மனம் போன போக்கில்

Archive for December 2010

பல்வேறு பதிப்பகங்கள் சென்னை புத்தகக் கண்காட்சி 2011ல் வெளியிடவிருக்கும் புதுப் புத்தகங்களைப்பற்றிய தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. ஆனால் அவை ஒரே இடத்தில் தேடும் வசதியோடு இல்லை என்பது ஒரு பெரிய குறை.

நான் புத்தகக் கண்காட்சிக்குக் கிளம்பும்போதே இந்த வருடம் வாங்கவேண்டிய புத்தகங்களின் பட்டியலை அச்சிட்டு எடுத்துக்கொண்டு செல்வதுதான் வழக்கம். அப்போதுதான் நேரம் வீணாகாமல் இருக்கும் – முக்கியமான எந்தப் புத்தகத்தையும் தவறவிட்டுவிடமாட்டோம் – பட்டியலின்படி வாங்கவேண்டியதை வாங்கியபிறகு கண்ணில் படுபவை, கவனம் ஈர்ப்பவை என்று இன்னும் பலவற்றை அள்ளுவது தனிக்கதை 🙂

என்னைப்போல புத்தகக் கண்காட்சிக்கு விருப்பப் பட்டியலோடு செல்ல விரும்புகிறவர்கள் பலர் இருக்கலாம். அவர்களுக்கு ஒரு தக்கனூண்டு டேட்டாபேஸ் எழுதி யாராவது உதவினால் புண்ணியமாகப் போகும்.

இப்போதைக்கு, சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியாகும் புதுப் புத்தகங்களைப்பற்றி எனக்கு அவ்வப்போது கிடைக்கும் விவரங்களை இந்த கூகுள் ஸ்ப்ரெட்ஷீட்டில் சேர்க்கப்போகிறேன். இது முழுமையான பட்டியல் அல்ல. நான் எதையாவது தவறவிட்டிருந்தால் (அல்லது தவறான விவரத்தைச் சேர்த்திருந்தால்) nchokkan@gmail.com என்ற முகவரிக்கு எழுதிச் சொல்லவும். நன்றி.

http://goo.gl/kfStA

***

என். சொக்கன் …

27 12 2010

’வாங்க சார். உட்காருங்க. சௌக்யமா?’

‘சௌக்யம்தான். ஆனா என்னை எதுக்காக இங்கே கூப்பிட்டிருக்கீங்கன்னு புரியலையே!’

‘கவலைப்படாதீங்க சார். ரிலாக்ஸ். உங்களை வெச்சு ஒரு சின்னப் பரிசோதனை செய்யப்போறோம்.’

’பரிசோதனையா?’

‘மறுபடி டென்ஷனாகறீங்களே. ஊசி போட்டு உங்களை டைனோசரா மாத்திடமாட்டோம் சார். இது ஒருவிதமான சோஷியல் டெஸ்ட்.’

‘ஃபேஷியல் தெரியும், அதென்ன சோஷியல்?’

‘அதாவது, ஒரு சமூக அமைப்புல இருக்கிற மக்கள் வெவ்வேற சூழ்நிலைகள்ல எப்படி நடந்துக்கறாங்க-ன்னு ஒரு சின்ன ஆராய்ச்சி செய்யறோம். அதுக்கு உங்க ஒத்துழைப்பு தேவை!’

’சொல்லுங்க. நான் என்ன செய்யணும்?’

’இப்ப அடுத்த ரூம்ல ஒருத்தர் உட்கார்ந்திருக்கார். அவர் உங்களோட பார்ட்னர்.’

‘அப்படியா? நான் அவரைப் பார்த்ததே கிடையாதே!’

’உண்மைதான். அவரும் உங்களைப்  பார்த்தது கிடையாது. ஆனா இந்த விளையாட்டுல நீங்க ரெண்டு பேரும் பார்ட்னர்ஸ். சரியா?’

’ஓகே.’

‘இப்ப நான் உங்களுக்கு 100 ரூபாய் தர்றேன். இந்தத் தொகையை நீங்களே வெச்சுக்கலாம். இல்லாட்டி அடுத்த ரூம்ல இருக்கிறவருக்கு அனுப்பலாம்.’

‘முகம் தெரியாத ஒருத்தருக்கு நான் ஏன் பணம் அனுப்பணும்? இதை நானே வெச்சுக்கறேன்!’

‘கொஞ்சம் பொறுங்க சார். இந்தப் பணத்தை நீங்க அவருக்கு அனுப்பினா, நாங்க அவருக்கு எக்ஸ்ட்ராவா 4 மடங்கு காசு தருவோம், அதாவது 100 + 400 = 500 ரூபாய். இப்போ அவர் இந்தப் பணத்தைத் தானே வெச்சுக்கலாம், அல்லது உங்களுக்குப் பாதி, அவருக்குப் பாதின்னு பிரிச்சுக்கலாம்.’

‘அதாவது, நான் அவருக்கு 100 ரூபாய் கொடுத்தா, அவர் எனக்கு 250 ரூபாய் தர்றதுக்கு வாய்ப்பிருக்கு. இல்லையா?’

‘ஆமா. அதேசமயம், அவர் 500 ரூபாயையும் அவரே எடுத்துகிட்டு ஓடிப்போயிடவும் வாய்ப்பு இருக்கு.’

’உண்மைதான். நான் இப்ப என்ன செய்யறது?’

‘நீங்களே யோசிச்சு ஒரு முடிவுக்கு வாங்க சார். 100 ரூபாயை நீங்களே வெச்சுக்கறது பெட்டரா, அல்லது உங்க பார்ட்னரை நம்பி அதை விட்டுக்கொடுக்கறது பெட்டரா?’

சுவாரஸ்யமான விளையாட்டு. வந்தவர்களில் பெரும்பாலானோர் அந்த இன்னொரு ‘பார்ட்ன’ரை நம்புவதா வேண்டாமா என்று குழம்பிப் போனார்கள். இன்னும் சரியாகச் சொல்வதென்றால், ஒருவேளை கிடைக்கலாம் என்கிற ரூ 250/-ஐ நம்பி, இப்போது கையில் இருக்கும் ரூ 100/-ஐ இழக்கலாமா? அது சரியான முடிவுதானா?

ரொம்ப யோசித்தபிறகு, சிலர் நூறு ரூபாயைத் தாங்களே வைத்துக்கொண்டார்கள். பெரும்பாலானோர் அந்த இன்னொரு மனிதர் நியாயமாக நடந்துகொள்வார் என்ற நம்பிக்கையில் அதை அவருக்கு அனுப்பிவைத்தார்கள்.

இப்போது, அந்த இன்னொரு மனிதரின் நிலையில் இருந்து யோசியுங்கள். திடீரென்று உங்களுக்கு ரூ 500/- (100 + 400) கிடைக்கிறது. அதை உங்களுக்கு அனுப்பிவைத்தவர் பக்கத்து அறையில் இருக்கிறார். நீங்கள் அந்தப் பணத்தில் பாதியை அவரோடு பகிர்ந்துகொள்வீர்களா? அல்லது ‘அடிச்சதுடா லக்கி ப்ரைஸ்’ என்று பீட்ஸா பார்ட்டிக்குக் கிளம்பிவிடுவீர்களா?

மறுபடியும், பலர் நியாயமாக நடந்துகொண்டார்கள். ரூ 250/-ஐப் பக்கத்து அறைக்கு அனுப்பினார்கள். மிகச் சிலர் ஐநூறையும் தாங்களே அமுக்கிக்கொண்டார்கள்.

இதனால், பக்கத்து அறையில் இருந்தவர்களுக்குக் கடுப்பு. ‘நான் இந்தாளை நம்பினேன். இவன் என்னை ஏமாற்றிவிட்டானே’ என்று கொதித்தார்கள். ‘ச்சே, அந்த நூறு ரூபாயை நானே வெச்சுகிட்டிருக்கணும்’ என்று பொறுமினார்கள்.

இப்போது, இந்த விளையாட்டை நடத்திக்கொண்டிருந்தவர்கள் பக்கத்தில் வந்தார்கள் ‘என்ன சார்? ரொம்பக் கோவமா இருக்கீங்கபோல!’

‘ஆமா சார், அந்தாள் செஞ்சது அநியாயமில்லையா?’

‘உண்மைதான். வேணும்ன்னா, நீங்க அவரைப் பழிவாங்கலாம்!’

‘பழிவாங்கறதா? அது எப்படி?’

‘அவர் உங்ககிட்டேயிருந்து அநியாயமா காசைப் பிடுங்கிட்டார். இல்லையா? அதுக்குப் பதிலா, நீங்க எங்களுக்கு 1 ரூபா கொடுத்தீங்கன்னா நாங்க அவர்கிட்டேயிருந்து 2 ரூபாயைப் பிடுங்கிடுவோம். நீங்க 10 ரூபா கொடுத்தா அவர்ட்ட 20 ரூபாயைப் பிடுங்குவோம். 250 ரூபா கொடுத்தா, அவர் உங்களை ஏமாத்திச் சம்பாதிச்ச மொத்தக் காசையும் பிடுங்கிடுவோம். பழிக்குப் பழி! என்ன சொல்றீங்க?’

பாதிக்கப்பட்டவர்கள் யோசித்தார்கள், ’இந்த ஆளைப் பழிவாங்க நான் என்னுடைய பாக்கெட்டில் இருந்து பணம் செலவழிக்கவேண்டுமா? இதனால் எனக்கு என்ன லாபம்?’

இப்போது உங்களை அந்த இடத்தில் வைத்து பதில் சொல்லுங்கள். இந்தச் சூழ்நிலையில் நீங்கள் உங்களுடைய சொந்தக் காசைச் செலவழித்து அந்த இன்னொரு மனிதருக்குத் தண்டனை(?) கொடுப்பீர்களா?

மாட்டீர்கள். இல்லையா? இந்த விளையாட்டு மொத்தமும் சுத்த முட்டாள்தனமாகத் தோன்றுகிறது. இல்லையா? இந்த அறைக்குள் வந்தபோது உங்கள் பாக்கெட்டில் எவ்வளவு காசு இருந்ததோ, அதே அளவு காசு இப்போதும் இருக்கிறது. யாரும் உங்களிடமிருந்து காசைப் பிடுங்கவில்லை. சரிதானே? டெக்னிகலாக எந்தத் தப்பும் செய்யாத அந்த அடுத்த அறை மனிதரைத் தண்டிப்பதற்காக நீங்கள் உங்களுடைய சொந்தக் காசைச் செலவழித்தால் யார் முட்டாள்?

ஆனால், இந்தப் பரிசோதனையில் பங்கேற்ற பெரும்பாலான மக்கள், பக்கத்து அறைக்காரரைத் தண்டிக்கவேண்டும் என்பதில் மிகத் தீவிரமாக இருந்தார்கள். தங்களுடைய கைக்காசு 250 ரூபாய்வரை செலவழித்து, அவரிடம் இருக்கும் 500 ரூபாயைப் பிடுங்கினால்தான் அவர்களுக்கு நிம்மதி வந்தது.

இப்படிச் செய்ததால் அவர்களுக்கு என்ன லாபம்? ஒன்றுமில்லை. 250 ரூபாய் நஷ்டம்தான்.

அதனால் என்ன? நம்பிக்கை மோசடி செய்தவன் முறைப்படி தண்டிக்கப்பட்டுவிட்டான். அந்தத் திருப்தி போதுமே!

ஸ்விட்ஸர்லாந்தில் நடைபெற்ற இந்தப் பரிசோதனையின்போது, ’பழி வாங்கிய’ மனிதர்களுடைய மூளைக்குள் என்ன நடக்கிறது என்று ஆராய்ச்சி செய்து பார்த்தார்கள். ’என் காசு 250 ரூபாய் செலவானாலும் பரவாயில்லை. தப்புச் செஞ்சவன் தண்டிக்கப்படணும்’ என்று யோசித்தபோது அவர்களுடைய மூளையில் சந்தோஷ உணர்வுகள் (feelings of pleasure) தூண்டப்பட்டதாம்!

இதை வாசித்தபோது எனக்குப் பகீரென்றது. இந்த ஆராய்ச்சியில் பங்கேற்றவர்களெல்லாம் நன்றாகப் படித்தவர்கள். சமூகத்தின் நடுத்தர அல்லது உயர்மட்டங்களில் இருக்கிறவர்கள். ஆனால் அவர்களுக்கும்கூட தங்களுடைய சொந்தக் காசை / நேரத்தை / உழைப்பைச் செலவழித்து தப்புச் செய்த ஒருவரைப் பழிவாங்குவதில் குரூர சந்தோஷம் இருக்கிறது. பஸ்ஸில் பிக்பாக்கெட் அடிக்கிறவனுக்கு நாலு தர்ம அடி போடுகிற மனோநிலைதான் ’தப்புச் செஞ்சவங்களை விசாரணையெல்லாம் இல்லாம நிக்கவெச்சுச் சுடணும்’ என்பதில் வந்து நிற்கிறது. ஒரு கன்னத்தில் அறைந்தால் இன்னொரு கன்னத்தைக் காட்டுகிறவர்களெல்லாம் வழக்கொழிந்துவிட்டார்களோ?

(Image Courtesy: http://www.danariely.com/about-dan/)

நான் இந்த ஆராய்ச்சியைப்பற்றிப் படித்தது Dan Ariely எழுதிய ‘The Upside Of Irrationality’ என்ற அற்புதமான புத்தகத்தில். சுமார் 300 பக்க அளவு கொண்ட இந்தப் புத்தகத்தை என்னால் தொடர்ச்சியாகப் படிக்கவே முடியவில்லை. அவ்வளவு விஷயங்கள், ஒவ்வொன்றின் பின்னணி, தாக்கம், சாத்தியங்களையெல்லாம் யோசிக்க யோசிக்க மலைப்பாக இருந்தது. மனித மனம் எப்படியெல்லாம் விநோதமாக, Irrational-ஆக இயங்குகிறது என்று வெவ்வேறு ஆராய்ச்சிகளுடைய துணையோடு மிக அழகாக, எளிமையாக விவரித்திருக்கிறார்.

Buy The Upside Of Irrationality: The Unexpected Benefits Of Defying Logic At Work And At Home Buy Predictably Irrational

இந்தப் புத்தகம், இதே ஆசிரியருடைய முந்தைய புத்தகமாகிய ‘Predictably Irrational’ இரண்டுமே நிஜமான முத்துகள். எல்லோரும் அவசியம் வாசிக்கவேண்டியவை.

இதுமாதிரி புத்தகங்கள் தமிழில் எப்போது வரும்? (மொழிபெயர்ப்பாகவேனும்!)

***

என். சொக்கன் …

21 12 2010

’விநாயக்ஜி, வாழ்த்துகள்’ உள் அறையிலிருந்து யாரோ ஓடி வந்து அவர் கையைப் பிடித்துக் குலுக்கினார்கள், ‘உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது’

’ஆண் குழந்தையா?’ விநாயக் கோட்ஸே அதிர்ந்துபோய் நின்றார், ‘கடவுளே!’

***

‘விநாயக், உன் குடும்பத்தில் பிறக்கிற ஆண் குழந்தைகள்மீது ஒரு சாபம் இருக்கிறது, அதனால்தான் அடுத்தடுத்து உன் மகன்கள் எல்லோரும் இறந்துபோயிருக்கிறார்கள்’

‘இப்போது நான் என்ன செய்யவேண்டும் ஸ்வாமிஜி?’

‘விதியை நம்மால் ஜெயிக்கமுடியாது. ஆனால், கொஞ்சம் தந்திரம் செய்து ஏமாற்றலாம்’

‘அப்படியென்றால்?’

‘அடுத்து பிறக்கிற உன் மகனை, ஒரு பெண்போல வளர்க்கவேண்டும், அதன்மூலம் உங்கள் குடும்பத்தின்மீது இருக்கிற சாபம் நீங்கும்’

***

சின்ன வயதிலிருந்தே, நாதுராம் சராசரியான ஒரு பையனாகதான் வளர்ந்தான். படிப்பு, விளையாட்டு என எதிலும் அவனுக்குப் பெரிதாக ஆர்வம் இல்லை.

ஆனால், அவனிடம் ஒரு மிக விசேஷமான சக்தி இருந்தது. அல்லது, அப்படி அவனுடைய குடும்பத்தினர் நம்பினார்கள்.

நாதுராம்மீது தங்களுடைய குலதெய்வம் இறங்கி வந்து குறி சொல்வதாகக் கோட்ஸே குடும்பம் நினைத்தது. நடந்தவை, இனி நடக்கப்போகிறவை என எல்லாவற்றையும் விளக்கிச் சொல்கிற ஆற்றல் அவனுக்கு உண்டு என்பது அவர்களுடைய நம்பிக்கை.

வேடிக்கை என்னவென்றால், இந்த விஷயமெல்லாம் நாதுராம்க்குச் சுத்தமாகத் தெரியாது. அவன்பாட்டுக்குப் பேஸ்த் அடித்தாற்போல் ஒரு மூலையைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருப்பான். திடீரென்று அவனுடைய கண்கள் தியானத்தில் விழுந்ததுபோல் சுருங்கும், சட்டென்று குலதெய்வத்தின் குரலில் பேசத் தொடங்கிவிடுவான், அதுவரை அவன் எப்போதும் கேட்டிருக்காத சமஸ்கிருத ஸ்லோகங்களைத் துல்லியமான உச்சரிப்பில் மடை திறந்ததுபோல் பொழிவான், மற்றவர்கள் பயபக்தியோடு கை கட்டி, வாய் பொத்திக் கேட்கிற கேள்விகள், சந்தேகங்களுக்கெல்லாம் கணீரென்ற தொனியில் பதில் சொல்லுவான்.

கொஞ்ச நேரம் கழித்து, குலதெய்வம் மலையேறிவிடும். நாதுராம் பழையபடி திருதிருவென்று விழித்துக்கொண்டு, ‘இங்கே என்ன நடந்தது? நான் எங்கே இருக்கேன்?’ என்று அப்பாவியாக விசாரிப்பான்.

***

சாவர்க்கர் ரத்னகிரிக்கு வந்து சுமார் ஆறு வருடம் கழித்து கோட்ஸே குடும்பம் அங்கே குடியேறியது.

அப்போது விநாயக் கோட்ஸே ஓய்வு பெறும் வயது நெருங்கிக்கொண்டிருந்தது. ஆனால் அவருடைய மூத்த மகன் நாதுராம் கோட்ஸே இன்னும் சொந்தக் காலில் நிற்கமுடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தான்.

நாதுராம்க்குப் படிப்பு வரவில்லை. மெட்ரிகுலேஷன் பாஸ் செய்யமுடியவில்லை. ’சரி, போகட்டும்’ என்று விட்டுத் தொலைத்துவிட்டு வேறு வேலைகளைப் பார்க்கலாம் என்றால் அதுவும் சரிப்படவில்லை.

ஆரம்பத்தில் நாதுராம் தச்சுவேலை கற்றுக்கொண்டான். அது சரிப்படாமல் பழ வியாபாரம், கப்பல் துறைமுகத்தில் எடுபிடி வேலைகள், டயர் ரீட்ரேடிங், தச்சு வேலை என்று ஏதேதோ முயற்சி செய்து பார்த்தான். கார் ஓட்டினான். ஏதோ காரணத்தால் அவனுக்கு எந்தத் தொழிலும் ஒத்துவரவில்லை.

அப்போது அவர்கள் வசித்துவந்த ஊருக்குச் சில அமெரிக்கப் பாதிரியார்கள் வந்திருந்தார்கள். இவர்கள் அந்த ஊர் இளைஞர்களுக்குத் தையல் பயிற்சி தருவதாக அறிவித்தார்கள்.

எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று சுற்றிக்கொண்டிருந்த நாதுராம் அந்த வகுப்பிலும் சேர்ந்தான். ஓரளவு நன்றாகவே தைக்கக் கற்றுக்கொண்டான். ஒரு கடை வைத்தான். அடுத்த சில வருடங்களுக்கு அந்தக் கடைதான் அவனுக்குக் கொஞ்சமாவது சோறு போட்டுக்கொண்டிருந்தது.

***

அப்போதுதான் நாதுராமுக்கு ஒரு விஷயம் புரிந்தது. ’வேறெதையும்விட ஹிந்து மகாசபா பணிகளில் ஈடுபடுவதும் ஹிந்து மக்களுக்காக உழைப்பதும்தான் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இனி என் எதிர்காலம் அரசியலில்தான்!’

ஆனால் ஒன்று. அரசியலில் சேர்ந்து பெரிய பதவியில் உட்காரவேண்டும், புகழ், பணம் சம்பாதிக்கவேண்டும் என்கிற ஆர்வமெல்லாம் நாதுராம்க்கு இல்லை. இந்து ராஜ்யம் அமையப் பாடுபடுகிறோம் என்கிற உணர்வுதான் அவனைச் செலுத்திக்கொண்டிருந்தது.

அரசியலில் ஈடுபடுவது என்று ஆனபிறகு சங்க்லிமாதிரி சின்ன ஊரில் உட்கார்ந்துகொண்டிருந்தால் நாதுராமின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுவிடும். ஆகவே பம்பாய் அருகில் உள்ள பூனாவுக்குக் குடிபெயரத் தீர்மானித்தான் அவன்.

***

நாதுராம் மிக எளிமையாகதான் உடுத்துவார். அவருடைய அறையில் அநாவசிய ஆடம்பரங்கள் எதையும் பார்க்கமுடியாது. சிகரெட் புகைப்பது, மது அருந்துவது மாதிரியான கெட்ட பழக்கங்கள் கிடையாது. அவரது ஒரே பலவீனம் என்று பார்த்தால், காஃபி! நல்ல காஃபிக்காகப் பல கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று குடித்துவிட்டுத் திரும்புவதற்குக்கூட அவர் தயாராக இருந்தார்.

இப்படிப் பரிசுத்தமாக வாழ்ந்த நாதுராம் கோட்ஸேவுக்கு நாராயண் ஆப்தே என்கிற அதிஆடம்பரமான, ஆர்ப்பாட்டமான, பெண் வாசனை பட்டாலே கிறங்கி விழக்கூடிய ஒரு சிநேகிதம் கிடைத்தது பெரிய ஆச்சர்யம்தான்!

நாராயண் ஆப்தே பிறந்தது பூனாவில். பிராமணக் குடும்பம். நாதுராமைவிட ஒரு வயது சிறியவர்.

***

இப்படி கோட்ஸே, ஆப்தே குழுவினர் பல்வேறு திட்டங்களை யோசித்து, நிராகரித்து, மறுபடி யோசித்துக்கொண்டிருந்த நேரம். தங்களுடைய கொள்கைப் பிரசாரத்துக்காக ஒரு பத்திரிகை தொடங்குகிற எண்ணம் அவர்களுக்குத் தோன்றியது.

கோட்ஸேவுக்கோ ஆப்தேவுக்கோ அதற்குமுன் பத்திரிகை நடத்திய முன் அனுபவம் இல்லை. ஆனால் காந்திஜி உள்படப் பெரும்பாலான தலைவர்கள் பத்திரிகைகளின்மூலம் தங்களுடைய கருத்துகளை முன்னெடுத்துச் சென்ற காலகட்டம் அது. ஆகவே இந்துக்களின் நிஜமான உரிமைகளையும் அடுத்து செய்யவேண்டியவற்றையும் அவர்களுக்கு எடுத்துச் சொல்வதற்கு ஒரு பத்திரிகை இருந்தால் நல்லது என்று நாதுராம் கோட்ஸே நினைத்தார்.

***

வாசலில் ஒரு கார் வந்து நின்றது. ‘காந்திஜி வந்துவிட்டார்’ என்று யாரோ கத்தினார்கள்.

விழா அமைப்பாளர்கள் அவசரமாக வாசலுக்கு ஓடினார்கள். கூட்டமும் ஆவலாகத் திரும்பிப் பார்த்தது.

அந்த நேரத்தில் எங்கிருந்தோ ‘திம்’மென்ற பெரும் சத்தம். காந்தியடிகளின் கார் அருகே ஒரு நாட்டு வெடிகுண்டு வந்து விழுந்து வெடித்தது.

மறுநிமிடம் அந்த இடத்தைப் புகையும் குழப்பமும் சூழ்ந்துகொண்டது. ‘காந்திஜிக்கு என்னாச்சு?’ என்று மக்கள் அலறினார்கள்.

சிறிது நேரத்தில் புகை அடங்கியது. காந்தி அங்கே இல்லை. விழா அமைப்பாளர்கள் பதறிப்போய்த் தேடினார்கள்.

***

காந்தி தன்னுடைய கொலை முயற்சியை ஒரு பெரிய விஷயமாகக் கருதவில்லை. எதுவுமே நடக்காததுபோல் தன்னுடைய பிரார்த்தனைக் கூட்டங்களைத் தொடர ஆரம்பித்துவிட்டார்.

ஆனால் காந்தியின் தொண்டர்களால் அப்படிச் சாதாரணமாக இருக்கமுடியவில்லை. இன்றைக்கு இல்லாவிட்டாலும் நாளையோ நாளை மறுநாளோ மறுபடி காந்தியின் உயிருக்கு ஆபத்து வரலாம் என்று அவர்களுக்குக் கவலை.

‘பாபுஜி! நீங்கள் தயவுசெய்து போலிஸ் பாதுகாப்புக்கு ஒப்புக்கொள்ளவேண்டும்’ என்று அவர்கள் காந்தியிடம் கெஞ்சினார்கள். ‘பெரிதாக எதுவும் இல்லை. உங்களுடைய பிரார்த்தனைக் கூட்டத்துக்கு யார் யாரோ வருகிறார்கள். அவர்களையெல்லாம் ஒழுங்காகப் பரிசோதனை செய்து உள்ளே அனுமதித்தாலே போதும். எந்த அசம்பாவிதமும் நடக்காமல் பார்த்துக்கொண்டுவிடலாம்.’

’முடியவே முடியாது’ என்று கண்டிப்பாக மறுத்துவிட்டார் காந்தியடிகள். ‘இந்த விஷயத்தில் நீங்கள் என்னை வற்புறுத்தினால் நான் ராத்திரியோடு ராத்திரியாக எங்கேயாவது புறப்பட்டுச் சென்றுவிடுவேன்.’

அப்போதுமட்டுமில்லை. பிறகு எப்போதும் காந்தி தன்னுடைய பிடிவாதத்தைத் தளர்த்திக்கொள்ளவே இல்லை. கடைசிவரை, காந்தியின் பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட யாரும் – நாதுராம் கோட்ஸே உள்பட – போலிஸால் பரிசோதிக்கப்பட்டதே கிடையாது.

***

’மிலிட்டரி’ மனிதராகிய ஆப்தே இந்த விஷயத்தில் மிகத் தீவிரமாக இருந்தார். முஸ்லிம் லீக் தலைவர்கள் சேர்ந்து பேசுகிற கூட்டத்தில் குண்டு வைக்கலாம். அவர்கள் தங்குகிற ஹோட்டல் அறைக்குள் ஜன்னாடி வழியே துப்பாக்கியால் சுடலாம். பாகிஸ்தானுக்குச் செல்லும் ரயில்களை வழிமறித்துக் கொள்ளையடிக்கலாம். அந்த ஊர்ப் பாராளுமன்றத்தையே ராக்கெட் வைத்துத் தகர்த்துவிடலாம். இங்கே இந்தியாவுக்குள் இருந்துகொண்டு நமக்குத் துரோகம் செய்யும் முஸ்லிம் ஆட்சியாளர்களுடைய கஜானாவைக் கொள்ளையடிக்கலாம் … இப்படி ஆப்தே இஷ்டம்போல் திட்டங்களை அடுக்கிக்கொண்டே போனார். அவருடைய மற்ற தோழர்கள் வாயைப் பிளந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

இதில் காமெடியான விஷயம் நாராயண் ஆப்தே மிலிட்டரியில் வேலை செய்தாரேதவிர அவருடைய வேலை முழுக்க முழுக்க உள்ளூர் ஆஃபீஸ் கட்டடத்துக்குள்தான். அவர் போர்க்களத்துக்கெல்லாம் சென்றதே கிடையாது. எப்போதாவது போர்வீரர்களுடைய துப்பாக்கிகள், வெடிபொருள்கள், மற்ற ஆயுதங்களைத் தொட்டுப்பார்த்திருப்பாரேதவிர அவற்றை எப்படி இயக்கவேண்டும், எந்த ஆயுதத்தால் என்னமாதிரியான சேதம் உண்டாக்கலாம் என்றெல்லாம் அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை.

ஆனால் இந்த விஷயம் கோட்ஸேவுக்கோ மற்ற நண்பர்களுக்கோ தெரியவில்லை. ஆப்தேவின் கதையளப்புகளை உண்மை என நம்பினார்கள். அவர் நினைத்தால் ஒரே வாரத்தில் பாகிஸ்தானைச் சிதைத்துப் பாரதத்தோடு இணைத்துவிடுவார் என்று நினைத்தார்கள்.

நாதுராம் கோட்ஸேவுக்கு இந்தியக் கலாசாரம், ஹிந்து மதம் சார்ந்த புத்தகங்களுக்கு அடுத்தபடியாக மிகவும் பிடித்தவை துப்பறியும் நாவல்கள்தான். ஆகவே அவருக்கும் ஆப்தேயின் கற்பனைத் திட்டங்கள் மிகுந்த பரவசம் தந்திருக்கவேண்டும்.

ஆப்தே வெறுமனே திட்டம் தயாரிப்பதோடு நிறுத்திக்கொள்ளவில்லை. அவற்றை நிஜமாக நிறைவேற்றுவதற்காக நிதி திரட்டத் தொடங்கினார்.

நிதியா? இந்தக் காமெடி திட்டங்களை நம்பி யார் காசு தருவார்கள்?

நம்புங்கள். அதற்கும் ஒரு கூட்டம் இருந்தது. பூனாவில், பம்பாயில், இன்னும் பல பகுதிகளில்!

***

இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்து செல்வது உறுதியாகிவிட்ட நேரம். அவர்களுக்கு வெறுமனே நிலப் பரப்பைமட்டும் பங்கிட்டுக் கொடுத்தால் போதாது. ஒன்றுபட்ட இந்தியாவின் அனைத்துச் சொத்துகளையும் இந்த இரு தேசங்களுக்கும் சரியான விகிதத்தில் பிரித்துத் தருவதுதான் நியாயமாக இருக்கும்.

அப்போது இந்திய ரிஸர்வ் வங்கியின் கையிருப்பில் சுமார் நானூறு கோடி ரூபாய்க்குச் சற்றே குறைவான தொகை இருந்தது. இதில் 75 கோடி ரூபாய் பாகிஸ்தானுக்குச் சொந்தமானது என்று தீர்மானிக்கப்பட்டது.

அதாவது பாகிஸ்தான் என்கிற புது தேசம் உருவானதும் அதன் ஆரம்பக் கட்டமைப்புச் செலவுகளுக்காக இந்தியா அவர்களுக்கு எழுபத்தைந்து கோடி ரூபாய் தரவேண்டும். அதன்பிறகு அவர்களுக்குத் தனி கஜானா, தனி ரிஸர்வ் வங்கி, தனி வருவாய், தனிச் செலவினங்கள், எல்லாம் அவர்கள் பாடு.

இதன்படி இந்தியா சுதந்தரம் பெற்றுப் பாகிஸ்தான் என்கிற புது தேசம் தோன்றியவுடன் அவர்களுக்கு முதல் தவணையாக இருபது கோடி ரூபாய் வழங்கப்பட்டுவிட்டது. இந்தத் தொகையைப் பயன்படுத்தி அவர்கள் தங்களுடைய நாட்டின் நிர்மாணப் பணிகளை உடனடியாகத் தொடங்கமுடிந்தது.

ஆனால் அப்போது பாகிஸ்தான் கவனிக்க மறந்த விஷயம், அவர்களுடைய பங்குப் பணமாகிய எழுபத்தைந்து கோடியில் பெரும்பகுதி (55 கோடி ரூபாய்) இன்னும் இந்தியாவின் கையில்தான் இருக்கிறது. அதை எப்போது எத்தனை தவணைகளாகக் கொடுக்கலாம் என்பதை இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவும் மற்ற அமைச்சர்களும் சேர்ந்துதான் முடிவெடுக்கவேண்டும். அதற்குள் இந்த இரு நாடுகளின் எல்லையில் வேறொரு பெரிய பிரச்னை தொடங்கிவிட்டது.

***

பாகிஸ்தானுக்கு இந்தியா தரவேண்டிய பணத்தை நிறுத்திவைத்திருக்கிறது என்கிற தகவலே காந்திக்குத் தெரியாது. அதை அவருக்குச் சொன்னது மவுன்ட்பேட்டன்தான்.

‘இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’ மவுன்ட்பேட்டனிடம் கேட்டார் காந்தி.

’இத்தனை நாள்களில் இந்திய அரசாங்கம் செய்த முதல் நேர்மையற்ற செயல் என்று இதைத்தான் சொல்வேன்!’ என்றார் மவுன்ட்பேட்டன்.

காந்தி துடித்துப்போய்விட்டார். இவ்வளவு கஷ்டப்பட்டுச் சுதந்தரம் வாங்கியது நேர்மையற்ற செயல்களைச் செய்வதற்குதானா?

***

1948 ஜனவரி 13ம் தேதி மதியம் 11:55க்குக் காந்தியின் கடைசி உண்ணாவிரதம் தொடங்கியது. அடுத்த சில மணி நேரங்களுக்குள் அவருடைய மருத்துவர்கள் பதற ஆரம்பித்துவிட்டார்கள். ‘பாபுவின் இதயமும் சிறுநீரகமும் ரொம்பப் பலவீனமா இருக்கு. இந்த நிலைமையில அவரோட உடம்பு பசியைத் தாங்காது. உடனடியா நாம ஏதாவது நடவடிக்கை எடுத்தாகணும்!’

நடவடிக்கை? இந்த நேரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கமுடியும்? காந்தி என்ன பல்லி மிட்டாயா கேட்கிறார்? கடைக்குப் போய் வாங்கிக் கொடுத்துச் சமாதானப்படுத்துவதற்கு? இந்து – முஸ்லிம் ஒற்றுமை வேண்டும் என்கிறார். அதுவும் பிரிவினையினால் எல்லாரும் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிற இந்த நேரத்தில். நடக்குமா?

***

காந்தி உண்ணாவிரதம் அறிவித்துச் சில மணி நேரங்கள் கழித்து பூனாவில் ‘ஹிந்து ராஷ்ட்ரா’ பத்திரிகை அலுவலகத்தில் இருந்த டெலிப்ரின்டர் உயிர் பெற்றது. ஒரு செய்தியைப் பரபரவென்று அடித்துத் துப்பியது.

கோட்ஸேயும் ஆப்தேயும் அந்தச் செய்தியை எடுத்துப் படித்தார்கள். ‘டெல்லியில் அமைதி திரும்புவதற்காகக் காந்தி உண்ணாவிரதம்.’

அடுத்த சில மணி நேரங்களில் இன்னும் பல செய்திகள் வந்தன. அவை ஒவ்வொன்றும் கோட்ஸே, ஆப்தேயின் ரத்த அழுத்தத்தை எகிறச் செய்தன. காங்கிரஸ்மீது, காந்திமீது அவர்கள் கொண்ட வெறுப்பு இன்னும் தீவிரமாகியிருந்தது.

‘இந்த மனிதர்தான் எல்லாப் பிரச்னைக்கும் காரணம்’ என்றார் நாதுராம் கோட்ஸே. ‘நாம பாகிஸ்தானை அழிக்கறதுக்காக என்னென்னவோ திட்டம் போட்டோமே. அதெல்லாம் வேஸ்ட். இப்போதைக்கு நாம செய்யவேண்டிய ஒரே வேலை, காந்தியைக் கொலை பண்றதுதான்!’

’ஆமாம்’ என்று ஒப்புக்கொண்டார் ஆப்தே. ‘நாம உடனடியா டெல்லி புறப்படணும். காந்தியால இந்தியாவுக்கும் இந்துக்களுக்கும் இன்னும் நிறைய ஆபத்து வர்றதுக்குள்ள நாம அவரை முடிச்சுடணும்.’

ஒரு த்ரில்லர் நாவலின் முதல் அத்தியாயம்போல் படிப்பதற்குப் பரபரவென்று இருக்கிறதில்லையா? அடுத்து என்ன நடக்கும் என்று நெஞ்சு துடிக்கிறதில்லையா?

ஆனால் இது கதையா, நிஜமா? உண்மையிலேயே அந்த ஐம்பத்தைந்து கோடி ரூபாய்க்காகதான் கோட்ஸே கோஷ்டி காந்தியைக் கொல்ல முடிவெடுத்ததா?

***

இதுவரை நீங்கள் படித்தது சென்னை புத்தகக் கண்காட்சியில் கிழக்கு பதிப்பகம் வெளியிடவிருக்கும் எனது ‘மகாத்மா காந்தி கொலை வழக்கு’ புத்தகத்திலிருந்து சில காட்சிகள். இது என்னமாதிரியான புத்தகம் என்று சாம்பிள் காட்டுவதற்காக ட்ரெய்லர்போல் ஆங்காங்கே வெட்டி ஒட்டியிருக்கிறேன். முழுசாகப் புரியாவிட்டால் நான் பொறுப்பில்லை 🙂

Gandhi Kolai Vazhakku

காந்தியின் கொலைக்கான அரசியல் காரணங்களில் தொடங்கி சதித் திட்டம், அதில் ஈடுபட்டவர்களுடைய சுருக்கமான வாழ்க்கை வரலாறு, அவர்களுடைய தனிப்பட்ட உள்நோக்கங்கள், கோட்ஸே கோஷ்டியின் சொதப்பல்கள், அதைவிட ஒரு படி மேலாகப் போலிஸ் சொதப்பல்கள், அவர்கள் முட்டாள்தனமாகத் தவறவிட்ட வாய்ப்புகள் என்று தொடர்ந்து காந்தி கொலை, அதன்பிறகு நிகழ்ந்த காலம் கடந்த துப்பறிதல்கள், நீதிமன்ற விசாரணை, தண்டனை, பின்கதை, கோட்ஸே ஆதரவாளர்களின் வாதங்கள் என்று எந்தப் பக்கச்சார்பும் இல்லாத ஒரு முழுமையான வரலாற்று ஆவணமாக இதைத் தர முயன்றிருக்கிறேன்.

நான் இதுவரை எழுதிய புத்தகங்களில் எனக்கு மிகவும் பிடித்தது ‘சாப்ளின் கதை’. அடுத்து கூகுளின் சரித்திரம். அந்த இரண்டைவிடவும் இந்தப் புத்தகம் மிகுந்த மன நிறைவைத் தந்தது. உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். வாய்ப்புள்ளவர்கள் வாசித்துவிட்டுச் சொல்லவும். நன்றி!

புத்தகத்தை வாங்க விரும்புகிறவர்கள் இந்த இணைப்பைப் பயன்படுத்தலாம் –> https://www.nhm.in/shop/978-81-8493-596-7.html

இந்நூல் பற்றி பா. ராகவனின் அறிமுகம் –> http://www.writerpara.com/paper/?p=1774

***

என். சொக்கன் …

13 12 2010

முன்குறிப்பு: ’பண்புடன்’ குழுமத்தின் தீபாவளி மலர் (கொஞ்சம் லேட்டாக Smile ) வெளிவந்துள்ளது. அதைப் படிக்க இந்த இணைப்புக்குச் செல்லலாம் –> http://www.scribd.com/doc/44817485/deepavali-panbudan1

இந்த மலரில் வெளியாகியுள்ள எனது சிறுகதை ஒன்றை Backupக்காக இங்கே குறித்துவைக்கிறேன்:

 

திரும்பிப் போகலாம்

அன்புடையீர்,

எங்களது ‘திரும்பிப் போகலாம்’ இணைய தளத்துக்கு உங்களை வரவேற்கிறோம். தங்கள் வரவு, நல்வரவாகுக.

இந்தத் தளம், இன்றைய இணையத் தொழில்நுட்பத்தின் சகல சாத்தியங்களையும், அடுத்த தலைமுறைத் தொழில்நுட்பத்துடன் கவனமாக இணைத்து உருவாக்கப்பட்டது. இதுபோல் ஒரு தளம் இதுவரை இல்லை, இனிமேலும் இருக்காது என்று எங்களால் உறுதிபடச் சொல்லமுடியும்.

முதலில், இந்தத் தளம் யாருக்கு? எதற்கு?

அடிப்படையில் இது ஒரு வாழ்க்கைப் பதிவு. கிட்டத்தட்ட டைரிபோல, உங்களுடைய தினசரி நடவடிக்கைகளை, நினைவுகளை, குறிப்புகளை, கற்பனைகளை, கவலைகளை, சந்தோஷங்களையெல்லாம் நீங்கள் இங்கே உங்கள் மொழியிலேயே பதிவு செய்து வைக்கலாம்.

இந்த வசதிதான் எல்லாத் தளங்களிலும் இருக்கிறதே, இணையத்தில் ’தமிழ் வலைப்பூ’ என்று தேடினால் ஆயிரக்கணக்கில் வந்து கொட்டுகிறதே, பிறகு எப்படி ‘திரும்பிப் போகலாம்’ தளம் விசேஷமானது?

எங்கள் தளத்தின் சிறப்பு, இது வாழ்க்கையைப் பதிவு செய்வதுமட்டுமில்லை. அன்றைய தினத்துக்கே உங்களைத் திரும்ப அழைத்துச் சென்றுவிடக்கூடிய தொழில்நுட்பத்தைக் கைக்கொண்டிருக்கிறது.

உதாரணமாக, எங்கள் தளத்தின் கற்பனை உறுப்பினர் ஒருவர், சில மாதங்களுக்குமுன் இப்படி ஒரு பதிவை எழுதியிருக்கிறார்:

’இன்றைக்கு நல்ல குளிர். இரண்டு ஸ்வெட்டர்கள் மாட்டிக்கொண்டு, கம்பளியைப் போர்த்திக்கொண்டு நன்றாகத் தூங்கினேன்!’

அவர் இந்தப் பதிவை எழுதி ரொம்ப நாளாகிவிட்டது, குளிர் காலம் போய், வெயில் காலம் ஆஜர்.

ஆனால் இப்போது, அவருக்கு மீண்டும் அந்தக் குளிரை அனுபவிக்கவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. அவர் என்ன செய்வார், பாவம்?

கவலையே வேண்டாம், அவர் எங்களுடைய ‘திரும்பிப் போகலாம்’ இணைய தளத்துக்கு வந்து, இந்தக் குறிப்பிட்ட பதிவைத் தேர்ந்தெடுத்து, ‘திரும்பிப் போகலாம்’ என்ற பொத்தானை அமுக்கினால் போதும்.

மறுவிநாடி, வியர்த்து விறுவிறுத்துக்கொண்டிருக்கும் அவருடைய வீடுமுழுவதும் குளிர் சூழ்ந்துகொள்ளும். அவர் உடம்பில் இரண்டு ஸ்வெட்டர்கள், ஒரு கம்பளி எல்லாம் தானாக வந்து சேரும்.

ஆச்சர்யமாக இருக்கிறதா? இதைத்தான் நாங்கள் அடுத்த தலைமுறை இணையத் தொழில்நுட்பம் என்று குறிப்பிட்டோம்.

யோசித்துப்பாருங்கள், உங்களுடைய வாழ்க்கையில் எத்தனையோ சுப நினைவுகள் இருக்கின்றன, உதாரணமாக, முதல் காதல், முதல் முத்தம், முதல் வேலை, முதல் சம்பளம், முதன்முறை உங்கள் மனைவியை(அல்லது கணவரை)ச் சந்தித்தது, திருமண நாள் (சிலருக்கு விவாகரத்து நாள்), பரிசு வாங்கியது, பாராட்டுகளை வாங்கியது, அவ்வளவு ஏன், மனத்துக்குப் பிடித்த உணவை நிறையச் சாப்பிட்டுவிட்டு சோஃபாவில் கவிழ்ந்து கிடந்து டிவி பார்ப்பதுகூட ஓர் இனிமையான ஞாபகம்தானே?

இந்த மென்மை நினைவுகளெல்லாம், நம்முடைய மூளையில் நிரந்தரமாகத் தங்கிவிடுகின்றன. அவற்றை அவ்வப்போது வெளியில் எடுத்து அசைபோடுவது அலாதியான ஓர் அனுபவம்.

ஆனால், இவை வெறும் ஞாபகங்கள்தான். காகிதத்தில் சர்க்கரை என்று எழுதிச் சாப்பிட்டால், இனிக்காது.

அதற்குபதிலாக, அந்த நினைவுகள் நிகழ்ந்த அதே நாளுக்குத் திரும்பச் சென்று, மீண்டும் வாழ்ந்து பார்த்தால் எப்படி இருக்கும்? நிஜமான சர்க்கரை, தித்திக்குமில்லையா?

அதாவது, உங்களுடைய முதல் காதலியைச் சந்தித்த அதே தினத்துக்கு இப்போது நீங்கள் மறுபடி பயணம் செய்யலாம். அப்போது உங்களுக்கு வயது என்ன? பதினாறா? பன்னிரண்டா? அந்த வயதுக்கே உங்கள் உடலும் மனமும் சென்றுவிடும், உணர்வுகள், சிந்தனைகள் எல்லாம் அப்போதைய காலகட்டத்துக்கு ஏற்ப இருக்கும்.

எங்களுடைய நவீன தொழில்நுட்பம், இத்துடன் நின்றுவிடுவதில்லை, உங்களுடைய அந்த முதல் காதலியையும் நாங்கள் அந்த அனுபவத்தில் நேருக்கு நேர் கொண்டுவருகிறோம்.

இது எப்படி சாத்தியம்?

அதற்கு நீங்கள் எங்களுடைய தளத்தில் பதிவு எழுதும்போதே, உங்களுடைய நினைவுகளை முழுமையாகக் குறிப்பிடவேண்டும். உங்கள் காதலியின் பெயர், வயது, நிறம், உயரம், எடை, சந்தித்தபோது அவர் அணிந்திருந்த உடையின் நிறம், வகை என்று சகல விவரங்களையும் நீங்கள் நுணுக்கமாகக் குறிப்பிட்டால், அவருடைய நெற்றிப் பொட்டு, காது லோலாக்குவரை சகலத்தையும் எங்களால் மீண்டும் உருவாக்கிவிடமுடியும்.

அதேசமயம், நீங்கள் எதையாவது பதிவு செய்ய மறந்துவிட்டால்? அதனால் நிகழ்கிற பிரச்னைகளுக்கு நாங்கள் பொறுப்பேற்கமுடியாது.

உதாரணமாக, உங்கள் காதலியின் மூக்கு மிகவும் கூர்மையானது, அவரிடம் உங்களுக்குப் பிடித்த அம்சமே, அந்தக் கூர் மூக்குதான்.

இந்த விவரத்தை நீங்கள் உங்கள் பதிவில் மறக்காமல் குறிப்பிடவேண்டும். ஒருவேளை அப்படிக் குறிப்பிடாவிட்டால், நீங்கள் மீண்டும் அதே நாளுக்குத் திரும்பிச் செல்லும்போது, உங்கள் காதலிக்குக் கூர் மூக்கு இருக்காது, சாதாரணமான மூக்குதான் இருக்கும்.

ஆகவே, எங்கள் தளத்தில் பதிவுகள் எழுதும்போது, எந்த விவரத்தையும் விட்டுவைக்காதீர்கள், நுணுக்கமாக, விரிவாக, விளக்கமாகப் பதிவு செய்துவைத்தால்தான், அது உங்களுக்குப் பிற்காலத்தில் பயன்படும்.

ஆனால், நான் இப்படி அந்தரங்கமான விஷயங்களை எழுதப்போய், அதை மற்றவர்கள் படித்துவிடமாட்டார்களா?

உங்களுக்கு அந்தப் பயமே வேண்டியதில்லை. எங்களுடைய நவீன தொழில்நுட்பம் உங்கள் நினைவுகளை வேறு யாரும் பார்க்கமுடியாதபடி, படிக்கமுடியாதபடி, பயன்படுத்தமுடியாதபடி தடுத்துவிடுகிறது.

சரி, நான் என் நினைவுகளை எழுதுகிறேன், நடுவில் ஒரு பொய்யான தகவலை எழுதினால் என்ன ஆகும்?

நீங்கள் எழுதுவது உண்மையா, பொய்யா என்று எங்களால் கண்டுபிடிக்க இயலாது. ஆகவே, நீங்கள் பொய்யான, பொருந்தாத ஒரு விவரத்தை எழுதினாலும் அது நிஜத்தில் அப்படியே நிகழ்ந்துவிடும்.

சொன்னால் நம்பமாட்டீர்கள், இந்த ஒரு விஷயத்துக்காகவே எங்களுடைய தளத்தைப் பயன்படுத்துகிறவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்.

உதாரணமாக, எங்களுடைய உறுப்பினர் கந்தசாமி ஒரு நோஞ்சான், யாரேனும் பலமாகத் தட்டினால் கீழே விழுந்து உடைந்துவிடுவார்.

இதனால், கந்தசாமிக்கு உள்ளுக்குள் ஒரு பெரிய ஆசை: நான் ஒரு பெரிய பலசாலியாக, எல்லோர்மீதும் ஆதிக்கம் செலுத்துகிறவனாக, அடித்து உதைப்பவனாக மாறவேண்டும்!

இதற்காக, அவர் எங்களுடைய தளத்தைப் பயன்படுத்துகிறார். நிஜமான நோஞ்சான் நினைவுகளைப் பதிவு செய்யாமல், கற்பனையில் தன்னை ஒரு பலசாலியாக வர்ணித்துக் கதைகள் எழுதுகிறார், தன் பலத்தைப் பார்த்து மயங்கும் பெண் கதாபாத்திரங்களை அவரே உருவாக்குகிறார், பிறகு அந்தக் கனவைக் கண்முன்னே வாழ்ந்து பார்க்கிறார்.

நீங்களும் கந்தசாமியைப்போல் கற்பனைக் கதைகள் எழுதவேண்டும் என்று அவசியம் இல்லை. நிஜமான அனுபவத்துக்கு மத்தியில், ‘இப்படி நேர்ந்திருக்கலாமே’ என்று நீங்கள் நினைத்து ஆதங்கப்படுகிற சமாசாரங்களையும் இணைத்து எழுதிக்கொள்ளலாம்.

உதாரணமாக, நீங்கள் ஓர் அரசு அலுவலகத்துக்குச் செல்கிறீர்கள், ஒரு மணி நேரம் காத்திருந்தபிறகு, அங்குள்ள அதிகாரி உங்கள் விண்ணப்பத்தில் கையெழுத்துப் போடுவதற்கு நூறு ரூபாய் கேட்கிறார். வயிறு எரிய அந்தத் தொகையைக் கொடுத்துவிட்டு வீடு வருகிறீர்கள்.

இந்த நினைவுகளை எழுதும்போது, நீங்கள் கொஞ்சம் அதனை மாற்றி எழுதலாம். லஞ்சம் கேட்ட அந்த அரசு அதிகாரிக்கு நீங்கள் கும்மாங்குத்து விடுவதுபோலவோ, காவல்துறையில் புகார் கொடுத்து அவரை ஜெயிலில் தள்ளுவதுபோலவோ குறிப்பு எழுதிக்கொள்ளலாம். பிறகு அவற்றை நிஜத்தில் நிகழ்த்திப் பார்க்கலாம்.

சில சமயங்களில், உங்களுடைய வெவ்வேறு நினைவுகளை ஒன்றாகச் சேர்க்கவேண்டும் என்கிற விருப்பம் உங்களுக்கு ஏற்படலாம். உதாரணமாக, பெங்களூருக்கு அலுவல் நிமித்தம் சென்றிருக்கிறீர்கள், அப்போது, ‘இங்கே என் மனைவி, குழந்தை இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!’ என்று யோசிக்கிறீர்கள்.

ரொம்பச் சுலபம், பெங்களூர் நினைவுகளில் இருந்து ஒரு பகுதி, பிறகு நீங்கள் உங்கள் ஊரில் மனைவி, குழந்தைகளுடன் பார்க்குக்கோ, பீச்சுக்கோ சென்ற ஓர் அனுபவம், இரண்டையும் இணைத்து ஒரு புது நினைவை உருவாக்கலாம், அதைக் கண்முன்னே வாழ்ந்து பார்க்கலாம்.

இப்படி ஒவ்வொரு பதிவாக, ஒவ்வொரு நினைவாக உங்களுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையையும் இங்கே மறுபடி, நீங்கள் விரும்பும் விதத்தில் வாழ்ந்து பார்க்கலாம், எந்தத் தடையும் கிடையாது, வானம்கூட எல்லை இல்லை.

இதற்காக நாங்கள் வசூலிக்கும் கட்டணம் பின்வருமாறு:

1. நீங்கள்மட்டும் இடம்பெறுகிற ஓர் அரை மணி நேர நினைவுகள் அல்லது கற்பனைகளை மீண்டும் வாழ்ந்து பார்ப்பதற்கு: ரூபாய் பன்னிரண்டாயிரம் மட்டும்!

2. அதே நினைவில், உங்களுடன் இன்னொருவரும் இடம்பெறவேண்டும் என்றால்: ரூபாய் இருபதாயிரம் மட்டும்!

3. அந்த இன்னொருவர், எதிர்பாலினராக இருந்தால் (ஆணுக்குப் பெண், பெண்ணுக்கு ஆண்): ரூபாய் முப்பத்தொன்பதாயிரம் மட்டும்!

4. அரை மணி நேரத்துக்குமேல் நீள்கிற ஒவ்வொரு நிமிடத்துக்கும்: ரூபாய் ஆயிரம் மட்டும்!

5. உங்கள் நினைவில் கூடுதலாக இடம்பெறும் ஒவ்வொரு நபருக்கும்: ரூபாய் ஆறாயிரம் முதல் பத்தாயிரம்வரை!

இந்த அளவு குறைவான கட்டணத்தில் உங்களுடைய வாழ்க்கையை நீங்கள் விரும்பும்வகையில் திரும்ப வாழமுடிகிறது என்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கும் செய்தி. இந்தத் தொகையை நீங்கள் தவணை முறையில் செலுத்துவதற்கான வசதியும் உண்டு.

சில எச்சரிக்கைக் குறிப்புகள்:

எங்களுடைய இணைய தளத்தில் ஒருவர் எழுதும் நினைவுகளை, மற்றவர்கள் பார்க்கமுடியாதபடி தடுத்திருக்கிறோம். இதற்காக நாங்கள் உலகின் மிகச் சிறந்த நவீன பாதுகாப்புத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறோம்.

அதேசமயம், இந்த வேலிகளையெல்லாம் தாண்டித் திருடவேண்டும் என்கிற நோக்கத்துடன் வருகிறவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்களுடைய வேகத்துக்கு நாங்கள் தடை போடமுடியாது.

எங்களால் இயன்றவரை, இந்த நினைவுத் திருடர்களின் கையில் உங்களுடைய பதிவுகள் சிக்கிவிடாதபடி நாங்கள் பாதுகாக்கிறோம். ஒருவேளை இந்தப் போட்டியில் அவர்கள் ஜெயித்துவிட்டால், அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பேற்கமுடியாது.

இப்படி ஏதும் விபரீதம் நேர்ந்து, உங்களுடைய நினைவுகள் அவர்கள் கையில் சிக்கினால், அவர்கள் அதனை எப்படி வேண்டுமானாலும் தவறாகப் பயன்படுத்தலாம், இந்த ஆபத்துக்கு நீங்கள் தயாராக இருப்பது நல்லது.

நல்ல வேளையாக, நினைவுத் திருடர்களிடமிருந்து தப்புவதற்கு ஒரு சுலபமான வழி இருக்கிறது.

பெரும்பாலான திருடர்களுக்கு, தனிப்பட்ட நபர்களின் நினைவுகளில் ஆர்வம் இருப்பதில்லை. இரண்டு பேர், அதுவும் ஆண், பெண் சம்பந்தப்பட்ட ஞாபகங்களைதான் அவர்கள் முனைந்து தேடுகிறார்கள், அதை வாசித்துக் கிளுகிளுப்பு அடைவது, தங்களுக்குப் பிடித்தவண்ணம் அதனை மாற்றி அனுபவிப்பது என்று தவறு செய்கிறார்கள்.

அவர்களிடமிருந்து தப்பவேண்டுமென்றால், நீங்கள் நிறையத் தனிநபர் நினைவுகளை எழுதிக் குவிக்கவேண்டும், இடையிடையே ஓரிரு அந்தரங்கமான ஆண் – பெண் நினைவுகள், சம்பவங்களும் வரலாம், ஆனால் மேலோட்டமாகப் பார்க்கிறபோது உங்களுடைய சிந்தனைகளில் திருடுவதற்கு எதுவும் இருக்காது என்கிற எண்ணம் திருடர்களுக்கு வரவேண்டும். அப்போது அவர்கள் உங்களுடைய நினைவுகளைச் சீண்டமாட்டார்கள்.

அடுத்தபடியாக, நீங்கள் இந்தத் தளத்தினுள் நுழைவதற்காக நாங்கள் கொடுத்திருக்கும் ரகசியச் சொல், பத்திரமாகப் பாதுகாக்கப்படவேண்டும். அதை நீங்கள் யாரிடமும் பகிர்ந்துகொள்ளக்கூடாது – சொந்தக் கணவன் / மனைவி / மகன் / மகள் / சகோதரர்கள் / நண்பர்கள் யாரிடமும்!

ஏனெனில், அந்தச் சொல்மட்டும் இன்னொருவருக்குத் தெரிந்துவிட்டால், அவ்வளவுதான். அவரே நீங்களாக மாறிவிடலாம், உங்களுடைய அடையாளத்தைத் திருடிக்கொண்டு வாழத் தொடங்கலாம், அதுபோன்ற ஒரு விபரீதத்துக்கு நீங்களாகவே வலியச் சென்று இடமளித்துவிடாதீர்கள்.

கடைசியாக, நீங்கள் ஏதேனும் சட்டப்படி குற்றமான செயல்களில் ஈடுபட்டால் (உதாரணம்: சிவப்பு விளக்கு எரியும்போது போக்குவரத்து சிக்னலைக் கடப்பது, அடுத்தவர்களிடம் திருடுவது, கொலை, இன்னபிற) தயவுசெய்து அந்த நினைவுகளை இங்கே பதிவு செய்யாதீர்கள்.

காரணம், ஒருவேளை அரசாங்கம் உங்கள்மீது சந்தேகப்பட்டு எங்களை அணுகினால், நாங்கள் உங்களுடைய சகல நினைவுகளையும் பதிவு செய்து அவர்களிடம் தரவேண்டியிருக்கும், எங்களுக்கு வேறு வழி இல்லை.

அதுபோன்ற சந்தர்ப்பங்களில், உங்களுடைய நினைவுகளே உங்களுக்கு எதிராகச் சாட்சி சொல்லிவிடும், வசமாக மாட்டிக்கொள்வீர்கள், ஜாக்கிரதை.

எங்களுடைய சேவையைப் பயன்படுத்திப் பலன் அடைந்த சில வாடிக்கையாளர்களின் அனுபவம்:

* நான் கடந்த இருபத்தெட்டாம் தேதி வேலையிலிருந்து ஓய்வு பெற்றேன். அன்றிலிருந்து, நான் முதன்முதலாக வேலைக்குச் சேர்ந்த தினம்பற்றிய நினைவுகள் என்னை வருத்திக்கொண்டிருக்கின்றன. அவற்றை ‘திரும்பிப் போகலாம்’ இணைய தளத்தில் பதிவு செய்து மீண்டும் வாழ்ந்து பார்த்தேன், இப்போது சந்தோஷமாக எனது ஓய்வுக் காலத்தைக் கழிக்கிறேன், நன்றி – சேகர், சென்னை.

* எனக்குத் திருமணமாக நாற்பது ஆண்டுகள் கடந்துவிட்டன, ஒரு பையன், ஒரு பெண், மூன்று பேரன்கள், ஒரு பேத்தி என்று சந்தோஷமான வாழ்க்கை. ஆனால் இன்னும், என்னால் என்னுடைய முதல் காதலை மறக்கமுடியவில்லை.

அது காதல் இல்லை, வெறும் இனக் கவர்ச்சிதான் என்பது புரிகிறது. எதுவாயினும், ஒரு பெண் அதனை வெளிப்படையாகச் சொல்கிற சூழல் நம்முடைய சமூகத்தில் இல்லை.

இந்தச் சூழ்நிலையில், ‘திரும்பிப் போகலாம்’ இணைய தளம்தான் எனக்கு அந்த அபூர்வமான வாய்ப்பை வழங்கியது. என்னை முதன்முதலாகக் காதலித்த அந்த அவனை, மீண்டும் ஒருமுறை சந்தித்து, பேசி மகிழ்ந்தேன், நன்றி – பெயர் வெளியிட விரும்பவில்லை, திருவனந்தபுரம்.

* பத்தாம் வகுப்புவரை நான் நன்றாகதான் படித்துக்கொண்டிருந்தேன், அதன்பிறகுதான் கெட்ட நினைவுகளில் பாதை மாறிவிட்டேன், கல்லூரிப் படிப்பு, வேலை, சொந்தத் தொழில் என சகலத்திலும் தில்லுமுல்லுகள் செய்து முன்னுக்கு வந்த எனக்கு, ஆரம்ப காலப் புனித வாழ்க்கையை மறுபடி வாழ்ந்துபார்க்கும் சந்தர்ப்பத்தை ‘திரும்பிப் போகலாம்’ வழங்கியது, இதன்மூலம் என்னுடைய குற்றவுணர்ச்சி குறைகிறது, ’அடிப்படையில் நான் நல்லவன்தான், இந்தச் சமூகம்தான் என்னைக் கெட்டவனாக்கிவிட்டது’ என்று நம்பத் தொடங்கியிருக்கிறேன், நன்றி – பெயர் வெளியிட விரும்பவில்லை, மும்பை.

* காதலிக்கும்போது, அவர் நல்லவராகதான் இருந்தார், கல்யாணத்துக்குப்பிறகுதான் அவருடைய சுபாவம் மாறிவிட்டது, எதற்கெடுத்தாலும் திட்டு, சந்தேகம், என்னை மனைவியாக இல்லை, ஒரு மனுஷியாகக்கூட மதிப்பதில்லை, இப்படிப்பட்ட ஒருவரையா காதலித்தேன் என்கிற வேதனையில் மூழ்கியிருக்கிற நான், அவ்வப்போது எங்களுடைய பழைய, இனிய நினைவுகளைத் திரும்பவும் வாழ்ந்து பார்ப்பதற்கு இந்தத் தளம் உதவுகிறது, இதில் வரும் காதலரை வெட்டி, என்னுடைய நிஜக் கணவர்மீது ஒட்டிவிடமுடிந்தால் மிகவும் நன்றாக இருக்கும், அதற்கான தொழில்நுட்பம் வளரும்வரை, ‘திரும்பிப் போகலாம்’ இணைய தளம்தான் என்னுடைய தோழி, வழிகாட்டி, குரு, கடவுள் எல்லாமே, நன்றி – குங்குமா, சென்னை.

* பல ஆண்டுகளுக்குமுன்னால், நான் பள்ளியில் படித்த காலத்தில், திருக்குறள் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் போட்டியில் இரண்டாவது பரிசு பெற்றேன், அதன்பிறகு, இன்றுவரை எனக்கு வாழ்க்கையில் வேறு எந்தப் பரிசும் கிடைக்கவில்லை, பிறந்தநாள் பரிசுகள்கூட.

இந்த வேதனையை மறக்க, எனக்கு ‘திரும்பிப் போகலாம்’ தளம் உதவுகிறது, என்னுடைய அந்தப் பரிசு அனுபவத்தை இதுவரை நாற்பது, ஐம்பதுமுறை மீண்டும் கண் முன்னே வாழ்ந்து பார்த்திருக்கிறேன், ஒவ்வொருமுறை பரிசு வாங்கும்போதும், எனக்குள் தன்னம்பிக்கை பொங்குகிறது, நம்மால் இன்னும் நிறைய சாதிக்கமுடியும் என்கிற எண்ணம் உருவாகிறது, நன்றி – கணேசன், மதுரை

* என் மகன்கள் இருவரும் இப்போது அமெரிக்காவில் இருக்கிறார்கள், என்னதான் அவர்களுடன் அடிக்கடி தொலைபேசியில், இணைய அரட்டையில் பேசினாலும், அருகருகே உட்கார்ந்து மகிழ்வதுபோல் வருமா? இப்போதெல்லாம் அவர்களுடைய தினசரி நடவடிக்கை நினைவுகளை எங்களுடன் இணைத்து நாங்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறோம், மகன்களுடன் ஒரே வீட்டில் வசிப்பதுபோல் உணர்கிறோம், நன்றி – நரசிம்மன், சுமதி, தாம்பரம்

இது ஒரு சிறிய சாம்பிள்தான், இதுபோல் இன்னும் எண்ணற்ற அனுபவங்களை, பாராட்டுகளை எங்களுடைய இணைய தளத்தில் வாசிக்கலாம்.

எதிர்மறை விமர்சனங்கள்:

ஒருபக்கம் எங்களுக்குப் பாராட்டுகள் குவியும் அதே நேரத்தில், ’திரும்பிப் போகலாம்’ இணைய தளம் இயற்கைக்கு எதிரானது என்று பல எதிர்மறை விமர்சனங்களும் எழுந்துள்ளன. அவற்றுக்குப் பதில் விளக்கம் சொல்லவேண்டிய கடமை எங்களுக்கு உண்டு.

முதலாவதாக, ‘திரும்பிப் போகலாம்’ இணைய தளத்தைக் கடுமையாக விமர்சிக்கிறவர்கள் யாரும், இதன் சேவைகளைப் பயன்படுத்திப் பார்த்தவர்கள் இல்லை, சும்மா வெளியில் இருந்துகொண்டு இவர்கள் கூச்சல் போடுவதற்கு வேறு உள்நோக்கங்கள் இருக்கின்றன.

பழைய நினைவுகளை மனத்தில் மறுபடி வாழ்ந்து பார்க்காதவர்கள் அநேகமாக யாருமே இல்லை. அதையே நிஜத்தில் வாழ்ந்து பார்ப்பதற்கான ஒரு வாய்ப்பை நாங்கள் தருகிறோம், இதில் என்ன தவறு இருக்கமுடியும்?

தினந்தோறும் ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் எங்களுடைய தளத்தில் லட்சக்கணக்கான நினைவுகளைப் பதிவு செய்கிறார்கள், மறுபடி வாழ்ந்து பார்க்கிறார்கள், இத்தனை பேரின் ஆதரவு எங்களுக்குக் குவிவதால், பலருக்குப் பொறாமை, அவர்கள்தான் எங்களுடைய தளம் தவறானது என்று தொடர்ந்து பிரசாரம் செய்கிறார்கள்.

அவர்கள் எல்லோருக்கும் நாங்கள் சொல்ல விரும்புவது ஒன்றுதான், ஒரே ஒருமுறை எங்கள் தளத்துக்குள் வந்து பாருங்கள், ஏதேனும் ஒரு பழைய நினைவைப் பதிவு செய்து, மறுபடி வாழ்ந்து பாருங்கள், அதன்பிறகு நீங்கள் திரும்பிச் செல்லவேமாட்டீர்கள், அதற்கு நாங்கள் உத்திரவாதம்!

அறிமுகச் சலுகை:

இந்தத் தளத்துக்கு முதன்முறை வருகை தரும் உங்களுக்கு, ஒரு சிறப்புப் பரிசு. இரண்டு நிமிட நினைவு ஒன்றை மீண்டும் வாழ்ந்து பார்க்கும் அபூர்வமான அனுபவத்தை முற்றிலும் இலவசமாக வழங்குகிறோம்.

கீழே உள்ள பொத்தானை க்ளிக் செய்து, ’திரும்பிப் போகலாம்’ இணைய தளத்தில் உறுப்பினராகுங்கள், உங்களுடைய இரண்டு நிமிட அனுபவத்தைப் பதிவு செய்யுங்கள், அதனை மறுபடி இன்னொருமுறை வாழ்ந்து பாருங்கள்.

இந்த அனுபவம் உங்களுக்கு முழுத் திருப்தி அளிக்கும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இதை நேருக்கு நேர் அனுபவித்து நிச்சயபடுத்திக்கொண்டபின்னர், நீங்கள் எங்களுடைய முழுமையான சேவையைப் பணம் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம்.

ஒருவேளை உங்களுக்கு இதில் திருப்தி இல்லாவிட்டால், நாங்கள் உங்களை எந்தவிதத்திலும் வற்புறுத்தப்போவதில்லை, அந்த இரண்டு நிமிடங்களின் முடிவில் நீங்கள் உடனடியாக இந்தத் தளத்தை மூடிவிட்டு வெளியே சென்றுவிடலாம். அதன்பிறகு உங்களை எப்போதும் தொந்தரவு செய்வதில்லை என்று நாங்கள் உறுதியளிக்கிறோம்.

நன்றி, கீழே ‘க்ளிக்’குங்கள், வாழ்க்கையை மீண்டும் நல்லவிதமாக வாழுங்கள், அட்வான்ஸ் வாழ்த்துகள்!

***

என். சொக்கன் …
07 12 2010

ஆட்டோ நின்றது. மீட்டர் 22 ரூபாய் காட்டியது.

என்னிடம் (அபூர்வமாக) ஏழு பத்து ரூபாய் நோட்டுகள் இருந்தன. மூன்றை எடுத்துக் கொடுத்தேன்.

‘சில்லறை இல்லை சார்’ என்றார் டிரைவர். ‘ரெண்டு ரூபாய் இருக்கா, பாருங்களேன்.’

நான் பர்ஸிலும் பாக்கெட்டிலும் தேடினேன். ம்ஹூம். ஐம்பது காசுகூட இல்லை. ‘எங்கேயாவது சில்லறை கிடைக்குதா பாருங்க’ என்றேன் அவரிடம்.

அந்த நெடுஞ்சாலையில் சிறிய / நடுத்தரக் கடைகளே இல்லை. ’ஷாப்பர்ஸ் ஸ்டாப்’பினுள் நுழைந்து பத்து ரூபாய்க்குச் சில்லறை கேட்டால் சிரச்சேதம் செய்துவிடுவார்கள்.

இப்போது டிரைவர் தன்னுடைய பாக்கெட்டில் தேடினார். மூன்று ஒற்றை ரூபாய் நாணயங்கள்மட்டும் தட்டுப்பட்டன.

ரூ 22க்குப் பதிலாக ரூ 27 கொடுக்க எனக்கு மனம் இல்லை. அவர் நல்ல டிரைவர் போலிருக்கிறது. ஐந்து ரூபாய் கூடுதலாக எடுத்துக்கொள்ள அவருக்கும் மனம் இல்லை. இருவரும் மௌனமாக ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக்கொண்டிருந்தோம். Who will blink first?

கடைசியாக அவர்தான் வாய் திறந்தார். ‘பரவாயில்லை சார். அடுத்தவாட்டி பார்க்கும்போது ரெண்டு ரூபாய் கொடுங்க’ என்று பத்து ரூபாயைத் திருப்பிக் கொடுத்தார்.

அடுத்தவாட்டி? ஆயிரக்கணக்கான ஆட்டோக்கள் புழங்கும் இந்த பெங்களூருவில் இவரை நான் இன்னொருமுறை சந்திப்பதற்கான வாய்ப்புகள் / Probability கிட்டத்தட்ட பூஜ்ஜியம். ஆக, இந்தப் பத்து ரூபாயை நான் வாங்கிக்கொண்டால் அவர் எனக்கு 2 ரூ தானம் கொடுத்திருப்பதாகவே அர்த்தம்.

அப்போதாவது நான் மறுத்திருக்கலாம். எத்தனையோ ஆட்டோ டிரைவர்கள் அயோக்கியத்தனமாகக் காசு பிடுங்குகிறார்கள். மீட்டருக்குச் சூடு வைக்கிறார்கள். பயணிகளை மிரட்டி எக்ஸ்ட்ரா வாங்குகிறார்கள். இவர்களுக்கு மத்தியில் இவர் 2 ரூபாயை விட்டுத்தர நினைக்கிறார். அந்த நல்லெண்ணத்துக்குப் பரிசாக நான் 5 ரூபாய் கொடுத்திருக்கலாம். அது ஒரு பெரிய தொகை அல்ல.

ஆனால் இதே விஷயத்தை இன்னொரு கோணத்தில் பார்க்கும்போது, நானே எத்தனையோமுறை ஆட்டோ டிரைவர்களிடம் தெரிந்து / தெரியாமல் காசு இழந்திருக்கிறேன். அதற்குப் பதிலாக இப்போது 2 ரூபாய் குறைத்துக் கொடுத்தால் என்ன தப்பு?

தப்புதான். யாரிடமோ காசைத் தொலைத்துவிட்டு இவரிடம் 2 ரூபாய் பிடுங்கிக்கொள்வது என்ன நியாயம்? ராபின்ஹூட்கூடக் கெட்டவர்களிடம் திருடிதான் நல்லவர்களுக்குக் கொடுத்தான். நான் அதை ரிவர்ஸில் செய்வது அநியாயமில்லையா?

இதையெல்லாம் உள்ளே யோசித்தேனேதவிர கை அல்பத்தனமாக நீண்டு அந்தப் பத்து ரூபாயை வாங்கிக்கொண்டுவிட்டது. ஒரு நல்ல ஆட்டோ டிரைவரிடம் 2 ரூபாய் திருடிவிட்டேன் Sad smile

***

என். சொக்கன் …

02 12 2010


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,055 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

December 2010
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031