மனம் போன போக்கில்

அந்த மானைப் பாருங்கள்

Posted on: November 13, 2010

‘அவங்க வந்தாச்சு!’

யாரோ சத்தமாகக் கத்திக்கொண்டு ஓடினார்கள். சட்டென்று அந்தச் சிறைச்சாலைமுழுவதும் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

மதிய நேரம் அது. பெரும்பாலான கைதிகள் தங்கள் அறைகளுக்குள் காலை நீட்டிப் படுத்திருந்தார்கள். சிலர் சுவர் ஓரமாகச் சாய்ந்து உட்கார்ந்தபடி விட்டத்தை வெறித்துக்கொண்டிருந்தார்கள். இன்னும் சிலர் யோசனையோடு வட்டப் பாதையில் சுற்றிச்சுற்றி நடந்தார்கள். காற்றிலோ தரையிலோ சுவரிலோ படம் வரைந்து ஏதோ திட்டமிட்டார்கள். மிச்சமிருந்தவர்கள் பழைய நினைவுகளில் வருங்காலக் கனவுகளில் கற்பனைகளில் மூழ்கியிருந்தார்கள்.

ஆனால் அவர்களில் ஒருவர்கூடத் தூங்கவில்லை. எல்லோரும் இந்தக் கணத்துக்காகதான் காதுகளைத் தீட்டிக்கொண்டு காத்திருந்தார்கள்.

‘அந்தமான் கைதிங்க வந்தாச்சு!’

அந்தக் குரல் கேட்ட மறுவிநாடி எல்லாக் கைதிகளும் தங்களுடைய அறையின் கம்பிக் கதவை நெருங்கினார்கள். அதற்குள் தலையை நுழைத்து வாசலைப் பார்க்க முயன்றார்கள்.

ம்ஹூம். பலன் இல்லை. எவ்வளவு கஷ்டப்பட்டாலும் அவர்களால் அந்தச் சிறைச்சாலையின் வராண்டாவைதான் பார்க்கமுடிந்தது. அதற்குமேல் ஒரு பூச்சி புழுகூடத் தென்படவில்லை.

‘நெஜமாவே அந்தமான் கைதிங்க வந்தாச்சா?’ பக்கத்து அறையை நோக்கிக் கத்தினான் ஒருவன்.

’எனக்கு எப்படித் தெரியும்? நானும் உன்னைமாதிரிதானே ஜெயில்ல கெடக்கறேன்?’

‘அட கோவிச்சுக்காதேப்பா. உனக்கு எதுனா விஷயம் தெரிஞ்சா சொல்லு!’

அப்போது சீருடை அணிந்த வார்டர் ஒருவர் அந்தப் பக்கமாக விரைந்துவந்தார். கம்பிக் கதவில் லத்தியால் தட்டி ‘என்ன இங்கே கலாட்டா?’ என்றார் மிரட்டலாக.

‘வார்டர் சார். அந்தமான் கைதிங்க வந்தாச்சா?’

‘அப்படிதான் சொல்றாங்க’ என்றார் அவர். ‘நானும் அவங்களைப் பார்க்கதான் போய்கிட்டிருக்கேன். அப்புறமா வந்து சொல்றேன். பேசாம உள்ளே போய் உட்காருங்க.’

அந்தக் கைதிகள் எப்போது வார்டரின் பேச்சைக் கேட்டார்கள்? எப்படியாவது கழுத்தைத் திணித்துக் கம்பிகளை உடைத்துவிடமுடியாதா என்று போராடிக்கொண்டிருந்தார்கள். எல்லோருக்கும் அந்தமான் கைதிகளைப் பார்க்க அவ்வளவு ஆசை.

‘அதோ, சங்கிலிச் சத்தம் கேட்குது’ என்றான் ஒருவன். ‘அந்தமான் கைதிங்க வந்தாச்சு!’

‘சங்கிலியா? அது எதுக்கு?’

’உனக்குத் தெரியாதா? அந்தமானுக்குப் போற கைதிங்கல்லாம் படுபயங்கரமான ரௌடிப்பசங்க. கொலை கொள்ளைக்கு அஞ்சாதவங்க. கொஞ்சம் அசந்தாலும் போலிஸ்காரங்களையே போட்டுத் தள்ளிடுவாங்க!’

‘அதனால?’

’கோர்ட்ல தண்டனை அறிவிச்சவுடனே அவங்களுக்குக் கையிலே காலிலே இடுப்பிலேன்னு மூணு சங்கிலிகளை மாட்டிடுவாங்க. அதுக்கப்புறம் இருவத்தஞ்சு வருஷத்துக்கு அவங்க அதோடயே வாழவேண்டியதுதான்.’

‘இருவத்தஞ்சு வருஷமா?’

’என்னப்பா இதுக்கே வாயைப் பொளக்கறே. அம்பது வருஷம் நூறு வருஷம் ஐநூறு வருஷம்ன்னு அந்தமானுக்குப் போறவங்ககூட உண்டு. தெரியாதா?’

நிஜமா பொய்யா என்பதைப்பற்றிக் கவலைப்படாமல் கைதிகள் கதை அளந்துகொண்டிருக்க அவர்களுடைய வார்டர் பரபரப்பாக நடந்தார். ஜெயிலின் முன்பகுதியை நெருங்கினார்.

இப்போது சங்கிலிச் சத்தம் இன்னும் பலமாகக் கேட்டது. நிஜமாகவே அந்தமான் கைதிகள் வந்திருக்கவேண்டும்!

அநேகமாக அந்தச் சிறைச்சாலையில் இருந்த வார்டர்கள், காவலர்கள், மற்ற பணியாளர்கள் எல்லோரும் அங்கே கூடியிருந்தார்கள். மேலதிகாரிகள் கண்ணில் பட்டுவிடாமல் ரகசியமாக ஒளிந்து நின்றபடி எட்டிப் பார்த்தார்கள்.

அங்கே தாடியும் மீசையுமாக இருபது அழுக்கு உருவங்கள் நின்றிருந்தன. எல்லோரையும் கனமான சங்கிலிகளால் கட்டிப்போட்டிருந்தார்கள். ஆனால் அவர்களுடைய முரட்டு உடம்புகளைப் பார்க்கும்போது இந்தச் சங்கிலிகளெல்லாம் சர்வ சாதாரணமாகத் தோன்றின.

‘இவங்கல்லாம் என்ன தப்புச் செஞ்சாங்க?’ ஒரு வார்டர் கிசுகிசுப்பான குரலில் கேட்டார்.

‘தெரியலையே!’ இன்னொருவர் உதட்டைப் பிதுக்கினார். ’ஆனா இதுங்க மூஞ்சைப் பார்த்தாலே தெரியுது. மகாமோசமான ஆளுங்க-ன்னு.’

‘பின்னே? சும்மாவா சர்க்கார் செலவு பண்ணி இவங்களையெல்லாம் அந்தமானுக்கு அனுப்பிவைக்குது?’

எப்படியாவது அந்த ‘ஸ்பெஷல்’ கைதிகளின் முகங்களைப் பார்த்துவிடவேண்டும் என்று அங்கிருந்த பணியாளர்கள், காவலர்கள் எல்லோரும் முட்டி மோதினார்கள். இவர்களில் யார் யார் என்னென்ன குற்றங்களைச் செய்திருப்பார்கள் என்று தங்களுக்குள் ரகசியமாகப் பேசிக்கொண்டார்கள்.

சில நிமிடங்கள் கழித்து அந்தக் கைதிகள் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த அறையை நோக்கி நடந்தார்கள். கூடவே சில மேலதிகாரிகளும்.

அவ்வளவுதான். சிறைப் பணியாளர்கள் எல்லோரும் தலைதெறிக்க ஓடி மறைந்தார்கள்.

புதிய கைதிகள் இரும்புச் சங்கிலிகளை இழுத்துக்கொண்டு நடக்க பழைய கைதிகள் அவர்களை ஆவலோடு பார்த்தார்கள். ஆனால் யாரும் வாயைத் திறக்கவில்லை.

அந்தமானுக்குச் செல்லவிருக்கும் கைதிகள் எல்லோரும் ஒரு பெரிய அறையில் அடைக்கப்பட்டார்கள். வெளியே ஒன்றுக்கு இரண்டு பூட்டுகள்!

அதேநேரம் சிறைமுழுவதும் அவர்களைப்பற்றிதான் பேசிக்கொண்டிருந்தது. இந்தக் கைதிகளெல்லாம் எங்கிருந்து வந்திருக்கிறார்கள்? எந்தக் குற்றங்களுக்காகத் தண்டனை பெற்றிருக்கிறார்கள்? இவர்கள் எப்போது அந்தமான் போவார்கள்? எப்படிப் போவார்கள்? கப்பலிலா? ஒருவேளை கப்பலில் இருந்து குதித்து இவர்கள் தப்பித்துவிட்டால்? அந்தமான் போய்ச் சேர்ந்தபிறகு அவர்கள் அங்கே எத்தனை வருடங்களைக் கழிக்கவேண்டும்? அங்கிருக்கும் படுபயங்கர சிறைச்சாலை எப்படிப்பட்டது? அங்கே இவர்கள் என்னமாதிரி தண்டனை அனுபவிப்பார்கள்? நாள்முழுவதும் ஜெயிலில் சும்மா உட்கார்ந்திருக்கவேண்டுமா? அல்லது வேலை செய்யச் சொல்வார்களா? அங்கே சாப்பாடு படுமோசமாமே? தப்புச் செய்தால் தினசரி சவுக்கடி உண்டாமே? அந்தமான் கொசுக்கள் கைதிகளைத் தூக்கிப் போட்டு விளையாடுமாமே?

உண்மையில் கைதிகள், வார்டர்கள், பணியாளர்கள் யாருக்கும் இந்தக் கேள்விகளுக்குச் சரியான பதில்கள் தெரிந்திருக்கவில்லை. எப்போதோ எங்கேயோ கேள்விப்பட்ட விஷயங்களை நிஜமா புருடாவா என்றுகூட உறுதிப்படுத்திக்கொள்ளாமல் இஷ்டத்துக்குக் கண், காது, மூக்குவைத்து அளந்துவிட்டுக்கொண்டிருந்தார்கள்.

இதனால் அவர்கள் எல்லோரும் தாங்கள் தண்டனை அனுபவிக்கும் கைதிகள் என்பதையே தாற்காலிகமாக மறந்துபோயிருந்தார்கள். பின்னே? இந்தப் புதுக் கைதிகள் அந்தமானில் சந்திக்கப்போகும் கொடுமைகளோடு ஒப்பிட்டால் இந்த ஜெயிலெல்லாம் சொர்க்கமில்லையா?

’அந்தமான் கைதிங்கல்லாம் இப்போ என்ன செஞ்சுகிட்டிருப்பாங்க?’

‘வேற என்ன? செஞ்ச தப்பை நினைச்சு அழுதுகிட்டிருப்பாங்க’ அலட்சியமாகச் சொன்னார் ஒரு வார்டர். ‘இனிமே வருத்தப்பட்டு என்ன புண்ணியம்? அந்தமானுக்குப் போய் சவுக்கடி வாங்க ஆரம்பிச்சா வாழ்நாள்முழுக்க அழவேண்டியதுதான்!’

‘இல்ல வார்டர் சார். ஏதோ சிரிப்புச் சத்தம் மாதிரில்ல கேட்குது?’

வார்டர் ஆச்சர்யமாகக் கூர்ந்து கேட்டார். ‘அட ஆமா!’

அந்தமான் கைதிகள் அடைத்துவைக்கப்பட்டிருந்த அந்த அறையிலிருந்து பெரிய கூச்சல் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. சிலர் பலமாகச் சிரித்தார்கள். பாட்டுப் பாடினார்கள். கடவுளைக் கூப்பிட்டுக் கெட்ட வார்த்தையில் திட்டினார்கள். அடுத்தவர்களைச் செல்லமாகக் கேலி செய்தார்கள். கொஞ்சம் அழுதார்கள். பிறகு மறுபடி சிரித்தார்கள். சிரித்துக்கொண்டே அழுதார்கள். அழுதுகொண்டே சிரித்தார்கள்.

’இவங்களுக்கெல்லாம் கிறுக்குப் பிடிச்சுடுச்சா என்ன? இன்னும் பத்து நாள்ல அந்தமானுக்குப் போய் உதை தின்னப்போறாங்க. இப்ப என்ன சிரிப்பு வேண்டிக்கெடக்கு?’

யார் என்ன சொன்னாலும் அந்தக் கைதிகள் அடங்கவில்லை. அடுத்த சில நாள்கள் அவர்களுடைய கூச்சல், கும்மாளம், கூக்குரல், கேலி, கிண்டல், சண்டை, அழுகை, சிரிப்பு, ஆபாச வசவுகள், கெஞ்சல்கள், கதறல்கள் அந்தச் சிறைச்சாலை முழுவதையும் நிறைத்திருந்தன.

திடீரென்று ஒருநாள் அங்கே இன்னொரு பரபரப்பு. ‘அந்தமானுக்குக் கப்பல் தயாராகிவிட்டது. கைதிகள் புறப்படவேண்டியதுதான்!’

இந்தக் குறுகிய காலகட்டத்துக்குள் ஒட்டுமொத்தச் சிறைச்சாலையையும் தங்களுடைய அடாவடியால் ஆக்கிரமித்திருந்த அந்தமான் கைதிகள் சங்கிலி ஒலிக்க நடந்தார்கள். மற்ற கைதிகள் வழக்கம்போல் அவர்களை வெறித்துப் பார்த்தார்கள். தங்களுக்குள் ஏதோ கிசுகிசுத்துக்கொண்டார்கள்.

அந்தக் கைதிகள் அதைப்பற்றிக் கொஞ்சமும் கவலைப்படவில்லை. ஜெயிலுக்கு வெளியே காத்திருந்த போலிஸ் வேனில் ஏறி உட்கார்ந்தார்கள். கதவுகள் பூட்டப்பட்டன. வண்டி துறைமுகத்தை நோக்கி விரைந்தது.

துறைமுகத்தில் ஏகப்பட்ட போலிஸ் பாதுகாப்பு. பல சிறைச்சாலைகளில் இருந்து வருகிற கைதிகள் எல்லோரையும் பத்திரமாகக் கப்பலேற்றி அந்தமானுக்கு அனுப்பவேண்டுமே என்கிற பதற்றத்தில் எல்லோரும் சுறுசுறுப்பாக வளையவந்துகொண்டிருந்தார்கள்.

பெரும்பாலான கைதிகள் தங்களுடைய சிறைச்சாலைகளில் இருந்து நடந்தே வந்திருந்தார்கள். சிலருக்கு வேன் யோகம் வாய்த்திருந்தது. அபூர்வமாக ஒன்றிரண்டு பேர்மட்டும் போலிஸ் காரில் பத்திரமாக வந்து இறங்கினார்கள்.

இவர்கள் எல்லோரும் கை விலங்கு, கால் சங்கிலியோடு அப்படியே கப்பலில் ஏறினார்கள். அங்கே அடித்தளத்தில் அவர்களுக்கென்று ஒரு கூண்டு தயாராக இருந்தது.

கைதிகள் அனைவரும் உள்ளே நுழைந்தபிறகு அந்தக் கூண்டு அடைத்துப் பூட்டப்பட்டது. காவலர்களும் அதிகாரிகளும் மேல் தளத்துக்குச் சென்றுவிட மிச்சமிருந்த வெளிச்சமும் காணாமல் போனது.

அந்தச் சிறிய கூண்டுக்குள் ஹிந்தி, உருது, பெங்காலி, தமிழ், தெலுங்கு, குஜராத்தி, மராத்தி என்று எல்லா பாஷைகளும் இரைச்சலாகக் கேட்டுக்கொண்டிருந்தன. ஒருவருடைய கேள்வி இன்னொருவருடைய பதில்மேல் ஏறிக்கொள்ள கடைசியில் யார் என்ன பேசுகிறார்கள் என்று யாருக்கும் புரியவில்லை.

இருட்டோ இருட்டு. கொஞ்சம்கூடக் காற்று இல்லை. வியர்வையைத் துடைக்கலாம் என்றால் பக்கத்தில் இருப்பவன்மேல் மோதவேண்டியிருக்கிறது. கடல் அலைகளில் கப்பல் தள்ளாட வாந்தி வயிற்றைப் புரட்டியது.

நிற்கவே இடம் இல்லை. எங்கே உட்கார்வது? படுப்பது? இன்னும் எத்தனை நாளைக்கு இந்த அவஸ்தை? ஒருவேளை வாழ்நாள்முழுவதும் அந்தமானில் அனுபவிக்கப்போகும் வேதனைகளுக்கு இப்போதிலிருந்தே பயிற்சி கொடுத்துத் தயார் செய்கிறார்களோ?

கூண்டுக்குள்ளிருந்த கைதிகள் குறுகுறுப்போடு அக்கம்பக்கம் நோட்டமிட்டார்கள். அவர்களுடைய கண்கள் இப்போது இருட்டுக்குப் பழகிவிட்டதால் சுற்றியிருந்தவர்களைத் தெளிவாகப் பார்க்கமுடிந்தது.

பெரும்பாலான முகங்களில் துஷ்டத்தனம் வெளிப்படையாகத் தெரிந்தது. ‘அந்தமான் என்ன? எந்தமான் வந்தாலும் என்னை ஒண்ணும் பண்ணமுடியாது’ என்று அடாவடியாக நெஞ்சு நிமிர்த்தி நின்றார்கள்.

இன்னும் சிலர் அமைதியாக ஏதோ யோசித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்க்கும்போது கொலை, கொள்ளை, வழிப்பறி கேஸில் அந்தமான் போகிறவர்களாகத் தெரியவில்லை. அரசியல் கைதிகளாக இருக்கலாம்.

அதிரடி கேஸோ அரசியல் கேஸோ அந்தமான் ஜெயிலுக்கு எல்லாக் கைதிகளும் ஒன்றுதான். அதை இந்த மனிதக் கூண்டு சொல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தது.

சிறிது நேரத்தில் அவர்களுக்குச் சாப்பாடு வந்தது. பட்டாணியும் பொட்டுக்கடலையும்.

’இது என்னய்யா சாப்பாடு? ரொட்டி இல்லையா? சோறு, ரசம், குழம்பு, அரைத் துண்டு மீன்கூடக் கிடைக்காதா?’

‘ஒண்ணும் கிடையாது. அந்தமான் போய்ச் சேர்றவரைக்கும் எல்லாரும் இதைத்தான் சாப்பிடணும்!’

அவர்கள் பரிதாபமாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். வேறுவழியில்லாமல் பட்டாணியை எடுத்து மென்றார்கள்.

அரை மணி நேரம் கொறித்தும் யாருக்கும் கால் வயிறுகூட நிரம்பவில்லை. கிடைத்த இடத்தில் சுருண்டு படுத்துக்கொண்டார்கள்.

இது ராத்திரியா? பகலா? நாம் கப்பல் ஏறி எவ்வளவு நேரமாச்சு? இன்னும் அந்தமான் சென்று சேர எவ்வளவு நாளாகும்? யாருக்கும் தெரியவில்லை.

அதனால் என்ன? கூண்டுமுழுவதும் இருட்டு. ராத்திரி என்று நினைத்துக்கொண்டு தூங்கவேண்டியதுதான்.

அந்தச் சிறிய கூண்டுக்குள் எத்தனை பேர் சுருண்டு படுக்கமுடியும்? எப்படியோ சமாளித்துப் படுத்தார்கள். கண்ணை மூடினார்கள்.

சிறிது நேரத்தில் அங்கே ஏதோ கெட்ட நாற்றம் அடித்தது. நிமிர்ந்து பார்த்தால் ஒரு கைதி நின்றவாக்கில் ஒரு டிரம்முக்குள் உச்சா போய்க்கொண்டிருந்தார்.

‘யோவ், உனக்கு அறிவில்ல? இங்கயேவா அசிங்கம் பண்ணுவாங்க?’

‘பின்னே? வேற எங்க பண்றதாம்?’ அந்தக் கைதி அலட்சியமாகக் கேட்டபோதுதான் மற்றவர்களுக்கு விஷயம் புரிந்தது. இன்னும் சில நாள்களுக்கு அத்தனை கைதிகளுக்கும் உச்சா, கக்கா எல்லாமே இந்த ட்ரம்தான்.

‘இத்தனை நாத்தத்துக்கு நடுவில எப்படிய்யா தூங்கறது?’ யாரோ எரிச்சலோடு கத்தினார்கள்.

சத்தம் போட்டு என்ன பிரயோஜனம்? மேலே சொகுசு அறைகளில் நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருக்கும் ஆங்கிலேயக் கனவான்களின் காதுகளில் விழப்போவதில்லை. எதுவும் மாறப்போவதில்லை.

அவர்கள் மூக்கைப் பொத்திக்கொண்டு படுத்தார்கள். தூக்கம் வர மறுத்தது.

அடுத்த சில மணி நேரங்களுக்குள் அந்த ட்ரம் நிரம்பி வழிந்தது. அதைச் சுத்தப்படுத்தக்கூட யாரும் இறங்கி வரவில்லை.

மறுபடி அந்த ட்ரம்பக்கமாகப் போய் ஒதுங்கவேண்டியிருக்குமோ என்கிற பயத்திலேயே அவர்கள் எதுவும் சாப்பிடவில்லை. வெறும் வயிற்றுடனே பயணத்தைத் தொடர்ந்தார்கள்.

நாள், நேரக் கணக்கெல்லாம் மறந்துபோன ஒரு சமயத்தில் மேல்தளத்திலிருந்து கட்டளை வந்தது. ’எல்லோரும் தயாராகிக்கொள்ளுங்கள்!’

இதன் அர்த்தம், அந்தமான் நெருங்கிவிட்டது.

கைதிகள் பயத்தோடு படிகளில் ஏறி மேலே வந்தார்கள். நான்கைந்து நாளாக வியர்வையில்மட்டுமே குளித்த தேகங்கள் அழுக்கும் நாற்றமுமாக மண்டிக் கிடந்தன. சோர்ந்த கண்களோடு கடலை நோட்டமிட்டார்கள்.

கன்னங்கரேல் நிழல் படிந்த கறுப்புத் தண்ணீர் ‘காலா பானி’ அவர்களுக்குள் பயத்தைச் செருகியது. சற்றுத் தொலைவில் மதில் சுவர்கள் தேவைப்படாத தீவுச்சிறை. இன்னும் சிறிது நேரத்தில் அவர்கள் அங்கே அடைக்கப்படுவார்கள்.

எத்தனைக் காலத்துக்கு? திரும்பவும் இதேமாதிரி ஒரு கப்பலில் தாய்நாடு திரும்பிச் செல்லமுடியுமா? அல்லது நிரந்தரமாக இங்கேயே மண்ணோடு மக்கிப்போகவேண்டியதுதானா?

அத்தனை பேரும் இவ்வளவு நேரமாக மறந்திருந்த ‘தண்டனை’ இப்போது அவர்களுடைய முதுகில் ஏறி உட்கார்ந்துகொண்டது. நெஞ்சுக்குள் கனம் ஏறியது. மிகுந்த தவிப்போடு தூரத்தில் தெரியும் பச்சைப்பசேல் தீவைப் பரிதாபமாக வெறித்துப் பார்த்தார்கள்.

கொஞ்சநேரத்தில் சிறு படகுகள் கப்பலின் அருகே வந்து நின்றன. கைதிகள் ஒவ்வொருவராகக் கீழே இறக்கப்பட்டு அந்தப் படகுகளில் உட்கார்ந்தார்கள்.

படகுகள் கரை தொட்ட நேரம் அங்கே இன்னொரு செட் போலிஸ்காரர்கள் காத்திருந்தார்கள். பெரும்பாலும் இந்திய முகங்கள்தான். ஒன்றிரண்டு வெள்ளைக்காரர்களும் தென்பட்டார்கள்.

கொத்துக்கொத்தாக வந்து இறங்கிய கைதிகள் ஒரு மூலையில் நிறுத்தப்பட்டார்கள். எல்லோர் கையிலும் படுக்கை, பாத்திரங்கள்.

சிறிது நேரத்துக்குள் அத்தனைக் கைதிகளும் கரை இறங்கிவிட்டார்கள். ‘எல்லோரும் ரெண்டு ரெண்டு பேரா நடங்க’ உருதுவில் கட்டளை பறந்தது.

அவர்கள் சற்றுத் தொலைவில் தெரியும் அந்தச் சிறைச்சாலைக் கட்டடத்தை நோக்கி மெல்லமாக நடந்தார்கள். அவ்வப்போது ‘நேராப் போ’, ‘அவன்மேல இடிக்காதே’, ‘வேகமா நட’ என்று காவலர்களின் அதட்டல் சத்தம் அவர்களை வழிநடத்தியது.

ஒருவழியாக அவர்கள் அந்தக் கோட்டை வடிவக் கட்டடத்தின் வாசலை நெருங்கினார்கள். பிரம்மாண்டமான இரும்புக் கதவுகள் திறக்கப்பட்டன. கைதிகளை எண்ணி உள்ளே அனுப்பிக் கதவைப் பூட்டினார்கள்.

ஜெயிலுக்குள் இன்னும் பலவிதமான காவலர்கள் இருந்தார்கள். கைதிகளை வரிசையாக ஒழுங்குபடுத்தி நிற்கவைத்தார்கள். அவர்களுடைய இரும்புச் சங்கிலிகள், விலங்குகள் நீக்கப்பட்டன. எல்லோருக்கும் சீருடை (வெள்ளைச் சட்டை, டிராயர், தொப்பி) வழங்கப்பட்டது.

இப்போது கைதிகள் எல்லோரும் தோட்டம்மாதிரித் தோற்றமளித்த ஓர் இடத்தில் நிறுத்தப்பட்டார்கள். அங்கே ஜெயிலர் காத்திருந்தார்.

அவர் பெயர் மிஸ்டர் பேரி. அயர்லாந்தைச் சேர்ந்தவர். குள்ளமான உருவம். ஆனால் இடுப்புப் பக்கம் தொப்பை பிதுங்கி வழிந்தது. அதைவிட அதிகமாகக் கண்களில் கோபமும் மிரட்டலும் அதட்டலும் பொங்கியது. அவர் ஒரு வார்த்தை பேசுவதற்குமுன்பாகவே அவருடைய கோடாரி மீசையும் உதட்டுச் சுருட்டும் கைதிகளை என்னவோ செய்தது.

சில நிமிட அமைதிக்குப்பிறகு மிஸ்டர் பேரி பேச ஆரம்பித்தார். ‘இந்த ஜெயிலைச்சுத்தி இருக்கிற காம்பவுண்ட் சுவரைப் பார்த்தீங்களா? ரொம்பக் குட்டை. யார் வேணும்ன்னாலும் அதிகம் சிரமப்படாம தாண்டிக் குதிச்சுடலாம்!’

‘இவ்ளோ பெரிய ஜெயிலைக் கட்டினவங்க அந்தக் காம்பவுண்ட் சுவரைமட்டும் ஏன் பெரிசாக் கட்டலைன்னு யோசிக்கறீங்களா? அதுக்கு ஒரு காரணம் இருக்கு!’

’இந்த ஜெயில்லேர்ந்து யாரும் தப்பிச்சுப் போகமுடியாது. அப்படியே தப்பிச்சுட்டாலும் அந்தமான்லேர்ந்து தப்பிச்சுடமுடியாது. சுத்திப் பல நூறு மைல் தூரம் வெறும் கடல்தான். அதைத் தாண்டித் தப்பிக்கலாம்ன்னு முயற்சி செஞ்சீங்கன்னா பசியிலயே உசிரு போயிடும்!’

’அதனால என்ன? பக்கத்தில நிறையக் காடு, மலையெல்லாம் இருக்கே. அங்கே நுழைஞ்சு தப்பிச்சுடலாம்ன்னு யோசிக்கறீங்களா? அதுவும் முடியாது!’

‘அந்தமான் காடுகளுக்குள் வாழற பழங்குடி மக்கள் சாதாரணமானவங்க இல்லை. சட்டை, டிராயர் போட்டுகிட்டு எவனாவது வர்றான்னு பார்த்தா நடு நெத்தியில ஒரே அம்புதான். உங்களைத் தூக்கிட்டுப் போய் அடுப்புல வெச்சிச் சமைச்சுச் சாப்ட்றுவாங்க.’

’சுருக்கமாச் சொல்றதுன்னா உங்களுக்கு வேற வழியே இல்லை. இந்த ஜெயில்லேர்ந்து தப்பிக்கலாம்ங்கற எண்ணத்தைத் தூக்கித் தூரப் போட்டுட்டு ஒழுங்கா மரியாதையா இங்கே இருக்கிற விதிமுறைகளை மதிச்சு நடக்கப் பழகிக்கோங்க. அதுதான் உங்களுக்கு நல்லது!’

’எனக்குச் சுத்திவளைச்சுப் பேசறது பிடிக்காது. நான் நல்லவனுக்கு நல்லவன். கெட்டவனுக்கு ரொம்பக் கெட்டவன். உங்ககிட்ட நான் நல்லபடி பழகுவேனா இல்லை கெட்டவனா மாறுவேனா-ங்கறது உங்க கையிலதான் இருக்கு. ஞாபகம் வெச்சுக்கோங்க!’

பேரி ’அவ்வளவுதான்’ என்பதுபோல் கண் ஜாடை காட்டினார். ஓரமாக நின்றிருந்த காவலர்கள் கைதிகளைச் சுற்றி வளைத்தார்கள். எல்லோரையும் இரண்டு இரண்டு பேராக வரிசையில் நிற்கவைத்து உள்ளே அனுப்பினார்கள்.

அப்போதுதான் அந்தக் கட்டடத்தின் முழுப் பிரம்மாண்டமும் கைதிகளின் கண்ணை நிறைத்தது. மூன்று மாடிகளோடு ஏழு திசைகளில் கிளை பரப்பி நிற்கும் அந்தமான் செல்லுலர் ஜெயில்!

மிஸ்டர் பேரி சொன்ன வார்த்தைகளை நினைக்கும்போது எல்லாக் கைதிகளுக்கும் வயிற்றைப் பிரட்டியது. வெளியேறுவதற்கான வாசல் எதுவும் இல்லாத ஓர் ’ஒருவழிப்பாதை’க்குள் நுழைவதைப்போல் உணர்ந்தார்கள்.

***

அந்தமான் சி‌றை அல்லது இருட்டு உலகம்

’அந்தமான் சிறை அல்லது இருட்டு உலகம்’ என்கிற எனது புதிய புத்தகத்துக்காக எழுதப்பட்ட முதல் அத்தியாயம் இது. சில தவிர்க்கமுடியாத காரணங்களால் அது புத்தகத்தில் இடம்பெறவில்லை. ஆகவே, ஒரு முன்னோட்டமாக இங்கே தந்துள்ளேன்.

அந்தமானில் செல்லுலார் ஜெயில் அமைக்கப்படுவதற்கு முன்னால் தொடங்கி அது தேசிய நினைவகமாக மாறும் வரையிலான முழுமையான வரலாறை இந்தப் புத்தகத்தில் சொல்ல முயன்றுள்ளேன். தண்டனைக் குடியிருப்பு, செல்லுலார் ஜெயில் கட்டப்படுதல், அங்கே கைதிகள் நடத்தப்பட்ட விதம், உள் அரசியல், தினசரி வேலைகள், கொடூரத் தண்டனைகள், அந்தமானில் வாழ்ந்த முன்னாள் கைதிகளின் வாழ்க்கை, கைதிகளின் போராட்டங்கள், அரசாங்கக் கண் துடைப்புகள், ஜெயிலர்களின் ஆதிக்கம், அது உடைந்த கதை, செல்லுலார் ஜெயில் கொஞ்சம் கொஞ்சமாக மூடப்பட்ட விதம், பின்னர் ஜப்பானியர்கள் வந்து அதை மொத்தமாகத் திறந்துவிட்டது, பிறகு அவர்களே செய்த அராஜகங்கள், அந்தமானில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், இந்தியச் சுதந்தரத்துக்குப்பின் செல்லுலார் ஜெயில் என்ன ஆனது, அதை இடிக்கப் பார்த்தது யார், அதைத் தடுத்தது யார், இப்போதைய நிலைமை எனச் சகலமும் இந்தப் புத்தகத்தில் உண்டு.

வாய்ப்பிருந்தால் இந்தப் புத்தகத்தை வாசித்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள். இதுபற்றி மேல்விவரம் அறியவும், புத்தகத்தை வாங்கவும் இங்கே செல்லலாம் –> https://www.nhm.in/shop/978-81-8493-544-8.html

***

என். சொக்கன் …

13 11 2010

6 Responses to "அந்த மானைப் பாருங்கள்"

அருமை.

முதல் அத்தியாயம் டாப் கிளாஸ். புத்தகத்தைப் படித்துவிட்டு பின்னூட்டம் இடுகிறேன்.

Sir,
Review program undaa/

adhaavadhu, enakku book-i free-yaa anuppi, naan feedback tharra maadhiri?

நண்பரே, சில சமயங்களில் கிழக்கு பதிப்பகம் விமர்சனத்திற்குப் புத்தகங்களை இலவசமாக வழங்குவதுண்டு. இந்தப் புத்தகத்துக்கு அப்படி எதுவும் செய்வதாகத் தெரியவில்லை. நாங்கள் (புத்தகம் எழுதியவர்கள்) தனிப்பட்டமுறையில் அதைச் செய்வது சிரமம்.

– என். சொக்கன்,
பெங்களூரு.

நான் அந்தமானுக்கு 1987ல் ஆடிட் செய்வதற்காக சென்றிருக்கிறேன். அப்போது அந்தமான் ஜெயில் பார்க்கப்போய் செல்லுலர் சிறை அரை (வேண்டுமென்றேதான் அரை என்கிறேன், அதை அறை சொன்னால் பார்த்தவர்கள் அரையவும், அறையவும் செய்வார்கள்) உள்ளே நின்று போட்டோ எடுத்துக்கொண்டிருக்கிறேன். அப்போதும், இப்போதும் நான் நினைவு படுத்திக்கொண்டது அந்த அரைகளில் சிறைபட்ட நம் சுதந்திர போராட்ட தியாகிகளையே.

தூக்கு போடும் இடத்தையும் பார்த்தேன். தூக்கு கயிறு என்பது மிகவும் கனமாகவும், வழவழப்பாகவும், குண்டாகவும் இருந்தது. கொஞ்சம் பயத்துடனே அதற்குள் கழுத்தை கொடுத்து பார்த்தேன் (யாரும் லிவர் இழுக்க இல்லை என்ற தைரியத்தில்). அது கழுத்தை இருக்கினால் சில விநாடிகளுக்குமேல் உயிர் ஊசலாடாமல் ஒடிவிடும் என்பது உ.கை.நெ.க.யாக தெரிந்தது.

உங்கள் புத்தகத்தின் முதல் சாப்டராக இருந்திருக்க வேண்டியதை படிக்கும்பொழுது மோகன்லால் எடுத்த “காலா பாணி” படத்தை வருணித்து எழுதிக்கொண்டிருக்கிறீர்களோ என்று நினைத்தேன்.

[…] புரியலை. ரொம்ப நாள் கழிச்சு நேத்து உங்க புக் படிச்சபோது விளக்கமாத் […]

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,070 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

November 2010
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
%d bloggers like this: