மனம் போன போக்கில்

கார்காலம் – 3

Posted on: May 16, 2011

முன்கதை

அத்தியாயம் – 1

அத்தியாயம் – 2

3

கைப் பெட்டியை ஸ்கேன் செய்து விமானத்தினுள் அனுப்பிவிட்டுத் தோளில் தொங்கும் கணினியோடு வெளியே வந்தான் அரவிந்தன். அவனுடைய விமானம் கொஞ்சம் தாமதமாகக் கிளம்பும் என்று அறிவித்திருந்தார்கள். அதற்கு இன்னும் முழுசாக ஒரு மணி நேரம் மீதமிருந்தது.

ஒரு காஃபி குடிக்கலாம் என்று எதிரிலிருந்த கடையை அணுகியபோது உள்ளே கால் வைக்கக்கூட இடமில்லாமல் நிறைந்திருந்த கூட்டத்தைப் பார்க்க பயமாக இருந்தது. அப்புறமாகப் பார்த்துக்கொள்ளலாம் என விலகி வந்துவிட்டான்.

பொதுவாகவே இன்றைக்கு விமான நிலையத்தில் அதிகக் கூட்டம்தான். ஞாயிற்றுக்கிழமை, அதுவும் இரவு நேரம் என்பதால் சூட் போர்த்திய கழுத்துப்பட்டைவாசிகளை அதிகம் பார்க்கமுடியவில்லை. மாறாக, நடுத்தர வயதுப் பெண்கள்தான் ஏராளமாக நிறைந்திருப்பதாகத் தோன்றியது.

இப்போதெல்லாம் விமானக் கட்டணங்களை ரொம்பக் குறைத்துவிட்டார்கள். திசைக்கொன்றாகப் புதுசுபுதுசாக ஏதேதோ கம்பெனிகள் முளைத்துவிட்டதில் (அ)நியாயத்துக்குப் போட்டி. எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் தங்களின் செலவுகளையும் லாப சதவீதத்தையும் குறைத்துக்கொண்டு சகாய விலையில் பறக்க அழைக்கிறார்கள்.

அரவிந்தன் இப்படி நினைத்துக்கொண்டிருந்தபோது கம்பீரமான சாம்பல் நிறத்தில் உடுத்திய ஓர் அதிகாரி அவனைக் கடந்து சென்றார். குளிர் ஸ்வெட்டர் அணிந்தபடி எதிரே வந்த இளைஞன் ஒருவன் அவருக்குக் குழைவாக சல்யூட் அடித்தான்.

சிறிது நேரத்துக்கு அந்த இளைஞனையே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான் அரவிந்தன். இந்த விமான நிலையத்திலோ அல்லது இங்கிருக்கும் ஏதோ ஒரு விமானக் கம்பெனியிலோ பணிபுரிகிறவனாக இருக்கவேண்டும். டியூட்டி முடிந்து வீட்டுக்குக் கிளம்புகிற அவசரம் அவனிடம் தெரிந்தது. அங்குமிங்கும் பரபரப்பாக எதற்காகவோ ஓடிக்கொண்டிருந்தான்.

இவன் எப்போதாவது விமானத்தில் பறந்திருப்பானா என்று அரவிந்தன் யோசித்தபோது சட்டென்று செல்வியின் ஞாபகம் வந்தது. பாக்கெட்டிலிருந்து செல்பேசியைத் தேடியெடுத்து வீட்டு எண்களை ஒற்றினான்.

நெடுநேரம் பிடிவாதமாக மணியடித்தபிறகும் யாரும் எடுக்கவில்லை. செல்வி இந்த நேரத்தில் எங்கே போனாளோ என்கிற கவலையோடு தொலைபேசி இணைப்பைத் துண்டித்தான் அரவிந்தன்.

செல்பேசியைக் கையில் உருட்டியபடி மேலே ஒளிர்கிற பெரிய விளம்பரத் திரையில் சிரிக்கும் அமிதாப் பச்சனைப் பார்த்துக்கொண்டிருந்த அவனுக்குக் கொஞ்சம் குறுகுறுப்பாக இருந்தது. அவன் இப்படிச் சில நாள்களோ நெடு நாள்களோ காணாமல்போய்விடுகிற வெளியூர்ப் பயணங்களின்போதும் தினசரி அவன் அலுவலகம் கிளம்பிச் சென்றபிறகான தனிமையின்போதும் செல்வி என்ன செய்வாள்?

திருமணத்துக்குமுன் ஒருமுறை அவன் அவளிடம் ‘உன்னுடைய பொழுதுபோக்கு என்ன?’, என்று கேட்டதற்கு மிகக் கிண்டலான ஒரு பதிலைச் சொல்லியிருந்தாள் அவள்.

அதாவது, ஒழுங்காக அடுக்கியிருக்கும் ஒரு பெட்டியை எடுத்து, அதிலுள்ள துணிகள், புத்தகங்கள், இதர பொருள்களையெல்லாம் திசைக்கொன்றாக இறைத்துவிடுவாளாம். அதன்பிறகு அவற்றை மீண்டும் பழையபடி அடுக்கிவைப்பாளாம்.

செல்வி அப்படிச் சொன்னதில் எத்தனை சதவீதம் உண்மை, எத்தனை சதவீதம் கேலி என்று அவனுக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. என்றாலும், அந்த அளவுக்குச் சுத்தம், ஒழுங்கு என்று பரபரக்கக்கூடியவள்தான் அவள்.

ஆகவே அரவிந்தன் ஊரில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவளுடைய அன்றாடப் பணிகள் வீட்டின் ஒழுங்கைச் சுற்றிதான் சுழலும். அதிகாலையில் எழுந்து அவனுக்குச் சமைக்கவேண்டியதில்லை, சாப்பாட்டு மூட்டை கட்டவேண்டியதில்லை என்பதற்காகத் தாமதமாகத் துயிலெழுகிற கட்டுப்பாட்டுக் குலைவு அவளிடம் இருக்காது என்று அவனுக்கு நிச்சயமாகத் தோன்றியது.

அப்படியென்றால் என் அண்மை அவளுக்கு எதற்காகத் தேவைப்படுகிறது? நான் பிரியும்போது அவள் ஏன் வருந்தவேண்டும்? அழவேண்டும்?

எதார்த்தமான இந்தக் கேள்வியில் ஓர் அயோக்கியத்தனம் இருப்பதாக அரவிந்தனுக்கு ஏனோ தோன்றியது. தவிர, இந்தக் கேள்விக்கு பதில் சொல்லவேண்டியவள் செல்வி. எத்தனை முயன்றாலும் இதற்கான அவள் தரப்பு பதிலை அவனால் ஊகித்துவிடவே முடியாது.

ஆகவே, அதே  கேள்வியைக் கொஞ்சம் மாற்றிக் கேட்டுக்கொள்ளலாம் என்று தீர்மானித்தான் அரவிந்தன் – செல்வியைப் பிரிந்து கிளம்பும்போது எனக்கு ஏன் இத்தனை துயரம்? பேசாமல், வேலையைக் கவனிக்கவேண்டியதுதானே? அநாவசியமாக ஏன் மனத்தைக் கனமாக்கிக்கொள்ளவேண்டும்?

இதற்கும் அவனுக்கு பதில் தெரியவில்லை. ‘ஏன் லேட்?’, என்று கேட்கிற ஆசிரியரிடம் ‘லேட் ஆயிடுச்சு’ என்று அபத்தமாக பதில் சொல்கிற சிறுவனைப்போல்தான் அவனால் சிந்திக்கமுடிந்தது.

ஆனால் இதில் ஏதோ விஷயம் இருக்கிறது, வலுவான ஒரு காரணமும் இருக்கவேண்டும். இல்லையென்றால் இரண்டு நாள், மூன்று நாள்களே நீடிக்கிற சின்னஞ்சிறு பயணங்கள்கூட இப்படி ஒரு சலனத்தையும், வெறுமையுணர்வையும் உண்டாக்காது.

ஆனால் தினந்தோறும் காலையில் ஆஃபீஸ் கிளம்பும்போது அரவிந்தனிடம் இப்படிப்பட்ட சோக மனோநிலை தென்படாது. உண்மையில் ஒவ்வொரு நாளும் மிகுந்த உற்சாகத்துடனே அலுவலகத்தினுள் நுழைகிறவன் அவன்.

ஒருவிதத்தில் அதுவும் செல்வியைப் பிரிவதுதானே? அப்போது ஏன் இந்த மன அழுத்தம் உண்டாவதில்லை? வெளியூர் செல்வது என்று கிளம்பினால்மட்டும் எங்கிருந்தோ சோகமும் களைப்புணர்வும் வந்து சூழ்ந்துகொள்கிறது. வழியனுப்பிக் கையசைக்கும் செல்வியைப் பாய்ந்து பற்றிக்கொண்டுவிடத் தோன்றுகிறது, வீட்டிலிருந்து அவனைக் கிளப்பிக் கொண்டுவருகிற ஆட்டோவோ டாக்ஸியோ பஸ்ஸோ உடனடியாகத் திரும்பிப் போய்விடாதா என்று ஏக்கமாக இருக்கிறது. ஏர் போர்ட்டிலோ ரயில் நிலையத்திலோ வந்து இறங்கியதும் அடுத்த பஸ்ஸில் ஏறி வீட்டுக்குத் திரும்பிவிடவேண்டும் என்று குழந்தைத்தனமான ஆசை தவறாமல் வருகிறது.

இதற்கெல்லாம் என்ன காரணம்? அல்லது, இதற்கெல்லாம் காரணம் என்று ஏதாவது இருக்கிறதா? அல்லது, அந்தக் காலச் சினிமாக்களிலும் இந்தக் காலத் தொலைக்காட்சித் தொடர்களிலும் வருவதுபோல் இந்தப் பாசம், நேசம், அன்பு எல்லாமே காரணமற்றுப் பொங்கும் அபத்தமான உணர்வுகள்தானா?

‘அபத்தம்’ என்று என்னால் இந்த அளவு உறுதியாகச் சொல்லமுடிந்தால் இது ஏன் என்னை இவ்வளவு பாதிக்கவேண்டும்? இந்த உணர்வுகளை ‘அபத்தம்’ என்று மனதுள் நினைக்கும்போதே ஏதோ அநியாயம் செய்துவிட்டவனைப்போலக் கூசிப்போகிறேனே, ஏன்?

எதற்கும் அவனுக்கு பதில் தெரியவில்லை. யோசிக்க யோசிக்க, களைப்புதான் மிஞ்சியது.

சிறிது நேரம் நடக்கலாம் என்று எழுந்துகொண்டான் அரவிந்தன். கால்களை ஒருமுறை தனித்தனியே நீட்டி உதறிக்கொண்டு ஒருமுறை சுற்றிலும் நோட்டமிட்டான். பின்னர் கண்ணாடி வெளிச் சுவர்களில் ஏகப்பட்ட புத்தகங்களைக் கண்காட்சிபோல் அடுக்கிவைத்திருந்த கடையின்பக்கமாகத் திரும்பி நடக்கலானான்.

அவன் இப்போது நடந்துகொண்டிருந்தது பார்வையாளர் பகுதி என்பதால் இங்கும் கூட்டம் அதிகமாகவே இருந்தது. பயணம் செய்கிறவர்களும் அவர்களை வழியனுப்ப வந்தவர்களுமாக நிறைந்து வழிந்தார்கள்.

கூடத்தின் ஒரு மூலையில் ஒரேமாதிரியாக ஜீன்ஸ் அணிந்த ஓர் இளைஞனும் இளைஞியும் மிக நெருக்கமாக, கிட்டத்தட்ட ஒருவரையொருவர் அணைத்த பாவனையில் நின்றிருந்தார்கள். இருவரும் தங்களுக்குள் ஏதோ ரகசியம் பேசிக்கொண்டிருக்க, பக்கத்தில் ஒரு சிறிய பயணப்பை ‘ஆம்ஸ்டர்டாம்’ என்று அறிவித்து ஒரு ட்யூலிப் மலரை நீட்டியது.

அந்த இருவரும் ஒருவரையொருவர் தொட்டபடியிருக்கிறார்களா என்றுகூட தெரியாதபடி அவர்கள் நெருங்கியும் விலகியும் இருந்தார்கள். அவர்களைப் பார்க்கும்போது, சுற்றியிருக்கிற மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று கவலைப்படுகிற ரகமாகத் தெரியவில்லை. ஆனால் இருவருடைய நடவடிக்கைகளிலும் ஒரு நாசூக்கு தெரிந்தது.

அவர்களில் யார் பயணம் செய்கிறவர், யார் வழியனுப்பவந்தவர் என்று சரியாகத் தெரியவில்லை. ஆனால் பிரிந்திருக்கப்போகிற ஒவ்வொரு விநாடியையும் இப்போதே பேசித் தீர்த்துவிடவேண்டும் என்பதுபோல் அவர்கள் இடைவெளியில்லாமல் பேசிக்கொண்டிருந்தார்கள். ஒருவர் பேசிமுடித்தபிறகுதான் இன்னொருவர் பேசவேண்டும் என்றுகூட அவர்கள் எதிர்பார்த்ததாகத் தெரியவில்லை. ஒரே நேரத்தில் இருவருமே பேசுவதுபோலவும் அதை இருவருமே சரியாகப் புரிந்துகொள்வதுபோலவும் தோன்றியது.

கடைப் புத்தகங்களில் ஒரு பார்வையை வைத்தபடி ஓரக்கண்ணால் அவர்களை ஆவலோடு கவனித்துக்கொண்டிருந்தான் அரவிந்தன். இப்படி அநாகரீகமாகப் பார்ப்பது அவனுக்கே உறுத்தினாலும் அவர்களிடம் ஏதோ ஒரு விசேஷம் இருப்பதாகவும் அவர்களைக் கூர்ந்து கவனிப்பதன்மூலம் தன்னுடைய கேள்விகளுக்கு பதில் கிடைக்கலாம் என்பதுபோலவும் தோன்றிக்கொண்டிருந்தது அவனுக்கு.

ஆனால் அந்த இளம் ஜோடி சுற்றியிருப்பவர்கள் யாரையும் கவனிப்பதுபோல் தெரியவில்லை. அவர்கள் தங்களின் உலகத்துள்  மூழ்கியிருந்தார்கள். இருவரும் வளவளவென்று தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோதும் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று துளியும் வெளியே கேட்கவில்லை. உண்மையில் அத்தனை பக்கத்தில் நெருங்கி நின்றிருந்த அரவிந்தனுக்குக்கூட அவர்கள் பேசுவது ஆங்கிலமா கன்னடமா தமிழா அல்லது ஹிந்தியா என்று தெரியவில்லை.

அந்தப் பெண்ணுக்கு இருபத்தைந்து வயதிருக்கலாம். அதீதமான அமைதி கவிழ்ந்த அவளது முகத்தைப் பார்க்கும்போது அவள் இத்தனை பேசுவாள் என்று யாருக்குமே தோன்றாது. இப்போது அவளை வழிமறித்து ‘இன்னிக்கு என்ன கிழமை?’ என்று கேட்டால்கூட ஏதோ குவாண்டம் இயற்பியல் சூத்திரங்களைக் கேட்டுவிட்டதுபோல் திருதிருவென்று முழிப்பாள் என்றுதான் ஊகித்தான் அரவிந்தன்.

ஆனால் இதுபோன்ற ஊகங்களையெல்லாம் பொய்யாக்கும்படி ஒரு மேடைப் பேச்சாளரின் வேகத்துடன் அவள் அவனோடு தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தாள். பேசுகிற விஷயத்துக்கேற்பக் கைகளையோ கண்களையோ அசைக்கும் உடல்மொழிகூட அவளிடம் இல்லை. என்னுடைய வார்த்தைகள் இங்கே சுற்றியிருப்பவர்கள் யாருக்கும் இல்லை, உனக்குமட்டும்தான் என்று அவனிடம் சொல்வதுபோல் ஒவ்வொரு சொல்லையும் நேரடியாக அவனது காதுகளுக்குள் பதித்துக்கொண்டிருந்தாள் அவள்.

ஆர். கே. லக்ஷ்மணின் சிறிய கார்ட்டூன் புத்தகமொன்றைத் தேர்ந்தெடுத்து அரவிந்தன் விலை விசாரித்தபோது அவனுடைய விமானத்துக்கான அறிவிப்பு வந்தது. அந்தச் சப்தத்தில் பயந்து தடுமாறிய பறவைகளைப்போல அந்தப் பையனும் பெண்ணும் சட்டென்று விலகிக்கொண்டதைப் பார்க்க அரவிந்தனுக்கு ரொம்ப வருத்தமாக இருந்தது.

இப்போது அவர்களுக்கிடையில் பேச்சும் நின்றுவிட்டது. ஒலிபெருக்கியிலிருந்து வழியும் அறிவிப்பை இருவரும் கவனமாகக் கேட்டார்கள். பின்னர் ஆங்கில அறிவிப்பு ஓய்ந்து ஹிந்தியில் தொடங்கியதும் பக்கத்திலிருந்த பையை எடுத்து அவன் தோளில் மாட்டிவிட்டாள் அவள்.

இருவரும் பரஸ்பரம் சில வழியனுப்பல் மொழிகளைப் பேசிக்கொண்டார்கள். அவைகூட வெளியே கேட்கவில்லை. அவன் ஒருமுறை கைக்கடிகாரத்தைப் பார்த்துவிட்டு ‘ஸீ யூ’ என்று மனமில்லாமல் சொல்வதுமட்டும் (உதட்டசைவால்) தெரிந்தது.

அவள் பதிலுக்கு எதுவும் பேசாமல் சின்னச் சிரிப்போடு அவனுக்குக் கையாட்டினாள். அந்தச் சிரிப்பில் மெலிதான சோகம் தெரிகிறதா என்று அரவிந்தன் யோசித்துக்கொண்டிருந்தபோதே அவனுடைய டிஷர்ட்டைப் பற்றி இழுத்துக் கன்னத்தில் சின்னதாக ஒரு முத்தம் பதித்தாள் அவள். இதை எதிர்பார்த்ததுபோலிருந்த அவன் அவளுடைய இதழ்களில் மெல்லமாக உதடு ஒற்றினான்.

சட்டென்று திரும்பிக்கொண்டான் அரவிந்தன். கையிலிருந்த புத்தகத்தை மீண்டும் அலமாரியில் வைத்துவிட்டு எதிர்திசையில் நடக்கலானான்.

இதுவரை அந்த ஜோடியை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது அவனுக்குத் தவறாகத் தோன்றவே இல்லை. ஆனால் இப்போது அவர்களுடைய அந்தரங்கத்தில் குறுக்கிட்டுவிட்டோமே என்று வேதனையாக இருந்தது.

என்றாலும், ஒரு பொது இடத்தில் இப்படி முத்தமிட்டுக்கொள்கிற இயல்பு அவனுக்குப் பிடிபடவில்லை. பெருநகரங்களில் இப்போது சாதாரணமான செய்கையாகிவிட்ட இதனைக் கலாச்சாரக் குறைவு என்று சொல்லமுடியுமா என்றுகூட அவனுக்குத் தெளிவில்லை. அவளுடைய கணவனோ காதலனோ, அவள் பகிரங்கமாக முத்தமிடுகிறாள், நேசத்தை வெளிப்படுத்துகிறாள். உனக்கு என்ன?

தாமதமாக ஆட்டோ கிடைத்த பதற்றத்தில் செல்வியிடம் சரியாக விடைபெற்றுக்கொள்ளாமலே வந்துவிட்டதை நினைத்துக்கொண்டான் அரவிந்தன். ‘ஒரு நிமிஷம் இரப்பா’ என்று ஆட்டோ டிரைவரிடம் சொல்லிவிட்டு உள்ளே சென்று அவளிடம் சில வார்த்தைகள் ஆதரவாகச் சொல்லி ஈரமாக ஒரு முத்தமிட்டுவிட்டுக் கிளம்பியிருக்கலாம். அல்லது, நடுத்தெருவிலேயே அதைச் செய்திருக்கலாம், என்ன போச்சு?

வேறென்ன, ஐந்து நாள் நிம்மதி போச்சு!

(தொடரும்)

***

என். சொக்கன் …

16 05 2011

14 Responses to "கார்காலம் – 3"

நல்ல பதிவு.

//வேறென்ன, ஐந்து நாள் நிம்மதி போச்சு!//

கடைசி டச்சிங் அருமை.

கோடைகாலத்தில் “கார்காலம்” அருமையாகவே போகிறது. அத்தியாயம் – 2ம் இப்போதுதான் படித்தேன். அடுத்ததற்கு காத்திருக்கிறேன்.

வேறென்ன, ஐந்து நாள் நிம்மதி போச்சு!

//அருமை

enna aagap pokirathu??

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 621,011 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்

Tamilish

For தமிழ் Peopleதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

May 2011
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
%d bloggers like this: