தீவாந்திர சிட்சை
Posted March 9, 2011
on:- In: (Auto)Biography | Awards | Characters | Cheating | People | Reading | Uncategorized
- 12 Comments
இன்று காலை ஒரு வித்தியாசமான தொலைபேசி அழைப்பு.
வலங்கைமான் என்ற ஊரில் இருந்து ஒரு முதியவர் பேசினார். அவர் தனது பெயரைச் சொல்லவில்லை. எப்படி என்னுடைய தொலைபேசி எண் கிடைத்தது என்பதையும் சொல்லவில்லை. பரபரவென்று தன்னுடைய சொந்தக் கதையை விவரித்துச் சென்றார்.
அந்தக் காலத்தில் அவருடைய தந்தை யாரிடமோ நூற்றைம்பது ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார். அதை ஒழுங்காகத் திரும்பச் செலுத்தமுடியவில்லை. கடன் கொடுத்தவன் போலிஸில் புகார் தந்துவிட்டான். அவர்கள் இவரைப் பிடித்துச் சிறையில் போட்டார்கள்.
அப்போது நூற்றைம்பது ரூபாய் என்பது மிகப் பெரிய தொகை. இவர்கள் நடுத்தரவர்க்கத்துக்கும் கீழே வாழ்ந்துகொண்டிருந்தவர்கள். எந்தவிதத்திலும் அதை உடனடியாகப் புரட்டமுடியாத சூழ்நிலை.
இதனால், இவருடைய தந்தை மூன்று நாள்கள் சிறையிலேயே இருந்திருக்கிறார். ’பணத்தை வட்டியோடு திரும்பச் செலுத்தாவிட்டால் விடுதலை செய்யமுடியாது’ என்று போலிஸ் கண்டிப்பாகச் சொல்லிவிட்டது.
மூன்றாவது நாள் மதியம், இவருடைய ஏழு வயதுத் தம்பி தெருவில் சில தோழர்களோடு விளையாடிக்கொண்டிருந்திருக்கிறார். ’கண்ணாமூச்சி’ ஆட்டத்தில் ஒளிந்துகொள்வதற்காக ஒரு மரத்தின்மேல் ஏறப் பார்த்திருக்கிறார். அங்கே இருந்த ஒரு பொந்தில் மஞ்சள் பை ஒன்று கிடைத்தது. திறந்து பார்த்தால் ஏகப்பட்ட காசு.
அவர் பதற்றத்தோடு வீட்டுக்கு ஓடி வந்து பையைக் கொடுக்க, இவர்கள் அதை எண்ணிப் பார்த்திருக்கிறார்கள். சரியாக ரூ 200/- இருந்ததாம். நேராகக் காவல்நிலையத்துக்குச் சென்று பணத்தைக் கட்டி அவரது தந்தையை விடுவித்துவிட்டார்கள்.
வலங்கைமான் பெரியவர் இந்தக் கதையை ஆர்வமாக விவரித்துக்கொண்டிருக்க, எனக்குத் தலை கிறுகிறுத்தது. ‘இதையெல்லாம் என்கிட்ட ஏன் சார் சொல்றீங்க? எனக்கும் இந்தக் கதைக்கும் என்ன சம்பந்தம்?’ என்று கேட்க நினைத்தேன். ஆனால் அவர் என்னைப் பேசவிடவே இல்லை. கதையைத் தொடர்ந்தார்.
வீட்டுக்கு வந்த தந்தை ‘அந்தப் பணம் எப்படிக் கிடைத்தது?’ என்று கேட்டாராம். இவர்கள் கதையைச் சொன்னதும் கன்னாபின்னா என்று திட்டினாராம். ‘யாருடைய காசையோ திருடி என்னைக் காப்பாற்றிக்கொள்வதற்கு நான் ஜெயிலிலேயே கிடப்பேன்’ என்று ஆவேசப்பட்டவர் மீண்டும் காவல்நிலையத்துக்குச் சென்று உண்மையைச் சொல்ல முடிவெடுத்திருக்கிறார்.
அதற்குள், அக்கம்பக்கத்தில் இருந்தவர்களெல்லாம் அவரைச் சமாதானப்படுத்தி உட்காரவைத்திருக்கிறார்கள். ‘நீங்க மறுபடி ஜெயிலுக்குப் போனா கடனைத் திரும்பச் செலுத்தாத குற்றத்துக்காக உங்களுக்குத் தீவாந்திர சிட்சைதான் கிடைக்கும்’ என்று சொல்லியிருக்கிறார்கள்.
அவ்வளவுதான். அவர் ஸ்விட்ச் அணைத்தமாதிரி ஆஃப் ஆகிவிட்டார். போலிஸ் ஸ்டேஷனுக்குச் செல்லும் முடிவையும் உடனே கைவிட்டார்!
இந்த மேட்டரெல்லாம் நடந்தபோது (என்னிடம் பேசிய) பெரியவருக்கு வயது பன்னிரண்டு. ‘தீவாந்திர சிட்சை’ என்றால் என்னவென்று அவருக்குப் புரியவில்லை. அப்பாவிடம் கேட்கப் பயம்.
’அப்புறம் அந்த விஷயமே எனக்கு மறந்துபோச்சு’ என்றார் அவர். ’அன்னிக்கு 150 ரூபாயைத் திரும்பச் செலுத்தமுடியாம ஜெயிலுக்குப் போன எங்கப்பா அப்புறம் கடன் எதுவும் வாங்காம கௌரவமா வாழ்ந்தார். அவரோட பிள்ளைங்க எல்லாம் நல்லாப் படிச்சுப் பெரிய வேலைக்குப் போனோம். இன்னிக்கு எங்க வாரிசுங்க லட்சத்தில சம்பாதிச்சுகிட்டு வசதியா இருக்காங்க!’
‘ஆனா, ஒருவேளை அன்னிக்கு அந்த மஞ்சள் பை கிடைக்காம இருந்திருந்தா, எங்கப்பாவை அந்தமானுக்கு நாடு கடத்தியிருப்பாங்க. ’தீவாந்திர சிட்சை’ன்னா எப்படிப்பட்ட விஷயம்ன்னு எனக்கு அப்போ புரியலை. ரொம்ப நாள் கழிச்சு நேத்து உங்க புக் படிச்சபோது விளக்கமாத் தெரிஞ்சுகிட்டேன். எப்பேர்ப்பட்ட அவஸ்தையிலிருந்து எங்கப்பாவும் எங்க குடும்பமும் தப்பிச்சிருக்கோம்ன்னு புரிஞ்சுகிட்டேன். அதான் உங்ககிட்ட பேசணும்ன்னு தோணிச்சு. கிழக்கு பதிப்பக ஆஃபீஸுக்கு ஃபோன் பண்ணி உங்க நம்பர் வாங்கினேன்!’
ஒருவழியாக, புதிர் அவிழ்ந்தது. பெரியவருக்கு நன்றி!
***
என். சொக்கன் …
09 03 2011
பின்குறிப்பு 1: இந்த மேட்டரை ப்ளாகில் எழுதலாமா, அல்லது ‘அண்ணல்’போல ஆகிவிடுமா என்று ரொம்ப யோசித்தேன். பெரியவர் என் புத்தகத்தை ஒரு வரிகூடப் பாராட்டவில்லை. ஆகவே, சுவாரஸ்யமான கதை என்ற அடிப்படையில் எழுதலாம் என முடிவெடுத்தேன். வெட்டி பந்தாவாகத் தோன்றினால் என்னை மன்னித்துக் கடைசி இரண்டு பத்திகளை எச்சில் தொட்டு அழித்துவிடவும்
பின்குறிப்பு 2: இப்போது யோசிக்கும்போது, அவர் சொன்ன கதையில் ஏதோ உதைக்கிறது. இந்தப் பெரியவருக்கு வயது 70 என்று வைத்துக்கொண்டால்கூட, அவர் பிறந்தது 1941ல். சம்பவம் நடந்தபோது அவருக்குப் பன்னிரண்டு வயது என்றால் 1950+. அப்போது இந்தியாவுக்குச் சுதந்தரம் கிடைத்துவிட்டது. அந்தமான் சிறை பயம் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை தாத்தாவின் கதையை அப்பா என்று மாற்றிச் சொல்லிவிட்டாரோ?
12 Responses to "தீவாந்திர சிட்சை"

என்னோட முந்தின கமென்ட் ஏதும் சைபர் கிரைம் கட்டங்களுக்குள்ள வராதில்லையா?


வலங்கைமானா? என் தங்கையை அங்கே தான் கல்யாணாம் பண்ணி கொடுத்து இருக்கோம்.
அடுத்த முறை போறப்போ இந்த பெரியவர் யாருன்னு விசாரிக்கறேன் 🙂


நன்றாக இருக்கிறது.


பெருமைக்கு அவர் ஒரு அஞ்சு வயசு கொறைச்சு சொல்லியும் இருக்கலாம்!
பை தி வே, என்னோட முந்தைய கமெண்ட்டுல வழிய’ன்னு வந்துடுச்சி. அது வலிய!


அண்ணே, தீவாந்திர சிட்சை நா என்னானு நீங்க கொடுத்த அந்தமான் லிங்கு வரை போய்ப் பார்த்துட்டேன். ..இல்லையே..
புத்தகம் வாங்கிப் படிச்சாத்தான் தெரியுமா?
ஜெயக்குமார்


This is NOT like Annal. He will put both date and time. but you only put the date..
🙂


One possible scenario… Andaman jail would’ve been extinct but the people at that time(his neighbours) wouldn’t have known it… believe me, it happens all the time 🙂


மஞ்சள் பை வழக்கம் தமிழ்நாட்டில் வெள்ளையனே வெளியேறு சமயத்தில் வந்தது என்று தாத்தா சொன்னது ஞாபகம். அதனால், கதை நடந்த சமயம் 1941 ஆக இருக்கணும். இப்போ அந்த பெரியவருக்கு வயது 82.
உங்களிடம் எழுபது வருடம் முன்னால் என்று சொல்லியிருக்கலாம்.
திருட்டுக்கு தீவாந்தர சிகிச்சை எல்லாம் கொஞ்சம் ஓவர்.
எங்க தாத்தா பர்மாவிலிருந்து (ரங்கூன்) தேக்கு மரம் எடுத்து வந்து அந்தமானில் மாட்டி (குறை அளவிற்கு பில் வைத்திருந்து – பிரிட்டிஷ் சிட்டு என்றார்) 1938 சமயத்தில் மூன்று மாதங்கள் உள்ளே இருந்தாராம்!
சுதந்திர போராட்ட வீரர்கள் மட்டும் தான் அங்கு இருந்ததில்லை.


உங்களின் எழுத்து நடை அருமையாக உள்ளது. உங்கள் புத்தகங்களை கூடிய சீக்கிரம் படித்துவிட்டு வருகிறேன்.

1 | கிரி
March 9, 2011 at 9:38 am
அட என்ன சார்! வழிய வந்த பாராட்டை போஸ்டர் அடிக்காம இருக்கறதெல்லாம் ஒரு எழுத்தாளனுக்கு அழகா சார்?
நான் நம்ம புக் ரிலீசுக்கு முன்னாலேயே நாலஞ்சு கடிதத்தை பப்ளிஷ் பண்ணி பரபரப்பு ஏற்படுத்தி புத்தக விற்பனையை தொடங்கலாம்னு பாக்கறேன். நீங்க வேற!