மனம் போன போக்கில்

Archive for February 2011

கடைசியாக ஓர் ஆடியோ கேஸட்டை எப்போது பார்த்தீர்கள்?

எனக்கும் மறந்துவிட்டது. எஃப்.எம். ரேடியோ / சிடி / டிவிடி / எம்பி3 / யூட்யூபில் பாட்டுக் கேட்கும் பழக்கம் வந்தபிறகு, கேஸட்களையெல்லாம் யார் சீண்டுகிறார்கள்?

நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் இந்தத் தொழில்நுட்பங்களெல்லாம் அறிமுகமாகியிருக்கவில்லை. பாட்டுக் கேட்கவேண்டும் என்றால் ரேடியோ, அல்லது கேஸட்தான்.

அப்போது நான் அதிதீவிர கமலஹாசப் பிரியனாக இருந்தேன். அவருடைய படங்களை முதல் நாள் முதல் காட்சி பார்ப்பதற்காகமட்டுமே நான் பிறவியெடுத்திருப்பதாக நம்பினேன். அந்தப் படங்களை நினைத்த நேரத்தில் பார்க்கும்படி வீடியோ கேஸட்களை வாங்கிச் சேகரிக்கும் வசதி அப்போது எனக்கில்லை. ஆகவே ஆடியோ கேஸட்களை வாங்கிக் குவித்தேன். எங்கள் வீட்டு டேப் ரெக்கார்டரில் எந்நேரமும் கமலஹாசன்தான் பாடிக்கொண்டிருந்தார்.

கமல் பிரியர்கள் எல்லோரும் இளையராஜாவையும் ரசித்தாகவேண்டும் என்பது (அப்போதைய) கட்டாயம். ஆரம்பத்தில் ‘தலைவர் பாட்டு’ என்று கேஸட் உறையைப் பார்த்து வாங்கியவன் மெல்லமாக ராஜாவின் மற்ற பாடல்களையும் தேடிப் பிடித்து வாங்க ஆரம்பித்தேன். சில வருடங்களில் என் ‘தலைவர்’ மாறிவிட்டார். முழு நேர ராஜ பக்தனாகிவிட்டேன்.

ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ காலகட்டத்திலெல்லாம் நான் படித்ததைவிட பாட்டுக் கேட்டதுதான் அதிகம். நான் பிறப்பதற்கு ஒன்றிரண்டு வருடங்கள் முன்பாகத் தொடங்கி ராஜா இசையமைத்த சகலப் பாடல்களையும் சேகரித்துவிடவேண்டும் என்று பித்துப் பிடித்தவன்போல் திரிந்தேன்.

நல்லவேளையாக, அப்போது பல கேஸட் கடைக்காரர்களும் ராஜா ரசிகர்களாகவே இருந்தார்கள். அவர்களுடைய கடைகளின் பலவண்ண போர்ட்களில் இளையராஜாவைத்தவிர இன்னொரு முகத்தைப் பார்ப்பது அபூர்வம். நான் பதிவு செய்யச் செல்லும் பாடல்களின் பட்டியலைப் பார்த்தவுடனேயே, அவர்கள் இன்னும் இருபது முப்பது அபூர்வமான பாட்டுகளைச் சிபாரிசு செய்வார்கள். அதில் அவர்களுக்குக் கிடைக்கிற பைசா வருமானத்தைவிட, தனக்குப் பிடித்த பாட்டை இன்னொருவன் கேட்டு ரசிக்கவேண்டும் என்கிற திருப்திதான் அதிகமாக இருக்கும்.

ஆனால், நாங்கள் பதிவு செய்து பாட்டுக் கேட்கிற வேகத்தைவிட, ராஜாவின் இசையமைக்கிற வேகம் அதிகமாக இருந்தது. எவ்வளவு கேஸட்களை நிரப்பினாலும், அவரது புதுப்புது பாட்டுகள், எப்போதோ வெளிவந்து யாரும் கேட்காமல் தவறவிட்ட முத்துகள் என்று சிக்கிக்கொண்டே இருந்தன. (இப்போதும்தான்!)

நான் ப்ளஸ் டூ முடித்துக் கல்லூரிக்குச் சென்றபோது, டேப் ரெக்கார்டரைக் கையோடு கொண்டுசெல்லமுடியவில்லை. ஆனால் என்னுடைய ராஜா கலெக்‌ஷன் கேஸட்களைமட்டும் பதுக்கி எடுத்துச்சென்றேன். முடிந்தால் ஹாஸ்டலில் வேறு நண்பர்களுடைய  டேப் ரெக்கார்டரில் கேட்கலாம், இல்லாவிட்டால் காசு சேர்த்து ஒரு வாக்மேன் வாங்கலாம், அதுவும் முடியாவிட்டால் அந்தக் கேஸட்களையாவது வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கலாம் என்று உத்தேசம்.

ஆச்சர்யமான விஷயம், எங்கள் விடுதியில் என்னைப்போலவே வெறும் கேஸட்களோடு கிளம்பி வந்திருந்த ராஜாப் பிரியர்கள் நிறைய பேர் இருந்தார்கள். அபூர்வமாகச் சிலரிடம் டூ-இன்-ஒன் இருந்தது. அவர்களுடைய அறைகளில் எங்களுடைய கேஸட் கலெக்‌ஷன்ஸைக் கொட்டிவைத்தோம். தினம் தினம் வெவ்வேறு நண்பர்களின் தொகுப்பைக் கேட்பதில் இருக்கும் எதிர்பாராத ‘random’ ஆச்சர்ய அனுபவத்தை நெடுநாள் கழித்து நான் ஐபாட் வாங்கியபோதுதான் மீண்டும் அனுபவித்தேன்.

நாங்கள் கல்லூரிக்குள் நுழைந்தபோது, ராஜா வேகம் குறைந்திருந்தார். ரஹ்மான் அதிவேகமாக மேலே போய்க்கொண்டிருந்தார். (இந்த ’க்ளாஷ்’ பற்றி முன்பே இன்னொரு பதிவில் எழுதியிருந்தேன். இப்போது வேண்டாம்!)

அதேசமயம், எங்களுடைய ராஜ தாகம் இன்னும் தணிந்திருக்கவில்லை. சொல்லப்போனால் ராஜாவுக்குப் படங்கள் குறைந்துவிட்ட அந்தச் சூழ்நிலையில், அவரது பழைய பாடல்கள் அனைத்தையும் முழுவதுமாகச் சேகரித்துவிடவேண்டும், கேட்டுவிடவேண்டும் என்கிற வேகம்தான் அதிகரித்தது. ஆளாளுக்குத் தனித்துவமான பட்டியல்களைத் தயாரித்தோம், அவற்றைக் கேஸட்களில் பதிவு செய்ய ஆரம்பித்தோம்.

உதாரணமாக, ஒரு கேஸட்டில் ராஜாவுக்காக SPB பாடிய தனிப்பாடல்கள் சிலது, இன்னொன்றில் SPB, ஜானகி டூயட்ஸ், இன்னொன்றில் சோகப் பாட்டுகள்மட்டும், இன்னொன்றில் ஒரே படத்தில் ஒரே மெட்டில் இடம்பெற்ற இரட்டைப் பாடல்களின் தொகுப்பு (உ.ம்: ’மாங்குயிலே, பூங்குயிலே’), இன்னொன்றில் வசனத்தோடு தொடங்கும் பாடல்கள்மட்டும் (உ.ம்: ’ராஜா கைய வெச்சா’), இன்னொன்றில் இரண்டு நிமிடத்துக்குள் முடிந்துவிடும் துண்டுப் பாடல்கள், இன்னொன்றில் மேடைப் பாடல்கள், இன்னொன்றில் ரஜினிக்காக யேசுதாஸ் பாடிய பாடல்கள், இன்னொன்றில் கமலுக்காக வாலி எழுதிய பாடல்கள்… இப்படி இன்னும் ஏகப்பட்ட தொகுப்புகள் உருவாக்கினோம். சகலத்திலும் ராஜாமட்டும் பொதுவாக இருப்பார்.

இந்தத் தொகுப்புகளைக் கடைகளில் கொடுத்துப் பதிவு செய்வது இன்னொரு பெரிய அனுபவம். சில சமயம் காலி கேஸட் வாங்கமட்டுமே கையில் பணம் இருக்கும். அதன் பிளாஸ்டிக் உறையைக்கூடப் பிரிக்காமல் அப்பாவிடமிருந்து அடுத்த மணி ஆர்டர் வரக் காத்திருப்போம். மீண்டும் கையில் காசு கிடைத்து அதைக் கடையில் கொடுத்துக் காத்திருந்து வருகிற கேஸட்டைப் போட்டுக் கேட்கும்வரை வேறெதிலும் கவனம் ஓடாது.

அப்போதைய கேஸட்களில் இரண்டு வகை: 60, 90. ராஜாவின் பாடல்கள் சராசரியாக நான்கு முதல் நான்றரை நிமிடங்களுக்கு ஒலிப்பவை என்பதால் ‘60’ வகைக் கேஸட்களில் 12 முதல் 14 பாடல்கள்வரை பதிவு செய்யலாம், ‘90’ வகையில் 18 முதல் 20.

இதனால், நாங்கள் எப்போது பட்டியல் போட்டாலும் 20 பாடல்களை எழுதிவிடுவோம். அதில் எத்தனை பிடிக்கிறதோ அத்தனை பதிவு செய்யவேண்டும் என்று கடைக்காரரிடம் சொல்லிவிடுவோம்.

அபூர்வமாகச் சில சமயங்களில், நாங்கள் கேட்கும் பாட்டு அவரிடம் இருக்காது. அதற்குப் பதிலாகச் சொதப்பலாக இன்னொரு பாட்டைப் போட்டுவைப்பார். மொத்தத் தொகுப்பின் லட்சணமும் கெட்டுப்போய்விடும். அந்தக் கேஸட்டைக் கீழே போட்டு ஏறி மிதித்து உடைக்கவேண்டும் என்றெல்லாம் ஆத்திரம் வரும்.

ஆனால் பெரும்பாலும் ராஜா விஷயத்தில் அதுமாதிரி அசம்பாவிதங்கள் நடக்காது. கேஸட் பதிவாளர்களும் அவர்களுடைய ரசிகர்களாச்சே, நாங்கள் எந்த அடிப்படையில் பட்டியல் தயாரித்திருக்கிறோம் என்பதைப் புரிந்துகொண்டு சரியாக அதேபாணியில் நாங்கள் எதிர்பாராத ஒரு பாட்டை நுழைத்து இன்ப அதிர்ச்சி தருவார்கள்.

கடைசியாக அந்த ஃபில்லர் ம்யூசிக். ஒரு பக்கத்தில் எல்லாப் பாடல்களையும் பதிவு செய்தபிறகு மீதமிருக்கும் இடத்தில் ராஜாவின் How To Name It அல்லது Nothing But Wind தொகுப்புகளில் இருந்து சில பகுதிகளைச் சேர்ப்பார்கள். அது கேட்பதற்குச் சுகமாக இருந்தாலும், எந்த விநாடியில் மென்னியைப் பிடித்து நிறுத்துவார்களோ என்று இன்னொரு பக்கம் பயமாகவும் இருக்கும்.

நான் மூன்றாவது வருடம் படிக்கும்போது ஒரு வாக்மேன் வாங்கினேன். அதன்பிறகு, பாட்டுக் கேட்கும் பழக்கம் இன்னும் அதிகரித்தது. என்னுடைய கேஸட்கள் எதையும் தேயும்வரை விட்டதில்லை. ஒரே பாட்டை, அல்லது ஒரே இசையை, அல்லது ஒரே வரியை ரீவைண்ட் செய்து செய்து திரும்பக் கேட்பதால் மனப்பாடமே ஆகிவிடும். (இது அநேகமாக எல்லா ராஜா ரசிகர்களுக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன் – இப்போதும் எங்களால் பல நூறு ராஜா பாடல்களின் முதல் ஐந்து விநாடி இசைத் துணுக்கை வைத்தே அது எந்தப் பாட்டு என்று உடனே சொல்லிவிடமுடியும்! அப்போது கிடைக்கும் திருப்திக்கு ஈடு இணை லேது!)

கல்லூரியை முடித்து நான் வேலைக்குச் சென்றபோது என்னிடம் சுமார் 200 கேஸட்கள் இருந்தன. அநேகமாக வாரம் ஒன்று என்ற விகிதத்தில் பதிவு செய்திருக்கிறேன்!

என்னுடைய முதல் வேலை ஹைதராபாதில். வெப்பநிலை, சாப்பாடு, வேலை, சம்பளம் எல்லாமே எனக்கு ஓரளவு ஒத்துப்போய்விட்டது. ஆனால் இங்கே நான் ராஜாவின் பாடல்களைப் புதுசாகத் தொகுத்துப் பதிவு செய்யமுடியவில்லை. ஏற்கெனவே கைவசம் இருந்த கேஸட்களைதான் திரும்பத் திரும்பக் கேட்கவேண்டியிருந்தது.

ஒருநாள், நண்பர்களோடு ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்குச் சென்றிருந்தேன். அங்கே ஸ்பீக்கரில் ஒலித்துக்கொண்டிருந்த பாட்டை எங்கோ கேட்டமாதிரி உணர்வு. ஆனால் சரியாகப் பிடிக்கமுடியவில்லை.

சில விநாடிகள் கழித்து, பின்மண்டையில் யாரோ அடித்ததுபோல் நிமிர்ந்தேன். ’இந்தப் பாட்டு ‘காவியம் பாட வா, தென்றலே’ பாட்டுமாதிரி இருக்கே. யாரோ ராஜாவைக் காப்பியடிச்சுட்டாங்களோ?’

ம்ஹூம். இல்லை. அதுதான் ஒரிஜினல். தெலுங்கில் ராஜா போட்ட அந்த மெட்டைத் தமிழில் டப் செய்து நான் கேட்டிருக்கிறேன். இப்போது அதன் மூலப்பிரதியை SPB பாடக் கேட்டு சிலிர்த்துப்போனேன்.

அப்போதுதான் என் ட்யூப்லைட் மூளைக்கு ஒரு விஷயம் புரிந்தது. ‘ராஜாவோட தமிழ்ப் பாட்டுகள் இல்லாட்டி என்ன? இங்கே அவரோட தெலுங்கு கலெக்‌ஷன்ஸ் கிடைக்குமே! ஓடு ம்யூசிக் வேர்ல்டுக்கு!’

அடுத்த சில மாதங்களில் ராஜாவின் பெரும்பாலான தெலுங்குப் பாடல்களைச் சேகரித்துவிட்டேன். அதன்பிறகு, பெங்களூர் வந்தேன். ராஜாவின் கன்னடப் பாடல் கேஸட்களைச் சேகரித்தேன். கேரளாவில் சில தினங்களுக்குமேல் தங்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஆகவே அவரது மிகப் பிரபலமான மலையாளப் பாடல்களைமட்டுமே கேட்டிருக்கிறேன்.

இந்தப் பிறமொழிப் பாடல்களில் 60% தமிழ்ப் பாடல்களின் மறுபிரதிகள்தான் என்றாலும், சில அற்புதமான புது முத்துகள் கிடைத்தன. அதுவரை தமிழ்ப் பாடல்களைமட்டுமே கேட்டுக்கொண்டிருந்ததில் எப்பேர்ப்பட்ட புதையலைத் தவறவிட்டிருக்கிறோம் என்று புரிந்தது.

பெங்களூர் வந்து சில வருடங்கள் கழித்து, ஒரு வெளிநாட்டு நண்பர் உதவியால் ஐபாட் வாங்கினேன். அதில் பல ஆயிரம் எம்பி3 பாடல்களை நிரப்பிக்கொள்ள முடிந்தது, ஃபோனிலும் அதே வசதி இருந்தது, இணையத்திலும் பாடல்கள் கொட்டிக்கிடந்தன. அதனால் கொஞ்சம் கொஞ்சமாக என்னுடைய பிரியமான ராஜா கேஸட்களை ஜஸ்ட் லைக் தட் மறந்துவிட்டேன். அவற்றைப் பெட்டியில் போட்டுக் கட்டி மேலே வைத்ததுகூட என் மனைவிதான்.

போன வாரம், எங்களுடைய வீட்டில் இருந்த ரேடியோ கெட்டுப்போய்விட்டது. அதற்குப் பதிலாக வேறொன்று வாங்க நினைத்தபோது ‘டேப் ரெக்கார்டரும் இருக்கறமாதிரி வாங்கலாமே’ என்று யோசித்தோம்.

’டேப்பா? அது எதுக்கு?’ நான் ஆச்சர்யமாகக் கேட்டேன். ‘இப்பல்லாம் யார் கேஸட் வாங்கறாங்க?’

‘இனிமே புதுசா வாங்கணுமா? முன்னூத்தம்பது கேஸட் மேலே மூட்டை கட்டிப் போட்டிருக்கேன். அதையெல்லாம் கேட்டு முடிக்கறதுக்கே நாலஞ்சு வருஷம் ஆகுமே!’

‘கேஸட்ல இருக்கிற எல்லாப் பாட்டும் எம்பி3ல கிடைக்குது. ஏன் இந்த அவஸ்தை?’

‘அதுக்காக? வீட்ல இருக்கற கேஸட்களை வீணடிக்கணுமா? கேட்டா என்ன தப்பு?’

நியாயம்தான். பிரபலமான ஓர் எலக்ட்ரானிக்ஸ் கடைக்குச் சென்று ’ஒரு கேஸட் ப்ளேயர் வேண்டும்’ என்று கேட்டேன். ‘அதிலேயே ரேடியோ, சிடி வசதியும் இருந்தா நல்லது!’

‘ரேடியோ, சிடி புரியுது சார். அதென்ன கேஸட்?’ என்றான் அவன்.

அந்த விநாடியில், நான் ஒரு குகை மனிதனைப்போல் உணர்ந்தேன். மேலே மூட்டைகட்டிப் போடப்பட்டது என்னுடைய கேஸட் கலெக்‌ஷன்மட்டுமல்ல. கேஸட்டில் பாட்டுக் கேட்பது என்கிற பழக்கமும்தான். இந்தத் தலைமுறையில் எல்லோருக்கும் ‘கேஸட்’ என்கிற வார்த்தையே அந்நியமாகிவிட்டது!

ஆனாலும் நான் விடவில்லை. இன்னும் நான்கைந்து கடைகளில் தேடி ஒரு டேப் ரெக்கார்டர் வாங்கிவிட்டேன். சில வருடங்களாக மேலே சும்மாக் கிடந்த கேஸட்களை ஒவ்வொன்றாக எடுத்துக் கேட்க ஆரம்பித்திருக்கிறேன்.

ஆச்சர்யமான விஷயம், அந்தக் கேஸட்கள் ஒவ்வொன்றிலும் எந்தப் பாட்டுக்குப்பிறகு எந்தப் பாட்டு வரும் என்பதுகூட எனக்கு அப்படியே நினைவிருக்கிறது. அந்த ஞாபகத்தைமட்டும் பத்திரமாக வைத்துக்கொண்டு கேஸட்களைச் சுத்தமாக மறந்துவிட என்னால் எப்படி முடிந்தது?

***

என். சொக்கன் …

02 02 2011


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 620,786 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

February 2011
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28