மனம் போன போக்கில்

Archive for May 23rd, 2011

முன்கதை

அத்தியாயம் – 1

அத்தியாயம் – 2

அத்தியாயம் – 3

4

‘ஃப்ளைட் லேட்டா?’ செல்வியின் குரல் எங்கோ ஒரு பள்ளத்தாக்கிலிருந்து கேட்பதுபோல் இருந்தது.

‘ஆமாம்பா’ முடிந்தவரை உற்சாகமாகப் பேச முயன்றான் அரவிந்தன். ‘பெங்களூர்ல கிளம்பினபோதே முக்கால் மணி நேரம் லேட், அப்புறம் மும்பையில கண்டபடி மழை பெய்யுதுன்னு கடல்மேல கால் மணி நேரம் வெட்டியாச் சுத்திட்டுதான் கீழே இறங்கினான்.’

காதுகளில் இன்னும் வலி மிச்சமிருந்தது. பத்தரை மணிக்கே மும்பை வந்திருக்கவேண்டும். ஏதோ தொழில்நுட்பக் கோளாறுகளால் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டு, ஒருவழியாக அங்கே சென்று சேர்ந்து தரையிறங்கும்போது நள்ளிரவாகிவிட்டது. எப்படியோ, ஒழுங்காகக் கொண்டுவந்து சேர்த்தார்களே.

‘சரிப்பா, ஜாக்கிரதை’ என்றாள் செல்வி. ‘ஒழுங்காச் சாப்பிடு, நேரத்துக்குத் தூங்கி ரெஸ்ட் எடு, கேள்வி கேட்கிறதுக்கு ஆள் இல்லைன்னு ராத்திரி ரொம்ப நேரமெல்லாம் முழிச்சிகிட்டிருக்காதே!’

‘ஓகேம்மா, நீயும் ஜாக்கிரதை’ என்றான் அரவிந்தன். ‘எதுனா அவசரம்ன்னா ஃபோன் பண்ணு, டேக் கேர்!’

‘ம்ம், குட் நைட்’, அவன் பேசுவதற்குள் ஃபோனை வைத்துவிட்டாள் அவள்.

அரவிந்தனின் கண்களில் எரிச்சல் மண்டியிருந்தது. மணி ஒன்றரை, இனிமேல் தூங்கமுடியுமா என்று தெரியவில்லை. அப்படியே தூங்கினாலும் மிஞ்சிப்போனால் ஐந்து மணி நேரம் தூங்கலாம். காலையில் சீக்கிரமாக எழுந்து குளித்து அலுவலகத்துக்குப் போகவேண்டும்.

பெரிய படுக்கையின் வலது ஓரமாகச் சரிந்து படுத்திருந்த அரவிந்தன் கம்பளியை நன்கு போர்த்திக்கொண்டு டிவியை உயிர்ப்பித்தான். வெளியே அட்டகாசமாக மழை பெய்துகொண்டிருந்தபோதும் தொலைக்காட்சிமட்டும் ஒழுங்காக இயங்கிக்கொண்டிருந்தது. இருநூற்றுச் சொச்ச சானல்களில் தமிழ் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. ஒவ்வொன்றாகத் தேடுவதற்குப் பொறுமையில்லை. ஏதோ ஒரு ஹிந்தி சினிமாப் பாட்டுச் சானலில் நிலைகொண்டான் அரவிந்தன்.

புளித்த ஏப்பம்போல் ஏதோ பொங்கிவந்தது. வயிறு லேசாக வலிப்பதைப்போலிருந்தது. விமான நிலையத்தில் நெடுநேரம் காத்திருந்தபோது கண்டதையும் வாங்கித் தின்றது தப்பாகிவிட்டது. போதாக்குறைக்கு விமானம் மேலேறியபிறகு, ராத்திரி பதினொரு மணி என்றும் பார்க்காமல் கொழுப்பு நிறைந்த உணவு வகைகளாகத் தட்டில் நிரப்பினார்கள்.

அதையெல்லாம் சாப்பிட்டாகவேண்டும் என்று யாரும் குச்சியை வைத்துக்கொண்டு மிரட்டுவதில்லைதான். ஆனால், ஜஸ்ட் ஒன்றரை மணி நேரப் பயணத்திற்கு இத்தனை ஆயிரம் கொட்டிக் கொடுக்கிறோமே, பதிலுக்கு அவர்கள் கொடுப்பதையெல்லாம் சாப்பிட்டுத் தீர்ப்போம் என்கிற அல்ப மனோநிலை, மறுக்கத் தோன்றுவதில்லை.

தவிர, வெளியூர்ப் பயணங்களின்போதெல்லாம் எல்லாச் செலவுகளுக்கும் கம்பெனி பணம் கொடுத்துவிடும். ஆகவே காசுக் கணக்குப் பார்க்காமல் எதை வேண்டுமானாலும் தின்று தீர்க்கலாம்.

இப்படிக் கண்டபடி சாப்பிடுகிற சுதந்திரம் முதல் ஒன்றிரண்டு நாள்களுக்கு வேண்டுமானால் ஜாலியாக இருக்கும். ஆனால் அதன்பிறகு, எந்த வேலையிலும் கவனம் செலுத்தமுடியாதபடி வயிற்றுக் கோளாறுகள் தொடங்கிவிடும், தினசரி தூக்கம் கெட்டுப்போகும், பணி நேரத்தில் உடம்பெல்லாம் சோர்ந்துவிழும். எப்போது ஊருக்குத் திரும்பி மோருஞ்சாதமும் பழைய ஊறுகாயும் சாப்பிடுவோம் என்பதுபோல் ஏக்கம் தோன்றிவிடும்.

எங்கிருந்தாலும் வீட்டைப் பிரிந்திருப்பது கஷ்டம்தான் என்று கசப்போடு நினைத்துக்கொண்டான் அரவிந்தன். தினசரி வேலைகள் முடிந்தபின் சென்றடைவதற்குக் கூடு ஒன்று இருக்கிறது என்கிற கதகதப்பான பத்திர உணர்வுதான் மனிதர்களை இயக்கிக்கொண்டிருக்கிறதோ என்னவோ.

அறையின் கண்ணாடி ஜன்னல் கதவுகளில் மழை வலுவாக அறைந்து திறக்கச் சொல்லியது. அநியாயத்துக்குக் குளிர். படுத்தவாக்கில் இடதுபுறமாக உருண்டு குளிர்சாதனத்தை அணைத்தான் அரவிந்தன்.

டிவியில் இப்போது யாரோ ஒரு தாடிக்காரர் மஹாபாரதச் சொற்பொழிவை ஆரம்பித்திருந்தார். பேயும் உறங்குகிற நேரத்தில் இதையெல்லாம் யார் பார்க்கிறார்கள் என்று குழப்பமாக இருந்தது அரவிந்தனுக்கு. சானலை மாற்றலாமா, அல்லது அணைத்துவிட்டுத் தூங்கலாமா என்று யோசித்தபோது எதற்காகவோ சந்திரனின் நினைப்பு வந்தது.

சந்திரன் இப்போது எங்கே இருக்கிறான்? மும்பையில்தானா? அல்லது, சென்னையிலா? தன்னுடைய ஞாபக சக்தியின்மீது நம்பிக்கையில்லாமல் சிறிது நேரம் நெற்றியைத் தேய்த்துக்கொண்டிருந்தான் அரவிந்தன்.

ஏழெட்டு வருடங்களுக்குமுன் சந்திரனும் அரவிந்தனும் டெல்லியில் ஒன்றாக வேலைக்குச் சேர்ந்தவர்கள். நாற்பது பேர் அடங்கிய அந்த அலுவலகத்தில் இவர்கள் இருவருக்குமட்டும்தான் தமிழ் தெரியும் என்பதால் நெருக்கமாகி நல்ல சிநேகிதர்களாகிவிட்டார்கள்.

அப்புறம் கொஞ்ச நாள் நிம்மதியான பிரம்மச்சாரி வாழ்க்கை. இன்னும் சில ஆண்டுகள் இப்படியே விளையாட்டுப்போக்கில் வாழலாமா அல்லது இப்போதே எதிர்காலத்தைப்பற்றித் தீவிரமாகச் சிந்திக்கத்தொடங்கவேண்டுமா என்று அவர்கள் யோசித்துக்கொண்டிருந்தபோது திடுதிப்பென்று சந்திரனுக்குத் திருமணமாகிவிட்டது.

அத்தனை அவசரத்துக்குச் சந்திரனும்தான் ஒருவிதத்தில் காரணம். ‘கேரளாவிலிருந்து ஒரு பெண் ஜாதகம் வந்திருக்கிறது. உனக்குப் பிடித்திருக்கிறதா?’ என்று நாலு வரிக் கடிதாசி எழுதிய அவனுடைய அப்பா கூடவே அனுப்பியிருந்த மசங்கலான புகைப்படத்தில் சந்திரன் அப்படி என்னத்தைக் கண்டானோ. சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வதுபோல் விழுந்துவிட்டான். அதன்பிறகு தாலி கட்டுவதற்காகதான் எழுந்து நின்றான்.

மூணாறிலோ கொடைக்கானலிலோ தேனிலவு முடித்துக்கொண்டு அவர்கள் டெல்லி வந்தபோது அரவிந்தன்தான் அவர்களுக்காக வீடு பார்த்து அட்வான்ஸ் கொடுத்து எல்லா ஏற்பாடுகளும் செய்துவைத்திருந்தான். சந்திரனின் பெட்டி, படுக்கைகளைக்கூட புது வீட்டுக்கு நகர்த்தியாகிவிட்டது, லாரி சர்வீஸில் வந்த சீர் வரிசை சாமான்களையும் அங்கேயே இறக்கிவைத்திருந்தான். ஆகவே சந்திரனும் அவன் மனைவியும் ரயில் நிலையத்திலிருந்து நேரடியாகப் புது வீட்டுக்கு வந்து பாக்கெட் பால் காய்ச்சிச் சாப்பிட்டார்கள்.

சந்திரனின் மனைவி அபிராமி ரொம்பவும் கூச்சசுபாவியாக இருந்தாள். தாய் மொழி மலையாளமில்லை. என்றாலும் கொஞ்சம் ராகமிழுத்துதான் தமிழ் பேசினாள். ஆனால் பிரவேஷிகாவரை பாஸ் செய்திருந்ததில் ஹிந்தி நன்றாகவே தெரியுமாம்.

பேசுவதுதான் குறைவேதவிர எதற்கெடுத்தாலும் சிரித்துக்கொண்டிருந்தாள் அவள். அவர்களின் திருமணத்திற்கு வந்திருந்த அரவிந்தனை அவளுக்குக் கொஞ்சமும் நினைவிருக்கவில்லை. இதில் சந்திரனுக்கு ரொம்ப வருத்தம்.

‘சரிதான் விடுடா’ என்று சிரிப்போடு சொன்னான் அரவிந்தன். ‘இந்தப் பதினஞ்சு நாள்ல நீ அவங்களுக்குக் கிட்டத்தட்ட ஆயிரம் பேரையாவது அறிமுகப்படுத்தியிருப்பே, எல்லாரையும் ஞாபகம் வெச்சுக்கமுடியுமா?’

அதன்பிறகு சிறிது நேரத்துக்கு யாரும் எதுவும் பேசவில்லை. சங்கடமான அந்த மௌனத்தைக் கலைத்துக்கொண்டு கிளம்பினான் அரவிந்தன்.

அவன் ராத்திரி அங்கேயே தங்கவேண்டும் என்று வற்புறுத்தினான் சந்திரன். ஆனால் அரவிந்தன் பிடிவாதமாக மறுத்துவிட்டான். ‘உனக்கென்னடா? லீவ்ல இருக்கே, நான் காலையில சீக்கிரம் எழுந்து ரெடியாகி ஆஃபீஸ் போகணும்’ என்றான் சிரிப்புடன்.

‘சாப்பிட்டுட்டுப் போங்க, ப்ளீஸ்’ என்றாள் சந்திரனின் மனைவி.

‘பரவாயில்லைங்க, இன்னொரு நாள் கண்டிப்பா வர்றேன்’ என்று சொல்லிக்கொண்டு கிளம்பினான்.

அன்றும் நல்ல மழை. பழைய வீட்டின் பாதி வெறுமை உறுத்திக்கொண்டிருந்தது. அதனிடையே தூக்கமின்றிப் படுத்திருந்தபோது இன்னும் பாஷை புரிந்திராத இந்த ஊரில் தனக்கிருந்த ஒரே நண்பனையும் இழந்துவிட்டோமே என்று வேதனையாக இருந்தது அரவிந்தனுக்கு.

ஆனால் இதற்கெல்லாம் யார், என்ன செய்யமுடியும்? மழலையாகப் பேசிக் கொஞ்சுகிற குழந்தைகூடதான் ஒரு நாளில் தோளுக்கு மேல் வளர்ந்துவிடுகிறது, அதை நினைத்து சந்தோஷப்படாமல் இனிமேல் யாரைக் கொஞ்சுவது என்று கவலைப்படுவார்களா?

தனக்கு ஏன் இந்த விஷயம் எதிர்மறையாகவே தோன்றிக்கொண்டிருக்கிறது என்று அப்போது அரவிந்தனுக்குப் புரியவே இல்லை. யாரோ சந்திரனை என்னிடமிருந்து திட்டமிட்டுப் பிரித்துவிட்டதுபோல் ஏன் நினைக்கிறேன்? ஒருவேளை சந்திரனுக்குமுன்பாக எனக்குத் திருமணமாகியிருந்தால் நானும் இப்படிதானே பாதி வீட்டை காலி செய்துகொண்டு கிளம்பியிருப்பேன்?

யோசனைகளின் கனத்தில் அந்த இரவு தூக்கமின்றிக் கழிந்தது. மறுநாளிலிருந்து இதைப்பற்றி அதிகம் நினைப்பதில்லை என்று தனக்குத் தானே உறுதி சொல்லிக்கொண்டு வேலையில் கவனம் செலுத்தினான் அரவிந்தன்.

இரண்டு நாள்களுக்குப்பின் வேலையில் சேர்ந்த சந்திரன் ‘என்னடா? வீட்டுப்பக்கமே வரலை?’ என்றான் முதல் வாசகமாக.

‘இன்னிக்கு வர்றேண்டா’ என்றான் அரவிந்தன். ஆனால், போகவில்லை.

சந்திரனின்மீதோ அல்லது அவனுடைய மனைவியின்மீதோ சத்தியமாக அரவிந்தனுக்கு வெறுப்பில்லை. ஆனால் ஏதோ ஒரு சங்கட உணர்வு அவர்களின் வீட்டுக்குச் செல்லவிடாமல் அவனைத் தடுத்துக்கொண்டிருந்தது. எப்போதாவது தவிர்க்கமுடியாமல் அங்கே செல்ல நேர்ந்தாலும் ஐந்து அல்லது பத்து நிமிடங்களுக்குமேல் அங்கே இருக்கமுடிவதில்லை. ஆகவே ஏதேனும் ஒரு பொய்யான காரணத்தையாவது உருவாக்கிச் சொல்லிக்கொண்டு கிளம்பிவிடுவது.

தன்னுடைய தயக்கத்துக்கு யாரைக் குற்றம் சொல்வது என்று அரவிந்தனுக்குப் புரியவில்லை. சந்திரன் அவனிடம் எப்போதும்போல்தான் பழகுகிறான். ஆனால் அதற்குமேல் அவனிடம் எதையும் எதிர்பார்க்கக்கூடாது என்று அரவிந்தனின் உள் மனது சொல்லிக்கொண்டே இருந்தது. ஆகவே அலுவலகம், வீடு என்று தனது நடவடிக்கைகளைச் சுருக்கிக்கொண்டான்.

சந்திரனுக்கு பதிலாக வேறோர் அறை நண்பனைக்கூட அவன் தேர்ந்தெடுத்துக்கொள்ளவில்லை. சந்திரன் முன்பு படுத்திருந்த கட்டில்கூட மடக்கப்படாமல் அப்படியேதான் கிடந்தது.

அந்த மழைக்காலம் முடிவதற்குள் அரவிந்தனுக்கும் வீட்டில் பெண் பார்க்க ஆரம்பித்தார்கள். ஆனால் இவன்தான் இப்போதைக்கு வேண்டாம் என்று உறுதியாக மறுத்துவிட்டான்.

அரவிந்தனுடைய அப்பா சந்திரனுக்கு ஃபோன் செய்து பேசியிருக்கிறார். ஒரு மாலை நேரத்தில் அவனை வலுக்கட்டாயமாகப் பற்றியிழுத்துக்கொண்டு ஜந்தர் மந்தருக்குச் சென்றான் சந்திரன்.

சுற்றுலாத்தலம் என்கிற தலைக்கொழுப்பெல்லாம் இல்லாமல் நகரின் நடுவே ‘ஜஸ்ட் லைக் தட்’ நின்றுகொண்டிருக்கிற ஜந்தர் மந்தர் சந்திரனுக்கும் அரவிந்தனுக்கும் ரொம்ப விருப்பமான இடம். நகரத்தின் கச்சாமுச்சாக் கூட்டத்திலிருந்து தப்பிப்பதற்கு உத்தமமான சுலப வழி. செக்கச்செவேல் செங்கல்களால் கட்டப்பட்ட நவீன ஓவியங்கள்போல் திமிறும் வடிவங்களுக்கிடையே மணிக்கணக்காக நடக்கலாம், அல்லது புல்வெளியில் படுத்துக்கொண்டு சிகரெட் ஊதியபடி அரட்டையடிக்கலாம்.

ஆனால் அன்றைக்கு அவர்கள் இருவருமே மௌனமாக ஒருவரையொருவர் பார்த்தபடி அமர்ந்திருந்தார்கள். எதைப் பேசப்போகிறோம் என்று இருவருக்குமே தெரிந்திருப்பதுபோலவும் இருவருமே அதைப் பேச விரும்பாததுபோலவும் ஒரு அசிங்கமான நிசப்தம் அவர்களுக்கிடையே உருண்டு கிடந்தது.

ஒருவழியாக இருவரில் யாரோ பேசத் தொடங்கினார்கள். ‘நீ வீட்டுக்கே வர்றதில்லை’ என்று சந்திரன் குற்றம்சாட்டுவதும் ‘அப்படியெல்லாம் இல்லை’ என்று அரவிந்தன் மறுப்பதுமாகக் கொஞ்ச நேரம் பாசாங்கு நாடகம் நடந்தது.

பின்னர் சந்திரன் விஷயத்துக்கு வந்தான். ‘கல்யாணம் வேணாம்-ன்னு சொன்னியாமே, ஏன்?’

இதற்குச் சட்டென்று ஒரு பதில் யோசித்து வைத்திருந்தான் அரவிந்தன். ‘என்னடா அவசரம்? கொஞ்ச நாளாகட்டுமே!’ என்றான் சிரித்து.

‘இப்போ-ன்னா, நாளைக்கேவா  கல்யாணம் நடக்கப்போகுது?’, சிரிக்காமல் கேட்டான் சந்திரன். ‘அவங்க ஜாதகத்தை எடுக்கட்டும். நீ மெதுவா ஃபோட்டோவைப் பார்த்து உன் விருப்பம் சொல்லு. இல்லை, பொண்ணை நேர்ல போய்ப் பாரு. உனக்குப் பிடிச்சு எல்லாம் முடிவானப்புறம் நீ எப்போ சொல்றியோ அப்போ கல்யாணத்தை வெச்சுக்கலாம்.’

‘ம்ம்’ ஒப்புதல்போல் தலையாட்டினான் அரவிந்தன். ‘பார்க்கலாம்.’

‘என்ன பார்க்கலாம்?’ எங்கோ திரும்பிக்கிடக்கும் அவனுடைய தாடையைப் பற்றித் திருப்பினான் சந்திரன். ‘சரின்னு சொல்லு!’

‘பார்க்கலாம்பா’ முரட்டுத்தனமாக மீண்டும் திரும்பிக்கொண்டான் அரவிந்தன்.

அந்த வேகத்தில் சந்திரன் கொஞ்சம் அவமானப்பட்டுவிட்டதுபோல் தெரிந்தான். சிறிது நேரம் அமைதி காத்தபின் ‘உனக்கு என்மேல என்னடா கோவம்?’ என்றான் நேரடியாக.

‘கோவம்ல்லாம் எதுவும் இல்லைடா’ சட்டென்று சொன்னான் அரவிந்தன். நாக்கு வறண்டு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது. ‘இன்னிக்கு நீ ஏன் இப்படிக் கண்டபடி உளர்றே?’

அவனுடைய மறுப்பைச் சந்திரன் கொஞ்சமும் மதிக்கவில்லை. ‘உண்மையைச் சொல்லு, என்மேல இருக்கிற கோவத்தினால்தான் நீ இப்போ கல்யாணத்துக்கு ஒத்துக்கமாட்டேங்கறே!’, என்றான்.

‘ப்ச், சும்மா நீயே எதையாவது கற்பனை செஞ்சுக்காதேடா’, என்று அதட்டலாகச் சொன்ன அரவிந்தன் அனிச்சையாகச் சந்திரனின் கையைப் பற்றித் தனது உள்ளங்கைகளுக்குள் வைத்துக்கொண்டான். ‘தப்பா நினைச்சுக்காதே மச்சி, எனக்கு இப்போ என்ன குழப்பம்ன்னு என்னாலயே தெளிவாச் சொல்லமுடியலைடா. இதெல்லாம் சரியாகட்டும். அதுக்கப்புறம் நீங்க என்ன சொன்னாலும் கேட்கறேன். அதுவரைக்கும் நீயும் என்னைக் கட்டாயப்படுத்தாதேடா, ப்ளீஸ்!’

கையை விடுவித்துக்கொண்ட சந்திரன். ‘அப்புறம் ஏன் நீ எங்க வீட்டுக்கு வரவேமாட்டேங்கறே?’ என்றான்.

தயக்கத்தோடு தலை குனிந்துகொண்ட அரவிந்தன் ‘வரக்கூடாதுன்னு இல்லைடா. ஏதோ, அடிக்கடி வரமுடியறதில்லை. அவ்ளோதான்’, என்றான் முணுமுணுப்பாக. பின்னர், வரவழைத்துக்கொண்ட கேலிச் சிரிப்புடன் ‘புதுசாக் கல்யாணமானவங்களை அடிக்கடி டிஸ்டர்ப் பண்ணக்கூடாதுன்னு புறநானூறுல சொல்லியிருக்குடா. உனக்குத் தெரியாதா?’, என்றான் புன்னகைத்து.

‘பேச்சை மாத்தாதே’ சந்திரனின் குரலில் நெடுநாள்களாக அடக்கிவைத்திருந்த எரிச்சல் தொனித்தது. ‘உன்னைப்பத்தி எனக்குத் தெரியும். நீ என்னை வேணும்ன்னே இக்னோர் பண்றே. நான் பார்த்துகிட்டேதான் இருக்கேன்.’

‘இல்லைடா’ என்று உடனடியாகச் சொன்ன அரவிந்தன் அதன்பிறகு மேலும் பேசி அதை நிரூபிக்கவேண்டிய அவசியமில்லை என்பதுபோல் சில விநாடிகளுக்கு மௌனமாக இருந்தான். பின்னர் ‘வேற எதுனா பேசுவோமே’ என்றான் சங்கடமாகச் சிரித்து. ‘கல்யாண வாழ்க்கை எப்படிப் போயிட்டிருக்கு?’

‘ம்ம், அதுக்கென்ன?’ சந்திரனிடமிருந்து விட்டேத்தியான பதில் வந்தது. பின்னர் ‘அவ அம்மா வீட்டுக்குப் போயிருக்கா. இன்னிக்கு நைட் வீட்டுக்கு வாயேன், நாம சேர்ந்து தண்ணியடிச்சு ரொம்ப நாளாச்சு’ என்றான்.

அவன் சொன்னது காதில் விழாததுபோல் எங்கோ பார்த்துக்கொண்டிருந்தான் அரவிந்தன். சந்திரனுக்குத் தான் இரண்டாம்பட்சமாகிவிட்டோம் என்பது இப்போது அவனுக்கு மிகத் தெளிவாகப் புரிந்தது.

ஆனால் சந்திரனுக்காவது தனது அக்கறைக்குரிய முதல் விஷயம் எது என்று நிச்சயமாகத் தெரிந்திருக்கிறது. எனக்கு?

(தொடரும்)

***

என். சொக்கன் …

23 05 2011


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 620,749 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்

Tamilish

For தமிழ் Peopleதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

May 2011
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031