மனம் போன போக்கில்

விபத்து

Posted on: October 23, 2010

சிவப்பு விளக்கு அணைந்து பச்சை ஒளிர்ந்தது. எங்கள் பஸ் வலதுபக்கம் திரும்பி வேகம் பிடிக்கத் தொடங்கிய மறுவிநாடி அந்தச் சத்தம் கேட்டது.

முதலில் நான் முன்டயர் வெடித்துவிட்டதாகதான் நினைத்தேன். கவலையோடு ஜன்னலுக்கு வெளியே தலையை நுழைத்தபோது சரேலென்று படுக்கைவசத்தில் தரையோடு உராய்ந்துகொண்டு வழுக்குகிற பைக்கைப் பார்த்தேன்.

சென்ற விநாடிவரை அதை ஓட்டிக்கொண்டிருந்தவர் இப்போது நான்கடி தள்ளிக் கிடந்தார். அவர் தலையிலிருந்த ஹெல்மெட் கழன்று எகிறி வேறு எங்கோ விழுந்திருந்தது.

நான் அவசரமாகத் தலையை உள்ளே இழுத்துக்கொண்டேன். பஸ்ஸிலிருந்த எல்லோருமே வாசல் கதவை நோக்கி ஓடினோம்.

நாங்கள் கீழே இறங்குவதற்குள் அக்கம்பக்கத்தில் இருந்த வாகன ஓட்டுனர்கள் அடிபட்டவரை நெருங்கியிருந்தார்கள். இரண்டு பேர் அவரைக் கைத்தாங்கலாகத் தூக்கிக்கொண்டு சாலை ஓரத்துக்கு ஓடினார்கள். ஒல்லிப்பிச்சிப் பையன் ஒருவன் வண்டியைத் தூக்கி நிறுத்தி எஞ்சினை அணைத்தான்.

அடிபட்டவர் தான் உயிர் பிழைத்துவிட்டோமா என்பதை நம்பமுடியாதவர்போல் திருதிருவென்று விழித்துக்கொண்டிருந்தார். மற்றவர்கள் அவரைப் பதற்றமாக விசாரிக்க ‘ஐ யாம் ஆல்ரைட்’ என்று எழுந்து நிற்க முயன்றார். முடியவில்லை.

கூட்டம் ஆவேசமாக எங்கள் பேருந்தின் ஓட்டுனர்மீது திரும்பியது. ‘ஏன்ய்யா, கவர்ன்மென்ட் வண்டியில ஏறிட்டா நீ பெரிய மஹாராஜாவா? பார்த்து வர்றதில்ல?’

இவரும் விடாமல் திருப்பி முறைத்தார். ‘நான் சரியாதான் வந்தேன். அந்தாள்தான் ரெட் சிக்னலைப் பார்க்காம குறுக்கே வந்து அடி வாங்கினான்.’

பஸ் டிரைவர் சொல்வது உண்மைதான் என்பது எல்லோருக்கும் புரிந்தது. ஆனாலும் இரண்டு வண்டிகள் மோதிக்கொள்ளும்போது பெரிய வண்டியின் ஓட்டுனர்தானே தப்புச் செய்தவராக இருக்கமுடியும்?

‘இப்ப என்ன பண்றது?’ யாரோ கேட்டார்கள். ‘பக்கத்திலதான் போலிஸ் ஸ்டேஷன்!’

‘போலிஸ் இருக்கட்டும். இப்படி நடு சிக்னல்ல பஸ்ஸை நிறுத்திவெச்சா எப்படி? முதல்ல அதை ஓரங்கட்டி நிறுத்துங்க.’

எங்கள் ஓட்டுனர் பஸ்ஸில் ஏறிக்கொண்டார். நாங்களும். வலதுபக்கம் திரும்பி ஓர் ஓரமாக அவர் வண்டியை நிறுத்தியவுடன் சினிமாவில் வருவதுபோல் மழை பெய்ய ஆரம்பித்திருந்தது.

இதற்குள் அடிபட்டவர் தட்டுத்தடுமாறி எழுந்து நின்றிருந்தார். அவருக்கு உதவி செய்தவர்கள் யாரிடமும் குடை இல்லை. மழை மிக விரைவில் நன்கு வலுத்துவிட்டதால் சில நிமிடங்கள் கழித்து வண்டிக்குள் இருந்த எங்களால் அவர்களைச் சரியாகப் பார்க்கக்கூட முடியவில்லை.

‘சரி. வண்டியை எடுங்க!’ யாரோ தீர்ப்புச் சொன்னார்கள்.

‘அதெப்படி? நாளைக்கு ஏதாவது பிரச்னை வந்தா எங்க வேலைதானே போகும்?’ என்றார் கண்டக்டர். ‘டிப்போவுக்கு ஃபோன் பண்றேன். இதுபத்தி அவங்கதான் முடிவெடுக்கணும்.’

எனக்கு முன் சீட்டில் உட்கார்ந்திருந்தவருக்கு எரிச்சல். ‘யோவ், பசி நேரத்தில ஏன்ய்யா கடுப்பேத்தறீங்க? அதான் ரத்த காயம் இல்லைன்னு தெரியுதுல்ல? ஒண்ணும் பிரச்னை வராது. வண்டியை எடு!’

கண்டக்டர் அவரைக் கண்டுகொள்ளாமல் தன்னுடைய செல்பேசியில் ஓர் எண்ணை ஒற்றிப் பேச ஆரம்பித்திருந்தார். ’சார், இங்கே மடிவாலா மார்க்கெட் பக்கத்தில ஒரு சின்ன ஆக்ஸிடென்ட்!’ … ‘இல்லை சார். பெரிசா ஒண்ணும் காயம் இல்லை’ … ‘வண்டிக்குக்கூட பெரிய டேமேஜ்லாம் இல்லை சார்’ … ‘இங்கே நல்லா மழை பெய்யுது சார். ஜன்னல் வழியா ஒண்ணும் தெரியலை!’ … ‘அப்படியா? சரி சார், நாங்க வெய்ட் பண்றோம்.’

பயணிகள் பெரிதாக உச்சுக்கொட்டினார்கள். ‘அவனவனுக்கு ஆயிரம் வேலை இருக்கு. ஒண்ணுமில்லாத விஷயத்தை இப்படிப் பெரிசு பண்றீங்களே!’

டிரைவரும் கண்டக்டரும் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தார்கள். சில நிமிடங்களில் மழை லேசாகக் குறைந்து தூறல்மட்டும் மிச்சமிருந்தது.

இப்போது நாங்கள் பஸ்ஸிலிருந்து கீழே இறங்கினோம். டிரைவர், கண்டக்டரோடு நானும் இன்னொருவரும் அடிபட்டவரைப் பார்ப்பதற்காகச் சாலையைக் கடக்க முயன்றோம். ‘பார்த்து கவனமாப் போங்க’ என்றார் ஒருவர். இன்னும் அரை மணி நேரத்துக்காவது எங்கள் எல்லோருக்கும் சாலைப் பாதுகாப்புகுறித்த ஒழுக்க விதிமுறைகள் மறக்காமல் நினைவிருக்கும்.

சாலையின் மறுபக்கம் அடிபட்டவரைக் காணவில்லை. அவருடைய பைக்கும் இல்லை. மழையிலேயே ஓட்டிக்கொண்டு கிளம்பிச் சென்றுவிட்டாரோ என்னவோ!

’ஆக்ஸிடென்ட் ஆன ஆளும் இல்லை. வண்டியும் இல்லை. இன்னும் எதுக்குய்யா காத்திருக்கணும்?’ என்றார் என்னோடு நின்றவர். ‘இப்ப வண்டியை எடுக்கலாம்ல?’

‘இல்லைங்க. ஆஃபீஸ்ல விஷயத்தைச் சொல்லிட்டோம். அவங்க வர்றவரைக்கும் வண்டியை எடுக்கமுடியாது!’

’அப்ப எங்களையெல்லாம் வேற பஸ்ல மாத்திவிடுங்க.’

‘ஓகே!’

நாங்கள் மீண்டும் சாலையைக் கடந்தோம். அந்த வழியாகச் சென்ற இன்னொரு பஸ்ஸைக் கை காட்டி நிறுத்தினார் எங்கள் டிரைவர். ஏறிக்கொண்டோம். எனக்குக் கடைசி இருக்கையில் இடம் கிடைத்தது.

பஸ் புறப்படும்போது அனிச்சையாகத் திரும்பிப் பார்த்தேன். அந்த இன்னொரு பஸ்ஸும் அதன் டிரைவர், கண்டக்டரும் சாலையோரத்தில் பொறுமையாகக் காத்திருந்தார்கள்.

அவர்களுக்கும் பசி நேரம்தான் என்று எங்களில் யாருக்கும் தோன்றவில்லை. தலைமை அலுவலகத்தில் இருந்தவர்களுக்கும்கூடத் தோன்றியிருக்காது.

***

என். சொக்கன் …

23 10 2010

Advertisements

13 Responses to "விபத்து"

விபத்தா?

யாரோ திட்டம் போட்டு சதி பண்ணின மாதிரியில்ல இருக்கு!

ஆகா… இதே விபத்து எனக்கு ஏற்பட்டது நினைவிற்கு வருகிறது. மல்லேஸ்வரம் குட்டலஹள்ளி சர்க்கிளில் பஸ்ஸை இடது பக்கம் முந்த முயற்சிக்கையில் பஸ்ஸும் திரும்ப, Blind Spotல் இருந்த என்னை இடித்து தள்ளி பின் சக்கரம் பைக் மேல் ஏறி அப்பளமாக்கி விட்டது. நல்லவேளை அடி எதுவும் படவில்லை.

உடனே போலீஸ் வந்து பஸ் டிரைவரோடு பக்கத்து ஸ்டேஷனுக்கு போய் ரிப்போர்ட் எல்லாம் செய்துவிட்டுத்தான் வண்டியை எடுத்தார்கள். நானும் பக்கத்தில் ஒரு மெக்கானிக் ஷாப்பில் வண்டியை விட்டுவிட்டு ஆட்டோவில் ஆபீஸ் போய்விட்டேன்.

ஆபீஸிற்குப் போய் சீட்டில் உட்கார்ந்த பிறகுதான் கால்கள் இரண்டும் முழுசாக இருக்கிறது என்பது சந்தோஷமாக உறைத்தது. ரொம்ப நேரத்திற்கு அந்த சந்தோஷம் இருந்தது.

விவேக் பாணியில் சொன்னால் – உங்களோட கடமை உணர்ச்சிக்கும் ஒரு அளவில்லையாடா ?

We can’t predict the people mind and thinking….

Suppose that driver and conductor, not stopped the bus people started to shoot. and vice-verse also happen…………

பெங்களூர் மற்றும் பெரிய நகரங்களில் விபத்துகள் any time நடக்கின்றன. நாம் தான் பஸ் செய்வது நல்லது

நல்ல பகிர்வு சொக்கன்.. அந்த ஓட்டுனர், கண்டக்டரைப் போல் அனைவரும் சமூக அக்கறையுடன் நடந்துகொண்டால் உத்தமம்…

இதில் சொல்லப்பட்டிருக்கும் பைக் காரர் போல விபத்தில் சிக்கியவர்களை, இருபத்து நான்கு மணி நேரம் கண்காணிப்பில் வைத்து இருக்க வேண்டும். ஊமைக் காயமாக இருந்தால் கூட, ஆஸ்பத்திரியில் சேர்த்து, இருபத்து நான்கு மணி நேரத்திற்குள், காதில் இரத்தம் வருகின்றதா / வாந்தி வரும் உணர்ச்சி அல்லது மயக்கம் அதிகப் படியான தூக்கம் – இவைகள் வருகின்றனவா என்று பார்த்து, அப்படி ஏதாவது ஏற்பட்டால், உடனே மருத்துவம் செய்யவேண்டும். இல்லையேல் உயிருக்கு ஆபத்து வரக்கூடும்.

கடந்த வாரம் தான் எனக்கு இருசக்கர வாகன விபத்து ஏற்பட்டது, பணிபுரிவது திருப்பூரில் இரவு ஒன்பது மணியளவில் வீடு திரும்பும் போது நடந்து சென்றவர் என் பைக்கில் மோதி விபத்து. (யாரும் சிரிக்க வேண்டாம்!! நான் இதனை என் நண்பர்களிடம் கூறியபோது வலியை மறந்து நானும் சிரித்தேன்) எழுந்து பார்த்தால் அந்த ஆளை காணோம், புருவம், கை மற்றும் கால்களில் சிராய்ப்பு, மேலும் லெப்ட் காலில் எலும்பு முறிவு. யாரோ பொறுப்பில்லாமல் ரோடை கிராஸ் செய்ததன் விளைவு என்னை போன்ற சாமானியனின் இரு வார வேலை, மற்றும் தொழில் இலாபம் பாதிப்பு.

தலை கவசம் அணிந்துஇருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது, இல்லையெனில் …..

கற்றுக்கொண்டது:
1. முப்பத்துஐந்துக்கு கிமீ வேகத்துக்கு மேல் வேகமாக செல்லக்கூடாது (இது நடக்கக்கூடிய காரியமா என சிந்திக்காமல் செயல்படுத்த வேண்டும் என்று இருக்கிறேன்)

2. இனிமேல் யாரேனும் நூறு அடி தள்ளி ரோடு கிராஸ் செய்தால் கூட வண்டியை ஆப் செய்து விட்டு ராம நாமம் ஜபம் செய்ய உத்தேசம்.

3. ஹெல்மெட் இல்லாமல் வண்டியின் சைட் ஸ்டாண்ட் எடுக்கக்கூட உத்தேசம் இல்லை

4. என்னை அன்று மோதிய புண்ணியவானை கண்டுபிடித்து அவரிடம் இருந்து “எஸ்கேப்” ஆவது பற்றி தெரிந்து கொள்ளவேண்டும். நாளை நான் யார் மேலாவது மோதினால் தொழில் தெரிந்திருக்க வேண்டும் அல்லவா?

நல்லது என்னவென்றால் இரு வார விடுப்பில் நிறைய பேரின் பிளாக் படிக்க முடிந்தது. ஜவர்லால் சாரின் உருப்படு புத்தகம் படிக்க முடிந்தது. நல்ல புத்தகங்களை சேகரிக்க முடிந்தது.

சொக்கன் சார் என்னோட பின்னூட்டம் ஸ்டைல் கொஞ்சம் இப்படிதான் இருக்கும் (எண்ணவோட்டத்தை அப்படியே) அதனால தப்ப நினைக்க வேண்டாம். நீங்க மட்டறுத்து எடிட் செய்து போடுங்க உங்க விருப்பப்படி!!

தங்கள்
இராமன் அழகிய மணவாளன்

[…] சொக்கன் சாரின் பதிவினை படித்து அதில் பின்னோட்டம் இட்டு இந்த பதிவினையும் போட்டு விட்டேன். […]

விபத்தும், காத்திருப்பும் ஒன்று விட்ட அண்ணன் தம்பிகள் போலும். நான்கு வருடம் முன்பு பிரேக் பிடிக்காமல் போய் ஒரு வெள்ளைக்கார அம்மணியின் மேல் (காரின் மேல்தான்) மோதி விட்டு, முன் பாகம் நொறுங்கிப் போன என்னுடைய காரை எடுத்துச் செல்லும் towing service-க்காக சில மணி நேரம் ஒரு அத்துவான ரோட்டில் பசியோடு காத்திருந்தது நினைவுக்கு வந்தது.

விபத்துக்கள் எல்லார் வாழ்க்கையிலும் இருக்கின்றன.

சில விபத்துக்களுக்கு காதல் என்று பெயர் சொல்லி கல்யாணம் என்று ஐசியுவில் (சிலேடை தானாக வந்தது என்றால் நம்பணும்) வாழ்க்கை முழுக்க மாட்டிக்கொள்கிறோம்.

அருமை இராமன்.
நானும் ஒரு கியர் இல்லாத 2 வீலர் வாங்கலாம் என்று இருக்கிறேன், அது தான் பெங்களூர் போன்ற பெரு நகரங்களுக்கு உகந்தது.

பயப்படாமல் வாங்குங்கள் விஜயன் சார். ஹோண்டா ஆக்டிவா நன்றாகவே உள்ளது. பிக்அப் சூப்பர். தற்போது மஹிந்திராவில் புதிய டிசைன் வந்துள்ளது…

ஹெல்மெட் அவசியம். அடிக்கடி பராமரிப்பு செய்யுங்கள்.

வாழ்த்துக்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 521 other followers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 451,670 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்

Tamilish

For தமிழ் Peopleதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

October 2010
M T W T F S S
« Jul   Nov »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Advertisements
%d bloggers like this: