Archive for January 4th, 2011
கார்ட்டூன் சரித்திரம்
Posted January 4, 2011
on:- In: Books | History | Introduction | Reviews | Uncategorized
- 2 Comments
ஓர் அருமையான புத்தகம் படித்து (பார்த்து) முடித்தேன் – ஸ்ரீதர் (என்கிற பரணீதரன், என்கிற மெரீனா – இவரது இணையதளம்: http://marinabharani.com/) அவர்களின் ஆரம்ப கால அரசியல் கார்ட்டூன்களின் தொகுப்பு ‘ஸ்ரீதர் கார்ட்டூன்ஸ் பாகம் 1’.
ஆரம்பத்தில் இந்தப் புத்தகத்தை எந்தப் பெரிய எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் வாசிக்கத் தொடங்கினேன். அந்தக் காலத்தின் பதிவு, அப்போதைய ஓவிய பாணியை ரசிக்கலாம் என்பதுதான் முக்கியமான நோக்கம்.
ஆனால் பத்துப் பக்கங்களுக்குள் ஸ்ரீதர் என்னைச் சுண்டியிழுத்துக்கொண்டுவிட்டார். இது வெறும் கார்ட்டூன் தொகுப்பு அல்ல, அந்தக் காலகட்டத்தின் விஷுவல் சரித்திரப் பதிவு என்பது புரிந்தது.
1949 ஜனவரியில் தொடங்கி 1960 டிசம்பர் வரையிலான பன்னிரண்டு வருடங்களில் ஆனந்த விகடன் இதழில் ஸ்ரீதர் வரைந்த கார்ட்டூன்களின் தொகுப்பு இது. அதிக ஆர்ப்பாட்டமில்லாத எளிய கோட்டோவியங்கள் தமிழ்நாடு (அப்போது ‘சென்னை மாகாணம்’), கேரளா, பாகிஸ்தான், இலங்கை, ரஷ்யா, சீனா, அமெரிக்கா, பிரிட்டன், மற்ற உலக நாடுகள் என்று சகலத்தையும் தொட்டுச்செல்கின்றன. அந்தக் காலத்து முக்கியத் தலைவர்கள் எல்லோரையும் நுணுக்கமாகக் கவனித்துப் படம் வரைந்திருக்கிறார்.
கார்ட்டூன்களை மொத்தமாக அள்ளி இறைக்காமல், ஒவ்வொரு படமும் எப்போது எந்தச் சூழ்நிலையில் வரையப்பட்டது என்பதற்கான விளக்கமும் தந்திருப்பதுதான் இந்தப் புத்தகத்தின் முக்கியமான சிறப்பு. அதுதான் இதனை ஒரு சரித்திர ஆவணமாக மாற்றி அமைத்திருக்கிறது. இன்னும் சரியாகச் சொல்வதென்றால், ஐம்பதுகளின் உலகச் சரித்திரம், ஒரு தமிழர் / தமிழ்ப் பத்திரிகையின் பார்வையில்.
(Image Courtesy: http://new.vikatan.com/shopping/index.php?cid=149&pro_id=4&area=1)
ஸ்ரீதரின் முதல் கார்ட்டூன் பட்டாபி சீதாராமய்யா மொழிவாரி மாகாணப் பிரிவினைப் பூனையைக் கொஞ்சுவதில் ஆரம்பமாகிறது. பின்வரும் பெரும்பாலான கார்ட்டூன்களில் நேரு இருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாகக் காமராஜரும் ராஜாஜியும், எப்போதாவது அபூர்வமாகப் பெரியார், அண்ணா தென்படுகிறார்கள் (இந்தக் கார்ட்டூன்கள் வரையப்பட்டது 1960க்கு முன்பாக என்பதைக் கவனத்தில் வைக்கவும்).
(Image Courtesy: http://marinabharani.com/index.htm)
அமெரிக்கா, ரஷ்யாவின் ஜப்பான் ஆசை, பர்மாவில் கரேன்கள் கலகம், ரஷ்யாவில் ஸ்டாலின் அடாவடி, சென்னையா கொச்சியா என்று தடுமாறும் திருவாங்கூர் சமஸ்தானம், தொழிலாளர்களைப் பிடித்துச் செல்லப் பார்க்கும் ‘பூச்சாண்டி’களாகக் கம்யூனிஸ்ட்கள் (பின்னர் வரும் கார்ட்டூன்களில் இதே கம்யூனிஸ்ட்கள் தொடர்ச்சியாகக் கரடி உருவத்தில் காட்சிப்படுத்தப்படுகிறார்கள்), காஷ்மிர் விவகாரத்தில் இந்தியாவுடன் ஒத்துழைக்க மறுக்கும் பாகிஸ்தான், தேசிய சீனாவை இறுக்கிப் பிடிக்கும் பாம்பாக உருவகிக்கப்படும் சீன கம்யூனிஸ்ட் கட்சி (பின்னர் சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி வந்தபிறகும் அவர்கள் தொடர்ந்து வில்லன்களைப்போல்தான் சித்திரிக்கப்படுகிறார்கள்), அணுகுண்டு பயம், ஆந்திர மாநிலத்தின் ‘சென்னை எனக்குதான்’ பிடிவாதம், இந்தியர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்தும் சிலோன் சர்க்கார், அமெரிக்காவில் சகட்டுமேனிக்குக் குத்தித் தள்ளப்பட்ட ’ரஷ்ய உளவாளி’ முத்திரைகள், இந்தியா – பாகிஸ்தான் சேர்ந்து செயல்படாதா என்கிற ஏக்கம், உணவுப்பிரச்னை, அதைச் சரிசெய்ய முயன்று தோற்கும் உணவு மந்திரிகள், வரிச்சுமை, தபால் கட்டண உயர்வு, கைத்தறி நெசவாளர்களின் பிரச்னைகள், பொங்கல் பரிசாக ராஜாஜியின் ’கடன் ஒத்திவைப்புச் சட்டம்’, நேருவின் பஞ்ச சீலக் கொள்கை (ஏனோ ஸ்ரீதரின் பெரும்பாலான கார்ட்டூன்களில் நேரு ‘உர்’ரென்றுதான் இருக்கிறார், க்ளிஷே சமாதானப் புறாக்களைப் பறக்க விடும்போதுகூட!), இந்தித் திணிப்பு, பம்பாய் நகரம் எனக்கா உனக்கா என்று சண்டை போடும் குஜராத், மஹாராஷ்டிரா, ஐந்தாண்டுத் திட்டங்கள், விநோபா பாவேவின் ஸம்பத் தானம், பூ தானம், நேருவுக்கு ராஜாஜி கொடுத்த நெருக்கடிகள், ‘கோதாவரியைத் தெற்கே கொண்டுவருவோம்’ என்று அறிவித்துவிட்டு ஒற்றைக் காலில் தவம் இருக்கும் நவீன பகீரதராகக் காமராஜர், ‘உன்னை நம்பி எப்படிக் கடன் கொடுக்கறது? உன் மனைவி ரொம்பச் செலவுக்காரியாச்சே’ என்று நிதி அமைச்சர் டி. டி. கே.விடம் அங்கலாய்க்கும் உலக வங்கி (அந்த மனைவி, ’ஐந்தாண்டுத் திட்டம்’ ;)), 63 வயதில் ஆங்கிலம் கற்றுக்கொள்ளும் மா ஸே துங், ரயிலில் எதிரே உட்கார்ந்திருக்கும் பெண்களிடம் ‘தாகத்துக்குக் கொஞ்சம் தண்ணி கொடுங்க’ என்று கேட்கும் காமராஜர் (அந்தப் பெண்கள், ஆந்திராவும் கேரளாவும்!), பட்ஜெட்டை நேரு கையில் ஒப்படைத்துவிட்டு சென்னைக்கு நடையைக் கட்டும் டி. டி. கே., நேருவை ஓய்வெடுக்கச் சொல்லும் மற்ற தலைவர்கள், ஓய்வெடுக்கும் ’ரிஷி’ நேருவுக்குக் கடிதங்களைப் படித்துக் காட்டும் உதவியாளராக மகள் இந்திரா, திராவிட நாடு கோரிக்கை, ’இந்தியாவிலேயே சென்னையில்தான் சிறந்த நிர்வாகம் நடந்துவருகிறது’ என்று பாராட்டும் நேரு, ‘அவசியம் ஏற்பட்டால் காய்கறி வியாபாரத்தை சர்க்காரே ஏற்று நடத்தும்’ என்று அறிவிக்கும் சென்னை மாகாண அரசு, ராஜாஜியின் சுதந்தரக் கட்சிக் கொள்கைகள் ‘ஒண்ணுமே புரியலை’ என்று அறிவிக்கும் ம. பொ. சி., ‘எங்க கட்சியில சேர்ந்துக்கறீங்களா?’ என்று காமராஜரைச் சீண்டும் ராஜாஜி, காஷ்மீர் விஷயத்தில் மத்யஸ்தம் செய்துவைப்பதாகச் சொல்லிவிட்டு மௌனம் சாதிக்கும் எகிப்து அதிபர் நாஸர் (அந்த மூக்கு! அதை என்னாமாக வரைந்திருக்கிறார், நாஸர் என்றாலே மூக்கு விசேஷமோ?), ஸ்ட்ரைக் மனப்பான்மை …
நிஜமாகவே சொல்லி முடிப்பதற்குள் மூச்சு முட்டுகிறது. அந்தக் காலத்தில் இவ்வளவு பரந்துபட்ட விஷயங்களைத் தமிழ் கார்ட்டூன்கள் பதிவு செய்திருக்கின்றன என்பதே பெரிய அதிசயம். ஒவ்வொரு நாட்டின் அடையாளமாக அதன் அன்றைய ஆட்சியாளர் முகம் நுணுக்கமாகப் பதிவு செய்யப்படுகிறது, அப்புறம் சமாதான அன்னை, அணு ஆயுத அரக்கன், சமூக விரோதிப் பாம்புகள் ஆங்காங்கே வந்துபோகிறார்கள். இந்தக் கார்ட்டூன்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் உத்திகள் சில இப்போது சாதாரணமாகத் தோன்றினாலும், அன்றைய மொழியில், அப்போதைய கண்ணோட்டத்துடன் அவற்றைப் படிக்கும்போது ஒரு வித்தியாசமான காலப் பதிவு கிடைக்கிறது. சில கருத்துகள் ஒருதலைப்பட்சமாகத் தோன்றினாலும், அந்தக் காலகட்டத்தின் கண்ணாடியாக இந்தப் புத்தகத்தைப் பார்க்கலாம். சரித்திரப் பிரியர்கள் அவசியம் வாசிக்கவேண்டிய புத்தகம்.
இரண்டாம் பாகத்துக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
(ஸ்ரீதர் கார்ட்டூன்ஸ் பாகம் 1 – விகடன் பிரசுரம் – விலை ரூ 190)
***
என். சொக்கன் …
04 01 2011