்ன?’
‘கொஞ்சம் பொறு. ஒவ்வொரு கேள்வியா வருவோம். முதல்ல, நீ ஏன் போஸ்ட் பாக்ஸ் பத்தி விசாரிக்கறே?’
‘தசரா ஹாலிடேஸ்க்கு எங்க க்ளாஸ்ல எல்லாரும் ஆளுக்கு ஒரு ப்ராஜெக்ட் செய்யணும்ன்னு மிஸ் சொன்னாங்க. சீட்டுக் குலுக்கிப் போட்டதில எனக்குப் போஸ்ட் பாக்ஸ்ன்னு வந்தது’ என்றாள் நங்கை. ‘உனக்கு போஸ்ட் பாக்ஸ் செய்யத் தெரியுமாப்பா?’
‘தெரிஞ்சுக்கணும். வேற வழி?’
அன்றுமுழுக்க போஸ்ட் பாக்ஸ்பற்றியே யோசித்துக்கொண்டிருந்தேன். பள்ளி நாள் டவுசரின் பின்பக்கக் கிழிசல் ஞாபகம் வந்தது. ஏதோ ஒரு படத்தில் (நிஜ) போஸ்ட் பாக்ஸுக்குள் கையை விட்டுச் சிக்கிக்கொண்டு அவதிப்படுகிற நடிகர் சார்லியின் ஞாபகம்கூட வந்தது. ஆனால் போஸ்ட் பாக்ஸ் எப்படிச் செய்வது என்றுமட்டும் புரியவில்லை.
இன்டர்நெட்டில் ‘How to make a post box’ என்று தேடிப் பார்த்தேன். ஏராளமான கட்டுரைகள், வீடியோக்கள், ட்யூட்டோரியல்கள், உதவிக் குறிப்புகள் சிக்கின. ஆனால் அவை எல்லாம் மேலை நாட்டுத் தபால் பெட்டிகள். அதையெல்லாம் செய்து கொடுத்தால் இந்தியத் தபால்துறையினர் அங்கீகரிக்கமாட்டார்கள்.
இதனிடையே நவராத்திரி கொலு, சுண்டல் வேலைகளில் பிஸியாக இருந்த என் மனைவி அவ்வப்போது என்னைக் கிலிப்படுத்த ஆரம்பித்தார். ‘லீவ் முடியறதுக்கு இன்னும் அஞ்சு நாள்தான் இருக்கு, தெரியும்ல? போஸ்ட் பாக்ஸ் வேலையை எப்ப ஆரம்பிக்கறதா உத்தேசம்?’
‘இது என்ன அநியாயம்? ப்ராஜெக்ட் அவளுக்கா, எனக்கா?’
‘அவளுக்குதான்!’
‘அப்புறம் ஏன் என்னைப் போஸ்ட் பாக்ஸ் செய்யச் சொல்றே?’
‘செய்யவேணாம். போஸ்ட் பாக்ஸ்ன்னா என்னன்னு அவளுக்கு விளக்கிச் சொல்லிடு. அவளே செஞ்சுக்கட்டும்!’
அதையும் முயற்சி செய்து பார்த்தேன். புகை சிக்னல்கள், புறா விடு தூது-வில் ஆரம்பித்து ஈமெயில், ப்ளூடூத், வைஃபை நெட்வொர்க்வரை தகவல் தொடர்பு சாதனங்களின் சரித்திரத்தைக் கதையாக விளக்கிச் சொல்லியும் நங்கைக்குப் ’போஸ்ட் பாக்ஸ்’ புரியவில்லை. பக்கத்தில் இருக்கிற தபால் நிலையத்துக்கு அழைத்துச் சென்று ஒரு நிஜ போஸ்ட் பாக்ஸைக் கண்ணெதிரே காண்பித்தும் பிரயோஜனமில்லை. ’கொழப்பாதேப்பா, கொஞ்சமாவது எனக்குப் புரியறமாதிரி சொல்லு’ என்றாள் திரும்பத் திரும்ப.
இந்த அவஸ்தைக்கு போஸ்ட் பாக்ஸே செய்துவிடலாம் என்று முடிவெடுத்தேன். அதற்கான பொருள்களைத் தேட ஆரம்பித்தேன்.
முதலில் சிலிண்டர் வடிவத்தில் ஏதாவது வேண்டும். சமையலறையில் கோதுமை மாவு கொட்டிவைக்கிற பிளாஸ்டிக் டப்பா இருக்கிறது. அதைச் சுட்டுவிடலாமா?
‘பக்கத்தில வந்தேன்னா பிச்சுப்புடுவேன்’ என்று பதில் வந்தது. ‘உங்க ப்ராஜெக்டுக்கு என்னோட டப்பாதான் கிடைச்சுதா?’
வார்த்தைத் தேர்வுகளைக் கவனியுங்கள். ‘உங்க ப்ராஜெக்ட்’, ‘என் டப்பா’ – சரியான நேரத்தில் உரிமைதுறப்பதிலும், உரிமைபறிப்பதிலும் பெண்கள் வல்லவர்கள்.
டப்பா இல்லை. அடுத்து? வீட்டில் உருளை வடிவத்தில் வேறென்ன இருக்கிறது? (இங்கே ஓர் இடைச்செருகல், ‘உருளைக் கிழங்கு’ பர்ஃபெக்ட் சிலிண்டர் வடிவத்தில் இல்லையே, அதற்கு ஏன் அப்படிப் பெயர் வைத்தார்கள்?)
நானும் நங்கையும் நெடுநேரம் தேடியபிறகு உருளை வடிவத்தில் ஒரே ஒரு பிஸ்கட் டின் கிடைத்தது. அதில் தபால் பெட்டியெல்லாம் செய்யமுடியாது. வேண்டுமென்றால் உண்டியல் பண்ணலாம். எப்படி ஐடியா?
‘ம்ஹூம், எனக்கு போஸ்ட் பாக்ஸ்தான் வேணும்.’
’ஓகே. வேற சிலிண்டர் தேடு!’
இன்னொரு அரை மணி நேரம் சென்றபிறகு எப்போதோ ஷூ வாங்கிய ஒரு டப்பா கிடைத்தது. ‘இதை சிலிண்டரா மாத்தமுடியாதாப்பா?’
அப்போதுதான் எனக்கு(ம்) ஒரு ஞானோதயம். தபால் பெட்டி உருளை வடிவத்தில்தான் இருக்கவேண்டும் என்று எவன் சொன்னான்? இப்போதெல்லாம் செவ்வகப் பெட்டி வடிவத்தில்கூடத் தபால் பெட்டிகளை அமைக்கிறார்களே!
சட்டென்று நங்கை கையிலிருந்த ஷூ டப்பாவைப் பிடுங்கிக்கொண்டேன். ஏதோ நிபுணனைப்போல நாலு பக்கமும் அளந்து பார்த்துவிட்டு ‘பர்ஃபெக்ட்’ என்றேன். ‘சரி வா, போஸ்ட் பாக்ஸ் பண்ணலாம்!’
நங்கைக்கு செம குஷி. ஏற்கெனவே வாங்கிவைத்திருந்த சிவப்புக் காகிதம், பசை, ஸ்கெட்ச் பேனா, கத்தரிக்கோல், செல்லோடேப், இன்னபிற சமாசாரங்களைத் தரையில் பரப்பிவிட்டுக் கை கட்டி உட்கார்ந்துகொண்டாள். ‘போஸ்ட் பாக்ஸ் பண்ணுப்பா’ என்றாள் அதிகாரமாக.
அதான் சொன்னேனே? உரிமைதுறப்பதில் பெண்கள் வல்லவர்கள். ஆறரை வயதானாலும் சரி.
நான் இதுவரை ஆயிரக்கணக்கான ’போஸ்ட் பாக்ஸ்’களைச் செய்து முடித்தவன்போன்ற பாவனையோடு வேலையில் இறங்கினேன். ஷூ பெட்டியின் மூடியை அதிலேயே நிரந்தரமாகப் பொருத்தி செல்லோடேப் போட்டு ஒட்டினேன். மேலே செக்கச் செவேல் காகிதத்தைச் சுற்றிப் பரிசுப் பார்சல்போல் மாற்றினேன்.
சும்மா சொல்லக்கூடாது. சற்றுத் தொலைவிலிருந்து பார்ப்பதற்கு அந்த ஷூ பெட்டி அச்சு அசல் ஒரு செங்கல்லைப்போலவே இருந்தது. நங்கைக்குதான் செங்கல்லும் தெரியாது, போஸ்ட் பாக்ஸும் தெரியாதே, அவள் அதை ஒரு தபால் பெட்டியாகவே கற்பனை செய்துகொண்டாள்.
ஒரே பிரச்னை. நங்கையின் அம்மாவுக்குத் தபால் பெட்டி தெரியும். இந்தச் செங்கல் அவருடைய பார்வைக்குச் செல்வதற்குமுன்னால் அதைக் கொஞ்சமாவது தட்டிக்கொட்டிச் சரி செய்யவேண்டும். இல்லாவிட்டால் இன்னும் ஏழெட்டு வருடத்துக்கு மானம் போய்விடும்.
அவசரமாகக் கத்தியைத் தேடி எடுத்தேன். செங்கல்லின் ஒரு முனையில் நாலு விரல் நுழையும் அளவுக்குச் செவ்வகம் வரைந்தேன். அதன் மூன்று பக்கங்களை வெட்டி நிமிர்த்தி Sun Shadeபோல 45 டிகிரி கோணத்தில் நிறுத்தினேன். அங்கே ஒரு வெள்ளைக் காகிதத்தை ஒட்டிக் கொட்டை எழுத்துகளில் ‘POST’ என்று அறிவித்தாகிவிட்டது.
தபால் போடுவதற்குத் திறப்பு வைத்தாகிவிட்டது. அடுத்து? அந்தக் கடிதங்களை வெளியே எடுப்பதற்கு ஒரு கதவு திறக்கவேண்டும். கத்தியை எடு, வெட்டு, நிமிர்த்து, வேலை முடிந்தது. அந்தக் கதவின் பின்பகுதியில் நங்கையை இஷ்டப்படி டிசைன் வரையச் சொன்னேன். இந்தப் ப்ராஜெக்டில் அவளும் ஒரு துரும்பைக் கிள்ளிப்போட்டதாக இருக்கட்டுமே!
கடைசியாக இன்னும் சில பல வெட்டல், ஒட்டல், ஜிகினா வேலைகளைச் செய்துமுடித்தபிறகு தபால் பெட்டியை ஃப்ரிட்ஜ்மீது நிறுத்திவிட்டுச் சற்றுத் தொலைவில் நின்று பார்த்தோம். ’சூப்பரா இருக்குப்பா’ என்று ஒரு முத்தம் கொடுத்தாள் நங்கை.
அவ்வளவுதான். நான் போஸ்ட் பாக்ஸை மறந்து எழுதச் சென்றுவிட்டேன்.
இன்று காலை. நங்கைக்கு மீண்டும் பள்ளி திறக்கிறது. பாலித்தீன் பையில் போஸ்ட் பாக்ஸைப் பார்சல் செய்தவாறு கிளம்பியவள் புறப்படுமுன் ஒரு விஷயம் சொன்னாள். ‘அப்பா, இன்னிக்கு வர்ற ப்ராஜெக்ட்ஸ்லயே இதுதான் பெஸ்டா இருக்கும். எனக்குதான் ஃபர்ஸ்ட் ப்ரைஸ் கிடைக்கும். தெரியுமா?’
ம்க்கும். முதலில், போஸ்ட் பாக்ஸ் எப்படி இருக்கும் என்பதே இவளுக்குத் தெரியாது. மற்றவர்கள் என்னென்ன ப்ராஜெக்ட் செய்திருக்கிறார்கள், அதை எப்படிச் செய்திருக்கிறார்கள் என்பதும் தெரியாது. ஆனால் போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே தன்னுடைய போஸ்ட் பாக்ஸுக்குதான் முதல் பரிசு கிடைக்கும் என்று நம்புகிறாள். குழந்தைகளுக்குமட்டுமே சாத்தியமான அதீத தன்னம்பிக்கை இது!
அந்த போஸ்ட் பாக்ஸ்(?)ன் நிஜமான லட்சணம் தெரிந்த என்னால் அவளுக்குப் போலியாகக்கூட ‘ஆல் தி பெஸ்ட்’ சொல்லமுடியவில்லை. மற்ற குழந்தைகளின் பெற்றோரெல்லாம் நிஜமான Crafts Materials வாங்கி ஒவ்வொரு ப்ராஜெக்டையும் என்னாமாக இழைத்திருக்கிறார்களோ, தெரியவில்லை. நான்மட்டும் கிடைத்ததை வைத்து ஒட்டுப்போட்டுக் குழந்தையை ஏமாற்றிவிட்டேனே என்கிற குற்றவுணர்ச்சி உறுத்தியது.
இரண்டு நிமிடத்தில் நங்கையின் ஸ்கூல் பஸ் வந்துவிட்டது. அதிலிருந்த உதவிப் பையனிடம் தன்னுடைய புத்தகப் பை, சாப்பாட்டுப் பையைக் கொடுத்தவள் போஸ்ட் பாக்ஸைமட்டும் தானே கவனமாகக் கையில் ஏந்தியபடி ஏறிக்கொண்டாள். டாட்டா காட்டிவிட்டுக் கிளம்பிச் சென்றுவிட்டாள்.
எங்களுடைய செங்கல் பெட்டிக்கு ஓர் ஆறுதல் பரிசாவது கிடைக்கவேண்டும் என்று நீங்களும் பிரார்த்தனை பண்ணிக்கொள்ளுங்கள்!
***
என். சொக்கன் …
18 10 2010
16 Responses to "போஸ்ட் பாக்ஸ்"

Have you made a note about “Next Clearance at ” in the post box


“ப்ராஜெக்ட் அவளுக்கா, எனக்கா?”
ஓ!! இப்படி கேள்வி கேக்குற அளவுக்கு உங்களுக்கு தைரியம் இருக்கா!?
வீட்டுக்கு வீடு வாசப்படி/விளக்குமாறு.
ஹ்ம்ம்…


ரிசல்ட் எப்படியோ இருக்கட்டும் டோண்ட் ஒர்ரி ஆனால் கால ஓட்டத்தில் நம்மால் மறக்கப்பட்டுவிட்ட தபால் பெட்டியினை வடிவாமாக்கியது சொல்லிக்கொள்ளும்படியான சாதனையேதான் 🙂 சமீபத்திய விடுமுறையில் நான் ஊரில், தெருக்களில் பார்த்த தபால் பெட்டிகள் எந்தவொரு மராமத்து பணிகளுமின்ரி பரிதாப நிலையில் தொங்கிக்கொண்டு இருந்ததை நினைத்துப்பார்க்க வைத்தது பதிவு!
___________________
//வார்த்தைத் தேர்வுகளைக் கவனியுங்கள். ‘உங்க ப்ராஜெக்ட்’, ‘என் டப்பா’ – சரியான நேரத்தில் உரிமைதுறப்பதிலும், உரிமைபறிப்பதிலும் பெண்கள் வல்லவர்கள்./
LOL:))))
________________
எச்சுஸ்மீ ஒரு சந்தேகம்
//தபால் பெட்டியை ஃப்ரிட்ஜ்மீது நிறுத்திவிட்டுச்//
சுவற்றில் நிற்க வைக்க வசதியாக ஹேங்கர் செய்யவில்லையோ?


பாப்பாவுக்கு பரிசு கிடைக்க பிரார்த்திக்கிறேன்!


இத்தனை செய்தீர்களே? தபால் பெட்டி என்று கருதப்படும் ஒரு வஸ்துவை செல்போனில் புகைப்படம் எடுத்து இங்கு போட்டிருந்தால் நன்றாயிருந்திருக்குமே? பரிசு வாங்குமா என்று இப்பவே சொல்லியிருக்கலாம். இருந்தாலும் ஆல்தபெஸ்ட்.:)


;)) விரைவில் முடிவையும் சொல்லுங்க..;)))


புன்னகைகளை பூக்க வைத்த பதிவு.
நகரத்தில் தேய்பிறையாகும் போஸ்ட்-பாக்ஸ் கிராமங்களில் இன்னமும் முழுமதியாகவே ஒளிர்கிறது.
என் உறவினர் வீட்டில் போஸ்ட்-ஆபீஸ் இயங்குகிறது. காலையும் மாலையும் வந்து எனக்கு ஏதேனும் மணி-ஆர்டர்/லெட்டர் வந்திருக்கிறதா எனக் கேட்டுச் செல்லும் கிராம மக்களைப் பார்க்கும் போதெல்லாம் மனசு கொஞ்சம் கனக்கும். முடிந்தால் இதைப் பற்றி ஒரு பதிவு எழுதுகிறேன்.


பையனுக்கு அப்ப்ளிகேஷன் பாரம் பத்தி விசாரிக்க பக்கத்துல ஒரு ஸ்கூலுக்கு போய் இருந்தேன்,
மூன்றாம் வகுப்பு புள்ளைங்க செஞ்சதுன்னு சொல்லி சில ப்ராஜெக்ட் மாடல்களை பார்வைக்கு வைத்து இருந்தார்கள். சிட்டியை விட அட்டகாசமான ரோபோவெல்லாம் செஞ்சு இருக்காங்க புள்ளைங்க(ளோட அப்பா, அம்மா…)
நாளைக்கு ரெசல்ட் வந்ததும் ட்வீட்டி விடவும் 🙂


நல்ல அனுபவம். தபால் அலுவலகத்தில் வேலை செய்யும் என் தந்தை வருத்தப்படும் நிமிடங்களில் மட்டும் கடிதம் ஞாபகம் வரும். 🙂
ரிசல்ட் என்ன ஆச்சு?


இந்த பதிவு சேரனின் கடைசி திரைப்படம் வந்து உடனே போவதற்குள் ரொம்ப டாபிக்கலாக இருந்திருக்கும்!
நிற்க.
முழு முகவரிக்கு பதில் போஸ்ட்பாக்ஸ் என்று (குறிப்பாக வேலை விளம்பரங்களில்) போடுவது இன்னும் புழக்கத்தில்தான் இருக்கிறது. அதனால், நீங்கள் சிவப்பு செங்கல் செய்யாமல், அலுமினியப்பெட்டி அனுப்பியிருந்தாலும் தகும்!


[…] கொடுத்துவிடுவோம். ஏற்கெனவே இதுபற்றி இங்கே […]

1 | அரவிந்தன்
October 18, 2010 at 1:52 pm
முடிவுக்காக நாங்களும் ஆவலோடு காத்திருக்கிறோம்.