Archive for May 5th, 2011
கார் காலம் – திடீர்த் தொடர் :>
Posted May 5, 2011
on:- In: கார்காலம் | Fiction | Thodarkathai | Uncategorized
- 21 Comments
1
இந்த ஆட்டோ டிரைவரும் நிர்தாட்சண்யமாக மறுத்துவிட்டான்.
அவன் புழுதி கிளப்பிச் சென்றபின்னர் அதே குனிந்த கோலத்தில் சிறிது நேரம் பரிதாபமாக நின்றிருந்தான் அரவிந்தன். வழக்கமாக இந்த நெடுஞ்சாலையில் காரும் லாரியுமாகத் தூள் கிளப்புகிற போக்குவரத்து ஞாயிற்றுக்கிழமையின் சோம்பலில் வெறிச்சோடிக் கிடந்தது.
ரோட்டில் எத்தனை தொலைவுக்குப் பார்வையை விரட்டினாலும் அங்கொருவரும் இங்கொருவருமாகச் சோகையான பிம்பங்கள்மட்டுமே தென்பட்டன. கண்ணுக்கெட்டிய தூரம்வரை வேறு ஆட்டோக்காரர்களைக் காணவில்லை. எல்லோரும் ஒரே நேரத்தில் மொத்தமாக எங்கே ஒழிந்தார்களோ தெரியவில்லை.
சலிப்போடு கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டான் அரவிந்தன். தலைகீழாகக் கவிழ்ந்துகிடந்த முள்கள் ஏழரையைத் தொடத்துடித்துக்கொண்டிருந்தன. எட்டு ஐம்பத்தைந்துக்கு விமானம், எட்டு மணிக்குள் அவன் விமான நிலையத்தில் இருந்தாகவேண்டும். இந்த நேரம் பார்த்து ஆட்டோ கிடைக்காமல் அவஸ்தை.
பிளாட்ஃபாரத்தின்மீது ஏறி நின்று தூரத்தில் ஏதேனும் ஆட்டோவோ டாக்ஸியோ வருகிறதா என்று பார்த்தான் அரவிந்தன். ம்ஹும், சாலையின் இருபக்கமும் மங்கலான வெளிச்சம் வழியும் கடைகள்தான். எங்கோ தொலைவில் ஒரு பச்சைப் பேருந்து, அதற்குச் சில நூறு மீட்டர்கள்முன்பாக ஒரு சைக்கிள், மற்றபடி தார்ச் சாலை தனிமையின் இருளில் மேலும் கருத்துக் கவிழ்ந்திருந்தது.
அரவிந்தனுக்கு எரிச்சலாக வந்தது. அவனால் முடிந்தவரை இந்த மும்பைப் பயணத்தைத் தவிர்க்கப்பார்த்தான். ஆனால் ஏதேதோ சமாதானங்களைச் சொல்லி, கடைசி நேரத்தில் கையில் விமான டிக்கெட்டைத் திணித்து அனுப்பிவிட்டார்கள்.
இப்போது கிளம்பிச் சென்றால் மீண்டும் திரும்புவதற்கு ஒரு வாரமாகிவிடும். அதற்குமேல் என்றாலும் ஆச்சரியப்படமுடியாது, மறுக்கமுடியாது. மாதத்தில் இருபது நாள்களுக்குமேல் வெளியூர்த் தண்ணீரைக் குடிக்கதான் அவனுக்கு விதித்திருக்கிறது.
அவனுக்குப் பத்து நாள்களுக்குத் தேவையான அலுவல் உடைகள், கைலி, துண்டு, சவர உபகரணங்கள், ஷு, சாக்ஸ் என்று தேடி எடுத்துவைப்பதிலேயே செல்வியின் இன்றைய நாள்முழுதும் சென்றுவிட்டது. ஒருவழியாகப் பெட்டியை அமுக்கி மூடிப் பூட்டி நிமிர்ந்தால் மணி ஏழு, அவன் ஆட்டோ தேடக் கிளம்பிவிட்டான்.
பெட்டியும் படுக்கையும் பாழாகப்போகட்டும் என்று வீசி எறிந்துவிட்டு, செல்வியோடு இன்று ஒரு சினிமாவுக்குச் சென்றிருக்கலாம் என்று தோன்றியது அவனுக்கு. சினிமா இல்லாவிட்டால் எங்காவது பூங்கா, இல்லாவிட்டால் சும்மா சுற்றிப்பார்த்துவிட்டு எதுவும் வாங்காமல் வருவதற்கான ஒரு பளபளத்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸுக்கோ அல்லது அவளுக்குப் பிரியமான ரங்கநாதர் கோவிலுக்கோகூடப் போய் வந்திருக்கலாம்.
இவையெல்லாம்கூட அவசியமில்லை. மணிக்கணக்காக டிவியைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்காமல் அவளோடு நாலு வார்த்தை தொடர்ந்தாற்போல் பேசியிருக்கலாம், அல்லது அவளுடைய வேலைகளில் உதவியிருக்கலாம், ஏதாவது செய்திருக்கலாம். அபூர்வமாகக் கிடைத்த முழு நாள் வாய்ப்பைத் தவறவிட்டாகிவிட்டது.
எப்படியாவது இந்த வாரம் வெள்ளிக்கிழமைக்குள் பம்பாய் வேலையை முடித்துக்கொண்டு திரும்பிவிடவேண்டும் என்று உறுதியாக நினைத்துக்கொண்டான் அரவிந்தன். அடுத்த சனி, ஞாயிறு எந்த ஆஃபீஸ் கடமைகளையும் வைத்துக்கொள்ளாமல், செல்வியை எங்காவது கூட்டிச் செல்லவேண்டும், ஊட்டி, கொடைக்கானல், மைசூர், அல்லது மந்த்ராலயம், உடுப்பி, சிருங்கேரி, எங்கேயாவது.
எப்படியாவது இந்தப் பெருநகரத்தின் குளிர் சுவாசத்திலிருந்து தப்பித்தால் போதும் என்றிருந்தது அரவிந்தனுக்கு. இங்கே உள்ளவரை அலுவலகத்துக்கு வெளியே சுவாசிக்கக்கூட நமக்கென்று நேரம் ஒதுக்கிக்கொள்ளமுடிவதில்லை. எல்லாம் தன்போக்கில் நடக்கிறது, பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகிற ஒரு சருகைப்போல அதன் ஓட்டத்தில் நாமும் மிதந்துகொண்டிருப்பது ஒன்றுதான் சாத்தியமாக இருக்கிறது.
நல்லவேளையாக, செல்வி அதிகம் எதிர்பார்ப்புகள் அற்றவளாக இருக்கிறாள். அல்லது, அவற்றை அதிகம் வெளிக்காட்டிக்கொள்ளாதவளாக.
கொடியசைந்து காற்று வந்ததா, அல்லது காற்று வந்து கொடியசைந்ததா என்பதுபோல் அரவிந்தனோடான வாழ்க்கைக்கு செல்வி பழகிக்கொண்டாளா என்று அவனால் நிச்சயமாகச் சொல்லமுடியவில்லை.
திருமணத்துக்குமுன்பே செல்வியை அவனுக்குத் தெரியும். அவனுடைய அப்பாவின் அலுவலக நண்பரின் மகள்தான் அவள். அவர்கள் வீட்டுத் திருமணம் ஒன்றிற்குச் சென்றிருந்தபோது பழக்கம். அதன்பிறகும் சிலமுறை யதேச்சையாகச் சந்தித்திருக்கிறார்கள். என்றாலும், அவளோடு மொத்தமே ஒன்றிரண்டு வார்த்தைகள்தான் பேசியிருந்தான் அரவிந்தன், அவள் பேசியவை இன்னும் குறைவு.
அதன்பிறகு அவள் வீட்டில் செல்விக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தபோது, அரவிந்தனைப்பற்றிப் பேச்சு வந்திருக்கிறது. அவனிடம் சம்மதம் கேட்டார்கள். யோசிக்காமல் ‘சரி’ என்று சொன்னபோது அவளுடைய முகம்கூட அவனுக்குக் கொஞ்சம் மறந்துபோயிருந்தது. ஆனால் அரைகுறை ஞாபகத்தின் பனி படர்ந்த அவள் பிம்பம் அதி அழகாகத் தெரிந்தது.
ஆனால் செல்விக்கு அவனை நன்றாக நினைவிருந்தது. அரவிந்தனை முதன்முதலாகப் பார்த்தபோது தானொரு மஞ்சள் தாவணியும் நீல நிறக் கரையிட்ட ரிப்பனும் அணிந்திருந்ததைக்கூடத் துல்லியமாக ஞாபகம் வைத்திருந்தாள்.
அவளிடம் அவன் கொண்டது நேசம் என்று சொல்வதைவிட, ஒருவிதமான ஆச்சரியம் என்றுதான் சொல்லவேண்டும். எந்த விதத்திலும் விசேஷமானவனாக இல்லாத தன்னைக்கூட இந்த அளவுக்கு நேசிக்கிறவள் ஒருத்தி இருக்கிறாளே என்கிற வியப்புதான்.
இத்தனைக்கும் அரவிந்தன் பாசத்துக்கு ஏங்கியவன் என்றெல்லாம் சொல்லமுடியாது. அப்பா, அம்மா, தங்கைகள் என்று எல்லோருமே அவன்மீது மிகுந்த அன்பும் பெருமையும் கொண்டிருந்தவர்கள்தான்.
ஆனால் அவர்களுடைய நேசத்தோடு ஒப்பிடக்கூடமுடியாதபடி செல்வி மாறுபட்டவளாக இருந்தாள். அவளைப்பொறுத்தவரை அவன் மிக விசேஷம் என்பதை அவள் பேசுகிற ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வோர் அசைவும் உரக்கச் சொல்லிக்கொண்டிருந்தது. இன்னும் குறிப்பாகச் சொல்வதானால் அவனைச் சேர்வதற்காகதான் இத்தனை நாளாகக் காத்துக்கொண்டிருந்தேன் என்பதுபோன்ற ஓர் இயல்பான உரிமை கலந்த பழகுதல் உணர்ச்சியுடன் அவள் நடந்துகொண்டாள்.
அதுதான் அரவிந்தனை மிகுந்த திகைப்பில் ஆழ்த்தியது. எதற்காக எனக்கு இத்தனை முக்கியத்துவம்? ஒரு சின்னத் தயக்கம்கூட இல்லாமல், எல்லாவிதத்திலும் என்னிடம் தன்னை முழுசாக ஒப்படைக்க இவள் தயாராக இருக்கிறாளே, இந்தப் பழக்கமும், நெருக்கமும் திடுதிப்பென்று எப்படி ஏற்பட்டது? இவள் என்மீது உரிமை எடுத்துக்கொண்டு ஒன்றுவதுபோல், என்னால் இவளிடம் இயல்பாகப் பழகமுடியவில்லையே, அது தப்பா? நான் ஒரு நல்ல கணவன் இல்லையா?
அரவிந்தனின் இந்தக் குழப்பமெல்லாம் செல்விக்குப் புரிந்ததோ, இல்லையோ. புதுத் திருமணத்தின் மகிழ்ச்சியோ அல்லது பழக்கமில்லாத கடமைகளின் சுமையோ அவளைப் பாதித்ததாகத் தெரியவில்லை. இப்படியொரு மாற்றத்தை ஏற்கெனவே எதிர்பார்த்திருந்ததுபோலவோ, அல்லது அதற்குத் தயாராகிக் காத்திருந்ததுபோலவோதான் அவள் நடந்துகொண்டாள். ஏற்கெனவே நன்கு பழகியதொரு வீட்டில் மீண்டும் குடிபுகுந்தவளைப்போல சட்டென்று அவனுடைய மனதின் மூலை முடுக்குகளிலெல்லாம் பாலாகப் பொங்கிவிட்டாள்.
சில நாள்களுக்குமுன்வரை அவனும் அவளும் பரஸ்பர அன்னியர்கள். இப்போது இந்தத் திருமணச் சடங்கின்மூலம் அந்தத் தூரங்களெல்லாம் கரைந்து தீர்ந்துவிட்டதைப்போல ஒரு பிம்பம் உண்டானாலும் உள்மனத்தின் அடி ஆழத்தில் அந்த விலகல் உணர்வு கொஞ்சமாவது இல்லாமலா போகும்?
இந்த எண்ணம்தான் அரவிந்தனை விடாமல் துரத்திக்கொண்டிருந்தது. ஒருவருக்கொருவர் அதிகம் அறிமுகமில்லாத புதுத் தம்பதியினர் உடலால் இணைவதைக்கூட உடல் தேவை, இன்னும் மிச்சமிருக்கிற மிருக இச்சை என்றெல்லாம் வரையறுத்துவிடலாம். ஆனால் இப்படிப் பளீரென்று மனத்தால் ஒன்றும் ஒருத்தியை விரும்பி நேசிக்காமல் எப்படி இருக்கமுடியும்?
ஆனால் அவளுடைய நேசத்துக்குத் தன்னால் பதில் மரியாதை செய்யவேமுடியாது என்று அரவிந்தனுக்கு நன்றாகத் தெரியும். அவன் எத்தனைதான் கஷ்டப்பட்டு முயன்றாலும் எதிர்பாராத, ஆனால் தேவையான ஒரு தருணத்தின் அன்பான ஒரு புன்னகையிலோ அக்கறையான நெற்றி வருடலிலோ அவனைச் சர்வசாதாரணமாக வீழ்த்தி ஜெயித்துவிடுவாள் அவள்.
இதை அவளிடம் சொன்னால், ‘மக்கு’ என்று தலையில் குட்டிச் சிரிப்பாள். அதற்குமேல், இதையெல்லாம் ஆராயக்கூடாது. அவளுக்குப் பிடிக்காது.
யோசனையில் ஆழ்ந்திருந்த அரவிந்தனை சப்தமில்லாத ஓர் ஆட்டோ கடந்துபோனது. அதனுள்ளிருந்த நடுத்தர வயதுக்காரர் கை வைக்காத பனியனும் அரைக்கால் சட்டையும் அணிந்திருந்தார். அவனைப் பார்த்து எதற்காகவோ சிரித்தார்.
அரவிந்தனுக்கு இதற்குமேல் ஆட்டோ கிடைக்கும் என்கிற நம்பிக்கை போய்விட்டது. மாறாக இதைச் சாக்காகச் சொல்லி, பம்பாய் பயணத்தை ரத்து செய்துவிடலாம் என்றுதான் அல்பமாக ஓர் ஆசை தோன்றியது.
‘எம்பது ரூவா ஆட்டோவுக்காக, பத்தாயிரம் ரூவா டிக்கெட்டை வீணாக்கப்போறியா?’ ஓரத்தில் யாரோ கை கொட்டிச் சிரித்தார்கள், ‘பத்தாயிரமாவது? நம்ம அரவிந்தன் இப்போ பம்பாய் போகலைன்னா நூறு கோடி ரூபாய் ப்ராஜெக்ட் பாழாப்பூடும், தெரியுமா?’, என்று சொல்லிவிட்டு ஒரு பெரியவர் முழ நீள தாடியைப் பாசத்தோடு வருடிக்கொண்டார்.
அரவிந்தன் தலையை பலமாக உலுக்கிக்கொண்டு அடுத்த ஆட்டோவுக்காக மீண்டும் சாலையைப் பார்க்க ஆரம்பித்தான். யாராவது சீக்கிரமாக ஓர் ஆட்டோ கொண்டுவாருங்களேன், இரு மடங்கு, மூன்று மடங்கு காசாகக் கொடுத்துவிடுகிறேன் என்று சத்தமாகக் கத்தத்தோன்றியது.
இன்னும் பத்துப் பதினைந்து நிமிடங்களுக்குள் ஆட்டோ கிடைத்தால்தான். இல்லையென்றால் தாமதமாகிவிடும். விமானம் கிளம்புவதற்குக் குறைந்தது முக்கால் மணி நேரமாவது முன்னதாக அங்கே செல்லவேண்டும். இல்லையென்றால் பயணிகளை உள்ளே அனுப்பிக் கதவைச் சாத்திவிடுவார்கள்.
மீண்டும் பதட்டமாக மணி பார்த்தான் அரவிந்தன். கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்களாக இங்கேயே நின்றுகொண்டிருக்கிறான். இதுவரை ஐந்து ஆட்டோக்கள்தான் கண்ணில் பட்டன, இரண்டில் ஏற்கெனவே பயணிகள் இருந்தார்கள், ஓர் ஆட்டோ நிற்காமல் போய்விட்டது, மற்ற இரண்டு ஆட்டோக்களும் விமான நிலையத்துக்குச் சவாரி மறுத்துவிட்டார்கள்.
ஆட்டோ கிடைக்காத கவலையோடு, இத்தனை நேரமாகியும் அவன் ஆட்டோவோடு திரும்பி வராததால் செல்வி அநாவசியமாகக் கலவரப்பட்டுக்கொண்டிருப்பாளே என்கிற நினைப்பும் அவனைச் சிரமப்படுத்தியது.
செல்வியின் அபத்த குணங்களில் இதுவும் ஒன்று. யாரேனும் குறித்த நேரத்துக்குச் சற்று தாமதமாக வந்தாலும் அவர்களுக்கு ஏதோ நடந்துவிட்டது என்பதுபோல் மனதினுள் முடிவுகட்டிக்கொண்டுவிடுவாள். விழியோரங்களில் அனிச்சைக் கண்ணீர் துளிர்த்துநிற்கத் தொடங்கிவிடும்.
ஆனால் இதுபோன்ற விபரீதக் கற்பனைகளையும் அசம்பாவிதங்களையும் வாய்விட்டுச் சொல்வதும் அவளுடைய பழக்கமில்லை. அவளைச் சுற்றிலும் எந்நேரமும் காத்துநிற்கிற ‘ததாஸ்து’ தேவதைகள் அவள் ஏதேனும் தவறாகச் சொல்லிவிட்டால் ‘அப்படியே ஆகட்டும்’, என்று சொல்லிவிடுவார்களாம், அப்படியே ஆகிவிடுமாம்.
ஆகவே, தன்னுடைய கவலைகளை மனதினுள் போட்டுப் பூட்டிக்கொண்டு வாசலுக்கும் உள்ளுக்குமாகப் பல முறை நடப்பாள். அந்தத் தீவிர நடைபயணத்தால் எந்த உடனடி விளைவும் ஏற்படாவிட்டால் ‘என்னாச்சுன்னு கொஞ்சம் போய்ப் பார்த்துட்டு வாயேன்’ என்று அரவிந்தனை விரட்டிவிட்டு கண்களைத் துடைத்துக்கொண்டு சட்டென்று பிரார்த்தனை அறைக்குள் புகுந்துகொள்வாள்.
இப்போது அரவிந்தனே ரொம்பநேரமாக நடுத்தெருவில் சிக்கிக்கொண்டிருக்கிறான். அவனுக்கு என்ன ஆகிவிட்டதோ என்று நினைத்து இப்போது அவள் என்னவெல்லாம் கற்பனைகளை வளர்த்துக்கொண்டிருக்கிறாளோ.
அரவிந்தனுக்கு ஆட்டோ கிடைக்கவில்லை, இங்கிருந்து விமான நிலையத்திற்குப் பதினைந்து கிலோ மீட்டர் பயணம் செய்து, எண்பது ரூபாயோ தொண்ணூறு ரூபாயோ கூலி வாங்கிக்கொள்ள ஆட்டோ டிரைவர்கள் யாருக்கும் விருப்பமில்லைபோல. நாட்டில் காசுக்கு மதிப்பு குறைந்துவிட்டது, அல்லது, எல்லோரும் நோகாமல் அருகாமைச் சவாரிகளிலேயே நிறைய சம்பாதிக்க ஆசைப்படுகிறார்கள்.
‘நானும் இனிமேல் தூரச் சவாரியெல்லாம் போகமாட்டேன்’ என்று ஒருமுறை சத்தமாகச் சொல்லிக்கொண்டான் அரவிந்தன். பத்து நாளைக்கு ஒருமுறை மும்பைக்கும், கொல்கத்தாவுக்கும் பையைத் தூக்கிக்கொண்டு ஓடுவதற்கு யாரால் ஆகிறது? ஒவ்வொருமுறையும் புதுப்புது ஹோட்டல்கள், தண்ணீர் மாற்றம், சாப்பாடு மாற்றம், பாஷை மாற்றம், மனோநிலை மாற்றம்…
இவை, வளர்ச்சி அல்லது முதிர்ச்சியின் காரணமாக விளையும் இயல்பான மாற்றங்கள் என்றால்கூட பரவாயில்லை. ஆனால், அவ்வப்போது வேஷம் போடுவதுபோல் இப்படித் தாற்காலிகமாக மாறிக்கொண்டே இருப்பதற்கு அவனால் முடியவில்லை. ஒவ்வொருமுறை பெங்களூர் திரும்பும்போதும் தன்னையே அன்னியமாக உணரத்தோன்றுகிறது.
சமீபகாலமாக செல்விக்கும் இதிலெல்லாம் சுரத்துக் குறைந்துகொண்டிருப்பதாகத் தெரிகிறது. தனக்கு விதிக்கப்பட்டிருப்பது இதுதான் என்று புரிந்துகொண்ட ஒரு பாவனை, பிரிவின் வேதனைக்குப் பழகிவிட்ட மரத்துப்போன தன்மையைப் பார்க்கமுடிகிறது.
முன்பெல்லாம் அவன் வெளியூருக்குச் செல்வதாகத் தெரிந்தால், அந்த விநாடியிலிருந்து அவள் கண்களில் சோகம் கவிந்துகொள்ளும். அதன்பின் அவளுடைய நடவடிக்கைகளில் எந்த ஆர்வமும் இருக்காது. அவனுக்கான பயணப் பெட்டியைக் கச்சிதமாக அடுக்கிவைப்பதெல்லாம் அவள்தான். என்றாலும் போகிற வெளியூரில் அவன் எந்தச் சிரமமும் இல்லாமல், சகல சவுகர்யங்களோடும் இருக்கவேண்டும் என்பதில் காட்டுகிற அக்கறையை அவள் தன்னிடத்தில் காட்டிக்கொள்ள மறுத்துவிடுவாள், எல்லாப் பற்றையும் இழந்துவிட்டவள்போன்ற வேதனையோடு ‘ஜாக்கிரதையாப் போய்ட்டு வா’ என்றும், ‘சீக்கிரமாத் திரும்பி வந்திடணும், சரியா?’ என்றும் சொல்லி அவள் விசும்புகிறபோது, அவனுக்கும் வாய்விட்டுக் கதறத்தோன்றும்.
இப்போதும், பிரிவின் வேதனை படிந்த அதே கண்களிடம்தான் அவன் சற்றுமுன் விடைபெற்றுக் கிளம்பியிருந்தான். ஆனால் சமீப காலமாக அவளிடம் தெரிகிற முக்கியமான மாற்றம், ‘சீக்கிரமாத் திரும்பி வந்துடுவேதானே?’ என்கிற எதிர்பார்ப்பு இல்லை. இவன் எக்காரணம் கொண்டும் சீக்கிரம் திரும்பி வரமாட்டான், எந்த வேலைக்காகச் செல்கிறானோ அதை முழுசாக முடித்துவிட்டுதான் திரும்புவான். அதுவரை தனிமைத் துணையோடு தான் காத்திருக்கதான் வேண்டும் என்கிற உறுதி தெரிகிறது. ‘என்ன செய்வது? நான் கொடுத்துவைத்தது அவ்வளவுதான்!’ என்று பெருமூச்சு விடுகிற ஒரு பெண்ணின் பாவனையோடு அவள் அவனது குறும்பயணங்களை எதிர்கொள்ளத்தோடங்கிவிட்டாள்.
ஒருவிதத்தில் இது முதிர்ச்சியின் அறிகுறி. என் மனைவி அநாவசியமாகக் குறை சொல்வதில்லை, என்னுடைய நிலைமையைப் புரிந்துகொள்கிறாள் என்று நினைத்து சந்தோஷப்படலாம். ஆனால் ஏனோ, அரவிந்தனால் அப்படி நினைக்கவேமுடிவதில்லை.
‘ஐயோ, நான் அப்படி இல்லை!’ என்றுதான் அவளிடம் கத்தவேண்டும்போலிருக்கிறது அரவிந்தனுக்கு. இப்படி அடிக்கடி பயணம் கிளம்பிப்போவதில் அவனுக்குமட்டும் விருப்பமா என்ன?
வேலை, கடமை, அவளுக்காகதான் சம்பாதிக்கிறேன் என்று ஆயிரம் காரணங்கள் சொன்னாலும், அவன்மட்டும்தான் முக்கியம் என்று எண்ணி அவள் அவனுக்குத் தருகிற முழுமையான முக்கியத்துவத்தை அவனால் அவளுக்குத் திருப்பித்தரமுடிவதில்லையே.
திருமணத்துக்குப்பின் செல்வியை வேலைக்குப் போகக்கூடாது என்று அவன் மறுக்கவில்லை. சொல்லப்போனால், அப்படித் தடுக்கிற உரிமை தனக்கு இருக்கிறது என்றுகூட அவன் நினைக்கவில்லை.
ஆனால் அவள்தான் வேலைக்குப் போகமுடியாது என்று பிடிவாதமாக மறுத்துவிட்டாள். ‘எனக்கு எவன் வேலை கொடுப்பான்?’ என்று அவள் கிண்டலாகப் பேசினாலும் வீட்டில் ஒருவர்தான் வேலைக்குப் போகவேண்டும் என்பதில் அவள் பிடிவாதமாக இருந்தாள்.
அதன்பிறகு, அந்த வீடுதான் அவளுடைய உலகமாகிவிட்டது. அன்றாட வேலைகளில் தொடங்கி உள் அலங்காரம்வரை எந்த வேலையையும் தானே செய்யவேண்டும் என்று முரட்டுப் பிடிவாதமாக இருந்தாள் அவள். கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கொள், ஒரு வேலைக்காரிக்கு ஏற்பாடு செய்துகொள் என்றெல்லாம் அரவிந்தன் சொன்னால் அவளுக்குக் கோபம் வரும்.
எதற்காக அவள் இப்படித் தன்னைத் தேய்த்துக்கொள்ளவேண்டும் என்று அவனுக்கு சத்தியமாகப் புரியவில்லை. ஒரு பணியாளருக்குச் சம்பளம் தரமுடியாத அளவுக்கு அவர்கள் ஏழையில்லை. அப்படியிருக்க, தினந்தோறும் நானேதான் இடுப்பு ஒடிய வீட்டைப் பெருக்குவேன், துடைப்பேன் என்றெல்லாம் என்னத்துக்குப் பிடிவாதம்?
எப்போதாவது அதிசய நாள்களில் அரவிந்தன் அலுவலகத்திலிருந்து கொஞ்சம் சீக்கிரமாகக் கிளம்பி இன்றைக்கு எங்காவது வெளியே போகலாம் என்று நினைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தால், அவள் துடைப்பமும் கையுமாகக் களைத்து நிற்பாள். அவளை அப்படிப் பார்ப்பதில் பாதி வேதனை, மீதி எரிச்சலோடு அவன் கத்தினால், அவளும் பதிலுக்குச் சீறுவாள், ‘உன் ஆஃபீஸ் வேலையில நான் தலையிடறேனா? அதேமாதிரி வீட்ல எதை எப்படிச் செய்யணும்-ன்னு நீ எனக்கு ஆர்டர் போடாதே!’
சட்டென்று அவனுடைய ஆத்திரம் தணியும், ‘உன் நல்லதுக்குதாம்மா சொல்றேன்’ என்று குழைவான்.
ஆனால், இந்த ஒரு விஷயத்தில்மட்டும் செல்வியின் ஆவேசம் சில மணி நேரங்களுக்குக் குறையாது, ‘எனக்கு ஹெல்ப் பண்ணணும்-ன்னு உனக்குத் தோணிச்சுன்னா வாரத்தில நாலு நாள் நீ வீட்டைக் க்ளீன் பண்ணு, இல்லைன்னா துணியெல்லாம் துவைச்சுத் தர்றேன், காயப்போடு, டெய்லி ஒரு வேளை நீ சமையல் பண்ணு,. அதை விட்டுட்டு வேலைக்காரி, அது, இதுன்னெல்லாம் பேசாதே!’
அவளுடைய பேச்சில் ஒரே நேரத்தில் நியாயமும் அநியாயமும் சம அளவில் தொனிப்பதாக அரவிந்தனுக்குத் தோன்றும். ஆனால் இந்தப் பெண் இப்படிப் பிடிவாதமாக என் தரப்பைப் புரிந்துகொள்ள மறுக்கிறதே என்று அபூர்வமாக அவள்மீது கோபமும் வரும்.
தினசரி சிறிது நேரம் வீட்டு வேலைகளை அவளோடு பகிர்ந்துகொள்ளலாம், அவனால் முடிவதில்லை. அது ரொம்பத் தப்புதான். ஆனால் ஒரு பணியாளரின் சம்பளத்துக்கோ, அல்லது வேறு வீட்டு வசதி உபகரணங்களுக்கோ தாராளமாகச் செலவிடுவதால்தான் அந்தத் தவறுக்கான பரிகாரத்தை அவனால் செய்யமுடியும் என்பது அவளுக்குப் புரிவதே இல்லை. வேறு எந்த வழியிலும் அந்தச் சில மணி நேரங்களை அவனால் சேமித்து அவளுக்குத் தரவேமுடியாது.
அவனுடைய வேலையில் எல்லாமே மணிக்கணக்குதான். நாற்பது மணி நேர வேலை, ஐந்து மில்லியன் மணி நேர வேலை என்றுதான் சிறிய, பெரிய பணிகளின் அளவுகளைக் கணக்கிட்டுப் பேசுவார்கள். வாடிக்கையாளர்களிடம் பணம் வசூலிப்பதுகூட இந்த மணிக்கணக்கின் அடிப்படையில்தான். தொழிலாளர் சட்டப்படி ஒரு நாளைக்கு ஒருவரிடம் அதிகபட்சம் எட்டு மணி நேரங்கள்தான் வேலை வாங்கவேண்டும் என்கிற ஒரே ஒரு மணிக்கணக்கைத்தவிர மற்ற எல்லாமே அவனது நிறுவனத்தினருக்கு அத்துப்படி.
இதனால், நிர்ணயிக்கப்பட்ட பணி நேரம் என்பது சும்மா பாவ்லாதான். அதற்குமேல் வேலை பார்ப்பது என்பது அலுவலகத்தின் குறை சொல்லமுடியாத அவசியத் தேவை. எத்தனைக்கெத்தனை அதிகம் உழைக்கிறோமோ அத்தனைக்கத்தனை சீக்கிரத்தில் ப்ராஜெக்ட் முடியும், அடுத்த ப்ராஜெக்டில் மாட்டிக்கொள்ளலாம். இந்தச் சுழலில் சிக்கியபிறகு வெளிவருவது மிகச் சிரமம்.
சொல்லப்போனால், இதிலிருந்து வெளிவந்துவிடுவோமோ என்கிற பயத்திலேயே அளவுக்கதிகமாக உழைக்கிறவர்கள் இருக்கிறார்கள். ஐந்து பணி நாள்கள்தவிர வாராந்திர விடுமுறைகளான சனிக்கிழமைகளிலும் அலுவலகம் வருவது கட்டாயமாகவே அமைந்துவிடும். பல சமயங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில்கூட.
ஆனால், இதையெல்லாம் சொல்லிப் புலம்புவது முடியாது. முருங்கை மரத்தில் ஏற ஒப்புக்கொண்டு பேய்க்கு வாழ்க்கைப்பட்டவர்கள்போல் அதிக சம்பளத்துக்குப் பணிந்து மரமேறக் கற்கவேண்டியிருக்கிறது.
இந்த விஷயங்களெல்லாம் செல்விக்குப் புரியாமலில்லை. அவனுக்கு பெங்களுரில் இந்த வேலை கிடைத்ததிலிருந்து, அவர்களுடைய வாழ்க்கைமுறையே மாறிவிட்டது. அதிகாலையில் எழுந்து கிளம்பி ஏழு மணி கம்பெனி பஸ்ஸில் கிளம்பிப்போனால் அதன்பிறகு அவன் திரும்பி வருகிற நேரம் நிச்சயமில்லை. ஆகவே, நாள்முழுதும் பெரும்பான்மை நேரம் தங்களின் பெரிய வீட்டின் தனிமையில் வாழப் பழகிக்கொண்டுவிட்டாள் அவள். சிலசமயங்களில் அரவிந்தனே தன்னுடைய அலுவல் பணியைப்பற்றி அலுத்துக்கொண்டால்கூட அவளிடமிருந்து சலிப்பாக ஒரு வார்த்தை வராது.
அந்த மௌனம்தான் பெரிய அவஸ்தை என்று எண்ணிக்கொண்டான் அரவிந்தன். ‘என்ன நீ? நினைச்ச நேரத்துக்கு வர்றே, நினைச்ச நேரத்துக்குப் போறே, வீட்ல ஒருத்தி இருக்கிறது கொஞ்சமாவது நினைப்பிருக்கா?’ என்றெல்லாம் வாய்விட்டுத் திட்டிவிட்டால்கூட பரவாயில்லை, ‘நீ அப்படிதான், பரவாயில்லை, போ’ என்பதுபோல் அவனை ஒதுக்கிவிடுகிற மௌனம் ரொம்ப உறுத்துகிறது. நாளுக்குச் சில மணி நேரம் தூங்குவதற்காகமட்டும் வீட்டுக்கு வருகிறவனை தன்னில் பாதியாக ஒரு பெண்ணால் நினைக்கமுடியுமா?
செல்வியால் முடிகிறது. அரவிந்தனுக்கும் அவளுக்கும் நடுவே அவனது அதீத பணி அழுத்தமும் தேவைகளும் நிரம்பிவிட்டால்கூட, எந்த விஷயத்திலும் அவன்மீதான அவளது நேசம் குறைபடவே இல்லை. அதுதான் அரவிந்தனைக் குற்றவுணர்ச்சியில் தள்ளுகிறது.
சில சமயங்களில், தங்களை ஒரு பெரிய பள்ளத்தாக்கின் இரு முனைகளில் வசிக்கிறவர்களாகக் கற்பனை செய்துகொள்வான் அரவிந்தன். வலது முனையில் வசிக்கிற அவனுக்கு ஏகப்பட்ட வேலை, அந்தப்பக்கமிருக்கிற குப்பைக் காட்டை ஒழித்துச் சமனாக்கிக்கொண்டிருக்கிறான். அவன் வேலை செய்கிற ஒவ்வொரு சதுர அடிக்கும் அவனுக்கு (அல்லது அவர்களுக்குக்) காசு.
அவன் களைத்துப்போகிற தருணங்களில், இடதுபக்கமிருக்கிற செல்வி கைக்குட்டை நீட்டி வியர்வை துடைக்கிறாள், இடையிலான பள்ளத்தாக்கின் அகலம் எத்தனை அதிகமானாலும் அவளது கைகள் அதற்கேற்ப நீள்கின்றன. உண்மையில் தங்களுக்கிடையே ஒரு பள்ளம் உண்டாகியிருப்பதை அவள் உணர்ந்திருக்கிறாளா இல்லையா என்றுகூட அரவிந்தனுக்குச் சந்தேகமாக இருக்கிறது.
ஏனெனில், அப்படியொரு பள்ளம் இல்லவே இல்லை என்று பிடிவாதம் சாதிப்பதுபோல் அவள் அவனோடு இயல்பாகப் பழகிக்கொண்டிருக்கிறாள். இத்தனை நீளத்துக்குக் கையை நீட்டி கர்ச்சீப் தரவேண்டுமா? அவளுக்குக் கை வலிக்காதோ பாவம் என்று அவனுக்குப் பரிதாபமாக இருக்கிறது. ஆனால் இதற்கு என்ன செய்வது என்றுதான் தெரியவில்லை.
பதிலுக்குத் தானும் ஒரு கர்ச்சீப் எடுத்து நீட்டலாம் என்றால், அவள் நெற்றியில் வியர்வை துளிர்த்திருக்கிறதா என்று அவனால் இங்கிருந்து பார்க்கமுடிவதில்லை. ஆனால் அவனுக்கு வியர்க்கிற கணங்களை அவள்மட்டும் எப்படி மிகச் சரியாக உணர்ந்துகொள்கிறாளோ, தெரியவில்லை. கணவனுக்கும் மனைவிக்கும் இடையே பள்ளம் அமைத்துவிட்ட கடவுளின்மீதோ, காலத்தின்மீதோதான் அவனுக்கு இயலாத கோபம் பொங்குகிறது.
யோசித்துப்பார்த்தால், அந்தப் பள்ளத்தைத் தோண்டிய கைகள் தன்னுடையவைதானோ என்றும் தோன்றுகிறது அரவிந்தனுக்கு.
(தொடரும்)
***
என். சொக்கன் …
05 05 2011