ரெண்டு ரூபாய்
Posted December 2, 2010
on:- In: (Auto)Biography | Auto Journey | நவீன அபத்தங்கள் | Bangalore | Characters | Cheating | Confusion | Corruption | Courtesy | Crisis Management | Customer Care | Customer Service | Customers | Honesty | Integrity | Learning | Life | Money | People | Price | Pulambal | Travel | Uncategorized
- 16 Comments
ஆட்டோ நின்றது. மீட்டர் 22 ரூபாய் காட்டியது.
என்னிடம் (அபூர்வமாக) ஏழு பத்து ரூபாய் நோட்டுகள் இருந்தன. மூன்றை எடுத்துக் கொடுத்தேன்.
‘சில்லறை இல்லை சார்’ என்றார் டிரைவர். ‘ரெண்டு ரூபாய் இருக்கா, பாருங்களேன்.’
நான் பர்ஸிலும் பாக்கெட்டிலும் தேடினேன். ம்ஹூம். ஐம்பது காசுகூட இல்லை. ‘எங்கேயாவது சில்லறை கிடைக்குதா பாருங்க’ என்றேன் அவரிடம்.
அந்த நெடுஞ்சாலையில் சிறிய / நடுத்தரக் கடைகளே இல்லை. ’ஷாப்பர்ஸ் ஸ்டாப்’பினுள் நுழைந்து பத்து ரூபாய்க்குச் சில்லறை கேட்டால் சிரச்சேதம் செய்துவிடுவார்கள்.
இப்போது டிரைவர் தன்னுடைய பாக்கெட்டில் தேடினார். மூன்று ஒற்றை ரூபாய் நாணயங்கள்மட்டும் தட்டுப்பட்டன.
ரூ 22க்குப் பதிலாக ரூ 27 கொடுக்க எனக்கு மனம் இல்லை. அவர் நல்ல டிரைவர் போலிருக்கிறது. ஐந்து ரூபாய் கூடுதலாக எடுத்துக்கொள்ள அவருக்கும் மனம் இல்லை. இருவரும் மௌனமாக ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக்கொண்டிருந்தோம். Who will blink first?
கடைசியாக அவர்தான் வாய் திறந்தார். ‘பரவாயில்லை சார். அடுத்தவாட்டி பார்க்கும்போது ரெண்டு ரூபாய் கொடுங்க’ என்று பத்து ரூபாயைத் திருப்பிக் கொடுத்தார்.
அடுத்தவாட்டி? ஆயிரக்கணக்கான ஆட்டோக்கள் புழங்கும் இந்த பெங்களூருவில் இவரை நான் இன்னொருமுறை சந்திப்பதற்கான வாய்ப்புகள் / Probability கிட்டத்தட்ட பூஜ்ஜியம். ஆக, இந்தப் பத்து ரூபாயை நான் வாங்கிக்கொண்டால் அவர் எனக்கு 2 ரூ தானம் கொடுத்திருப்பதாகவே அர்த்தம்.
அப்போதாவது நான் மறுத்திருக்கலாம். எத்தனையோ ஆட்டோ டிரைவர்கள் அயோக்கியத்தனமாகக் காசு பிடுங்குகிறார்கள். மீட்டருக்குச் சூடு வைக்கிறார்கள். பயணிகளை மிரட்டி எக்ஸ்ட்ரா வாங்குகிறார்கள். இவர்களுக்கு மத்தியில் இவர் 2 ரூபாயை விட்டுத்தர நினைக்கிறார். அந்த நல்லெண்ணத்துக்குப் பரிசாக நான் 5 ரூபாய் கொடுத்திருக்கலாம். அது ஒரு பெரிய தொகை அல்ல.
ஆனால் இதே விஷயத்தை இன்னொரு கோணத்தில் பார்க்கும்போது, நானே எத்தனையோமுறை ஆட்டோ டிரைவர்களிடம் தெரிந்து / தெரியாமல் காசு இழந்திருக்கிறேன். அதற்குப் பதிலாக இப்போது 2 ரூபாய் குறைத்துக் கொடுத்தால் என்ன தப்பு?
தப்புதான். யாரிடமோ காசைத் தொலைத்துவிட்டு இவரிடம் 2 ரூபாய் பிடுங்கிக்கொள்வது என்ன நியாயம்? ராபின்ஹூட்கூடக் கெட்டவர்களிடம் திருடிதான் நல்லவர்களுக்குக் கொடுத்தான். நான் அதை ரிவர்ஸில் செய்வது அநியாயமில்லையா?
இதையெல்லாம் உள்ளே யோசித்தேனேதவிர கை அல்பத்தனமாக நீண்டு அந்தப் பத்து ரூபாயை வாங்கிக்கொண்டுவிட்டது. ஒரு நல்ல ஆட்டோ டிரைவரிடம் 2 ரூபாய் திருடிவிட்டேன்
***
என். சொக்கன் …
02 12 2010
16 Responses to "ரெண்டு ரூபாய்"

ஐயோ, கஷ்டமாப் போச்சு சொக்கன்.


தப்புங்க .உழைப்பாளி காசு ஆகாது .நீங்க தாழ்ந்துடீங்களே!


ஓ! அந்த ஆட்டோ ட்ரைவரா? எனக்குத் தெரிந்தவர்தான். பாவம் புள்ளை குட்டிக்காரர். அந்த இரண்டு ரூபாயை என்னிடம் கொடுங்கள் நான் கொடுத்து விடுகிறேன்.


போன வாரம் பையன் ஸ்கூல் கிரவுண்டில் ரெண்டு ரூபாய் கிடப்பதை பார்த்தேன். எடுக்க கை போனது. பிறகு விட்டுவிட்டேன். எடுத்து என்ன செய்வதென்று சட்டென்று தோன்றவில்லை. ஸ்கூல் ஆபிஸில் ஒப்படைக்கலாம் என்றால் தவறவிட்ட குழந்தைக்கு அது போய்ச் சேராது என்று தெரியும். எடுத்து எங்கேயாவது உண்டியலில் கூட போடலாம். அல்லது ஏதாவது பிச்சைக்காரனுக்கு.
ஆனால் அது ஏதாவது ஒரு குழந்தைக்குக் கிடைக்கட்டும் என்று விட்டுவிட்டேன். கண்டெடுத்தது அவர்களுக்கு சந்தோஷமாக இருக்கும். அதிர்ஷ்டம் என ஃபீல் பண்ணுவார்கள். அதுவே ஒரு டீச்சருக்குக் கிடைத்தால் கருவேப்பிலைக்கு ஆச்சு.


ஒரு சின்ன மேட்டர கூட சுவாரசியமா சொல்றீங்க ..!!


இரண்டு ரூபாயுக்கு என்ன வாங்க முடியும் இப்போது என்று நினைத்திருப்பார் போல ?


pls donate that 2 rs to some poor on the auto driver’s behalf. Punyam to you as well


naanum banglore vaasi thaan. ingu vanda pudhithil aacharyamanamna vizhayamaga irunthathu. discount koduppathu pola than idhuvum. nammala mathiri sarasari manitharkalukku ivvalavu uruthal!!! aayiram kodi galil lanja oozhal pannubavargalukko …….. hmmm……


இப்படித் தான் எனக்கு ஒரு எட்டணா கிடைத்தது, அரசு பேருந்து
நடத்துனரிடமிருந்து!


எனக்கு, ஒரு ஆட்டோ-டிரைவர் சொன்ன கணக்கு இது….
நான் ஒரு தடவை ஆட்டோ-வில் பயணம் செய்த போது, மீட்டர் ரூ.32 .50
நான் ஆட்டோ-டிரைவருக்கு, ரூ.34 கொடுத்தேன். சரி, மீதி ஒரு ரூபாயாவது
திருப்பி கொடுப்பார் என்றெண்ணி கேட்டேன். ஆட்டோ-டிரைவர் சொன்னது,
“சார், ரூ.32 .50 ~= ரூ.33 , & ரூ.33 ~= ரூ.34 …..??!!.

1 | jmms
December 2, 2010 at 11:48 am
டிரைவரிடம் 2 ரூபாய் திருடிவிட்டேன் //
சரி பரவால்ல….
பலர் நேரத்தை திருடுறோம் அலுவலில்…
🙂