மனம் போன போக்கில்

Archive for January 1st, 2011

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

பொதுவாக இதுமாதிரி விசேஷ நாள்களில் நான் டிவி முன்னால் சிக்காமல் தப்பி ஓடிவிடுவேன். ஆனால் இன்றைக்கு எக்குத்தப்பாக மாட்டிக்கொண்டேன். இரண்டே நிகழ்ச்சிகள், அதுவும் தலா பத்து நிமிடங்கள்தான் பார்த்தேன், அவற்றில் பொங்கி வழிந்த போலித்தனம் டிவியைத் தூக்கிப் போட்டு உடைத்துவிடலாமா என்கிற ஆத்திரத்தை உண்டாக்கியது.

இதைப்பற்றி ஒரு நண்பரிடம் புலம்பிக்கொண்டிருந்தபோது, ‘கவலைப்படாதீங்க. உங்க காயத்துக்கு மருந்து போடறதுக்காகவே ஓர் இயல்பான பேட்டி நிகழ்ச்சியோட வீடியோ பதிவை அனுப்பிவைக்கறேன். என்சாய்!’ என்றார்.

(Image Courtesy: http://rajarasigan.blogspot.com/2009/11/jency-songs-in-ilayaraja-music.html)

அந்தப் பேட்டி, பிரபல பாடகி ‘ஜென்ஸி’யுடையது. எப்போதோ ஜெயா டிவியில் வந்தது. மிகச் சுமாரான ரெக்கார்டிங். இரைச்சல் தாங்கவில்லை. சில நிமிடங்களுக்குள் காது வலி. ஹெட்ஃபோனே கதற ஆரம்பித்துவிட்டது, சத்தத்தை மிகவும் குறைத்துவைத்து அவரைக் கிசுகிசுப்பு ரகசியம் பேசவைத்து ஒருவழியாகப் பேட்டியைக் கேட்டு முடித்தேன்.

இத்தனை தொழில்நுட்ப அவஸ்தைகளுக்கும் நடுவிலும், அந்தப் பேட்டி ஒரு முத்து. கொஞ்சமும் அலட்டல் இல்லாமல் இவ்வளவு இயல்பாக ஒருவர் பேசக் கேட்பது மிகவும் இதமாக இருந்தது. ஜென்ஸி பேசியது 90% மலையாளம் என்பதுகூட உறுத்தவே இல்லை.

ஒரே ஒரு குறை, பேட்டி கண்டவர் ஜென்ஸியைக் கோர்வையாகப் பேசவிட்டிருக்கலாம். ஓர் ஒழுங்கே இல்லாமல் இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சம் என்று தொடர்ந்து தாவிக்கொண்டே இருந்ததால் புதிதாகப் பார்க்கிறவர்களுக்கு அவரைப்பற்றிய ஒரு முழுமையான பிம்பம் கிடைத்திருக்காது.

ஏதோ என்னால் முடிந்தது, இந்தப் பேட்டியின்மூலம் தெரிந்துகொண்ட விஷயங்களை இங்கே ஒழுங்குபடுத்தித் தொகுத்துவைக்கிறேன். (அந்த வீடியோவைக் கொடுத்து உங்கள் காதுகளை ரணப்படுத்த விருப்பமில்லை. தைரியமிருந்தால் நீங்களே யூட்யூபில் தேடிப் பார்த்துக்கொள்ளுங்கள்!)

 • ஜென்ஸி அறிமுகமானது மலையாளத்தில். அவரது பக்கத்துவீட்டுக்காரர் இசையில் முதல் பாடல்.
 • அடுத்து மலையாளத்தில் இன்னும் சில பாடல்களைப் பாடியிருக்கிறார். யேசுதாஸ் அறிமுகம்.
 • ஒருமுறை இளையராஜா, யேசுதாஸ், கங்கை அமரன் (ஆச்சர்யமான கூட்டணி!) மூவரும் சபரிமலைக்குச் சென்றிருந்தபோது யேசுதாஸ் ராஜாவிடம் ஜென்ஸியைப்பற்றிச் சொல்லியிருக்கிறார். ஜென்ஸிக்கு ‘வாய்ஸ் டெஸ்ட்’ அழைப்பு வந்தது.
 • அந்தக் குரல் தேர்வின்போது ஜென்ஸி பாடியது ‘அன்னக்கிளி உன்னத் தேடுதே!’ பாடல்.
 • பாடி முடித்ததும் ’ராஜா சார் ஒண்ணுமே சொல்லலை’யாம். நேரடியாக முதல் பாட்டு ரெக்கார்டிங்குக்குக் கூப்பிட்டுவிட்டாராம். (பின்னர் ராஜா தனது மிகச் சிறந்த பாடல்களைப் பொறுக்கியெடுத்து ஜென்ஸிக்குக் கொடுத்த காலத்திலும், அவர் தன்னைப் பாராட்டியதே இல்லை என்பதில் ஜென்ஸிக்கு இன்னும் மனக்குறை இருக்கிறது. ‘அவருக்குக் கோபம் வராது. ஆனா நல்லாப் பாடியிருக்கே-ன்னும் சொல்லமாட்டார். நீயே இன்னொருவாட்டி கேட்டுப் பாரு, புரியும்’ன்னு சொல்லிடுவார்.’)
 • ஜென்ஸி பாடியதில் அவருக்கு மிகவும் பிடித்தது ‘காதல் ஓவியம்’. அப்புறம் ’என் வானிலே’ பாடலுக்கு முன்னால் வரும் ஆங்கில வசனங்களை(’நோ நோ நோ நோ, ஜஸ்ட் லிஸன்!)ப் பேச ரொம்பவும் வெட்கப்பட்டாராம்.
 • பதினெட்டு வயதுக்குள் ஜென்ஸி தமிழில் மிகப் பெரிய பாடகியாகிவிட்டார். அநேகமாக அவர் தொட்டதெல்லாம் ஹிட்.
 • அந்த நேரத்தில் அவருக்கு அரசாங்க வேலை (ம்யூசிக் டீச்சர்!) கிடைத்திருக்கிறது. போவதா, வேண்டாமா என்கிற குழப்பம்.
 • ஜென்ஸி குடும்பத்தில் எல்லோரும் கஷ்டப்பட்டு அரசாங்க வேலை வாங்கியவர்கள். இப்படி வலிய வரும் வாய்ப்பைத் தவறவிடக்கூடாது என்று அவர்கள் அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள். (’கால் காசானாலும் கவர்ன்மென்ட் காசு’க்கு இணையான மலையாளப் பழமொழி ஏதோ இருக்கிறதுபோல!)
 • ஒன்றும் புரியாத ஜென்ஸி ராஜாவிடம் ஆலோசனை கேட்டிருக்கிறார். அவர் ‘இந்த ஃபீல்ட்ல உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு, டீச்சர் வேலையெல்லாம் எதுக்கு?’ என்று கேட்டிருக்கிறார். ’அங்கே வரும் ஒரு மாதச் சம்பளத்தை இங்கே ஒரு பாட்டுப் பாடினால் வாங்கிவிடலாமே’ என்றும் சொல்லியிருக்கிறார்.
 • ’அந்த வயசில எனக்கு எது சரின்னு முடிவெடுக்கிற முதிர்ச்சி இல்லை. டீச்சர் வேலையில சேர்ந்துக்கலாம். அப்பப்போ ரெக்கார்டிங்ஸ் வரும்போது லீவ் எடுத்துட்டு இங்கே வந்து பாடலாம்ன்னு நினைச்சேன்.’
 • அரசாங்க வேலையில் சேர்ந்தபிறகும் ஜென்ஸி சில பாடல்கள் பாடியிருக்கிறார். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக வாய்ப்புகள் வருவது நின்றுபோய்விட்டது.
 • 23 வருடங்களுக்குப்பிறகு அவரது ஆனந்த விகடன் பேட்டி ஒன்றைப் படித்துவிட்டு இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன் ஜென்ஸியை அழைத்து மீண்டும் பாடவைத்திருக்கிறார் – ஸ்ரீகாந்த் தேவா இசையில் (எந்தப் படம், எந்தப் பாட்டு?)

இந்தப் பேட்டியில் நான் முக்கியமாகக் கவனித்த ஒன்று, ஜென்ஸி ஓர் அபூர்வமான வாய்ப்பை ஜஸ்ட் லைக் தட் இழந்திருக்கிறார். அவர்மட்டும் தமிழில் தொடர்ந்து பாடியிருந்தால் இன்னும் பெரிய உயரங்களுக்குச் சென்றிருக்கக்கூடும். அந்த ஆதங்கம் அவருக்கு லேசாக இருக்கிறது. ஆனால் அதை எண்ணி அவர் (இப்போதும்) புலம்புவதில்லை. ’நா(ஞா)ன் எடுத்த முடிவு தவறாகவே இருந்தாலும் சரி. அதன் பலனை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்’ என்கிற தொனி இருக்கிறது. இது ஓர் அபூர்வ குணம் இல்லையோ?

தலைப்புக் காரணம்: பேட்டியின் இடையில் ஓர் இடத்தில் ’ரசிகை’ என்று சொல்வதற்குப் பதிலாக ஜென்ஸி பயன்படுத்திய (‘நான் SPB சாரோட பெரிய ஆராதகி’) இந்த வார்த்தை எனக்கு மிகவும் பிடித்துப்போய்விட்டது. லவுட்டிக்கொண்டேன்!

***

என். சொக்கன் …

01 01 2011

Advertisements

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 526 other followers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

 • 457,514 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்

Tamilish

For தமிழ் Peopleதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

January 2011
M T W T F S S
« Dec   Feb »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
Advertisements