மனம் போன போக்கில்

Archive for May 2011

முன்கதை

அத்தியாயம் – 1

அத்தியாயம் – 2

அத்தியாயம் – 3

அத்தியாயம் – 4

5

‘காஜு கத்லி’ என்றாள் அவள். ‘இது ஒரு நார்த் இந்தியன் ஸ்வீட், மதராஸிகளுக்குப் பிடிக்குமோ பிடிக்காதோ’ கொச்சை ஆங்கிலத்தில் சொல்லிவிட்டுச் சிரித்தாள்.

பிளாஸ்டிக் டப்பாவில் அவள் நீட்டிய இனிப்பிலிருந்து மேலும் ஒரு துளியை விண்டு வாயினுள் போட்டுக்கொண்டு ‘இட்ஸ் வெரி நைஸ்’ என்று உபசாரமாகச் சொன்னான் அரவிந்தன். ‘இப்போதெல்லாம் சவுத் இந்தியாவில் உங்கள் ஊர் ஸ்வீட்தான் நிறைய விற்கிறது!’

‘நாங்களெல்லாம் ரொம்ப இனிப்பான மனிதர்களாக்கும்’ என்று சொல்லிவிட்டு மீண்டும் கலகலவென்று சிரித்தாள் அவள். ‘இன்னும் கொஞ்சம் ஸ்வீட் வேணுமா?’

‘ஐயோ, போதும்!’, கைகளிரண்டையும் முன்னே நீட்டி மறுத்தான் அரவிந்தன். ‘இதற்குமேல் சாப்பிட்டால் திகட்டிவிடும்.’

‘ஓக்கே’ என்று தோள்களைக் குலுக்கிக்கொண்டு முன்னே நடந்தாள் அவள். மேஜைமேலிருந்த காகிதத் துண்டில் கைகளை நன்றாகத் துடைத்துக்கொண்டு அமர்ந்தான் அரவிந்தன்.

காலையிலிருந்து இதுவரை எல்லாம் ஒழுங்காகச் சென்றுகொண்டிருக்கிறது. உங்கள் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை இதோ இந்த விநாடியில் கிழித்துப்போட்டுவிடப்போகிறேன் என்று எகிறிக் குதித்துக்கொண்டிருந்த கஸ்டமர் இன்று காலை அரவிந்தனை நேரில் பார்த்ததும் குழைந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டான்.

எல்லோருக்கும் அவரவருடைய வேலைதான் முக்கியமாக இருக்கிறது. எப்படிக் கத்தினால் எதிராளிக்கு அஸ்தியில் ஜுரம் காணும் என்று தெரிந்துகொண்டு அதன்படி கூச்சலிட்டு வேலை வாங்கிவிடுகிறார்கள்.

இத்தனைக்கும் இந்த வேலை அப்படியொன்றும் அவசரமில்லை. ஏற்கெனவே பெங்களூரில் ஓரளவு தயாராகிவிட்ட விஷயம்தான். இன்னும் இரண்டு வாரம் பொறுத்திருந்தால் எல்லாப் பூச்சிகளையும் பிடித்துக் கொன்று பிழையில்லாமல் தந்திருப்பான்.

ஆனால் அதற்கெல்லாம் நேரமில்லை. செய்தவரையில் இப்போதே கொண்டுவந்து கொட்டு என்று ஒரு வாரமாக அலறிச் சாதிக்கிறான் காசு கொடுத்தவன். நியாயப்படியான, தர்க்கரீதியிலான எந்த சமாதானங்களும் அவனிடம் செல்லுபடியாகவில்லை. ஆகவே ‘இந்தாடா மஹாராஜா’ என்று எல்லாவற்றையும் தூக்கிக்கொண்டு கிளம்பி வந்தாகிவிட்டது. எழுதிய சாஃப்ட்வேரை ஓரளவு தட்டிக்கொட்டி நேராக்கி இங்கே உள்ள பிரதானக் கணினியில் நிறுவியாகிவிட்டது. ஆங்காங்கே சில பிழைகள் தென்பட்டாலும் குறையில்லாமல்தான் ஓடுகிறது.

என்றாலும், அரவிந்தனுக்கு இதில் முழுத் திருப்தி இல்லை. அரைத் திருப்திகூட இல்லை. ஒரு வேலையை முழுசாகச் செய்ய நேரம் கொடுக்காமல் அரை வேக்காட்டில் பரிமாறக் கேட்கிறவர்களை என்னதான் செய்யமுடியும்?

இத்தனைக்கும் நடுவே ஒரே ஒரு நிம்மதி, ஏழெட்டு நாள்களாவது ஆகும் என்று நினைத்திருந்த வேலை இன்றைக்கோ நாளைக்கோ முடிந்துவிடும்போல் தோன்றுகிறது. அதிர்ஷ்டமிருந்தால் புதன்கிழமை மதிய நேர ஃப்ளைட் எதிலாவது தொற்றிக்கொண்டு கிளம்பிவிடலாம்.

செல்விக்கு ஃபோன் செய்யலாமா என்று யோசனையாக இருந்தது அரவிந்தனுக்கு. ஆனால் இப்போது அவளிடம் இதைச் சொல்லிவிட்டு நாளைக்குப் புதிதாக வேறொரு வேலை முளைத்துவிட்டால் திரும்பிச் செல்வது தாமதமாகிவிடும். அந்த ஏமாற்றத்தை அவளுக்குத் தரவேண்டாமே!

சிறிது நேரம் இதே யோசனையில் புதுப் பேனாவால் மேஜை நுனியில் தட்டிக்கொண்டிருந்தான். பிறகு பேனாவைப் பாக்கெட்டில் செருகிக்கொண்டு மேஜையோரத்திலிருந்த தொலைபேசியை நடுவில் இழுத்துக் காதுக்குக் கொடுத்தபடி செல்பேசியில் சந்திரனின் எண்ணைத் தேடலானான்.

‘சந்திரன்’ என்ற பெயரிலேயே மொத்தம் மூன்று எண்கள் இருந்தன. எல்லாமே பத்து இலக்கங்கள் கொண்ட செல்பேசி எண்கள்தான். ஆகவே அவற்றில் எது அவனுடைய இப்போதைய எண் என்று நிச்சயமாகத் தெரியவில்லை.

மூன்றில் நடுவாக இருந்த எண்ணைத் தேர்ந்தெடுத்து ஒற்றினான் அரவிந்தன். பத்து எண்களையும் தட்டி முடித்த மறுவிநாடி ‘இந்த எண் உபயோகத்தில் இல்லை’ என்று ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் செய்தி வந்தது. இணைப்பைத் துண்டித்துவிட்டு வேறோர் எண்ணை முயன்றான். அதுவும் தோல்வி. மூன்றாவதும் அதே கதைதான்.

பாவிப் பயல். மீண்டும் செல்பேசி எண்ணை மாற்றிவிட்டான். அல்லது, பழையபடி வெளிநாடு சென்றுவிட்டானோ என்னவோ!

சமீபத்தில் எப்போதோ ’புது வீடு வாங்கியிருக்கிறேன். அடுத்த வாரம் கிரகப்பிரவேசம்’ என்று ஈமெயில் அனுப்பினான். அதைத் தேடிப் பிடித்தால் முகவரி, ஃபோன் நம்பர் எல்லாம் கிடைத்துவிடும்.

தொலைபேசியை அதனிடத்தில் வைத்துவிட்டு, கணினியை உயிர்ப்பித்து இணையத்துள் புகுந்தான் அரவிந்தன். அவனது நிறுவனத்தின் பிரத்யேக மின்னஞ்சல் தளத்தினுள் நுழைந்து ‘சந்திரன்’ என்ற பெயரில் தேடியபோது அந்த ஈமெயில் உடனடியாகக் கிடைத்துவிட்டது.

பம்பாய்தான். ஆனால் அவனுடைய அபார்ட்மென்டின் பெயர் வாயில் நுழையும்படியாக இல்லை. ஆகவே, முகவரியைத் தவிர்த்து அங்கே கண்டிருந்த தொலைபேசி எண்ணைமட்டும் குறித்துக்கொண்டு அழைத்தான் அரவிந்தன்.

‘ஹலோ, யார் பேசறது?’, என்று சுத்தமான ஹிந்தியில் கேட்ட பெண் குரலில் இப்போது கொஞ்சமும் மலையாள வாடை இல்லை. ஆனால் கைச்சுற்றல் எந்திரத்தில் காபிப்பொடி அரைத்தாற்போன்ற அந்த லேசான கரகரப்புதான் சந்திரன் மனைவியை அவனுக்கு அடையாளம் காட்டியது. இப்போது அவளுக்குத் தன்னை நினைவிருக்குமா என்கிற தயக்கத்துடன் அறிமுகப்படுத்திக்கொண்டான்.

‘எப்படி இருக்கீங்க? சௌக்யமா?’, உற்சாகமாக விசாரித்தாள் அவள். ‘உங்க வொய்ஃப் நல்லாயிருக்காங்களா?’

அவளது விசாரிப்புகளுக்கெல்லாம் பொறுமையாக பதில் சொல்லிவிட்டு சந்திரனின் செல்பேசி எண்ணைக் கேட்டான் அரவிந்தன். ‘அவங்க இப்போ துபாய்ல இருக்காங்களே’ என்றாள் அவள். ‘அந்த நம்பர் கொடுக்கட்டுமா?’

சந்திரன் ஊரில் இல்லை என்று தெரிந்ததும் அரவிந்தனுக்கு ரொம்ப ஏமாற்றமாக இருந்தது. என்றாலும் அந்த எண்ணைக் கேட்டுக் குறித்துக்கொண்டான். ‘அவன் பேசினான்னா நான் பம்பாய் வந்திருந்தேன்னு சொல்லுங்க’ என்றான்.

‘இவ்ளோ தூரம் வந்திருக்கீங்க, வீட்டுக்கு வாங்களேன்’, என்றாள் அவள். ‘உங்க மனைவியும் உங்களோடதான் வந்திருக்காங்களா?’

‘இல்லைங்க. அடுத்தவாட்டி கண்டிப்பா வர்றேன்’ என்றான் அரவிந்தன். ‘நான் இன்னிக்கு நைட் ஃப்ளைட்ல ஊருக்குக் கிளம்பணும். அதனாலதான்’ என்று பிற்சேர்க்கையாகச் சேர்த்தான்.

‘சரிங்க. ஞாபகம் வெச்சிருந்து ஃபோன் பண்ணதுக்கு ரொம்ப தேங்க்ஸ். அவர்கிட்டே சொன்னா சந்தோஷப்படுவார்.’

தொலைபேசியைக் கீழே வைத்தபிறகும் சிறிது நேரத்துக்கு ஏதோ பிரமை பிடித்தவன்போல் அதையே பார்த்துக்கொண்டிருந்தான் அரவிந்தன். பசித்தது.

சந்திரன் மீண்டும் வெளிநாடு சென்றிருக்கிறான் என்கிற தகவல் அவனுக்கு ஆச்சரியமூட்டியது. ஏனெனில் சென்றமுறை அவனைச் சந்தித்தபோது ’எத்தனை குறைச்சலாக சம்பளம் வந்தாலும் பரவாயில்லை, இனிமேல் இந்தியாவில்தான்’ என்று கற்பூரம் அணைக்காத குறையாகச் சத்தியம் செய்திருந்தான்.

‘எல்லாரையும் விட்டுட்டு அங்கே போய் உட்கார்ந்திருக்கிறது-ன்னா சுத்தப் பைத்தியக்காரத்தனமா இருக்குடா’ என்பது அவனுடைய வாதமாக இருந்தது. ‘ஃபேமிலியோட அங்கே போறதுகூடக் கொஞ்சம் பரவாயில்லை. அப்பவும் நம்ம ஊர்ச் சாப்பாடு, சூழ்நிலையையெல்லாம் மிஸ் பண்ணுவோம்தான். ஆனா இப்படிக் கைவிடப்பட்டமாதிரி தனிமையா உணரமாட்டோம்.’

அரவிந்தன் இதுவரை வெளிநாடு சென்றதில்லை என்பதால் அப்போது அவன் பேசப்பேச நிச்சயமில்லாமல்தான் தலையாட்டிக்கொண்டிருந்தான். ஆனால் இப்போது உள்ளூர்ப் பயணங்களின்போதே அந்தத் தனிமையை அனுபவித்துக்கொண்டிருப்பதால் அவன் சொன்னதன் நியாயம் புரிகிறாற்போலிருக்கிறது.

ஆனால் இத்தனை பேசிவிட்டு அவன் ஏன் மீண்டும் வெளிநாடு சென்றிருக்கிறான் என்பதுதான் புரியவில்லை. ‘நம்ம ஊரோட ஒப்பிட்டா நிறைய்ய காசு வருது. அது உண்மைதான். ஆனா எல்லாமே நல்லது-ன்னு ஒரு விஷயம் இருக்கமுடியுமா என்ன? நாங்க எதையெல்லாம் இழக்கறோம்-ன்னு எங்களுக்குதானே தெரியும்?’ என்றபோது அவன் முகத்தில் தெரிந்த வேதனை உண்மைபோல்தான் தோன்றியது.

‘இதில வேடிக்கை என்னன்னா, இதெல்லாம் நாங்களே வரவழைச்சுகிட்ட விஷயம்-ங்கறதால வாய் விட்டுப் புலம்பக்கூட முடியாது. எதுனா பேசினா, காசுக்காகதானே இங்கே வந்தே? எதிர்பார்த்த அளவு காசு கிடைக்குதுதானே? அப்போ வாயைப் பொத்திகிட்டு சும்மாக் கிட-ன்னு அதட்டுவாங்க’ என்று சொல்லிச் சிரித்தான் சந்திரன். ‘உனக்கு என்னோட சின்ஸியர் அட்வைஸ்டா, தயவுசெஞ்சு பொண்டாட்டியை இங்கே விட்டுட்டு வெளிநாடு, அது, இதுன்னு கிளம்பிடாதே. இங்கே அவங்களும் அங்கே நீயும் தனித்தனியா அனுபவிக்கிற மனக்கஷ்டம் இருக்கு பாரு, மகாக் கொடுமை. ஒருவேளை உங்க பிரிவு விரிசலாகிட்டா அப்புறம் அதைச் சரி செய்ய பணத்தால முடியாது, எதாலயும் முடியாது.’

இப்படியெல்லாம் சந்திரன் நிறுத்தாமல் பேசிக்கொண்டிருந்தபோது உடல்ரீதியிலான தேவைகளின் இழப்பைதான் அவன் சொல்கிறான் என்று சந்திரன் நினைத்திருந்தான். ஆகவே அப்போது அதைப்பற்றி மேலும் கேட்பதற்குக் கொஞ்சம் கூச்சமாகவே இருந்தது அவனுக்கு.

ஆனால் அந்தப் புரிதல் பதின்பருவத்தின்போது காமத்தையும் தாண்டிய நேசம் ஒன்று இருக்கலாம் என்று ஊகிக்கக்கூட முடியாததுபோல்தான். சந்திரனின் அன்றைய பேச்சுக்கு வேறு அர்த்தங்கள் அதன்பிறகான பயணங்களின்போது மெல்ல மெல்ல புரியத்தொடங்கின.

ஊரிலிருந்து கிளம்பும்போதே மனது அழுந்திப் பிசைவதும், அதன்பிறகு சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் தொலைபேசியில் அழைத்து ஏதேனும் விசாரிக்கவேண்டும் என்கிற பரபரப்பும், எந்தச் சவுகர்யம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் அதைச் செல்வி எப்படிக் கையாண்டிருப்பாள் என்றே சிந்தனை ஓடுவதும், நட்சத்திர ஹோட்டல் சாப்பாட்டை வாயில் திணித்தபடி, இந்நேரம் செல்வி நேற்றைய சாம்பாரைச் சூடு பண்ணிச் சாப்பிட்டுக்கொண்டிருப்பாளா என்று குற்றவுணர்ச்சியும், வந்த வேலை முடிந்தபின் அடுத்துக் கிடைக்கும் முதல் விமானத்தில் திரும்பிவிடவேண்டும் என்கிற துடிதுடிப்பும் துணையின்மீது பாயத் துடிக்கிற மிருக இச்சைதானா? கேள்வியாகவே இருந்தது அவனுக்கு.

ஆனால் பயணம் சிறிதானாலும் பெரிதானாலும் ஒருவழியாக அது தீர்ந்து அவனை விடுவிக்கிற இரவுகள் காமத்தின்பாற்பட்டவையாக இல்லை என்பதுதான் அவனுக்குக் கிடைத்த முதல் போதிமரச்சுவடு. பயணப் பெட்டியைக் கீழே இறக்கிவைத்துவிட்டு டாக்ஸிக்காரனுக்குக் கணக்குத் தீர்த்துக்கொண்டிருக்கும்போதே மேல் மாடியிலிருந்து உற்சாகமாகக் கையசைக்கும் செல்வியின் சிரித்த முகம் தருகிற நிம்மதி அதன்பிறகு வேறெதுவும் தேவையில்லை என்றாக்கிவிடுகிறது.

சிறு பிள்ளைகள் பாதுகாப்புக்காக ஒரு துண்டையோ போர்வையையோ கையில் பற்றிக்கொண்டிருப்பதுபோல்தான் தாங்கள் ஒருவரையொருவர் இறுகப் பிடித்துக்கொண்டிருக்கிறோம் என்று தோன்றியது அரவிந்தனுக்கு. அந்த நெருக்கமும் கதகதப்பும்தான் எல்லாமே. அது இல்லாதபோது, பிரிவு சில நிமிடமானாலும் சரி, சில வருடமானாலும் சரி, ’இழந்தது எப்போது மீண்டும் கிடைக்கும்?’ ’ஒருவேளை கிடைக்காமலே போய்விடுமோ?’ என்றெல்லாம் பைத்தியக்காரத்தனமாக நினைக்கத் தோன்றிவிடுகிறது.

ஒருவிதத்தில் இதுவும் சுயநலம்தான். எனது பாதுகாப்பிற்காக, நிம்மதிக்காக நான் உன்னைச் சார்ந்திருக்கிறேன். ஆனால் நீயும் அவ்வாறே எனும்போது தனிப்பட்ட தேவைகள், எதிர்பார்ப்புகள் மசங்கலாகி அந்தச் சகப்பிணைப்புதான் இருவருக்கும் தெம்பு தருவதாக இருக்கிறது.

இப்படியெல்லாம் பலவீனமாக யோசிப்பது பிற்போக்குச் சிந்தனையாகாதா என்று சிரிப்புடன் எண்ணிக்கொண்டான் அரவிந்தன். அன்றைக்குச் சந்திரன் பேசியதையெல்லாம் அப்படிதான் அவன் நினைத்தான்.

ஆனால் பிற்போக்கும் முற்போக்கும் நமது கண்கள் எந்தத் திசையில் திரும்பியிருக்கிறது என்பதைப்பொறுத்துதானே?

(தொடரும்)

***

என். சொக்கன் …

30 05 2011

முன்கதை

அத்தியாயம் – 1

அத்தியாயம் – 2

அத்தியாயம் – 3

4

‘ஃப்ளைட் லேட்டா?’ செல்வியின் குரல் எங்கோ ஒரு பள்ளத்தாக்கிலிருந்து கேட்பதுபோல் இருந்தது.

‘ஆமாம்பா’ முடிந்தவரை உற்சாகமாகப் பேச முயன்றான் அரவிந்தன். ‘பெங்களூர்ல கிளம்பினபோதே முக்கால் மணி நேரம் லேட், அப்புறம் மும்பையில கண்டபடி மழை பெய்யுதுன்னு கடல்மேல கால் மணி நேரம் வெட்டியாச் சுத்திட்டுதான் கீழே இறங்கினான்.’

காதுகளில் இன்னும் வலி மிச்சமிருந்தது. பத்தரை மணிக்கே மும்பை வந்திருக்கவேண்டும். ஏதோ தொழில்நுட்பக் கோளாறுகளால் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டு, ஒருவழியாக அங்கே சென்று சேர்ந்து தரையிறங்கும்போது நள்ளிரவாகிவிட்டது. எப்படியோ, ஒழுங்காகக் கொண்டுவந்து சேர்த்தார்களே.

‘சரிப்பா, ஜாக்கிரதை’ என்றாள் செல்வி. ‘ஒழுங்காச் சாப்பிடு, நேரத்துக்குத் தூங்கி ரெஸ்ட் எடு, கேள்வி கேட்கிறதுக்கு ஆள் இல்லைன்னு ராத்திரி ரொம்ப நேரமெல்லாம் முழிச்சிகிட்டிருக்காதே!’

‘ஓகேம்மா, நீயும் ஜாக்கிரதை’ என்றான் அரவிந்தன். ‘எதுனா அவசரம்ன்னா ஃபோன் பண்ணு, டேக் கேர்!’

‘ம்ம், குட் நைட்’, அவன் பேசுவதற்குள் ஃபோனை வைத்துவிட்டாள் அவள்.

அரவிந்தனின் கண்களில் எரிச்சல் மண்டியிருந்தது. மணி ஒன்றரை, இனிமேல் தூங்கமுடியுமா என்று தெரியவில்லை. அப்படியே தூங்கினாலும் மிஞ்சிப்போனால் ஐந்து மணி நேரம் தூங்கலாம். காலையில் சீக்கிரமாக எழுந்து குளித்து அலுவலகத்துக்குப் போகவேண்டும்.

பெரிய படுக்கையின் வலது ஓரமாகச் சரிந்து படுத்திருந்த அரவிந்தன் கம்பளியை நன்கு போர்த்திக்கொண்டு டிவியை உயிர்ப்பித்தான். வெளியே அட்டகாசமாக மழை பெய்துகொண்டிருந்தபோதும் தொலைக்காட்சிமட்டும் ஒழுங்காக இயங்கிக்கொண்டிருந்தது. இருநூற்றுச் சொச்ச சானல்களில் தமிழ் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. ஒவ்வொன்றாகத் தேடுவதற்குப் பொறுமையில்லை. ஏதோ ஒரு ஹிந்தி சினிமாப் பாட்டுச் சானலில் நிலைகொண்டான் அரவிந்தன்.

புளித்த ஏப்பம்போல் ஏதோ பொங்கிவந்தது. வயிறு லேசாக வலிப்பதைப்போலிருந்தது. விமான நிலையத்தில் நெடுநேரம் காத்திருந்தபோது கண்டதையும் வாங்கித் தின்றது தப்பாகிவிட்டது. போதாக்குறைக்கு விமானம் மேலேறியபிறகு, ராத்திரி பதினொரு மணி என்றும் பார்க்காமல் கொழுப்பு நிறைந்த உணவு வகைகளாகத் தட்டில் நிரப்பினார்கள்.

அதையெல்லாம் சாப்பிட்டாகவேண்டும் என்று யாரும் குச்சியை வைத்துக்கொண்டு மிரட்டுவதில்லைதான். ஆனால், ஜஸ்ட் ஒன்றரை மணி நேரப் பயணத்திற்கு இத்தனை ஆயிரம் கொட்டிக் கொடுக்கிறோமே, பதிலுக்கு அவர்கள் கொடுப்பதையெல்லாம் சாப்பிட்டுத் தீர்ப்போம் என்கிற அல்ப மனோநிலை, மறுக்கத் தோன்றுவதில்லை.

தவிர, வெளியூர்ப் பயணங்களின்போதெல்லாம் எல்லாச் செலவுகளுக்கும் கம்பெனி பணம் கொடுத்துவிடும். ஆகவே காசுக் கணக்குப் பார்க்காமல் எதை வேண்டுமானாலும் தின்று தீர்க்கலாம்.

இப்படிக் கண்டபடி சாப்பிடுகிற சுதந்திரம் முதல் ஒன்றிரண்டு நாள்களுக்கு வேண்டுமானால் ஜாலியாக இருக்கும். ஆனால் அதன்பிறகு, எந்த வேலையிலும் கவனம் செலுத்தமுடியாதபடி வயிற்றுக் கோளாறுகள் தொடங்கிவிடும், தினசரி தூக்கம் கெட்டுப்போகும், பணி நேரத்தில் உடம்பெல்லாம் சோர்ந்துவிழும். எப்போது ஊருக்குத் திரும்பி மோருஞ்சாதமும் பழைய ஊறுகாயும் சாப்பிடுவோம் என்பதுபோல் ஏக்கம் தோன்றிவிடும்.

எங்கிருந்தாலும் வீட்டைப் பிரிந்திருப்பது கஷ்டம்தான் என்று கசப்போடு நினைத்துக்கொண்டான் அரவிந்தன். தினசரி வேலைகள் முடிந்தபின் சென்றடைவதற்குக் கூடு ஒன்று இருக்கிறது என்கிற கதகதப்பான பத்திர உணர்வுதான் மனிதர்களை இயக்கிக்கொண்டிருக்கிறதோ என்னவோ.

அறையின் கண்ணாடி ஜன்னல் கதவுகளில் மழை வலுவாக அறைந்து திறக்கச் சொல்லியது. அநியாயத்துக்குக் குளிர். படுத்தவாக்கில் இடதுபுறமாக உருண்டு குளிர்சாதனத்தை அணைத்தான் அரவிந்தன்.

டிவியில் இப்போது யாரோ ஒரு தாடிக்காரர் மஹாபாரதச் சொற்பொழிவை ஆரம்பித்திருந்தார். பேயும் உறங்குகிற நேரத்தில் இதையெல்லாம் யார் பார்க்கிறார்கள் என்று குழப்பமாக இருந்தது அரவிந்தனுக்கு. சானலை மாற்றலாமா, அல்லது அணைத்துவிட்டுத் தூங்கலாமா என்று யோசித்தபோது எதற்காகவோ சந்திரனின் நினைப்பு வந்தது.

சந்திரன் இப்போது எங்கே இருக்கிறான்? மும்பையில்தானா? அல்லது, சென்னையிலா? தன்னுடைய ஞாபக சக்தியின்மீது நம்பிக்கையில்லாமல் சிறிது நேரம் நெற்றியைத் தேய்த்துக்கொண்டிருந்தான் அரவிந்தன்.

ஏழெட்டு வருடங்களுக்குமுன் சந்திரனும் அரவிந்தனும் டெல்லியில் ஒன்றாக வேலைக்குச் சேர்ந்தவர்கள். நாற்பது பேர் அடங்கிய அந்த அலுவலகத்தில் இவர்கள் இருவருக்குமட்டும்தான் தமிழ் தெரியும் என்பதால் நெருக்கமாகி நல்ல சிநேகிதர்களாகிவிட்டார்கள்.

அப்புறம் கொஞ்ச நாள் நிம்மதியான பிரம்மச்சாரி வாழ்க்கை. இன்னும் சில ஆண்டுகள் இப்படியே விளையாட்டுப்போக்கில் வாழலாமா அல்லது இப்போதே எதிர்காலத்தைப்பற்றித் தீவிரமாகச் சிந்திக்கத்தொடங்கவேண்டுமா என்று அவர்கள் யோசித்துக்கொண்டிருந்தபோது திடுதிப்பென்று சந்திரனுக்குத் திருமணமாகிவிட்டது.

அத்தனை அவசரத்துக்குச் சந்திரனும்தான் ஒருவிதத்தில் காரணம். ‘கேரளாவிலிருந்து ஒரு பெண் ஜாதகம் வந்திருக்கிறது. உனக்குப் பிடித்திருக்கிறதா?’ என்று நாலு வரிக் கடிதாசி எழுதிய அவனுடைய அப்பா கூடவே அனுப்பியிருந்த மசங்கலான புகைப்படத்தில் சந்திரன் அப்படி என்னத்தைக் கண்டானோ. சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வதுபோல் விழுந்துவிட்டான். அதன்பிறகு தாலி கட்டுவதற்காகதான் எழுந்து நின்றான்.

மூணாறிலோ கொடைக்கானலிலோ தேனிலவு முடித்துக்கொண்டு அவர்கள் டெல்லி வந்தபோது அரவிந்தன்தான் அவர்களுக்காக வீடு பார்த்து அட்வான்ஸ் கொடுத்து எல்லா ஏற்பாடுகளும் செய்துவைத்திருந்தான். சந்திரனின் பெட்டி, படுக்கைகளைக்கூட புது வீட்டுக்கு நகர்த்தியாகிவிட்டது, லாரி சர்வீஸில் வந்த சீர் வரிசை சாமான்களையும் அங்கேயே இறக்கிவைத்திருந்தான். ஆகவே சந்திரனும் அவன் மனைவியும் ரயில் நிலையத்திலிருந்து நேரடியாகப் புது வீட்டுக்கு வந்து பாக்கெட் பால் காய்ச்சிச் சாப்பிட்டார்கள்.

சந்திரனின் மனைவி அபிராமி ரொம்பவும் கூச்சசுபாவியாக இருந்தாள். தாய் மொழி மலையாளமில்லை. என்றாலும் கொஞ்சம் ராகமிழுத்துதான் தமிழ் பேசினாள். ஆனால் பிரவேஷிகாவரை பாஸ் செய்திருந்ததில் ஹிந்தி நன்றாகவே தெரியுமாம்.

பேசுவதுதான் குறைவேதவிர எதற்கெடுத்தாலும் சிரித்துக்கொண்டிருந்தாள் அவள். அவர்களின் திருமணத்திற்கு வந்திருந்த அரவிந்தனை அவளுக்குக் கொஞ்சமும் நினைவிருக்கவில்லை. இதில் சந்திரனுக்கு ரொம்ப வருத்தம்.

‘சரிதான் விடுடா’ என்று சிரிப்போடு சொன்னான் அரவிந்தன். ‘இந்தப் பதினஞ்சு நாள்ல நீ அவங்களுக்குக் கிட்டத்தட்ட ஆயிரம் பேரையாவது அறிமுகப்படுத்தியிருப்பே, எல்லாரையும் ஞாபகம் வெச்சுக்கமுடியுமா?’

அதன்பிறகு சிறிது நேரத்துக்கு யாரும் எதுவும் பேசவில்லை. சங்கடமான அந்த மௌனத்தைக் கலைத்துக்கொண்டு கிளம்பினான் அரவிந்தன்.

அவன் ராத்திரி அங்கேயே தங்கவேண்டும் என்று வற்புறுத்தினான் சந்திரன். ஆனால் அரவிந்தன் பிடிவாதமாக மறுத்துவிட்டான். ‘உனக்கென்னடா? லீவ்ல இருக்கே, நான் காலையில சீக்கிரம் எழுந்து ரெடியாகி ஆஃபீஸ் போகணும்’ என்றான் சிரிப்புடன்.

‘சாப்பிட்டுட்டுப் போங்க, ப்ளீஸ்’ என்றாள் சந்திரனின் மனைவி.

‘பரவாயில்லைங்க, இன்னொரு நாள் கண்டிப்பா வர்றேன்’ என்று சொல்லிக்கொண்டு கிளம்பினான்.

அன்றும் நல்ல மழை. பழைய வீட்டின் பாதி வெறுமை உறுத்திக்கொண்டிருந்தது. அதனிடையே தூக்கமின்றிப் படுத்திருந்தபோது இன்னும் பாஷை புரிந்திராத இந்த ஊரில் தனக்கிருந்த ஒரே நண்பனையும் இழந்துவிட்டோமே என்று வேதனையாக இருந்தது அரவிந்தனுக்கு.

ஆனால் இதற்கெல்லாம் யார், என்ன செய்யமுடியும்? மழலையாகப் பேசிக் கொஞ்சுகிற குழந்தைகூடதான் ஒரு நாளில் தோளுக்கு மேல் வளர்ந்துவிடுகிறது, அதை நினைத்து சந்தோஷப்படாமல் இனிமேல் யாரைக் கொஞ்சுவது என்று கவலைப்படுவார்களா?

தனக்கு ஏன் இந்த விஷயம் எதிர்மறையாகவே தோன்றிக்கொண்டிருக்கிறது என்று அப்போது அரவிந்தனுக்குப் புரியவே இல்லை. யாரோ சந்திரனை என்னிடமிருந்து திட்டமிட்டுப் பிரித்துவிட்டதுபோல் ஏன் நினைக்கிறேன்? ஒருவேளை சந்திரனுக்குமுன்பாக எனக்குத் திருமணமாகியிருந்தால் நானும் இப்படிதானே பாதி வீட்டை காலி செய்துகொண்டு கிளம்பியிருப்பேன்?

யோசனைகளின் கனத்தில் அந்த இரவு தூக்கமின்றிக் கழிந்தது. மறுநாளிலிருந்து இதைப்பற்றி அதிகம் நினைப்பதில்லை என்று தனக்குத் தானே உறுதி சொல்லிக்கொண்டு வேலையில் கவனம் செலுத்தினான் அரவிந்தன்.

இரண்டு நாள்களுக்குப்பின் வேலையில் சேர்ந்த சந்திரன் ‘என்னடா? வீட்டுப்பக்கமே வரலை?’ என்றான் முதல் வாசகமாக.

‘இன்னிக்கு வர்றேண்டா’ என்றான் அரவிந்தன். ஆனால், போகவில்லை.

சந்திரனின்மீதோ அல்லது அவனுடைய மனைவியின்மீதோ சத்தியமாக அரவிந்தனுக்கு வெறுப்பில்லை. ஆனால் ஏதோ ஒரு சங்கட உணர்வு அவர்களின் வீட்டுக்குச் செல்லவிடாமல் அவனைத் தடுத்துக்கொண்டிருந்தது. எப்போதாவது தவிர்க்கமுடியாமல் அங்கே செல்ல நேர்ந்தாலும் ஐந்து அல்லது பத்து நிமிடங்களுக்குமேல் அங்கே இருக்கமுடிவதில்லை. ஆகவே ஏதேனும் ஒரு பொய்யான காரணத்தையாவது உருவாக்கிச் சொல்லிக்கொண்டு கிளம்பிவிடுவது.

தன்னுடைய தயக்கத்துக்கு யாரைக் குற்றம் சொல்வது என்று அரவிந்தனுக்குப் புரியவில்லை. சந்திரன் அவனிடம் எப்போதும்போல்தான் பழகுகிறான். ஆனால் அதற்குமேல் அவனிடம் எதையும் எதிர்பார்க்கக்கூடாது என்று அரவிந்தனின் உள் மனது சொல்லிக்கொண்டே இருந்தது. ஆகவே அலுவலகம், வீடு என்று தனது நடவடிக்கைகளைச் சுருக்கிக்கொண்டான்.

சந்திரனுக்கு பதிலாக வேறோர் அறை நண்பனைக்கூட அவன் தேர்ந்தெடுத்துக்கொள்ளவில்லை. சந்திரன் முன்பு படுத்திருந்த கட்டில்கூட மடக்கப்படாமல் அப்படியேதான் கிடந்தது.

அந்த மழைக்காலம் முடிவதற்குள் அரவிந்தனுக்கும் வீட்டில் பெண் பார்க்க ஆரம்பித்தார்கள். ஆனால் இவன்தான் இப்போதைக்கு வேண்டாம் என்று உறுதியாக மறுத்துவிட்டான்.

அரவிந்தனுடைய அப்பா சந்திரனுக்கு ஃபோன் செய்து பேசியிருக்கிறார். ஒரு மாலை நேரத்தில் அவனை வலுக்கட்டாயமாகப் பற்றியிழுத்துக்கொண்டு ஜந்தர் மந்தருக்குச் சென்றான் சந்திரன்.

சுற்றுலாத்தலம் என்கிற தலைக்கொழுப்பெல்லாம் இல்லாமல் நகரின் நடுவே ‘ஜஸ்ட் லைக் தட்’ நின்றுகொண்டிருக்கிற ஜந்தர் மந்தர் சந்திரனுக்கும் அரவிந்தனுக்கும் ரொம்ப விருப்பமான இடம். நகரத்தின் கச்சாமுச்சாக் கூட்டத்திலிருந்து தப்பிப்பதற்கு உத்தமமான சுலப வழி. செக்கச்செவேல் செங்கல்களால் கட்டப்பட்ட நவீன ஓவியங்கள்போல் திமிறும் வடிவங்களுக்கிடையே மணிக்கணக்காக நடக்கலாம், அல்லது புல்வெளியில் படுத்துக்கொண்டு சிகரெட் ஊதியபடி அரட்டையடிக்கலாம்.

ஆனால் அன்றைக்கு அவர்கள் இருவருமே மௌனமாக ஒருவரையொருவர் பார்த்தபடி அமர்ந்திருந்தார்கள். எதைப் பேசப்போகிறோம் என்று இருவருக்குமே தெரிந்திருப்பதுபோலவும் இருவருமே அதைப் பேச விரும்பாததுபோலவும் ஒரு அசிங்கமான நிசப்தம் அவர்களுக்கிடையே உருண்டு கிடந்தது.

ஒருவழியாக இருவரில் யாரோ பேசத் தொடங்கினார்கள். ‘நீ வீட்டுக்கே வர்றதில்லை’ என்று சந்திரன் குற்றம்சாட்டுவதும் ‘அப்படியெல்லாம் இல்லை’ என்று அரவிந்தன் மறுப்பதுமாகக் கொஞ்ச நேரம் பாசாங்கு நாடகம் நடந்தது.

பின்னர் சந்திரன் விஷயத்துக்கு வந்தான். ‘கல்யாணம் வேணாம்-ன்னு சொன்னியாமே, ஏன்?’

இதற்குச் சட்டென்று ஒரு பதில் யோசித்து வைத்திருந்தான் அரவிந்தன். ‘என்னடா அவசரம்? கொஞ்ச நாளாகட்டுமே!’ என்றான் சிரித்து.

‘இப்போ-ன்னா, நாளைக்கேவா  கல்யாணம் நடக்கப்போகுது?’, சிரிக்காமல் கேட்டான் சந்திரன். ‘அவங்க ஜாதகத்தை எடுக்கட்டும். நீ மெதுவா ஃபோட்டோவைப் பார்த்து உன் விருப்பம் சொல்லு. இல்லை, பொண்ணை நேர்ல போய்ப் பாரு. உனக்குப் பிடிச்சு எல்லாம் முடிவானப்புறம் நீ எப்போ சொல்றியோ அப்போ கல்யாணத்தை வெச்சுக்கலாம்.’

‘ம்ம்’ ஒப்புதல்போல் தலையாட்டினான் அரவிந்தன். ‘பார்க்கலாம்.’

‘என்ன பார்க்கலாம்?’ எங்கோ திரும்பிக்கிடக்கும் அவனுடைய தாடையைப் பற்றித் திருப்பினான் சந்திரன். ‘சரின்னு சொல்லு!’

‘பார்க்கலாம்பா’ முரட்டுத்தனமாக மீண்டும் திரும்பிக்கொண்டான் அரவிந்தன்.

அந்த வேகத்தில் சந்திரன் கொஞ்சம் அவமானப்பட்டுவிட்டதுபோல் தெரிந்தான். சிறிது நேரம் அமைதி காத்தபின் ‘உனக்கு என்மேல என்னடா கோவம்?’ என்றான் நேரடியாக.

‘கோவம்ல்லாம் எதுவும் இல்லைடா’ சட்டென்று சொன்னான் அரவிந்தன். நாக்கு வறண்டு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது. ‘இன்னிக்கு நீ ஏன் இப்படிக் கண்டபடி உளர்றே?’

அவனுடைய மறுப்பைச் சந்திரன் கொஞ்சமும் மதிக்கவில்லை. ‘உண்மையைச் சொல்லு, என்மேல இருக்கிற கோவத்தினால்தான் நீ இப்போ கல்யாணத்துக்கு ஒத்துக்கமாட்டேங்கறே!’, என்றான்.

‘ப்ச், சும்மா நீயே எதையாவது கற்பனை செஞ்சுக்காதேடா’, என்று அதட்டலாகச் சொன்ன அரவிந்தன் அனிச்சையாகச் சந்திரனின் கையைப் பற்றித் தனது உள்ளங்கைகளுக்குள் வைத்துக்கொண்டான். ‘தப்பா நினைச்சுக்காதே மச்சி, எனக்கு இப்போ என்ன குழப்பம்ன்னு என்னாலயே தெளிவாச் சொல்லமுடியலைடா. இதெல்லாம் சரியாகட்டும். அதுக்கப்புறம் நீங்க என்ன சொன்னாலும் கேட்கறேன். அதுவரைக்கும் நீயும் என்னைக் கட்டாயப்படுத்தாதேடா, ப்ளீஸ்!’

கையை விடுவித்துக்கொண்ட சந்திரன். ‘அப்புறம் ஏன் நீ எங்க வீட்டுக்கு வரவேமாட்டேங்கறே?’ என்றான்.

தயக்கத்தோடு தலை குனிந்துகொண்ட அரவிந்தன் ‘வரக்கூடாதுன்னு இல்லைடா. ஏதோ, அடிக்கடி வரமுடியறதில்லை. அவ்ளோதான்’, என்றான் முணுமுணுப்பாக. பின்னர், வரவழைத்துக்கொண்ட கேலிச் சிரிப்புடன் ‘புதுசாக் கல்யாணமானவங்களை அடிக்கடி டிஸ்டர்ப் பண்ணக்கூடாதுன்னு புறநானூறுல சொல்லியிருக்குடா. உனக்குத் தெரியாதா?’, என்றான் புன்னகைத்து.

‘பேச்சை மாத்தாதே’ சந்திரனின் குரலில் நெடுநாள்களாக அடக்கிவைத்திருந்த எரிச்சல் தொனித்தது. ‘உன்னைப்பத்தி எனக்குத் தெரியும். நீ என்னை வேணும்ன்னே இக்னோர் பண்றே. நான் பார்த்துகிட்டேதான் இருக்கேன்.’

‘இல்லைடா’ என்று உடனடியாகச் சொன்ன அரவிந்தன் அதன்பிறகு மேலும் பேசி அதை நிரூபிக்கவேண்டிய அவசியமில்லை என்பதுபோல் சில விநாடிகளுக்கு மௌனமாக இருந்தான். பின்னர் ‘வேற எதுனா பேசுவோமே’ என்றான் சங்கடமாகச் சிரித்து. ‘கல்யாண வாழ்க்கை எப்படிப் போயிட்டிருக்கு?’

‘ம்ம், அதுக்கென்ன?’ சந்திரனிடமிருந்து விட்டேத்தியான பதில் வந்தது. பின்னர் ‘அவ அம்மா வீட்டுக்குப் போயிருக்கா. இன்னிக்கு நைட் வீட்டுக்கு வாயேன், நாம சேர்ந்து தண்ணியடிச்சு ரொம்ப நாளாச்சு’ என்றான்.

அவன் சொன்னது காதில் விழாததுபோல் எங்கோ பார்த்துக்கொண்டிருந்தான் அரவிந்தன். சந்திரனுக்குத் தான் இரண்டாம்பட்சமாகிவிட்டோம் என்பது இப்போது அவனுக்கு மிகத் தெளிவாகப் புரிந்தது.

ஆனால் சந்திரனுக்காவது தனது அக்கறைக்குரிய முதல் விஷயம் எது என்று நிச்சயமாகத் தெரிந்திருக்கிறது. எனக்கு?

(தொடரும்)

***

என். சொக்கன் …

23 05 2011

முன்கதை

அத்தியாயம் – 1

அத்தியாயம் – 2

3

கைப் பெட்டியை ஸ்கேன் செய்து விமானத்தினுள் அனுப்பிவிட்டுத் தோளில் தொங்கும் கணினியோடு வெளியே வந்தான் அரவிந்தன். அவனுடைய விமானம் கொஞ்சம் தாமதமாகக் கிளம்பும் என்று அறிவித்திருந்தார்கள். அதற்கு இன்னும் முழுசாக ஒரு மணி நேரம் மீதமிருந்தது.

ஒரு காஃபி குடிக்கலாம் என்று எதிரிலிருந்த கடையை அணுகியபோது உள்ளே கால் வைக்கக்கூட இடமில்லாமல் நிறைந்திருந்த கூட்டத்தைப் பார்க்க பயமாக இருந்தது. அப்புறமாகப் பார்த்துக்கொள்ளலாம் என விலகி வந்துவிட்டான்.

பொதுவாகவே இன்றைக்கு விமான நிலையத்தில் அதிகக் கூட்டம்தான். ஞாயிற்றுக்கிழமை, அதுவும் இரவு நேரம் என்பதால் சூட் போர்த்திய கழுத்துப்பட்டைவாசிகளை அதிகம் பார்க்கமுடியவில்லை. மாறாக, நடுத்தர வயதுப் பெண்கள்தான் ஏராளமாக நிறைந்திருப்பதாகத் தோன்றியது.

இப்போதெல்லாம் விமானக் கட்டணங்களை ரொம்பக் குறைத்துவிட்டார்கள். திசைக்கொன்றாகப் புதுசுபுதுசாக ஏதேதோ கம்பெனிகள் முளைத்துவிட்டதில் (அ)நியாயத்துக்குப் போட்டி. எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் தங்களின் செலவுகளையும் லாப சதவீதத்தையும் குறைத்துக்கொண்டு சகாய விலையில் பறக்க அழைக்கிறார்கள்.

அரவிந்தன் இப்படி நினைத்துக்கொண்டிருந்தபோது கம்பீரமான சாம்பல் நிறத்தில் உடுத்திய ஓர் அதிகாரி அவனைக் கடந்து சென்றார். குளிர் ஸ்வெட்டர் அணிந்தபடி எதிரே வந்த இளைஞன் ஒருவன் அவருக்குக் குழைவாக சல்யூட் அடித்தான்.

சிறிது நேரத்துக்கு அந்த இளைஞனையே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான் அரவிந்தன். இந்த விமான நிலையத்திலோ அல்லது இங்கிருக்கும் ஏதோ ஒரு விமானக் கம்பெனியிலோ பணிபுரிகிறவனாக இருக்கவேண்டும். டியூட்டி முடிந்து வீட்டுக்குக் கிளம்புகிற அவசரம் அவனிடம் தெரிந்தது. அங்குமிங்கும் பரபரப்பாக எதற்காகவோ ஓடிக்கொண்டிருந்தான்.

இவன் எப்போதாவது விமானத்தில் பறந்திருப்பானா என்று அரவிந்தன் யோசித்தபோது சட்டென்று செல்வியின் ஞாபகம் வந்தது. பாக்கெட்டிலிருந்து செல்பேசியைத் தேடியெடுத்து வீட்டு எண்களை ஒற்றினான்.

நெடுநேரம் பிடிவாதமாக மணியடித்தபிறகும் யாரும் எடுக்கவில்லை. செல்வி இந்த நேரத்தில் எங்கே போனாளோ என்கிற கவலையோடு தொலைபேசி இணைப்பைத் துண்டித்தான் அரவிந்தன்.

செல்பேசியைக் கையில் உருட்டியபடி மேலே ஒளிர்கிற பெரிய விளம்பரத் திரையில் சிரிக்கும் அமிதாப் பச்சனைப் பார்த்துக்கொண்டிருந்த அவனுக்குக் கொஞ்சம் குறுகுறுப்பாக இருந்தது. அவன் இப்படிச் சில நாள்களோ நெடு நாள்களோ காணாமல்போய்விடுகிற வெளியூர்ப் பயணங்களின்போதும் தினசரி அவன் அலுவலகம் கிளம்பிச் சென்றபிறகான தனிமையின்போதும் செல்வி என்ன செய்வாள்?

திருமணத்துக்குமுன் ஒருமுறை அவன் அவளிடம் ‘உன்னுடைய பொழுதுபோக்கு என்ன?’, என்று கேட்டதற்கு மிகக் கிண்டலான ஒரு பதிலைச் சொல்லியிருந்தாள் அவள்.

அதாவது, ஒழுங்காக அடுக்கியிருக்கும் ஒரு பெட்டியை எடுத்து, அதிலுள்ள துணிகள், புத்தகங்கள், இதர பொருள்களையெல்லாம் திசைக்கொன்றாக இறைத்துவிடுவாளாம். அதன்பிறகு அவற்றை மீண்டும் பழையபடி அடுக்கிவைப்பாளாம்.

செல்வி அப்படிச் சொன்னதில் எத்தனை சதவீதம் உண்மை, எத்தனை சதவீதம் கேலி என்று அவனுக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. என்றாலும், அந்த அளவுக்குச் சுத்தம், ஒழுங்கு என்று பரபரக்கக்கூடியவள்தான் அவள்.

ஆகவே அரவிந்தன் ஊரில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவளுடைய அன்றாடப் பணிகள் வீட்டின் ஒழுங்கைச் சுற்றிதான் சுழலும். அதிகாலையில் எழுந்து அவனுக்குச் சமைக்கவேண்டியதில்லை, சாப்பாட்டு மூட்டை கட்டவேண்டியதில்லை என்பதற்காகத் தாமதமாகத் துயிலெழுகிற கட்டுப்பாட்டுக் குலைவு அவளிடம் இருக்காது என்று அவனுக்கு நிச்சயமாகத் தோன்றியது.

அப்படியென்றால் என் அண்மை அவளுக்கு எதற்காகத் தேவைப்படுகிறது? நான் பிரியும்போது அவள் ஏன் வருந்தவேண்டும்? அழவேண்டும்?

எதார்த்தமான இந்தக் கேள்வியில் ஓர் அயோக்கியத்தனம் இருப்பதாக அரவிந்தனுக்கு ஏனோ தோன்றியது. தவிர, இந்தக் கேள்விக்கு பதில் சொல்லவேண்டியவள் செல்வி. எத்தனை முயன்றாலும் இதற்கான அவள் தரப்பு பதிலை அவனால் ஊகித்துவிடவே முடியாது.

ஆகவே, அதே  கேள்வியைக் கொஞ்சம் மாற்றிக் கேட்டுக்கொள்ளலாம் என்று தீர்மானித்தான் அரவிந்தன் – செல்வியைப் பிரிந்து கிளம்பும்போது எனக்கு ஏன் இத்தனை துயரம்? பேசாமல், வேலையைக் கவனிக்கவேண்டியதுதானே? அநாவசியமாக ஏன் மனத்தைக் கனமாக்கிக்கொள்ளவேண்டும்?

இதற்கும் அவனுக்கு பதில் தெரியவில்லை. ‘ஏன் லேட்?’, என்று கேட்கிற ஆசிரியரிடம் ‘லேட் ஆயிடுச்சு’ என்று அபத்தமாக பதில் சொல்கிற சிறுவனைப்போல்தான் அவனால் சிந்திக்கமுடிந்தது.

ஆனால் இதில் ஏதோ விஷயம் இருக்கிறது, வலுவான ஒரு காரணமும் இருக்கவேண்டும். இல்லையென்றால் இரண்டு நாள், மூன்று நாள்களே நீடிக்கிற சின்னஞ்சிறு பயணங்கள்கூட இப்படி ஒரு சலனத்தையும், வெறுமையுணர்வையும் உண்டாக்காது.

ஆனால் தினந்தோறும் காலையில் ஆஃபீஸ் கிளம்பும்போது அரவிந்தனிடம் இப்படிப்பட்ட சோக மனோநிலை தென்படாது. உண்மையில் ஒவ்வொரு நாளும் மிகுந்த உற்சாகத்துடனே அலுவலகத்தினுள் நுழைகிறவன் அவன்.

ஒருவிதத்தில் அதுவும் செல்வியைப் பிரிவதுதானே? அப்போது ஏன் இந்த மன அழுத்தம் உண்டாவதில்லை? வெளியூர் செல்வது என்று கிளம்பினால்மட்டும் எங்கிருந்தோ சோகமும் களைப்புணர்வும் வந்து சூழ்ந்துகொள்கிறது. வழியனுப்பிக் கையசைக்கும் செல்வியைப் பாய்ந்து பற்றிக்கொண்டுவிடத் தோன்றுகிறது, வீட்டிலிருந்து அவனைக் கிளப்பிக் கொண்டுவருகிற ஆட்டோவோ டாக்ஸியோ பஸ்ஸோ உடனடியாகத் திரும்பிப் போய்விடாதா என்று ஏக்கமாக இருக்கிறது. ஏர் போர்ட்டிலோ ரயில் நிலையத்திலோ வந்து இறங்கியதும் அடுத்த பஸ்ஸில் ஏறி வீட்டுக்குத் திரும்பிவிடவேண்டும் என்று குழந்தைத்தனமான ஆசை தவறாமல் வருகிறது.

இதற்கெல்லாம் என்ன காரணம்? அல்லது, இதற்கெல்லாம் காரணம் என்று ஏதாவது இருக்கிறதா? அல்லது, அந்தக் காலச் சினிமாக்களிலும் இந்தக் காலத் தொலைக்காட்சித் தொடர்களிலும் வருவதுபோல் இந்தப் பாசம், நேசம், அன்பு எல்லாமே காரணமற்றுப் பொங்கும் அபத்தமான உணர்வுகள்தானா?

‘அபத்தம்’ என்று என்னால் இந்த அளவு உறுதியாகச் சொல்லமுடிந்தால் இது ஏன் என்னை இவ்வளவு பாதிக்கவேண்டும்? இந்த உணர்வுகளை ‘அபத்தம்’ என்று மனதுள் நினைக்கும்போதே ஏதோ அநியாயம் செய்துவிட்டவனைப்போலக் கூசிப்போகிறேனே, ஏன்?

எதற்கும் அவனுக்கு பதில் தெரியவில்லை. யோசிக்க யோசிக்க, களைப்புதான் மிஞ்சியது.

சிறிது நேரம் நடக்கலாம் என்று எழுந்துகொண்டான் அரவிந்தன். கால்களை ஒருமுறை தனித்தனியே நீட்டி உதறிக்கொண்டு ஒருமுறை சுற்றிலும் நோட்டமிட்டான். பின்னர் கண்ணாடி வெளிச் சுவர்களில் ஏகப்பட்ட புத்தகங்களைக் கண்காட்சிபோல் அடுக்கிவைத்திருந்த கடையின்பக்கமாகத் திரும்பி நடக்கலானான்.

அவன் இப்போது நடந்துகொண்டிருந்தது பார்வையாளர் பகுதி என்பதால் இங்கும் கூட்டம் அதிகமாகவே இருந்தது. பயணம் செய்கிறவர்களும் அவர்களை வழியனுப்ப வந்தவர்களுமாக நிறைந்து வழிந்தார்கள்.

கூடத்தின் ஒரு மூலையில் ஒரேமாதிரியாக ஜீன்ஸ் அணிந்த ஓர் இளைஞனும் இளைஞியும் மிக நெருக்கமாக, கிட்டத்தட்ட ஒருவரையொருவர் அணைத்த பாவனையில் நின்றிருந்தார்கள். இருவரும் தங்களுக்குள் ஏதோ ரகசியம் பேசிக்கொண்டிருக்க, பக்கத்தில் ஒரு சிறிய பயணப்பை ‘ஆம்ஸ்டர்டாம்’ என்று அறிவித்து ஒரு ட்யூலிப் மலரை நீட்டியது.

அந்த இருவரும் ஒருவரையொருவர் தொட்டபடியிருக்கிறார்களா என்றுகூட தெரியாதபடி அவர்கள் நெருங்கியும் விலகியும் இருந்தார்கள். அவர்களைப் பார்க்கும்போது, சுற்றியிருக்கிற மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று கவலைப்படுகிற ரகமாகத் தெரியவில்லை. ஆனால் இருவருடைய நடவடிக்கைகளிலும் ஒரு நாசூக்கு தெரிந்தது.

அவர்களில் யார் பயணம் செய்கிறவர், யார் வழியனுப்பவந்தவர் என்று சரியாகத் தெரியவில்லை. ஆனால் பிரிந்திருக்கப்போகிற ஒவ்வொரு விநாடியையும் இப்போதே பேசித் தீர்த்துவிடவேண்டும் என்பதுபோல் அவர்கள் இடைவெளியில்லாமல் பேசிக்கொண்டிருந்தார்கள். ஒருவர் பேசிமுடித்தபிறகுதான் இன்னொருவர் பேசவேண்டும் என்றுகூட அவர்கள் எதிர்பார்த்ததாகத் தெரியவில்லை. ஒரே நேரத்தில் இருவருமே பேசுவதுபோலவும் அதை இருவருமே சரியாகப் புரிந்துகொள்வதுபோலவும் தோன்றியது.

கடைப் புத்தகங்களில் ஒரு பார்வையை வைத்தபடி ஓரக்கண்ணால் அவர்களை ஆவலோடு கவனித்துக்கொண்டிருந்தான் அரவிந்தன். இப்படி அநாகரீகமாகப் பார்ப்பது அவனுக்கே உறுத்தினாலும் அவர்களிடம் ஏதோ ஒரு விசேஷம் இருப்பதாகவும் அவர்களைக் கூர்ந்து கவனிப்பதன்மூலம் தன்னுடைய கேள்விகளுக்கு பதில் கிடைக்கலாம் என்பதுபோலவும் தோன்றிக்கொண்டிருந்தது அவனுக்கு.

ஆனால் அந்த இளம் ஜோடி சுற்றியிருப்பவர்கள் யாரையும் கவனிப்பதுபோல் தெரியவில்லை. அவர்கள் தங்களின் உலகத்துள்  மூழ்கியிருந்தார்கள். இருவரும் வளவளவென்று தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோதும் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று துளியும் வெளியே கேட்கவில்லை. உண்மையில் அத்தனை பக்கத்தில் நெருங்கி நின்றிருந்த அரவிந்தனுக்குக்கூட அவர்கள் பேசுவது ஆங்கிலமா கன்னடமா தமிழா அல்லது ஹிந்தியா என்று தெரியவில்லை.

அந்தப் பெண்ணுக்கு இருபத்தைந்து வயதிருக்கலாம். அதீதமான அமைதி கவிழ்ந்த அவளது முகத்தைப் பார்க்கும்போது அவள் இத்தனை பேசுவாள் என்று யாருக்குமே தோன்றாது. இப்போது அவளை வழிமறித்து ‘இன்னிக்கு என்ன கிழமை?’ என்று கேட்டால்கூட ஏதோ குவாண்டம் இயற்பியல் சூத்திரங்களைக் கேட்டுவிட்டதுபோல் திருதிருவென்று முழிப்பாள் என்றுதான் ஊகித்தான் அரவிந்தன்.

ஆனால் இதுபோன்ற ஊகங்களையெல்லாம் பொய்யாக்கும்படி ஒரு மேடைப் பேச்சாளரின் வேகத்துடன் அவள் அவனோடு தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தாள். பேசுகிற விஷயத்துக்கேற்பக் கைகளையோ கண்களையோ அசைக்கும் உடல்மொழிகூட அவளிடம் இல்லை. என்னுடைய வார்த்தைகள் இங்கே சுற்றியிருப்பவர்கள் யாருக்கும் இல்லை, உனக்குமட்டும்தான் என்று அவனிடம் சொல்வதுபோல் ஒவ்வொரு சொல்லையும் நேரடியாக அவனது காதுகளுக்குள் பதித்துக்கொண்டிருந்தாள் அவள்.

ஆர். கே. லக்ஷ்மணின் சிறிய கார்ட்டூன் புத்தகமொன்றைத் தேர்ந்தெடுத்து அரவிந்தன் விலை விசாரித்தபோது அவனுடைய விமானத்துக்கான அறிவிப்பு வந்தது. அந்தச் சப்தத்தில் பயந்து தடுமாறிய பறவைகளைப்போல அந்தப் பையனும் பெண்ணும் சட்டென்று விலகிக்கொண்டதைப் பார்க்க அரவிந்தனுக்கு ரொம்ப வருத்தமாக இருந்தது.

இப்போது அவர்களுக்கிடையில் பேச்சும் நின்றுவிட்டது. ஒலிபெருக்கியிலிருந்து வழியும் அறிவிப்பை இருவரும் கவனமாகக் கேட்டார்கள். பின்னர் ஆங்கில அறிவிப்பு ஓய்ந்து ஹிந்தியில் தொடங்கியதும் பக்கத்திலிருந்த பையை எடுத்து அவன் தோளில் மாட்டிவிட்டாள் அவள்.

இருவரும் பரஸ்பரம் சில வழியனுப்பல் மொழிகளைப் பேசிக்கொண்டார்கள். அவைகூட வெளியே கேட்கவில்லை. அவன் ஒருமுறை கைக்கடிகாரத்தைப் பார்த்துவிட்டு ‘ஸீ யூ’ என்று மனமில்லாமல் சொல்வதுமட்டும் (உதட்டசைவால்) தெரிந்தது.

அவள் பதிலுக்கு எதுவும் பேசாமல் சின்னச் சிரிப்போடு அவனுக்குக் கையாட்டினாள். அந்தச் சிரிப்பில் மெலிதான சோகம் தெரிகிறதா என்று அரவிந்தன் யோசித்துக்கொண்டிருந்தபோதே அவனுடைய டிஷர்ட்டைப் பற்றி இழுத்துக் கன்னத்தில் சின்னதாக ஒரு முத்தம் பதித்தாள் அவள். இதை எதிர்பார்த்ததுபோலிருந்த அவன் அவளுடைய இதழ்களில் மெல்லமாக உதடு ஒற்றினான்.

சட்டென்று திரும்பிக்கொண்டான் அரவிந்தன். கையிலிருந்த புத்தகத்தை மீண்டும் அலமாரியில் வைத்துவிட்டு எதிர்திசையில் நடக்கலானான்.

இதுவரை அந்த ஜோடியை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது அவனுக்குத் தவறாகத் தோன்றவே இல்லை. ஆனால் இப்போது அவர்களுடைய அந்தரங்கத்தில் குறுக்கிட்டுவிட்டோமே என்று வேதனையாக இருந்தது.

என்றாலும், ஒரு பொது இடத்தில் இப்படி முத்தமிட்டுக்கொள்கிற இயல்பு அவனுக்குப் பிடிபடவில்லை. பெருநகரங்களில் இப்போது சாதாரணமான செய்கையாகிவிட்ட இதனைக் கலாச்சாரக் குறைவு என்று சொல்லமுடியுமா என்றுகூட அவனுக்குத் தெளிவில்லை. அவளுடைய கணவனோ காதலனோ, அவள் பகிரங்கமாக முத்தமிடுகிறாள், நேசத்தை வெளிப்படுத்துகிறாள். உனக்கு என்ன?

தாமதமாக ஆட்டோ கிடைத்த பதற்றத்தில் செல்வியிடம் சரியாக விடைபெற்றுக்கொள்ளாமலே வந்துவிட்டதை நினைத்துக்கொண்டான் அரவிந்தன். ‘ஒரு நிமிஷம் இரப்பா’ என்று ஆட்டோ டிரைவரிடம் சொல்லிவிட்டு உள்ளே சென்று அவளிடம் சில வார்த்தைகள் ஆதரவாகச் சொல்லி ஈரமாக ஒரு முத்தமிட்டுவிட்டுக் கிளம்பியிருக்கலாம். அல்லது, நடுத்தெருவிலேயே அதைச் செய்திருக்கலாம், என்ன போச்சு?

வேறென்ன, ஐந்து நாள் நிம்மதி போச்சு!

(தொடரும்)

***

என். சொக்கன் …

16 05 2011

முன்கதை

அத்தியாயம் – 1

2

திரும்பத் திரும்ப முகத்தில் அறையும் பிடிவாதமான காற்று அலுப்பூட்டுகிறது. சூட்கேஸை இன்னும் கொஞ்சம் கீழே நகர்த்திவிட்டு முடிந்தவரை ஆட்டோவின் மையத்துக்கு நகர்ந்துகொள்கிறான் அரவிந்தன்.

மணி ஏழே முக்கால். இன்னும் பதினைந்து நிமிடத்தில் விமான நிலையம் சென்றுவிடுவது சாத்தியம்தான்.

கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள் பயமுறுத்தியபிறகு கடைசியாக, ‘மீட்டருக்குமேல் முப்பது ரூபாய்’ என்கிற நிபந்தனையுடன் ஓர் ஆட்டோ கிடைத்துவிட்டது. அதை விரட்டிக்கொண்டு வீட்டுக்குச் சென்று, செல்வியிடம் தாமதத்துக்கான காரணங்களைச் சுருக்கமாகத் தெரிவித்துவிட்டு பெட்டியைத் தூக்கிக்கொண்டு கிளம்பினால், இதோ, கூப்பிடு தூரத்தில் விமான நிலையம்.

ஒவ்வொரு முறையும் இப்படிதான் ஆகிறது. ஏதேனும் ஒரு தடங்கல் வருகிறது, அவனது பயணம் தள்ளிப்போகும், அல்லது நின்றுபோகும் என்பதுபோல் அவனிடம் ஆவலை, எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. பின்னர் ‘சேச்சே, நானாவது, தடங்கல் பண்றதாவது’, என்று பழிப்புக் காட்டிவிட்டு மறைந்துபோகிறது.

நல்லவேளையாக இதுபோன்ற கற்பனைகள், எதிர்பார்ப்புகளை அவன் செல்வியிடம் சொல்வதில்லை. ஆகவே ஏமாற்றமும் அவனோடு நிற்கிறது.

இப்போது செல்வி என்ன செய்துகொண்டிருப்பாள் என்று யோசித்தான் அரவிந்தன். சிடி ப்ளேயரில் அவளுக்குப் பிடித்த, ஆனால் சரிவரப் புரியாத கர்நாடக சங்கீதத்தை வழியவிட்டுக்கொண்டு பாத்திரம் தேய்த்துக்கொண்டிருப்பாள். அல்லது, அவனது சட்டை எதிலாவது பட்டன் பிய்ந்ததைக் கண்டுபிடித்துத் தைத்துக்கொண்டிருப்பாள். வேறென்ன ?

அவளை நினைக்கையில் வேதனை மிகுந்தது. இந்த வீட்டைத்தவிர வேறெதைக் காண்கிறாள் அவள்? இப்போதெல்லாம் அவளை வெளியே அழைத்துச்செல்வதுகூடக் குறைந்துவிட்டது. மளிகைச் சாமான்களையெல்லாம் வீட்டுக்கே கொணர்ந்து தரும் ஒரு நவீன சூப்பர் மார்க்கெட்டின் தொலைபேசி எண் கிடைத்தபிறகு அவளது வெளி நடவடிக்கைகள் வெகுவாகச் சுருங்கிவிட்டன.

செல்வியை இப்போதே பார்க்கவேண்டும்போல் உணர்ந்தான் அரவிந்தன். அவளது கன்னங்களை வருடி, திடீரென்று இப்படிக் கிளம்பவேண்டியிருப்பதன் அவஸ்தைக்கு மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று தோன்றியது. உடனடியாக முடியாவிட்டாலும், ‘இதெல்லாம் நானாக விரும்பிச் செய்வதில்லை, காலம் என்னைச் செலுத்துகிற, அல்லது துரத்துகிற பாதையில் ஓடிக்கொண்டிருக்கிறேன்’ என்று எப்போதாவது அவளிடம் சொல்லவேண்டும்.

கையிலிருந்த விமான டிக்கெட்டை ஆர்வமின்றி திருப்பிப் பார்த்தான் அரவிந்தன். மும்பைக்குச் செல்லும் தேதியும் நேரமும் விமான எண்ணும் அதில் சரியாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் திரும்பி வருகிற தேதி இல்லை, ‘ஓபன்’ என்று பட்டையடித்து எழுதியிருந்தார்கள்.

சலிப்பு கலந்த பெருமூச்சுடன் நிமிர்ந்துகொண்டான் அரவிந்தன். தினசரி ஆஃபீசுக்குச் செல்வதென்றாலும் சரி, இப்படி அலுவல்நிமித்தம் பயணங்கள் போவதென்றாலும் சரி, வீட்டிலிருந்து கிளம்புகிற நேரம்மட்டுமே உறுதி செய்யப்பட்டதாக இருப்பதும், திரும்புகிற நேரத்தை வேறு யாரோ எதுவோ தீர்மானிப்பதும் ஏன்?

மேலே ஏதோ ஒரு விமானம் ராட்சஸமாகச் சப்தம் எழுப்பிக்கொண்டு விரைந்தது. பக்கத்து ஆட்டோவிலிருந்து அந்த விமானத்தைச் சுட்டிக்காண்பித்துக் கையாட்டி வழியனுப்பினாள் ஒரு பிஞ்சுப் பாப்பா.

அந்தக் குழந்தையைப் பார்க்கையில் எதற்காகவோ அரவிந்தனுக்குக் கண்ணில் நீர் தளும்பியது. செல்வியை எப்போதாவது எங்காவது விமானத்தில் அழைத்துக்கொண்டுபோகவேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.

ஒருகாலத்தில், விமானத்தில் செல்வது என்றாலே அவனுக்குப் பெருமிதமும் கர்வமும் பொங்கும். எக்ஸிபிஷன் போகிற குழந்தையின் ஆர்வத்தோடு அதை எதிர்பார்ப்பான். கண்ணில் படுகிற நண்பர்கள், உறவினர்களிடமெல்லாம் ‘நான் நாளைக்கு ஏரோப்ளேன்ல போறேன்’, என்று ஏதேனும் ஒருவிதத்தில் தெரிவித்துவிடுவான்.

ஆனால் இவர்கள் தன்னை விமானத்தில் அனுப்புவதென்பது போகிற ஊரில் நினைத்த நேரம்வரை கட்டிப்போட்டுவிடுவதற்கான யுக்திதான் என்று புரிந்தபின், விமானங்கள் அவனுக்குள் எந்தப் பரவசத்தையும் உண்டாக்குவதில்லை. திரும்புகிற தேதி எப்போதும் திறந்தே கிடக்கும் விமான டிக்கெட்களைப் பார்த்தால் வெறுப்புதான் மண்டியது.

அரவிந்தன் அடிக்கடி இப்படி விமானத்தில் பறக்கிறான் என்பதில் செல்விக்கும் கொஞ்சம் பெருமைதான். இங்கே வந்த புதிதில் தனது ஒவ்வொரு விமானப் பயண அனுபவத்தையும் நொடிக்கணக்கில் நுணுக்கமாக அவன் விவரிக்கவேண்டும் என்று அவள் எதிர்பார்த்தாள்.

ஒவ்வொருமுறையும், விமான டிக்கெட்டைப் பார்த்து ‘ஐயோ, இவ்ளோ காசா?’, என்று பெருமிதம் கலந்த ஆச்சரியம் கொள்வதில் அவளது பரவசம் தொடங்கும். விமானம் எப்படித் தரையிலிருந்து மேலே உயரும்? எப்போதும் சாய்ந்த கோணத்தில்தான் பறக்குமா? அல்லது, சமதளம்போல் பறக்குமா? உயரத்தில் பறக்கும்போது அவனுக்கு வயிற்றைப் புரட்டுமா? வாந்தி வருமா? காதுக்குள் ஜிவ்வென்று இருக்குமா? மேகங்களுக்குமேலே, அல்லது அவற்றுக்குள் பறக்கிறபோது நீ எப்படி உணர்ந்தாய்? சீட் பெல்ட் கட்டிக்கொள்ளாவிட்டால் தவறிக் கடலில் விழுந்துவிடுவோமா? பெங்களூருக்கும் டெல்லிக்கும் இடையே குத்துமதிப்பாக எத்தனை கடல்கள் உண்டு? அவற்றின்மீது பறக்கும்போது கீழே தண்ணீர் தெரியுமா? மீன்கள்? மனிதர்களே எறும்புமாதிரி, கட்டிடங்கள் பெட்டிமாதிரித் தெரிவதாகச் சொல்கிறார்களே, அது உண்மையா? விமான இறக்கைகளில் விளக்கு வைத்திருக்கிறார்களே, அது எதற்கு? – இப்படி ஏராளமான அறிவியல், புவியியல், வாழ்வியல் சார்ந்த கேள்விகள் அவளுக்கிருந்தன.

உண்மையில், இதுபோன்ற விஷயங்களில் அரவிந்தனுக்கு அவ்வளவாக கவனம் போதாது. என்றாலும் அவள் கேட்கிறாளே என்பதற்காகச் சில விளக்கங்களை உருவாக்கிச் சொல்வதுதான். ஆனால் அவற்றில் அவள் குறுக்குக் கேள்விகள் கேட்டு மடக்கும்போது, அவனுக்குச் சலிப்பாகிவிடும், ‘அடுத்தவாட்டி சரியாப் பார்த்துட்டு வந்து சொல்றேன்’ என்று பேச்சுவார்த்தையை முடித்துக்கொள்வான்.

‘அடுத்தவாட்டி’, செல்வி அந்தக் கேள்வியை மறக்காமல் நினைவில் வைத்திருப்பாள். அவன்தான் மறந்துபோயிருப்பான். ஆகவே, இன்னொரு புதிய விளக்கத்தைக் கற்பனை செய்யவேண்டியிருக்கும். அதிலும் அவளுக்குக் குறுக்குக் கேள்விகள் வரும்.

இப்படி அவன் அடிக்கடி பறந்துகொண்டிருந்ததால் செல்வியும் அவனோடு அரைப் பயணியாகியிருந்தாள். பலவிஷயங்களை அவனிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு, அல்லது அவளே ஊகித்துக்கொண்டிருந்தாள். ஆனால் தன்னை ஒருமுறை விமானத்தில் அழைத்துச்செல்லவேண்டும் என்று அவனிடம் அவள் விளையாட்டாகக்கூடக் கேட்டதில்லை.

செல்வி அதீதமாக வியந்தாலும் இப்போதெல்லாம் விமானக் கட்டணங்கள் அப்படியொன்றும் அதிகமில்லை. அப்படியே அதிகமாக இருந்தாலும் என்ன என்று அலட்சியமாக நினைத்துக்கொண்டான் அரவிந்தன். பிறகு எதற்காகச் சம்பாதிக்கிறோம்? செலவைப்பற்றிக் கவலைப்படாமல் ஏதேனும் ஒரு விடுமுறையை உருவாக்கிக்கொண்டு செல்வியும் அவனும் எங்காவது பறக்கவேண்டும்.

அரவிந்தனின் அலுவலகத்தில் வருடத்துக்கு ஒரு வாரமோ பத்து நாளோ குடும்பத்தோடு சுற்றுலாச் சென்றுவருவதற்கான விடுமுறை என்று உண்டு. ஆனால் சேர்ந்தாற்போல் அத்தனை நாள் அலுவலகத்திலிருந்து விலகியிருப்பது யாருக்கும் சரிப்பட்டுவருவதில்லை. ஆகவே பெரும்பாலானவர்கள் அந்த விடுமுறையைப் பயன்படுத்திக்கொள்வதில்லை. கம்பெனியும் அதற்குபதிலாக ஒரு குறிப்பிட்ட தொகையை ஈடாகக் கொடுத்துவிடுகிறது.

இப்படி ஒவ்வொரு வருடமும் வாங்கிய காசெல்லாம் எங்கே போனது என்று யோசித்துப்பார்த்தான் அரவிந்தன். கடலில் கரைத்த பெருங்காயம்போல் எல்லாம் வங்கிக் கணக்கில் சேர்ந்துகொள்கிறது. அதன்பிறகு ஒரு காசுக்கும் இன்னொரு காசுக்கும் துளி வித்தியாசம் பார்க்கமுடியாது.

ஒரு கட்டத்துக்குமேல் தன்னிடம் எத்தனை பணம் இருக்கிறது என்று அறிகிற, கணக்கிடுகிற ஆர்வம்கூட போய்விடுகிறது. ஆனால் இப்படித் தொடர்ந்து காசு வந்துகொண்டே இருக்கவேண்டும் என்கிற பயம்மட்டும் எப்போதும் விலகுவதில்லை.

எங்கோ தொடங்கி எங்கோ ஓடிக்கொண்டிருக்கும் தன் நினைவுகளைக் கடிவாளமிட்டு நிறுத்தினான் அரவிந்தன். நாமே உருவாக்கிக்கொண்ட சூழ்நிலைக்கு எதையோ யாரையோ குறை சொல்லிக்கொண்டு காத்திருப்பதில் அர்த்தமில்லை. இந்தமுறை பம்பாயிலிருந்து திரும்பியபின் கண்டிப்பாக ஒரு வாரமாவது லீவ் போட்டுவிட்டு செல்வியைக் கூட்டிக்கொண்டு எங்கேயாவது போய்விடவேண்டும்.

இப்போது இப்படிச் சொல்லிவிட்டுத் திரும்பியவுடன் இதை மறந்துவிடக்கூடாது. பிரசவ வைராக்கியம்போல் இல்லாமல், ஒரு சிறு சுற்றுலாவேனும் சென்றே தீரவேண்டும். அது அவளுக்குப் பிடித்த இடமாக இருக்கவேண்டும். சில நாள்களுக்காவது தினசரி வேலைகளிலிருந்து அவளுக்கும் அவனுக்கும் ஓய்வு வேண்டும். முக்கியமாக, அவர்கள் ஒருவருக்கொருவர் செலவிட நேரம் வேண்டும்.

எங்கே போகலாம் என்று அரவிந்தன் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தபோது டிரைவர் பலமாக ஹாரன் ஒலித்து ‘சார், ஏர் போர்ட் வந்திட்ச்சு’ என்றான் கொச்சைத் தமிழில்.

(தொடரும்)

***

என். சொக்கன் …

09 05 2011

1

இந்த ஆட்டோ டிரைவரும் நிர்தாட்சண்யமாக மறுத்துவிட்டான்.

அவன் புழுதி கிளப்பிச் சென்றபின்னர் அதே குனிந்த கோலத்தில் சிறிது நேரம் பரிதாபமாக நின்றிருந்தான் அரவிந்தன். வழக்கமாக இந்த நெடுஞ்சாலையில் காரும் லாரியுமாகத் தூள் கிளப்புகிற போக்குவரத்து ஞாயிற்றுக்கிழமையின் சோம்பலில் வெறிச்சோடிக் கிடந்தது.

ரோட்டில் எத்தனை தொலைவுக்குப் பார்வையை விரட்டினாலும் அங்கொருவரும் இங்கொருவருமாகச் சோகையான பிம்பங்கள்மட்டுமே தென்பட்டன. கண்ணுக்கெட்டிய தூரம்வரை வேறு ஆட்டோக்காரர்களைக் காணவில்லை. எல்லோரும் ஒரே நேரத்தில் மொத்தமாக எங்கே ஒழிந்தார்களோ தெரியவில்லை.

சலிப்போடு கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டான் அரவிந்தன். தலைகீழாகக் கவிழ்ந்துகிடந்த முள்கள் ஏழரையைத் தொடத்துடித்துக்கொண்டிருந்தன. எட்டு ஐம்பத்தைந்துக்கு விமானம், எட்டு மணிக்குள் அவன் விமான நிலையத்தில் இருந்தாகவேண்டும். இந்த நேரம் பார்த்து ஆட்டோ கிடைக்காமல் அவஸ்தை.

பிளாட்ஃபாரத்தின்மீது ஏறி நின்று தூரத்தில் ஏதேனும் ஆட்டோவோ டாக்ஸியோ வருகிறதா என்று பார்த்தான் அரவிந்தன். ம்ஹும், சாலையின் இருபக்கமும் மங்கலான வெளிச்சம் வழியும் கடைகள்தான். எங்கோ தொலைவில் ஒரு பச்சைப் பேருந்து, அதற்குச் சில நூறு மீட்டர்கள்முன்பாக ஒரு சைக்கிள், மற்றபடி தார்ச் சாலை தனிமையின் இருளில் மேலும் கருத்துக் கவிழ்ந்திருந்தது.

அரவிந்தனுக்கு எரிச்சலாக வந்தது. அவனால் முடிந்தவரை இந்த மும்பைப் பயணத்தைத் தவிர்க்கப்பார்த்தான். ஆனால் ஏதேதோ சமாதானங்களைச் சொல்லி, கடைசி நேரத்தில் கையில் விமான டிக்கெட்டைத் திணித்து அனுப்பிவிட்டார்கள்.

இப்போது கிளம்பிச் சென்றால் மீண்டும் திரும்புவதற்கு ஒரு வாரமாகிவிடும். அதற்குமேல் என்றாலும் ஆச்சரியப்படமுடியாது, மறுக்கமுடியாது. மாதத்தில் இருபது நாள்களுக்குமேல் வெளியூர்த் தண்ணீரைக் குடிக்கதான் அவனுக்கு விதித்திருக்கிறது.

அவனுக்குப் பத்து நாள்களுக்குத் தேவையான அலுவல் உடைகள், கைலி, துண்டு, சவர உபகரணங்கள், ஷு, சாக்ஸ் என்று தேடி எடுத்துவைப்பதிலேயே செல்வியின் இன்றைய நாள்முழுதும் சென்றுவிட்டது. ஒருவழியாகப் பெட்டியை அமுக்கி மூடிப் பூட்டி நிமிர்ந்தால் மணி ஏழு, அவன் ஆட்டோ தேடக் கிளம்பிவிட்டான்.

பெட்டியும் படுக்கையும் பாழாகப்போகட்டும் என்று வீசி எறிந்துவிட்டு, செல்வியோடு இன்று ஒரு சினிமாவுக்குச் சென்றிருக்கலாம் என்று தோன்றியது அவனுக்கு. சினிமா இல்லாவிட்டால் எங்காவது பூங்கா, இல்லாவிட்டால் சும்மா சுற்றிப்பார்த்துவிட்டு எதுவும் வாங்காமல் வருவதற்கான ஒரு பளபளத்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸுக்கோ அல்லது அவளுக்குப் பிரியமான ரங்கநாதர் கோவிலுக்கோகூடப் போய் வந்திருக்கலாம்.

இவையெல்லாம்கூட அவசியமில்லை. மணிக்கணக்காக டிவியைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்காமல் அவளோடு நாலு வார்த்தை தொடர்ந்தாற்போல் பேசியிருக்கலாம், அல்லது அவளுடைய வேலைகளில் உதவியிருக்கலாம், ஏதாவது செய்திருக்கலாம். அபூர்வமாகக் கிடைத்த முழு நாள் வாய்ப்பைத் தவறவிட்டாகிவிட்டது.

எப்படியாவது இந்த வாரம் வெள்ளிக்கிழமைக்குள் பம்பாய் வேலையை முடித்துக்கொண்டு திரும்பிவிடவேண்டும் என்று உறுதியாக நினைத்துக்கொண்டான் அரவிந்தன். அடுத்த சனி, ஞாயிறு எந்த ஆஃபீஸ் கடமைகளையும் வைத்துக்கொள்ளாமல், செல்வியை எங்காவது கூட்டிச் செல்லவேண்டும், ஊட்டி, கொடைக்கானல், மைசூர், அல்லது மந்த்ராலயம், உடுப்பி, சிருங்கேரி, எங்கேயாவது.

எப்படியாவது இந்தப் பெருநகரத்தின் குளிர் சுவாசத்திலிருந்து தப்பித்தால் போதும் என்றிருந்தது அரவிந்தனுக்கு. இங்கே உள்ளவரை அலுவலகத்துக்கு வெளியே சுவாசிக்கக்கூட நமக்கென்று நேரம் ஒதுக்கிக்கொள்ளமுடிவதில்லை. எல்லாம் தன்போக்கில் நடக்கிறது, பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகிற ஒரு சருகைப்போல அதன் ஓட்டத்தில் நாமும் மிதந்துகொண்டிருப்பது ஒன்றுதான் சாத்தியமாக இருக்கிறது.

நல்லவேளையாக, செல்வி அதிகம் எதிர்பார்ப்புகள் அற்றவளாக இருக்கிறாள். அல்லது, அவற்றை அதிகம் வெளிக்காட்டிக்கொள்ளாதவளாக.

கொடியசைந்து காற்று வந்ததா, அல்லது காற்று வந்து கொடியசைந்ததா என்பதுபோல் அரவிந்தனோடான வாழ்க்கைக்கு செல்வி பழகிக்கொண்டாளா என்று அவனால் நிச்சயமாகச் சொல்லமுடியவில்லை.

திருமணத்துக்குமுன்பே செல்வியை அவனுக்குத் தெரியும். அவனுடைய அப்பாவின் அலுவலக நண்பரின் மகள்தான் அவள். அவர்கள் வீட்டுத் திருமணம் ஒன்றிற்குச் சென்றிருந்தபோது பழக்கம். அதன்பிறகும் சிலமுறை யதேச்சையாகச் சந்தித்திருக்கிறார்கள். என்றாலும், அவளோடு மொத்தமே ஒன்றிரண்டு வார்த்தைகள்தான் பேசியிருந்தான் அரவிந்தன், அவள் பேசியவை இன்னும் குறைவு.

அதன்பிறகு அவள் வீட்டில் செல்விக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தபோது, அரவிந்தனைப்பற்றிப் பேச்சு வந்திருக்கிறது. அவனிடம் சம்மதம் கேட்டார்கள். யோசிக்காமல் ‘சரி’ என்று சொன்னபோது அவளுடைய முகம்கூட அவனுக்குக் கொஞ்சம் மறந்துபோயிருந்தது. ஆனால் அரைகுறை ஞாபகத்தின் பனி படர்ந்த அவள் பிம்பம் அதி அழகாகத் தெரிந்தது.

ஆனால் செல்விக்கு அவனை நன்றாக நினைவிருந்தது. அரவிந்தனை முதன்முதலாகப் பார்த்தபோது தானொரு மஞ்சள் தாவணியும் நீல நிறக் கரையிட்ட ரிப்பனும் அணிந்திருந்ததைக்கூடத் துல்லியமாக ஞாபகம் வைத்திருந்தாள்.

அவளிடம் அவன் கொண்டது நேசம் என்று சொல்வதைவிட, ஒருவிதமான ஆச்சரியம் என்றுதான் சொல்லவேண்டும். எந்த விதத்திலும் விசேஷமானவனாக இல்லாத தன்னைக்கூட இந்த அளவுக்கு நேசிக்கிறவள் ஒருத்தி இருக்கிறாளே என்கிற வியப்புதான்.

இத்தனைக்கும் அரவிந்தன் பாசத்துக்கு ஏங்கியவன் என்றெல்லாம் சொல்லமுடியாது. அப்பா, அம்மா, தங்கைகள் என்று எல்லோருமே அவன்மீது மிகுந்த அன்பும் பெருமையும் கொண்டிருந்தவர்கள்தான்.

ஆனால் அவர்களுடைய நேசத்தோடு ஒப்பிடக்கூடமுடியாதபடி செல்வி மாறுபட்டவளாக இருந்தாள். அவளைப்பொறுத்தவரை அவன் மிக விசேஷம் என்பதை அவள் பேசுகிற ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வோர் அசைவும் உரக்கச் சொல்லிக்கொண்டிருந்தது. இன்னும் குறிப்பாகச் சொல்வதானால் அவனைச் சேர்வதற்காகதான் இத்தனை நாளாகக் காத்துக்கொண்டிருந்தேன் என்பதுபோன்ற ஓர் இயல்பான உரிமை கலந்த பழகுதல் உணர்ச்சியுடன் அவள் நடந்துகொண்டாள்.

அதுதான் அரவிந்தனை மிகுந்த திகைப்பில் ஆழ்த்தியது. எதற்காக எனக்கு இத்தனை முக்கியத்துவம்? ஒரு சின்னத் தயக்கம்கூட இல்லாமல், எல்லாவிதத்திலும் என்னிடம் தன்னை முழுசாக ஒப்படைக்க இவள் தயாராக இருக்கிறாளே, இந்தப் பழக்கமும், நெருக்கமும் திடுதிப்பென்று எப்படி ஏற்பட்டது? இவள் என்மீது உரிமை எடுத்துக்கொண்டு ஒன்றுவதுபோல், என்னால் இவளிடம் இயல்பாகப் பழகமுடியவில்லையே, அது தப்பா? நான் ஒரு நல்ல கணவன் இல்லையா?

அரவிந்தனின் இந்தக் குழப்பமெல்லாம் செல்விக்குப் புரிந்ததோ, இல்லையோ. புதுத் திருமணத்தின் மகிழ்ச்சியோ அல்லது பழக்கமில்லாத கடமைகளின் சுமையோ அவளைப் பாதித்ததாகத் தெரியவில்லை. இப்படியொரு மாற்றத்தை ஏற்கெனவே எதிர்பார்த்திருந்ததுபோலவோ, அல்லது அதற்குத் தயாராகிக் காத்திருந்ததுபோலவோதான் அவள் நடந்துகொண்டாள். ஏற்கெனவே நன்கு பழகியதொரு வீட்டில் மீண்டும் குடிபுகுந்தவளைப்போல சட்டென்று அவனுடைய மனதின் மூலை முடுக்குகளிலெல்லாம் பாலாகப் பொங்கிவிட்டாள்.

சில நாள்களுக்குமுன்வரை அவனும் அவளும் பரஸ்பர அன்னியர்கள். இப்போது இந்தத் திருமணச் சடங்கின்மூலம் அந்தத் தூரங்களெல்லாம் கரைந்து தீர்ந்துவிட்டதைப்போல ஒரு பிம்பம் உண்டானாலும் உள்மனத்தின் அடி ஆழத்தில் அந்த விலகல் உணர்வு கொஞ்சமாவது இல்லாமலா போகும்?

இந்த எண்ணம்தான் அரவிந்தனை விடாமல் துரத்திக்கொண்டிருந்தது. ஒருவருக்கொருவர் அதிகம் அறிமுகமில்லாத புதுத் தம்பதியினர் உடலால் இணைவதைக்கூட உடல் தேவை, இன்னும் மிச்சமிருக்கிற மிருக இச்சை என்றெல்லாம் வரையறுத்துவிடலாம். ஆனால் இப்படிப் பளீரென்று மனத்தால் ஒன்றும் ஒருத்தியை விரும்பி நேசிக்காமல் எப்படி இருக்கமுடியும்?

ஆனால் அவளுடைய நேசத்துக்குத் தன்னால் பதில் மரியாதை செய்யவேமுடியாது என்று அரவிந்தனுக்கு நன்றாகத் தெரியும். அவன் எத்தனைதான் கஷ்டப்பட்டு முயன்றாலும் எதிர்பாராத, ஆனால் தேவையான ஒரு தருணத்தின் அன்பான ஒரு புன்னகையிலோ அக்கறையான நெற்றி வருடலிலோ அவனைச் சர்வசாதாரணமாக வீழ்த்தி ஜெயித்துவிடுவாள் அவள்.

இதை அவளிடம் சொன்னால், ‘மக்கு’ என்று தலையில் குட்டிச் சிரிப்பாள். அதற்குமேல், இதையெல்லாம் ஆராயக்கூடாது. அவளுக்குப் பிடிக்காது.

யோசனையில் ஆழ்ந்திருந்த அரவிந்தனை சப்தமில்லாத ஓர் ஆட்டோ கடந்துபோனது. அதனுள்ளிருந்த நடுத்தர வயதுக்காரர் கை வைக்காத பனியனும் அரைக்கால் சட்டையும் அணிந்திருந்தார். அவனைப் பார்த்து எதற்காகவோ சிரித்தார்.

அரவிந்தனுக்கு இதற்குமேல் ஆட்டோ கிடைக்கும் என்கிற நம்பிக்கை போய்விட்டது. மாறாக இதைச் சாக்காகச் சொல்லி, பம்பாய் பயணத்தை ரத்து செய்துவிடலாம் என்றுதான் அல்பமாக ஓர் ஆசை தோன்றியது.

‘எம்பது ரூவா ஆட்டோவுக்காக, பத்தாயிரம் ரூவா டிக்கெட்டை வீணாக்கப்போறியா?’ ஓரத்தில் யாரோ கை கொட்டிச் சிரித்தார்கள், ‘பத்தாயிரமாவது? நம்ம அரவிந்தன் இப்போ பம்பாய் போகலைன்னா நூறு கோடி ரூபாய் ப்ராஜெக்ட் பாழாப்பூடும், தெரியுமா?’, என்று சொல்லிவிட்டு ஒரு பெரியவர் முழ நீள தாடியைப் பாசத்தோடு வருடிக்கொண்டார்.

அரவிந்தன் தலையை பலமாக உலுக்கிக்கொண்டு அடுத்த ஆட்டோவுக்காக மீண்டும் சாலையைப் பார்க்க ஆரம்பித்தான். யாராவது சீக்கிரமாக ஓர் ஆட்டோ கொண்டுவாருங்களேன், இரு மடங்கு, மூன்று மடங்கு காசாகக் கொடுத்துவிடுகிறேன் என்று சத்தமாகக் கத்தத்தோன்றியது.

இன்னும் பத்துப் பதினைந்து நிமிடங்களுக்குள் ஆட்டோ கிடைத்தால்தான். இல்லையென்றால் தாமதமாகிவிடும். விமானம் கிளம்புவதற்குக் குறைந்தது முக்கால் மணி நேரமாவது முன்னதாக அங்கே செல்லவேண்டும். இல்லையென்றால் பயணிகளை உள்ளே அனுப்பிக் கதவைச் சாத்திவிடுவார்கள்.

மீண்டும் பதட்டமாக மணி பார்த்தான் அரவிந்தன். கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்களாக இங்கேயே நின்றுகொண்டிருக்கிறான். இதுவரை ஐந்து ஆட்டோக்கள்தான் கண்ணில் பட்டன, இரண்டில் ஏற்கெனவே பயணிகள் இருந்தார்கள், ஓர் ஆட்டோ நிற்காமல் போய்விட்டது, மற்ற இரண்டு ஆட்டோக்களும் விமான நிலையத்துக்குச் சவாரி மறுத்துவிட்டார்கள்.

ஆட்டோ கிடைக்காத கவலையோடு, இத்தனை நேரமாகியும் அவன் ஆட்டோவோடு திரும்பி வராததால் செல்வி அநாவசியமாகக் கலவரப்பட்டுக்கொண்டிருப்பாளே என்கிற நினைப்பும் அவனைச் சிரமப்படுத்தியது.

செல்வியின் அபத்த குணங்களில் இதுவும் ஒன்று. யாரேனும் குறித்த நேரத்துக்குச் சற்று தாமதமாக வந்தாலும் அவர்களுக்கு ஏதோ நடந்துவிட்டது என்பதுபோல் மனதினுள் முடிவுகட்டிக்கொண்டுவிடுவாள். விழியோரங்களில் அனிச்சைக் கண்ணீர் துளிர்த்துநிற்கத் தொடங்கிவிடும்.

ஆனால் இதுபோன்ற விபரீதக் கற்பனைகளையும் அசம்பாவிதங்களையும் வாய்விட்டுச் சொல்வதும் அவளுடைய பழக்கமில்லை. அவளைச் சுற்றிலும் எந்நேரமும் காத்துநிற்கிற ‘ததாஸ்து’ தேவதைகள் அவள் ஏதேனும் தவறாகச் சொல்லிவிட்டால் ‘அப்படியே ஆகட்டும்’, என்று சொல்லிவிடுவார்களாம், அப்படியே ஆகிவிடுமாம்.

ஆகவே, தன்னுடைய கவலைகளை மனதினுள் போட்டுப் பூட்டிக்கொண்டு வாசலுக்கும் உள்ளுக்குமாகப் பல முறை நடப்பாள். அந்தத் தீவிர நடைபயணத்தால் எந்த உடனடி விளைவும் ஏற்படாவிட்டால் ‘என்னாச்சுன்னு கொஞ்சம் போய்ப் பார்த்துட்டு வாயேன்’ என்று அரவிந்தனை விரட்டிவிட்டு கண்களைத் துடைத்துக்கொண்டு சட்டென்று பிரார்த்தனை அறைக்குள் புகுந்துகொள்வாள்.

இப்போது அரவிந்தனே ரொம்பநேரமாக நடுத்தெருவில் சிக்கிக்கொண்டிருக்கிறான். அவனுக்கு என்ன ஆகிவிட்டதோ என்று நினைத்து இப்போது அவள் என்னவெல்லாம் கற்பனைகளை வளர்த்துக்கொண்டிருக்கிறாளோ.

அரவிந்தனுக்கு ஆட்டோ கிடைக்கவில்லை, இங்கிருந்து விமான நிலையத்திற்குப் பதினைந்து கிலோ மீட்டர் பயணம் செய்து, எண்பது ரூபாயோ தொண்ணூறு ரூபாயோ கூலி வாங்கிக்கொள்ள ஆட்டோ டிரைவர்கள் யாருக்கும் விருப்பமில்லைபோல. நாட்டில் காசுக்கு மதிப்பு குறைந்துவிட்டது, அல்லது, எல்லோரும் நோகாமல் அருகாமைச் சவாரிகளிலேயே நிறைய சம்பாதிக்க ஆசைப்படுகிறார்கள்.

‘நானும் இனிமேல் தூரச் சவாரியெல்லாம் போகமாட்டேன்’ என்று ஒருமுறை சத்தமாகச் சொல்லிக்கொண்டான் அரவிந்தன். பத்து நாளைக்கு ஒருமுறை மும்பைக்கும், கொல்கத்தாவுக்கும் பையைத் தூக்கிக்கொண்டு ஓடுவதற்கு யாரால் ஆகிறது? ஒவ்வொருமுறையும் புதுப்புது ஹோட்டல்கள், தண்ணீர் மாற்றம், சாப்பாடு மாற்றம், பாஷை மாற்றம், மனோநிலை மாற்றம்…

இவை, வளர்ச்சி அல்லது முதிர்ச்சியின் காரணமாக விளையும் இயல்பான மாற்றங்கள் என்றால்கூட பரவாயில்லை. ஆனால், அவ்வப்போது வேஷம் போடுவதுபோல் இப்படித் தாற்காலிகமாக மாறிக்கொண்டே இருப்பதற்கு அவனால் முடியவில்லை. ஒவ்வொருமுறை பெங்களூர் திரும்பும்போதும் தன்னையே அன்னியமாக உணரத்தோன்றுகிறது.

சமீபகாலமாக செல்விக்கும் இதிலெல்லாம் சுரத்துக் குறைந்துகொண்டிருப்பதாகத் தெரிகிறது. தனக்கு விதிக்கப்பட்டிருப்பது இதுதான் என்று புரிந்துகொண்ட ஒரு பாவனை, பிரிவின் வேதனைக்குப் பழகிவிட்ட மரத்துப்போன தன்மையைப் பார்க்கமுடிகிறது.

முன்பெல்லாம் அவன் வெளியூருக்குச் செல்வதாகத் தெரிந்தால், அந்த விநாடியிலிருந்து அவள் கண்களில் சோகம் கவிந்துகொள்ளும். அதன்பின் அவளுடைய நடவடிக்கைகளில் எந்த ஆர்வமும் இருக்காது. அவனுக்கான பயணப் பெட்டியைக் கச்சிதமாக அடுக்கிவைப்பதெல்லாம் அவள்தான். என்றாலும் போகிற வெளியூரில் அவன் எந்தச் சிரமமும் இல்லாமல், சகல சவுகர்யங்களோடும் இருக்கவேண்டும் என்பதில் காட்டுகிற அக்கறையை அவள் தன்னிடத்தில் காட்டிக்கொள்ள மறுத்துவிடுவாள், எல்லாப் பற்றையும் இழந்துவிட்டவள்போன்ற வேதனையோடு ‘ஜாக்கிரதையாப் போய்ட்டு வா’ என்றும், ‘சீக்கிரமாத் திரும்பி வந்திடணும், சரியா?’ என்றும் சொல்லி அவள் விசும்புகிறபோது, அவனுக்கும் வாய்விட்டுக் கதறத்தோன்றும்.

இப்போதும், பிரிவின் வேதனை படிந்த அதே கண்களிடம்தான் அவன் சற்றுமுன் விடைபெற்றுக் கிளம்பியிருந்தான். ஆனால் சமீப காலமாக அவளிடம் தெரிகிற முக்கியமான மாற்றம், ‘சீக்கிரமாத் திரும்பி வந்துடுவேதானே?’ என்கிற எதிர்பார்ப்பு இல்லை. இவன் எக்காரணம் கொண்டும் சீக்கிரம் திரும்பி வரமாட்டான், எந்த வேலைக்காகச் செல்கிறானோ அதை முழுசாக முடித்துவிட்டுதான் திரும்புவான். அதுவரை தனிமைத் துணையோடு தான் காத்திருக்கதான் வேண்டும் என்கிற உறுதி தெரிகிறது. ‘என்ன செய்வது? நான் கொடுத்துவைத்தது அவ்வளவுதான்!’ என்று பெருமூச்சு விடுகிற ஒரு பெண்ணின் பாவனையோடு அவள் அவனது குறும்பயணங்களை எதிர்கொள்ளத்தோடங்கிவிட்டாள்.

ஒருவிதத்தில் இது முதிர்ச்சியின் அறிகுறி. என் மனைவி அநாவசியமாகக் குறை சொல்வதில்லை, என்னுடைய நிலைமையைப் புரிந்துகொள்கிறாள் என்று நினைத்து சந்தோஷப்படலாம். ஆனால் ஏனோ, அரவிந்தனால் அப்படி நினைக்கவேமுடிவதில்லை.

‘ஐயோ, நான் அப்படி இல்லை!’ என்றுதான் அவளிடம் கத்தவேண்டும்போலிருக்கிறது அரவிந்தனுக்கு. இப்படி அடிக்கடி பயணம் கிளம்பிப்போவதில் அவனுக்குமட்டும் விருப்பமா என்ன?

வேலை, கடமை, அவளுக்காகதான் சம்பாதிக்கிறேன் என்று ஆயிரம் காரணங்கள் சொன்னாலும், அவன்மட்டும்தான் முக்கியம் என்று எண்ணி அவள் அவனுக்குத் தருகிற முழுமையான முக்கியத்துவத்தை அவனால் அவளுக்குத் திருப்பித்தரமுடிவதில்லையே.

திருமணத்துக்குப்பின் செல்வியை வேலைக்குப் போகக்கூடாது என்று அவன் மறுக்கவில்லை. சொல்லப்போனால், அப்படித் தடுக்கிற உரிமை தனக்கு இருக்கிறது என்றுகூட அவன் நினைக்கவில்லை.

ஆனால் அவள்தான் வேலைக்குப் போகமுடியாது என்று பிடிவாதமாக மறுத்துவிட்டாள். ‘எனக்கு எவன் வேலை கொடுப்பான்?’ என்று அவள் கிண்டலாகப் பேசினாலும் வீட்டில் ஒருவர்தான் வேலைக்குப் போகவேண்டும் என்பதில் அவள் பிடிவாதமாக இருந்தாள்.

அதன்பிறகு, அந்த வீடுதான் அவளுடைய உலகமாகிவிட்டது. அன்றாட வேலைகளில் தொடங்கி உள் அலங்காரம்வரை எந்த வேலையையும் தானே செய்யவேண்டும் என்று முரட்டுப் பிடிவாதமாக இருந்தாள் அவள். கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கொள், ஒரு வேலைக்காரிக்கு ஏற்பாடு செய்துகொள் என்றெல்லாம் அரவிந்தன் சொன்னால் அவளுக்குக் கோபம் வரும்.

எதற்காக அவள் இப்படித் தன்னைத் தேய்த்துக்கொள்ளவேண்டும் என்று அவனுக்கு சத்தியமாகப் புரியவில்லை. ஒரு பணியாளருக்குச் சம்பளம் தரமுடியாத அளவுக்கு அவர்கள் ஏழையில்லை. அப்படியிருக்க, தினந்தோறும் நானேதான் இடுப்பு ஒடிய வீட்டைப் பெருக்குவேன், துடைப்பேன் என்றெல்லாம் என்னத்துக்குப் பிடிவாதம்?

எப்போதாவது அதிசய நாள்களில் அரவிந்தன் அலுவலகத்திலிருந்து கொஞ்சம் சீக்கிரமாகக் கிளம்பி இன்றைக்கு எங்காவது வெளியே போகலாம் என்று நினைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தால், அவள் துடைப்பமும் கையுமாகக் களைத்து நிற்பாள். அவளை அப்படிப் பார்ப்பதில் பாதி வேதனை, மீதி எரிச்சலோடு அவன் கத்தினால், அவளும் பதிலுக்குச் சீறுவாள், ‘உன் ஆஃபீஸ் வேலையில நான் தலையிடறேனா? அதேமாதிரி வீட்ல எதை எப்படிச் செய்யணும்-ன்னு நீ எனக்கு ஆர்டர் போடாதே!’

சட்டென்று அவனுடைய ஆத்திரம் தணியும், ‘உன் நல்லதுக்குதாம்மா சொல்றேன்’ என்று குழைவான்.

ஆனால், இந்த ஒரு விஷயத்தில்மட்டும் செல்வியின் ஆவேசம் சில மணி நேரங்களுக்குக் குறையாது, ‘எனக்கு ஹெல்ப் பண்ணணும்-ன்னு உனக்குத் தோணிச்சுன்னா வாரத்தில நாலு நாள் நீ வீட்டைக் க்ளீன் பண்ணு, இல்லைன்னா துணியெல்லாம் துவைச்சுத் தர்றேன், காயப்போடு, டெய்லி ஒரு வேளை நீ சமையல் பண்ணு,. அதை விட்டுட்டு வேலைக்காரி, அது, இதுன்னெல்லாம் பேசாதே!’

அவளுடைய பேச்சில் ஒரே நேரத்தில் நியாயமும் அநியாயமும் சம அளவில் தொனிப்பதாக அரவிந்தனுக்குத் தோன்றும். ஆனால் இந்தப் பெண் இப்படிப் பிடிவாதமாக என் தரப்பைப் புரிந்துகொள்ள மறுக்கிறதே என்று அபூர்வமாக அவள்மீது கோபமும் வரும்.

தினசரி சிறிது நேரம் வீட்டு வேலைகளை அவளோடு பகிர்ந்துகொள்ளலாம், அவனால் முடிவதில்லை. அது ரொம்பத் தப்புதான். ஆனால் ஒரு பணியாளரின் சம்பளத்துக்கோ, அல்லது வேறு வீட்டு வசதி உபகரணங்களுக்கோ தாராளமாகச் செலவிடுவதால்தான் அந்தத் தவறுக்கான பரிகாரத்தை அவனால் செய்யமுடியும் என்பது அவளுக்குப் புரிவதே இல்லை. வேறு எந்த வழியிலும் அந்தச் சில மணி நேரங்களை அவனால் சேமித்து அவளுக்குத் தரவேமுடியாது.

அவனுடைய வேலையில் எல்லாமே மணிக்கணக்குதான். நாற்பது மணி நேர வேலை, ஐந்து மில்லியன் மணி நேர வேலை என்றுதான் சிறிய, பெரிய பணிகளின் அளவுகளைக் கணக்கிட்டுப் பேசுவார்கள். வாடிக்கையாளர்களிடம் பணம் வசூலிப்பதுகூட இந்த மணிக்கணக்கின் அடிப்படையில்தான். தொழிலாளர் சட்டப்படி ஒரு நாளைக்கு ஒருவரிடம் அதிகபட்சம் எட்டு மணி நேரங்கள்தான் வேலை வாங்கவேண்டும் என்கிற ஒரே ஒரு மணிக்கணக்கைத்தவிர மற்ற எல்லாமே அவனது நிறுவனத்தினருக்கு அத்துப்படி.

இதனால், நிர்ணயிக்கப்பட்ட பணி நேரம் என்பது சும்மா பாவ்லாதான். அதற்குமேல் வேலை பார்ப்பது என்பது அலுவலகத்தின் குறை சொல்லமுடியாத அவசியத் தேவை. எத்தனைக்கெத்தனை அதிகம் உழைக்கிறோமோ அத்தனைக்கத்தனை சீக்கிரத்தில் ப்ராஜெக்ட் முடியும், அடுத்த ப்ராஜெக்டில் மாட்டிக்கொள்ளலாம். இந்தச் சுழலில் சிக்கியபிறகு வெளிவருவது மிகச் சிரமம்.

சொல்லப்போனால், இதிலிருந்து வெளிவந்துவிடுவோமோ என்கிற பயத்திலேயே அளவுக்கதிகமாக உழைக்கிறவர்கள் இருக்கிறார்கள். ஐந்து பணி நாள்கள்தவிர வாராந்திர விடுமுறைகளான சனிக்கிழமைகளிலும் அலுவலகம் வருவது கட்டாயமாகவே அமைந்துவிடும். பல சமயங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில்கூட.

ஆனால், இதையெல்லாம் சொல்லிப் புலம்புவது முடியாது. முருங்கை மரத்தில் ஏற ஒப்புக்கொண்டு பேய்க்கு வாழ்க்கைப்பட்டவர்கள்போல் அதிக சம்பளத்துக்குப் பணிந்து மரமேறக் கற்கவேண்டியிருக்கிறது.

இந்த விஷயங்களெல்லாம் செல்விக்குப் புரியாமலில்லை. அவனுக்கு பெங்களுரில் இந்த வேலை கிடைத்ததிலிருந்து, அவர்களுடைய வாழ்க்கைமுறையே மாறிவிட்டது. அதிகாலையில் எழுந்து கிளம்பி ஏழு மணி கம்பெனி பஸ்ஸில் கிளம்பிப்போனால் அதன்பிறகு அவன் திரும்பி வருகிற நேரம் நிச்சயமில்லை. ஆகவே, நாள்முழுதும் பெரும்பான்மை நேரம் தங்களின் பெரிய வீட்டின் தனிமையில் வாழப் பழகிக்கொண்டுவிட்டாள் அவள். சிலசமயங்களில் அரவிந்தனே தன்னுடைய அலுவல் பணியைப்பற்றி அலுத்துக்கொண்டால்கூட அவளிடமிருந்து சலிப்பாக ஒரு வார்த்தை வராது.

அந்த மௌனம்தான் பெரிய அவஸ்தை என்று எண்ணிக்கொண்டான் அரவிந்தன். ‘என்ன நீ? நினைச்ச நேரத்துக்கு வர்றே, நினைச்ச நேரத்துக்குப் போறே, வீட்ல ஒருத்தி இருக்கிறது கொஞ்சமாவது நினைப்பிருக்கா?’ என்றெல்லாம் வாய்விட்டுத் திட்டிவிட்டால்கூட பரவாயில்லை, ‘நீ அப்படிதான், பரவாயில்லை, போ’ என்பதுபோல் அவனை ஒதுக்கிவிடுகிற மௌனம் ரொம்ப உறுத்துகிறது. நாளுக்குச் சில மணி நேரம் தூங்குவதற்காகமட்டும் வீட்டுக்கு வருகிறவனை தன்னில் பாதியாக ஒரு பெண்ணால் நினைக்கமுடியுமா?

செல்வியால் முடிகிறது. அரவிந்தனுக்கும் அவளுக்கும் நடுவே அவனது அதீத பணி அழுத்தமும் தேவைகளும் நிரம்பிவிட்டால்கூட, எந்த விஷயத்திலும் அவன்மீதான அவளது நேசம் குறைபடவே இல்லை. அதுதான் அரவிந்தனைக் குற்றவுணர்ச்சியில் தள்ளுகிறது.

சில சமயங்களில், தங்களை ஒரு பெரிய பள்ளத்தாக்கின் இரு முனைகளில் வசிக்கிறவர்களாகக் கற்பனை செய்துகொள்வான் அரவிந்தன். வலது முனையில் வசிக்கிற அவனுக்கு ஏகப்பட்ட வேலை, அந்தப்பக்கமிருக்கிற குப்பைக் காட்டை ஒழித்துச் சமனாக்கிக்கொண்டிருக்கிறான். அவன் வேலை செய்கிற ஒவ்வொரு சதுர அடிக்கும் அவனுக்கு (அல்லது அவர்களுக்குக்) காசு.

அவன் களைத்துப்போகிற தருணங்களில், இடதுபக்கமிருக்கிற செல்வி கைக்குட்டை நீட்டி வியர்வை துடைக்கிறாள், இடையிலான பள்ளத்தாக்கின் அகலம் எத்தனை அதிகமானாலும் அவளது கைகள் அதற்கேற்ப நீள்கின்றன. உண்மையில் தங்களுக்கிடையே ஒரு பள்ளம் உண்டாகியிருப்பதை அவள் உணர்ந்திருக்கிறாளா இல்லையா என்றுகூட அரவிந்தனுக்குச் சந்தேகமாக இருக்கிறது.

ஏனெனில், அப்படியொரு பள்ளம் இல்லவே இல்லை என்று பிடிவாதம் சாதிப்பதுபோல் அவள் அவனோடு இயல்பாகப் பழகிக்கொண்டிருக்கிறாள். இத்தனை நீளத்துக்குக் கையை நீட்டி கர்ச்சீப் தரவேண்டுமா? அவளுக்குக் கை வலிக்காதோ பாவம் என்று அவனுக்குப் பரிதாபமாக இருக்கிறது. ஆனால் இதற்கு என்ன செய்வது என்றுதான் தெரியவில்லை.

பதிலுக்குத் தானும் ஒரு கர்ச்சீப் எடுத்து நீட்டலாம் என்றால், அவள் நெற்றியில் வியர்வை துளிர்த்திருக்கிறதா என்று அவனால் இங்கிருந்து பார்க்கமுடிவதில்லை. ஆனால் அவனுக்கு வியர்க்கிற கணங்களை அவள்மட்டும் எப்படி மிகச் சரியாக உணர்ந்துகொள்கிறாளோ, தெரியவில்லை. கணவனுக்கும் மனைவிக்கும் இடையே பள்ளம் அமைத்துவிட்ட கடவுளின்மீதோ, காலத்தின்மீதோதான் அவனுக்கு இயலாத கோபம் பொங்குகிறது.

யோசித்துப்பார்த்தால், அந்தப் பள்ளத்தைத் தோண்டிய  கைகள் தன்னுடையவைதானோ என்றும் தோன்றுகிறது அரவிந்தனுக்கு.

(தொடரும்)

***

என். சொக்கன் …

05 05 2011


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,058 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்

Tamilish

For தமிழ் Peopleதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

May 2011
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031