மனம் போன போக்கில்

கேஸட்

Posted on: February 2, 2011

கடைசியாக ஓர் ஆடியோ கேஸட்டை எப்போது பார்த்தீர்கள்?

எனக்கும் மறந்துவிட்டது. எஃப்.எம். ரேடியோ / சிடி / டிவிடி / எம்பி3 / யூட்யூபில் பாட்டுக் கேட்கும் பழக்கம் வந்தபிறகு, கேஸட்களையெல்லாம் யார் சீண்டுகிறார்கள்?

நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் இந்தத் தொழில்நுட்பங்களெல்லாம் அறிமுகமாகியிருக்கவில்லை. பாட்டுக் கேட்கவேண்டும் என்றால் ரேடியோ, அல்லது கேஸட்தான்.

அப்போது நான் அதிதீவிர கமலஹாசப் பிரியனாக இருந்தேன். அவருடைய படங்களை முதல் நாள் முதல் காட்சி பார்ப்பதற்காகமட்டுமே நான் பிறவியெடுத்திருப்பதாக நம்பினேன். அந்தப் படங்களை நினைத்த நேரத்தில் பார்க்கும்படி வீடியோ கேஸட்களை வாங்கிச் சேகரிக்கும் வசதி அப்போது எனக்கில்லை. ஆகவே ஆடியோ கேஸட்களை வாங்கிக் குவித்தேன். எங்கள் வீட்டு டேப் ரெக்கார்டரில் எந்நேரமும் கமலஹாசன்தான் பாடிக்கொண்டிருந்தார்.

கமல் பிரியர்கள் எல்லோரும் இளையராஜாவையும் ரசித்தாகவேண்டும் என்பது (அப்போதைய) கட்டாயம். ஆரம்பத்தில் ‘தலைவர் பாட்டு’ என்று கேஸட் உறையைப் பார்த்து வாங்கியவன் மெல்லமாக ராஜாவின் மற்ற பாடல்களையும் தேடிப் பிடித்து வாங்க ஆரம்பித்தேன். சில வருடங்களில் என் ‘தலைவர்’ மாறிவிட்டார். முழு நேர ராஜ பக்தனாகிவிட்டேன்.

ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ காலகட்டத்திலெல்லாம் நான் படித்ததைவிட பாட்டுக் கேட்டதுதான் அதிகம். நான் பிறப்பதற்கு ஒன்றிரண்டு வருடங்கள் முன்பாகத் தொடங்கி ராஜா இசையமைத்த சகலப் பாடல்களையும் சேகரித்துவிடவேண்டும் என்று பித்துப் பிடித்தவன்போல் திரிந்தேன்.

நல்லவேளையாக, அப்போது பல கேஸட் கடைக்காரர்களும் ராஜா ரசிகர்களாகவே இருந்தார்கள். அவர்களுடைய கடைகளின் பலவண்ண போர்ட்களில் இளையராஜாவைத்தவிர இன்னொரு முகத்தைப் பார்ப்பது அபூர்வம். நான் பதிவு செய்யச் செல்லும் பாடல்களின் பட்டியலைப் பார்த்தவுடனேயே, அவர்கள் இன்னும் இருபது முப்பது அபூர்வமான பாட்டுகளைச் சிபாரிசு செய்வார்கள். அதில் அவர்களுக்குக் கிடைக்கிற பைசா வருமானத்தைவிட, தனக்குப் பிடித்த பாட்டை இன்னொருவன் கேட்டு ரசிக்கவேண்டும் என்கிற திருப்திதான் அதிகமாக இருக்கும்.

ஆனால், நாங்கள் பதிவு செய்து பாட்டுக் கேட்கிற வேகத்தைவிட, ராஜாவின் இசையமைக்கிற வேகம் அதிகமாக இருந்தது. எவ்வளவு கேஸட்களை நிரப்பினாலும், அவரது புதுப்புது பாட்டுகள், எப்போதோ வெளிவந்து யாரும் கேட்காமல் தவறவிட்ட முத்துகள் என்று சிக்கிக்கொண்டே இருந்தன. (இப்போதும்தான்!)

நான் ப்ளஸ் டூ முடித்துக் கல்லூரிக்குச் சென்றபோது, டேப் ரெக்கார்டரைக் கையோடு கொண்டுசெல்லமுடியவில்லை. ஆனால் என்னுடைய ராஜா கலெக்‌ஷன் கேஸட்களைமட்டும் பதுக்கி எடுத்துச்சென்றேன். முடிந்தால் ஹாஸ்டலில் வேறு நண்பர்களுடைய  டேப் ரெக்கார்டரில் கேட்கலாம், இல்லாவிட்டால் காசு சேர்த்து ஒரு வாக்மேன் வாங்கலாம், அதுவும் முடியாவிட்டால் அந்தக் கேஸட்களையாவது வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கலாம் என்று உத்தேசம்.

ஆச்சர்யமான விஷயம், எங்கள் விடுதியில் என்னைப்போலவே வெறும் கேஸட்களோடு கிளம்பி வந்திருந்த ராஜாப் பிரியர்கள் நிறைய பேர் இருந்தார்கள். அபூர்வமாகச் சிலரிடம் டூ-இன்-ஒன் இருந்தது. அவர்களுடைய அறைகளில் எங்களுடைய கேஸட் கலெக்‌ஷன்ஸைக் கொட்டிவைத்தோம். தினம் தினம் வெவ்வேறு நண்பர்களின் தொகுப்பைக் கேட்பதில் இருக்கும் எதிர்பாராத ‘random’ ஆச்சர்ய அனுபவத்தை நெடுநாள் கழித்து நான் ஐபாட் வாங்கியபோதுதான் மீண்டும் அனுபவித்தேன்.

நாங்கள் கல்லூரிக்குள் நுழைந்தபோது, ராஜா வேகம் குறைந்திருந்தார். ரஹ்மான் அதிவேகமாக மேலே போய்க்கொண்டிருந்தார். (இந்த ’க்ளாஷ்’ பற்றி முன்பே இன்னொரு பதிவில் எழுதியிருந்தேன். இப்போது வேண்டாம்!)

அதேசமயம், எங்களுடைய ராஜ தாகம் இன்னும் தணிந்திருக்கவில்லை. சொல்லப்போனால் ராஜாவுக்குப் படங்கள் குறைந்துவிட்ட அந்தச் சூழ்நிலையில், அவரது பழைய பாடல்கள் அனைத்தையும் முழுவதுமாகச் சேகரித்துவிடவேண்டும், கேட்டுவிடவேண்டும் என்கிற வேகம்தான் அதிகரித்தது. ஆளாளுக்குத் தனித்துவமான பட்டியல்களைத் தயாரித்தோம், அவற்றைக் கேஸட்களில் பதிவு செய்ய ஆரம்பித்தோம்.

உதாரணமாக, ஒரு கேஸட்டில் ராஜாவுக்காக SPB பாடிய தனிப்பாடல்கள் சிலது, இன்னொன்றில் SPB, ஜானகி டூயட்ஸ், இன்னொன்றில் சோகப் பாட்டுகள்மட்டும், இன்னொன்றில் ஒரே படத்தில் ஒரே மெட்டில் இடம்பெற்ற இரட்டைப் பாடல்களின் தொகுப்பு (உ.ம்: ’மாங்குயிலே, பூங்குயிலே’), இன்னொன்றில் வசனத்தோடு தொடங்கும் பாடல்கள்மட்டும் (உ.ம்: ’ராஜா கைய வெச்சா’), இன்னொன்றில் இரண்டு நிமிடத்துக்குள் முடிந்துவிடும் துண்டுப் பாடல்கள், இன்னொன்றில் மேடைப் பாடல்கள், இன்னொன்றில் ரஜினிக்காக யேசுதாஸ் பாடிய பாடல்கள், இன்னொன்றில் கமலுக்காக வாலி எழுதிய பாடல்கள்… இப்படி இன்னும் ஏகப்பட்ட தொகுப்புகள் உருவாக்கினோம். சகலத்திலும் ராஜாமட்டும் பொதுவாக இருப்பார்.

இந்தத் தொகுப்புகளைக் கடைகளில் கொடுத்துப் பதிவு செய்வது இன்னொரு பெரிய அனுபவம். சில சமயம் காலி கேஸட் வாங்கமட்டுமே கையில் பணம் இருக்கும். அதன் பிளாஸ்டிக் உறையைக்கூடப் பிரிக்காமல் அப்பாவிடமிருந்து அடுத்த மணி ஆர்டர் வரக் காத்திருப்போம். மீண்டும் கையில் காசு கிடைத்து அதைக் கடையில் கொடுத்துக் காத்திருந்து வருகிற கேஸட்டைப் போட்டுக் கேட்கும்வரை வேறெதிலும் கவனம் ஓடாது.

அப்போதைய கேஸட்களில் இரண்டு வகை: 60, 90. ராஜாவின் பாடல்கள் சராசரியாக நான்கு முதல் நான்றரை நிமிடங்களுக்கு ஒலிப்பவை என்பதால் ‘60’ வகைக் கேஸட்களில் 12 முதல் 14 பாடல்கள்வரை பதிவு செய்யலாம், ‘90’ வகையில் 18 முதல் 20.

இதனால், நாங்கள் எப்போது பட்டியல் போட்டாலும் 20 பாடல்களை எழுதிவிடுவோம். அதில் எத்தனை பிடிக்கிறதோ அத்தனை பதிவு செய்யவேண்டும் என்று கடைக்காரரிடம் சொல்லிவிடுவோம்.

அபூர்வமாகச் சில சமயங்களில், நாங்கள் கேட்கும் பாட்டு அவரிடம் இருக்காது. அதற்குப் பதிலாகச் சொதப்பலாக இன்னொரு பாட்டைப் போட்டுவைப்பார். மொத்தத் தொகுப்பின் லட்சணமும் கெட்டுப்போய்விடும். அந்தக் கேஸட்டைக் கீழே போட்டு ஏறி மிதித்து உடைக்கவேண்டும் என்றெல்லாம் ஆத்திரம் வரும்.

ஆனால் பெரும்பாலும் ராஜா விஷயத்தில் அதுமாதிரி அசம்பாவிதங்கள் நடக்காது. கேஸட் பதிவாளர்களும் அவர்களுடைய ரசிகர்களாச்சே, நாங்கள் எந்த அடிப்படையில் பட்டியல் தயாரித்திருக்கிறோம் என்பதைப் புரிந்துகொண்டு சரியாக அதேபாணியில் நாங்கள் எதிர்பாராத ஒரு பாட்டை நுழைத்து இன்ப அதிர்ச்சி தருவார்கள்.

கடைசியாக அந்த ஃபில்லர் ம்யூசிக். ஒரு பக்கத்தில் எல்லாப் பாடல்களையும் பதிவு செய்தபிறகு மீதமிருக்கும் இடத்தில் ராஜாவின் How To Name It அல்லது Nothing But Wind தொகுப்புகளில் இருந்து சில பகுதிகளைச் சேர்ப்பார்கள். அது கேட்பதற்குச் சுகமாக இருந்தாலும், எந்த விநாடியில் மென்னியைப் பிடித்து நிறுத்துவார்களோ என்று இன்னொரு பக்கம் பயமாகவும் இருக்கும்.

நான் மூன்றாவது வருடம் படிக்கும்போது ஒரு வாக்மேன் வாங்கினேன். அதன்பிறகு, பாட்டுக் கேட்கும் பழக்கம் இன்னும் அதிகரித்தது. என்னுடைய கேஸட்கள் எதையும் தேயும்வரை விட்டதில்லை. ஒரே பாட்டை, அல்லது ஒரே இசையை, அல்லது ஒரே வரியை ரீவைண்ட் செய்து செய்து திரும்பக் கேட்பதால் மனப்பாடமே ஆகிவிடும். (இது அநேகமாக எல்லா ராஜா ரசிகர்களுக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன் – இப்போதும் எங்களால் பல நூறு ராஜா பாடல்களின் முதல் ஐந்து விநாடி இசைத் துணுக்கை வைத்தே அது எந்தப் பாட்டு என்று உடனே சொல்லிவிடமுடியும்! அப்போது கிடைக்கும் திருப்திக்கு ஈடு இணை லேது!)

கல்லூரியை முடித்து நான் வேலைக்குச் சென்றபோது என்னிடம் சுமார் 200 கேஸட்கள் இருந்தன. அநேகமாக வாரம் ஒன்று என்ற விகிதத்தில் பதிவு செய்திருக்கிறேன்!

என்னுடைய முதல் வேலை ஹைதராபாதில். வெப்பநிலை, சாப்பாடு, வேலை, சம்பளம் எல்லாமே எனக்கு ஓரளவு ஒத்துப்போய்விட்டது. ஆனால் இங்கே நான் ராஜாவின் பாடல்களைப் புதுசாகத் தொகுத்துப் பதிவு செய்யமுடியவில்லை. ஏற்கெனவே கைவசம் இருந்த கேஸட்களைதான் திரும்பத் திரும்பக் கேட்கவேண்டியிருந்தது.

ஒருநாள், நண்பர்களோடு ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்குச் சென்றிருந்தேன். அங்கே ஸ்பீக்கரில் ஒலித்துக்கொண்டிருந்த பாட்டை எங்கோ கேட்டமாதிரி உணர்வு. ஆனால் சரியாகப் பிடிக்கமுடியவில்லை.

சில விநாடிகள் கழித்து, பின்மண்டையில் யாரோ அடித்ததுபோல் நிமிர்ந்தேன். ’இந்தப் பாட்டு ‘காவியம் பாட வா, தென்றலே’ பாட்டுமாதிரி இருக்கே. யாரோ ராஜாவைக் காப்பியடிச்சுட்டாங்களோ?’

ம்ஹூம். இல்லை. அதுதான் ஒரிஜினல். தெலுங்கில் ராஜா போட்ட அந்த மெட்டைத் தமிழில் டப் செய்து நான் கேட்டிருக்கிறேன். இப்போது அதன் மூலப்பிரதியை SPB பாடக் கேட்டு சிலிர்த்துப்போனேன்.

அப்போதுதான் என் ட்யூப்லைட் மூளைக்கு ஒரு விஷயம் புரிந்தது. ‘ராஜாவோட தமிழ்ப் பாட்டுகள் இல்லாட்டி என்ன? இங்கே அவரோட தெலுங்கு கலெக்‌ஷன்ஸ் கிடைக்குமே! ஓடு ம்யூசிக் வேர்ல்டுக்கு!’

அடுத்த சில மாதங்களில் ராஜாவின் பெரும்பாலான தெலுங்குப் பாடல்களைச் சேகரித்துவிட்டேன். அதன்பிறகு, பெங்களூர் வந்தேன். ராஜாவின் கன்னடப் பாடல் கேஸட்களைச் சேகரித்தேன். கேரளாவில் சில தினங்களுக்குமேல் தங்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஆகவே அவரது மிகப் பிரபலமான மலையாளப் பாடல்களைமட்டுமே கேட்டிருக்கிறேன்.

இந்தப் பிறமொழிப் பாடல்களில் 60% தமிழ்ப் பாடல்களின் மறுபிரதிகள்தான் என்றாலும், சில அற்புதமான புது முத்துகள் கிடைத்தன. அதுவரை தமிழ்ப் பாடல்களைமட்டுமே கேட்டுக்கொண்டிருந்ததில் எப்பேர்ப்பட்ட புதையலைத் தவறவிட்டிருக்கிறோம் என்று புரிந்தது.

பெங்களூர் வந்து சில வருடங்கள் கழித்து, ஒரு வெளிநாட்டு நண்பர் உதவியால் ஐபாட் வாங்கினேன். அதில் பல ஆயிரம் எம்பி3 பாடல்களை நிரப்பிக்கொள்ள முடிந்தது, ஃபோனிலும் அதே வசதி இருந்தது, இணையத்திலும் பாடல்கள் கொட்டிக்கிடந்தன. அதனால் கொஞ்சம் கொஞ்சமாக என்னுடைய பிரியமான ராஜா கேஸட்களை ஜஸ்ட் லைக் தட் மறந்துவிட்டேன். அவற்றைப் பெட்டியில் போட்டுக் கட்டி மேலே வைத்ததுகூட என் மனைவிதான்.

போன வாரம், எங்களுடைய வீட்டில் இருந்த ரேடியோ கெட்டுப்போய்விட்டது. அதற்குப் பதிலாக வேறொன்று வாங்க நினைத்தபோது ‘டேப் ரெக்கார்டரும் இருக்கறமாதிரி வாங்கலாமே’ என்று யோசித்தோம்.

’டேப்பா? அது எதுக்கு?’ நான் ஆச்சர்யமாகக் கேட்டேன். ‘இப்பல்லாம் யார் கேஸட் வாங்கறாங்க?’

‘இனிமே புதுசா வாங்கணுமா? முன்னூத்தம்பது கேஸட் மேலே மூட்டை கட்டிப் போட்டிருக்கேன். அதையெல்லாம் கேட்டு முடிக்கறதுக்கே நாலஞ்சு வருஷம் ஆகுமே!’

‘கேஸட்ல இருக்கிற எல்லாப் பாட்டும் எம்பி3ல கிடைக்குது. ஏன் இந்த அவஸ்தை?’

‘அதுக்காக? வீட்ல இருக்கற கேஸட்களை வீணடிக்கணுமா? கேட்டா என்ன தப்பு?’

நியாயம்தான். பிரபலமான ஓர் எலக்ட்ரானிக்ஸ் கடைக்குச் சென்று ’ஒரு கேஸட் ப்ளேயர் வேண்டும்’ என்று கேட்டேன். ‘அதிலேயே ரேடியோ, சிடி வசதியும் இருந்தா நல்லது!’

‘ரேடியோ, சிடி புரியுது சார். அதென்ன கேஸட்?’ என்றான் அவன்.

அந்த விநாடியில், நான் ஒரு குகை மனிதனைப்போல் உணர்ந்தேன். மேலே மூட்டைகட்டிப் போடப்பட்டது என்னுடைய கேஸட் கலெக்‌ஷன்மட்டுமல்ல. கேஸட்டில் பாட்டுக் கேட்பது என்கிற பழக்கமும்தான். இந்தத் தலைமுறையில் எல்லோருக்கும் ‘கேஸட்’ என்கிற வார்த்தையே அந்நியமாகிவிட்டது!

ஆனாலும் நான் விடவில்லை. இன்னும் நான்கைந்து கடைகளில் தேடி ஒரு டேப் ரெக்கார்டர் வாங்கிவிட்டேன். சில வருடங்களாக மேலே சும்மாக் கிடந்த கேஸட்களை ஒவ்வொன்றாக எடுத்துக் கேட்க ஆரம்பித்திருக்கிறேன்.

ஆச்சர்யமான விஷயம், அந்தக் கேஸட்கள் ஒவ்வொன்றிலும் எந்தப் பாட்டுக்குப்பிறகு எந்தப் பாட்டு வரும் என்பதுகூட எனக்கு அப்படியே நினைவிருக்கிறது. அந்த ஞாபகத்தைமட்டும் பத்திரமாக வைத்துக்கொண்டு கேஸட்களைச் சுத்தமாக மறந்துவிட என்னால் எப்படி முடிந்தது?

***

என். சொக்கன் …

02 02 2011

36 Responses to "கேஸட்"

பாஸ், ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. என் அனுபவமும் கிட்டத்தட்ட அப்படியே தான். சென்னையில் பர்மா பஜாரில் தெரிந்த பாய் கடையில் சொல்லி வைத்து சோனி அல்லது TDK கேசட் (பெரும்பாலும் C90 கிடைக்காவிட்டால் C60). நீங்க சொன்ன பட்டியல்களுடன் (உங்க அளவு ரேஞ் இல்லை) கர்நாடக சங்கீதம் கொஞ்சம் பரிச்சயம் என்பதால் (அப்பா, அம்மாவை ஐஸ் வைக்க) ராகங்களின் அடிப்படையில் நிறைய கேசட்கள் சேமித்ததும் நடந்தது.

அனுஜன்யா

சொக்கன்,

பழச ஞாபகப் படுத்திட்டீங்க… இன்னிக்கி சாயங்கலம் போய் ஏதாவது ஒரு கேஸட்ட எடுத்துக் கேக்கப்போறேன் 🙂

என்னடா கேசட்டை வெச்சுல்லாம் சொக்கன் ஜல்லியடிக்க வந்துட்டருன்னு படிக்க ஆரம்பிச்சேன்…. கிட்டத்தட்ட ஒரு பதினைந்து வருட பயணத்திற்கு என்னை மாற்றி மாற்றி அழைத்துச் சென்றது இக்கட்டுரை. உங்கள் ஒவ்வொரு அனுபவத்தையும் ஒட்டி எனக்கும் ஒத்த அனுபவம் உள்ளது. தனிப் பதிவுதான் வரைய வேண்டும்…

நாஸ்டால்ஜியா ஆரம்பிச்சாச்சா? நல்லது. முன்னேற வேணாமா நாமும் 🙂

உங்களுக்கு வாய்த்த கேஸட் கடைக்காரர் நல்லவர் போலிருக்கிறது. ஏ சைடில் உற்சாகமான பாட்டு, பி சைடில் சோகமான பாட்டுன்னு லிஸ்ட் எழுதிக்கொடுத்தா, அவர் வசதிக்கு ராஜா கைய வச்சா முடிந்தவுடன் உன்ன நினைச்சேன்னு சோகமாக்கும் ஆள்தான் எனக்கு வாய்த்தவர்.

இதில் எக்கோ எஃபக்ட், ஹை சவுண்ட் எஃபக்ட், ஸ்டீரியோஃபோனிக் எஃபக்ட் (இது என்னன்னு இன்னிவரைக்கும் எனக்குத் தெரியவில்லை) அப்படின்னு கொத்து பரோட்டா போட்டு, அதை நம்ம டெல்லி செட்டில் போட்டால், எஸ் பி பியும் தெருப்பிச்சைக்காரனுக்குக் ஒரே குரலாக சமத்துவ சமுதாயம் ஓங்கும்!

சரி சரி.. 2011க்கு வரலாமா?

ஹஹ்ஹஹ்ஹா… நன்று. கேசட் என்று ஒரு வார்த்தை போட்டுவிட்டு, பின் ராஜ(னின்)வீதியில் ஒரு பெரிய உலாவே சென்று விட்டு, உங்கள் வீட்டுப் பரணில் முடித்துவிட்டீர்கள். போனவாரம் நானும் ஒரு Player வாங்கினேன். ஆனால் நீங்கள் சொல்வது போல இங்கே (சென்னையில்) கேசட் இன்னும் அன்னியமாகிவிடவில்லை. நான் சென்ற கடையில்(Sony) CD (Audio/MP3)/USB/Audio Cassette காம்பினேஷனில் ஐந்தாறு மாடல்கள் இருந்தன. ஒன்றை வாங்கிவிட்டேன். என்னத்தான் iPod வந்தாலும், ரிவைண்ட் பட்டன் தட்டி, கேஸட்டின் ஏ, பி சைடுகளை திருப்பிப் போட்டுக் கேட்டபடி வீட்டை கவனிப்பது ஒரு தனி சுகம். அதைத் தொடர்கிறேன். :). ராஜனின் பிறமொழிப் பாடல்களைக் கேட்டதில்லை. இப்போது ஆசை வேர் விட்டது. 🙂

//ராஜனின் பிறமொழிப் பாடல்களைக் கேட்டதில்லை. இப்போது ஆசை வேர் விட்டது. //

ஆம் நீங்கள் ஏன் ஒரு சஜஷன் லிஸ்ட் தரக்கூடாது?

உங்களின் இந்த பதிவு காரணமாக கேஸட்களை தேட வைத்ததற்கு நன்றி.

இந்த பதிவுக்கு நன்றி சொக்கன். படித்தபோது என் விழிகளில் சிறிது ஈரம் கசிந்தது. சென்ற வருடம், கேசட் பற்றி நீங்கள் சொன்னதையெல்லாம் எழுத நினைத்து எழுத முடியாமல், ஒரே ஒரு பிக் மட்டும் சேர்த்து நான் போட்ட பதிவு இது

http://www.backgroundscore.com/2010/02/nostalgia.html

பழைய ஞாபகங்களை கிளறி விட்டீர்கள்.டேப் ரிக்கார்டரில் உள்ள ரிகார்டு வசதியில் குழந்தையாக இருந்த போது பேசிய மழலை மொழியை ஒலித் துணுக்காக கேட்பது ஒரு சுகானுபவம்.

அருமையான பதிவு தலைவரே 🙂 எங்கள் வீட்டில் இருக்கும் 300+ கேஸ்ட்களுக்கு உயிர் கொடுக்க வேண்டும்…

வாவ்..இந்த கிறுக்கு எனக்கும் இருந்தது. அதிலும் எனக்கு ராஜாவின் குரல் அவ்வளவு இஷ்டம். இப்போ இருக்கிற மதிப்பு அப்போ அவர் குரலுக்கு இல்ல. நான் எனக்கு புடிச்ச சிங்கர் இளையராஜான்னு சொன்னா கிண்டல் செய்வாங்க. ராஜா பாடின பாட்டுக்களா ஒரு 3 காசெட் ரெகார்ட் பண்ணேன்..அதுல “ஏலே இளங்கிளியே”ன்னு (எந்த படம் சொல்லுங்க?) ஒரு பாட்டு. ரெகார்ட் பண்ணவன் கரெக்டா ஜானகி பாடின வெர்ஷனை போட்டுட்டான். அதை மாத்த மாட்டேன்னுட்டு சண்டை வேற..

இங்க நார்த் அமெரிக்கால எல்லாம் இன்னும் கேசட் பிளேயர் கெடைக்குது..இப்போ கூட mp3 , cd , cassette , ipod auxillary input எல்லாம் சேர்த்து ஒரு சோனி செட் பார்த்தேன்..

அனுஜன்யா, முரளி, கிரி, பினாத்தல் சுரேஷ், காஞ்சி ரகுராம், nagaraj, சுரேஷ்குமார், Devarajan, Balamurugan, Nataraj,

நன்றி 🙂

//தனிப் பதிவுதான் வரைய வேண்டும்//

செய்யுங்க. ப்ளாகில் கேஸட் வாஆஆஆரம் கொண்டாடுவோம்!

//இங்கே (சென்னையில்) கேசட் இன்னும் அன்னியமாகிவிடவில்லை//

பெங்களூரிலும் கிடைக்கிறது. ஆனால் கொஞ்சம் தேடணும் 🙂

//நீங்கள் ஏன் ஒரு சஜஷன் லிஸ்ட் தரக்கூடாது?//

பெங்களூர் வாங்க, இசையோடு டெமோ கொடுக்கறேன் 🙂

//சென்ற வருடம், கேசட் பற்றி நீங்கள் சொன்னதையெல்லாம் எழுத நினைத்து எழுத முடியாமல், ஒரே ஒரு பிக் மட்டும் சேர்த்து நான் போட்ட பதிவு இது//

அருமை!

//“ஏலே இளங்கிளியே”ன்னு (எந்த படம் சொல்லுங்க?) ஒரு பாட்டு//

நினைவுச் சின்னம் – ராஜா பாடினது ஒரு வெர்ஷன், சுசீலா பாடினது இன்னொரு வெர்ஷன். கரெக்டா?

//நார்த் அமெரிக்கால எல்லாம் இன்னும் கேசட் பிளேயர் கெடைக்குது//

இங்கேயும்தான். ஆனா தேடணும், அதை யாரும் பெரிசாப் பொருட்படுத்தறதில்லை!

இது நான் எழுதியது இல்லையே 🙂

மைதிலி என்னை காதலி, சக்கை போடு போட்டுக் கொண்டிருந்த சமயம். அப்பல்லாம் காசட்டை காசு குடுத்து வாங்குவதை நினைத்தே பார்க்க முடியாது. எவ்வளவு அழுது புரண்டாலும் காசு கொடுக்க மாட்டார்கள் வீட்டிலே. டூ இன் ஒன் மூலமாக நாமே ரெக்கார்ட் செய்து கொண்டால் என்ன ஒரு ஐடியா வந்தது. உயர்ரக சப்பான் டூ இன் ஒன். அருமையாகப் பதிவு செய்யும். சென்னை வானொலியிலே, காலை 6.40 க்கு நிகழ்ச்சிக் குறிப்புகள் கொடுப்பார்கள். ( வீட்டிலே வானொலிப் பத்திரிக்கை வாங்குவதை நிறுத்தி விட்டிருந்தார்கள்). காலை 6.40 இலே இருந்து 6.45 வரை, ‘அன்பார்ந்த விரிவாக்கப் பணியாளர்களே” என்று கிராமங்களில் இருக்கும் agriculture extension ஆபீசர்களுக்கு தென்கச்சியோ யாரோ, டிப்ஸ் கொடுத்த பின், அன்றைக்கு இடம் பெறும் நிகழ்ச்சிக் குறிப்புகள் கொடுப்பார்கள். அதிலே அன்று இடம் பெறும் பாடல்களின் படங்கள் பெயரும் சொல்வார்கள். தேன்கிண்ணமா, உங்கள் விருப்பமா, சிறப்பு நேயர் விருப்பமா, எத்தனை மணிக்கு என்று சடுதியிலே நோட் செய்வது ஒரு கலை. என் அக்கா அதிலே கைதேர்ந்தவர். சரியாக நேரம் பார்த்து அழுத்தவேண்டும். கொஞ்சம் பிசகினாலும், விளம்பரம் அல்லது அறிவிப்பாளர் குரல் வந்து விடும். இப்படி ஒரு மாதம் உழைத்து, ஒவ்வொரு பாடலாகச் சேகரித்து, குமுதத்தில் வந்த விளம்பரத்தை, கத்தரித்து கவரிலே ஒட்டி, கடையிலே காசு குடுத்து வாங்கினது போலவே உருவாக்கிய காசட்டையும், அதன் ஞாபகங்களயும் ரொம்ப நாளாகத் தேடிக் கொண்டிருக்கிறேன். கிடைத்தபாடில்லை.

நோஸ்டால்ஜியா! நோஸ்டால்ஜியா!!

சொக்கன். நான் எப்போது பெங்களூர் வந்து உங்களுடைய ராஜா கலெக்ஷன்களை ஒரு காப்பி எடுத்துக்கொள்ளட்டும்?

எங்கள் வீட்டில் பெட் டைப் டேப் (டெல்லி செட்) என்று ஒன்று#ம் ஒரு Sanyo ட்ரான்சிஸ்டரும் இருந்தது. மோனோ மட்டும்தான். ஸ்டீரியோ கிடையாது. ரெகார்ட் பண்ணின கேஸட் கேட்க இந்த பெட் டைப் டேப் ரெகார்டர்தான் ஒரே சொத்து. ரேடியோவில் திரையிசைப் பாடல்கள் கேட்காமல் ஒரு நாள்கூட விடிந்தது இல்லை. லிஸ்ட் போட்டு கேஸட் ரெகார்டிங் பண்ணினதுபோக, நண்பர்களிடமிருந்து இரவல் வாங்கிக் கேட்கும் பழக்கமும் இருந்தது. கேஸட்டுகள் ரொடேஷனுக்குப் போகும். கேஸட் நாடா அறுந்துபோனால் அதை லாவகமாக மீண்டும் ஒட்டிவிடும் கலையை கற்று வைத்திருந்தேன். அப்புறம் பாடல்கள் கேட்க Takai என்று ஒரு Equaliser -உடன் கூடிய ஸ்டீரியோ ஆம்ப்ளிஃபையரும் இரண்டு பெரிய ஸ்பீக்கர்களும் வாங்கி அரைகுறை ஜென்ம சாபல்யம் அடைந்தேன். மின்மினி தேசம் மீனாட்சி சுந்தரம், சரசுராம் எல்லாம் சேர்ந்து “பிட் ஸாங்க்ஸ்” என்று கொஞ்சம் கலெக்ஷன் வைத்திருந்தோம். படத்தில் சில நொடிகளே வரும் பாடல்கள் அடங்கிய தொகுப்பு. உதாரணம்: நினைத்தாலே இனிக்கும் படத்தில் “நினைத்தாலே இனிக்கும்”, சிப்பிக்குள் முத்து படத்தில் “பட்டு சேல தாரேனின்னு”, தேவர் மகனில் “மாசறு பொன்னே வருக..” சிங்கார வேலனில் “வரச்சொல்லி இந்நேரம்..”

சத்யராஜ்குமார் பானாசானிக் டேப் ரெகார்டர் வாங்கி அதற்கு இரண்டு ஸ்பீக்கர்கள் வாங்கி அவற்றை பானைக்குள் வைத்திருப்பார். சரியான எஃபெக்டாக இருக்கும். அவர் வீட்டுக்குப் பாட்டு கேட்பதற்கென்றே போவோம். எல்லோரையும் போல எங்களை அதிகம் ஆக்கிரமித்திருந்தது இளையராஜாதான். “கேஸட்டில் பாடல்கள் கேட்ட” அனுபவங்களையெல்லாம் சொல்லிக்கொண்டே போனால் இது ஒரு தொடராகவே மாறிவிடும். நிறுத்திவிடுகிறேன்.

எம்ப்பீத்ரீக்கு மாறி பல வருடம் ஆயிற்று. CD கலெக்ஷன்கள்தான் இப்போதெல்லாம். கேஸட்கள் ஓரங்கட்டப்பட்டுவிட்டன. ஆனால் பாட்டு கேட்பது நிற்கவில்லை. வேறு டெக்னாலஜியில் தொடர்கிறது.

சூப்பர் பதிவு,
என்னுடைய 100க்கு மேற்பட்ட கேசட் கலெக்‌ஷனை mp3 ஆக மாற்றிக்கொண்டிருக்கிறேன்.

சில இளைய ராஜா பாடல் பட்டியல். என்னுடைய இந்த பதிவில்…
http://tamilpadhivu.blogspot.com/2009_02_01_archive.html

[…] This post was mentioned on Twitter by nchokkan, nchokkan and Vigneshram, mugil முகில். mugil முகில் said: ரிவைண்ட்! https://nchokkan.wordpress.com/2011/02/02/cassette/ […]

கலக்கல் பாஸ்
நான் சொந்தமா ஆடியோ கம்பனி வச்சிருந்தேனாக்கும் பொம்மை பேசும்படத்தில் வரும் போஸ்டர்கள் தான் கேசட் கவரை அலங்கரிக்கும். உம்ம கொசுவர்த்தி கலக்கல் பல இடங்களில் நானே நானா 😉

Sir,
Interesting to read your Blog. But my Wife still using Cassettes.
My Son promised to send one Ipad from USA who is working there.
We have to learn ‘how to use Ipad”
I am sincere follower of your Books. I have purchased ‘Abdul Kalaam’, Infosys books and presented to my friends for birthday etc.,
Thank You Sir.

அருமை சொக்கன்.

மண்பானை வாங்கி அதில் ஸ்பீக்கர் வைத்துக் கேட்டதை எல்லாம் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.

ஆனால் நான் இன்னும் கேசட் பார்ட்டிதான் என் காரில் இருக்கும் கேசட் ப்ளேயரைப் பிடிவாதமாக மாற்றாமலிருக்கிறேன்.

liked…liked…innamum enakku cassette spelling correcta ezutha theriyathu…pathivu cassete paththinalum, raja vaasanai thookkalaaka irukkiRathu… shared in fb and buzz…thanks for anumathi…:)

தல – அப்படியே பின்னாடி ஒடிக்கிட்டே இருக்கேன் ;))

//ம்ஹூம். இல்லை. அதுதான் ஒரிஜினல். தெலுங்கில் ராஜா போட்ட அந்த மெட்டைத் தமிழில் டப் செய்து நான் கேட்டிருக்கிறேன். இப்போது அதன் மூலப்பிரதியை SPB பாடக் கேட்டு சிலிர்த்துப்போனேன்.//

அந்தப் படத்தில் தெலுங்கு, தமிழ் இரண்டிலுமே மனோதான் பாடியிருக்கிறார்.

//ஆச்சர்யமான விஷயம், அந்தக் கேஸட்கள் ஒவ்வொன்றிலும் எந்தப் பாட்டுக்குப்பிறகு எந்தப் பாட்டு வரும் என்பதுகூட எனக்கு அப்படியே நினைவிருக்கிறது.//

இனிமேலும் நினைவிலேயே இருக்கும். அதுமட்டுமில்லை, எங்கேயாவது நம் கலக்‌ஷனில் இருக்கும் பாட்டு முடிந்தால் நம் கேசட் படி அடுத்த பாட்டை (மனதுக்குள்ளேயாவது) நிச்சயம் பாடுவோம்.

http://kgjawarlal.wordpress.com

San, prakash, சித்ரன், மெனக்கெட்டு, கானா பிரபா, Rathnavel Natarajan, வடகரை வேலன், தமிழ்ப்பறவை, கோபிநாத், Jawahar,

நன்றி 🙂

//இது நான் எழுதியது இல்லையே//

நானும் இல்லை. ‘நாம்’ன்னு வெச்சுக்கலாமா? 😉

//ஒரு மாதம் உழைத்து, ஒவ்வொரு பாடலாகச் சேகரித்து, குமுதத்தில் வந்த விளம்பரத்தை, கத்தரித்து கவரிலே ஒட்டி, கடையிலே காசு குடுத்து வாங்கினது போலவே உருவாக்கிய காசட்//

ஆஹா, நீங்க ரொம்ப உழைச்சிருக்கீங்கபோல, இதோட ஒப்பிட்டா நாங்கல்லாம் நோகாம நோம்பி கும்பிட்டிருக்கோம் 😉

//நான் எப்போது பெங்களூர் வந்து உங்களுடைய ராஜா கலெக்ஷன்களை ஒரு காப்பி எடுத்துக்கொள்ளட்டும்?//

எப்போதும் வரலாம் – ஆனால் என் கலெக்‌ஷனில் பெரும்பாலான பாடல்கள் உங்களிடமும் இருக்கும் 😉

//கேஸட் நாடா அறுந்துபோனால் அதை லாவகமாக மீண்டும் ஒட்டிவிடும் கலையை கற்று வைத்திருந்தேன்//

இது எனக்கு ஒத்துவந்ததே இல்லை. நண்பர்களிடம் உதவி கேட்டு ஓடுவேன்!

//இரண்டு பெரிய ஸ்பீக்கர்களும்//

இதுவும் எனக்கு வாய்க்கவில்லை – நான் எப்போதும் டூ-இன்-ஒன்னில்தான் பாட்டுக் கேட்டிருக்கிறேன், ஸ்பீக்கர் வாங்கியது ரொம்பக் காலம் கழித்து இப்போதுதான்!

//சிப்பிக்குள் முத்து படத்தில் “பட்டு சேல தாரேனின்னு”, தேவர் மகனில் “மாசறு பொன்னே வருக..”//

ரெண்டும் ஜெம்!

//சிங்கார வேலனில் “வரச்சொல்லி இந்நேரம்..”//

அதே படத்தில் ‘தூது செல்வதாரடி’யை விட்டுட்டீங்களே!

//என்னுடைய 100க்கு மேற்பட்ட கேசட் கலெக்‌ஷனை mp3 ஆக மாற்றிக்கொண்டிருக்கிறேன்//

நானும் செய்யவேண்டும். சோம்பேறித்தனமாக இருக்கிறது!

//பல இடங்களில் நானே நானா//

அதான் ராஜா 🙂

//We have to learn ‘how to use Ipad”//

Sure Sir, you can learn in 2 days, but guess what, these days young children ( http://www.youtube.com/watch?v=3V6F5GHGKcQ

– என். சொக்கன்,
பெங்களூரு.

romba nalla write up 🙂 i went back to the good old days 🙂 even we have cassettes in our home still .. if u know how to convert them to cd’s or mp3 files please let me know .. Sujal oda school days speech ellam irukku 🙂 i want to convert it and keep it safe 🙂

அருமையான பதிவு.
எனக்கும் உங்க வயசுதான். நாம் “சமகால” கல்லூரி வாசிகள்.
மருத்துவக் கல்லூரி முதல் செமெஸ்டர் தேர்வில் இரண்டு பேப்பரில் வகுப்பில் முதல் மார்க் வாங்கியதற்கு எனக்கு ஏதாவது வாங்கிக் கொடுக்கவேண்டும் என்று சொன்ன தந்தையிடம் நான் கேட்டு வாங்கிக் கொண்டது 2-இன்-1 கேசட் ப்ளேயர்.
இரண்டு வருடங்களுக்கு முன் என் மகளை கர்நாடக சங்கீதம் பயில அனுப்பியபோது மறுபடியும் கேசட் ப்ளேயருக்குத் தேவை ஏற்பட்டது. பாட்டு சொல்லிக் கொடுக்கும் மாமி பாடல்களை கேசட்டில் ரிகார்ட் செய்து கொடுப்பார், குழந்தைகள் அதை வீட்டில் போட்டுக் கேட்டு பழகி அடுத்த வகுப்பில் பாடிக் காட்ட வேண்டும்.
கேசட் ப்ளேயர் வாங்க வேண்டும் என்று பேசுகையில், பண்பலை ரேடியோ, கேசட் ப்ளேயர், MP3 CD எல்லாம் உள்ள ப்ளேயராக வாங்கலாம் என்று என் வீட்டிலும் நீங்கள் எழுதியிருந்த மாதிரி ஒரு உரையாடல். சில பல கடைகள் ஏறி இறங்கி தேடியபோது உங்களுக்கு நேர்ந்த அனுபவமே எங்களுக்கும். கடைசியாக Sony ஷோரூமில் ஒரு நல்ல ப்ளேயர் கிடைத்தது. நாங்கள் எதிர்பார்த்ததைவிட கூடுதலாக USB வசதியும் இருந்தது.

சொக்கன்,
மிக அருமை. ஒரு ஃபுல் ஃப்ளஷ்பாக் போன அனுபவம். எப்பவும் போல எழுத்து நடை மிகவும் பிரமாதம்.
Guess, I became full time follower of your writing now-a-days.
Thanks for bringing out the reader inside me :-).

-Anand V

கல்லூரி விடுதியில் நீங்களும் நானும் ஒரு நாள் அமர்ந்து பட்டியல் போட்ட ராஜா பாடல்கள் உள்ள ஒலிநாடா (TDK 90) இன்னும் என்னிடம் உள்ளது. அது ஒரு அழகிய காலம்.நினைவு கூர்ந்தமைக்கு மிக்க நன்றி.

நல்ல பதிவு. தேங்க்ஸ் ஃபார் தி கொசுவர்த்தி சுருள்!

*****
ஆன் எ டிஃப்ரண்ட் நோட்:

ராஜா ரசிகர்கள் குகைக்குள்ளயே வசிக்கிறாங்களோ? ;)))

கேச‌ட் ம‌ட்டும் இல்லை. நிறைய‌ உருப்ப‌டியான‌ பொருட்க‌ள் க‌டைக‌ளில் இல்லை. இசைத் த‌ட்டு இய‌ந்திர‌ங்க‌ள் (LP Record player machine) க‌ண்டிப்பாக‌ எங்கும் கிடைப்ப‌தில்லை.

நான் ஒரு கேச‌ட் பிரியை. முன்ப‌திவு கேச‌ட் (“Company recorded cassette”) கிடைக்காம‌ல் போய் விட்ட‌து. எனினும் நான் கேச‌ட்க‌ள் வாங்கி ப‌திவு செய்கிறேன். எப்ப‌டி?

இணைய‌த‌ள‌ங்க‌ள்!

கோப்புக‌ளை ப‌திவிற்க்கி கேச‌ட்டி ப‌திவு செய்கிறேன். அண்மையில் PHILIPS AZ1956 என்கிற‌ சாத‌ன‌ம் ஒன்று RETAILMART இணைய‌த‌ள‌த்தில் வாங்கினேன்.

ஈபே (“Ebay.com”), ராக்குட்டென் (“Rakuten.com”) போன்ற‌ இணைய‌த‌ள‌ங்க‌ள் வெற்று ஒலிப்பேழைக‌ள் (“Blank Audio Cassettes”) கிடைக்கின்ற‌ன‌. விலை அனுப்புத‌லையும் சேர்த்தால் அதிக‌ம் தான். ஆனால் அது ப‌ர‌வாயில்லை. இவை அழிய‌க்கூடிய‌தல்ல‌. TDK, MAXELL கேச‌ட்க‌ள் எப்போதும் முத‌ல் த‌ர‌ம். க‌டைக‌ளில் கிடைத்தாலும் கூட‌ TDK-D (“Dynamic”) கிடைப்ப‌தில்லை. ச‌ற்று விலைக்குறைந்த‌ TDK-B (“Brilliant”) தான்.

கிடைத்தாலும் 90 நிமிட‌ங்க‌ள் அல்ல‌து 60 நிமிட‌ங்கள் அவ்வ‌ள‌வுதான். 2 ம‌ணி நேர‌ம் (120 நிமிட‌ங்க‌ள்) இசைக்கும் கேச‌ட்க‌ள் க‌டைக‌ள் கிடைக்க‌ ஒரு போதும் வாய்ப்பில்லை. அத‌ற்குத் தான் ஈ பே போன்ற‌ இணைய‌த‌ள‌ங்க‌ள் வ‌ச‌தியாக‌ உள்ள‌ன‌. நான் அண்மையில் ந‌டைகேட்பி (வாக் மேன்) – SONY FX199 சாத‌ன‌ம் ஒன்றும் ஈ பே த‌ள‌த்தில் வாங்கினேன். அதை கேட்கும் சுக‌ம் த‌னி. Mp3 இசைக்கோப்புக‌ளில் இல்லை.

கேச‌ட் விரும்புவ‌ர்க‌ள் மேற்சொன்ன‌ இணைய‌த‌ள‌ங்க‌ளை நாட‌லாம்.

தட்டச்சுப்பிழை திருத்த‌ம் ‍ : “AZ1852”

மிகவும் அருமையான பதிவு. CD யும் மெல்ல மெல்ல காணாமல் போய் வருகிறது இப்போதெல்லாம் Mobile, iPod & MP3 Player இருப்பதால் யாரும் CD யில் யாரும் பாட்டு கேட்பதில்லை (நானும்தான்) இன்னும் சில வருடங்களில் CD யை பற்றி இதே மாதிரி பதிவு எழுத வேண்டி வரலாம் 🙂

கேஸட் போல வாழ்க்கை பயணத்தில் பலதையும் இழந்து வருகிறோம், இதைப் படிக்கையில் மனம் கனக்கிறது.

கேஸ‌ட் என்ப‌தை மொத்த‌த்தில் அழிக்க‌ முடியாது. ந‌ம‌து த‌மிழ் திரையுல‌க‌ முட்டாள்க‌ள் ஸிடி மூல‌ம் நான்கு ம‌ட‌ங்கு விலை ஏற்றி விற்ப‌னை செய்ய‌ பேராசை ப‌ட்டார்க‌ள். விளைவில் எல்லாமே இல‌வ‌ச‌மாக‌ இணைய‌த‌ள‌த்தில் கிடைக்க‌ப்பெற்கிற‌து.

வெளிநாடுக‌ளில் கேஸ‌ட் மீண்டும் வெளியீடாக‌ தொட‌ங்கியுள்ள‌ன‌. பெண் குர‌ல்க‌ள் வாதிய‌ இசை கேஸ‌ட் போன்ற‌ இனிமையான‌ அள‌வு ஸிடி எம்பி3 ஆகிய‌வ‌ற்றில் பெற‌ இய‌லாது.

அருமையான பதிவு 🙂 நீங்கள் ஆடியோ காசெட்டுக்காக டேப் ரிகார்டர் வாங்கியது போல நாங்கள் எங்கள் குழந்தைகளுக்காக வாங்கிய விடியோ கேசட்டுக்களுக்காக VCR வாங்கியுள்ளோம் 🙂

amas32

So nostalgic to read your post!. Been there done that feeling.

I was born an era ahead of you so my childhood memories are laced with gramophone and LP records and only a few owned it in our family or neighborhood. The audio tapes entered the market when I was a teenager, and I have been through some of the incidents you have mentioned above.

//அப்போதைய கேஸட்களில் இரண்டு வகை: 60, 90. ராஜாவின் பாடல்கள் சராசரியாக நான்கு முதல் நான்றரை நிமிடங்களுக்கு ஒலிப்பவை என்பதால் ‘60’ வகைக் கேஸட்களில் 12 முதல் 14 பாடல்கள்வரை பதிவு செய்யலாம், ‘90’ வகையில் 18 முதல் 20.//
true but there was a downfall – frequent use of C90 cassettes tangled the audio tapes -so had to de-tangle it by using a pencil and slowly rewinding…and that was an art – sometimes had to manually cut and paste with a sticky tape (cello tape) (siblings and cousins get together to do this tasks)

Last night I was converting an old “sangaraparanam” cassette tape to MP3 format since our cassette player decided to strike! and there aren’t any in the market. But thanks for the free websites to download most of the songs nowadays.

//ஆச்சர்யமான விஷயம், அந்தக் கேஸட்கள் ஒவ்வொன்றிலும் எந்தப் பாட்டுக்குப்பிறகு எந்தப் பாட்டு வரும் என்பதுகூட எனக்கு அப்படியே நினைவிருக்கிறது//

spot on!.

Sweet memories are always etched in our minds, but had to be passed on to our next generations by stories or your post as above. In another 50 years time our grand generation will be inquiring about exercise books and pencils and pens since it all be taken over by LCD screens.

I have mentioned some of my memories in one of my post but that only related to PBS:
(http://sabaslog.wordpress.com/2013/04/29/ever-green-melodies-of-p-b-srineevas-remembered/)

Great read!
Saba

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 528 other followers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 609,220 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்

Tamilish

For தமிழ் Peopleதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

February 2011
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28  
%d bloggers like this: