மனம் போன போக்கில்

நாய் (சிறுகதை)

Posted on: April 20, 2011

‘எக்ஸ்க்யூஸ் மீ’

என்னுடைய குரல் எனக்கே தெளிவாகக் கேட்காதபடி அந்த நாய் உறுமிக்கொண்டிருந்தது. அதைக் கட்டியிருந்த சங்கிலி இன்னும் சில சென்டிமீட்டர்கள் நீளமாக இருந்திருந்தால், இந்நேரம் என்னைப் பிய்த்துத் தின்றிருக்கும்.

அந்த வீட்டின் இருட்டான உள்ளறையை நோக்கி மூன்றாவதுமுறையாக ‘எக்ஸ்க்யூஸ் மீ’ என்று கதறினேன்.

ஐயா சாமிகளே, வீட்டில் யாரேனும் இருக்கிறீர்களா? உங்களுக்குக் கோடி புண்ணியம். கொஞ்சம் தயவு பண்ணி வெளியில் வந்து இந்த ராட்சஸ மிருகத்தை இழுத்துக்கொண்டு போங்கள்.

அடுத்த சில நிமிடங்களுக்குச் செயலற்றவனாக அங்கேயே நின்றிருந்தேன். அந்த நாய் இன்னும் கொலை உத்தேசங்களுடன் என்னை நோக்கி உறுமியபடியிருந்தது.

ஏழெட்டு ‘எக்ஸ்க்யூஸ் மீ’க்களை வீணடித்தபிறகு அந்தப் பெண் வெளியில் வந்தாள். என்னையும் நாயையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு அந்த நாயின் சங்கிலியை விடுவித்தாள். அது என்மேல் பாயாமல் அவளது மெலிந்த ஜீன்ஸ் கால்களுக்கு நடுவே புகுந்துகொண்டு செல்லம் கொஞ்சியது.

‘ஸாரி’ என்றேன் நான். ‘லெட்டர்ஸ் பார்க்கணும்’. உதடுகள் செயற்கையாகச் சிரித்தபோதும் மனத்தினுள் அவள்மீது வெறுப்பு மண்டிக்கொண்டிருந்தது.

எப்போதும் ஒரேமாதிரி உடுத்துகிற அசட்டுப் பெண்ணே, உன்னுடைய நாய் என்னை மிரட்டுகிறது, நான் எதற்கு உன்னிடம் ‘எக்ஸ்க்யூஸ் மீ’யும் ‘ஸாரி’யுமாக மன்னிப்புக் கேட்கவேண்டும்? மனிதர்கள் வாழ்கிற அபார்ட்மென்ட்டில் இதுபோன்ற முரட்டுப் பிராணிகளை வளர்க்கிறவர்கள்மீது வழக்குத் தொடர்ந்து உள்ளே தள்ளினால் என்ன?

‘ஷ்யூர்’ என்றபடி அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தாள் அவள். ராட்சஸ நாயைச் செல்லமாகத் தடவிக் கொடுக்கத் தொடங்கினாள்.

கண்களை மூடி அவளது வருடல் சுகத்தை அனுபவித்தபடி வாலாட்டிக்கொண்டிருக்கும் அந்த நாயை விரோதத்துடன் பார்த்தேன். என்னைக் கொல்லத் துடிக்கிற இந்த மிருகம் இவளிடம்மட்டும் பயந்த பூனைக்குட்டிபோல் பம்முவது ஏன்?

அதற்குமேல் அவளிருக்கும் திசையில் வேடிக்கை பார்ப்பது அநாகரிகமாகத் தோன்றியது. சட்டென்று தபால் பெட்டியை அணுகினேன்.

அந்த அபார்ட்மென்ட்டில் மொத்தம் பதினெட்டு வீடுகள். வரிசைக்கு மூன்று என்கிற விகிதத்தில் எல்லா வீடுகளுக்குமான தபால் பெட்டிகளை இந்த மாடிப்படி மறைவில்தான் மொத்தமாகத் தொங்கவிட்டிருந்தார்கள்.

அதே இடம்தான் இந்த நாயைக் கட்டிப்போடவும் பயன்படுகிறது. அது ஏதோ பெருஞ்செல்வத்தை, புதையலைக் காவல் காக்கும் தோரணையில் யாரையும் தபால் பெட்டிகளின் அருகே நெருங்கவிடாமல் பயங்காட்டுகிறது.

ஓரக்கண்ணால் அந்த நாயைக் கவனித்துக்கொண்டபடி ‘301’க்கான பெட்டியைத் திறந்தேன் நான். காலி.

ஒரே நேரத்தில் பத்து நாய்கள் என்மீது பாய்ந்து குதறியதுபோல் உணர்ந்தேன். இன்றைக்கும் அவளிடமிருந்து கடிதம் இல்லை.

ஜீன்ஸ் பெண்ணுக்கும் அவளுடைய செல்ல(?)ப் பிராணிக்கும் பொதுவாக நன்றி சொல்லிவிட்டுப் படிகளில் ஏறியபோது என்னிடம் முன்பிருந்த உற்சாகம் மொத்தமாக வடிந்திருந்தது. அடுத்த ஏழெட்டு மணி நேரங்களுக்காவது இந்த வேதனை குறையப்போவதில்லை.

ஸ்வேதா ஏன் பதில் எழுதவில்லை? அவள் என்னுடைய கடிதத்தைப் படித்தாளா? இல்லையா?

உண்மையில் ஸ்வேதாவுக்கு என்னுடைய ஞாபகம் இருக்கிறதா என்றே சந்தேகம் எழத் தொடங்கியிருந்தது. இப்படியா ஒரு பெண் காதல் கடிதத்துக்குப் பதினைந்து நாளாகப் பதில் எழுதாமல் தேவுடு காக்கும்?

என்மேல் கோபம் என்றால்கூடப் பரவாயில்லை. ஃபோன் செய்து, ‘ஏண்டா, நீயெல்லாம் அக்கா, தங்கச்சியோட பொறக்கலை?’ என்று அரதப்பழசாக ஒரு வசனம் பேசியிருந்தால்கூட இனி இது இல்லை என்று நிம்மதியாகியிருக்கும்.

ஆனால் இந்த விஷயத்தில் ஸ்வேதா மிக விநோதமாக நடந்துகொள்கிறாள். அவளைத் தொலைபேசியில் அழைக்கும்போதெல்லாம் வழமையாகப் பேசுகிறாள், ஆனால் கடிதம்பற்றிமட்டும் மூச் விடுவதில்லை.

ஒருவேளை, அந்தக் கடிதத்தை அவள் இன்னும் பிரித்துப்பார்க்கவில்லையோ?

அந்த நினைப்பே எனக்குப் பெரிய அதிர்ச்சி தருவதாக இருந்தது. உயிரைக் கொட்டி எழுதிய கடிதம். சினிமாபோல் அசட்டுத்தனமாக ‘ஐ லவ் யூ’ சொல்லாமல், பள்ளி நாள்களில் தொடங்கி எங்களுக்குள் இருந்த பல வருடப் பழக்கத்தின் முக்கிய நினைவுகளைச் சுட்டிக்காட்டி, அவற்றின் அடிப்படையில் நாங்கள் ஏன் ஒரு நல்ல ஜோடியாக அமையக்கூடும் என்கிற வாதங்களை அடுக்கி, வீட்டில் எனக்குப் பெண் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள் எனும் தகவலையும் சேர்த்து, மிக நாகரிகமாகதான் எனது காதலைத் தெரிவித்திருந்தேன்.

அந்தக் கடிதத்தை வாசனை திரவியம் தெளித்த உசத்திக் காகிதத்தில் எழுதி வண்ணமயமான ஒரு கவரில் போட்டுத் தந்திருக்கவேண்டுமோ? ஆஃபீஸ் இலச்சினை பதித்த அலுவல் உறையில் இட்ட காதல் கடிதத்தை யார்தான் மதிப்பார்கள்?

உண்மையில் ஸ்வேதாவுக்கு நான் கடிதம் எழுதியிருக்கவேண்டிய அவசியமே இல்லை. மாதம் ஒருமுறை ஊருக்குப் போகிறபோது அப்பா – அம்மாவுடன் செலவிடுகிற நேரத்தைவிட அவளோடு பேசுகிற பொழுதுகள்தான் அதிகம். சொல்லவந்ததை நேரடியாகவே பேசியிருக்கலாம்.

ஆனால் இந்த விஷயத்தை அவளிடம் நேருக்கு நேர் கண்ணைப் பார்த்துச் சொல்லமுடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. என்னுடைய நோக்கம் யோக்கியமானதுதான். ஆனாலும் அவளிடம் அதைப்பற்றி விரிவாகப் பேசுவது சாத்தியப்பட்டிருக்காது. மூன்றாவது வாக்கியத்தில் அவள் உணர்ச்சிவயப்பட்டு ஊரைக் கூட்டிவிடலாம் என்கிற சந்தேகம் அல்லது பயம் எனக்கிருந்தது.

ஆகவேதான் ஒரு கடிதம் எழுதினேன். சென்றமுறை ஊரிலிருந்து கிளம்புகிறபோது ‘நான் போனப்புறம் படிச்சுப் பாரு’ என்று அவளிடம் ரயிலடியில் வைத்துக் கொடுத்தேன்.

அதன்பிறகு ஏழெட்டு முறை ஃபோனில் பேசியாகிவிட்டது. இந்தக் கடித விஷயத்தைத்தவிர மற்றதெல்லாம் பேசுகிறாள். குரலில் கோபம் இல்லை, காதலும் இல்லை.

‘என் லெட்டர் படிச்சியா?’ என்று வாய்விட்டுக் கேட்பதற்குத் தயக்கமாக இருக்கிறது. அவளாக பதில் கடிதம் எழுதும்வரை அதுபற்றி விசாரிப்பது நாகரிகமில்லையே.

அதனால்தான் தினசரி தபால் பெட்டியோடு என்னுடைய யுத்தம் தொடர்கிறது, அதைக் காவல் காக்கிற ராட்சஸ நாயுடனும்.

இன்றைக்கும் ஸ்வேதாவின் பதில் வரவில்லை என்கிற ஏக்கத்தை, ஏமாற்றத்தைக்கூட ஒருமாதிரியாகத் தாங்கிக்கொண்டு அடுத்த நாளை எதிர்பார்க்கமுடிகிறது. ஆனால் இந்த நாய் எனக்குள் உண்டாக்குகிற தினசரித் தாழ்வு மனப்பான்மையைதான் என்ன செய்வது என்று தெரியவில்லை.

தினந்தோறும் என்னைப் பார்த்ததும் அந்த நாயின் கண்களில் ஒளி சேர்ந்துகொள்கிறது – பசித்தவன் முகம் சாப்பாட்டைப் பார்த்ததும் பிரகாசமாவதுபோல.

நாய்கள் மனிதர்களைக் கடித்துச் சாப்பிடுமா என்று தெரியவில்லை. ஆனால் அந்த நாயின் கூரிய பற்களைப் பார்க்கும்போது, அதற்கு வேறெந்த நோக்கமும் இருக்கமுடியும் என்று தோன்றவில்லை.

பற்களை ஒன்றோடொன்று சேர்த்துத் தேய்த்தபடி என்மீது பாயத் தயாராகும் அந்த நாய். கூடவே கர்ஜனைபோன்ற ஓர் உறுமல், கால்களைத் தரையில் உதைத்தபடி முன்னேறுகிற வேகம், அதைக் கதவோடு பிணைக்கிற அந்தச் சங்கிலிமட்டும் இல்லாவிட்டால் நான் என்றைக்கோ போய்ச் சேர்ந்திருப்பேன்.

என்னை இப்படி மிரட்டுகிற அந்த நாய் அந்த ஜீன்ஸ் பெண்ணிடம்மட்டும் மயங்கிக் குழைவது எனக்குத் தீராத ஆச்சர்யம். அதுவரை கொடூர வில்லன்போல் என்னை முறைத்துவிட்டு அவளைப் பார்த்ததும் சட்டென்று பச்சைக் குழந்தைபோல் மாறிவிடுகிறது. அவள் தலையைத் தடவ, வாலாட்டிக்கொண்டு மயங்கிக் கிடக்கிறது.

என்றைக்காவது நானும் அதன் தலையைத் தடவிக் கொடுக்கவேண்டும் என்று யோசித்திருக்கிறேன். அப்படிச் செய்தால், ஒருவேளை என்னிடமும் அந்த நாய் நட்புக் காட்டலாம்.

ஆனால் அப்படி நினைத்து நான் கை நீட்டினால், அடுத்த விநாடி என்னுடைய விரல்களில் ஒன்றிரண்டு காலாவதியாகிவிடுவது நிச்சயம். மிருகங்களை அன்பால் அடக்கிவைக்கிற யுக்தி மிகச் சிலருக்குதான் சாத்தியம், முக்கியமாகப் பெண்களுக்கு.

அன்புக்குக் கட்டுப்படுகிற அந்த நாய் எப்படியோ நாசமாகப் போகட்டும், ஸ்வேதா என்னைப் பிடிவாதமாகப் புறக்கணிப்பது ஏன்?

மூன்று மாடிகள் படியேறுவதற்குள் ஸ்வேதாவின் கடிதம் வராத சோகம் என்னை முழுக்க ஆக்கிரமித்திருந்தது. ஏன் இந்தப் பெண் என்னை இப்படி வதைக்கிறது? அவள்மீதான காதலையும் மிஞ்சிக் கோபம் பொங்கியது.

இனி பொறுப்பதற்கில்லை. அடுத்த வாரம் ஊருக்குச் செல்ல நினைத்திருந்தவன் இந்த வெள்ளிக்கிழமையே கிளம்புவதாகத் தீர்மானித்தேன்.

அவளை நேரில் பார்த்தாலும்கூட ‘லெட்டர் என்னாச்சு?’ என்று கேட்கிற தைரியம் எனக்கு வந்துவிடப்போவதில்லைதான். ஆனால் என்னை நேரடியாகப் பார்த்தபிறகுதான் பதில் சொல்லவேண்டும் என்று அவள் நினைத்திருக்கலாம். யார் கண்டது? என்னைப்போல் அவளும் நேரில்தான் பதில் கடிதத்தைக் கொடுக்க உத்தேசித்திருக்கிறாளோ என்னவோ.

பிரம்மச்சாரிகள் அறையில் யார் ஊருக்குச் செல்வதென்றாலும் மற்றவர்களுக்கு உற்சாகம் தொற்றிக்கொள்கிறது. ‘மறக்காம ஸ்வீட், காரம்ல்லாம் வாங்கிட்டு வா மச்சி’ என்று வாழ்த்தி(?) வழியனுப்பிவைத்தார்கள்.

சனிக்கிழமை. ஸ்வேதா ரயில் நிலையத்துக்கே வந்திருந்தாள். என்னைப் பார்த்ததும் அதே பழைய சிரிப்பு. அதில் துளி கோபம் இல்லை.

அவள் கையில் கடிதம் எதுவும் இல்லை. முந்தைய சில வாரங்களின் உள்ளூர் நிகழ்வுகளை மிக உற்சாகமாக வர்ணித்தபடி என்னுடன் நடந்துவந்தாள்.

நான் எழுதிய அந்தக் கடிதம் என்னைதான் தொடர்ச்சியாக உறுத்திக்கொண்டிருந்தது. ஆனால் அவள் அதைப்பற்றி யோசிப்பதாகவே தெரியவில்லை.

ஸ்வேதாவின் பேச்சும் பழகலும் எப்போதும்போல் சகஜமாகதான் இருந்தது. கடிதத்தைப்பற்றி அவளிடம் ஏதும் கேட்டு இந்த நெருக்கத்தை உடைத்துவிட எனக்குப் பிடிக்கவில்லை. மிகவும் தயங்கியவனாக அவளுக்குப் பின்னே சென்றுகொண்டிருந்தேன்.

‘என்னாச்சு? எதுவும் பேசமாட்டேங்கறே?’ என்றாள் ஸ்வேதா.

‘ஒண்ணுமில்லை’ என்றேன் வாலாட்டியபடி.

***

நன்றி: குங்குமம் – 2008 ஏப்ரல்

Advertisements

8 Responses to "நாய் (சிறுகதை)"

//உயிரைக் கொட்டி எழுதிய கடிதம். சினிமாபோல் அசட்டுத்தனமாக ‘ஐ லவ் யூ’ சொல்லாமல், பள்ளி நாள்களில் தொடங்கி எங்களுக்குள் இருந்த பல வருடப் பழக்கத்தின் முக்கிய நினைவுகளைச் சுட்டிக்காட்டி, அவற்றின் அடிப்படையில் நாங்கள் ஏன் ஒரு நல்ல ஜோடியாக அமையக்கூடும் என்கிற வாதங்களை அடுக்கி, வீட்டில் எனக்குப் பெண் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள் எனும் தகவலையும் சேர்த்து, மிக நாகரிகமாகதான் எனது காதலைத் தெரிவித்திருந்தேன்.//

என்னக் கொடுமை இது. என்னோட டைரி எப்போ உங்க கைக்கு கிடைச்சது?

சுவையான சிறுகதை. நன்றாக இருக்கிறது.

//வாலாட்டியபடி.//

🙂 நன்று.

ஊரிலிருந்து வந்திருந்த நண்பரின் அப்பா விமானத்தில் படிக்க கொண்டு வந்த குங்குமத்தைப் புரட்டியபோது இந்தச் சிறுகதை அதில் இருந்தது. அப்போதே படித்திருக்கிறேன்.

//இந்த நெருக்கத்தை உடைத்துவிட எனக்குப் பிடிக்கவில்லை// கடைசியா ஸ்வேதா அத லெட்டர் படிச்சாங்களா இல்லையா? மெகா சீரியல் வெள்ளிக்கிழமை அன்னிக்கு போடுற தொடரும் மாதிரி செம சஸ்பென்ஸ், எப்படியாவது சேத்து வெச்சுருங்க.

அய்யா சொக்கரே!
என் வீட்டு ப்ஃன்ஷனுக்கு நான் இன்விடேஷன் லெட்டரில் அனுப்பிச்சு அது போய் சேரவேயில்லை. அதுனால என் கஸின் கோபித்துக் கொண்டுவிட்டான். நானும் நம்ம லெட்டர் போட்டும் அவன் வரவேயில்லையேன்னு அவன் மேல கோபித்துக் கொண்டேன். இது ஒரு சில வருடங்கள் கழித்துத் தான் எங்களிருவருக்கும் தெரியவந்தது. ஏன் சார்! ஒரு எஸ்.எம்.எஸ் அனுபிச்சு குயிக்கா வேலைய முடிக்கறத விட்டுபுட்டு…………..

நகைச்சுவையை விலக்கி, கதை எப்படி முடியுமோ என்ற பயம் கதை பாதியிலேயே வந்துவிடுகிறது. விறு விறு….

நாய்கள் மனிதர்களைக் கடித்துச் சாப்பிடுமா என்று தெரியவில்லை. ஆனால் அந்த நாயின் கூரிய பற்களைப் பார்க்கும்போது, அதற்கு வேறெந்த நோக்கமும் இருக்கமுடியும் என்று தோன்றவில்லை.

-இவ்வாறு பல இடங்களிலும் கதை சொல்லும் நேர்த்தி அற்புதம் ஆனால் கதை சமூகத்திற்கு சொல்லும் செய்தி என்ன?

சூப்பர் சஸ்பென்ஸ் 🙂 நாய் தான் சதி செய்திருக்கும். லெட்டர் பாக்ஸின் மேல் தாவி கவ்வி அவள் அனுப்பிய பதில் லெட்டரை குதறி போட்டிருக்குமோ?
நிற்க!
என் மகனுக்கும் அதி நாய் பயம். ஒரு முறை ஹவாய் போயிருந்தபோது அவனுக்கு பதினாலு வயதிருக்கும். நாங்கள் தங்கியிருந்த இடத்தில் இருந்து சைக்கிள் எடுத்துக் கொண்டு அந்தத் தெரு முனை வரை போய் விட்டு வருவதாகச் சொல்லி சென்று வெகு நேரமாகியும் வராததால் கவலைக் கொண்டு தேடினால் எங்கோ ஒரு ஓரத்தில் சைக்கிளுடன் நின்றுக் கொண்டிருக்கிறான். கேட்டால் ஒரு வீட்டு வாசலில் நாய் நிற்கிறது, தாண்டி போய்விட்டேன் திரும்பி வர பயமாக இருந்தது என்றான். அப்போ செல் போன் கிடையாது.

ஆதாலால் நாய் பயம் என்னவென்று எனக்கு தெரியும். என் கணவருக்கும் நாய் பிடிக்காது :-))

amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 521 other followers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 451,670 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்

Tamilish

For தமிழ் Peopleதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

April 2011
M T W T F S S
« Mar   May »
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
Advertisements
%d bloggers like this: