மனம் போன போக்கில்

Archive for March 2011

உங்களைப்போலவே, எனக்கும் நிஜ நண்பர்களைவிட டிஜிட்டல் நண்பர்கள்தான் அதிகம். இவர்களில் பெரும்பாலானோரை நான் நேரில் சந்தித்தது கிடையாது. ஆனால் ஈமெயில், சாட், ட்விட்டர், ப்ளாக், இப்போது ஃபேஸ்புக் என்று பலவிதங்களில் தினசரிப் பழக்கம்.

எனது ஆன்லைன் நண்பர்களில் பலர், வெளிநாட்டுவாசிகள். அவர்களோ, அவர்களது நண்பர்கள் (அ) உறவினர்களோ இந்தியாவுக்கு வரும்போதெல்லாம் என்னைச் சாட்டிலோ, ஈமெயிலிலோ அழைத்து அன்பாகக் கேட்பார்கள் ‘பாஸ், உங்களுக்கு இங்கிருந்து ஏதாச்சும் வாங்கிட்டு வரணுமா?’

இந்தக் கேள்வி என்னை எப்போதும் திகைப்பில் ஆழ்த்தும். காரணம், வெளிநாட்டிலிருந்து வரும்போது, அல்லது அங்கே செல்லும்போது பெட்டியின் எடை அளவு ரொம்ப முக்கியம். ஒவ்வொரு பொருளையும் எடை போட்டுப் பார்த்து(ஹெஹெஹெ, ரெட்டை அர்த்தம்!)தான் சூட்கேஸில் வைக்கவேண்டியிருக்கும். நூறு கிராம் மிஞ்சிப் போனாலும் ஏகப்பட்ட அபராதம் கட்டவேண்டியிருக்கும். அல்லது, ஏர்போர்ட்டில் வைத்து அம்மாம்பெரிய பெட்டியைத் திறந்து எதையாவது பொறுக்கியெடுத்து (மனசே இல்லாமல்) குப்பைக்கூடையில் வீசவேண்டியிருக்கும்.

இத்தனைச் சிரமங்களுக்கு மத்தியிலும், எனக்காக ஏதோ வாங்கிவர நினைக்கிறார்கள் என்றால், அவர்களது நட்பின் தீரத்தை நினைத்து வியக்காமல் இருக்கமுடியுமா? வாழ்க நீர் எம்மான்!

நிற்க. சமீப காலமாக, இப்படி என்னிடம் ‘ஏதாவது வாங்கி வரணுமா?’ என்று கேட்கிற நண்பர்கள் உடனடியாக ஒரு சிபாரிசும் செய்கிறார்கள். ‘ஜம்முன்னு ஒரு iPad வாங்கிக்கவேண்டியதுதானே?’

ஆப்பிள் ஐபேட் இப்போது இரண்டாம் அவதாரம் எடுத்து இன்னும் ‘ஜம்’மாகி இருக்கிறதாம். அதன் தொடுதிரை தொடங்கிப் பாதுகாப்புக் காந்த மூடிவரை சகலத்தையும் வியந்து போற்றும் இணையப் பதிவுகள் ஏராளம்.

தனிப்பட்டமுறையில் எனக்கு ஸ்டீவ் ஜாப்ஸை ரொம்பப் பிடிக்கும். அவரது வாழ்க்கை வரலாறை எழுதிவிடவேண்டும் என்று ரொம்பக் காலமாக முயற்சி செய்து தோற்றுக்கொண்டிருக்கிறேன். அப்பேர்ப்பட்ட பிரமிப்பூட்டும் கதை அவருடையது.

அதேபோல், ஆப்பிள் தயாரிப்புகளிலும் ஒரு குறை சொல்லிவிடமுடியாது. அந்த வெள்ளைவெளேர் தோற்றத்தில் தொடங்கி, hardware performance, Security, எவரையும் ஈர்க்கும் User Interfaceவரை சகலத்திலும் அவர்களுடைய மேதைமை தெரியும். மற்றவர்கள் அதற்குப் பக்கத்தில்கூட வரமுடியாது.

ட்விட்டரில் என் நண்பர்கள் பலர் ஐபேட் விசுவாசிகள். நேரிலும் பலர் அதன் மகிமைகளைப் பட்டியல் போட்டுச் சிலாகித்திருக்கிறார்கள்.

ஆனால் இத்தனைக்குப்பிறகும், ஐபேட் வாங்கவேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை. காரணம் விலை அல்ல. வேறு பஞ்சாயத்து. ஆர்வமுள்ளோர் இந்தப் பதிவைப் படித்துத் தெரிந்துகொள்ளலாம் –> http://goo.gl/p7gmD

சரி. ஐபேட் இல்லை. அடுத்து?

ஐபேட்க்கு இணையாக Android தொழில்நுட்பத்தைக் கொண்ட சிலேட்டுக் கணினி(Tablet Computer)கள் பலது கிடைக்கிறதாம். இவற்றின் விலை (ஒப்பீட்டளவில்) ரொம்பக் குறைவு. ஆனால் உத்திரவாதம் ஏதும் கிடையாது.

ஒரே பிரச்னை, சிலேட்டுக் கணினி வாங்கிவைத்துக்கொண்டு நான் என்ன செய்வேன்?

எனக்குத் தொடுதிரையில் மோகம் இல்லை. கேம்ஸ் விளையாடுகிற பழக்கமே இல்லை. சினிமா பார்ப்பதில்லை. இணையம் பார்க்கவும் ஈமெயில் படிக்கவும் பாட்டுக் கேட்கவும் செல்ஃபோன் இருக்கிறது. புத்தகம் படிக்க ஈபுக் ரீடர் இருக்கிறது. இதெல்லாம் போக இன்னொரு Tablet Computer எதற்காக?

இதை ஒரு நண்பரிடம் கேட்டபோது பொங்கி எழுந்துவிட்டார். ‘என்ன சார் இது? டெய்லி எத்தனையோ இடத்துக்குப் போறீங்க, பஸ்ல, க்யூவிலே காத்திருக்கீங்க, அங்கெல்லாம் நேரத்தை வீணடிக்காம டாப்ளட்ல எழுதலாமே!’

’டாப்ளட்ல தமிழ் எழுத வருமா?’

‘ஓ, தாராளமா!’

அடுத்து அதை விசாரித்தேன். ஐபேடில் செல்லினம், ஆண்ட்ராய்டில் தமிழ்விசை என்று இரண்டு சாஃப்ட்வேர்களைச் சொன்னார்கள். அவற்றை நிறுவிக்கொண்டால் இஷ்டப்படி தமிழ் எழுதலாமாம்.

முதன்முறையாக, எனக்கும் டாப்ளட் ஆசை பற்றிக்கொண்டது. லாப்டாப்பில் லொடலொடா என்று தட்டிக்கொண்டிருக்காமல் திரையைத் தொட்டுத் தொட்டுத் தமிழ் வளர்த்தால் என்ன?

போனவாரம், எங்கள் அலுவலகத் தேவைகளுக்காக ஓர் ஆண்ட்ராய்ட் ஃபோன் வாங்கினார்கள். அதிலும் ’தமிழ்விசை’ நன்றாக வேலை செய்யும் என்று கேள்விப்பட்டேன். டாப்ளட் வாங்குவதற்கு முன்னால், இந்த ஃபோனில் கொஞ்சம் முன்னோட்டம் பார்த்தால் என்ன?

ஆஃபீஸ் ஃபோன் சனி, ஞாயிறுகளில் சும்மாதானே இருக்கும்? அதை வீட்டுக்குக் கொத்திவந்தேன். உம்மாச்சி முன்னால் வைத்துக் கன்னத்தில் போட்டுக்கொண்டு எழுத ஆரம்பித்தேன்.

சும்மா சொல்லக்கூடாது, தமிழ்விசை அட்டகாசமாக வேலை செய்தது. ’தொடத்தொட மலர்ந்ததென்ன’ என்று ஒரு பாட்டில் வைரமுத்து எழுதியதுபோல் நான் தொடத்தொட ஃபோன் திரையில் தமிழ் மணந்தது. பலே ஜோர்!

ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாறினாலும், அரை மணி நேரத்தில் சுமார் மூன்று பக்கங்கள் எழுதி முடித்துவிட்டேன். அந்தக் கட்டுரையை ஒரு பத்திரிகைக்கும் அனுப்பியாகிவிட்டது.

அப்புறமென்ன? ஆண்ட்ராய்ட் டாப்ளட் வாங்கித் தமிழ்விசையை நிறுவவேண்டியதுதானே?

அங்கேதான் ஒரு பெரிய பிரச்னை. இந்தத் தொடுதிரை ஃபோனில் மூன்று பக்கம் எழுதி முடித்தவுடன் என்னுடைய தோள்கள் இரண்டும் பிடித்துக்கொண்டுவிட்டன.

அதாகப்பட்டது, ஃபோனை (அல்லது சிலேட்டுக் கணினியை) ஒரு கையில் இப்படிப் பிடித்தபடி இன்னொரு கையால் தொட்டுத் தொட்டு எழுதுகிறோம் இல்லையா? ஒரு எஸ்.எம்.எஸ்., இரண்டு ட்வீட், ஒரு சின்ன ஈமெயில் என்று எழுதினால் பிரச்னை இல்லை. பக்கம் பக்கமாக நிறைய எழுதினால், இரண்டு தோள்களையும் நெடுநேரம் ஒரேமாதிரி வைக்கவேண்டியிருக்கிறது. வலிக்கிறது.

இன்னொரு பிரச்னை, தொடுதிரையில் தோன்றும் பட்டன்கள் மிகச் சிறியவையாக இருப்பதால் ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்து டைப் செய்யவேண்டியிருக்கிறது. அடிக்கடி தப்பு வருகிறது. இன்னும் பார்வையைக் குவித்தால் கண்ணும் வலிக்கிறது.

ஆக, தொடுதிரைக் கருவிகளில் அப்பப்போ ரெண்டு வரி, நாலு வரி எழுதலாம். ரொம்ப விசுவாசமாக உழைக்கும். என்னைப்போல தினமும் 20 பக்கம் என்றெல்லாம் எழுத முயற்சி செய்தால் கதை கந்தலாகிவிடும்போல!

என்னைப் பொறுத்தவரை, எந்தக் கருவியும் (தமிழில்) எழுத உதவினால்தான் மதிப்பு. ஆகவே, எனக்கு ஐபேடும் வேணாம், ஆண்ட்ராய்டும் வேணாம். லாப்டாப்பும், ஒற்றைக் கையில் பிடித்துத் திரையைப் பார்க்காமலே தமிழ் எழுத முடிகிற Nokia 2730cயும் போதும். சுபம்!

***

என். சொக்கன் …

28 03 2011

Advertisements

ட்விட்டரில் எழுதியது, சில மாற்றங்களுடன் இங்கே சேமித்துவைக்கிறேன்:

நங்கைக்குப் பள்ளி முடிந்தது. அத்தனை நோட்டுகளிலும் அவள் மீதம் வைத்திருக்கும் காலிப் பக்கங்களைப் பார்த்தால் கண்ணில் ரத்தம் வருகிறது.

அநேகமாக எல்லா நோட்டுகளிலும் 20 பக்கங்களே எழுதப்பட்டுள்ளன. மீதம் காலி. ஆனால் அடுத்த வருடம் கட்டாயம் புது நோட்டுகள் வாங்கணும். ரஃப் நோட்கள் உள்பட.

அதுவும் வெளியே வாங்கக்கூடாது – அவர்கள் தரும் நோட்டுகளைதான் வாங்கவேண்டும் – அவர்கள் சொல்லும் அதே விலையில்.

யூனிஃபார்ம் கிழியாமல் அளவு மாறாமல் நன்றாகவே இருந்தாலும், புதுசு வாங்கியாகவேண்டும். No Choice.

நான் பள்ளியில் படித்தபோது ஒரே நோட்டை மூன்றாகப் பிரித்து மூன்று பாடங்களுக்குப் பயன்படுத்துவோம். ஒரு பக்கம் வீணாகியது இல்லை.

விளம்பர நோட்டீஸ்கள், காலண்டர் தாள் பின்பக்கங்கள்தான் ரஃப் நோட் ஆகும். வருடம் ஒரு புது யூனிஃபார்மெல்லாம் கிடையாது.

செலவழிப்பதுபற்றிப் பிரச்னையில்லை. அது நியாயமாக இருக்கவேண்டும்.

ஒவ்வொரு பெற்றோரிடமும் வருடம் இத்தனை ரூபாய் பிடுங்கியே தீரவேண்டும் எனப் பள்ளிகள் திட்டம் போட்டுச் செயல்படுவதாகத் தோன்றுகிறது.

பேசாமல் அடுத்த மகளை அரசுப் பள்ளியில் சேர்த்துப் பரிசோதனை எலியாக்கலாமா என்று (சீரியஸாக) யோசிக்கிறேன்.

பாழாய்ப்போன பயம் தடுக்கிறது. ஒருவேளை செலவு செய்தால்தான் படிப்பு வருமோ? அபத்தமான சிந்தனை,ஆனால் பயம் உண்மை. நீரோட்டத்தோடு போகிறேன்.

***

என். சொக்கன் …

26 03 2011

நண்பர் கிரி ராமசுப்ரமணியன் எழுதிய ‘கார்(ப்)பரேட் கனவுகள்’ புத்தகம் கடந்த சனிக்கிழமை (19 மார்ச் 2011) சென்னையில் வெளியிடப்பட்டது. அந்தப் புத்தகத்துக்கு நான் எழுதிய அணிந்துரையை இங்கே பதிவு செய்துவைக்கிறேன்.

நான் BPO ஊழியன் அல்லன். அதற்குச் சில படிகள் மேலே இருக்கிறவன்.

என்னடா எடுத்தஎடுப்பில் இப்படி ஓர் அடாவடி ஸ்டேட்மென்ட் விடுகிறானே என்று தப்பாக நினைத்துவிடவேண்டாம். எங்களுடைய அலுவலகம் ஒரு BPO அலுவலகத்தின் மேல்மாடியில் இருக்கிறது. அதைத்தான் அப்படி பந்தாவாகச் சொல்லிப்பார்த்தேன் :-).

ஆக, நான் தினந்தோறும் பல BPO ஊழியர்களைப் பார்க்கிறேன். ‘ஹலோ’ சொல்கிறேன். அவர்களோடு மாடிப்படி ஏறுகிறேன். அவர்களோடு டீ குடிக்கிறேன். அவர்களோடு அரட்டை அடிக்கிறேன், அவர்களோடு (அல்லது அவர்களை) சைட் அடிக்கிறேன், ஆனால் இத்தனைக்குப்பிறகும் அவர்கள் அடிப்படையில் என்ன செய்கிறார்கள், மூடியும் மூடாத கண்ணாடிச் சுவர்களுக்குள் அவர்களுடைய வாழ்க்கை எவ்விதமானது என்கிற புரிதல் எனக்கு இல்லை.

அதனால்தான் BPO உலகத்தைப் பற்றிய நண்பர் கிரியின் இந்தப் புத்தகத்தை மிகுந்த ஆர்வத்துடன் படிக்கத் தொடங்கினேன். எடுத்த வேகத்தில் படித்துமுடித்துவிடும்படி சுவையான நடையில் எழுதப்பட்டிருந்தாலும் கிரி விஷயகனத்தில் குறை வைக்கவில்லை. இது இவரது முதல் புத்தகம் என்று யாராவது சொன்னால்தான் தெரியும் என்கிற அளவுக்கு மனிதர் அடித்து ஆடியிருக்கிறார்!

இந்தியாவில் BPO ஊழியர்களைப் பற்றி உருவாகியுள்ள பொதுப்புத்தி பிம்பம் மிகவும் மலினமானது. சுலபமான வேலை, கை நிறைய சம்பளம், ராக்கோழிகளாகக் காரில் சுற்றலாம், நினைத்தால் பார்ட்டி, எந்நேரமும் ஆண் பெண் வித்தியாசமில்லாமல் தம், அன்லிமிட்டெட் செக்ஸ், அலட்சிய வாழ்க்கை … இப்படி உலகக் கெட்ட பழக்கங்கள் அனைத்தும் BPOவில்தான் மொத்தக் கொள்முதல் செய்யப்படுவதாக மீடியா சொல்கிறது. மக்கள் நம்புகிறார்கள், or vice versa!

ஆனால் இதுபோன்ற கணிப்புகளெல்லாம் ஒருநாள் முடிந்துவிடுகின்றன. BPO நமக்கொரு புனிதத்தலமாகத் தோன்ற ஆரம்பித்துவிடுகிறது. அதன் மகிமைகளைப் போற்றிப் பாடவும்கூடத் தயாராகிவிடுகிறோம்.

எப்போது? நம் வீட்டுப் பையன் அல்லது பெண் ஒரு BPOவில் வேலைக்குச் சேர்கிறபோது!

இந்தப் போங்காட்டத்தைதான் கிரி நகைச்சுவையாகச் சுட்டிக்காட்டுகிறார். ‘நாங்களும் உங்களைமாதிரி மனுஷங்கதான். நேர்மையா உழைச்சுப் பிழைக்கறவங்கதான்’ என்று அந்தப் புது உலகத்தைக் கலகலப்பாக நமக்கு அறிமுகப்படுத்திவைக்கிறார்.

சமீபகாலத்தில் இப்படி ஒரு நகைச்சுவை பொங்கும் புத்தகத்தை வாசித்த நினைவில்லை. கிச்சுக்கிச்சு மூட்டுவதற்கென்று தனியே மெனக்கெடாமல் எழுத்தின்போக்கில் அவர் மின்னவிடுகிற பல துணுக்குகள் நினைத்து நினைத்துச் சிரிக்கவைக்கின்றன.

அதேசமயம் இந்தப் புத்தகம் வெறும் ஜோக் தோரணமாகவும் நின்றுவிடுவதில்லை. பாடப் புத்தகம்போல் போரடிக்கும் மொழியில் சொல்லக்கூடிய ஒரு விஷயத்தை வாசகர்களைச் சிரமப்படுத்தாமல் எப்படிச் சொல்வது என்று கிரிக்கு நன்கு தெரிந்திருக்கிறது. அப்படியும் கனம் கூடிவிடுகிற இடங்களில் ஒரு கதையையோ ஜாலி சம்பவத்தையோ செருகிச் சமாளித்துவிடுகிறார். அந்த வித்தியாச மிக்ஸ் இந்தப் புத்தகத்தின் தனிச்சிறப்பு.

குறைகள் என்று பார்த்தால், கிரி தனது வலைப்பதிவில் வெளியான கட்டுரைகளைப் புத்தகமாகத் தொகுத்திருக்கிறார். அப்போது சில பகுதிகளை ஒழுங்குபடுத்தி, சிலவற்றை மீண்டும் எழுதி நேர் செய்திருக்கலாம். அந்தக் குறை புத்தகம் படிக்கும்போது உறுத்துகிறது.

அதேபோல், உள்ளடக்கம். BPO பற்றிய ஒரு முழுமையான பதிவாக அன்றி ஓர் அனுபவப் பகிர்வாகவே இந்தப் புத்தகம் முடிந்துவிடுகிறது. விறுவிறுவென்று படிக்க முடிந்தாலும், ‘இன்னும் நிறையச் சொல்லியிருக்கலாமே’ என்கிற ஏக்கத்தோடு புத்தகத்தை மூடிவைக்கிறோம்.

கிரிபோல் துறைஞானம் கொண்டவர்கள் நன்கு எழுதத் தெரிந்தவர்களாகவும் அமைவது அபூர்வம். விரைவில் அவர் ஒரு முழுமையான BPO கையேட்டை எழுதவேண்டும் எனக் கேட்டுக்கொண்டு முடிக்கிறேன்.

என்றும் அன்புடன்,
என். சொக்கன்,
பெங்களூரு,

இன்று காலை ஒரு வித்தியாசமான தொலைபேசி அழைப்பு.

வலங்கைமான் என்ற ஊரில் இருந்து ஒரு முதியவர் பேசினார். அவர் தனது பெயரைச் சொல்லவில்லை. எப்படி என்னுடைய தொலைபேசி எண் கிடைத்தது என்பதையும் சொல்லவில்லை. பரபரவென்று தன்னுடைய சொந்தக் கதையை விவரித்துச் சென்றார்.

அந்தக் காலத்தில் அவருடைய தந்தை யாரிடமோ நூற்றைம்பது ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார். அதை ஒழுங்காகத் திரும்பச் செலுத்தமுடியவில்லை. கடன் கொடுத்தவன் போலிஸில் புகார் தந்துவிட்டான். அவர்கள் இவரைப் பிடித்துச் சிறையில் போட்டார்கள்.

அப்போது நூற்றைம்பது ரூபாய் என்பது மிகப் பெரிய தொகை. இவர்கள் நடுத்தரவர்க்கத்துக்கும் கீழே வாழ்ந்துகொண்டிருந்தவர்கள். எந்தவிதத்திலும் அதை உடனடியாகப் புரட்டமுடியாத சூழ்நிலை.

இதனால், இவருடைய தந்தை மூன்று நாள்கள் சிறையிலேயே இருந்திருக்கிறார். ’பணத்தை வட்டியோடு திரும்பச் செலுத்தாவிட்டால் விடுதலை செய்யமுடியாது’ என்று போலிஸ் கண்டிப்பாகச் சொல்லிவிட்டது.

மூன்றாவது நாள் மதியம், இவருடைய ஏழு வயதுத் தம்பி தெருவில் சில தோழர்களோடு விளையாடிக்கொண்டிருந்திருக்கிறார். ’கண்ணாமூச்சி’ ஆட்டத்தில் ஒளிந்துகொள்வதற்காக ஒரு மரத்தின்மேல் ஏறப் பார்த்திருக்கிறார். அங்கே இருந்த ஒரு பொந்தில் மஞ்சள் பை ஒன்று கிடைத்தது. திறந்து பார்த்தால் ஏகப்பட்ட காசு.

அவர் பதற்றத்தோடு வீட்டுக்கு ஓடி வந்து பையைக் கொடுக்க, இவர்கள் அதை எண்ணிப் பார்த்திருக்கிறார்கள். சரியாக ரூ 200/- இருந்ததாம். நேராகக் காவல்நிலையத்துக்குச் சென்று பணத்தைக் கட்டி அவரது தந்தையை விடுவித்துவிட்டார்கள்.

வலங்கைமான் பெரியவர் இந்தக் கதையை ஆர்வமாக விவரித்துக்கொண்டிருக்க, எனக்குத் தலை கிறுகிறுத்தது. ‘இதையெல்லாம் என்கிட்ட ஏன் சார் சொல்றீங்க? எனக்கும் இந்தக் கதைக்கும் என்ன சம்பந்தம்?’ என்று கேட்க நினைத்தேன். ஆனால் அவர் என்னைப் பேசவிடவே இல்லை. கதையைத் தொடர்ந்தார்.

வீட்டுக்கு வந்த தந்தை ‘அந்தப் பணம் எப்படிக் கிடைத்தது?’ என்று கேட்டாராம். இவர்கள் கதையைச் சொன்னதும் கன்னாபின்னா என்று திட்டினாராம். ‘யாருடைய காசையோ திருடி என்னைக் காப்பாற்றிக்கொள்வதற்கு நான் ஜெயிலிலேயே கிடப்பேன்’ என்று ஆவேசப்பட்டவர் மீண்டும் காவல்நிலையத்துக்குச் சென்று உண்மையைச் சொல்ல முடிவெடுத்திருக்கிறார்.

அதற்குள், அக்கம்பக்கத்தில் இருந்தவர்களெல்லாம் அவரைச் சமாதானப்படுத்தி உட்காரவைத்திருக்கிறார்கள். ‘நீங்க மறுபடி ஜெயிலுக்குப் போனா கடனைத் திரும்பச் செலுத்தாத குற்றத்துக்காக உங்களுக்குத் தீவாந்திர சிட்சைதான் கிடைக்கும்’ என்று சொல்லியிருக்கிறார்கள்.

அவ்வளவுதான். அவர் ஸ்விட்ச் அணைத்தமாதிரி ஆஃப் ஆகிவிட்டார். போலிஸ் ஸ்டேஷனுக்குச் செல்லும் முடிவையும் உடனே கைவிட்டார்!

இந்த மேட்டரெல்லாம் நடந்தபோது (என்னிடம் பேசிய) பெரியவருக்கு வயது பன்னிரண்டு. ‘தீவாந்திர சிட்சை’ என்றால் என்னவென்று அவருக்குப் புரியவில்லை. அப்பாவிடம் கேட்கப் பயம்.

’அப்புறம் அந்த விஷயமே எனக்கு மறந்துபோச்சு’ என்றார் அவர். ’அன்னிக்கு 150 ரூபாயைத் திரும்பச் செலுத்தமுடியாம ஜெயிலுக்குப் போன எங்கப்பா அப்புறம் கடன் எதுவும் வாங்காம கௌரவமா வாழ்ந்தார். அவரோட பிள்ளைங்க எல்லாம் நல்லாப் படிச்சுப் பெரிய வேலைக்குப் போனோம். இன்னிக்கு எங்க வாரிசுங்க லட்சத்தில சம்பாதிச்சுகிட்டு வசதியா இருக்காங்க!’

‘ஆனா, ஒருவேளை அன்னிக்கு அந்த மஞ்சள் பை கிடைக்காம இருந்திருந்தா, எங்கப்பாவை அந்தமானுக்கு நாடு கடத்தியிருப்பாங்க. ’தீவாந்திர சிட்சை’ன்னா எப்படிப்பட்ட விஷயம்ன்னு எனக்கு அப்போ புரியலை. ரொம்ப நாள் கழிச்சு நேத்து உங்க புக் படிச்சபோது விளக்கமாத் தெரிஞ்சுகிட்டேன். எப்பேர்ப்பட்ட அவஸ்தையிலிருந்து எங்கப்பாவும் எங்க குடும்பமும் தப்பிச்சிருக்கோம்ன்னு புரிஞ்சுகிட்டேன். அதான் உங்ககிட்ட பேசணும்ன்னு தோணிச்சு. கிழக்கு பதிப்பக ஆஃபீஸுக்கு ஃபோன் பண்ணி உங்க நம்பர் வாங்கினேன்!’

ஒருவழியாக, புதிர் அவிழ்ந்தது. பெரியவருக்கு நன்றி!

***

என். சொக்கன் …

09 03 2011

பின்குறிப்பு 1: இந்த மேட்டரை ப்ளாகில் எழுதலாமா, அல்லது ‘அண்ணல்’போல ஆகிவிடுமா என்று ரொம்ப யோசித்தேன். பெரியவர் என் புத்தகத்தை ஒரு வரிகூடப் பாராட்டவில்லை. ஆகவே, சுவாரஸ்யமான கதை என்ற அடிப்படையில் எழுதலாம் என முடிவெடுத்தேன். வெட்டி பந்தாவாகத் தோன்றினால் என்னை மன்னித்துக் கடைசி இரண்டு பத்திகளை எச்சில் தொட்டு அழித்துவிடவும் Winking smile

பின்குறிப்பு 2: இப்போது யோசிக்கும்போது, அவர் சொன்ன கதையில் ஏதோ உதைக்கிறது. இந்தப் பெரியவருக்கு வயது 70 என்று வைத்துக்கொண்டால்கூட, அவர் பிறந்தது 1941ல். சம்பவம் நடந்தபோது அவருக்குப் பன்னிரண்டு வயது என்றால் 1950+. அப்போது இந்தியாவுக்குச் சுதந்தரம் கிடைத்துவிட்டது. அந்தமான் சிறை பயம் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை தாத்தாவின் கதையை அப்பா என்று மாற்றிச் சொல்லிவிட்டாரோ?


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other followers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 461,518 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்

Tamilish

For தமிழ் Peopleதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

March 2011
M T W T F S S
« Feb   Apr »
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
Advertisements